Friday, August 15, 2014

ரத்தமும் பொய்யும் வழியும் யுத்த பூமி!





தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?


ரத்தம் வழியும் யுத்த பூமி! என்ற தலைப்பில் இரா ஜவஹர் என்ற மூத்த பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையை வாசிக்கப்பெற்றேன்.
எதை விற்க வேண்டுமென்றாலும் குழந்தைகளை உபயோகப்படுத்தலாம் என்பது நவீன விளம்பர யுக்தி. குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், உடனே இரங்குவது மனித இயல்புதானே? அதனை வைத்து கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு பணம் வசூலிப்பதிலிருந்து, ஹமாஸுக்கு ஆதரவு திரட்டுவது வரை எல்லாமே நடக்கும்.
ஆகவே கட்டுரையும் இப்படி ஆரம்பிக்கிறது.

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”

“இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்”
- என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.
பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள்.
ஆனால், இந்த கட்டுரை ஒரு மூத்த பத்திரிக்கையாளர் எழுதியது என்று சொல்வது தான் ஒரேயடியாக இடிக்கிறது. ஏனெனில், அடிப்படை ஜர்னலிஸ்ட் ஒழுக்கம் எதுவுமின்றி, தான் தோன்றித்தனமாக, பிரச்சார கட்டுரை போல, ஒரு பக்க சார்புடனும், suppresso veri suugesto falsi என்ற அடிப்படை கருதுகோளுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு தி இந்து இந்த வேலையில் உச்சகட்டத்தில் இருந்தாலும், இவரும் அந்த உச்சகட்ட பிரச்சாரத்துக்கு முயற்சிக்கிறார்.
முதலாவது வரியிலிருந்து பக்கச்சார்புடன் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை, ஆய்வுக்கட்டுரை என்று அவரே சொல்லமாட்டார். ஆனால், இது போலத்தான் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளின் தலையங்கங்களே இருக்கும்போது, இந்த வகை பிரச்சார கட்டுரைகள் தலையங்கங்களுக்கு ஈடாகவும், ஆய்வுக்கட்டுரை என்றும் தமிழ்நாட்டு அளவில் கூறிவிடலாம்.

இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கப் போகிறோம்” என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
கடந்த ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் கடந்த 22 நாட்களில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் உட்பட 1,250 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டு வீசியதில் 50-க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
மூன்று பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உடனே கொல்லப்படவில்லை. கடத்தப்பட்டார்கள். ஜூன் 12, 2014 அன்று இவர்கள் கடத்தப்பட்டார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத்தை மேற்குக்கரை பகுதியில் அரசாங்கத்துக்குள் கொண்டுவருவதால் வரும் பிரச்னை என்று இஸ்ரேல் கூறியது. ஜூன் 14 அன்று இஸ்ரேலிய அதிகாரிகள், தங்கள் தேடுதலில், ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 20 பேரை கைது செய்தார்கள். ஜூன் 15ஆம் தேதி, சுமார் 86 அரபுகளை கைது செய்தது. காஸாவுக்குள் செல்லும் வியாபார வண்டிகளும், மக்களும் நிறுத்தப்பட்டனர். இதனால், ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக எந்த இடத்திலிருந்து ராக்கெட்டுக்கள் வருகின்றனவோ அந்த இடங்களை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. அதாவது இஸ்ரேல் பதிலடியாக காஸாவுக்குள் கண்ட இடத்தில் குண்டு வீசுவதில்லை. எந்த இடத்திலிருந்து ராக்கெட் வருகிறதோ அதனை குறி வைத்து, அந்த இடத்தை மட்டுமே அழிக்க முனைகிறது. அதற்கு முன்னால், அந்த இடத்தில் குண்டு வீசி ராக்கெட் தளத்தை அழிக்கப்போகிறோம் என்று எச்சரிக்கையும் விடுகிறது. (இதனை என் டி டி வி வெளியிட்ட வீடியோவிலும் காணலாம். ஸ்ரீனிவாசன் ஜெயின் என்னும் என் டி டி வி நிருபர் காஸாவிலிருந்து வெளியேறிய பிறகு, அங்கு எடுத்த வீடியோவை வெளியிட்டார். அதில், அந்த இடத்தில் குண்டு வீசப்போவதாக இஸ்ரேல் அறிவித்தது என்பதையும் குறிப்பிடுகிறார். கவனிக்கவும்)
ஆகவே இஸ்ரேல் மேற்குக்கரை பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களுக்காக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தொடங்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் காணாமல் போன இஸ்ரேலியர்களை தேடி மீட்பதை மட்டுமே செய்தார்கள். காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஹமாஸ் அனுப்ப ஆரம்பித்த பின்னாலே, அந்த இடங்களை இஸ்ரேல் அழிக்க முயன்றிருக்கிறது. இதனை இந்த மூத்த பத்திரிக்கையாளர் வசதியாக மறைத்துவிடுகிறார். suppressio veri!

கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரம் இல்லை; ஒரு லட்சத்துக்கும் மேல், அங்கே இஸ்ரேல் என்ற நாடு செயற்கையாக உருவாக்கப்பட்ட 1948-ம் ஆண்டு முதல் கணக்கிட்டால்.
அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து ஊனமானார்கள். 70 லட்சம் பேர் வெளி நாடுகளில் அகதிகளாக உள்ளனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே மேற்குக் கரைப் பகுதியில் 25 லட்சம் பேரும், காசா பகுதியில் 15 லட்சம் பேரும் அகதிகளைப் போல் வாழ்கிறார்கள்.
எப்படி ஏற்பட்டது இந்தச் சோகம் ? இதன் வரலாறு என்ன ?
இதனை suggestio falsi என்ற வகையில் சேர்க்கலாம். இந்த வரிகளை படித்தால், இஸ்ரேல் அங்கே உருவானதால் கொல்லப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள் மட்டுமே என்பது போலவும், அகதிகளாக்கப்பட்டது பாலஸ்தீன அரபுகள் மட்டுமே என்பது போலவும் உங்களுக்கு தோன்றினால், மூத்த பத்திரிக்கையாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்று நிச்சயம் சொல்லலாம்.
உண்மை என்ன? அங்கு நடந்த போர்களில் இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள். அரபு நாடுகளில் இருந்த யூதர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக இஸ்ரேல் வந்தார்கள்.
முதலாவது 1948- அரபு இஸ்ரேலிய போரில் சுமார் ராணுவ வீரர்களாக 6000 இஸ்ரேலியர்களும், 3700 அரபுகளும் இறந்தார்கள். பொது மக்களாக இருந்த 15000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த போரில்தான் மிக அதிகமாக யூத மக்கள் உயிரிழந்தார்கள்.

அன்றிலிருந்து கணக்கிட்டால், சுமார் 25000 யூதர்கள் இந்த போர்களில் இறந்திருக்கிறார்கள். சுமார் 92000 அரபுகள் இந்த போரில் இறந்திருக்கிறார்கள். இந்த போரினால் சுமார் 10 லட்சம் யூதர்கள் அகதிகளாக அரபு பெரும்பான்மை நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த யூதர்கள் அகதி முகாம்களில் வாழவில்லை. இஸ்ரேலின் அங்கமாக எடுத்துகொள்ளப்பட்டுவிட்டார்கள்.

ஆனால், அரபு நாடுகள் இந்த பாலஸ்தீனர்களை அகதிமுகாம்களில் இழி நிலையிலேயே வைத்திருக்கின்றன.பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறிய அரபுகளுக்கு அடிப்படை உரிமைகளை கூட லெபனான், ஜோர்டன், சவுதி அரேபியா, கட்டார், குவாய்த் எகிப்து போன்ற நாடுகள் தர மறுக்கின்றன. ஜோர்டனில் பெரும்பான்மையாக இருக்கும் பாலஸ்தீன அரபுகள், தேர்தலில் நிற்க உரிமை கிடையாது. அகதி முகாம்களில் அடைக்கபப்ட்டிருக்கும் இவர்கள் அந்த அகதி முகாம்களிலிருந்து வெளியேறக்கூடாது, வெளியிடங்களில் அவர்களுக்கு வீடு விற்கக்கூடாது, வாங்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை இந்த அரபு அகதிகள் மீது மற்ற அரபு நாடுகள் விதிக்கின்றன. இந்த செய்திகளை ஏன் இந்த மூத்த பத்திரிக்கையாளர் தமிழக மக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறார்?

இதுதான் அரபுகள் அரேபியாவிலிருந்து வெளியேறி ஆக்கிரமித்துள்ள நிலங்கள். இதில் இந்த அரபு மக்களுக்கு இடமில்லையா?


map_tinyisrael


இந்த படத்தில் ஈரான், சோமாலியா அரபு நிலங்களாக குறிக்கப்பட்டுள்ளது தவறு. மற்ற நிலங்கள் பெரும்பான்மை அரபு நிலங்களே.


“ஆப்ரஹாமை நோக்கிக் கர்த்தர் சொன்னார். ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனாருடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.

கர்த்தர் காட்டிய தேசம், ‘கானான் தேசம்’. அப்போது அந்த தேசத்தில் பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள், பீனிசியர்கள் உட்படப் பல பழங்குடியினர் இருந்தார்கள். இந்தக் கானான் பிரதேசத்தில் ஆப்ரஹாமும் அவரைச் சார்ந்தவர்களும் குடியேறினார்கள்.
ஆப்ரஹாமின் சந்ததியில் தோன்றிய ஜேக்கப் தனது இனத்தவருக்குப் பெரும் தலைவராக விளங்கினார். ஜேக்கப் பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினர் தான் ‘இஸ்ரேலியா’ அல்லது ‘யூதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த கானான் தேசம் ‘இஸ்ரேல்’ என்று அழைக்கப்பட்டது.
எனினும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து அமைந்த பேரரசுகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து, யூதர்களைக் கொடுமைப்படுத்தி, விரட்டியடித்தன. இஸ்ரேலின் பெயரும் பின்னாளில் மாற்றப்பட்டு ‘பாலஸ்தீனம்’ என்று பெயரிடப்பட்டது.
எனவே ‘பைபிள்’படி யூதர்களுக்குக் கர்த்தர் – கடவுள் – கொடுத்த தேசமான பாலஸ்தீனத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறி, இழந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”
- என்று அறிவித்து, ‘ஜியோனிஸ்ட் இயக்கம்’ தோன்றியது 1897-ம் ஆண்டில்.
இது போன்ற பிதற்றல் மூத்த பத்திரிக்கையாளர்களிலிருந்துதான் வருமோ என்னவோ? ஆனால், சுமார் 3000 வருட புராணக்கதையையும், 2000 வருட வரலாற்றையும் கலந்துகட்டி நான்கே வரிகளில் பொய்யும் புளுகுமாக சொல்லுவதும் ஒரு திறமைதான்.

ஜியோனிஸம் 1897இல் துவங்கப்பட்டது மத நம்பிக்கையுள்ள யூதர்களால் அல்ல. கடவுள் மறுப்பு யூதர்களால் அது துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் மத நம்பிக்கையுள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு போவதை எதிர்த்தார்கள். ஜூலை 1845இல் பிராங்க்பர்ட்டில் நடந்த ரப்பைகள் மாநாடு இஸ்ரேலுக்கு திரும்ப போவதை ஒருமனதாக எதிர்த்தது. ஏனெனில், மெஸியா வராமல், திரும்ப இஸ்ரேலுக்கு செல்வதே மத நம்பிக்கைப்படி தவறானதாகும். இன்றும்கூட தீவிர மத நம்பிக்கையுள்ள யூதர்கள் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பெருந்திரளாக, முக்கியமாக நியூயார்க்கில், போராட்டத்தில் கலந்துகொள்வதை பார்க்கலாம்.
மத நம்பிக்கையற்ற யூதர்களால் துவங்கப்பட்டதாக இருந்தாலும், அந்த தலைவர்கள், பெரும்பான்மை யூதர்கள் மத நம்பிக்கையுடையவர்கள் என்ற உணர்வும், இஸ்ரேலும் யூதர்களும் கலாச்சார ரீதியில் பிணைக்கப்பட்டவர்கள் என்பதையும் அறிந்தே இருந்தார்கள். இதனால்தான் அவர்கள் பிரிட்டன் உகாண்டாவில் அவர்களுக்கு ஒரு வாழ்நிலம் தருவதாக சொன்னபோதும் அதனை நிராகரித்தார்கள்.

இதை மறுத்தார்கள் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள்.
“பைபிள்படியே பார்த்தால் கூட பாலஸ்தீனத்தின் பழங்குடியினர், மண்ணின் மைந்தர்கள் – பிலிஸ்தீனியர்களும், மற்ற பழங்குடியினரும்தான். பிலிஸ்தீனியர்களின் தேசம்தான் பாலஸ்தீனம் எனப்பட்டது. அவர்களது சந்ததியினர்தான் அரபு இனத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்கள். மறுபுறம் வரலாற்றின்படி பார்த்தால் சிரியாவின் ஒருபகுதியாகத்தான் பாலஸ்தீனம் இருந்தது. சிரியா, அரபு நாடுதான். எனவே எங்கள் தாயகமான பாலஸ்தீனத்தை வேறு எவரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்றார்கள் பாலஸ்தீனியர்கள்.
தவறு.

பிலிஸ்தினியர்களும் பாலஸ்தீனர்களும் ஒன்றல்ல. பிலிஸ்தினியர்களை பாலஸ்தீனத்தின் பழங்குடிகள் என்று ஒரு போதும் பாலஸ்தீன அரபுகள் தங்களை கூறிக்கொண்டதில்லை. பிலிஸ்தீனியர்கள் பின்னால், யூதர்களாகி விட்டார்கள். ஆகவே அவர்களை பாலஸ்தீனர்கள் என்று சொல்வது தவறானது. 2000 வருடங்களுக்கு முன்னால், ரோம அரபு போர் நடக்கும்போது, அரபு இனத்தை சேர்ந்தவர்கள் ஒரு போதும் இஸ்ரேல் நிலத்தில் இருந்ததில்லை. சிரியா அரபு நாடுதான் என்று தனது அறிவையும் பறை சாற்றுகிறார். சிரியா நாட்டில் பின்னால் வந்த அரபுகளின் ஆக்கிரமிப்பால் அது இன்றைக்கு அரபு தேசமாக கூறப்படுகிறது. அது முன்பு அஸ்ஸிரிய தேசம். ஜோஸபஸின் வரலாற்றில் சிரியர்களும் அரபியர்களும் தனித்தனியாகவே குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் இஸ்ரேலுக்கு கீழே இருப்பது அரபு தேசமல்ல. அது எடாம் தேசம். எடாமைட்டுகள் இன்று அரபு மொழி பேசுவதால் அரபியர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம். அல்லது எடாமைட்டுகள் கொல்லப்பட்டு அந்த இடத்தை அரபுகள் ஆக்கிரமித்திருக்கலாம். அதே போல இன்றைய ஈராகும் அரபு நாடு அல்ல. அது முன்பு நபாட்டு தேசம். நபாட்டியர்கள் கொல்லப்பட்டு அங்கு அரபியர்கள் ஆக்கிரமித்திருக்கலாம். இன்றைய ஜோர்டானும் அரபு தேசமாக குறிப்பிடப்பட்டதே இல்லை. அது மோயப் தேசம். அவர்கள் மோயபைட்டுகள் என்றே குறிப்பிடப்பட்டார்கள். இன்று அந்த இடங்களில் இருப்பவர்கள், அரபு மொழி பேசுவதாலேயே அரபிய நிலமாகிவிடுமா?

போர் முடிந்தது. 1918-ம் ஆண்டில், போரில் துருக்கி தோற்று சரண் அடைந்தது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த சிரியா நாட்டை பிரான்ஸ் ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்தது.
அரபு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பிரிட்டன், பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இறங்கியது.
இன்னொரு பேத்தல்.

பெல்பார் அறிவிப்புக்கும், பிரான்ஸ் சிரியாவை எடுத்துகொண்ட பின்னாலும், அரபுகள் யூதர்களுக்கு எதிராக கலவரத்தில் இறங்கிய காரணத்தால், யூதர்கள் இஸ்ரேலுக்குள் வருவதை கட்டுப்படுத்தியது. இத்தனை யூதர்கள் மட்டுமே வரலாம் என்று வரையறுத்தது. 1000 பவுண்டுகள் பணம் கொடுத்துவிட்டு வரலாம் என்று அதிலும் காசு பண்ணியது. இதனால் யூதர்கள் உலகம் முழுவதும் உள்ள யூதர்களிடம் பணத்தை வசூல் செய்து அதனை இவ்வாறு வரும் யூதர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியது. இவ்வாறு சுமார் 82000 யூதர்கள் பாலஸ்தீனம் வந்தார்கள். எவ்வளவு பணத்தை பிரிட்டன் பார்த்திருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு இருக்க, பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியேற்ற பிரிட்டன் தீவிரமாக இறங்கியது என்று திரிக்கிறார் இந்த மூத்த பத்திரிக்கையாளர்.

சமீபத்தில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து, காசா பகுதியை சுடுகாடாக்கும் கொடூர நடவடிக்கைகளில் இப்போது இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. நாள் தோறும் படுகொலைச் செய்திகள்………
மேலும் ஒரு “மூத்த பத்திரிக்கையாளத்தனமான” வரிகள். இதற்கான பதில்கள் இந்த பதிவிலேயே இருக்கின்றன.

மற்றொன்று,



பாலஸ்தீனத்தை கைவிடலாமா என்ற தி இந்து தமிழ் கட்டுரை

இது அதிகாரப்பூர்வமான தி இந்து தலையங்கம். முன்னரே சொன்னது போல ஆங்கில தலையங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.
காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கான நிலப்பரப்பு மிகவும் குறுகியது. திட்டமிட்டு இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திவரும் ஆக்கிரமிப்பு களால் தங்களுடைய பகுதி நிலத்தை இழந்துவரும் பாலஸ்தீனர்கள் வேறு வழியில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வசிக்கிறார்கள். அவர்களுக்காக ஆயுதமேந்திப் போராடும் ஹமாஸ் இயக்கமும் இடநெருக்கடி காரணமாகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தபடி இஸ்ரேலியப் பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குகிறது. இதுதான் உண்மை என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும், இதையெல்லாம் சாக்காக வைத்துக்கொண்டு, தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல்.
தி இந்து சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் அப்பாவிகள் தமிழ்நாட்டில் நிறையபேர் இருக்கிறார்கள். இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
இதுதான் கூகுள் மேப்பில் பார்க்கக்கூடிய காஸாவின் விண்கோள் காட்சி.


gazamap



இதில் மஞ்சளாக இருக்கும் இடங்களில் யாரும் வசிக்கவில்லை. நரைத்தது போல, இருக்கும் சற்று க்ரேயாக இருக்கும் இடங்கள் மக்கள் வசிக்கும் கட்டிடங்கள். முடிந்தால் நீங்களே gaza , israel என்று போட்டு கூகுள் மேப்பில் பார்க்கலாம். நீங்கள் பார்ப்பது போல, மஞ்சள் இடங்களே அதிகம். க்ரேயாக இருக்கும் இடங்கள் நடுவே திட்டு திட்டாக இருக்கின்றன. மஞ்சள் இடங்கள் ஏறத்தாழ பாலைவனம். அங்கிருந்து ராக்கெட் வீசினால், பதிலுக்கு வரும் இஸ்ரேலிய ராக்கெட்டுகள் அந்த ராக்கெட் தளங்களைத்தான் தாக்கும். ஹமாஸ் வேண்டுமென்றே மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து ராக்கெட்டை அனுப்பி, பதில் ராக்கெட்டுகள் மூலம் இறக்கும் மக்களை காட்டி அனுதாபம் தேட முயல்கிறது. தி இந்து போன்ற இடதுசாரி, இஸ்லாமிய பயங்கரவாத பாசக்கார அண்ணன்கள், உண்மையை மூடி மறைத்து புளுகித்தள்ளுகின்றார்கள்.
கூடவே
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட.

என்று தர்மத்தை பற்றி பாடம் எடுக்கிறது தி இந்து. களமிறங்குவது என்றால், அது இஸ்ரேலுக்கு எதிராக, அரபுகளுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இறங்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராகவும், ஈராக்கில் கொல்லப்படும் சிறுபான்மை யாஜிதி மக்களுக்காகவும், கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்க வேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை அப்பாவி என்றுதான் உலகம் சொல்லும். பாகிஸ்தானில் கொல்லப்படும் இந்துக்களுக்காகவும் கிறிஸ்துவர்களுக்காகவும் இந்தியா களமிறங்கவேண்டும் என்று தி இந்து எழுதும் என்று நினைத்தால், உங்களை பார்த்து உலகமே நகைக்கும்.


பொருளாதாரரீதியாக இந்தியாவுக்கு முக்கியமான ஒரு பிராந்தியம் மேற்காசியா. அங்கே தொடர்ந்து அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீனப் பிரச்சினைதான். எனவே, அதை நீடிக்க விடாமல் சுமுகமாகத் தீர்த்துவைப்பதில் முக்கியப் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு!


அப்படி போடு! இந்த மாதிரி இந்திய அரசுக்கு ஒரு இந்திய பத்திரிக்கை அறிவுரை செய்யுமென்றால், அதனை என்ன சொல்லலாம்? அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீன பிரச்னையா? அல்லது யூதர்களை அழிக்கத்துடிக்கும் அரபு இனவெறியா? என்றாவது இந்த பத்திரிக்கைகள் அரபுகளின் பிடிவாத குணத்தையும், யூதர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் மத/இன வெறியையும் கண்டித்திருக்கிறார்களா?


வாளாவிருந்தால் எப்படி? என்ற தினமணி தலையங்கம்

ஹிட்லரின் நாசிப் படைகளால் வேட்டையாடப்பட்டு, தங்களுக்கு என்று நாடு எதுவும் இல்லாமல் இருந்த யூதர்களுக்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரேல் என்கிற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உருவாக்க முற்பட்டதே ஒரு சரித்திர மோசடி.


இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உருவாக்க முற்படவில்லை. இந்த வரியே தவறு. இஸ்ரேலியர்கள்தான் தங்கள் நாட்டை மறுபடியும் உருவாக்கிக்கொண்டார்களே தவிர மற்ற நாடுகள் அதற்கு முடிந்தவரை தடைக்கற்களைத்தான் ஏற்படுத்திகொண்டிருந்தார்கள். 2000 வருடங்களுக்கு முன்னால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டாலும், அவர்கள் அந்த இடத்தை விட்டு முழுவதுமாக நீங்கிவிடவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடமும், அடுத்த வருடம் இஸ்ரேலில் சந்திப்போம் என்றுதான் உறுதிமொழி எடுத்துகொண்டிருந்தார்கள். யூதர்கள் எங்கே தங்கியிருந்தாலும், தங்களை இஸ்ரேலின் மக்கள் என்றுதான் அழைத்துகொண்டார்கள். பணம் இருந்தவர்களும், பலம் இருந்தவர்களும், விரும்பியவர்களும், சமூக, அரசியல் சூழ்நிலை மாறியபோதெல்லாம் இஸ்ரேலுக்கு சென்றுகொண்டே இருந்தார்கள். இரண்டாயிரம் வருடமாக அவர்கள் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறார்கள். 1492இல் கத்தோலிக்க வாடிகனும், ஸ்பெயின் அரச குடும்பமும் இணைந்து யூதர்களை ஸ்பெயினிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றியபோதும், அவர்கள் இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே இஸ்ரேல் உருவாக்கப்படும்போது அங்கு யூதர்களே இல்லை என்பது போன்ற suggestio falsi விளையாட்டுகள் யாரை குஷிப்படுத்த எழுதப்படுகின்றன? இரண்டாம் உலகப்போர் முடியும்போது, இஸ்ரேலில் 33 சதவீத மக்கள் யூதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் பலவேறு இடங்களிலிருந்து துரத்தப்பட்டு அங்கு சென்றிருந்தார்கள்.
முதலாம் உலகப்போரின் முடிவில் அது பிரிட்டனின் மண்டேட் (mandate) கீழ் வந்தது. 1920இலிருந்து 1948 வரைக்கும் இஸ்ரேல் பிரிட்டனின் கீழ் இருந்தது. அந்த நேரத்தில் யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் பெரும் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்ப யூதர்கள் பலர் இஸ்ரேலுக்கு ஓடியபோது, அவர்கள் வரக்கூடாது என்று ஒரு வருடத்துக்கு 15000 யூதர்கள் மட்டுமே இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டம் போட்டது. அதிலும் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்தது. அங்கிருந்து தப்பி இஸ்ரேலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால், அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு மொரீஸியஸ் போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஹிட்லரின் வெறியாட்டம் அதிகரித்தபோது அங்கிருந்து தப்ப அவர்கள் உதவாக்கரை தோணிகளிலும் படகுகளிலும் இஸ்ரேலுக்கு வந்தபோதும், அந்த படகுகளை பிரிட்டனின் கடற்படையும், சோவியத் நீர்மூழ்கி கப்பல்களும் அழித்தன. போருக்கு பின்னால், ஐரோப்பாவில், 2,50,000 யூதர்கள் அகதி முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ருமன் போன்றவர்கள் கேட்டுகொண்டபின்னாலும், சுமார் 100000 பேர்களே பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிரிட்டன் யூதர்கள் இஸ்ரேலுக்கு வரக்கூடாது என்ற தன் தடையை விடவே இல்லை.
இதனால், சில யூதர்கள் பிரிட்டனுக்கு எதிராக வன்முறை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். பல பிரிட்டன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டனுக்கு எதிரான யூத பயங்கரவாதத்தின் காரணமாக சுமார் ஒரு லட்சம் பிரிட்டிஷ் போர்வீரர்கள் இஸ்ரேலுக்குள் நிற்கும் நிர்ப்பந்தம் தோன்றியது.

இந்த இடத்தில் யூத பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிட வேண்டும். யூதர்களிலும் பயங்கரவாத அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. 1940களில் lehl அமைப்பும் irgun அமைப்பும் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபட்டிருக்கின்றன. இது வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட பல பிரிட்டிஷ் தலைவர்களை ஜியோனிஸத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. ஆனால், யூதர்களின் முக்கிய அமைப்பான Jewish Agency, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை 1940 முதற்கொண்டு எடுத்து வந்திருக்கிறது. வன்முறைக்கு எதிராக வன்முறை எடுக்கவேண்டாம் என்று இந்த ஏஜென்ஸி தன் உறுப்பினர்களை வெளிப்படையாக கேட்டுகொண்டிருந்திருக்கிறது. அப்படி எடுத்தால் அது உள்நாட்டு போரில்தான் முடிவடையும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், யூத வன்முறை கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளை கொலை செய்ததுதான், இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்களை தூண்டியது என்று கூறுவார்கள். இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த பின்னாலும், இஸ்ரேலில் பயங்கரவாத இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. குஷ் எமுனிம் Gush Emunim (1979-84), கெஸட் (keshet) 1981-89, Bat Ayin (2002), Brit HaKanaim (1950-53), Kingdom of Israel(1950) ஆகிய அமைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும், கடுமையாக இஸ்ரேலிய அரசால் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரிட்டன் தான் இஸ்ரேலிலிருந்து வெளியேற முடிவு செய்ததை ஐநாவுக்கு அறிவித்தது. ஐநா, United Nations Special Committee on Palestine http://en.wikipedia.org/wiki/UNSCOP என்ற அமைப்பை உருவாக்கியது. இதில் இந்த பிரச்னைக்கு சம்பந்தப்படாத நடுநிலை நாடுகள் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லாவாகியா, குட்டமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து, பெரு, ஸ்வீடன், உருகுவாய், யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்க அழைக்கப்பட்டன. (இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அப்துர் ரஹ்மான், உலக யூதர் பிரச்னையை பாலஸ்தீனத்துக்கு கொண்டுவரக்கூடாது என்று எதிர்பார்ப்பது போல பேசியிருக்கிறார்)
இந்த அமைப்புதான் இஸ்ரேலை மூன்றாக பிரித்து, ஒரு பகுதி அரபுகளுக்கும் ஒரு பகுதி யூதர்களுக்கும், ஜெருசலம் நகரை ஐநாவின் கீழும் வைத்துகொள்ள பரிந்துரைக்கிறது. அதனை ஐநாவும் ஒப்புகொள்கிறது.
இப்படி இருக்கையில் இந்த ஐந்து நாடுகளும் ஏதோ சதி செய்து அங்கு யூத அரசை உருவாக்கியிருப்பதாக எழுதியிருப்பது, தினமணிக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்று சிந்திக்கவைக்கிறது.
பாலஸ்தீனியத்திலுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பது மட்டுமல்ல இஸ்ரேலின் நோக்கம். இஸ்ரேலிய மக்களவையான “நெஸ்ùஸ’ உறுப்பினர் ஆயிலெட் ஷாகேத் கூறுவதுபோல, ஆண், பெண், குழந்தைகள் என்று ஒருவர்விடாமல் எல்லா பாலஸ்தீனியர்களும் அழிக்கப்படும் வரை இந்த யுத்தம் தொடரும் என்பதுதான் திட்டம்.

ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான ஆயிலெத் ஷாகெத்தை இஸ்ரேலின் சர்வாதிகாரியாக மாற்றியிருக்கும் தினமணியை பாராட்டலாம். இதே மாதிரி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உளறுவாயர்களும், குரூரமானவர்களும் எம்பிகளாகவும் எம் எல் ஏக்களாகவும் நிச்சயம் இருக்கிறார்கள். அப்படி உளறும் எல்.எல்.ஏக்கள் , எம்பிகள் உளறுவதெல்லாம், இந்தியாவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு ஆகிவிடுமா?


http://en.wikipedia.org/wiki/Ayelet_Shaked


ஆனால் ஒரு சாதாரண நெஸட் உறுப்பினரான இவரது கருத்தையே இஸ்ரேலின் ராணுவ அரசியல் தலைமையின் கருத்தாக சொல்வது தினமணி என்ற ஒரு பத்திரிக்கை, ஒரு சாதாரண பிரச்சார கந்தல் பத்திரிக்கை நிலைக்கு இறங்கி தாழ்ந்துவிட்டதைத்தான் காட்டுகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மேற்கு ஆசிய கச்சா எண்ணெயில்தான் அடங்கி இருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனிய சர்ச்சையில், சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோல வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

இறுதியில் வழக்கம்போல தி இந்து ஸ்டைலில் மேற்கு ஆசியாவிலிருந்துதான் எண்ணெய் வாங்குகிறோம், ஆகவே, அரபுகள் ஆதரவாகவும் இஸ்ரேலின் எதிர்ப்பாகவும் இந்தியா மாறவேண்டும் என்று கோரிக்கை. இதுதான் உண்மையான காரணமாக இருந்தால், அதற்கு ஏன் இந்த சுற்றிவளைத்து பம்மாத்து? நேரடியாக சொல்லவேண்டியதுதானே? இங்கே ஒழிக்கப்படுகிறவர்கள் இஸ்ரேலியர்கள்தான். ஆனாலும் அரபுகள் ஆதரவாக நின்றால்தான் நமக்கு பெட்ரோல் வரும். ஆகவே அரபுகள் சார்பாக நிற்போம் என்று உண்மையை சொன்னால் அது கொஞ்சம் பச்சையாக இருக்குமோ?
சுமுகமான பேச்சுவார்த்தை என்பது நான் முன்னரே குறிப்பிட்டது போலவும், 1948இலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கேட்டுகொண்டிருப்பது போலவும் ஒன்றே ஒன்றுதான். யூத பெரும்பான்மையான ஒரு இஸ்ரேலை அங்கீகரிக்கப்பட்ட அரசாக ஒப்புக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. அதற்காக தான் வெற்றிபெற்ற நிலத்தை திருப்பி கொடுக்கவும் இஸ்ரேலிய அரசு முன்வந்திருக்கிறது. அப்படி ஒரு யூத பெரும்பான்மை அரசே இருக்கக்கூடாது, அனைத்து யூதர்களும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கோரிக்கை. இதற்கு நடுவே ஒரு பேச்சுவார்த்தை இருக்கமுடியாது. இதில் யாருக்கு நீங்கள் அறிவுரை சொல்லவேண்டும்?


இந்த தலையங்கங்கள் போன்ற பிரம்மாண்டமான பொய்களால் இந்த பத்திரிக்கைகள், இந்திய முஸ்லீம்களை வெறியேற்றுவதை தவிர வேறு எதையும் சாதிக்கப்படப்போவதில்லை.


இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இஸ்ரேல்-அரபு பிரச்னைதான் இருக்கிறது. அதனை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையாக அடையாள அரசியலாக ஆக்கி, அதனை பாலஸ்தீன இனம் என்று இருப்பதாக உருவாக்கி, அதற்கு இஸ்லாமை துணைக்கழைத்து, இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் வெறியேற்றும் வகையில் எழுதும் இப்படிப்பட்ட கட்டுரைகளால் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சாதிக்க விரும்புவது என்ன?


இதே போன்ற வரிக்கு வரி புளுகும் பொய்யும் பக்கச்சார்புடனும் எழுதப்பட்ட இன்னொரு மூத்த பத்திரிக்கையாள கட்டுரை தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” என்ற பெயரில் வெளிவந்தது. வரிக்கு வரி, அது அரபுகளை விதந்தோதியும், இஸ்ரேலியர்களை பழித்தும் எழுதப்பட்ட வக்கிரமான கட்டுரைத்தொடர்.
கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் யூதவெறுப்பின் காரணம் அது மதத்தில் ஊடுருவிய, மத நம்பிக்கையோடு ஊடுருவிய பிரித்தறியப்பட முடியாத நிலைப்பாடு. கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் அல்லாத இடது சாரிகளும், ஏன் இந்த வக்கிர நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? இவர்களுக்கும் பாலஸ்தீனத்துக்கும் என்ன சம்பந்தம்?


பாலஸ்தீனத்தில் இருப்பவர்கள் மனிதர்கள், அதனால் அவர்களுக்கு பரிந்து பேசுகிறோம் என்று பம்மாத்து விடும்போது, அதே இடதுசாரிகள் ஏன், நைஜீரிய கிறிஸ்துவர்களுக்கோ, தாய்லாந்தில் முஸ்லீம்களால் கொல்லப்படும் பௌத்தர்களுக்கோ, அல்லது கிறிஸ்துவர்களால் கொல்லப்படும், அவமதிக்கப்படும் கொரிய பௌத்தர்களுக்கோ, அல்லது முஸ்லீம்களால் விரட்டப்பட்ட காஷ்மீர இந்துக்களுக்கோ, பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் கொல்லப்படும் கிறிஸ்துவர்களுக்கோ, அல்லது இந்துக்களுக்கோ, இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட பாலி இந்துக்களுக்கோ, அல்லது ஈராக்கில் அல்குவேதாவாலும் புத்தம்புது ஒரிஜினல் பிராண்டு காலிபேட்டாலும் கொல்லப்படும் ஷியா, யாஜிதி, கிறிஸ்துவர்களுக்கோ, மனித அந்தஸ்தை ஏன் இவர்கள் தருவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ( இந்தியாவின் இந்துக்கள் எல்லோரும் பார்ப்பன பாஸிஸ பயங்கரவாதிகள் என்று நம் அறிவுஜீவிகள் அறிவித்துவிட்டதால், அதனை பற்றி கேள்வி கேட்பதில் ஒரு பயனும் இல்லை. )


உதாரணமாக இந்த செய்திகளை பாருங்கள்.


1) நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு கடந்த ஆறு மாதத்தில் 2053 பொதுமக்களை கொன்றிருக்கிறது.

2) பாகிஸ்தான் அரசு பலுச்சிஸ்தானில் நடத்தும் அடக்குமுறை ஆட்சியில் இதுவரை 1628 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 1,40,000 மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

3) பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியமான பக்தூனிஸ்தானில் கடந்த ஜூன் 15,2014இலிருந்து நடத்தும் ராணுவ நடவடிக்கையில்
570 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்து, அகதிகளாக கையேந்தி வாழ்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்தவர்களில் இருக்கும் இந்துக்களுக்கும் பாரபட்சமான உதவி.

4) ஈராக்கில் தோன்றியிருக்கும், இஸ்லாமிய காலிபேட் யாஜிதிகள் எனப்படும் மக்களை படுகொலை செய்யப்போவதாக அறிவித்தே செயல்படுகிறது. இதுவரை 500 ஆண்கள் கொல்லபட்டிருக்கிறார்கள், 500 பெண்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 50000க்கும் மேற்பட்டவர்கள் சிஞார் என்ற மலையில் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சுற்றி இந்த படைகள் நிற்கின்றன. அவர்களை பட்டினி போட்டு கொல்வதற்கு.
சுமார் 2 லட்சம் ஈராக்கிய சிறுபான்மை மதத்தினர் இந்த இஸ்லாமிய காலிபேட்டுக்கு பயந்து தப்பி ஓடிகொண்டிருக்கிறார்கள்
உதவிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வந்தட்போது 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தார்கள்.
இது போல இன்னும் எவ்வளவோ எழுதலாம்.


இவை எவற்றுக்காகவும் தி இந்து, அல்லது தினமணி, அல்லது மூத்த பத்திரிக்கையாளர்களோ தலையங்கங்கள் எழுதியோ, அல்லது இடதுசாரிகளோ போராடியோ பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கமாட்டீர்கள். அதே போலத்தான், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கீழ் யூதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும், மூத்த பத்திரிக்கையாளர்கள் வாய் மூடி இருப்பார்கள். பத்தோடு பதினொன்று என்று யூதர்கள் கொல்லப்பட்டால், நாலாம் பக்கத்தின் மூலையில் புரட்சிகர இஸ்லாமிய போராளிகளால், சதிகார யூதர்கள் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதால் இஸ்ரேலில் அமைதி வந்தது என்று எழுதினாலும் எழுதிவிட்டு மறந்துபோவார்கள்.


இது மட்டுமல்ல, இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும், முன்னாள் சிமி போராளிகளின் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களும், சமீபத்தில் உதித்த ஆம் ஆத்மி கட்சியும் தமிழகம், டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், அரபுகளுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் ஆதரவாகவும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஷாருக்கான், சோனாக்‌ஷி சின்ஹா போன்ற மும்பை இந்தி நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் அரபுகளுக்கு ஆதரவாக கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் எவரும் காஷ்மீர இந்துக்களுக்காகவோ, அல்லது ஈழத்தில் இறந்த மக்களுக்காகவோ, அல்லது நைஜீரிய கிறிஸ்துவ குழந்தைகளுக்காகவோ, அல்லது பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்து துரத்தப்படும் இந்துக்களுக்காகவோ பேசியதில்லை. நான் இவ்வாறு இவர்களையும் மனிதர்களாக கருதுங்கள் என்று யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. இது ஒரு அவதானம் மட்டுமே. அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பது உண்மை. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸாலும் அல்குவேதாவாலும் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக இந்திய ஷியாக்கள் போராடுவதில்லை. தெருக்களை அடைப்பதில்லை. கல்லெறிவதில்லை. அமர் ஜவான் ஜோதியை காலால் எட்டி உதைத்து உடைப்பதில்லை. ஆகவே ஈராக்கில் கொல்லப்படும் ஷியா பிரிவினருக்காக, இந்திய பத்திரிக்கைகளின் மூத்த பத்திரிக்கையாளர்கள் கட்டுரை வரைவதுமில்லை, அல்லது இந்திய அறிவுஜீவிகளோ போராட்டம் நடத்துவதுமில்லை. எவன் பேயாட்டம் போடுகிறானோ, அவனது சார்பினை எழுதத்தானே பத்திரிக்கைகள் இருக்கின்றன. Victim’s human rights are less important than the victimizer’s human rights என்பதுதானே இந்திய அறிவுஜீவிகளின் அடிப்படை கருதுகோள்.
இந்த மூத்த பத்திரிக்கையாளர்களின் இரக்கத்துக்காகவோ, அல்லது அவர்கள் கும்மிடி பூண்டியில் ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட் கம்யூனிஸ்டுகள் நடத்தும் போராட்டங்களுக்கோ காத்துகொண்டு, தங்களது குழந்தைகளை ஹமாஸ் கொல்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்க தயாராக இல்லை. அவர்கள் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கற்றுகொண்ட ஒரே ஒரு விஷயம், தங்களது போராட்டங்களை தாங்கள்தான் நடத்திகொள்ளவேண்டும், தங்களை தாங்கள்தான் காத்துகொள்ளவேண்டும் என்பது. (அவர்களது தெய்வமான யாஹ்வே, அவர்களது பைபிளில் சொல்லியுள்ளது போல, மெஸியாவை (மீட்பரை) அனுப்பி அவர்களுக்கு இஸ்ரேலை மீட்டுத்தருவார் என்பதைக்கூட பெரும்பான்மை இஸ்ரேலியர் நம்ப தயாராக இல்லை!) அவர்களுக்கு இரங்கி வருபவர்கள் வரட்டும். உதவுபவர்கள் உதவட்டும். ஆனால், அவர்கள் உதவுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் சொல்லை கேட்டு தங்களை காயப்படுத்திகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பவைதான்.
அந்த அறிவுரைதான் நமக்கும்.
-Sinnakaruppan

Thanks: Thinnai