இதுவரையில் ஒருபோதும் பார்த்திராத ஓர் அழகான இளம்பெண் தனது இனிய குரலில், 'எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்! எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ்!.... எக்ஸ்க்யுஸ்மீ...' என்று இடைவிடாமல் தொடர்ந்து சொல்லியவாறு வெகுநெருக்கமாக வந்து அதரம் குவித்து..
'டேய் யாருடையோ போன் அடிக்குது. அதை எடுத்துத் தொலைங்களேண்டா! ஞாயித்துக்கிழமையிலயும்! நிம்மதியா தூங்க விட மாட்டாணுகள். சே!' என்று யாரோ எரிச்சலோடு அதட்டினார்கள்.
உடனே அந்த அழகி சட்டென்று பின்வாங்கி உடைந்து உதிர அந்த இடத்தில் ஒட்டடைபிடித்த ஓட்டுக்கூரையும் சோகையாய் சுழன்று கொண்டிருந்த ஒரு பழைய மின்விசிறியும் தெரிந்தது.
சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் திலீப். இரவு வெகுநேரம்வரை விழித்திருந்து வரைபடங்களைத் தயாரித்து முடித்து விட்டுத் தூங்கச் சென்றதால் கண்கள் இரண்டும் தீயைக் கக்கின.
'எக்ஸ்க்யூஸ்மீ ஸேர்.. யூ ஹேவ் டூ அட்டெண்ட்...' நச்சரித்த செல்போனை தடவித் தேடியெடுத்தான். 'ரிங்டோன் என்ன ஓட்டோமட்டிக்கா மாறிட்டுதா?' என்று யோசித்தவாறு அதன் வயிற்றிலே ஒரு அழுத்து அழுத்திவிட்டுக் காதிலே வைத்தான்.
'ஹலோ.. யாரு?'
'ஆ! தம்பீ நாந்தான் தீசன்! தீசன் குரூஸ் அண்ணண் பேசுறேன் ஞாபகமிருக்கா.. என்னை..?' என்றது மறுமுனை.
'ஆங்...! சொல்லுங்க!' என்றான் திலீப் தூக்கக் கலக்கத்தில் யாரென்று புரியாமலே.
'ஜீவநதியில இந்த மாதம் வந்த உங்கட கதையை படிச்சன் தம்பீ.. மிச்சம் நல்லாருந்தது.. நல்லா எழுதியிருக்கிறீங்க அதுல என்ன விசேசமென்டா...' என்று தொடங்கி ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார் மறுமுனை. முதலில் திலீப்புக்கு எதுவுமே புரியவில்லை. திடீரென ஒரு சந்தேகம் பொறிதட்டவே பேசிக்கொண்டிருந்த செல்போனை சட்டெனத் திருப்பிப் பார்த்தான். அப்போதுதான் விடயமே புரிந்தது.
அது அவனுடைய போன் அல்ல.
ஆம். அது அவனது அறை நண்பன் முஸம்மிலுடைய போன். இருவருடைய செல்போன்களும் பார்வைக்கு ஒன்றுபோலவே இருப்பவை. இரவு திலீப்புக்கு அருகிலேதான் படுத்திருந்தான் முஸம்மில். இப்போது படுக்கையில் அவனைக் காணவில்லை.
திலீப்பும் முஸம்மிலும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நண்பர்களானது என்னவோ வேலைநிமித்தம் இங்கே நுவரெலியாவுக்கு வந்த பின்புதான். ஆம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீதி அபிவிருத்திசபையில் தொழினுட்ப உத்தியோத்தராக நியமனம் கிடைத்து நுவரெலியாவுக்கு வந்திருந்த திலீப் எங்கு தங்குவது என்று புரியாமல் தடுமாறி நின்றபோது தனது குவார்ட்டஸில் அடைக்கலம் தந்தவன் முஸம்மில்தான். அவன் ஏற்கனவே இங்குள்ள ஒரு தமிழ் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக கற்பித்துக் கொண்டிருந்தான்.
முஸம்மில் ஓர் ஆசிரியர் மட்டுமல்லாது வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளனும் கூட. திலீப்பும் அவனுடைய வாசகர்களிலே ஒருவன்தான். முஸம்மிலின் விஞ்ஞானபூர்வமான எழுத்தாற்றல் மற்றும் வித்தியாசமான விடயங்களை எழுத்தில் முயன்று பார்க்கும் ஆர்வம் ஆகியவற்றை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும் முஸம்மிலின் சில இலக்கியக் கொள்கைகள் திலீப்பின் ஆன்மீக நம்பிக்கைகளுடன் ஒத்துப்போவதில்லை. இதனால் அவை பற்றி முஸம்மிலை கிண்டலடித்த வண்ணமே இருப்பது திலீப்பின் வழமை. இதனால் அவர்களிடையே அவ்வப்போது சிறு முரண்பாடுகளும் விவாதங்களும் எழுவதுண்டு. ஆனால் இவை எவையுமே அவர்கள் இருவரின் நட்புக்கு இடைஞ்சலாக இதுவரை இருந்ததில்லை என்றால் நம்புவீர்களா..?
முஸம்மிலின் எழுத்தாற்றலை திலீப் எவ்வளவுதான் கிண்டலடித்தாலும் அவற்றை அவன் விளையாட்டாகவே எடுத்துக்கொள்வான். மிஞ்சிப்போனால் அவனும் திலீப்புக்கு ஈடுகொடுத்து பதில் நையாண்டி புரிவானே தவிர ஒருபோதும் கோபித்துக் கொண்டதேயில்லை. அதுதான் முஸம்மிலிடம் திலீப்புக்கு மிகவும் பிடித்த குணமே.
எதிர்ச்சுவரில் நேரம் காலை 7:20 ஆகிவிட்டிருந்தது. இத்தனை சுவாரஸ்யமாக முஸம்மிலின் கதை ஒன்றைப் பற்றி போனிலே மூச்சுவிடாமல் பாராட்டிக்கொண்டிருக்கும் நபரை இடைமறித்து, 'அண்ணே, நான் முஸம்மில் இல்லை திலீப். அவனோட ஒரே அறையில் வாடகைக்குத் தங்கியிருக்கிற நண்பன்' என்று எப்படிச் சொல்வது..? என்று யோசித்தான் திலீப்
ஆனால் அவரோ அவனது தவிப்பை அறியாமல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்.
'...உங்களுக்கிட்ட அந்த தைரியமும் நேர்மையுமிருக்கு தம்பீ. இஞ்சை எழுதிற ஆக்கள் நிறையப்பேர் அப்படியில்ல.. தெரியுமா? நீங்க ஒரு முஸ்லிமாக இருந்தாலும்.. தம்பீ கேக்கிறீங்களா...?'
'ஆங்.. கேக்கிறன் நீங்க சொல்லுங்கண்ண..' என்று சமாளித்து வைத்தான். அவர் சொல்லிக் கொண்டே போக 'முஸம்மில் எங்கே போனான்.. இவரை எப்படிச் சமாளிப்பது..?' என்பதிலேயே திலீப்பின் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. இடையிலே போனைக் கட் செய்வோமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அறைவாசலிலே நிழலாடியது.
முஸம்மில்தான் கையிலே இரு டீ கப்களுடன் வந்தான்.
'ஆ! திலீப் நீ எழும்பிட்டியாடா? இந்தா டீ குடி! என்னடா இது என்ட போன்ல பேசிட்டிருக்கிறா..யாருடா அது?' என்று சொல்லிக் கொண்டே வந்தவனைப் பேசவிடாமல் வாயில் விரலைவைத்து மௌனமாக்கினான். பின்பு அவனிடம் போனைக் கொடுத்து விட்டு, 'போங்கடா நீங்களும் உங்கட கதைகளும்' என்று மனதுக்குள் திட்டிவிட்டு டீயை உறிஞ்சினான் திலீப். போனோடு வெளியிலே சென்று சிறிது நேரத்தின் பின்பு மீண்டும் உள்ளே வந்தான் முஸம்மில்.
'என்ன பேசி முடிச்சிட்டியா..? அதுசரி முஸம்மில், அந்தாள் என்ன உன்னைப் போய் இப்பிடிப் பாராட்டிக்கிட்டேயிருக்கிறான்..? யாரு அது?'
' ஏன் உனக்குப் பொறுக்காதே. டேய், அவரு நல்ல திறமையான ஒரு எழுத்தாளர்டா. அதோட நல்ல விமர்சகரும் கூட. ஆனா எளிமையானவர். பிரபல்யத்தையே விரும்பாதவர்டா. நோட் த பொயிண்ட், மனிசன் நல்லா எழுதிறவங்களை மட்டும் வஞ்சகமில்லாம பாராட்டும்...'
'அதுதான்டா முஸம்மில் நானும் யோசிக்கிறேன்.. உன்னைப் போய் ஏன் பாராட்டினாரு என்று..?'
'டேய் திலீப், அவரு சாதாரண ஆள் இல்லடா. அவரைப்பற்றி நீ படித்தோ அல்லது நேரில சந்தித்தோ அறிந்தால்தான் அவருரோட பாராட்டு எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்றதை புரிஞ்சு கொள்வாய்..'
'அப்படியெண்டா பாவம் அவரு உன்னோட எழுத்துகளை சரியாப் படிக்கலையோ என்னவோ?'
'அடிவாங்கப்போறடா நீ.. உனக்கு என்ட எழுத்தென்டா ஒரு நக்கல் என்ன..? இருந்து பாருடா ஒரு நாளைக்கு நீயே என்ட சிறுகதைப் புத்தகங்களையெல்லாம் தேடி அலையப்போறா'
'எதுக்குடா பழைய பேப்பருக்கா..?'
உடனே அவன் பொய்க்கோபத்தோடு துரத்தி வர டீக்கப்பை அப்படியே வைத்துவிட்டு எழுந்து பாத்ரூமுக்குள் ஓடிப்போய் கதவைச் சாத்திக்கொண்ட திலீப் உள்ளேயிருந்து நக்கலாகச் சிரித்தான். கூடவே இருந்த அறை நண்பர்களும் அவர்களது வேடிக்கை விளையாட்டை ரசித்தார்கள்.
'மவனே திலீப், அதுக்குள்ளேயே கிட. வெளியே வந்திடாத. என்ட திறமையைப் பத்தி நீயே ஒரு நாளைக்கு வந்து எனக்கிட்டச் சொல்ல வைக்காட்டி நான் முஸம்மில் இல்லடா'
'அப்படியா..? எதற்கும் வேற நல்ல பேர் ஒண்டு ரெடியா வச்சுக்க!'
'சரி, சரி கெதியா வெளியே வாடா. நான் குளிச்சிட்டு ஊருக்கு போகணும்'
இவ்வாறு வேடிக்கைப் பேச்சுகளோடு ஆரம்பித்த அந்த விடுமுறை நாளின் காலைப்பொழுது முஸம்மில் தவணை விடுமுறைக்கு ஊருக்கும் கிளம்புவதோடு முடிவடைந்தது. அவன் புறப்பட்டுப்போகும்போது எழுத்தாளர் தீசன் குரூஸ் எழுதிய சில இலக்கிய நூல்களை திலீப்புக்கு வாசிக்கும்படி தந்துவிட்டுத்தான் சென்றான்.
000
முஸம்மில் ஊருக்குச் சென்று சில நாட்கள் கழிந்திருந்தன.
ஒருநாள் வேலைத்தளம் ஒன்றைப் பார்வையிடுவதற்காக தலவாக்கலை வரையில் திலீப் போய் வரவேண்டியிருந்தது. இப்படியான தூரப்பயணங்களுக்கு அலுவலக பிக்அப் வாகனத்தை எடுத்துக்கொண்டு போவதுதான் அவனது வழமை. ஆனால் அன்றைய தினம் கண்டியிலிருக்கும் பிரதான அலுவலகத்திலிருந்து சீப்ஃ எஞ்சினியர் நுவரெலியாவுக்கு வரவேண்டியிருந்ததால் வாகனம் அங்கு சென்றிருந்தது. பஸ்ஸிலே தலவாக்கலைக்குச் சென்றுவரத் தாமதமாகும் என்பதால் வேறுவழியின்றி தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் திலீப்.
நுவரெலியா ஆர்டீஏ அலுவலகத்திற்கு திலீப் வந்து சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் பஸ்ஸிலும் ரயிலிலும் அலுவலக பிக்அப் வாகனத்திலும் ஹற்றன், கண்டி, வெலிமடை, பதுளை என்று எத்தனையோ ஊர்களுக்கு எவ்வளவோ பயணங்கள்.. ஆனால் மலைப்பிரதேசத்தில் பைக்கில் இவ்வளவு தூரம் செல்லும் முதல் பயணம் அன்றுதான் என்பதால் அது அவனுக்கு வித்தியாசமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது.
இதமான குளிர்காற்று முகத்தில் மோதிக்கொண்டிருக்க துடைத்துவிட்டது போன்ற நீலவானப்பின்னணியில் பச்சை மலைகள் முழுவதும் நிறைந்திருந்த தேயிலைத் தோட்டங்களை ஊடுருவிக்கொண்டு பாம்பாய் நெளியும் நெடுஞ்சாலையினூடாக
'வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ...'
என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை முணுமுணுத்தவாறு சிட்டாய் பறந்து கொண்டிருந்தான். வழியில் அங்காங்கே முதுகிலே கூடைகளோடு கொழுந்துபறிக்கும் பெண்கள் வரிசையாகத் தென்பட்டார்கள்.
நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ அரைமணி நேரத்தில் லிந்துலையை தாண்டினான். அங்கு ஒரு கொண்டை ஊசி வளைவிலே அவன் திரும்பிய போது வீதியின் ஓரத்திலே ஒரு முதியவர் கையிலே ஹெல்மெட் ஒன்றுடன் தனியாக நின்றிருந்தார். அவரைத் தாண்டிச் செல்கையில் திலீப்பின் முகத்தை அவர் உற்றுப் பார்த்து கைகளை அசைத்தது போல அவனுக்குத் தோன்றியது. சிறிது தூரம் சென்ற பின்புதான் ஏதோ நினைத்தவன் சட்டென பைக்கை ஓரமாக நிறுத்தினான்.
உடனே அவனை நோக்கி அவர் ஓடிவருவதை பின்பார்வைக் கண்ணாடியில் கண்டான். அவரது வேகத்தைப் பார்க்கும்போது ஏதும் அவசரமான விடயம் போலிருந்தது.
'தம்பி, அவசரமாவோ போறீங்கள்..? நான் கொஞ்சம் தலவாக்கல வரைக்கும் வரேலுமா?'
அருகில் வந்ததும் அவனுக்கு இதற்கு முன்பு அவரை எங்கோ பார்த்திருப்பது போலத் தோன்றியது. அவனது பயணம் சிறிது அவசரமாக இருந்தாலும் ஏனோ அவருக்கு உதவிசெய்ய வேண்டும் போலிருந்தது.
'சரி ஏறுங்க ஐயா! ஆனா கொஞ்சம் கவனமாகப் பிடிச்சிருங்க.. நான் கொஞ்சம் பாஸ்ட்டாக ஓடுவன்'.
'ஆ! சரி, தம்பி நீங்க போற மாதிரி போங்கோ!' என்று பின்புறம் தொற்றிக்கொண்டார் அவர்.
'என்ன ஐயா ஏதும் அவசரப் பயணமா..?'
'இல்ல ஒரு வேலையா மகளின்ட மாப்பிள்ளையோட தலவாக்கலைக்கு பைக்ல வந்தேன். வழியில பைக் பழுதாகிட்டுது. 'ஒரு கராஜ்ல பைக்கை செய்து எடுத்திட்டு வாரேன் நீங்க பஸ்ல போய் முன்னால இறங்குங்க' என்டு சொல்லிட்டாரு.. மிச்ச நேரமா நிக்கிறன் பஸ்ஸே இல்ல அதுதான்...'
அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் போனதும் ஓரிடத்தில் சட்டென மழைபிடித்துக் கொண்டது. உடனே பாதையோரத்திலிருந்த ஒரு சிறிய தேனீர்க் கடையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி கடையினுள்ளே அமர்ந்தனர்.
'இரண்டு டீ போடுங்க!'
'தம்பீ ஒன்றுக்கு சீனி போட வேண்டாம்..!'
'என்ன... டயபட்டீஸ் இருக்கு போல' என்று கேட்டான் சிறிது புன்னகைத்தவாறு.
'வயசாகிட்டுதே.. கவலைகளும் அதிகம் என்ன செய்வது? தம்பி எங்க வேலை செய்கிறீங்க?'
அவன் சொன்னான். அதன் பிறகு தொடர்ந்து அவர்களது உரையாடலில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர் திருகோணமலையில் ஒரு பாடசாலை அதிபராக இருந்து பின்னர் ஓய்வுபெற்றவராம். மனைவியின் திடீர் மறைவின் பின்பு தற்போது இடம்பெயர்ந்து ராகலையில் வசிக்கும் தனது மகள் ஒருவருடன் தங்கியிருக்கின்றாராம். இப்போது பத்திரிகை வாசிப்பது, ஆக்கங்கள் எழுதுவது, மகளின் குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது என்று பொழுதைக் கழிப்பதாகவும் சொன்னார்.
'பேப்பருக்கு எழுதிறது என்று சொன்னீங்கதானே.. ஐயா. என்ன எழுதுவீங்க செய்தியா..?'
'இல்ல தம்பீ கட்டுரைகள், கதைகள்.. சில நேரம் கவிதைகளும் எழுதிறதுதான். இப்பவெல்லாம் என்னுடைய எழுத்து மூலம்தான் மற்றவங்களுக்கும் ஓரளவு என்னைத் தெரிஞ்சிருக்கு. முந்தி பாடசாலை அதிபராக வேலை செய்த காலங்கள்ல அதுக்கெல்லாம் நேரமிருந்ததில்ல.. ஒபிஸ் ஸ்கூல் என்டு காலம் ஓடிட்டுது. இப்பதான் கொஞ்சம் நேரம் கிடைக்குது'
'அப்படியென்டால் உங்கட ஸ்கூல் அனுபவங்களைத்தான் கூடுதலா எழுதுவீங்க போல'
'அப்படியில்ல தம்பி.. இன்னமும் நம்மட சனங்கள் படுகிற கஸ்டங்களைத்தான் நான் எழுதிறன்.. என்ட சொந்த கஸ்டத்தை எழுதி என்ன பலன்?'
'ஓ அப்படியா? அப்ப நீங்க சமூக நோக்கமுள்ள எழுத்தாளர் போல..' இதைச் சொல்லும்போது ஏனோ திலீப்புக்கு முஸம்மிலின் நினைவு வந்தது. அவனைப்பற்றியும் அவரிடம் பேசலாமென்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு விடயம் நடந்தது.
'ஒருவன் எழுதினாலே சமூகநோக்கம்தான் அதில இருக்க வேணும் என்று நினைப்பவன்தான் தம்பி ஒரு உண்மையான படைப்பாளி!' என்று குரலை சட்டென உயர்த்தி சற்றுக் காட்டமாக கூறினார்.
திலீப் சிறிது பயந்து போனான். கடைக்குள் அமர்ந்திருந்த சிலர் சட்டென அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
இதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 'ஏன் இவர் இப்படி திடீரென உணர்ச்சி வசப்பட்டார். இப்போது என்ன செய்யலாம்..?' என்று யோசித்தவாறே வெளியே பார்த்தான். இலக்கியத்துறையில் திலீப்புக்கு ஓரளவு ஈடுபாடு இருந்தபோதிலும் அவர் இவ்வளவு ஸீரியஸானது சிறிது வேடிக்கையாக இருந்தது.
'சரி ஐயா, டீயைக்குடிங்க ஆறிடப்போகுது'
மழை மேலும் பலமாகப் பெய்து கொண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. இப்போதைக்கு பயணத்தை தொடர முடியாது என்பதால் டீயை உறிஞ்சும் அவரையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் திலீப்.
'எக்ஸ்க்யூஸ்மீ... உங்களுக்கு ப்ரசரும் இருக்குதா ஐயா...?'
அவர் உடனே சிரித்து விட்டார். 'ஏன் தம்பி... நான் சத்தமா கத்திட்டேனா? இப்பல்லாம் எழுதிற சிலபேரையும் அவங்கட எழுத்துகளையும் பார்க்கேக்க ஹை ப்ரசரும் வந்திரும் போலத்தான் இருக்குது.. ஒரு சமூகப்பற்று கிடையாது.. தமிழறிவு போதாது.. என்னவோ எல்லாரும் ஆடுறாங்கண்டு வயித்து வலிக்காரனும் ஆடினானாம் என்கிற மாதிரி உப்பு சப்பில்லாம எழுதுதுகள்..'
சொல்லும்போதே அவரது கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்பியதைப் பார்த்தான் அவன்.
'அது வந்து உலகத்தில எல்லாமே மாறுகிறதுதானே ஐயா. அதுபோலத்தான் இதுவும். அதுக்கு நாங்க என்னதான் பண்ணலாம்? இதுக்காக நீங்க உங்களை ஏன் ஐயா...'
'தம்பீ உங்களுக்கு சீத்தலைச் சாத்தனார் என்டாத் தெரியுமே...?' என்று கேட்டார் திடீரென்று. அவனுக்கு திக்கென்றது.
'ஆங்.. ம்ம்! ஒரு தமிழ்ப்புலவர்தானே...?' என்றான் குத்துமதிப்பாக.
'அதுசரி, அவருக்கு அந்தப் பெயர் ஏன் வந்ததென்று தெரியுமே...?'
'வேற சிகரட் ஏதும் வேணுமா அண்ண..?' என்று கேட்ட கடைப்பையனை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டான் திலீப்.
'இல்ல போதும்!' என்று கடைப்பையனிடம் அவன் ஐநூறு ரூபா ஒன்றை நீட்ட அவனது கையை தட்டி விட்டு சட்டென எழுந்துவிட்டார் அந்த மனிதர். விரைந்து போய் கல்லாவில் இருந்தவரிடம் தனது சட்டைப்பையிலிருந்து காசைக் கொடுத்து விட்டு வந்து மீண்டும் அமர்ந்தார் அவர்.
'அதுசரி, எப்படி ஐயா இந்த வயதிலும் இவ்வளவு உசாரா இருக்கிறீங்க..?'
'அதை பிறகு சொல்றன், யாராவது தமிழில எழுதும்போது பிழைவிட்டா தன்ட தலையிலேயே குட்டிக் கொள்வாராம். அப்படிக் குட்டிக்குட்டி வந்த காயங்களால் தலைமுழுதும் சீழ்பிடித்துத்தான் செத்தாராம்..'
'அப்பிடியா..?'
'அன்டைக்கு பாருங்க ஒருவன் இன்டநெட்டில இப்படி எழுதியிருக்கிறான்..
'தலைவரின் அணுதாபச் செய்தி கேட்டு தொண்டர்கல் மேளும் கவளையடைந்தனர்' என்று. சிறுகதைகள் என்று பலபேர் எழுதிறாங்கள். அம்புலிமாமா கதைகள் போல இருக்கு. வாக்கியப் பந்தியை உடைத்து படிக்கட்டுகளாக்கி கவிதை எழுதிறாங்க சே!'
'...........'
'அப்பிடித்தான் இப்ப உள்ள சிலபேர் பேப்பர்லயும் புத்தகங்கள்லயும் பெயர் வந்தால் போதும் வெறும் புகழுக்காக பொறுப்பில்லாம எழுதிறதை வாசிக்கேக்க ஐயோ.. இதயம் வெடிச்சி செத்தாலென்ன என்று தோணுது தம்பீ!'
'சரி டென்ஸனாகாதீங்க பெரிசு. நீங்க இப்படியானவங்கள்ற எழுத்துகளைப் படிக்காதீங்க..'
'ஆ.. அது எப்படி முடியும் தம்பீ..? நம்மவங்க எழுத்துகள் எல்லாத்தையும் வாசிக்க வாசிக்கத்தானே இன்றைய இலக்கியப் போக்கு புரியும். அது சிறுபராயத்தில இருந்து வருகிற பலவருசப் பழக்கமல்லவா? இவ்வளவு காலமும் எப்படியோ ரசிச்சும் சகிச்சும் காலத்தை ஓட்டிட்டேன்.. ஆனால் இப்ப எழுதிறதுகள்ற தரத்தைப் பார்த்தா தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கு...' என்று மீண்டும் பல்லை நறநறத்தார்.
அவரது கோபத்தைப் பார்த்து மனிதருக்கு அங்கேயே ஏதும் ஆகிவிடுமோ என்று பயந்தான் திலீப்.
'என்னைக்காவது இந்தக் கிழவன் திடீர்னு செத்தா அது ஒரு மோசமான எழுத்தைப் படிச்சதினாலதான் இருக்கும்..' என்று கூறிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார்.
'சரி, வாங்க ஐயா! மழை விட்டுட்டுது போகலாம்!' என்று அவரை அழைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தலவாக்கலையில் அவர் செல்ல வேண்டிய தனியார் வங்கி வந்ததும் இறங்கிக்கொண்டார். திலீப்புக்கு அவரது நன்றியைத் தெரிவித்துவிட்டு படிகளிலே ஏறத் தொடங்கினார். அப்போதுதான் அவனுக்கு சட்டென ஏதோ ஞாபகம் வந்து அவரிடம் கேட்டான்.
'ஐயா உங்க பேரென்ன...?'
ஆனால் அவருக்கு காதில் விழவில்லை போலும்; அவனைப் பார்த்து மீண்டும் முறுவலித்துவிட்டு வேகமாக படிகளிலே உயர்ந்து மறைந்து விட்டார்.
'சே! இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தும் அவருடைய பேரைக்கேட்காமல் போனோமே' என்று நொந்தான். ஆனாலும் அவசரமாக போக வேண்டியிருந்ததால் சுணங்கவில்லை அவன். ஏனோ அந்த மனிதரை நினைக்கப் பாவமாக இருந்தது திலீப்புக்கு. தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் அவருக்கிருந்த பிடிவாதமான அக்கறையை வியந்துகொண்டே தனது அவசரப் பயணத்தைத் தொடர்ந்தான்.
000
இது நடந்து ஒரு மாதம் கழிந்திருந்தது.
ஒருநாள் சனிக்கிழமை காலை 11 மணியிருக்கும். அன்றைய வேலைத்தலத்திலிருந்து மோட்டார் சைக்கிளிலே தனது அலுவலகத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தான் திலீப். விக்டோரியா பூங்காவைக் கடந்து முதல் சுற்றுவட்டத்தை நெருங்கியபோது முஸம்மிலிடமிருந்து ஒரு போன்கோல் வந்தது. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தினேன்.
'திலீப், நீ இப்ப எங்க இருக்கிறா..?'
'இங்க டவுண்லதான் நிக்கிறன், ஏன்டா?'
'கொஞ்சம் நம்ம றூம் வரைக்கும் வந்திட்டுப்போ!'
'நீ ஸ்கூலுக்குப் போகல்லயா..?'
'இல்ல போய் ஹாப்ஃடே லீவு போட்டு வந்திட்டேன். நீ நேர்ல வாயேன் சொல்றேன்'
உடனே பைக்கைத் திருப்பிக்கொண்டு எங்கள் வாடகை வீட்டுக்குச் விரைந்தான் திலீப். வீட்டு வாசலிலேயே பதட்டமாக நின்றிருந்தான் முஸம்மில். திலீப்பைப் பார்த்ததும், 'திலீப், மத்தியானம் நீ ஃப்ரீயா...?' என்று கேட்டான்
'ஏன் இப்பவே ப்ரீதான்.. என்ன விசயம்?'
'ஒருக்கா ராகலை வரைக்கும் பைக்ல போய் வரணும். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் காலமாகிட்டார்டா திலீப்!'
'ஓ! யாரு உன்ட ஸ்கூல் பார்ட்டியா...?'
'இல்ல இவரு வேற.. தீசன் குரூஸ் என்று ஒரு எழுத்தாளர். யேய் திலீப் மறந்திட்டியா..நீ? அன்டைக்கு ஒருநாள் என்ட போன்ல உன்னோட பேசினாரே ஞாபகமிருக்கா.. அவர்ட புக்ஸ் தந்தேனேடா வாசிக்க. அவருதான்டா பாவம் நல்ல மனிசன் மச்சான்'
'ஓ அவரா! முஸம்மில் அவரை நானும் பாத்திருக்கண்டா'
'இல்லடா.. அவரை உனக்குத் தெரியாது'
'இல்லடா மச்சான் எனக்கு அவரைத் தெரியுமென்டுதான் நினைக்கிறேன்! நான் சொல்றவர்தானா அவரெண்டு சொல் பார்ப்போம்' என்று விட்டு முஸம்மில் பாடசாலை விடுமுறைக்கு ஊருக்குப்போன மறுவாரம் தலவாக்கலை போகும் வழியில் தான் சந்தித்த மனிதரின் கதையைக் கூறி முடித்தான் திலீப்.
'ஓம்டா அவர்தாண்டா... அவரேதான். எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் தீசன் குரூஸ்! அவருக்குத்தான் நீ பைக்ல லிப்ட் குடுத்திருக்கிறாய்' என்று உறுதிப்படுத்தினான் முஸம்மில்.
திலீப்புக்கும் கவலையாகவே இருந்தது. தமிழ் இலக்கியத்தையும் அது நேர்த்தியாக படைக்கப்படவேண்டும் என்றும் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார் என்பதையும் அவனுக்குச் சொன்னான்.
'ஓம் திலீப், ஒரு நல்ல திறமையான எழுத்தாளர்டா. ஆனா பிரபல்யத்தை விரும்பாதவரு. மனிசன் நல்லா எழுதிறவங்களை வஞ்சகமில்லாம பாராட்டும். அதே நேரம் பொறுப்பில்லாம யாராவது எழுதினா கோபம் வந்து கிழிகிழியென்டு கிழிச்சிடுவாருடா.'
'ஓம்டா.. நீ தந்த அவரோட புக்ஸ் எல்லாம் படிச்சேன்டா நான். அவருட பேச்சைப் பார்த்தாலே தெரியுதே. அவரு உண்மையில நல்ல இலக்கிவாதிதான். மோசமான எழுத்துகளை வாசிச்சா தான் உடனே செத்துப் போயிடுவேன் என்றுகூட என்னிடம் அன்டைக்குச் சொல்லிட்டிருந்தார்டா..'
'உண்மையாவாடா..? பாவம், அவருக்குத்தான் எவ்வளவு தமிழ் பற்று பாத்தியா?'
'சரி, எங்க சீஃப் எஞ்சினியர் கண்டிக்குப் போயிட்டார். இனி இரவு லேட்டாதான் வருவார். இப்பவே வா வெளிக்கிடுவோம். பின்னேரம் மழை வரும். ஜேர்கின் எடுத்துக்கோ..'
திலீப்பும் முஸம்மிலும் ராகலையை அடைந்தபோது மதியம் கடந்து விட்டிருந்தது. ராகலை தமிழ் கலவன் பாடசாலையைத் தாண்டியபோது வழிமுழுவதும் 'இலக்கிய மணி எழுத்தாளர் தீசன் குரூஸ்; அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி' என்று சின்னதும் பெரியதுமாக ஏராளமான வெண்ணிறப் பதாகைகள் அவர்களை வரவேற்றன. மரணவீட்டு வாலிலே பெரிய டென்ட்ற் கட்டப்பட்டிருக்க ஏராளமானோர் குழுமியிருந்தனர். அவர்கள் போகும்போதே அந்த எழுத்தாளரின் பூதவுடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
இருவரும் தாமதிக்காது வீட்டினுள் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதும் பிரேதப் பெட்டியை முறையாக மூடி சகல சடங்குகளையும் முடித்து வெளியிலெடுத்தார்கள். உள்வீட்டிலிருந்து எழுந்த அழுகைச் சத்தத்தோடு வெடியோசைகளும் கிறிஸ்தவ மதப்பாடல்களும் ஒலிக்க ஏறத்தாழ அரைகிலோ மீற்றர் நீளமான ஊர்வலத்தில் தீசன் குரூஸ் அவர்களின் பூதவுடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உள்ளுர் தேவாலய மயானத்தில் இறுதிக் கிரியைகள் முழுவதும் நிறைவேறியதும் திலீப்பும் முஸம்மிலும் மீண்டும் அவரது வீட்டிற்குச்சென்றனர். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு இறுதியாக விடைபெற்று மீண்டும் நுவரெலியாவுக்குத் திரும்பினார்கள்.
000
தீசன் குரூஸ் அவர்கள் மறைந்து சில வாரங்கள் கடந்திருந்தன.
ஒருநாள் முஸம்மில் பாடசாலையிலிருந்து நேரே திலீப்பின் அலுவலகத்திற்கு வந்திருந்தான். அவனது கையில் இரண்டு மதிய உணவுப்பொதிகளும் ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகையும் இருந்தன.
'என்னடா சாப்பாட்டை கொண்டே வந்திட்டியா? சரி வா கெண்டீன்ல போய் சாப்பிடலாம்' என்று இருக்கையிலிருந்து எழுவதற்கு முயன்ற திலீப்பைப் பிடித்து அமர்த்தினான் முஸம்மில்.
'திலீப் இதைப் படிச்சுப்பாரு..!'
'என்ன புதிசா உன்ட கதை ஏதும் வந்திருக்கா..?' என்று கேட்டான்.
'உனக்குத்தான் என்ட கதைகள் பிடிக்காதே.. இது என்னுடைய எழுத்துத் திறமையின் அருமையை நீ அறிவதற்கு ஒரு ஆதாரம்.. முதல்ல படிச்சுப் பாரு'
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான் திலீப். அதிலே 'அண்மையில் மறைந்த எழுத்தாளர் இலக்கியமணி தீசன் குரூஸ் அவர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்' என்று ஒரு முழுப்பக்கம் வெளிவந்திருந்தது. அதிலே அவரது படமும் அவரைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்புகளும் பிரசுரமாகியிருந்தன.
'ஆர்டிக்கிள் பெரிசா இருக்கேடா.. சாப்பிட்டு வந்து படிப்போமே..'
'ஓகே.. ஆனா இப்ப இதை மட்டும் பார் போதும்' என்று அவன் காட்டிய மூலையில் மரணச் சடங்கில் அவர்கள் பார்த்த எழுத்தாளர் தீசன் குரூஸின் மகளின் படமும் பேட்டியும் வெளியாகியிருந்தது.. அது ஒரு நீண்ட பேட்டி.
'அவட முழுப்பேட்டியையும் பிறகு படிக்கலாம். இந்த கடைசிப் பகுதியை மட்டும் வாசிச்சுப்பாரு இப்ப!' என்று அவன் விரல்கள் காட்டிய இடத்திலே...
கேள்வி: உங்கள் தந்தையாரின் வாசிப்புப் பற்றி...?
பதில்: எனது தந்தை தீசன் குரூஸ் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை வாசித்துக் கொண்டுதான் இருந்தவர். ஆம், தனது ஓய்வுக் கதிரையிலே அமர்ந்து ஒரு சிறுகதைத் தொகுதி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவர் திடீரென மாரடைப்பினால் இறந்தார். அந்த நூலை விரல்களால் பற்றியபடியேதான் அவரது ஆவி பிரிந்து கர்த்தரிடம் போய்ச் சேர்ந்தது.
கேள்வி: அப்படியா? அவர் வாசித்த அந்த கடைசி நூல் எது என்பது பற்றிக் கூறமுடியுமா?
பதில்: ஆம்! அது ஒரு சிறுகதைத் தொகுதி. அதை முஸம்மில் எனும் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்ததாக ஞாபகம்...'
என்று தொடர்ந்தது அந்த நீண்ட பேட்டி.
-மூதூர் மொகமட் ராபி
(2013.04.23)