Saturday, February 23, 2013

தோல்வி நிலையென நினைத்தால்....!





அன்புள்ள நண்பர்களே!

"ஊமைவிழிகள்" எனும் தமிழ் திரைப்படத்தை நினைவிருக்கின்றதா?

அதுவரையிலே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றால் ஏதோ கலைப்படம் என்ற பெயரிலே காசுபார்க்கமுடியாத குறும்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் வெற்று அறிவுஜீவிகள்  என்ற பிம்பத்தை  உடைத்தெறிந்து, அன்றைய தமிழ்படத் தயாரிப்பாளர்களை திரைப்படக்கல்லூரி மாணவர்களின் பின்னால் ஓடச்செய்த திரைப்படம்.

ஆபாவாணன் எனும் படைப்பாளியின் திறமைக்கும் துணிச்சலுக்கும் கிடைத்த வெற்றிக்கனி அது.

எண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் பயணித்துக் கொண்டிருந்த வேளை ஒரு பிரமாண்டமான படைப்பை முற்றுமுழுதான மாறுபட்ட திரைக்கதையம்சம் கொண்ட பாணியில் ஊமைவிழிகளை தமிழ் சினிமாவுக்கு ஒரு புது அம்சமாக பாய்ச்சியவர்தான் ஆபாவாணன்

மனோஜ்- கியான் எனும் வித்தியாசமான திறமை கொண்ட இசை இரட்டையர்களைத்  தமிழுக்குத் தந்த படம் அது. (பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் கண்டுபிடிப்பு)

நானறிந்த வகையிலே, ஒளிப்பதிவுக்காக தியேட்டரிலே முதன்முதலாக கைத்தட்டல் கிடைத்த தமிழ்படம். (ஆரம்பத்தில் தூரத்திலே தீப்பந்தங்கள் போலத்தோன்றி பின்பு மெல்ல அருகே நெருங்கியதும் வரிசையாய் வரும் கார்களின் முகப்பு விளக்குகளின் ஊர்வலம் என்று தெரியவரும் காட்சி)

இத்தனை பல சிறப்புகள் இருந்தபோதிலும் ஊமைவிழிகள் என்றதும் எனக்கு முதலிலே நினைவுக்கு வருவது எப்போது கேட்டாலும் உயிரை உருக்கும் பின்வரும் பாடல்தான்.

இந்தப்பாடலை யாத்தவரும் ஆபாவாணன்தான் என்பது அவர்மீது மேலும் மதிப்பை ஏற்படுத்துகின்றது அல்லவா?

நமது தமிழ்த் திரைப்படப் பாடல் வரலாற்றில் 'வெற்றி' என்ற வார்த்தையில் துவங்கும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், தோல்வி என்ற சொல்லில் துவங்கும் பாடல் இதுவொன்றாகத்தான் இருக்க வேண்டும்.

தோல்வியிலிருந்து எழுந்து உயரும் இடம்தான் வெற்றி என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அந்தச் சொல்லில் தம் பாடலைத் துவக்குவதில் அவருக்குத் துளியும் தயக்கம் இருந்திருக்கவில்லை. எத்தகைய மனவுறுதி பாருங்கள்!

நீங்களும் பாடல்வரிகளை படித்துப் பாருங்கள்.

'எங்கள் தந்தையர் நாடெனும்போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று பாடிய பாரதியின் உணர்வு புரியும்.

Singers: P.B. Srinivas & Abavaanan
Lyrics: Abavaanan
Music: Manoj-Gyan


தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா...?
வாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா...?



உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா...?
உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்



விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்...?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்..?



யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா...?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா...?



உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா...?
உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா.....?


 - Jessly Jesslya

இதோ இணைப்பாக வருகின்றது ஆபாவாணனின் பேட்டி:



கேள்வி:  80களிலே அதாவது 1986ல் ஊமைவிழிகள்; என்ற திரைப்படத்தோடு உங்களுடைய திரைப்பயணம் ஆரம்பிக்கின்றது. இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் உங்களுடைய திரையுலக வாழ்வு அமைந்திருக்கிறது அப்படித் தானே?

ஆமாம்!

இந்த ஊமைவிழிகள் என்ற திரைப்படத்திலே உங்களுடைய ஆரம்பம் வருவதற்கு முன்னர் சினிமா மீதான காதல். அதன் வழியாக இந்த சினிமா குறித்து உங்களுடைய தேடல் எப்படி அமைந்ததென்று சொல்லுங்களேன்?
பதில்: சினிமாவிற்கு அறிமுகம் என்று சொல்லிச் சொன்னால் பள்ளிப் பருவத்திலிருந்து சொல்லாம். பள்ளிப் பருவத்தில சிவாஜியினுடைய படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. என்னுடைய சினிமா ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்த வி ஷயம். ஊரில அப்பா அம்மா எல்லோரும் சிவாஜி படம்னா விரும்பிப் பார்த்திட்டு இருப்பாங்க. அதால அவங்கட பிள்ளையான எனக்கும் அவங்ககூட படத்திற்கு போறது அதப்பத்தி பேசுறது என்று வந்ததால அது மேல ஒரு ஈர்ப்பு. வேற ஒரு கட்டத்திற்கப்புறம் சிவாஜி மேல அவர் நடிப்பு மேல அபரிதமான பற்றுதல். சிவாஜி படங்கள்னா வெறித்தனமான ஒரு காதல். இப்படியே அது வந்து கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்திட்டு போய்ட்டே இருந்திச்சு. பள்ளிப் பருவத்தில ஏற்பட்ட அந்த ஈர்ப்பு தான் சினிமா மேல ஒரு ஆர்வத்தையும் வேகத்தையும் ஏற்படுத்தின ஒரு வி ஷயம். அதனுடைய ஒரு விளைவு என்னன்னா பள்ளிப் பருவத்துல தெரிஞ்சதெல்லாம் நடிப்பு. நடிகர்கள் மாத்திரம் தான் நம்முடைய கண்ணு முன்னாடி தெரிவார்கள். சினிமாவுன்னா வந்து நடிகர்கள் தான் அப்படிங்கிற தோற்றத்தில .இருந்த காலகட்டத்துல நம்ம வந்து நடிக்கப் போகனும் அப்படிங்கிற ஒரு ஆர்வத்தை ஆறாம் வகுப்பு காலகட்டத்துல இருந்து எனக்குள்ள ஒரு வேகம் வளர்ந்திட்டே இருந்திச்சு. பள்ளிக்கூடத்துல நாடகங்கள் நடிக்கிறது இசையில் ஈடுபாடு கொள்றது. அந்த மாதிரி பள்ளிப்பருவத்துல சினிமா சம்பந்தப்பட்ட எல்லாத்திலும் தயாராக ஆரம்பிச்சேன்.

ரெண்டாவது பிற்காலத்துல தான் சினிமா வந்து அதனுடைய உண்மையான தலைமை தளபதி யார்னா இயக்குநர் தான் அப்படிங்கிறது புரிஞ்சது இந்த கட்டத்தில தான். அது பின்னாடி ஏற்பட்ட ஒரு மாற்றம், அந்த பள்ளிப்பருவத்தில என்னோட கவனம் முழுக்க சினிமாவுல நடிக்கணும் என்ற விதத்தில் தான் போய்ட்டிருந்தது.

அதன் பின்னதாக நீங்கள் திரைப்படக் கல்லூரியிலே ஒரு மாணவராக இணைந்து அந்தப் படிப்பையும் பயின்று கொண்டீர்கள். முக்கியமாக எந்த துறையை தேர்ந்தெடுத்து நீங்கள் படித்திருந்தீர்கள்?
ஆம். சினிமாவுல நுழையணும்னா சென்னைக்குப் போகணும். சென்னைக்குப் போகணும்னா என்ன பண்ணலாம்; பட்டப்படிப்பை சென்னையில வைச்சுக்கிட்டா நமக்கு வசதியாயிருக்கும். அதால நம்ம அடுத்த தேடலுக்கு வசதிப்படும்னு சொல்லிட்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில வந்து ஆங்கில இலக்கியம் படித்தேன். காரணம் என்னன்னா படிச்சது முழுக்க தமிழ் மீடியம். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். அத மாதிரி சினிமாவுக்கான தேடலையும் வளர்க்க அது வசதியா இருக்கும்னு சொல்லிட்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில பட்டப்படிப்பிற்கு சேர்ந்திட்டு அதுக்குப் பிறகு நிறைய தேடல்களை ஆரம்பிச்சேன். சரி என்ன பண்ணலாம். யார்கிட்ட போய் சேரலாம். எப்பிடி சினிமா எழுதலாம். அப்பிடிங்கிற இதில இருந்தப்போ அப்ப திரைப்படக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டேன். எப்பிடி கேள்விப்பட்டேன்னா "அவள் அப்படித்தான்" என்கிற படம். டைரக்டர் ருத்ரையா டைரக்ட் பண்ணின படம். ரஜனி கமல் ரெண்டு பேரும் தான் அதில நடிச்சிருப்பாங்க. அந்தப் படத்தை பர்த்தப்போ அந்தப் படத்திற்கான விமர்சனங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர் வந்து அவர் தயாரித்து இயக்கிய படம். அது நல்லா திரைப்படக் கல்லூரியில இருக்கு.
அதுல இத மாதிரி கற்றுக் கொள்ள முடியும்ன்னு தெரிஞ்சவுடன் திரைப்படக் கல்லூரிக்கு அங்க இருந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்கு அப்ப மன்றத்துக்கு தலைவராயிருந்தேன். அவங்க சார்பில வந்து அங்க புரோகிராம் எல்லாம் நடத்தலாம் என்று அவங்கள மீட் பண்ணினேன். அப்பத் தான் தெரிய வந்தது. பள்ளிக்கூட நண்பர் நாகராஜன்னு சொல்லிட்டு எடிட்டிங். படத்துறை பிரிவில படிச்சிட்டு இருந்தான். பார்த்தானா ஆஹா! உனக்கு ஏற்ற துறை இது. பள்ளிக்கூடங்கள்ல பார்த்திருக்கிறான். நான் நல்ல நாடகங்கள்ல ஈடுபாடா இருக்கிறவன். இலக்கிய ஆர்வம். நாடகம் மற்ற வருடாவருடம் நடக்கிற நிகழ்ச்சிகளை பார்த்து ஒரு ஈர்ப்பில இருந்தவன். உனக்கு வந்து இந்த திரைப்படக் கல்லூரி நல்லதாக இருக்கும். இயக்குநர் துறையில நீ படிச்சீன்னா உனக்கு நல்ல பெரியதாய் வாய்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொன்னவுடன் அவன் மூலமா தான் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் தான் முடிவு பண்ணினேன். ஓகே. பட்டப்படிப்பை முடிச்சிட்டு திரைப்படக் கல்லூரியில சேருவோம்னு சொல்லி.

அதே காலகட்டத்தில வந்து 80களில் அதன் உண்மையான பாதை என்று பார்த்தால் இயல்பு வாழ்க்கை இயல்பான படங்கள் அப்படிங்கிற மாதிரி தான் முதல் ஈர்ப்பு இருந்தது. ஒரு கிராமிய வாழ்வை பிரதிபலிக்கக் கூடிய படங்களை பண்ணணும். நான் ஒரு கிராமத்தில இருந்து வந்ததால தானா தான் விருப்பம் இருந்திச்சு. அந்த ஒரு நோக்கத்தில தான் மனசுக்குள்ள அந்த மாதிரி தான் ஒரு வேகம் இருந்திச்சு. அப்ப அந்த காலகட்டத்துல தான் பட்டப்படிப்பு படிச்ச காலகட்டத்துல தான் பதினாறு வயசினிலே திரைப்படத்தை பார்த்தேன். பார்த்தவுடன் ஒரு வாரம் நான் தூங்கலை. ஏன்னா எப்படி ஒரு கிராமிய வாழ்க்கையை கிராமிய இயல்பை வைச்சு நாம சினிமாவுக்குள்ள நுழையலாம்னு கனவு கண்டிருந்தமோ அதைவிட பல மடங்கு சிறப்பாகவும் பிரமாதமாகவும் பதினாறு வயசினிலே திரைப்படத்தை எடுத்திருக்காங்க. நம்ம போய் எப்பிடி சினிமாவுல என்ன பண்ண முடியும். என்ன பண்ணப் போறோம். அது எனக்குள்ளேயே ஒரு பயம். ஒரு தடுமாற்றம். எல்லாம் ஏற்பட்டிச்சு.
அந்த எண்ணுதலோட தான் திரைப்படக் கல்லூரியில சேர்ந்தேன். சேர்ந்ததற்கப்புறம் தான் நாம கிணற்றுத்தவளையா இருந்திருக்கோம். இது வந்து எல்லையில்லாதது. சினிமாங்குறது எல்லையில்லாதது. பல வித கோணங்கள் இருக்குதில்ல எந்தக் கோணத்தை வேணுமினாலும் வந்து தேர்ந்தெடுத்துக்க முடியும். அப்பிடிங்கிற ஒரு அறிவு அங்க கிடைச்சது. அதற்கப்புறம் தான் ஓகே. நாம எந்த கோணத்தில நுழைஞசா நாம கவனிக்கப்படுவோம். கவனிக்கப்பட்டதிற்கு பின்னாடி நம் எதிர்கால திட்டங்கள் என்ன அப்பின்னு எனக்கு நானே ஒரு வரைமுறைகளை ஏற்படுத்திக்கிட்டு வேர்க் பண்ண ஆரம்பிச்சேன். அதனுடைய ரிசல்ட்டு தான் நீங்க பார்த்த ஊமைவிழிகள் திரைப்படம்.அந்த திரைப்படக் கல்லூரியில கதை திரைக்கதை இயக்குநர் பிலிம் டைரக்க்ஷன் அதில மூன்றாண்டு காலம் படிச்சிட்டு அதுக்கப்புறம் படம் எடுத்தேன்.

அதாவது இந்தப் படத்தை பற்றி சொல்லும் போது ஊமைவிழிகள் என்ற படம் வந்த காலகட்த்தில இந்தப் படத்தினுடைய பிரம்மாண்டம். அந்த கதை சொன்ன உத்தி. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது அந்தக் காலத்திலே ஒரு தயாரிப்பாளராகத் தான் அந்தப் படத்ழத நீங்கள் முன்னெடுத்திருக்கிறீர்கள். அதாவது பல திரைப்படங்களிலே நீங்கள் உங்களுடைய அடிப்படையிலே திரைக்கதை ஆசிரியராக இயக்குநராக இருந்தாலும் ஒரு உதவி ஆசிரியராக அல்லாத இணை என்ற பாணியிலே முழுமையான எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றிலே முழுமையான பங்களிப்பாக உங்களுடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. நேரடியாக இயக்குநர் என்ற துறையிலே நீங்கள் அப்படியே கால் வைக்கவில்லை. அதற்கு ஏதும் அடிப்படை காரணம் இருக்கிறதா?
ஆம். நிச்சயமாக. திரைப்படக் கல்லூரியைமுடிச்சவுடன் திரைப்படக் கல்லூரியில படிக்கும் காலகட்டத்திலேயே வந்து ஒரு முக்கியமாக முடிவெடுக்கிறதுக்கு சில நிகழ்ச்சிகள் காரணமாக இருந்திச்சு. அந்த திரைப்படக் கல்லூரி ஆண்டு விழாவில பிரபலமான இயக்குநர் ஒருத்தர் வந்தாரு. அந்த ஆண்டுவிழாவில அவர் பேசறப்போ திரைப்படக்கல்லூரி என்கிறது வந்து டோட்டலா வேஸ்டு. இந்த கல்லூரியில படிச்சிட்டு வந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க? அதுக்கப்புறம் வந்து திரும்ப எங்கள மாதிரி இயக்குநர்களிடம் உதவியாளராய் சேர்ந்து தொழிலைப் படிச்சிட்டு அதுக்கப்புறம் தான் படம் எடுக்க முடியும். இடையில் திரைப்படக் கல்லூரியில இந்த படிப்பறிவையும் அனுபவத்தையும் வைச்சுக்கிட்டு உங்களால படங்கள் எடுக்க முடியாது. ஏன் வந்து உங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்கிறீங்க. அப்பிடி சொன்னவுடன எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்திச்சு. என்னடா அப்பிடி ஒரு எண்ணத்தோட பேசறாரு. அதுவும் திரைப்படக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு வந்திட்டு அங்க வைச்சு மாதிரி சொன்னவுடன் என்னால ஜீரணிக்கவே முடியலை. என்ன இப்பிடி ஒரு கற்றுக்குட்டியாக இருக்காரு. என்ன இப்படி பேசறாரு. மிகப் பெரிய இயக்குநர். பெரிய சாதனைகளை பண்ணிட்டு இருக்கிற பெரிய டைரக்டர். இப்படி ஒரு எண்ணத்தை அவர் வளர்த்திட்டு இருக்காரே என்று நினைச்சவுடனே அதுக்கப்புறம் தான் ஓகே. இதுக்கு முன்னாடி திரைப்படக் கல்லூரிக்கு வந்த யாருமே படங்கள் கொடுத்திருக்காங்க. நான் முதலே சொன்ன மாதிரி அவள் அப்படித் தான் என்கிறது மிகச் சிறந்த படம். ஆனா என்னன்னா வணிகரீதியா வெற்றியடையணும். கமர்ஷியல் சக்சஸ் அப்பிடின்னு வந்தா தான் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் எதற்குமே என்றதை புரிஞ்சுகிட்டேன்.


அப்ப வந்து நல்ல கமர்ஷியல் சக்ஸசை கொடுக்கனும்னா தான் நம்ம யாரு என்றதை தெரிஞ்சுக்குவாங்க. அதனால வெறும் திரைப்படக் கல்லூரியில படிச்ச அனுபவமுள்ளவர்களை வைச்சுக்கிட்டு படங்களை நம்ம எடுக்கனும். நம்ம வகுப்பு தோழர்கள் நம்ம கூடப் படிக்கிறவங்க நமக்கு கீழ படிச்சிட்டு இருக்கிறவங்க இந்த மாதிரி ஒரு டீமை செட் பண்ணுவம். நம்மளே அத தயாரிப்போம். நம்மளே அத முழுமையா எடுப்போம். முழுக்க முழுக்க திரைப்படக் கல்லூரியில படிச்ச அந்த அனுபவத்தை வைச்சு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தோம் என்கிற பெருமையை நெறிப்படுத்தணும் அப்பிடிங்கிற ஒரு வேகத்தை உண்டுபண்ணினது அந்த நிகழ்ச்சி. அதனுடைய விளைவு தான் நான் அங்க திரைப்படக் கல்லூரியில படிக்கிறப்போ ஊமைவிழிகள் திரைப்படத்தை எடுத்தம். அங்க டிப்ளோமாவுக்கு பிலிம் ஒன்று எடுக்கணும். எங்க பைனல் இயர்ல மூன்றாவது வருடத்துல கடைசியாக நாங்க படிச்சிட்டு அதை எடுத்துக் காட்டணும். அதில வந்து இந்த ஊமைவிழிகள் ஷா ர்ட் சீனை தான் டிப்ளோமாவிற்காக நான் எடுத்தன். அது வந்து 1600 லென்த் இருக்கும். அந்தப் படத்தினுடைய நீளம் அது. அது எடுக்கப்பட்டு இன்னைக்கு வரைக்கும் திரைப்படக் கல்லூரியில அதை ஒரு பொக்கிஷமாக வைச்சிட்டு இருக்காங்க. கல்லூரியில யார் வந்தாலும் சாம்பிளா கல்லூரி மாணவர்கள் படிக்கிறப்போ எடுத்தது என்று போட்டுக் காட்டுறதில முன்னணியில இருக்கிற படம் அது. அதுக்கப்புறம் முழுமையாக நாம தயார் பண்ணிக்கணும். ஏன்னா நாளைக்கு கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவோ ஒரு இயக்குநராகவோ ஒரு தயாரிப்பாளராகவோ இருக்கிறப்போ அது முழுமையாக வெற்றியடையனுங்கிறதில முழுமையாக நான் தயார் பண்ணிக்கிட்டேன். தயார் பண்ணிட்டு என்னோட வகுப்பு தோழர்கள் கூடப் படிச்சவங்க ஜீனியர்ஸ் எல்லாரையும் ஒரு டீம் ஆக்கி அந்த ஊமைவிழிகள் படத்தை அதுக்கப்புறம் நாங்க ஆரம்பிச்சோம்.

அந்தக் காலகட்டத்திலே தமிழ் சினிமாவின் ஒரு பெரும் நட்சத்திரமாக இருந்தவர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள். அவருக்கு இப்படியான ஒரு இளைஞர் பட்டாளம். அதாவது அதுவரை இப்படியான ஒரு வர்த்தக சினிமாவை சாதித்துக் காட்டாத திரைப்படக் கல்லூரி சமூகம் ஒன்று இப்படியான ஒரு கதையோடு வந்திருக்கிறது. அந்தக் கதையை நம்பிக் கொண்டு எவ்வளவு தூரம் எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தார்?
அது சரியாகச் சொல்லனும்னா 2 விடயங்கள் தான் அந்தப் படத்தில அவங்க ஈடுபாடு காட்டறதுக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒன்னு என்னன்னா நான் சொன்னேனே திரைப்படக் கல்லூரியில டிப்ளோமா எடுத்த அந்த படம். அந்த படத்தை வந்து நான் ஸ்கிரின்ல காண்பிச்சேன். விஜயகாந்த் நண்பன் இப்ராஹிம் ராவுத்தருக்கு போட்டுக் காண்பிச்சேன். அடுத்து அத காட்டுறதுக்கு முன்னாடி ஏற்கனவே பாடல்கள் அத்தனையும் பதிவு பண்ணி வைச்சிருந்தேன். 7 பாடல்கள். அத்தனையையும் போட்டுக் காண்பிச்சேன். பார்த்த அந்த டிப்ளோமா பிலிமும் இந்தப் பாடல்களும் குறிப்பாக ராவுத்தர் அந்தக் காலத்தில சொன்னது. 'நிலை மாறும் உலகில் நிலைக்கும் கனவு' என்ற பாடல் இருக்கும். அதில வந்து சரணத்தில வரிகள் வரும். 'தினந்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கு இங்கே நினைவு' அப்பிடிங்கிற அந்த பாடல் இருக்கும். நாங்கள்லாம் போராடிட்டு இருந்த காலகட்டத்தில எங்களுடைய போராட்டத்தை அப்பிடியே நினைவுபடுத்துது. அதில வந்து ஒரு உண்மை இருக்கு அந்த வார்த்தைகளை கேட்டவுடன வந்து எனக்கு அப்பிடியே உலுக்கிடுச்சு. அந்த வார்த்தைகள் தான். எங்களோட படம் பண்ணனுங்கிற எண்ணத்தையே உருவாக்கிடுச்சு.

அதுக்கப்புறம் டிப்ளோமா பிலிம் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா பண்ணுவீங்கன்னு ஒரு எண்ணத்தை அந்த சின்னப் படம் உருவாக்கிச்சுது அப்பிடின்னார். முழுக்க முழுக்க சொல்லனும்னா இப்ராஹிம் ராவுத்தர் சார் தான் மிகப் பெரிய ஈடுபாடு காண்பிச்சாரு. விஜயகாந்த்தைப் பொறுத்தவரைக்கும் அவருக்கு இதைப் கற்றியோ பாதிப்பைப் பற்றியோ எந்த ஒன்றும் தெரியாமல் இருந்திச்சு. அதுக்கப்புறம் இப்ராஹிம் ராவுத்தர் தான் இந்தப் படத்தை செய்யணும் என்று அவரை சம்மதிக்க வைச்சு பண்ணச் சொல்லியிருக்காரு.
விஜயகாந்த் சார் படப்பிடிப்புக்கு வரும் போது சொல்லுவாரு. சார் அது என்னன்னு தெரியல. ராவுத்தருக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போயிட்டு என்பாரு. கரெக்டா சொல்லனும்னா படம் ஆரம்பிச்சதில இருந்து முடிவு வரைக்கும் நாங்க என்ன பண்ணிட்டு இருக்கோம். என்ன அதனுடைய ரிசல்ட்டு என்ன மாதிரி வரும்னு அவருக்கு தெரியல. படப்பிடிப்பின் போது சொல்வாரு. உதாரணத்துக்கு அந்த இன்ரறக்சன் சீன் எல்லாம் எடுத்தப்போ சொன்னாரு. வெறுமனே காலைக் காட்டறது கையைக் காட்டறது வழக்கமாக அறிமுகப்படுத்தறது தானே அப்பிடின்னு சொன்னப்போ நான் சொன்னேன். அதாவது கையைக் காலைக் காட்டறது ஷாட்ஸ்னு பார்த்தால் வழக்கமாக எடுக்கிற ஷாட்ஸ் தான். ஆனா ஒரு கதையில எந்தக் கட்டத்தில எந்த மாதிரி சூழ்நிலையில எந்த மாதிரி ஷாட்ஸ்ல அறிமுகம் கொடுக்கிறோம். அது எந்தளவிற்கு ஓப்னிங் ஆகுதோ அதுக்கு முன்னாடி பின்னாடி இருக்கிற சீக்குவன்ஸோட லிங் பண்ணி பார்த்தால் தெரியும். இப்பத் தெரியாது. படத்தைப் பாருங்க அதுக்குப் பிறகு தெரியும் எவ்வளவு பிரமாதமாக இருக்கப் போகுது
என்றது. சூட்டிங் ஸ்பொட்டிலேயே தெரியும். அத வந்து படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுகிட்டாங்க. ஏன்னா அதுக்கு முன்னாடி வந்த படங்களை விட விஜயகாந்த்துடைய என்ட்ரிக்கு அதாவது படத்தில அவருடைய தலை தெரியும் பொழுது அரங்கம் முழுவதும் கைகட்டி விசிலடித்து ஒரு பெரிய வரவேற்பைக் கொடுத்த முதல் படம் ஊமைவிழிகள். அதை அவங்களும் சொல்வாங்க. நாங்களும் தெரிஞ்சுகிட்டோம்.


அதில் இன்னுமொரு புதுமை என்னவென்றால் பொதுவாக நாயகன் முதல் சீனிலோ அல்லது அடுத்த சீனிலோ வருவார். ஆனால் விஜயகாந்த்திற்கு எந்தவிதமான பாடல்கள் எதனையும் கொடுக்காமல் அந்தப் படத்தினுடைய இடைவேளைக்கு சமீபமாகத் தான் அந்த என்ட்ரியும் இருக்கும் இல்லையா?

ஆமாம். என்னன்னா குறிப்பாக நல்ல விசயம் என்டு சொல்றேன்னா பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு என்று பாராட்டுதல்கள் வந்துட்டு இருந்திச்சு. ஆனால் அவருக்கு முதலே சொல்லிட்டேன். உங்களுடைய கேரக்டருக்கு பாடல்கள் கிடையாது. உங்க கேரக்டர் பாட்டுப் பாடினால் நல்லாயிருக்காது அப்படின்னு முதலே சொல்லிட்டேன் நான். ஆனா படப்பிடிப்பு நடந்திட்டு இருந்த காலகட்டத்தில பாட்டுக்கள் மிகப் பெரிய ஹிட். எங்க பார்த்தாலும் பெரிய சக்சஸ். அப்பப்ப கேட்பார். சார் ஒரு பாட்டு நான் பாடலாமான்னு. இந்த பாட்டுப் பாடலாமா அந்த பாட்டுப் பாடலாமா ஏதாச்சும் சிச்சுவேஷன் பண்ணலாமா என்று கேட்டிட்டு இருந்தாரு. நான் சொன்னேன் இல்ல சார் உங்க கரெக்டர் பாடினால் நல்லாயிருக்காதுன்னு. அதை கேட்டிட்டு அமைதியாயிடுவார். அன்னைக்கு இருந்த காலகட்டத்தில நாங்கள்லாம் புதுசு. ஒரு தயாரிப்பாளராக ஒரு டைரக்டராக ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டராக எல்லாமே புதுசாயிருந்தோம். ஒரு வரிகளை வற்புறுத்தி இல்லையில்லை எனக்கு பாட்டு கொடுத்தாகனும் என்றிருந்தார்னா என்ன நடந்திருக்குமோ தெரியாது. ஆனால் எந்த ஒரு ஆளுமையும் காட்டாம எங்களுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு ஒத்துழைப்பு கொடுத்தார். அன்றைக்கும் ஒரு விழாவில குறிப்பிட்டு சொன்னேன். எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறாங்க. ஆனால் வந்து இயக்குநர்களின் நடிகராக வெற்றி பெற்றவர் என்று குறிப்பிட்டாகணும் என்று அந்த மேடையில் சொன்னேன். எந்த தலையீடும் இருக்கலை.


அதை மாதிரி ஆக்க்ஷன் காட்சிகளுக்கு சூப்பர் சூப்பராயன் மாஸ்டரை கூப்பிட்டு சொன்னேன். சார் இந்த மாதிரி எனக்கு வந்து பறந்து பறந்து அடிக்கிற பம்மாத்து வேலையெல்லாம் கூடாது. உடைக்கிற வேலை இருக்கக் கூடாது. காய்கறி வண்டி உடைக்கிறது. கண்ணாடி உடைக்கிறது என்று இப்பிடியெல்லாம் சொல்லிட்டு வேணாம். எனக்கு சும்மா இருந்தால் போதும் என்றேன். இதுக்கு எதுக்கு சார் நாங்க சும்மா ஒரு அசிஸ்டெண்ட் வைத்து செய்திட்டு போகலாம் என்றார். இது வந்து இப்ப சொன்னா தெரியாது மாஸ்டர் இதை முடிச்சிட்டு முழுக்க படமாக பார்க்கேக்க தெரிஞ்சுக்குவீங்க என்று சொல்லிட்டிருந்தேன். அவரு அமைதியாக போய் விஜயகாந்த்ட்ட ஏத்தி விட்டு பேசிட்டு இருந்தாரு. கிண்டலடிச்சிட்டே இருப்பாங்க. காதுபடவே என்ன சொல்லுவாங்க. அப்ப வந்து டி.ராஜேந்தரின் பட சூட்டிங். கிட்டத்தட்ட 10, 15 நாள் பைட் எடுத்தாங்க. என் காதுபடவே என்னாமா எடுத்தம் பைட் என்று எரிச்சலை ஏற்படுத்தனும்னு பேசிட்டே இருப்பார். நான் எதுவுமே கண்டுக்க மாட்டேன். சிரிச்சுக்கிட்டே படம் எடுத்துக்கிட்டு இருப்பேன். கரெக்டா சொல்லப் போனால் ஓவர்லோயினுடைய அக்சன்பிளக் என்னான்னா 4 மணி நேரம் 5 மணி நேரம் இவ்வளவு தான் அந்த பைட் எடுத்ததே. முதலே முடிவு பண்ணிட்டம். இவ்ளோ தான் எடுக்கிறது எண்டு. இவர் போய் விஜயகாந்த்ட்ட ஏத்தி விட்டவுடன விஜயகாந்த் கூப்பிடுவார். சார் நீங்க படமெல்லாம் நீங்க எடுத்திடுங்க இந்த பைட் மாத்திரம் நானும் மாஸ்டரும் எடுத்துக் கொடுத்திடறோம், அப்போ நான் தனிய அவர கூட்டிட்டு போய் சொன்னன். இந்தப் படம் வந்து உங்க யுத்தி இல்ல. நான் அப்பிடித் தான் சொன்னன். அதாவது ராவுத்தர் சொன்னாரு இவங்க என்னவோ பண்ணுவாங்க அப்பிடிங்கிற நம்பிக்கையில பண்ணட்டிருக்கிறீங்க. அதால இந்தப் படத்தை நம்பி நீங்க இல்ல. அப்போ ஏழெட்டு படங்கள்ல கதாநாயகனாக அவர் நடிச்சிட்டிருந்த காலகட்டம் அது. அதால இந்தப் படம் பொறுத்தவரைக்கும் முழுசாக எங்கிட்ட விட்டிடுங்க. எந்த தலையீடும் வைச்சுக்காதீங்க. நான் வந்து டிபரெண்ட்டா பண்ணணும் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய வெற்றிக்கும் விருப்பத்திற்கும் சில படங்கள் இருக்கு. அது எந்த வகையிலும் தடையில்லாம போகப் போகுது. இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் முழுக்க என்னோட விருப்பத்திற்கு விட்டீங்கன்னா அதில வந்து நான் என்ன நினைக்கிறேனோ அதை செயற்படுத்த முடியும். இதில ஃபைட்டிலிருந்து எல்லாமே புதுசா பண்ணணும் எண்டு நினைக்கிறேன். அப்ப அவர் ஓகே ஓகே என்று இவ்ளோ தான் பேசினார். என்ன சொல்ல வாறேன்னா அந்தப் படம் முழுக்கவே அப்பப்ப வந்து தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்துவாரேயொழிய எந்த சூழ்நிலையிலும் ஆளுமை பண்ணலை. ஒரு இயக்குநராக ஒரு தயாரிப்பாளராக முழு சுதந்திரம் இருந்திச்சு. கேட்பாரு நான் அதற்கு விளக்கம் கொடுத்தவுடன அமைதியாயிடுவாரு. அந்தக் காலகட்டத்தில ஒரு நடிகர் வந்து ஒரு இயக்குநரின் ஒரு தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டுபண்றது என்றது பெரிய விசயமாக இருந்தது. ஆனா அவர் அதை பண்ணினாரு. அதை இன்னைக்கும் நான் நினைச்சுப் பார்த்துக்குவன். அந்த அவர் கொடுத்த முழு ஒத்துழைப்புத் தான் முழு வெற்றிக்கும் காரணம் என்று நான் நினைக்கிறன்.


ஊமை விழிகள் படத்திலே மற்றைய கலைஞர்களை எடுத்துக் கொண்டால் கூட கார்த்திக் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் எல்லாருமே இணைந்து அவர்களுக்கான அந்த காட்சிகள் கூட குறிப்பிட்டளவு காட்சிகள் தான் இருக்கும். ஆனால் படத்திலே அவர்கள் இணைந்து பணியாற்றியது கூட புதுமை இல்லையா?

ஆமாம். நான் குறிப்பிட்ட மாதிரியே அந்த பைற்க்கு அவர் கூப்பிட்டுக் கூப்பிட்டு பேசினாருன்னு. அதற்கப்புறம் படம் ரிலீஸ்க்கப்புறம் சூப்பர் சூப்பராவில இருந்து போன் வந்திச்சு. ஏன்னா இந்துப் பத்திரிகைல ஆக்சன் சீனுக்கு மிகப் பெரிய பாராட்டு. அதப் பற்றி எழுதப்பட்டவுடனே அப்பத் தான் போன் பண்ணினாரு. சார் என்னை மன்னிச்சிடுங்க படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில நான் உங்களை புரிஞ்சுக்கல. நான் அதில சொல்லப் போனால் எந்த வேலையும் பார்க்கலை. ரொம்ப சிம்பிளா பண்ணினேன். இதையே வேறு படங்களுக்கென்றால் 10 நாள் பதினைஞ்சு நாள் தலைகீழாக தொங்கி நின்று பல யுக்திகள் பண்ணியிருக்கோம். சார் நான் எந்தப் படத்திலையும் எடுக்காத பேரு வந்து இந்தப் படம் எடுத்துக் கொடுத்திச்சு. நீங்க என்ன பண்ணீங்க என்றது இப்பத் தான் படத்தைப் பார்த்தவுடன் தான் எனக்கு புரிஞ்சுது. அதால தப்பாய் எடுத்துக்காதீங்க என்டாரு. அதுக்கப்புறம் உழவன் மகன் படம் பண்ணறப்போ வந்திடுவாரு. வந்திட்டு சார் இதில நான் என்ன பண்ணணும் நாம என்ன பண்றோம் இதில என்டு ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு நாம சொல்றதை வந்து சொல்றதை விட பல மடங்கு சிறப்பாக பண்ணிக் கொடுத்தாரு.


இந்த ஊமைவிழிகள் படத்தை எடுத்துக் கொண்டால் நீங்கள் அதற்கான பாடல்களை ஏற்கனவே பதிவு செய்தனீர்கள் எனக் குறிப்பிட்டீர்கள். அதாவது மனோஜ் கியான் இரட்டையர்கள் அவர்கள் உங்களோடு அதிக படங்களிலே பணியாற்றியவர்கள். அப்படியானதொரு வட இந்திய இசையமைப்பாளர்களை தமிழ் சூழலுக்கு நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு சவாலாக இருந்திருக்கும் இல்லையா?

சரியாக சொல்லனும்னா திரைப்படங்களுக்கு எப்போதுமே டியூன் போடறது முக்கியமான இசை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறதுன்னா நான் தான் எடுப்பேன். எனக்கு ஒரு நல்ல அசோஸியேட் தேவைப்பட்டிச்சு. அந்தக் காலகட்டத்தில தான் மனோஜ் கியானை நான் சந்திக்கிறேன். இரவுப் பாடகன் என்ற படத்தை நான் வந்து இயக்கி தயாரிச்சப்போ எல்.வைத்யநாதன் எங்கிற மியூசிக் டைரக்டர பிக்ட்ஸ் பண்ணிட்டு பம்பாய் போனோம். பம்பாய்ல தான் ரெக்காடிங் எல்லாம் வைச்சிட்டிருந்தோம். இந்த பம்பாய் ரெக்காடிங்ல இவர அறிமுகப்படுத்தினது ஜேசுதாஸ். நாங்க வேறொரு லிஸ்ட் எடுத்திட்டு போயிருந்தோம். வேறொரு வெளியாளை வைத்துத்தான் செய்றதுன்னு. அப்ப ஜேசுதாஸ் சொன்னாரு. இல்லையில்ல ஒரு நல்ல ஒரு மியூசிக் டைரக்டரை அறிமுகப்படுத்தறேன் சிறப்பாய் செய்வாருன்னு சொல்லிட்டு எங்களை ஒரு பக்டரிக்கு கூட்டிட்டு நேரா அவர்ர வீட்டுக்கு கூட்டிட்டு போனார். அங்க அவரு ஒர்க் பண்ணிட்டிருந்தாரு. நல்ல உதவியாளரோடு. இவர வைச்சு பண்ணுங்க சிறப்பாக பண்ணிக் கொடுப்பாருன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வைச்சாரு. அப்படித் தான் கியான்வர்மாவை நான் சந்திச்சேன். அவரு அந்த இரவுப் பாடகனுக்கு உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார். அப்போ நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிச்சு. அதுகப்புறம் அந்தப் படத்தை இப்போ பண்ண வேண்டாம். ஏன்னா இப்ப இருக்கிற காலகட்டத்தில ஒரு தயாரிப்பாளராக போராடி படத்தை வெளிக் கொண்டு வாறது முக்கியம். அதனால நாம வந்து ஒரு தயாரிப்பாளராக நடந்துக்குவோம். அப்போ எனது வகுப்புத் தோழர் அரவிந்தரராஜ் வந்து என்னோட உதவியாராக இருந்தாரு. அப்ப நான் சொன்னேன். நீ வந்து இயக்குநராக வேலை பாருன்னு. நான் வந்து ஸ்கிரிப்ட் ரைட்டர். கோ மியூசிக் டைரக்டர் மியூசிக் டைரகடர் புரொடியுசர். இது என்னுடைய இலக்கு. அதனால அந்த படத்தை வந்து புரமோட் பண்ண முழு ஈடுபாடு வேணும். அதனால வந்து இயக்குநராக வந்து என்னால நூறு சதவீதம் கவனம் செலுத்த முடியாது. அதால நீங்க இந்த பிலிம்க்கு டைரக்டர்.

அப்பிடின்னு ஆரம்பிச்சு முதல்ல வந்து ஊமைவிழிகள் திரைப்படத்தை ஆரம்பிச்சோம். அப்போ நான் வந்து கியான்வர்மாவ கூப்பிட்டேன். இந்த மாதிரி தமிழ் இரவுப் பாடகனை ஆரம்பிக்க போறோம். நீங்க வாங்க நீங்க வந்து மியூசிக் பண்ணுங்க என்டு கூப்பிட்டேன். முந்தின படங்கள்ல வேலை பார்த்தப்போ என்னை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கிட்டார்.டியூன்ஸ் எல்லாம் நான் போடறேன். இசையை வந்து நான் அடிப்படையாக கத்துக்கலையே ஒழிய கேள்விஞானத்தை வைச்சு நான் டியூன் போடறேன்றத கூட இருந்து கவனிச்சதால அவரு வந்து என்ன சொன்னாருன்னா நீங்க வந்து இசையமைப்பாளராக செய்யுங்க. நான் உங்க உதவியாளராக பண்ணித்தாறேன்னு. நான் சொன்னேன். எந்த ஒரு துறையையும் வந்து முழுமையாக தெரிஞ்சுக்காம தலையிடக் கூடாது. அதால இசையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு கேள்விஞானம் தான். டியூன் போடறேன் எல்லாமே செய்வேன்.
அதைப் பற்றி அடிப்படை அறிவு எனக்கு கிடையாது. அது இல்லாம எனக்கு வந்து அந்தப் போஸ்ட்ல பண்றதுக்கு விருப்பம் இல்ல. அதால நீங்க இசையமைப்பாளராக வாங்க. நான் வந்து இணை இசை ஆக சேர்ந்துக்குவோம் என்றேன். அப்ப கேட்டாரு தன் நண்பன் மனோஜ்னு இருக்காரு. அவர நான் கூப்பிட்டுக்கலாம என்றாரு. எனக்கு ஒன்றுமில்லை. படத்தில நீங்க மனோஜ் கியான்னு போட்டாலும் சரி கியான்வர்மான்னு போட்டாலும் சரி. நீங்க அவர வந்து கூப்பிடுங்க என்றேன். கூட்டணியாக வந்து ஊமைவிழிகள் படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்தோம். அதுக்கு முன்னாடி நாலைஞ்சு டியூனை ரெடி பண்ணி வைச்சிருந்தோம். அந்த ரெடி பண்ணி வைச்சிருந்த டியூனை போட்டுக் காண்பிச்சேன். அது ரொம்ப நல்லாயிருக்கு. அதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டோம். ப்ரெஷ்ஷா கம்போஸிங்ல உட்கார்ந்து சில பாடல்களை தயார் பண்ணினம். 7 பாடல்கள் பதிவு செய்யப்பட்டிச்சு.




 
 நீங்கள் எடுத்த பிரம்மாண்டமான படங்களிலே, குறிப்பாக ஊமைவிழிகள் போன்ற திரில்லர் போன்ற கதையம்சம் கொண்ட படமாகட்டும் அதற்குப் பின்னர் வந்த படங்களாகட்டும். பாடல்கள் அதிகமாக இருக்கும். அப்படி பாடல்களை அதிகப்படியாக நீங்கள் வைப்பதற்கு என்ன காரணம்?
ரொம்ப எளிமையான காரணம். இந்திய திரைப்படங்களை பொறுத்தவரைக்கும் இசை பாடல்கள் அப்பிடின்னு வர்றது ஒரு திரைப்படத்தினுடைய வெற்றிக்கும் அதனுடைய ஈர்ப்புக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பாடல்கள் வெற்றியடைஞ்சுதுன்னா படத்தினுடைய 50 சதவீத வெற்றி வந்து அங்கே நிச்சயமாகிடும். இதை வந்து நம்ம சிறு வயசில இருந்து சினிமா ரசிகனாக இசை ரசிகனாக அதை விட இன்னும் சொல்லப் போனால் என்னுடைய இசை ரசனையை வளர்த்தது வந்து இலங்கை வானொலி தான். சின்ன வயசில பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற காலங்களில எல்லாம் சென்னை திருச்சி வானொலி தான் கேட்கும்;. நான் பிறந்த ஊர் ஈரோடு சேலம் நடுவே பவானிகுமாரபாளையம். அந்த ஊர்ல திருச்சி வானொலி தான் கேட்கும். அங்க வந்து ஒரு அரைமணி நேரம் தான் அதிகப்படியா திரைப்படப் பாடலகளை ஒலிபரப்புவாங்க. மற்ற நேரங்களில வேற வேற நிகழ்ச்சிகள் இருக்கும். அது அவ்வளவு உற்சாகமாய் இருக்காது.
இலங்கை வானொலி நிலையத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா விடியற் காலையில ஆரம்பிச்சுதுன்னா இரவு படுக்கப் போகும் வரைக்கும் புரோக்ரா ஸ் இருந்திட்டே இருக்கும். சினிமா பாடல்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஊர்ல இருந்த காலகட்டம் முழுக்க எந்த நேரமும் என் பெட்ல வந்து ஒரு டிரான்சிஸ்டர் இருந்திட்டே இருக்கும். காலையில ஆரம்பிச்சேனா இரவு வரைக்கும் பாடல்கள் கேட்டிட்டே இருப்பேன். அந்த இசையை கேட்டுக் கேட்டே வளர்ந்தது தான் அந்த கேள்விஞானம் தான் என்னுடைய இசையறிவு. அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில சர்ச்சுல பாடறதுக்கு ஆட்களை தேடிட்டே இருந்தாங்க. ஒரு நாள் பாக்கியநாதன் என்று, என்னோட குருநாதர் அவரு. என்னை வரவைச்சு கொஞ்சம் பாடிக்காட்டு என்றுவிட்டு சுருதி பிடிக்கிறனா என்று டெஸ்ட் பண்ணினாரு. அந்தப் பாடல்களை கேட்டுக் கேட்டு சுருதி பிடிச்சேன். அப்ப ஓகே உனக்கு பாட வரும்னு சொல்லிட்டு சர்ச்சுல இருக்கிற பாடல்களை பாடுறதுக்கு என்னை தயார் பண்ணினாரு. அந்த பள்ளிக்கூடத்தில சர்ச்சில பாடின அனுபவமும் இலங்கை வானொலியில நான் கேட்ட பாடல்களும் தான் என்னோட இசையறிவு. இந்த ரெண்டும் தான் வளர்த்துவிட்டது. அந்த பேஸிக் தான் நான் படங்களுக்கு பாடல்கள் எழுத காரணம். நான் முழுமையாக புரிஞ்சுகிட்டது என்னன்னா படத்திற்கு பாடல்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றிப் பாடல்கள் இருந்துதன்னா நம்முடைய வெற்றியில் பாதியை அங்கேயே நாம நிர்ணயம் பண்ணிடலாம்.
அப்படிங்கிறதால பாடல்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தேன். அதனால முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததனால நான் வந்து கண்ணதாசனுடைய தீவிர ரசிகன். நான் திரைத்துறையில நுழையிற அந்தக் காலகட்டத்தில அவர் உயிரோடு இல்ல.
அவர் இல்லாத அந்த காலகட்டத்தில ஏன் நாம எழுதக் கூடாது அப்படிங்கிற எண்ணம் வந்தது. அதுக்கு முன்னாடி பெரிசா கவிதை எழுதறதோ வேறு பாடல்கள் எழுதியோ பழக்கம் இல்ல. ஆனா எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. என்னால பாடல்கள் எழுத முடியும்னு. அப்பிடித் தான் எழுத ஆரம்பிச்சேன். கரெக்டா சொல்லனும்னா என்னோட உடன் நின்றவங்க எல்லாரும் ஐயையோ எதுக்கு இந்த வி ப் பரீட்சை? வேண்டாமே யாராவது பாடலாசிரியரைப் போட்டிட்டு கூட இருந்து வேலை வாங்கிக்கலாமே என்டாங்க. அதுக்கு நான் சொன்னேன். என்னால் முடியும்னு ஒரு எண்ணம் வந்து விட்டால் யார் தடுத்தாலும் விட மாட்டேன். இல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா நீங்க என்ன வற்புறுத்தினாலும் செய்ய மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என்னால பாடல்கள் எழுத முடியும்னு நினைக்கிறேன். நான் தான் பாடல்கள் எழுதப் போறேன் அப்பிடின்னு சொல்லிட்டு தான் பாடல்கள் எழுதினேன். எழுதி வெற்றியானதுக்கப்புறம் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அப்பிடின்னா இசையைப் பொறுத்தவரைக்கும் எனது அனுபவம் இசையைப் பொறுத்தவரைக்கும் எனது மதிப்பீடு அந்தப் பாடல்கள் எந்தளவிற்கு சினிமாவில இருக்கனும்கிற எண்ணங்களை வளர்த்து விட்டது இதுக்கு முன்னாடி நம்மட முன்னோர்கள் படங்களில ஏற்படுத்தின மிகப் பெரிய சாதனைகள் தான் நமக்கு உதவியது உதாரணத்துக்கு கண்ணதாசன்.

கேள்வி- ஆமாம். உண்மையிலேயே உங்களுடைய திரைப்படத்திலே இருக்கின்ற பாடல்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையிலே தனித்துவமான ஒரு முத்திரையை கொடுத்திருக்கும்.
குறிப்பாக ஊமைவிழிகள் படத்திலே...


(இடையிலே குறுக்கிட்டு சொல்கின்றார்.)  ஆமாம் நீங்கள் முதலிலேயே கேட்டு நான் சொல்ல மறந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ நான் மனோஜ் கியானை பாம்பேல இருந்து கூப்பிட்டிருந்தேன் இல்லையா அவங்க என்னுடைய இந்த தமிழ் பாணி இசையமைப்பும் அவங்களுடைய வட இந்திய பாணியும் கலந்தவுடனே ஒரு சின்னதொரு வித்தியாசம் இருந்தது. மற்ற படங்கள்ல இருந்து வித்தியாசம் இருந்திச்சு. ஆனா அது மிகப் பெரிய உதவியாக இருந்தது. அந்த மாறுபட்ட இசைக்கும் ஒரு வித்தியாசம் இருந்திச்சு.

நிச்சயமாக. இந்தப் படத்திலே அதாவது முதல் படத்திலே வந்த ஒரு பாடல் காலத்தைக் கடந்தும் குறிப்பாக போராட்டங்களிலே ஓயாது ஒலிக்கின்ற ஒரு பாடல். தோல்வி நிலையென நினைத்தால்... அந்தப் பாடலுக்கு காரணம் ஏதாவது சுவையான செய்தியோ அல்லது சுவாரசியமோ இருக்கின்றதா?


நிச்சயமாக இருக்கு. ரெண்டு விஷயம். ஒண்ணு என்னான்னா நான் என்னோட கல்லூரிப் பருவத்துல படிச்ச அந்த காலகட்டத்துல இலங்கையில ஏற்பட்ட அந்த பிரச்சினைகள் எல்லாம் மிகப் பெரியளவில் என்னை பாதிச்சுது. அது எண்பதுகளினுடைய காலகட்டத்தில மிகப் பெரிய பாதிப்புக்களை எனக்கு ஏற்படுத்திச்சுது. அது உள்ளுக்குள்ளே அந்த உணர்வுகள் துடிச்சிட்டே இருந்திச்சு. அதற்கப்புறம் வந்து திரைத்துறைக்கு வர்றதுக்கு முன்னாடி படங்கள்ளாம் விநியோகப் பிரிவில நுழைஞ்சு ஏகப்பட்ட நட்டம். சொத்துக்களெல்லாம் இழக்கிற அந்த காலகட்டங்கள்ல மிகப் பெரிய போராட்டங்கள். இதனுடைய விளைவுகள் தான் அந்தப் பாடல். அந்த டியூன் போட்ட டைம்ல வந்து முதல் வரி வந்தப்போ அந்த டியூன் அமைச்சப்போ முதல் வரியோட தான் அந்த ரியூன் போட்டேன்.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா அப்பிடிங்கிற அந்த வார்த்தைகளோடு சேர்ந்து தான் டியூனே போட்டேன். அதற்கப்புறம் வரிகள் தான் பின்னாடி எழுதினேன். அந்தப் பாடல் இசையமைக்கப்பட்டபோதும் அந்த வரிகள் எழுதப்பட்ட போதும் என் மனதில முழுக்க இருந்தது என்னோட போராட்டங்களுக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது அந்த இலங்கையில ஏற்பட்ட அந்த நிகழ்வு தான். அது தான் பாடல் பதிவின் போது கியான் வர்மா கிட்ட சொன்னது இப்பவும் பசுமையாக ஞாபகத்திற்கு வருகுது. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது. வார்த்தைகளும் பாடல்களும் இசையமைப்பும் பிற்காலத்தில் படத்துக்கு எப்பிடி இருக்கப் போகுதோ ஆனால் இலங்கையில இருக்கிற எங்கட சகோதர சகோதரிகளுக்கு மிகப் பெரிய உற்சாகமூட்டக் கூடிய பாடலாக காலத்தைக் கடந்தும் நிற்கும் அப்பிடின்னு அன்றைக்கு நான் சொல்லியிருந்தேன்.
அது இன்னைக்கு நீங்க கேள்விகள் கேட்கிறப்போ அப்பிடி நடந்திட்டு இருக்குன்னு சந்தோசப்படறேன்.

கண்டிப்பாக. அண்மையிலே திரைப்பட இயக்குநர்கள் சங்க விழாவிலே இந்தப் பாடலைப் பாடிய பொழுது அதைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மெய்சிலிர்த்தது ஏனென்றால் இன்றைய யுகத்திலே எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் 25 வருடங்களுக்கும் பிறகும் அந்தப் பாடல் ஒரு அரங்கத்திலே அரங்கேறியிருக்கின்ற அந்த நெகிழ்வான அந்த தருணங்கள் நிச்சயமாக உங்களுக்கும் மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் ஒரு கவனத்தை ஈர்த்த ஒரு விடயம்.
அன்றைய காலகட்டத்திலே நீங்கள் ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலம் ஒரு பிரமாண்டத்தை காட்டி தொடர்ச்சியாக உழவன் மகன் செந்தூரப்பூவே என இப்படி பல படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய நாயகர்கள் என்று எடுத்துக் கொண்டால் விஜயகாந்த் மற்றும் அருண்பாண்டியன், ராம்கி ஒரு படத்திலே சத்தியராஜ். இப்படி ஒரு சுற்றுக்குள்ளே இருக்கின்றார்கள். நிச்சயமாக அன்றைய காலகட்டத்திலே உங்களுக்கு முன்ணணி நடிகர்களின் கவனமோ அல்லது அழைப்புக்களோ உங்கள் மீது பட்டிரு க்குக்கும் தானே?


நிச்சயமாக, உங்களுக்கு முதலே நான் சொன்ன மாதிரி ஊமைவிழிகள் படத்தை எடுதப்போ விஜயகாந்த் எவ்வளவோ ஒத்துழைப்பு கொடுத்தாருன்னு சொன்னேன். அன்றைக்கு பரபரப்பான மார்க்கெட்ல இருக்கிற
ஒரு நடிகர் டைரக்டர் சொல்றத அப்பிடியே கேட்டு செய்றது என்டுறது வந்து பெரிய விசயமாக இருந்திச்சுது. அந்த ஒத்துழைப்பு விஜயகாந்த்ட்ட இருந்து மிகப் பெரியளவில கிடைச்சதனால என்னோட சக்சஸ்க்கு அவராயிருந்தாரு. இது நம்பர் ஒன். அடுத்தது வந்து எல்லோருடனும் பணிபுரியக் கூடிய சூழ்நிலை வந்தப்போ கரெக்டா சூழ்நிலைகள் வந்து ஒத்து வரல. உதாரணத்துக்கு சொல்றதுன்னா நம்ம ரஜனிகாந்த் அவர்களோட மூணு சந்திப்பு நடந்திச்சு. மூன்று சந்திப்பிலயும் வந்து மூணு விதமான காரணங்களுக்காகவும் வந்து ஒரு ஒத்துக்க முடியாத சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிச்சு.

முதல் சூழ்நிலை வந்து மன்னன் படப்பிடிப்பு சூழலில, மன்னன் படப்பிடிப்புக்கு முன்னாடியே ஒரு முறை அதிசய்பிறவி சூட்டிங் டைம்ல. சார் நாம இந்தப் படம் பண்ணுவோம்னு சந்திப்பு நடந்திச்சு. சந்திப்பு நடந்தப்போ என்னாச்சுன்னா நான் வந்து படத்தை இயக்க முடியாது. படத்தை தயாரிப்பேன். திரைக்கதை வசனம் இணை திரைப்பாடல்கள். இதுக்கு வேற இயக்குநர் வைச்சிருக்கலாம். பிரதாப் ஐ போடலாம்னு சொன்னேன். பண்ணலாம் என்கிற மாதிரி முடிவெடுத்து அதற்கான எண்ணத்தில இருந்திட்டு இருக்கிறப்போ அப்ப அவரும் வேற படப்பிடிப்பில இருந்திட்டு இருந்தாரு. நானும் மற்ற படங்களின்ர வேலைகளில இருந்தேன். அதுக்கப்புறம் மன்னன் படப்பிடிப்பில சந்திக்கனும்னு செய்தி அனுப்பிச்சாரு. நான் போய் அங்க மீட் பண்ணினேன். சார் பாலசந்தருக்கு ஒரு படம் பண்ணுவோம். நான் நடிக்கறேன். நீங்க டைரக்ட் பண்ணுங்க அவர் புரொடியூஸ் பண்ணுவாரு என்று சொன்னாரு. அப்ப அந்தக் காலகட்டத்தில என்னோட முடிவு என்னவாக இருந்ததுன்னா வெளிப்படங்களை நான் ஒத்துக்கலை. சொந்தப் படங்களை தவிர நான் யாருக்கும் வேலை பார்க்கலை. இத ஒரு பாலிசியாக வெளிப்படங்களை நான் பண்ணலை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் முக்கியமாக நினைக்கிறது என்னன்னா எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதும் படம் எடுக்கிறதும் பொதுவாக யார் எடுத்தாலும் பண்ணக் கூடியது. அதைவிட தயாரிக்கிற பாலசந்தருக்கும் கண்டிப்பா ஒரு லாபம் இருக்கனும். டைரக்ட் பண்ணுற எனக்கும் வந்து ஒரு பெனிஃபிட் இருக்க ணும். அதால எனக்கொரு பெனிஃபிட் எடுத்திட்டு தயாரிப்பாளரான பாலசந்தருக்கும் லாபத்தை கொடுத்திட்டு அது போக வந்து படத்திற்கு நம்ம என்ன செலவழிக்கிறம்னு பார்த்தம்னா பட்ஜட் வந்து சரியாய் வரும்னு தோணலை
.
அதால வந்து என்னோட படத்திற்கு நீங்க கால்ஷீட் கொடுத்தீங்கன்னா என்னுடைய சம்பளமும் எனக்கு தேவையில்லை. முழுக்க முழுக்க படத்தை எப்பிடி பண்ணலாமோ அப்பிடி பண்ணலாம். அந்த மாதிரி காலகட்டம் வரும் போது சொல்லுங்க. அப்ப கால்ஷீட் கொடுக்க முடியும்னு சொனேன். அப்ப லாஜிக்கலா விளக்கிச் சொன்னேன். சரி அப்ப அந்தக் காலகட்டம் வரும் போது நாம சேர்ந்து செய்வம்னு விட்டிட்டோம். அந்த மன்னன் படம் வந்து தொண்ணூறு ஜனவரியில் ரிலீஸ் ஆச்சு. அந்த ஜனவரி கடைசியில மீட் பண்ணுவோம்னு சொன்ன மாதிரி மீட் பண்ணினம். அப்ப சொன்னாரு சார் உங்கட அதிலயே படம் பண்ணுவம் எனக்கு மூணு மாசத்தில படம் முடிக்கனும்னாரு. நான் சொன்னேன். அப்பிடி படம் என்னால பண்ண முடியாது. ஏன் மூணு மாசத்தில உங்களால படம் பண்ணத் தெரியாதா அப்பிடின்னாரு. பண்ணத் தெரியும் பட் பண்ண இஷ்டப்படலை என்றேன். எனக்கு ஆறு மாசம் காலகட்டம் வேணும். அப்பிடின்னா தான் ஒரு சிறப்பாக ஒரு படம் கொடுக்க முடியும். ஏன்னா அப்ப ஒரு பட சூட்டிங் நடந்திட்டு இருந்த காலகட்டம். ராம்கி அருண் பாண்டியன் என்று ரெண்டு நடிகர்களை வைச்சிட்டு பிரமாண்டமாக ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். நம்ம ரெண்டு பேரும் இணையிறதுன்னு சொன்னா எதிர்பார்ப்பு ஜாஸ்தியிருக்கும். அதால அதை ஈடுகட்டக் கூடிய காட்சிகளும் கதையும் இல்லைன்னா பேர் கெட்டுப் போயிடும். அதனால அப்பிடி ஒரு படம் நாம செய்ய வேணாம்.
ஆறுமாத காலம் உங்களால எப்ப தர முடியும்னு நினைக்கிறீங்களோ அப்ப சொல்லுங்க. அப்ப நாம சேர்ந்து பண்ணுவோம். மூணு மாதத்திலே படம் பண்ண விருப்பப்படல. அப்பிடின்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கப்புறம் தான் அண்ணாமலை படத்தை சுரேஷ்கிருஸ்னா டைரக்சன்ல பாலசந்தர் சார் தயாரிக்க நடித்தாரு. அந்த நிகழ்வு அப்பிடி நிகழ்ந்திச்சு. அத மாதிரி மூணு சந்திப்பு நடந்தப்தப்புறமும் மூணு சந்திப்பும் வேற வேற காரணங்களுக்காக நடக்காம போய்ச்சு.
அதைப் போல செந்தூரப் பூவே படமும் சத்தியராஜ்க்கு தான் பரிந்துரை பண்ணினேன். அதை வேற ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறதாக இருந்தது. என்னோட ஒரு நண்பர் டைரக்ட் பண்றாங்கன்னு அவங்க வந்து கேட்டாங்க. இசை செய்து கொடுங்கன்னு கேட்டாங்க. அதில ஒரு இணை இசையமைப்பாளராக தான் அந்தப் படத்தில பங்கெடுத்தேன். அவங்களுக்காக வந்து மியூசிக் பண்ணிக் கொடுத்தன். பாடல்கள் வந்திச்சு. அப்புறம் நடிக்கிறவங்க பிக்ட்ஸ் பண்ணிக் கொடுங்கன்னு கேட்க சத்தியராஜ் கூடப் பேசலாமே என்று நான்தான் அவரிட்ட போய் பேசினேன். அவர் சொன்னாரு இல்லை நீங்க பண்ணுற படம்னா கேளுங்க வந்து நடிக்கறேன். வேற யாரும்னா நான் விருப்பப்படல என்று சொல்லிட்டாரு. என்னடா இவரு இப்பிடி சொல்லிட்டாரு என்றுவிட்டு திரும்ப ராவுத்தரிடம் பேசினேன். நீங்க சார் பேசுங்க நீங்க சொன்னா அவரு பேச்சைத் தட்டமாட்டாரு எண்டாரு. திருப்ப வேற வழியில்லாம விஜயகாந்தோட பேசினேன்.

அப்ப தழுவாத கைகள் படப்பிடிப்பு நடந்திட்டு இருந்திச்சு. ஏவி எம் ஸ்ரூடியோவில. நேரா அங்க போனேன். போய்ட்டு அவர் அந்த ஷூட்டிங் இடைவெளியில் வெளில வந்தவுடன சொன்னேன். நான் இப்ப ஒரு விசயம் கேட்கப் போறேன். நீங்க ஓகே சொல்லாம அடுத்த ஷார்ட்டுக்கு உள்ள போக விட மாட்டேன் என்றேன்.
நண்பரோட படம், அதுக்கு வந்து பாடல்கள் பண்ணிக் கொடுத்திருக்கேன். அந்தப் படத்தை என்னோட நண்பர்கள் பண்றாங்க. அதால நீங்க அதில நடிச்சுக் கொடுக்கனும் என்றேன். சொன்னவுடன உடனடியா அவர் சொன்னது என்னன்னா நான் அந்தப் படத்தில பண்றேன் சார். பட் ஒரு கண்டிஷன். நான் கொடுக்கிற டேட்டுக்கு
எப்பெல்லாம் ஷீட்டிங் போறனோ அப்பல்லாம் நீங்க அங்க இருக்கணும். இது சம்மதமான்னா நான் அந்தப் படத்தில நடிக்கிறேன்னாரு. அதுக்கு நான் ஒத்துகிட்டு ஓகே நான் இருக்கிறேன் நீங்க பண்ணுங்க என்றேன். அப்பிடி அவர சம்மதிக்க வைச்சு நான் பண்ணிக்க நினைச்சேன். அதுக்கப்புறம் அந்த தயாரிப்பாளருக்கோ, அந்த இயக்குநருக்கோ
பிரச்சினை ஏற்பட்டு அந்தப் படம் நின்னு போய்ச்சு. பட் நல்ல பாடல்கள் நின்னு போய்ச்சே என்றுவிட்டு அந்த தயாரிப்பாளர் நல்ல திறமைசாலியாக இருந்ததாரு. அந்தப் படத்தை நீங்க விலை கொடுத்து வாங்கிக்குங்க என்றார்.அந்தப் பாடல்கள் மாத்திரம் எனக்கு தேவை. அந்தப் பாடல்களை வாங்கிக்கிட்டு விஜயகாந்துக்கு இந்த புரெஜெக்டை பண்ணினேன். அப்பிடித் தான் செந்தூரப் பூவே படம் எடுக்கப்பட்டது. அந்த நண்பர்களுக்கு பாடல்கள் பண்ணிக் கொடுத்து அற்புதமான பாடல்கள் வீணாகிடுமே என்று சொல்லிட்டு அந்தப் பாடல்களுக்காக எடுக்கப்பட்டது தான் செந்தூரப்பூவே!

இப்பிடி ஒரு காலகட்டத்திலே நீங்க கேட்டீங்களே வேற வேற நடிகர்களை வைச்சு அப்பப்ப பண்ணலாம்னு நினைச்சு எடுத்த முயற்சிகள் எல்லாம் பல காரணங்களால அப்பிடியே தள்ளித் தள்ளி வேற மாதிரிப் போய்ச்சு. ராம்கியும் அருண் பாண்டியனும் என்னோட திரைப்படக் கல்லூரியில படிச்சவங்க. நான் வந்து இயக்கத்துறையில படிச்சிட்டு இருந்தப்போ அவங்க நடிப்புத்துறையில படிச்சிட்டிருந்தாங்க. அங்க ஏற்பட்ட நட்பு அது. அதே காலகட்டத்தில ரகுவரன், முரளிகுமார்னு சொல்லிட்டு மற்றது 'கங்கா யமுனா சரஸ்வதி' சீரியல்ல பார்த்திருப்பீங்க கதாநாயகனாக நடிச்சாரு. இவங்கள்லாம் ஒரே சமயத்தில படிச்சிட்டு இருந்த காலகட்டம். முதல்ல வந்து ரகுவரன தான் நினைச்சேன் நான். அவரு என்னோட சேர்ந்து பண்றதில ரொம்ப விருப்பமாக இருந்தாரு. அப்ப எங்களுக்குள்ள சில முரண்பட்ட கருத்துக்கள் ஏற்ப்படவே ரகுரவனை விட்டிட்டு ராம்கி, அருண் பாண்டியன் இவங்களை வைச்சு பண்ண ஆரம்பிச்சேன்.
கரெக்டா சொல்லனும்னா ராம்கியைத் தான் முதன் முதலாக தேர்ந்தெடுத்தன். இரவுப் பாடகன் என்று ஒரு படம் சொன்னேனில்லையா அந்தப் படத்திற்காக தேர்ந்தெடுத்தேன். பட் அந்தப் படம் தள்ளிப் போய் ஊமைவிழிகள் ஆரம்பிச்சப்போ அதில அருண் பாண்டியனை பயன்படுத்திக்கிட்டேன். அப்பிடி நாங்க ஒண்னா படிச்சதால ஒண்ணோட ஒண்ணா பண்ணினம். அப்புறம் முரளிகுமாரை டப்பிங் துறையில பயன்படுத்தினேன், அருண் பாண்டியனுக்காக. ஏன்னா அவரு முழுக்க முழுக்க திருநெல்வேலியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அப்பா மில்ட்ரில இருந்தாரு அதால வட இந்தியாவில இருந்ததால அவருக்கு ஹிந்தி தான் வரும். தமிழ் சுத்தமா பேச வராது அவ்வளவு தான். ரொம்ப தடுமாறி பேசிட்டு இருந்த காலகட்டம். அதனால அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கிறதுக்காக முரளிகுமார தயார்பண்ணினம். அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா டப்பிங் துறையில இன்றுவரைக்கும் முன்ணணி டப்பிங் கலைஞராக இருந்திட்டுருக்காரு. அதுக்கப்புறம் அவர படங்களில நடிக்க வைச்சேன். செந்தூரப் பூவேயில ஊமையனாக ஒரு கரெக்டர் பண்ணியிருந்தாரு.



இந்த காலகட்டத்திலே அதாவது தாய்மார்களை குறி வைத்து திரைப்பட விளம்பரம் செய்த காலகட்டத்திலே முற்றுமுழுதாக இளைஞர்களுக்கான என்றொரு பாணியிலே இணைந்த கைகள் திரைப்படத்தை நீங்கள் உருவாக்கியிருந்தீர்கள். அந்தப் படத்தினுடைய வெற்றி எவ்வாறு அமைந்திருந்தது?

இதை வந்து பலமுறை பல பேருக்கு நான் குறிப்பிட்டு இருக்கேன். இணைந்த கைகள் திரைப்படம் அவ்வளவாக சரியா போகலை என்றொரு எண்ணம் பல பேருக்கு இருந்திச்சு. அதற்கு காரணம் என்னான்னா நாம அதை முறையாக வெளிப்படுத்த தவறிட்டோம்னு நினைக்கிறேன். எங்களுடைய வெற்றிப் படங்களில அதுவும் வந்து மிகப் பிரமாண்டமான வெற்றிப் படம் தான். பல சாதனைகளை நிகழ்த்தியது அது.

என்.கே.விஸ்வநாதன் என்னோட நண்பர்.டைரக்டராகவும் கமெராமேனாகவும் வைச்சு அந்தப் படம் பண்ணப்பட்டது. அந்தப் படத்திற்கு எனக்கு வந்து மிகப் பெரிய சோதனை வந்திச்சு. முதல் படங்கள் வெற்றிப் படமாக இருந்திச்சு. ஆனால் இந்தப் படம் வந்து வெற்றி குடுக்க முடியுமா அந்த பீல் இல்லையே! சேம் கரெக்டர் இல்லையே அப்பிடிங்கிறதில வந்து எனக்கு வியாபார ரீதியாக பெரிய தடுமாற்றம் இருந்திச்சு. ஆனால் செந்தூரப்பூவே வெற்றிக்குப் பிறகு அதை வந்து முறியடிக்க முடிஞ்சுது.
ஆனால் அந்த மூணு வெற்றிக்கப்புறம் இவங்கள வைச்சப்புறம் தான் விஜயகாந்த் என்ற மிகப் பெரிய நடிகருக்கு கால்ஷீட் கொடுத்தாங்க. அதால ராம்கி; அருண் பாண்டியனை வைச்சு எப்பிடி வெற்றிப் படம் கொடுக்க முடியும்னு சொல்லி திரும்பவும் எனக்கு அது ஒரு சோதனைக் கட்டமாய் வந்திச்சு. எனவே மீண்டும் எங்களை நிரூபிச்சாகனும் என்ற காலகட்டம் வந்தது. அதுக்கப்புறம் மிகப் பெரிய வெற்றிப் படமாக கொடுத்தாகனும் என்ற கட்டாயம் ஏற்பட்டு அந்த திரைப்படத்தை தயாரிச்சோம். அது என்ன எதிர்பார்ப்போட செய்யப்பட்டதோ அந்த எதிர்பார்ப்பை முழுமையாக அந்த படம் ஈடுகட்டிச்சு. அது மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப் படங்கிறதில சந்தேகம் இல்ல. அது பல சாதனைகளை ஏற்படுத்திச்சு.

அதாவது சாதனைகள் என்று சொல்லும் போது அவற்றையும் சொன்னால் இந்த வேளையிலே சிறப்பாக இருக்கும்.
சாதனைகள். உதாரணத்துக்கு சொல்லனும்னா கோயம்புத்தூருக்கு பக்கத்தில மேட்டுப்பாளையம் என்ற ஒரு ஊரு இருக்கு. அந்த ஊர்ல அதற்கு முந்திய அதிகபட்ச ஹவுஸ்புல் காட்சிகள் ஓடுனது வந்து நம்ம ரஜனி நடிச்ச ராஜாதிராஜா. ஆர் சுந்தரராஜன் இயக்கியிருந்தாரு. நம்ம இளையராஜா தயாரிப்பாளராக பண்ணின படம் அது. அது தான் அதுக்கு முன்னாடி அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடின படம் என்ட சாதனையை பெற்றிருந்தது. அந்த சாதனைகளை முறியடிச்ச படம் இந்த இணைந்த கைகள் படம். மேட்டுப்பாளையம் சிவரஞ்சினி தியேட்டர்ல இந்த ரெக்கார்ட பெற்றிச்சு. அதே மாதிரி நம்ம பழனி முருகன் இருக்கிற அந்த ஊர்ல. இதற்கு முன் கரகாட்டக்காரன் மிகப் பெரிய வசூல் சாதனை ஏற்படுத்திச்சு. அந்த சாதனையையும் அந்த இணைந்த கைகள் படம் முறியடிச்சுது. அதைத் தவிர இணைந்த கைகள் திரைப்படம் தான் உலக மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த முதல் தமிழ் படம். நிறைய பேருக்கு அந்த செய்தி தெரியாது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஜங்கரன் இன்டர்நேசனல் நம்ம லண்டனில இருக்கிற கருணாமூர்த்தி அவர் தான் அதனுடைய நிறுவுனர். அவரு நம்மட செந்தூரப்பூவே பிலிம வந்து ஒரேயொரு பிரிண்ட் மாத்திரம் லண்டனுக்கு போட்டார். ஒரேயொரு பிரிண்ட் கிடைக்குமா ஒரு சோ ஆரம்பிக்கப் போறேன்னார். அதுக்கப்புறம் ஒருமுறை பேசிக்கிட்டு இருந்தப்போ கேட்டாரு ஆதி காலத்தில நம்ம எம்ஜிஆர் திரைப்படங்கள் சிவாஜி திரைப்படங்கள் நிறைய இலங்கையிலும் மலேசியா சிங்கப்பூர்ல வந்து நேரடியாக திரையரங்குகளில வெளியிடப்பட்டது. அதொரு காலகட்டம். அதுக்கப்புறம் என்னாச்சுன்னா திரையரங்குகளில வெளியிடுறது எல்லாம் போய், வெறும் வீடியோ ரிலீஸ் மாத்திரம் தான்.
உலகம் முழுவதும் வெறும் வீடியோவுல தான் நடந்திட்டு இருந்திச்சுது. அந்தக் காலகட்டத்தில தான் நாங்க ஊமைவிழிகள் உழவன் மகன் மற்றும் செந்தூரப்பூவே அந்த காலகட்டம் எல்லாமே வீடியோவுல தான் ரிலீஸ் ஆய்ச்சு.
அப்பத் தான் நம்ம கருணாமூர்த்தி சொன்னாரு ஏன் நாங்க தியேட்டர்ல போய் ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு. உலகம் முழுவதும் திரையரந்குகளில வெளியிடலாம்னு நினைக்கறோம் நீங்க என்ன நினைக்கிறீங்க என்டாரு. சொல்லுங்க சார் நாம பிளான் பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கப்புறம் வந்து அந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடனும் என்ட முடிவோட எடுக்கப்பட்டது. வெளியிடப்பட்டது. வெளியிடுற அன்னைக்கு முழு பக்க விளம்பரத்தில இன்று முதல் உலகம் முழுவதும் வெளியிடும் என்டு சொல்லிட்டு உலகம் பூரா இருக்கிற தியேட்டர்ல ரிலீஸ். மலேசியாவில கோலாலம்பூர் என்ற தியேட்டர். சிங்கப்பூர்ல லண்டன்ல கனடாவுல என்னென்ன தியேட்டர்னு வெளிவர்ற தியேட்டர்ன்ட பெயர் எல்லாத்தையும் போட்டு விளம்பரம் பண்ணியிருந்தம். திரும்பவும் வந்து திரையரங்குகளில வெளியிடுறது என்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இணைந்த கைகள் திரைப்படம் தான். அது ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடாந்து இன்னைக்கு வரைக்கும் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வந்து திரையரங்குகளிலே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு சாதனைன்னு சொல்லாம்.
அதைத் தொடர்ந்து பார்த்தீங்கன்னா மும்பையில தமிழ் படங்களைப் பொறுத்தவரைக்கும் காலம் போக ஒரு வாரம் ரெண்டு மூணு நாலு வாரம் போக ஒரு காட்சிகள் தான் போடுவாங்க. அப்பிடி இருந்த காலகட்டத்தில 84 நாட்கள் அந்தப் படம் போய்ச்சு. எனவே அது மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்திச்சு. வசூல் சாதனையை குறிப்பிடும் போது அதனுடைய வெளியீட்டைப் பற்றியும் குறிப்பிடனும். அது எந்தளவிற்கு எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருந்திச்சு என்றது தெரியும்னு நினைக்கிறேன்.
பம்பாய்ல வந்து ட்ரைவ் இன் தியேட்டர் ஒண்ணு இருந்திச்சு, இப்ப அது இல்ல. அந்த ட்ரைவ் இன் தியேட்டர்ல ஹிந்திப் படங்கள் தான் ரிலீஸ் ஆகும். அல்லது ஆங்கிலப் படங்கள். அதில வந்து பம்பாயை சேர்ந்த நம்பி என்பவரு படங்கள் வெளியிடுபவர். அவர் சொன்னாரு, நம்ம இணைந்த கைகள் திரைப்படத்தை ட்ரைவ் இன் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றார். நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னாரு. இந்த டிரைவின் தியேட்டர்ல ரெண்டு காட்சிகள். மாலைக்காட்சி. இரவுக்காட்சி. பகல் காட்சி 60 ரூபா திரையரங்கில அப்படின்னு முடிவு பண்ணி விளம்பரம் பண்ணியிருந்தாரு. காலைக்காட்சி போனவுடனே வந்து மிகப் ஷெபரிய வரவேற்பாயிடுச்சு. அன்று மாலைக்காட்சி டிரைவினுக்கு வந்து எக்கச்சக்கமான கூட்டம். கிட்டத்தட்ட நாலாயிரம் பேருக்கு மேல திரண்டு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு அந்த டிரைவின் தியேட்டரையே அடித்து நொறுக்கிட்டாங்க. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் அந்த தியேட்டர் ஓப்பனாகலை. அந்த டிரைவின் தியேட்டர்ல முதன் முதலில வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இந்த இணைந்த கைகள். வெளியிட்ட அன்றே அதை மூடுற மாதிரி சூழ்நிலை ஏற்பட்டிச்சு. அவ்ளோ பெரிய வரவேற்போட அந்தப் படம் பம்பாய்ல வெளிவந்திச்சுது. இது வந்து ரிலீஸ் நேரம் ஏற்ப்பட்ட நிகழ்வு. அதே சமயம் வசூலிலயும் சாதனை பண்ணிச்சுது. அந்தப் படத்தினுடைய வெற்றி மிகப் பெரிய வெற்றியாக இருந்திச்சு.அந்த ரிசல்ட் பல வகையில எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுது ஆனா அதை நான் பயன்படுத்திக்கலைல. உதாரணத்திற்கு சொல்லனும்னா கிட்டத்தட்ட வந்து 44 படங்கள் ஒரு வருட காலகட்டத்தில வெறும் இசையமைப்பாளராக என்னை நெருங்கினாங்க. சொல்லப் போனால் எல்லா நடிகரோட படங்களும். ஒரு சிலரைத் தவிர.
ரெண்டு படங்கள் தான் வெளிப்படங்களுக்கு இணை இசையமைப்பாராக பணி புரிந்தேன். ஒண்ணு "தாய்நாடு" மற்றது "அண்ணன் என்னடா தம்பி என்னடா" இந்த ரெண்டு படங்கள் தான். அது நட்புக்காக பண்ணினது ரெண்டுமே. அதால வெளியில ஒரு கமர்ஷியல் ரீதியாக எதுவும் கமிட் பண்ணிக்கவில்லை. அதை ஏற்படுத்திக் கொடுத்தது இணைந்த கைகள் திரைப்படம் தான்.
அதே போல இணைந்த கைகள் படத்தோட வெற்றி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுன்னா நம்ம விஜயகாந்தும் ராவுத்தரும் எனக்கு சொல்லிட்டாங்க. சார் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதால உங்களை கதாநாயகனாக போட்டம்னா ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொல்லி பெரிய இக்கட்டை ஏற்படுத்திட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நான் அப்செட்டான மாதிரி சுற்ற்றிக்கொண்டிருந்தேன்.
ராவுத்தர் என்ன சொல்லிட்டாருன்னா சார் கோட்டு போட்டுக்கிறீங்க, கையில நாயை பிடிச்சிட்டு நடக்கிற மாதிரி முழுப்பக்க விளம்பரம் சார், படத்தோட டைட்டில் சொல்லிட்டிருந்தாங்க "ஹானஸ்ட் ராஜ்" இது தான் படத்தோட டைட்டில். நீங்க தான் ஹீரோ ராவுத்தர் பிலிம்ல ஒரு அறிவிப்பு ஒண்ணு கொடுக்கிறோம்ன்னாரு. இன்னொரு முறை இதை பற்றி பேசுறதன்னா இந்த ஆபிசுக்கே நுழைய மாட்டேன்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே போகலைன்னு வைங்களேன். அப்பிடி ஒரு மிகப் பெரிய இமேஜ்ஜைக் கொடுத்தது. இந்த இணைந்த கைகள் திரைப்படம் தான். அவ்வளவு தூரம் பாதிச்சது.


ஊமை விழிகள் படத்திலே மூங்கில் கோட்டைன்னு ஒரு படம் உருவாகுவதாக சொன்னீர்கள் அதைப் பற்றி பின்னர் வராமலேயே போய் விட்டது. அதைப் பற்றி எதுவும் குறிப்பிடலாமா?
அதுக்கு குறிப்பிட்ட காரணங்கள் பல காரணங்கள். அதுல ஒண்ணை உங்களோட பகிர்ந்துக்கிறதில தப்பில்ல என்று நினைக்கிறேன். படங்களை வந்து நீங்க வெற்றிப் படங்களாக கொடுத்திட்டு இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எல்லாமே சுமுகமாகவும் வெற்றியாகவும் நடந்திட்டு இருக்கும். என்றைக்கு நீங்க வந்து தோல்விப் படங்கள் கொடுக்க ஆரம்பிக்கிறீங்களோ உங்களுக்கு எதிராக இருக்கிற எல்லா விசயங்களும் மொத்தமாக கிளம்பி வந்திடும் என்பது மாதிரி முதல் தோல்விப்படம் காவியத்தலைவன் கொடுத்ததில இருந்து பிரச்சினைகள் ஆரம்பமாச்சு. அது ஆரம்பமாச்சுதுன்னா எனக்கும் விஜயகாந்த்க்கும் இருந்த புரிதல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சொல்லப் போனால் அதற்கப்புறம் கொஞசம் விலகியே இருந்தேன்னு வைங்களேன். அப்ப அந்த மூங்கில் கோட்டை சம்பந்தமாக பேசறதுக்கு எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கலை. நான் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கேல்லை. ஒரு பக்கம் வணிக ரீதியான பிரச்சனைகள். இன்னொன்னு இந்த மாதிரியான ஒத்துழைப்பெல்லாம் கிடைக்காமல் இருந்திச்சு.

ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி இப்ப உங்க மூலமாக தான் அறிவிப்பு பண்றேன். சில விஷயங்களை நாங்களே பார்க்க முடியாத விசயங்களை நீங்கள் இங்க ஆஸ்திரேலியாவில இருந்திட்டு எந்தவளவுக்கு மிக நுணுக்கமாக கவனிச்சிருக்கீங்கன்னா ரொம்ப சந்தோசமாயும் இருக்கு. நான் திரைத்துறையில நுழைஞ்சு 25 வருசம் ஆச்சு. இந்த 25வது வெள்ளிவிழாவில அந்த மூங்கில் கோட்டை நூறு சதவீதம் வெளிவரும்.

ஓ. மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலமாக உங்களுடைய ரசிகனாக இருந்து பார்க்கின்ற அளவிலே எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தினுடைய நடிகர்க்ள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் குறித்து நீங்கள் முடிவெடுத்து விட்டீர்களா? இல்லை இன்னும் அது முற்தயாரிப்பில் தான் இருக்கிறதா?


அந்தப் படத்தை நான் தான் இயக்கப் போகின்றேன். ஒரு இயக்குநராக அந்தப் படத்தில வெளிவரப்போறேன். அந்தப் படத்தினுடைய மற்ற விடயங்களை நான் உங்களுக்கு அடுத்து நான் தெரியப்படுத்தறேன். அதாவது 25 வருடங்களுக்கு முன்னால் ஊமைவிழிகள் திரைப்படம் முதன் முதல் எடுக்கப்பட்ட பொழுது என்ன ஒரு வேகத்துடன் ஒரு உத்வேகத்துடன் ஒரு பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தனும்னா ஒரு சின்னதொரு புள்ளியை ஏற்படுத்தனும் அது ஓரளவிற்கு ஆரம்பிக்க முடிஞ்சதுன்னு நான் நினைக்கிறேன். அடுத்த கட்டத்திற்கான ஒரு பயணமாக இந்த மூங்கில் கோட்டை திரைப்படத்தின் மூலமாக நிச்சயமாக ஏற்படுத்த முடியும்னு நம்பறேன்.


உண்மையிலேயே இந்த 25 வருட காலத்திலே ஆபாவாணன் என்ற கலைஞர் தன்னுடைய வெளிப்பாடுகளை தான் சொல்ல வருகின்ற செய்திகளை தன்னுடைய திரைப்படத்தின் மூலமாக தான் காட்டி வந்தார். பரபரப்பான பேட்டிகளோ அல்லது ஊடகம் மூலமான அறிக்கைகளோ இதுவரை நீங்கள் வெளிக்காட்டவில்லை. உங்களுடைய படங்கள் தான் நீங்கள் யார் என்பதை காட்டி வந்தன. ஆனால் இத்தனை மணி நேரமும் ஒரு மணி நேரமாக உங்களுடைய மனதிலே இருந்ததை காட்டியது. எத்தனையோ விடயங்களை பல தெரியாத விடயங்களை எமது ஆஸ்திரேலிய நேயர்களுக்கும் அதைப் போன்று உலகெங்கும் வாழ்கின்ற நேயர்களுக்கும் இணையத்தள நேயர்களுக்கும் கூட இந்த வேளையிலே சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே இந்த சந்திப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். 

 ரொம்ப சந்தோசம். ரொம்ப சந்தோசம். அதாவது நாம பேசிய விசயங்களில குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா அதற்கப்புறம் பலமுறை சத்தியராஜ் சொல்லுவாரு .நான் செந்தூரப்பூவே படம் ரெடியானப்போ போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்திட்டே வந்து கையைப் பிடிச்சிட்டு ரொம்ப நேரமாக மூஞ்சையை பார்த்திட்டு இருந்தாரு. எவ்ளோ பெரிய தப்பைப் பண்ணிட்டேன் சார். வந்து முதன் முதலாக எங்கிட்ட தான் கேட்டிங்க பண்ணுங்கன்னு சொல்லி. நான் அன்னைக்கு ஒரு வேகத்தில வந்து நீங்க தயாரிக்கிறீங்களா நீங்க பண்றீங்களா என்று கொஞ்சம் அலட்சியமாக பேசி அனுப்பிட்டேன். இன்னைக்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன். ஏன்னா அதில தான் விஜயகாந்த்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. தமிழக அரசினுடைய சிறந்த விருது வாங்கின படம். சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். சிறந்த ஒலிப்பதிவாளர் என்று நான்கு விருதுகளை வாங்கிய படம் அது.
அது தயாரிக்கிறப்போ யாருமே விஜயகாந்த்ல இருந்து யாருமே சீரியசா எடுத்துக்கலை. பட் அது மிகப் பெரிய வெற்றியாகவும் திருப்புமுனையாகவும் இருக்கும்னு நான் நம்பினேன். அந்த மாதிரி ஏற்படுத்திக் கொடுத்திச்சு. அதற்கப்புறம் நீங்க கேட்டிங்கள்லையா நடிகர்கள் ஏன் பண்ணல என்று? சில விசயங்கள் வந்து தமிழில என்ன ஏற்படுதுன்னு சொன்னன். செந்தூரப்பூவே படம் வந்து ஹிந்திக்கு போறதா இருந்திச்சு. நான் சிகப்பு மனிதன் பண்ணின பூர்ணச்சந்திரா அதை டைரக்ட் பண்றதா இருந்தாரு. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம் அதான். இந்த காம்பினேசன்ல எடுக்கிறதா வேலைகள் நடந்தது. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம். ஆனால் அது எடுக்க முடியாம தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில அப்படியே நின்னு போய்ச்சு. இல்லைன்னா அது வேற மாதிரி பயணப்பட்டிருக்கும்.

இவ்வளவு நேரமாக ஆஸ்திரேலிய நேயர்களுக்கு ஆபாவானன் அவர்களே உங்கள் மன வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு எமது நேயர்கள் சார்பிலும் எங்களுடைய சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி நன்றி.  ஒரேயொரு விசயம் மாத்திரம் கடைசியாக வந்து சொல்லிக்க விரும்புறேன். நமது உலகத் தமிழர்களை பொறுத்தவரைக்கும் என்னன்னா நாம இன்னைக்கு மிகப் பெரிய சோதனைகளை சந்திச்சிட்டிருக்கோம்.தங்கம் கூழாங்கல் ரெண்டையும் எடுத்தீங்கன்னா தங்கம் வந்து அடிக்க அடிக்க பக்குவப்படும். பல உருவங்களை எடுக்கும். பல சிற்பங்களை செய்ய முடியும். கட்டித் தங்கம் வெட்டி எடுத்து ... பாடல் வரிகள் கேட்டிருப்பீங்க. தட்டித் தட்டி சிற்பம் செய்வோமடா.. ஒரு மனிதன் தங்கமாகவும் இருக்கலாம். கூழாங்கல்லாகவும் இருக்கலாம். So, தங்கம் எப்பிடி மேன்மையுறுதோ அந்த மாதிரி ஏற்பட்ட சோதனைகள் அத்தனையும் நமக்கு ஏற்ப்பட்ட பலமாக எடுத்துக்கிட்டு நாம பல மடங்கு வேகத்தோட வெளிப்படணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். கூழாங்கல்லை பார்த்தீங்கன்னா ரெண்டு முறை தட்டிங்கன்னா இல்ல நாலு முறை தட்டிங்கன்னா நொறுங்கிடும். அதனால எந்த ஒரு மனிதனும் கூழாங்கல்லாக இல்லாம தங்கம் போல தட்டத் தட்ட தட்ட பக்குவப்படணும் மேலும் மேலும் வலுப்படணும். நமது வாழ்க்கையை பலப்படுத்திக்கணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். மிகப் பெரிய சாதனைகளை சந்திக்கணும். வேதனைகள் மறக்கப்பட வேண்டும். தங்கமாய் வாழ்வோம் அப்பிடின்னு எல்லோரையும் வேண்டிக் கேட்டுக்கிறேன்.

மிகுந்த நன்றி. ஆபாவாணன் அவர்களே.
எல்லாருக்கும் நன்றிகள்.

Thanks: Radiopathy


 
 
 
 
 


Thursday, February 21, 2013

விஸ்வரூபம் - விமர்சனம்





ர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் பல கடந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களை சுமந்து இலங்கையிலும் வெளிவந்திருக்கிறது உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்.


இந்திய உளவுத்துறை ரோ அமைப்பின் அதிகாரியினால் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் ஆப்கான் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை தடுப்பதுவே விஸ்வரூபம் படத்தின் கதை.


இதற்காக இஸ்லாம், கடவுள், அல்கொய்தா, கலை, மொழி மற்றும் விஞ்ஞானம் என ஏராளமான விடயங்களை புகுத்தி சாமானிய ரசிகர்களின் தலைகளை சுற்றவிட்டிருக்கிறார் இயக்குனர் கமல் ஹாசன்.


"மணவாட்டியே மணாளனின் பாக்கியம்"  என ஒரு வகை நளினத்துடன் வாழ்கிறார் கதக் நடன ஆசிரியர் விஸ் எனும் விஸ்வநாத் (கமல்). இவரின் மனைவியாக வயதில் குறைந்த நிருபமா (பூஜா குமார்). நிருபமா தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியுடன் காதல் வயப்படுகிறார்.


இதனால் தன்மீது களங்கம் உள்ளது போல விஸ் மீதும் ஏதாவது குறை இருந்தால் கழற்றிவிட இலகுவாக இருக்கும் என தீர்மானிக்கிறார். இதற்காக தனியார் துப்பறியும் நிபுணரின் உதவியை நாடுகிறார். இதன்போது விஸ்வநாத் ஒரு முஸ்லிம் எனத் தெரியவருகிறது.




இந்நிலையில் துப்பறியும் நிபுணர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணருடன் சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கும் போது நிருபமாவின் முதலாளி கொலையுடன் ஆரம்பமாகிறது படத்தின் கதை. தொடர்ந்து நிசாம் அஹ்மத் கஷ்மீரியாக விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் துவசம் செய்து மனைவியையும் காப்பாற்றி நிருபமாவுடன் சேர்த்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்துகிறார் கமல்.


அதுவரையில் அமெரிக்காவில் அசுர வேகமெடுத்த கதைக்களம் பின்னர் ஆப்கானிஸ்தானில் நகர ஆரம்பிக்கிறது. ஏன்? எதற்காக? எப்படி? யார் என்ற கேள்விகளுக்கான விடைகளை மீதிக் கதையில் சுட்டுக்காட்டுகிறார் 'ரோ' அதிகாரியான நிசாம் அஹ்மத் கஷ்மீரி.


படம் முழுக்க நடிகர் மற்றும் இயக்குனராக கமலின் உழைப்பு தெரிகிறது கூடவே கமலிஸமும். தான் உலக நாயகன் என்பதனையும் தமிழ் சினிமா தனக்கு பல வருடங்கள் பின்நிற்பதையும் பறைசாற்றி நாயகனாகவும் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.


ஆனால் வழக்கம்போல கமல் படம் என்றால் தெளியாத குட்டையாக இருக்கும் என்ற மாயை இந்தப் படத்தில் அங்காங்கே தெளியவிட்டு சாதாரண ரசிகர்களையும் கவர முயற்சித்திருக்கிறார். ஆனாலும் பல மொழி, திரைக்கதை, வசனம் மற்றும் தன் கருத்துக்கள் போன்றவற்றில தனது முந்தைய படங்களான ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களை ஞாபகமூட்டுகிறது.




இயல்பான வசனங்கள் மூலம் சில இடங்களில் யோசிக்கவும் செய்திருக்கிறார். கடவுள் காப்பாற்றுவார் என்றதும் எந்த கடவுள்? என்பதாகட்டும், 4 கைகள் கொண்ட கடவுள் என நிருபமா திணறும் காட்சியாகட்டும் வசனகர்த்தா தானே என்பதை உறுதிப்படுத்துகிறார் கமல்.





இங்கிலாந்துக்கு எதிரான மருதநாயகம் கதையை இங்கிலாந்துகாரர்களை கொண்டே படமாக எடுக்கத் துணிந்த கமலா இப்படி ஒஸ்காருக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை.


கமல் தவிர படத்தில் வில்லானாக வரும் ராகுல் போஸ் சத்தமில்லாமல் மிரட்டுகிறார். ஏனையவர்களில் நாசர், சலீமாக வரும் ஜெய்டீப் என ஒரு சிலரே பாத்திரத்தில் நிலைத்து நிற்கிறார்கள். மீதிப்பேர் கதைக்கு தேவையாக இருந்தாலும் சொல்வதற்கில்லை.


நாயகிகளாக வரும் பூஜா குமார் இள வயது என்கிறார்கள். கமலிற்கு முன் வயதானவராகவே தெரிகிறார். அன்ரியா ஞாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு படத்தில் தலைகாட்டவில்லை. காட்சிகள் சில தொக்கி நிற்பதைப் போலவே அன்ரியாவும். பாகம் 2 இன் தேவைகளா இருக்கலாம்.


தொழில்நுட்பத்தில் இன்னுமொரு பரிணாமத்தினை அடைந்திருக்கிறது இப்படம். ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் நியூயோர்க் நகரின் அழகையும் ஆப்கானிஸ்தானின் அழுக்கையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.


எடிட்டிங்கில் மஹேஸ் சில இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். முதல் பாதியிலிருந்த வேகமும் இரண்டாம் பாகத்தில் சற்றே குறைந்துவிடுகிறது. ஷங்கர் எசான் லோயின் இசையமைப்பில் படத்திற்கு தேவையான பாடல்கள். அனேகமாக பின்னணியிலேயே வருகிறது. பின்னணி இசையில் பல இடங்களில் மௌனமாகி அசத்துகிறது. குறிப்பாக முதல் சண்டைக் காட்சியில் அசத்தல் ரகம்.


சண்டைக் காட்சிகள் அத்தனையும் ஹொலிவூட் ரகம். சண்டைக் காட்சிகளில் கமலின் விஸ்வரூபம் 50 வயதைத் தாண்டிவிட்டார் என்பதனை நம்பமறுக்கச் செய்கிது. கிரபிக்ஸ் காட்சிகள், ஆப்கானிஸ்தானுக்காக போடப்பட்ட செட் (கலை) எல்லாம் அசலையும் நகலையும் பிரித்தறிய முடியாதுள்ளது.


இவ்வாறெல்லாம் தொழில்நுட்பத்தில் பிரமாதப்படுத்தியிருந்தாலும் பாகம் 2 எடுக்கும் எண்ணத்தினாலோ என்னவோ கதை ஆங்காங்கே தொக்கி நிற்கிறது. இதுதான் நடந்தது என வரும் காட்சிகளையும் சேர்த்து.


மொத்தத்தில் ஒஸ்காருக்காக ஹொலிவூட் தரத்தில் கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்.


- அமானுல்லா எம். றிஷாத்
 
Thanks: Virakesari.com

Monday, February 18, 2013

100 கோடியில் ஒரு பாடம்







கொழும்பில் கொத்து ரொட்டி போட்டுக் கொண்டிருந்த ஒருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதீத சத்தத்தினை உருவாக்கி சூழலை மாசுபடுத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
தொலைக்காட்சி பார்க்கும் போது, அதிகமாக சத்தம் வைத்துப் பார்ப்பதில் எனக்குப் பெரு விருப்பம். ஆனால், நமது தொலைக்காட்சியின் சத்தம் பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவை ஏற்படுத்துவதாக பொலிஸில் முறைப்பாடு செய்தால் – அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.

அமெரிக்காவில் ஒரு பெண்மணி விவாகரத்துக் கோரி நீதிமன்றம் வந்தார். விவாகரத்துக்கு வலுவான காரணம் வேண்டும். அந்தப் பெண் கூறிய காரணம் என்ன தெரியுமா? எனது கணவரின் குறட்டைச் சத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. நான் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் ஆகி விட்டன. இந்த மனிதரிடமிருந்து எனக்கு விடுதலை பெற்றுத்தாருங்கள் என்றார். நீதிமன்றமும் விவாகரத்து வழங்கி விட்டது.
இதிலுள்ள நீதி என்ன என்று புரிகிறதா?

நாம் மேற்கொள்ளும் எந்தவொரு விடயமும் அடுத்த மனிதருக்கு தொந்தரவினையோ, பாதிப்பினையோ ஏற்படுத்தி விடக்கூடாது. அப்படியான விடயங்கள் அனைத்தும் குற்றமாகவே கருதப்படும்.
என்னுடைய வீட்டுக்குள் என்னுடைய தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக் கேட்கிறேன். மை கார் – மை பெற்றோல். அது என்னுடைய சுதந்திரம். யாருக்கென்ன வந்தது? என்று நாம் சட்டம் பேச முடியாது. சக மனிதனை பாதிக்காத வரைதான் அது நமக்கான சுதந்திரமாகும்!
விஸ்வரூபம் என்கிற திரைப்படம் குறித்து – மேற்சொன்ன புள்ளியில் இருந்து நான் பேச விரும்புகின்றேன். திரைப்படமொன்றை உருவாக்குவதற்கும், அதில் தனது கருத்துக்களைச் சொல்வதற்கும் இயக்குநர் ஒருவருக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அந்தச் சுதந்திரம் அடுத்தவரைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர். ஆனால், விஸ்வரூபம் ஒரு மோசமான திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் இஸ்லாமிய மார்க்கம் பிழையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது, முஸ்லிம்கள் பற்றி தவறான கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் – ஏராளமான இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டாகும்.
ஆனால், விஸ்வரூபம் திரைப்படத்திலுள்ள இஸ்லாமிய விரோதப் போக்கினை விடவும், அதிலுள்ள முஸ்லிம் விரோத அரசியல்தான் விமர்சனத்துக்குரியது. வெறுப்பேற்றும் வகையிலானது.
தலிபான் போராளிகளுக்கும் – அமெரிக்க ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் போர்க் களம்தான் படத்தின் அதிகமான பகுதியாகும். தலிபான்களை பிற்போக்குவாதிகளாகவும், யுத்த வெறி பிடித்தவர்களாகவும் கமல் – பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளார்.
கமல் சொல்வதில் ஏதோவொரு வீதம் உண்மை இல்லாமலுமில்லை. தலிபான்கள் ஒன்றும் புனிதர்கள் அல்லர். அவர்களின் அறியாமையினையும், வன்முறைகளையும் மதத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது விமர்சனங்களுக்கு உரியதே!
ஆனால், அதே கதைக்களத்தில் நரபலி எடுத்துக் கொண்டு திரியும் போர் வெறி பிடித்த அமெரிக்கர்களை மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த குறியீடாக கமல் சித்தரித்திருப்பது – மிகக் கேவலமான முயற்சியாகும்.
இவை தவிரவும் விஸ்வரூபத்திலுள்ள பல காட்சிகள் முஸ்லிம்களை இழிவு படுத்துவற்கென்றே வலிந்து உருவாக்கப்பட்டவையாகும். படத்தின் கதையில் வரும் கமல்ஹாசனுக்கு அரேபிய ஆடையில் வருகின்ற முஸ்லிம் ஒருவர் ‘ஓப்பியம்’ என்கிற போதைப் பொருளை அன்பளிக்கும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மிகச் சாதாரண பார்வையாளன் கூட, இது திணிக்கப்பட்ட காட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சரி, இது என்ன கமல்ஹாசன் புதிதாகச் சொல்லும் கதையா? இதைப்போல, ஆயிரத்தெட்டு அமெரிக்கத் திரைப்படங்கள் வந்துள்ளதல்லவா? அவற்றுக்கெல்லாம் எழாத எதிர்க்குரல் விஸ்வரூபத்துக்கு எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? என்பது ஒருசாராரின் கேள்வியாகும்.
இந்தக் கேள்விக்கான பதில் மிக எளிமையானது. நமது எதிராளி நம்மைப் பற்றிப் பேசும் விடயங்கள் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நம்மை மோசமாகவும், தன்னைப் புனிதனாகவும் சித்தரிப்பதுதான் எதிராளியின் பிரதான செயற்பாடாக இருக்கும். உண்மையில், விஸ்வரூபம் என்கிற படத்தை ஓர் அமெரிக்க இயக்குநர் ஆங்கிலத்தில் உருவாக்கியிருந்தால் அதுபற்றி தமிழ்பேசும் முஸ்லிம்கள் எவரும் இந்தளவுக்கு அலட்டியிருக்க மாட்டார்கள்.
ஆனால், தென்னிந்தியாவில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற பிரபல்யமான நடிகர் ஒருவர், அதுவும் தன்னை முஸ்லிம்களின் நண்பன் எனக் கூறிக் கொண்டு, இவ்வாறானதொரு திரைப்படத்தினை உருவாக்கியமைதான் இத்தனை சர்ச்சைகளுக்கும் மூல காரணமாகும்.
திரைப்படம் என்பது ஒரு காலத்தில் பொழுது போக்குச் சாதனம் என்கிற


 Vishvaroopam - 03


தனித்த அடையாளத்துடன் இருந்தது. ஆனால், இப்போது அதற்கான பெறுமானம் அடர்த்தியாகி விட்டது. மாபெரும் ஊடகமாகவும் திரைப்படத்துறை தொழிற்படுகின்றது. எனவே, ஒரு திரைப்படம்தானே, விட்டு விட்டு வேறு அலுவல்களைப் பார்ப்போம் என்று இருந்து விட முடியாது. பின்னொரு காலத்தில் அந்தத் திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணமாகவும் மாறிவிடக்கூடும்.
விஸ்வரூபம் என்கிற திரைப்படம் இஸ்லாமியர்களையும், அவர்களின் மார்க்கத்தையும் இழிவுபடுத்துவதாகக் கூறி, முதலில் தென்னிந்திய இஸ்லாமிய அமைப்புக்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்தே தமிழ் நாட்டில் விஸ்வரூபம் தடைசெய்யப்பட்டது.
இந்த விடயத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் சட்டம் ஒழுங்குக்கு அமைவாகவே விஸ்வரூபத்துக்கான தமது எதிர்ப்பினை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. பக்கத்து வீட்டுக்காரனின் தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தம் என்னைத் தொந்தரவு செய்கிறது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று செய்யப்படும் முறைப்பாட்டுக்கு ஒப்பானதாகக் கூட இதைப் பார்க்கலாம்.
குறித்த முறைப்பாட்டினை அரசாங்கம் கருத்திற் கொண்டது. விஸ்வரூபம் திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்து அந்தத் திரைப்படத்துக்குத் தடை விதித்தது. பிறகு கமல்ஹாசன் அந்தத் தடைக்கெதிராக நீதிமன்றம் சென்றார். தடைநீக்கப்பட்டது. இதனையடுத்து, மறுநாள் – உயர் நீதிமன்றம் சென்ற அரச தரப்பு வக்கீல் மீண்டும் விஸ்வரூபத்துக்கு எதிராக இடைக்காலத் தலையுத்தரவினைப் பெற்றுக் கொண்டார். இவையெல்லாம் நீங்கள் அறிந்த செய்திகள்தான்.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிராக முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை, கமல்ஹாசன் எனும் ‘தமிழர்’ ஒருவருக்கு எதிரான செயற்பாடாக சிலர் சித்தரிக்க முயன்றமை கவலைக்குரிய விடயமாகும். இலங்கையிலும் கூட, விஸ்வரூபம் திரைப்படத்தினை முன்வைத்து பேஷ்புக், ர்விட்டர் போன்ற தளங்களில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு நச்சுக் கருத்துக்கள் விதைக்கப்பட்டிருந்தன. பதிலுக்கு சிலர் – தமிழர்களுக்கெதிரான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தமையினையும் காணக் கிடைத்தபோது கவலையே எஞ்சியது!
கமல்ஹாசனின் கருத்துச் சுதந்திரத்துக்காக குரல்கொடுக்கின்றேன் என்று களத்தில் குதித்த சிலர், ‘தமிழன்’ என்கிற உணர்ச்சி மேலீட்டினால் ஆட்கொள்ளப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, இலங்கையில் எக்கச்சக்கமானோர் இந்த ‘வியாதி’க்குள் சிக்கியிருந்தார்கள். ஆனால், இதில் கவலைதரும் விடயம் என்வென்றால், இலங்கைத் தழிழர் குறித்தோ – இலங்கைத் தமிழ் மக்களின் இன முரண்பாட்டுப் போராட்டம் குறித்தோ – இதுவரை கமல்ஹாசன் தனது திரைப்படங்கள் மூலமாக ‘மருந்துக்கும்’ பேசியதில்லை.
இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் – தனது நாட்டு நலனை மீறி இந்தியா ஒருபோதும் பங்களிக்காது என்பது எத்தனை பெரிய உண்மையோ, அதுபோலவே – தென்னிந்திய சினிமாக்காரர்களும் தமது ‘வியாபாரத்தைத் தாண்டி’ இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டதாக வரலாறுகள் இல்லை.
தென்னிந்திய சினிமாக்காரர்களின் இந்த வியாபார புத்திக்கும், அவர்கள் தமது வியாபாரத் தந்திரத்துக்காக எவ்வாறான முகமூடிகளையெல்லாம் அணிந்து கொள்கின்றார்கள் என்பதற்கும் எக்கச்சக்கமான உதாரணங்களை முன்வைக்கலாம்.
இயக்குநர் மணிரத்னம் குறித்து நீங்கள் அறிவீர்கள். சில காலங்களுக்கு முன்னர் ‘உயிரே’ என்று ஒரு திரைப்படத்தை அவர் உருவாக்கியிருந்தார். அது அஸாம் போராளிகளின் கதை. ‘அன்பு பெரிதா? அல்லது போராட்டம் பெரிதா?’ என்பது பற்றி அந்தத் திரைப்படம் பேசுகிறது. திரைப்படத்தின் கதாநாயகி அஸாம் போராட்டக் குழுவினைச் சேர்ந்த ஒரு தற்கொலையாளி. உடலில் குண்டு அணிந்து கொண்டு எதிரியைத் தேடி அலைகிறாள். ஆனால், இது தெரியாமல் அவள் மீது கதாநாயகன் காதல் கொள்கிறான். படம் முழுவதும் கதாநாயகனின் காதலை மறுத்து வரும் கதாநாயகி – கடைசியில் காதலாகிக் கசிந்துருகிக் கட்டியணைத்துக் கொள்கிறாள். ‘போராட்டத்தை விடவும் – அன்பும், காதலுமே மேலானது’ என்கிற சொல்லப்படாத செய்தியுடன் ‘உயிரே’ திரைப்படம் நிறைவடையும்.


Vishvaroopam - 05


இதன் பிறகு, இயக்குநர் மணிரத்னம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்றொரு படத்தினை எடுத்தார். அந்தத் திரைப்படமும் ”அன்பு பெரிதா? போராட்டம் பெரிதா?’ எனும் வகையிலான கதையைக் கொண்டது. படத்தின் கதாநாயகி ஓர் இலங்கைப் பெண். இந்தியாவுக்கு அகதியாகச் செல்லும் இவர் தனது கைக் குழந்தையினை அங்கு – விட்டு விட்டு, நாடு திரும்புகின்றார். பின்னர் அந்தப் பெண் – தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கமொன்றில் இணைந்து கொள்கின்றார்.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் குழந்தையினை ஒரு தம்பதியினர் எடுத்து வளர்க்கின்றனர். குழந்தைக்கு புத்தியறியும் வயதானபோது ‘நீ வளப்புக் குழந்தை’ என்று சொல்கிறார்கள். அப்போது, தனது சொந்தத் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு குழந்தை கூறுகிறது. வளர்ப்புப் பெற்றோர் குழந்தையுடன் இலங்கை வந்து – நிஜத்தாயை கண்டு பிடிக்கின்றார்கள். தாயோ பெண் போராளி. தனக்கு விடுதலைப் போராட்டமா? பிள்ளைப் பாசமா? முக்கியம் என்று யோசிக்கின்றார். கடைசியில் விடுதலைப் போராட்டத்துக்காக சொந்தக் குழந்தையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விடுகிறார். இதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படக்கதை.
‘அன்பு பெரிதா? அல்லது போராட்டம் பெரிதா?’ என்கிற ஒரே கேள்விக்கு ‘உயிரே’ திரைப்படத்தில் அன்பு என்றும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் போராட்டம் என்றும் இரண்டு பதில்களை மணிரத்னம் சொல்லியிருப்பார். இதுதான் இந்தியச் சினிமாக்காரர்களின் வியாபார புத்தியாகும்.


அஸாம் போராட்டம் என்பது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானது. அப்படியான ஒரு கதையில், அஸாம் போராளிகள் ‘காதலை விடவும், தமது மண்ணுக்கான போராட்டத்தையே அதிகம் நேசிக்கின்றார்கள்’ என்கிற முடிவினை மணிரத்னம் கொடுத்திருந்தால் – அவருடைய திரைப்படம் மிக மோசமான பிரச்சினைகளை உள்நாட்டில் சந்தித்திருக்கும். இந்தியன் என்கிற தேசிய உணர்வு அதிகம் மிகுந்த மக்கள் அந்தத் திரைப்படத்துக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பது குறித்து மணிரத்னம் மிக நன்கு அறிவார். எனவே, எதைச் சொன்னால் இந்தியாவில் வியாபாரம் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டு ‘உயிரே’ திரைப்படத்தின் கதையை முடித்திருந்தார்.
ஆனால், இதே முடிவினை இலங்கைப் போராட்டக் கதையில் முன்வைத்தால், இங்குள்ள தமிழர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் மணிரத்னம் நன்கு அறிவார். எனவே, இலங்கையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தினை ஓட்ட வேண்டுமாயின் போராட்டத்தினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, ‘போராட்டம்தான் பெரிது’ என்கிற செய்தியுடன் அந்தத் திரைப்படத்தின் கதையை முடித்திருந்தார்.


இப்படி, தமது திரைப்படங்களுக்கான சந்தையினை எவ்வாறு பிடித்து வைத்துக் கொள்வது? அதனூடாக எவ்வாறு வருமானமீட்டுவது? என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் இந்திய சினிமாக்காரர்கள் தமது திரைப்படங்களை உருவாக்குகின்றார்கள்.
ஆனால், துரதிஷ்டவசமாக இந்தச் சினிமாக்காரர்களுக்காக நாம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டுக் கொள்கிறோம், நமக்குள் முட்டி மோதிக் கொள்கின்றோம் என்பது வெட்கப்பட வைக்கும் செய்தியாகும்.
திரைப்படத்துறை சார்ந்தோருக்கு சர்வதேச ரீதியாக வழங்கப்படும் ‘ஒஸ்கார்’ விருதின் மீது நடிகர் கமல்ஹாசனுக்கு எப்போதும் ஒரு கண் இருந்தே வருகிறது. ஆனால், அவர் நடித்த படங்கள் அந்த விருதினைப் பெற்றுக் கொள்ள அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதனால், ‘ஹொலிவூட்’ திரைப்படங்களையொத்த பாணியில், அமெரிக்கர்கர்களைக் கவரும் கதையொன்றை வைத்து படமொன்றினை இயக்கினால் ‘ஒஸ்கார்’ விருதினைத் தட்டிக் கொள்ள முடியும் என்று அவர் நம்பியிருக்கலாம். அதன் விளைவுதான் விஸ்வரூபம் திரைப்படம்.
இந்தத் திரைப்படம் அமெரிக்கர்களைக் குளிர்விக்கும் திரைக்கதையினைக் கொண்டது. விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக அமெரிக்காவின் ‘குண்டி’யினை கமல்ஹாசன் மிக லாவகமாகக் கழுவி விட்டுள்ளார். இதன் மூலம் உலகம் முழுவதும் தனது படத்தினை ஓட்டி காசு பார்க்கலாம் என்றும் அவர் கணக்குப் போட்டிருக்கக் கூடும்.

 Vishvaroopam - 07



ஆனால், எல்லாமே தலைகீழாகக் கவிழ்ந்து விட்டது.
விஸ்வரூபம் திரைப்படம் மீதான தடை சரியா? தவறா? என்கின்ற வாதம்

 இன்று சூடுபிடித்துள்ளது. அதற்கான விடையினைத் தேட வேண்டிய தேவையேயில்லை. அடுத்த சமூகத்தை இழிவு செய்யும் வகையில் திரைப்படங்களை உருவாக்கி, அதில் காசு பார்க்கும் சினிமாக்காரர்களுக்கு – விஸ்வரூபம் ஒரு பாடமாகும். இனி, தென்னிந்தியத் திரைப்படங்களில் அடுத்த சமூகத்தினை இழிவு செய்யும் காட்சிகளை வைக்க நினைப்பவர்களுக்கு விஸ்வரூபமும், கமல்ஹாசனின் அவஸ்தைகளும் நினைவுக்கு வரும்!
முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இதற்கு முன்பும் ஏராளமான தமிழ்த் திரைப்படங்கள் வந்துள்ளன. நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் தீவிரவாதியாக ஒரு அஜ்மல்கான் அல்லது முனீர் கட்டாயம் வருவார். அவரிடமிருந்து விஜயகாந்த் இந்தியாவைக் காத்தருள்வார். ஆனாலும், இதைச் சமன் செய்யும் வகையில் – ஒரு நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம் நண்பனையோ அல்லது பொலிஸ்காரரையோ அதே படத்தில் விஜயகாந்த் வைத்திருப்பார். ஆனால், கமல்ஹாசன் – விஸ்வரூபத்தில் அந்தக் கோதாரியைக் கூடச் செய்யவில்லை.
விஸ்வரூபம் திரைப்படத்தின் கதை அமெரிக்காவிலும் நிகழ்கிறது. எனவே – அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தும் பொருட்டு கமல்ஹாசன் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அனுமதி கோரினார். குறித்த கோரிக்கை விண்ணப்பத்துடன் விஸ்வரூபம் திரைப்படத்தின் திரைக்கதையினையும் அமெரிக்கத் தூதரகத்துக்கு கமல்ஹாசன் அனுப்பியிருந்தார். அந்தத் திரைக்கதையைப் பார்த்து விட்டுத்தான் விஸ்வரூபம் படப்பிடிப்புக்கு – அமெரிக்கா தனது நாட்டில் அனுமதியளித்தது. இந்தக் கதையில், அமெரிக்காவை விமர்சித்திருந்தாலோ அல்லது ஆப்கான் போராளிகளை எந்த இடத்திலாவது போற்றிப் புகழ்ந்திருந்தாலோ – விஸ்பரூபத்துக்கான படப்பிடிப்பு அனுமதியினை அமெரிக்கா தனது நாட்டில் வழங்கியிருக்காது.
ஆக, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அமெரிக்க தூதரகம் அனுமதி வழங்கியதை வைத்தே, அது அமெரிக்க சார்பு அல்லது எதிர்போக்கற்ற திரைப்படம் என்பதை மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கச் சார்ப்புத் திரைப்படமொன்று முஸ்லிம் விரோத அரசியலைக் கொண்டிருப்பதொன்றும் ஆச்சரியப்படத்தக்க விடமேயல்ல.
இதேவேளை, இன்னுமொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனுமதியளித்த பிறகும் ஏன் இந்தத் தடை என்பதாகும். தணிக்கைக் குழுவில் முஸ்லிம் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். மேலும், இந்தத் திரைப்படத்துக்கு சம்பந்தப்பட்ட முஸ்லிம் தணிக்கை அதிகாரி தனது எதிர்ப்பை வெளியிட்டதாகவும், ஆனால், ஏனைய தணிக்கை அதிகாரிகள் இந்தத் திரைப்படத்தை அனுமதித்தார்கள் எனவும் ஒரு கதை உள்ளது. இதேவேளை, விஸ்வரூபம் திரைப்படத்திலிருந்த 14 காட்சிகளை தாம் தணிக்கை செய்தாக தணிக்கைக் குழு கூறுகிறது.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சட்ட ரீதியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய 24 இந்திய முஸ்லிம் அமைப்புக்களுடன் அரச அதிகாரியொருவரின் முன்னிலையில் நடிகர் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அறிய முடிகிறது.
சிலவேளை, அந்த முஸ்லிம் அமைப்புக்கள் கூறுகின்ற காட்சிகளை விஸ்வரூபத்திலிருந்து கமல்ஹாசன் நீக்குவதற்கு முன்வரக் கூடும். காரணம், அவருக்கு எப்படியோ இந்தத் திரைப்படம் வெளியாகி காசு பார்க்க வேண்டும்.
உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக எங்களையும், எங்கள் மார்க்கத்தினையும் இழிவுபடுத்தி விட்டீர்கள் என்று கமல்ஹாசனைப் பார்த்து உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தபோது, கமல்ஹாசனோ எனது படத்தை தடைசெய்யாதீர்கள் அப்படித் தடைசெய்தால் இந்தப் படத்துக்காக நான் செலவு செய்த 100 கோடியும் நஷ்டமாகிவிடும், கடனுக்குக் காசு வாங்கியவன் எனது வீட்டை சொந்தமாக்கி விடுவான் என்று லாபநஷ்டக் கணக்கு குறித்தே பேசிக் கொண்டிருந்தார். எனவே, எப்படியும் கமல் இறங்கி வந்து விஸ்வரூபத்தினை வெளியிடுவதற்கு முயற்சிப்பார்.
ஆனால், இங்குள்ள மிகப் பெரும் கேள்வி என்னவென்றால் விஸ்வரூபத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தினையும் இழிவுபடுத்துவதாகச் சொல்லும்


  Vishvaroopam - 06



காட்சிகளை நீக்கி விட முடியும். ஆனால், இந்தத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தாமல் விட்டமையினூடாக புனையப்பட்ருக்கும் ‘முஸ்லிம் விரோத அரசியலை’ என்ன செய்வது? அதை எப்படி சமன் செய்யப் போகிறார்கள்? அப்படியென்றால், புதிதாக சில காட்சிகளைச் சேர்ப்பதனாலேயே அதைச் சாதிக்க முடியும். அதற்கு சாத்தியங்கள் இல்லை.


எனவே, விஸ்வரூபத்தில் எத்தனை காட்சிகளை நீக்கினாலும் அதிலுள்ள ‘முஸ்லிம் விரோத அரசியலை’ துடைத்தெறியவே முடியாது என்பதுதான் இங்குள்ள கவலை தரும் நகைச்சுவையாகும்!

Sunday, February 17, 2013

முஸ்லீம் சாயங்களும் நடுநிலைமை முகமூடிகளும்





அன்புள்ள நண்பர்களே,


                    தீமைகளும் அவலங்களும் நிகழும்போது நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு சொல்லலொணாத் துன்பங்களும் இழப்புகளும் ஏற்படுவது இயல்பானது. ஆனால் காலவோட்டத்திலே அவற்றிலிருந்து விடுபட்டு நடந்தவற்றை மீட்டுப்பார்த்தால் அத்தகைய நிகழ்வுகளால் இழப்புகள் மட்டுமல்லாது சில நன்மைகளும் உண்டாகியிருப்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கலாம்.


உதாரணமாக, சிறியதோர் வீதி விபத்துக்கு நாம் உள்ளாகின்றோம் என்று வைத்துக்கொள்வோம்.  அதனால் உண்டாகும் காயம், வலி, மருத்துவச் செலவு காலவிரயம், என்பவை தவிர நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதிலே முன்னரைவிட அவதானமாகவும் நிதானமாகவும்  இருக்கவேண்டிய படிப்பினையையும் அந்த அனுபவம் நமக்கு வழங்கியிருக்கும் அல்லவா?


அதுபோலத்தான் வெகுஅண்மையிலே விஸ்வரூபம் எனும் தென்னிந்திய தமிழ் சினிமா உலகம் முழுவதும் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் இழுபறிகளையும் அதனால் விளைந்த விளைவுகளையும் காணவேண்டியுள்ளது. அந்தத்திரைப்படம் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் சமூகத்தினருக்கு எதிரானதாக கருதப்பட்டு ஊடகங்களிலே குறிப்பாக இணையத்தளங்களிலே நிகழ்ந்துவந்த விவாதங்களினால் பல நன்மைகள் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.


இந்த விவகாரம் குறித்து  இணையத்தை தொழில்சார்ந்த துறையாக முழுநேரமாக பயன்படுத்துபவர்களிலிருந்து பொழுதுபோக்காக அவ்வப்போது எட்டிப் 'பார்த்துவிட்டு' செல்பவர்கள் வரை இந்த விடயத்தில் முழுமூச்சாக இறங்கியிருந்தனர்.


இவர்களிலே கணிசமானோருக்கு கணினியின் விசைப்பலகையைப் பயன்படுத்தி தாம் நினைக்கும் கருத்தை வார்த்தைகளாக உருவாக்கத் தெரியாமல் இருந்தது.  பலருக்கு ஆங்கிலத்தையே அடிநாதமாகக்கொண்ட கணினியில் தமது வார்த்தைகளை யுனிகோட் மாற்றியினைப் பயன்படுத்தி தமிழ்மொழியில் பொறிக்க முடியாதிருந்தது. இன்னும் சிலர் இணையத்தளம் போன்ற பொது ஊடகமொன்றிலே மாற்றுக் கருத்துக்களுக்குரிய  தமது பிரதிபலிப்புக்களை பண்பான வார்த்தைகளால் மட்டுமே வெளிப்படத்த வேண்டுமென்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாமலிருந்தார்கள்.


இத்தனை குறைபாடுகள் தம்மிடமிருந்த போதிலும் பலர் தமது புனிதமான போற்றுதலுக்குரிய விடயங்கள் இணையத்தில் விரிலான அலசலுக்குள்ளாகுவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாத காரணத்தால் சொந்தப் பெயர்களுடனும் புனைபெயர்களுடனும் தமது கையிருப்பிலிருந்த மொழி மற்றும் கணினி ஆற்றல்களுடன் கோதாவில் இறங்கினார்கள். இதனால் பலபேருடைய மூக்குகள் உடையவும் வண்டவாளங்கள் வெளியாகவும் ஆரம்பித்தன. இதிலே வாதப்பிரதிவாதங்களிலே ஈடுபட்டிருந்த தனிநபர்களது சாயங்கள் வெளுத்துப்போனது மட்டுமன்றி இத்தகைய விவாதங்களுக்கு இடமளித்த பல பிரபல்யமான தமிழ், முஸ்லீம் இணையத்தளங்களின் நடுநிலைமை முகமூடிகளும் கிழிந்து தொங்கிப்போயிருக்கின்றன.

இப்போது நான் எனது அனுபவத்தை கூறுவது பொருத்தமாக இருக்கும்.
இந்தவகையிலே சில முஸ்லீம் இணையத்தளங்கள் விவாதம் சூடுபிடிப்பதற்காக ஆரம்பத்தில் கருத்துக்கூறுவதற்கு இடம் வழங்கினார்கள். அவற்றின்போது இடம்பெற்ற சூடான விவாதங்களை கீழே தருகின்றேன்.

ஸர்மிளா செய்யத் என்பவர், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய மதத்லைவர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புகள் குறித்து  எழுதியிருந்த  கட்டுரையொன்றை ஜஃப்னா முஸ்லீம்.கொம் இணையத்தளம் மீள்பிரசுரம் செய்திருந்தது.
Sharmila


அந்தக்கட்டுரையைப்படித்து முடித்த மறுகணம் அத்தகைய ஒரு கட்டுரையை எழுதும் துணிச்சலையும் அறவுணர்வையும் பாராட்டி நான் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தேன்.

அது பின்வருமாறு:


"ந்தியாவில் அண்மையில் மறைந்த இனவாதக் கோமாளியான பால்தாக்கரே தமிழ்நாட்டின் டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் பாணியில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் இறங்கியுள்ளனர் போலும். விஸ்வரூபத்தின் கதைபற்றியே யாருக்கும் எதுவுமே தெரியாதபோது எப்படி தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் அறிந்தார்கள். அவர்களுக்கு மட்டும் கமல் விஷேட காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாரோ என்னவோ?

தனது விஸ்வரூபம் வெளியான பிறகு அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு விட்டோம் என்பதை ஒவ்வொரு எதிர்ப்பாளரும் உணர்ந்து மனதுக்குள் மறுகவேண்டியிருக்கும்என்று கமல் ஒரு பேட்டியிலே குறிப்பிட்டிருக்கின்றார். கமல் ஒரு சிறந்த கலைஞர். அதேவேளை நல்ல வியாபாரியும்கூட. ஆகவே தனது சந்தைப்பொருளை செல்லாக்காசாக்கும் கைங்கரியங்களைச் செய்திருப்பார் என்று நம்ப முடியாதிருக்கின்றது.

விஸ்வரூபம் இந்தியாவின் தீவிரவாத நெருக்கடிகள் பற்றிப்பேசும் ஒரு திரைப்படம் என்று இந்திய ஊடகங்களில் அரசல்புரசலாக வந்த செய்திகளையும் விளம்பரப் போஸ்டர்களிலே படத்தின் தலைப்பு உருது மொழி எழுத்துக்களைப்போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்துவிட்டு ஒரு குத்துமதிப்பான யூகத்தில் இஸ்லாத்திற்கு எதிரானதாகத்தான் இருக்கவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் உளவுப்பிரிவு கருதுகின்றதோ என்னமோ?

இன்றைய நவீன உலகில், சினிமாவை பயன்படுத்தி விளம்பரம் தேடும் எத்தனையோ நிறுவனங்களில் நமது தீவின் மத அமைப்புக்களும் இறங்கிவிட்டதால், இலங்கையில் செய்யவேண்டியிருந்த விளம்பரச் செலவும் மீதமாகும் மகிழ்ச்சியில் கமல் என்ற புத்திஜீவிச் சினிமா வியாபாரி துள்ளிக்குதிக்கப்போகிறார்."


(தொடரும்)
 
- Jesslya Jessly