Wednesday, September 28, 2011

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




ஆதிக்கமா அல்லது அவசியமா?







ண்மையில்  பிரபல எழுத்தாளர் ஒருவரின் 'சிறுகட்டுரைகள்' என்ற நூலை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதில் ஒன்றில் அறிஞன், கவிஞன், புலவன், இறைவன், தூதன் போன்ற பல   சொற்களுக்கு பெண்பாற் சொற்கள் நமது தமிழ் மொழியில் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இது எவ்வளவு தூரம் உண்மையென்பது தெரியவில்லை. ஆனாலும்  இதில் என்னை வசீகரித்த விடயத்தைச் சொல்லி விடுகின்றேன்.

பெண்களை வெறும் போகப்பொருளாக காதலியாக மனைவியாக பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே காணவிரும்பும் ஆணாதிக்க சமூகம்தான்  அவ்வாறு பெண்பாற் சொற்கள் நமது தமிழ் மொழியில் இல்லாதிருப்பதற்குக் காரணம் என்று கூறுகின்றார். அத்துடன் அந்த கருத்தை அவர் மேலும் விபரித்துச் செல்கின்றார்.

 வேடிக்கை என்னவென்றால் தற்போது கவிஞன் என்பதற்கு கவிதாயினி வந்துவிட்டது. இதற்காக அவர் கூறும் ஆணாதிக்கம் என்ற காரணத்தை  முழுமையாகப் புறக்கணித்துவிட முடியாது.  ஆணாதிக்கமும் பெண்டிமைத்தனமும் நமது சமூகத்தின் பெரும் சாபக்கேடுகள் என்பதிலே ஐயமில்லை.

அதேவேளை  பெண்பால் சொல்லுருவாக்கம் தழைக்காமைக்கு முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் நச்சுவேர்கள் மட்டும்தான் காரணம் என்பதை முற்றாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போதெல்லாம்  பூச்சாடி ஒன்று உடைந்தால் கூட "பெண்ணடிமைத்தனம்...ஆணாதிக்கம்" என்று பழி போடுவது  ஏதோ அறிவுஜீவித்தனம் போல் ஆகிவிட்டது.

அவ்வையார், ஜான்சி ராணி போன்ற சில விதிவிலக்குகள் தவிர, அந்தக் காலங்களில் இலக்கியம், ஆன்மீகம், தத்துவம், போரியல் போன்ற துறைகளில் பெண்கள் பரவலாக ஈடுபட்டிருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பெண்கள் ஈடுபடாமைக்கு வேண்டுமானால் ஆணாதிக்கமும் அதன் நேரடி விளைவான பெண்ணடிமைத்தனமும் காரணமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

இன்று மேற்கூறிய துறைகள் உட்பட பெண்கள் ஈடுபடாத துறைகளே இல்லை எனலாம். எனவே பொதுப்பாற் சொற்களின் அளவு மெல்லச் சுருங்கி இனிமேல் பெண்களுக்குரிய சொற்களும் நமது மொழியில் உருவாக வேண்டிய கட்டாயம் கண்ணெதிரே தெரிகின்றது.

இதனால், சுஜாதா போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள் வேடிக்கை மதிப்பிற்காகப் பயன்படுத்திய சொற்கள் கூட (உ-ம் கவிஞை , அறிஞி, புலவி...) இனிவரும் காலங்களில் நமது தமிழ்  பண்டிதர் பெருமக்களின் முறைப்புகள், விரோதங்களையெல்லாம் தாண்டி சாதாரண வழக்கில் வரக்கூடிய சாத்தியம் நிறைய உள்ளது என்பது எனது கருத்து.

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

- Jesslya Jessly

No comments:

Post a Comment