மியூறியன் க்ரேட்டர்
ஆய்வுகூடத்திலிருந்து வெளியேறி கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது எதிர்பார்த்தது போலவே அது 'ஹோ'வென வெறிச்சோடிக் கிடந்தது.
எங்கள் சிறுவர்களும் சிறுமிகளும் நூற்றுக்கணக்கில் இரைச்சலோடு ஓடியாடித்திரிந்த மண்டபம் இன்று வெறும் மின்குளிரூட்டிகளின் ரீங்காரத்தோடு மனித சஞ்சாரமேயின்றி இருப்பதைப் பார்த்ததும் உணர்ச்சிமிகுதியால் மார்பில் லேசாய் வலித்தது. புதிதாகப் பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கர் சிறிது இடையூறு செய்வது போலிருக்கவே சிறிது நேரம் அழுது பார்க்கலாமா என்றுகூடத் தோன்றியது எனக்கு.
'ஹலோ Dad! நான் மைக்..' ஜியோபோனில் கரகரத்தான் எனது இளைய மகன். எங்கள் விண்ணியல் ஆய்வு மையத்தின் முப்பத்தியெட்டு வயது நிரம்பிய துடிப்பான உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி மைக் எனப்படும் மைக்கேல் பஸ்டன் ட்ரென்வர்.
இந்தப் புதிய கிரகத்தில் மனிதக்குடியிருப்புகளுக்கு வழிகாட்டிய எங்கள் மரியாதைக்குரிய ப்ரொபஸர் பெஞ்சமின் ட்ரென்வர் குடும்பத்தில் எனக்குப் பின்பு எஞ்சியிருக்கும் ஒரே வாரிசு. சரியாக முப்பத்து மூன்று மணிநேரத்திற்கு முன்புதான் எனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனது நண்பர்கள் மற்றும் பொறியியலாளர்கள் சகிதம் ளுpயஉந Pடயநெவ முயடி ஒன்றில் பூமியை நோக்கி மத்திய அரசாங்க ஒப்புதலின்றிய தனது இரகசிய பயணத்தை மேற்கொண்டிருந்தான்
அவர்களுக்கு முன்னரே என்னையும் சில விஞ்ஞானிகiளையும் தவிர இங்கிருந்தவர்கள் அனைவரையும் பூமிக்கு அருகாமையில் விண்வெளியிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் எங்களது வானியல் ஆய்வுகூடமான 'மியூறியன் மிதக்கும் மாளிகைக்கு' அனுப்பி விட்டிருந்தோம். எங்களது இரகசியத் தாக்குதல் திட்டம் ஒருவேளை அம்பலமானால் வடக்குவாசிகளின் அரசாங்க நெருக்கடிகளுக்கு எங்களது அப்பாவி மக்களும் குழந்தைகளும் உள்ளாகிவிடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் அது.
'ஹலோ மைக்.. சொல்லு! சொன்னபடியே போய் சேர்ந்திட்டீங்களா என்ன? இப்ப என்ன நடக்கின்றது அங்கே..?' பரபரப்புடன் கேட்டேன்.
' ஆம்! ஆனால் எனக்குச் சிறிது பயமாயிருக்கு டாட்... நீங்க சொன்னபடி எங்களால அவுஸ்திரேலியாவுக்கு போய் இறங்க முடியல்ல.. அங்க இருந்து தாக்கினா ஜப்பானிலுள்ள ஜிவீயோ டெர்மினல் வேவ்ஸ்கள் மூலமாக டெர்மிட்ஸ்க்கு தெரிஞ்சுடுமாம் என்று ப்ரொபஸர் காப்ரியோவும் டாக்டர் சில்வியா அண்டர்ஸனும் சொல்லிட்டிருந்தாங்க.. என்னால மறுக்க முடியல்ல அதனாலதான் இப்ப எல்லாருமே அண்டாட்டிக்காவிலதான் இறங்கிக் கொண்டிருக்கிறோம்.. ஆனா...' என்பதோடு மைக்கின் தொடர்பு விட்டுப்போனது.
அடச்சே! சிறிது நேரமான பின்புதான் இனிமேல் தொடர்பு கிடைக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தென்துருவப்பகுதியிலே தாக்கிய ஓர் பாரிய எரிகல் மோதலினால் தொலைத்தொடர்பு வலையமைப்பில் பாதிப்பேற்பட்டிருந்தது. அதனால் சமிக்ஞை வாங்கிகள் அவ்வப்போது செயலிழப்பதும் பின்பு இயங்குவதுமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன.
'சே! ஏன்தான் நான் சொன்னபடி செய்யாமல் தங்களிஷ்டத்துக்கு குழப்பியடிக்கின்றார்களோ.. அண்டாட்டிக்காவில் இருந்து தாக்கினால் அது கொக்ரோச்சுகளுக்கு பெரிய சேதத்தையும் கோபத்தையும் உண்டுபண்ணாதே... இந்தச் சின்னப் பையன்களையும் பெண்களையும் நம்பி இத்தனை பெரிய காரியத்தை ஒப்படைத்ததுதான் எனது தவறோ?' என்று ஒருபுறம் மனசாட்சி வாட்டி வதைத்தது.
ஜியோ போனை மீண்டும் முயன்று பார்த்தேன். ம்ஹும். அது அமைதியாயிருந்தது. அவர்கள் தொடர்பு கொண்டால்தான் உண்டு.
வேறுவழியில்லை.. எனது திட்டம் நிறைவேறாது போனால் மனித இனம் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நசிந்து போய்த்தான் வாழ்ந்தாக வேண்டும். அதைவிட இந்த வாழ்வா சாவா முயற்சியிலே மோதிப்பார்த்து விடுவதுதான் சரியாக இருக்கும்.
ஆம், நான் செய்ததுதான் சரி. அவ்வளவு தூரம் போனவர்களை இனிமேல் திருப்பியழைக்கவும் முடியாது.. யோசனையோடு மெல்ல நகர்ந்து மண்டபத்தின் இடதுபுறத்திலிருந்த மிசைட்லக் பந்தாட்டத் தளத்தினைக் கடந்துசென்று மின்தூக்கி உலோகப் புழையினுள் நுழைந்ததும் அதன் தானியங்கிக் கதவுகள் சட்டென மூடிக்கொண்டன. அதன் உலோகச் சுவரிலிருந்த டிஜிட்டல் பட்டையில் பழக்கப்பட்ட எனது விரல்கள் இரகசிய எண்களை ஒற்றியதும் பரிசோதனைக் குழாய் போன்ற பிரமாண்டமான கண்ணாடிக்கூண்டு ஒன்று என்மீது கவிந்தது. மறுகணம் அந்த கட்டிடத்தின் 176 தளங்களும் சில வினாடிகளில் கால்களின் கீழே நழுவிச் சட்டென நின்றது. மெல்ல இறங்கி ஓர் பிரமாண்டமான கண்ணாடி உருண்டையொன்றினால் கவசமிடப்பட்டிருந்த மொட்டைமாடிபோன்ற மேல்தளத்திற்கு வந்தேன்.
உச்சியில் நின்றபடி சுற்றிலும் ஒருதடவை பார்த்தேன்.
மெலிதான செம்மஞ்சள் நிற வானம் எங்கும் பரந்து விரிந்து கிடந்தது. உச்சியிலிருந்து சரிந்திருந்த சிறுபொட்டுச் சூரியன் வெகுதூரத்திலிருந்த ஷார்ப் மலைமுகட்டை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான்.
எப்போதாவது மனசு கனத்திருக்கும்போது இந்த இடத்திற்கு வந்து வெகுநேரம் நின்று கொண்டிருப்பதுண்டு. இங்கிருந்து பார்த்தால் தெரியும் பள்ளத்தாக்கையும் தொடுவானத்தையும் என்னால் மறக்கவே முடிவதில்லை. இங்கு இப்போதுள்ள கட்டிடங்களையும் பிரமாண்டமான காற்றாடிகளையும் விண்ணியல் ஆய்வுகூடங்களையும் பார்க்கும்போது, 160 வருடங்களுக்கு முன்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் சிறியதும் பெரியதுமாய் இரும்புத்துருவேறிய பாறைக்கற்கள் மட்டுமே பரவிக்கிடந்த புழுதிமணல் பொட்டல் வெளியா இது என்று ஒவ்வொருமுறையும் எனக்கு வியப்பாகவே இருப்பதுண்டு.
தொடுவானக் கீறலையும் ஆங்காங்கே அதை மறைக்கும் மணல்மேடுகள் தவிர எதுவுமே இல்லாதிருந்த இடத்தில் ஓர் அறிவியல் சொர்க்கத்தையே உருவாக்கிய எங்கள் முன்னோர்களின் உழைப்பின் வலிமையை இப்போதுள்ள ஒவ்வொரு சென்ரிமீற்றரும் பேசிக் கொண்டிருந்தன. அந்த உழைப்...
மீண்டும் ஒளிர்ந்தது ஜியோபோன்.
'ஆங்.. சொல்லுங்க, உதவி கட்டுப்பாட்டு அதிகாரி திரு. மைக் பஸ்டன் அவர்களே!'
' டாட், நீங்க கோபமா இருக்கறீங்க. சரிதானே?'
'ம்..! அதெல்லாம் இருக்கட்டும் நீ இப்ப அங்க நடக்கிறதைச் சொல்லு மைக்.. அது போதும்!'
'அவுஸ்திரேலியாவில் இறங்காதது தவிர நீங்க சொன்னபடியேதான் எல்லாம் செய்திட்டிருக்கிறோம்.. தூரம்தான் ஒரு பிரச்சினை. ஆனால் BMA அளவை 29734GF லிருந்து 30286GF வரைக்கும் கூட்டி வச்சிட்டா அட்டாக்கிங் பவர் உங்க அவுஸ்திரேலியக் கணிப்புக்கு சரியாயிடும் என்று ப்ரொபஸர் காப்ரியோ போல்ட் சொல்லிட்டிருக்கிறார்.'
'ஆமா... கிழிச்சான் அந்தச் செம்பட்டைத்தலையன்! அந்த ரேஞ்ச் எல்லாம் அதுகளுக்குப் போதாது. குறைஞ்சது BMA ரேஞ்சை 43570 GF க்கு மாற்றச் சொல்லு. க்ளைமேட் எப்படியிருக்கு?.'
'அது ஓரளவு சாதகமாத்தான் இருக்கு.. ஆனால் வானம் தெளிவா இருந்தா அதுகள் மீது பயோ மிசைல் அட்டாக் தாக்குதல் நடத்திறது எங்களுக்கே ஆபத்தாயிடாதா டாடி..'
'அப்படி ஒண்ணும் ஆகாது என்றுதான் நம்புறேன். ஆனால் ஒன்று.. இன்னும் சரியாக நூற்றி எண்பத்திநாலு மணிநேரம்தான் உங்களால அங்கே தங்கியிருக்க முடியும். மைக், ஒண்ணு சொல்லட்டுமா உங்களுக்கு?'
'சொல்லுங்க'
'நீங்களெல்லாம் பூமிக்குப் போயிருக்கிறது ஒன்றும் பிக்னிக்குக்காக அல்ல. அத்தோட இப்ப இருக்கிறது நம்ம தாத்தாவும் அவரோட ஆட்களும் எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு கைவிட்டு வந்தபோது இருந்த பழைய பூமியும் கிடையாது. அதை ஞாபகத்துல வச்சிருங்க.. ஓகே?
'................'
'அதுசரி இதுவரைக்கும் எத்தனை தடவை பீஎம்ஏ தாக்குதல்களை நடத்தியிருக்கிறீங்க?'
' ஒருநிமிஷம் இருங்க டாட், ட்ரயல் அட்டாக் ஒன்றிரண்டு பழைய ரேஞ்ச் 29734 GF ல இரண்டு அனுப்பினோம்.. ஆனா அதுக்கு இதுவரை பதில் எதுவும் தெரியல்ல.. அப்படியிருந்தா கூட அதை கிலான்கிட்டதான் கேட்க வேணும். கிலான் இங்கிருந்து 40 கிலோமீற்றர் தள்ளியிருக்கிறான். இங்க ஜியோபோனைத் தவிர வேற போன் எதையும் யூஸ் பண்ண முடியல்ல. அப்படிச் செய்தா இந்தோனேஷியன் தீவுகள்ல இருக்கிற டேர்மிட்ஸ்களுக்கு நாங்க இருக்கிற இடம் தெரிஞ்சுடுமாம். அதனாலதான்.. அவனைத் தொடர்பு கொள்ளவே முடியல்ல.'
'சரி, அவன் நேரடியாக என்னோட பேசினால் பார்ப்போம்... நீங்க அங்க இறங்கின ஸ்பேஸ் ப்ளனட் கேப்பை என்ன செஞ்சீங்க.. பத்திரமா மறைச்சு வச்சிருக்கீங்கதானே..?'
'ஆங் அது.. இருக்கு டாட்! பனிப்பாளங்களாலதான் மூடி வைச்சிருக்கிறோம். அதோட டெர்மினல் பெனல் பற்றரியெல்லாம் கூட கழற்றித்தான் வச்சிருக்கோம்..டோண்ட் வொரி'
'ஓகே! மிகக் கவனமாயிருங்க.. அவங்களுக்கிடையில சண்டை தொடங்கியதும் நீங்க உடனே தயாராகி வெளியேறிடணும். திரும்பி வரும்போது வட துருவத்தை விலக்கியே வந்திடுங்க... லேண்ட் டேர்மிட்ஸ் கொக்ரோச்சைவிட பயங்கரமானதுகள்.. அதுகள் அபார மூளைவளர்ச்சியும் சேர்ந்துதான் விகாரமடைஞ்சிருக்கு.. கவனம்.. எனிவே உன்னோட டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மைக்!'
'தேங்க்யூ டாடி, அங்க எப்படியிருக்கு..?'
'இங்க ஏறத்தாழ ஒரு வீட்டுச்சிறைவைக்கப்பட்ட கைதிபோலத்தான். கொஞ்சம் பெரிய வீடு அவ்வளவுதான்.. ரொம்பத் தனிமையாயிருக்கு மைக். சாப்பாடு மெடிசின் எல்லாம் வழக்கம்போல... இந்த புதிய பேஸ்மேக்கர்தான் கொஞ்சம்.. உங்களை நினைச்சு சிறிய உணர்ச்சிகள் காட்டினா உடனே மக்கர் பண்ணுது. பார்க்கலாம்.. ஒருதடவை மனசுவிட்டு அழுதிட்டா சரியாயிடும்...'
'டோண்ட் வொறி டாட், உங்க பெஞ்சமின் தாத்தாவோட காதலியின் கதையை எழுத ஆரம்பிக்கப்போறதா சொல்லிட்டிருந்தீங்கதானே? எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசிச்சிட்டே இருங்க. இன்னும் ஒரே வாரத்தில திரும்பி வந்து நானும் ஏதாவது ஐடியா தாறேன் என்ன?..' என்றான் மைக் உற்சாகமாக.
ஆனால் அதுதான் நானும் எனது மகனும் பேசிக்கொள்ளும் கடைசி வார்த்தைகள் என்று புரியாமல், 'அடி வாங்குவேடா நீ..! திரும்பி இங்க வருவாய்தானே அப்போ உனக்கு..வச்சுக்கிறேன்டா' என்றேன்.
கி.பி. 2352 டிசம்பர் மாதம் 26ம் தினம்...
பூமிக் கிரகத்திலிருந்து பெஞ்சமின்; ட்ரென்வர் என்ற விண்வெளி அகதி இந்த ஆளரவமற்ற கிரகத்திற்கு தன்னந்தனியாக வந்திறங்கிய நாள்.
அன்று எங்கே செல்வது அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வரும்போது கொண்டு வந்த அற்ப சொற்ப நவீன கருவிகளை (இப்போது அவையெல்லாம் எங்கள் அருங்காட்சியகத்தில் இருக்கும் அதரப் பழசுகள்) வைத்துக்கொண்டு ட்ரென்வர் திணறியபோது எப்படியும் உயிர் வாழ்ந்தே ஆகவேண்டும் என்று மானசீகமாக அவரை உந்தியது பூமியிலே அவரோடு வாழ்ந்து இறந்துபோன அவரது காதலியின் நினைவு ஒன்றுதானாம்.
பெஞ்சமின் ட்ரென்வர் இந்தக் கிரகத்தில் வந்திறங்கியபோது கிடைத்த அனுபவங்களையெல்லாம் தனது எதிர்கால வாரிசுகளான எங்களை நினைத்து காட்சிப் பதிவுகளாகத் தொகுத்துத் தந்து விட்டுத்தான் இறந்திருந்தார். நிலக் கறையான்களின் ஆரம்பகாலத் தாக்குதல் ஒன்றிலே அவரது காதலியாகிய மியூறியன் மரியா படுகாயமுற்று செத்துப்போகும் தறுவாயிலே கூட எனது தாத்தா பெஞ்சமினைத்தான் காப்பாற்ற நினைத்தாவாம். ஆம் தாத்தாவைப் பார்த்து பாட்டி உச்சரித்த கடைசி வார்த்தைகள் : 'நீங்களாவது உயிர் வாழவேண்டும்.. பெஞ்சமின் நீங்களாவது உயிர் வாழ்ந்தாக வேண்டும்' என்பதுதானாம்.
அன்று என் தாத்தா பெஞ்சமின் ட்ரென்வர் விரக்தியடைந்து உயிர்வாழும் போராட்டத்தைக் கைவிட்டிருந்தால் இன்று இந்தக் கிரகமே மனித சஞ்சாரத்திற்கு வழியின்றி பாழடைந்து போயிருக்கும். உயிரைக் கருவிகளில் பிடித்து வைத்துக் கொண்டு அவர் பூமியிலிருந்த தனது சகாக்களுக்கு அனுப்பிய தகவல்களால்தான் பின்னாளிலே அவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள்; பூமியிலிருந்து வெளியேறி இங்கு வந்தார்களாம்.. அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து போராடி அயராது உழைத்து உருவாக்கிய இடம்தான் இந்தப் புதிய கிரகத்தின் மியூறியன் க்ரேட்டர் குடியிருப்புகள் வளாகம் விண்ணியல் ஆய்வுமையம் எல்லாமே.
'ஹலோ! டாக்டர் ஜாக் ட்ரென்வர்! ஐ'ம் கிலான் ஹியர்!'
' ஆங்! நான் கேட்கிறேன் சொல்லு கிலான்..'
'டாக்டர் சக்ஸஸ்! நாம எதிர்பார்த்தபடியே ஆப்ரிக்காவிலேருந்து இப்போ கொக்ரோச்சுகள் டேர்மிட்ஸ்ஸை நோக்கி தாக்குதல்களை ஆரம்பித்தாயிற்று. கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக அது நடந்து கொண்டிருக்கின்றது.. நாங்க எங்க தாக்குதல்களை நிறுத்திட்டோம். ஆனா இன்னும் டேர்மிட்சுங்களுக்கிட்ட இருந்து கொக்ரோச்சுகள் மீது பதில் தாக்குதல் ஆரம்பிக்கவேயில்ல.. அதுதான் புரியல்ல..' கிலானின் குரலில் கலவரம் தெரிந்தது.
'அப்படியா ஆச்சரியமாருக்கே..? பதில் தாக்குதல் இல்லையா..? அதுவும் ஒரு மணிநேரமாகவா? அப்படியானால் ஒன்றில் அவை எல்லாமே ஏற்கனவே அழிந்து போயிருக்க வேணும்.. அல்லது.. அல்லது.. மை காட்! கிலான் ஹரியப்.. ஹரியப்! உடனே போய் எல்லாரும் பீஎஸ்கேயில ஏறுங்க கமான் யாரும் தாமதிக்க வேணாம்..புறப்படுங்க!'
'ஏன் டாக்டர்?' 'ஐயோ கிலான் புரியல்லயா உங்களுக்கு? அவை டேர்மிட்ஸ் உங்களோட இடத்தை ஸ்மெல் பண்ணிட்டுது.. உங்க இடத்தை நோக்கித் தாக்குதல் நடாத்தப் போகுது! நிற்க வேண்டாம் மைக் எங்கே?'
'சரி, டாக்டர் நாங்க கிளம்புறோம்..மைக் இங்கதானே இருந்தான்..
அடக்கடவுளே! இது என்ன கஷ்டம்டா'
'ஏன்.. மைக்குக்கு என்னாச்சு?'
'ஒண்ணுமில்ல.. திரும்பவும் தாக்...பீய்ய்ய்ய்ய்ய்யங்!'
மீண்டும் அறுந்தது தொடர்பு!
'இது ஒரு சனியன் சே!' கோபத்தில் ஜியோ போனைத் தூக்கியடிக்க ஓங்கினேன். ஆனால் அடிக்கவில்லை.
எங்கள் முன்னோர்களுக்குப் பின்னர் பல வருடங்கள் கழித்து பூமிக்கிரகத்திலிருந்து இங்கே வந்த வடவரைக்கோளத்திலே குடியேறியவர்கள்தான் எங்களது நிம்மதியைக் குலைத்தவர்கள். அவர்கள் இந்தக் கிரகத்திலே வந்திறங்கும் வரை இன்று இவ்வளவு பிரச்சினையாகிப் போய்விட்டிருக்கும் தொலைத்தொடர்புகளைக்கூட நாங்கள் சீராகத்தான் வைத்திருந்தோம்.
தென்பகுதியில் நாங்கள் குடியிருக்கும் இந்த ம்யூறியன் பெரும்பள்ளத்தைத் தவிர இந்தக் கோளின் முழுப்பகுதியையும் வடக்குவாசிகள் கைப்பற்றினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் தங்களது அதிநவீன ஆயுதங்களையும் கருவிகளையும் கொண்டு தெற்குவாசிகளாகிய எங்களை வெகுசுலபமாக வெற்றிகொண்டிருக்க முடியும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் எங்கள் மீது இதுவரையிலே எதுவித தாக்குதல்களும் புரியாமல் விட்டு வைத்திருக்கின்றார்கள். ஒருவேளை அவர்களைவிட முன்னோர்களான எங்களிடம் தகராறு வைத்துக்கொண்டால் உரிமைப் பிரச்சினைகள் ஏதும் வந்து விடக்கூடும் என அவர்கள் நினைத்தது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அதற்காக எங்களோடு இணக்கமான போக்கையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. மாறாக ஒருவித நட்புமின்றிய விரோதமுமின்றிய இடைநிலைப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்கள். எப்போதாவது ஓரிரு தடவை இந்த ம்யூறியன் பெரும்பள்ளத்தைக் கடந்து செல்லும் அவர்களது விண்கலங்களிலிருந்து எங்கள் விண்ணியல் ஆய்வுமையங்களையும் அறிவியல் கல்லூரி வளாகங்களையும் அலட்சியமாக பார்த்தபடி செல்லும் அவர்களது விஞ்ஞானிகளையும் அரச பிரமுகர்களையும் தவிர வேறு தொல்லைகள் எதுவும் இருந்ததில்லை. நாங்களும் அவர்களோடு முட்டிக்கொள்வதில்லை. ஆகமொத்தத்தில் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை.
எனது முன்னோர்கள் இந்தக் கிரகத்திற்கு வந்திறங்கிய காலத்திலே அன்றைய காலத்துக்குரிய கவச உடைகள் ஒக்ஸிஜன் உறைகள் போன்றவற்றை அணிந்திருந்தாலும் நீண்டகாலத்திற்கு அவற்றின் பாதுகாப்பை அவர்களால் பெறமுடியாதிருந்தாம். காலப்போக்கிலே அவர்களது சில கருவிகள் பழுதுபடலாயின. பின்பு வேறுவழியின்றி மெல்ல மெல்ல இந்தக் கிரகத்தின் புதிய சூழலுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளுவதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை அவர்களுக்கு. ஆரம்பகாலத்தில் சிலர் இறந்தனர் நோய்வய்ப்பட்டனராயினும் அதிஷ்டவசமாக அன்றிருந்த தட்பவெட்ப நிலையிலே சில சாதகமான விளைவுகள் ஏற்பட்டதாம். இதனால் அவர்களது உடல் உள்ளுறுப்புகளிலும் ஆயுட்காலத்திலும் பல நம்பமுடியாத மாற்றங்கள் உருவாகியிருந்தன என்று எங்கள் முன்னோர்கள் தெளிவாகக் குறிப்பெழுதி வைத்துள்ளனர்.
பூமியைவிடக் குறைவான ஈர்ப்புவிசை மற்றும் காற்றழுத்தம், அடர்த்தி குறைவான வளிமண்டலம், வேறுபட்ட வாயுச்சேர்மானம், போன்றவற்றிற்கு ஏற்ற வகையிலே உடல் இசைவாக்கங்களைக் கொண்டிருந்ததால் அவ்வப்போது வந்து விழும் விண்கற்களின் தாக்குதல்கள் தவிர அவர்களால் சுதந்திரமாக நடமாடவும் இயன்றதாம். ஆனால் புதிதாக வந்திருந்த வடக்குவாசிகளால் அப்படியிருக்க முடியவில்லை. எப்போதும் தலையைச்சூழ ஓர் கண்ணாடிக் கூண்டும் கவசஉறையும் வைத்திருந்தார்கள். அவர்களால் எங்களைப்போல சரியாக நடக்கத்தானும் முடியாதிருந்தது.
எத்தனை காலத்துக்குத்தான் அவர்களால் கண்ணாடிக் கூண்டுகளுடனும் உடலைச்சுற்றியுள்ள குழாய்களுடனும் அலையமுடியும்..? அதனால் பூமியிலிருந்து கொண்டு வந்து சேர்த்த நவீன கருவிகள் மூலம் இங்குள்ள மொத்த வளிமண்டலத்திலிருந்த வாயுக்களின் சேர்மான விகிதங்களை தமக்கு வசதியானபடி மாற்றியமைக்கத் தொடங்கினார்கள்.
வளிமண்டலத்தின் அடர்த்தியை செயற்கையாக அதிகரித்தார்கள். துருவப்பகுதியிலே உறைந்து கிடந்த பனிக்கட்டிகளை உருகச்செய்து வடவரைக்கோளம் முழுவதும் உள்ள பெரும் பள்ளங்களையெல்லாம் படிப்படியாக நிரப்பி சிறிய கடல்களை உருவாக்கினார்கள்.
இதனால் கோளின் மொத்த தட்பவெட்பமும் படிப்படியே மாறத்தொடங்கியது. ம்யூறியன் க்ரேட்டர்ஸில் மட்டுமே வாழ்ந்து வந்த தெற்குவாசிகள் எங்களது நிலைமை கவலைக்கிடமானது. காலக்கிரமத்தில் சுவாசிக்கவே சிரமப்பட ஆரம்பித்தோம். ஒருகட்டத்திலே அவர்களுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தோம். அவர்களோடு பேச்சு நடாத்தினோம். ஆனால் குடித்தொகையிலும் அறிவியல் அபிவிருத்தியிலும் வலுவான நிலையிலே இருந்த அவர்கள் எங்களது வேண்டுகோள்களைச் சுலபமாக நிராகரித்து விட்டார்கள்.
இறுதியில் அவர்கள் ஏற்படுத்திய புதிய வளிமண்டத்திற்கேற்ப நாம்தான் மாறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்து இந்த ம்யூறியன் க்ரேட்டர் பள்ளத்தாக்கை கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பினாலும் மாற்றியமைத்த அறிவியல் முன்னோடிகளாகிய நாங்கள் அனைவரும் ஏறத்தாழ அவர்களின் அடிமைகளானோம். வெளியுலகத்திற்கு வர இயலாமல் முற்றிலும் வளியடைப்புச் செய்யப்பட்ட கட்டிடங்களுக்குள் மட்டுமேதான் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
அவசியமான வெளிப்புற நடமாட்டங்கள் கூட ம்யுறியன் க்ரேட்டர் பெரும்பள்ளத்தினுள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டது. வாழ்நாள் முழுவதும் தலைக் கவசங்களுடனும் சுவாசக்குழல் இணைப்புகளுடனும் வாழவேண்டிய மக்களாக நாங்கள் அனைவரும் மாற்றப்பட்டோம் என்பதுதான் வேதனை. எங்களுடைய புதிய கட்டிடங்களையும் வாகனங்களையும் முற்றிலும் வளியடைப்புச் செய்ய வேண்டிய நிலை.
அவர்களின் அனுமதியின்றி கோளைவிட்டு வெளியேறவோ விண்ணியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ தடைவிதித்திருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கோளின் சகலவற்றையும் கட்டுப்படுத்தும் அரசாங்கமாக அவர்கள்தான் இருந்து வந்தார்கள்.
எத்தனை காலம்தான் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியும்.
இப்படி அடிமைகளாக வாழ்வதைவிட வடக்குவாசிகளின் அரசை எதிர்த்து போராடி அழிந்து விடுவதே மேல் என்று எங்களது அரசியல் தலைவர்கள் முடிவெடுத்தனர். அந்த முடிவினைச் செயற்படத்துவதற்காக எமது விண்ணியல் குழு கூடி பல திட்டங்களை முன்வைத்து ஆராய்ந்தது. எம்மை ஆக்கிரமிக்கும் வடக்கு வாசிகளை எதிர்த்துப் போராடுவது அல்லது மீண்டும் எமது முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்கே சென்றுவிடுவது என்பதுவும் அவற்றிலே ஒன்று. இப்போதுள்ள பூமியின் வளிமண்டலம் எங்களுக்கு உகந்த வகையிலே இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து எமது விண்ணியல் ஆய்வாளர்கள் குழுவின் பெரும்பாலானவர்கள் பின்னைய முடிவினையே பரிந்துரைத்தனர்.
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் ஒருகாலத்தில் அங்கு சின்னஞ்சிறு பூச்சிகளாக இருந்துவந்த நிலக்கறையான்களும் கரப்பான்களும் விகாரமடைந்து படிப்படியாக மனிதனையே எதிர்க்கக்கூடிய பெரும் ஆற்றல்வாய்ந்த உயிரினங்களாக மாறிவிட்டிருந்தன. அவற்றின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் இலட்சக்கணக்கிலே அழிந்தவர்கள் போக மீதிப்பேர் அகதிகளாகி இங்கு வந்து விட்டனர். பூமியிலே தற்போது இருக்கும் மனிதர்களும் கூட அங்குள்ள அறியப்படாத சின்னஞ்சிறு தீவுகளில் மட்டுமே மறைந்து வாழ்ந்து வருகின்றனராம் என்ற தகவலும் கிடைத்தது.
அமெரிக்க கண்டங்களிலும் ஆபிரிக்காவிலும் விகாரமடைந் கரப்பான்கள் உடலமைப்பிலும் எண்ணிக்கையிலும் நம்பமுடியாத வளர்ச்சி கண்டுள்ளனவாம். மனிதர்கள் கண்டுபிடித்த நவீன ஆயதங்களைக்கூட இயக்கக்கூடியளவு தமது திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளதாம். அதேபோல ஆசிய ஐரோப்பிய நாடுகளிலே கறையான்கள் உடல்வலிமையுடன் கூடிய மூளைவளர்ச்சியையும் பெற்று மிகுந்த பலத்தோடு உள்ளனவாம். தொலைத்தொடர்புகள் போன்ற நுணுக்கமான விடயங்களைக்கூட திறம்படக் கையாள்கின்றனவாம்.
எங்களது ஆய்வின்படி அவுஸ்திரேலியா மற்றும் அண்டாட்டிக்கா துருவப்பகுதியில் மட்டுமே அவற்றின் ஆதிக்கம் இல்லாதிருப்பது தெரிய வந்தது. பூமிக்கிரகத்தின் இருவௌ;வேறு பாகங்களில் தீவிரமாகப் பெருகிவரும் கரப்பான்கள் மற்றும் கறையான்கள் நிச்சயம் ஒருநாள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு முற்றாக அழியவேண்டிய நிலை உருவாகும் என்பது எமது கணிப்பு. ஆனால் அதுவரை காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் நாங்களே அங்கு சென்று மோதலை ஆரம்பித்து வைக்கத் தீர்மானித்தோம்.
இறுதியாக ESOஎனும் (பூமி மீட்பு நடவடிக்கை) இரகசியத் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டு உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.
000
'சியர்ஸ்! போய்ஸ் அண்ட் கேள்ஸ்!'
பளபளக்கும் சென்ட்லியோன் விளக்குகளின் பளிச்சீடுகளிலே இசைவெள்ளம் வழிந்தோட பூமிக்கிரகத்தை கறையான் மற்றும் கரப்பான்களிடமிருந்து மீட்டெடுத்த முதலாவது ஆண்டு நிறைவு வெற்றி விழாக் கொண்டாட்டம் களைகட்டியது. வெளிர் ஆரஞ்சு நிறத்தில் ரொலேட்ஸ் பானம் எல்லோருடைய கைகளிலும் நுரைதும்பித் தள்ளாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று இசை வலுக்குறைந்து ஒலித்தது.
'நண்பர்களே! உங்கள் மகிழ்ச்சிக் களிப்பிலே குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்!...' என்றபடி மேடையேறினான் எனது பேரன் மைக்கின் நண்பன் கிலான். கருநீலநிற கோட் சூட்டில் படு கம்பீரமாக இருந்தான்.
' முதலில் பூமி மீட்பு நடவடிக்கையின் போது தனது இன்னுயிரைத் தியாகம் செய்த மியூறியன் விண்வெளி ஆய்வு மையத்தின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரி நமது அன்புக்குரிய மைக் பஸ்டன் அவர்களது தியாகத்தினை நினைவுகூரும் விதமாக 120 வினாடிகள் மௌனம் காண்பிப்போம்..' என்று விட்டு அமைதியானான்.
சன்னமான ஒரு நிசப்தம் நிலவ மைக்கை நினைத்து என் மனம் தேம்பியது.
'மைக்! ஓ..மை ஸன்! ஐ ரியலி மிஸ் யூ!'
'ஏன் தாத்தா அழுறீங்க.. அழாதீங்க ப்ளீஸ்!' என்று என்னை உலுப்பினான் என்னருகே நின்றிருந்த மைக் பஸ்டனின் 16 வயது மகன் மைக் ஜுனியர். துக்கம் தாளாமல் அவனது தலையை வருடிக்கொடுத்தபடி அணைத்துக் கொண்டேன்.
'மௌனம் காண்பித்தமைக்கு நன்றி நண்பர்களே! இந்த வெற்றியை நாம் கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்த நமது மியூறியன் க்ரேட்டர்ஸ் விண்வெளி ஆய்வுக்குழுவினருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தாக்குதல் திட்டத்தை வடிவமைத்துதவிய டாக்டர் ஜாக் ட்ரென்வர் ஜுனியருக்கு நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பூமியை ஆக்கிரமித்த கரப்பான்களையும் நிலக்கறையான்களையும் வெற்றிகொண்ட முதலாவது ஆண்டு விழாவை இந்தக் கிரகத்தில்தான் கொண்டாட வேணடும் என்றும் அவ்வாறு கொண்டாடிய பின்புதான் பூமிக்கே செல்வோம் என்று அடம்பிடித்து இன்னும் இங்கேயே தங்கியிருக்கும் எமது விஞ்ஞானிகளாகிய உங்களது உறுதியான எண்ணத்தைப் பாராட்டுகின்றேன்.
அத்துடன் பூமியை மீட்டெடுத்ததன் காரணமாக வெகுநாட்கள் வரை ஒருவருக்கொருவர் எதிரிகள்போல நாம் கருதி வந்த நமது கோளின் வடக்குவாசிகளும் நம்முடன் ஒன்றிணைந்திருப்பது பெரு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ... வடக்கு வாசிகளின் சார்பிலே நமது வெற்றிவிழாவிலே கலந்து கொள்ள வந்திருக்கும் டாக்டர் க்ரேலண்ட் மார்ஷ் அவர்கள்..' என்று கிலான் விலகிக்கொள்ள.. அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு,
'நண்பர்களே!
நான் க்ரேலண்ட் மார்ஷ், சீனியர் செகரட்டரி ஜெனரல் ஒவ் நொதர்ன் கவர்ண்மண்ட். எத்தனை காலம் ஆனாலும் தெற்குவாசிகளாகிய உங்களது அபார துணிச்சலையும் திறமையையும் நிச்சயம் நான் பாராட்டியே ஆகவேண்டும். நீண்டகாலமாக பூமியைக் கலவரப்படுத்தியதும் நாமெல்லாம் இங்கு வந்து குடியேறுவதற்கு காரணமாக இருந்தவையுமான நமது பொது எதிரிகளை பூமிக்குச் சென்று தந்திரமாக அழித்தொழித்த உங்கள் வீரதீரத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் நினைவு கூர்ந்து வரவேற்கின்றேன்.. மிகவும் போற்றுகின்றேன்.
அதனால்தான் உங்களைப் போலவே எமது வடக்குவாசிகளும் பூமியிலே மீண்டும் குடியேறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையிலே பல வேலைகளைக் கூட ஒத்திவைத்துவிட்டு உங்களது வெற்றிவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன்...
(பலத்த கரகோஷம்)
அதேசமயம் நீண்ட காலமாக நாம் ஒருவரையொருவர் மறைமுக எதிரிகளாகக் கருதி ஒதுங்கியிருந்த பழைய நாட்களை எண்ணி நான் இப்போதும் கூட வருந்துகின்றேன்.. வெட்கமடைகின்றேன்.. நம்மிடையே வடக்கு வாசிகள் தெற்குவாசிகள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பூமிக்கிரகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற வகையிலே சகோதரர்களே.. பூமியிலும் சரி இந்த விண்வெளியிலும் சரி இனிமேல் எங்கு சென்றாலும் சரி நாம் பிரிந்து வாழ வேண்டியதில்லை..!'
இதை அவர் கூறியதும் 'ஹோ!' எனும் இரைச்சல் ஒலி பின்னணி இசையோடு எழுந்தது.
'பூமியிலே நமது கூட்டு முயற்சியுடன் நிகழ்ந்து வரும் புனர்நிர்மாணப் பணிகள் அனைத்தும் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. ஏற்கனவே இங்கிருந்து 98 வீதமானவர்கள் பூமிக்குச் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் நமது 'மிதக்கும் மாளிகை' யில் இடைத்தங்கலாகவுள்ளனர். ஆனால் அனைவரும் அங்கே பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பதால் எஞ்சியுள்ள விஞ்ஞானிகளாகிய நாமும் வெகுவிரைவிலே அங்கு சென்று குடியேறவேண்டிய நாள் நெருங்கிவிட்டது...'
'தாத்தா அவர் சொல்வது எல்லாமே உண்மைதானா?' என்று கேட்டான் அருகே அமர்ந்திருந்த மைக்கின் பையன்.
'ஆமாம்டா என் குட்டிப்பையா!'
'நீங்களும்; பூமிக்குப் போகப் போறீங்களா?'
'நிச்சயமாக! நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த மண்ணைப் பார்த்தாக வேண்டும் எனக்கு.. ஆனால் இப்போதே அங்கு போகும்படி எவரும் உன்னை வற்புறுத்த மாட்டார்கள் என்றுதான் நம்புகின்றேன்'
'ஒருவேளை நம்மையெல்லாம் அங்கே அனுப்பிவிட்டு வடக்குவாசி விஞ்ஞானிகள் மட்டும் இங்கே முழுமையாக இருந்துவிடும் திட்டமோ என்னவோ..'
'சே! நீயும் உன் குறுக்குப் புத்தியும்..பேசாமல் அவர் சொல்வதைக் கேள்!'
'...எனவே முழுக்க நாம் அனைவரும் அங்கு சென்று குடியமர்ந்ததும் இந்தக் கிரகத்தை நமது சுற்றுலாவுக்குரிய வாசஸ்தலமாகவோ அல்லது விண்வெளி ஆராயச்சிக்குரிய மையமாகவோ மாற்றிவிடலாம் என்று நமது இணைந்த விண்ணியல் ஆய்வுக்குழுவினர் ஆலோசித்துள்ளனர்.. இதற்கான தீர்மானம் நாளை நடைபெறும் அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டிலே எடுக்கப்படும்'
விழா முடிவடைந்து டாக்டர் க்ரேலண்ட் மார்ஷ் அவர்கள் வடமுனைக்குச் செல்ல புறப்படலானார். வெளியில் நின்றிருந்த அவருடைய விமானம் வரைக்கும் நானும் மைக் ஜுனியரும் சென்றோம்.
'டாக்டர் ட்ரென்வர், சாப்பிடும்போதுஇந்தக் குட்டிப் பையன் என் பக்கத்திலிருந்து உங்க பாட்டியை மியூறியன் மெரீனாவைப்பற்றி நிறையப் சொல்லிட்டிருந்தான்... அவவை உங்களுக்கு நிறையப்பிடிக்குமோ..?'
'ஆமாம்.. அவங்க என்னோட தாத்தா பெஞ்சமின் ட்ரென்வரோட பூமிக் காதலி'
'அவங்களோட நினைவாதான் என்னோட தாத்தாவின் தாத்தா இந்தப் பெரும்பள்ளத்துக்கு 'மியூறியன் க்ரேட்டர்' என்று பெயர் வச்சார் டாக்டர்?' என்றான் மைக்.
'ரியலி..?'
'ஆமாம்.. ஹீ இஸ் வெரி க்ரேஸி என்ட் ஸென்டிமென்டல் எபௌட் ஹேர்..'
'ஆனா...இந்த இடத்துக்கு 400 அல்லது 500 வருஷங்களுக்கு முன்னால பூமியிலிருந்து வெறும் ஒற்றை டெலஸ்கோப்பில் பார்த்துக் கொண்டிருந்த நமது முன்னோர்கள் வச்சிருந்த பேர் வேறு ஒன்று என்று தெரியுமா உங்களுக்கு?'
'அப்படியா டாக்டர்..? என்ன பெயர் அது?' என்று மைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில் எனது காதில் விழுவதற்குள் திடீரென ஒரு புழுதிப்புயல் வேகமாய் வீசத்தொடங்கிவிட்டது. உடனடியாகப் புறப்பட்டால்தான் புழுதிப்புயலின் வேகம் அதிகரிப்பதற்கு முன்பு வடபகுதிக்கு செல்லமுடியும் என்று டாக்டர் மார்ஷின் விமானி கூறவே அவர் அவசரமாக கிளம்பிவிட்டார்.
அவரது விமானம் சென்ற பின்பு ஏறத்தாழ அன்றைய இரவு முழுவதும் புயல் பயங்கரமாக வீசிக் கொண்டேயிருந்தது. அப்படியொரு மணற் புயலை வாழ்நாளில் நான் அங்கு கண்டதேயில்லை. ஆனாலும் அத்தகைய ஒன்றை தாங்கக்கூடியதாகவே எங்களது சகல கட்டிடங்களும் விண்ணியல் கோபுரங்களும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் அதுபற்றி நான் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.
000
கடைசி மனிதனும் கூடப் பூமிக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் அன்று.
பூமிக்குச் செல்லும் கடைசியாகச் செல்லும் ப்ளனட் ஸ்பேஸ் கேப் வாகனம் வெளியே காத்திருந்தது. நாங்கள் புறப்பட்டுச் சென்றதும் இந்தக் கிரகம் மனிதனில்லாத ஒன்றாக மாறிவிடும் என்று நினைக்கும்போதே மனதை ஏதோ பிசைவது போலிருந்தது. ஏறக்குறைய அனைவரும் உள்ளே ஏறி அமர்ந்து விட்டிருந்தனர். நானும் மைக்கும் மட்டுமே இன்னும் ம்யுறியன் வளாகத்தினுள்ளேயே நின்று கொண்டிருந்தோம். என்னால் அத்தனை சுலபமாக அங்கிருந்து புறப்பட்டுவிட முடியவில்லை. வளாகத்தின் வெளியிலிருக்கும் அந்த மண்மேடுகளின் மீது ஓடியாடித் திரிய வேண்டும் போலிருந்தது. ஓடுவதற்கு இயலவில்லை. நடந்தேன்.. நடந்தேன் நடந்து கொண்டேயிருந்தேன். இத்தனை காலமும் எத்தனை கற்பனைகளுடன் வாழ்ந்த இந்த மண்ணைவிட்டு அத்தனை சுலபமாகப் பிரிந்து செல்ல முடியவில்லை.
'தாத்தா, இத்தோடு எத்தனை கடைசித் தடவைகள்.. இன்னுமா கடைசியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.. வாங்க போகலாம்.' பொறுழையிழந்து கூவினான் மைக் ஜுனியர்.
'மைக், உண்மையைச் சொல்! நாம் இத்தனை காலம் வாழ்ந்த இந்தக் கிரகத்தை விட்டுச் செல்வதிலே உனக்கு வருத்தமே இல்லையா?'
'என்ன கேள்வி தாத்தா இது? இல்லாமலிருக்குமா.. ஆனால் இதைவிட மனிதன் வாழ்வதற்கு வசதியான கிரகமாக பூமி இருப்பதால் இதுபற்றி என்னால் ஓரளவுதான் கவலைப்பட முடிகின்றது.'
'ஒருவேளை நீ இங்கு மீண்டும் வர நேர்ந்தால் இந்த ம்யுறியன் க்ரேட்டர்ஸ் பள்ளத்தாக்கு இப்படியே இருக்கப்போவதில்லை தெரியுமா?'
'ஆமாம் தாத்தா, முந்திய நாளிரவு வீசிய மணல்புயலின் அகோரத்தைப் பார்த்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது..'
'எல்லாமே மாறிவிடும் இடங்களின் பெயர்கள் கூட...! அதுசரி, நம்ம இடத்திற்கு முன்னைய பூமிவாசிகள் ஏதோ பெயர் வைத்திருந்ததாக டாக்டர் மார்ஷ் அன்றிரவு உன்னிடம் சொன்னாரல்லவா?
'ஆமாம். ஏதோ 'கேல் க்ரேட்டர்' என்று சொன்னதாகத்தான்தான் ஞாபகம்'
'நோ..! இது என்றைக்குமே மியூறியன் க்ரேட்டர்தான். முன்னைய பூமிவாசிகள் முட்டாள்கள்!'
'ஓகே, டேக் இட் ஈஸி தாத்தா. இந்த பள்ளத்தாக்கு முழுவதையும் நடந்தே பார்க்கப்போறீங்களா என்ன? போதும் வாங்க திரும்பவும் மணல் புயல் வந்துவிடும் சாத்தியமிருக்கிறதாம்..'
'சரி போகலாம் போய் ஏறு. நான் பின்னால் வருகின்றேன்!' என்றேன் மனமில்லாமல்.
'இனி போக வேண்டியதுதான்' என்று முணுமுணுத்தபடி நான் நின்றுகொண்டிருந்த மணல் மேட்டிலிருந்து இறங்கி வந்தேன். அப்போது காலிலே ஏதோ ஒன்று இடறவே நின்று குனிந்து பார்த்தேன். முதலில் அது ஒரு நீண்ட உலோகத்தாலான தட்டுப்போலத்தான் இருந்தது. காலால் சற்றுக் கிளறியதும் அதன் பெரும்பகுத மணலில் புதையுண்டு கிடக்க மேற்புறம் சூரியக்கிரணங்களில் பளபளத்தது.
'ஹேய் மைக்! இங்கே வா ஒருநிமிஷம்!' அதனருகே முழங்காலில்
மண்டியிட்டு அமர்ந்து நன்கு உற்றுப் பார்த்தேன்.
'ஏன் தாத்தா? உங்க மியூறியன் பாட்டியோட பெரும்பள்ளத்தின் மண்ணைப் பூமிக்குக் கொண்டு போய் வணங்கப்போகிறீங்களா?' கேலி பேசியபடி திரும்பி வந்தவன் என்னருகே நின்று குனிந்து பார்த்தான். அவன் விழிகளும் ஆச்சரியத்தில் அகல இருவரும் புதையுண்டு கிடந்த அந்த உலோகத்தட்டின் மீதிருந்த மணலைக் கைகளால் வேக வேகமாக விலக்கிப் பார்த்தபோது அதிலே...
'க்-யூ-ரி-யோ-சி-ட்-டி ரோவர் கி.பி. 2012 ' என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
-மூதூர் மொகமட் ராபி
(2012.09.09)
(2012.09.09)