"திறமையானவர்களை வீணடிப்பதிலே திறமை வாய்ந்தவர்கள் யார்?"
என்று ஒரு பந்தயம் நடாத்தினால் அதிலே ஆயுளுக்கும் முதல் பரிசைத் தட்டிச்செல்லுபவர்கள் பாகிஸ்தான் கிரிக்கட் தேர்வுக்குழுவாகத்தான் இருக்கும்.
இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலே இன்று நடந்து முடிந்திருக்கும் T20 தொடரைப் பார்க்கும்போது இவ்வாறான எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
புதிய அணித்தலைவராக முகம்மட் ஹபீஸ் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளராக வட்மோர் ஆகியோருடன் வந்திருக்கும் பாகிஸ்தான் அணி முதலாவது T20 போட்டியிலே தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சிலே போதிய திறமையைக் காண்பித்த போதிலும் குறைபாடுள்ள களத்தடுப்புகளாலும் மோசமான துடுப்பாட்டத்தினாலும் 133 என்ற ஓட்ட இலக்கை எட்ட முடியாது வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
ஆயினும் இரண்டாவது போட்டியிலே வெறும் 123 ஒட்டங்களை இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்து 99 க்குள் சகலரையும் வீழ்த்தி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரைச் சமநிலையிலே முடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரருமான சஹீட் அப்ரிடி தனது சகலதுறை ஆட்டத்தினை சிறப்பாக வெளிப்படுத்தி அணியின் கூட்டு முயற்சியுடன் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கின்றார்.
அத்துடன் இன்றைய தனது 50 வது போட்டியிலே ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டு முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தி ஒரு பிடியெடுப்புடன் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதற்காக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இது அப்ரிடி T20 போட்டிகளிலே பெற்றுக்கொண்ட 7 வது ஆட்டநாயகன் விருது என்பதுடன் ஓர் உலக சாதனை யுமாகும்.
(இதற்கு முன்பு சனத் ஜயசூரிய கெவின் பீட்டர்ஸன் ஆகியோர் தலா 6 தடவை)
கடந்த 2011 ஆண்டு உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கும் வரை எத்தனையோ பல சர்ச்சைகளிலே சிக்கி நம்பிக்கையிழந்து கிடந்தது, பாகிஸ்தான் அணி. சர்ச்சைகள் ஏற்படுத்திய மன அழுத்தங்கள் தீர்வதற்கிடையிலே உலகக்கிண்ணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை.
ஏனைய அணிகள் தமது அணித்தலைவரையும் அணியையும் முன்கூட்டியே அறிவித்து பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகம் மட்டும் அணியை அறிவித்து விட்டு அணித்தலைவரை அறிவிக்காமல் கோமாளித்தனம் செய்து கொண்டிருந்தது. இறுதியில், கடைசிநேரத்திலே சஹீட் அப்ரிடியை அழைத்து அணித்தலைவர் பதவியை அதுவும் அரைமனதோடுதான் வழங்கினார்கள், பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாக கோமாளிகள்.
அத்தனை முட்டாள்தனங்களையும் தனது நாட்டு அணிக்காகப் பொறுத்துக் கொண்டு, தனது அபிப்பிராயங்களுக்கோ தெரிவுகளுக்கோ இடமளிக்காமல் முன்கூட்டியே தெரிவுசெய்து வழங்கப்பட்ட அணியை ஏற்றுக்கொண்டார் சஹீட் அப்ரிடி.
உறுதியான நம்பிக்கையுடன் சக வீரர்களை உற்சாகப்படுத்தி (தன் பங்குக்கு 26 விக்கட்டுக்களையும் வீழ்த்தி) உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டிவரை பாகிஸ்தான் அணியை வெற்றிகரமாக முன்னின்று வழிநடாத்தியவர் சஹீட் அப்ரிடி.
இத்தனை அசாத்தியத் திறமை வாய்ந்த சஹீட் அப்ரிடி தற்போது கப்டன் பதவியில் இல்லை என்பதுதான் பாகிஸ்தான் அணியின் தொடரும் துரதிஷ்டம்.
சஹீட் அப்ரிடி போன்ற ஒரு திறமைவாய்ந்த துடிப்பான வீரர் பாகிஸ்தான் அணி தவிர்ந்த வேறு எந்த அணியில் இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக இதைவிடவும் எத்தனையோ மடங்கு திறமையாக அவரைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தான் எப்பொழுதுமே திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லாத ஓர் அணி. அவ்வாறே நெருக்கடியான வேளையிலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடுவதிலே புகழ்பெற்ற பல சகலதுறை வீரர்களையும் கொண்டிருப்பதும் வழமை.
ஆனால் அவர்களின் துரதிஷ்டங்களிலே ஒன்று எப்பொழுதெல்லாம் ஒரு திறமையான வீரர் முன்னேறிக்கொண்டு வருகின்றாரோ அப்போதெல்லாம் அவர் ஏதாவது ஒரு சர்ச்சையிலே மாட்டிக்கொண்டு விடுவார். பின்பு அணியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுவார். இதற்கு உதாரணங்களாக ஏராளமான முன்னாள் வீரர்களும் தற்போதைய வீரர்களும் உள்ளனர்.
அதுவுமில்லையென்றால் கிரிக்கட் உலகமே ஆச்சரியத்தால் உறைந்து போகுமளவுக்கு அதிரடியாக அணித்தலைவராக நியமிக்கப்படுவார்.
அவர் தனது தலைமைத்துவத் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வருகையிலே அணி வீரர்களுக்கிடையிலோ அல்லது கிரிக்கட் தேர்வுக்குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்துவிடும்... பின்பு அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதும் பின்பு அணியிலிருந்தே காணாமல் போவதுமாக...
இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்று நடந்து கொண்டேயிருக்கும் அணிதான் பாகிஸ்தான் அணி.
-Mutur' Mohd.Rafi