மூதூர், இலங்கை வரலாற்றில் பல விடயங்களுக்காக எப்போதும் பிரபல்யமாகவே இருந்து வந்துள்ளது. போத்துக்கேயரின் ஆட்சியினைத் தொடர்ந்து ஒல்லாந்தர்கள் இலங்கைத் தீவின் கரையோரங்களைக் கைப்பற்றியிருந்த காலத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆன் (Ann) எனும் கப்பலின் மாலுமி ரொபர்ட் நொக்சும் (Robert Knox ) அவனது சகாக்களும் அப்போது கொட்டியாரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மூதூரில் வந்திறங்கினார்கள். அன்றைய கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னனால் அவர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டதும் அங்கு 19 ஆண்டுகள் திறந்தவெளிக் கைதிகளாய் அலைந்து திரிந்தபின் அந்த ஆங்கிலேய மாலுமியின் மகன் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தனது அனுபவங்களை ஓர் நூலாக வெளியிட்டதும் தனிக்கதை.
பின்னர் ஆங்கிலேயர் இலங்கைத் தீவைக் கைப்பற்றியவுடன் தமது வருகைக்கு ஒரு வகையில் முன்னோடியாகவிருந்த அந்த மாலுமி Robert Knox நினைவாக அவர் கைதுசெய்யப்பட்ட இடத்திலிருந்த புளியமரத்தை ஓர் வரலாற்று நினைவுச்சின்னமாய் ஆக்கினார்கள்.
'Whiteman's Tree' என அழைக்கப்பட்ட அந்தப் பழம்பெரும் புளிய விருட்சம் பின்னர் 1964ல் வீசிய புயலில் வீழ்ந்த போதிலும் மீண்டும் அதே இடத்தில் புதிய புளியம் கன்று நடப்பட்டு வளர்த்து அது இன்றும் நினைவுச்சின்னமாய் காட்சி தந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி அந்த மரமிருக்கும் இடத்திலிருந்து மூதூர் நகரின் மையப்பகுதியினுடே செல்லும் முக்கியமான வீதியொன்று Knox-Road என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் பிறகு நடந்தவற்றையெல்லாம் ஒன்றும் விடாமல் கூறப்போனால்
இப்போதைக்குத் திரும்பி வர முடியாது.
அதெல்லாம் பழைய கதை!
இன்றைய புதிய கதை எது தெரியுமா? மூதூரை அதன் ஆரம்ப காலம் தொட்டே கிழக்கு மாகாணத்தின் இரு பெரும் நகரங்களான திருகோணமலை-மட்டக்களப்பு ஆகியவற்றை இதுவரைகாலமும் நிலத்தொடர்பின்றி பிரித்து வைத்திருந்த மகாவலி மங்கையின் கிளையாறுகளுக்கெல்லாம் பாலங்களிட்டு அவற்றை ஒன்றிணைத்திருப்பதுதான்.
ஆம் நண்பர்களே! இன்று A-15 வீதியில் இரவு பகலாக் இடைவிடாது நிகழும் போக்குவரத்தைப் பார்க்கும் போது சிலசமயம் கனவு போலத் தோன்றுகின்றது. இத்தனை காலமும் கடல்வழிப் போக்குவரத்து நமது சமகால மற்றும் பழைய தலைமுறையினருக்கும் எத்தனை விரயங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. லோஞ்சுக்கும் கப்பலுக்கும் காத்திருந்தே வயதுகளைத் தொலைத்தவர்கள் நாம்.
ஒரு காலத்தில் மூதூருக்குச் செல்வதும் மூதூரை விட்டுச் செல்வதும் ஏதோ கடல்கடந்து வேறு நாட்டுக்குள் புகும் யாத்திரை போலத்தான் இருந்தது. எத்தனை காத்திருப்பு கெடுபிடிகள் பீதிகள். இன்று நினைத்த நேரம் அங்கு சென்று வரலாம் எனும்போதுதான் இத்தனைகாலமும் அனுபவித்த அந்த மெகா விரயத்தின் கனம் சரிவர உணரப்படுகின்றது.
முதலில் கிண்ணியாவுக்கான பாலம்தான் ஆரம்பிக்கப்பட்டது. முன்பெல்லாம் கிண்ணியாவுக்கு வாக்குச் சேகரிக்கத் துறைகடந்து வரும் அத்தனை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்களும் தவறாமல் சொல்லி விட்டு மறந்து போகும் வாக்குறுதி: 'வெகுவிரைவில் பாலம் கட்டித் தருவோம்!' என்பதுதான்.
உங்கள் பாலம் கூட வேண்டாம் (அப்போது) இருந்த இரண்டு துருப்பிடித்த பாதைப்படகுகளையாவது தொடர்ந்து இயங்கும்படி பார்த்தால் போதும் என்ற அங்கலாய்ப்பில் இருந்தார்கள் மக்கள். பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள் சந்திரிகா அம்மையாரின் அரசில் நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்தபோது ஒரே தடவையில் பல வாகனங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அதிக குதிரைவலுக்கொண்ட படகுப்பாதையை கிண்ணியாத் துறைக்கு வழங்கியிருந்தார். அதனைச் சேவைக்குத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் விரைவில் பாலம் அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
பின்னர் ராஜபக்ச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அந்த வாக்குறுதியை நினைவில் வைத்துச் செயற்பட்டார். பாலத்திற்கான முயற்சிகளில் ஏனைய பலரோடு சேர்ந்து அவரும் இறங்கியிருந்தார். அப்பொழுது கூட பாலம் நிர்மாணிக்கப்படும் என்று யாரும் பொதுவாக நம்பவில்லை. 'வழமை போலத்தான் இதுவும்' என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டார்கள். கிண்ணியாவாசிகள். ஆனால் பாலத்தின் நிர்மாண ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கியபோதுதான் 'ஓகோ ஏதோ செய்யத்தான் போகிறார்கள் போல' என்ற சிறு நம்பிக்கைக் கீற்று அவர்கள் மனங்களில் தோன்றியது.
உண்மையில் கிண்ணியாப் பாலத்துக்கு அந்தப் பெயர் பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (அட! கிண்ணியாவின் தவப்புதல்வர்களே அவசரப்படாதீர்கள்! விசயத்துக்கு வருகின்றேன்.) அதாவது 'மூதூருக்கான முன்னோடிப் பாலம்' என்று வைத்திருந்தால் கூட மிகச்சரியாகவே இருந்திருக்கும். ஏனெனில் கிண்ணியா மக்களுக்கு துறைகடத்தல் என்பது மூதூர் மக்களின் கடல் கடத்தலுடன் ஒப்பிடும்போது நடிகர் சிவாஜிராவ் (ரஜினிகாந்த்) பாணியில் சொன்னால் ஜுஜுபி!
ஆம்! மிக அவசரமான அத்தியாவசியத் தேவைகளுக்காக விரையும் வெகு சில பயணிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பொதுவாக கிண்ணியா மக்களுக்கு திருகோணமலைக்குச் செல்லும் பயணம் அப்படி ஒன்றும் பெரும் தாமதத்தையும் சிரமத்தையும் எற்படுத்தியதாகக் கூற முடியாது. பயணம் ஆரம்பிக்கும் போதும் பயணத்தை முடித்து விட்டுத்திரும்பி வரும்போதும் ஒரு செக்போஸ்ட் போலத்தான் அந்தத் துறையடி அவர்களுக்கு.
படகுப் பாதைப் பயணம், துறையடியில் இறங்கி நடந்து ஊர்வாசிகளுடன் ஒன்றாகச் சில நிமிடங்கள் காற்றோட்டமாய் அன்றைய ஊர்ப்புதினங்களை விசாரித்துக் கொண்டு வரும் சிறு ஆசுவாசமாகவும் இருந்து வந்திருக்கிறது. தவிர தம்பலகாமப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் தரைமார்க்கப் போக்குவரத்து வழி இருந்ததனாலும் கிண்ணியாத்துறை என்பது பழகிப்போன சிறு தொந்தரவுகளில் ஒன்றாகவே இருந்தது.
ஆனால் மூதூர்வாசிகளின் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது.
நாவலடி, கங்கை, உப்பாறு, கிண்ணியா ஊடான தரைவழிப்பாதை முற்றாக கைவிடப்பட்டிருந்த நிலையில் அலிஓலுவ, கல்லாறு மற்றும் அல்லை ஊடான தரைமார்க்கப்பாதை மிக அதிக நேரத்தை விழுங்கும் சுற்றுப்பயணமாக இருந்தது. அதுமட்டுமன்றி அந்த வீதியின் தரக்கேடு மற்றும் மாரிகால வெள்ளத்தினால் தடைப்படும் நிலையிலும் கடல் வழிப்பயணம் மட்டுமே ஒரே தெரிவாக இருந்து வந்துள்ளது.
கடல்வழிப் பயணம் என்றால், ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை எடுக்கும். அதுவும் மிகவும் தரம் தாழ்ந்த வசதிகள் கொண்ட லோஞ்ச்கள் எனப்படும் சற்றுப் பெரிய படகுகளில்தான் ஆபத்தான கடல்பகுதியை தாண்டியாக வேண்டியிருந்தது. இருக்கும் அந்த லோஞ்ச் சேவையைக்கூட அடிக்கடி குழப்புவதற்கென்றே காலநிலை, கடல் கொந்தளிப்பு, இயந்திரக் கோளாறுகள் என்றே ஒரு காரணங்களின் பட்டியல் காத்துக் கிடக்கும். இதனால் பயணம் என்பது மூதூர் பயணிகள் அனைவருக்கும் ஓர் அன்றாட சாகசமாகவே இருந்து வந்திருக்கின்றது.
இந்நிலையில்தான் 1993 ஜனவரி 25ம் நாளில் கொட்டியாரக் குடாக்கடலில் நிகழ்ந்தது ஒரு கோர விபத்து. எறத்தாழ 140 பயணிகளுடன் சென்ற லோஞ்ச் படகு ஒன்று மூழ்கிய அந்த அனர்த்தத்தை மூதூர் மக்களால் மறக்கத்தான் முடியுமா என்ன? நூறு எனும் எண்ணிக்கையைத் தாண்டிய அந்த மனிதப் பலியின் பின்னர்தான் அன்றைய ஆட்சியாளர்களுக்கு லேசாய் கண்திறந்தது. இதனால் அதன் பின்னர் இ.போ.ச வினால் மேலும் சற்றுப் பெரிய படகுகள் சேவைக்கிடப்பட்டன.
இப்படகுகள் சிறிது சௌகரியமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தன. ஆயினும் இப்படகுகளால் தினமொன்றுக்கு இரண்டு சேவைகள் மட்டுமே நடாத்தப்பட்டன. அதுவும் ஒரு தடவைக்குரிய பயணிகளின் எண்ணிக்கை நூறுபேர் மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டு அது மிகவும் இறுக்கமாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. அந்த நாட்களிலே நூறுபேருக்குள் அடங்குவதற்காக நிகழ்ந்த முண்டியடிப்புகளை விபரிக்க வாரத்தைகள் போதாது.
அதுமட்டுமல்ல மதியம் 2.30 மணி என்பது திருகோணமலையில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஊர் திரும்புவோருக்கெல்லாம் மூதூருக்குரிய கடல்கதவுகள் அடைக்கப்படும் நேரமாய் ஆகிப் போனது. இந்தச் சேவைகளும் படகுகளின் பழுதுகள் திருத்தம் என அவ்வப்போது வாரக்கணக்கில் தடைப்படும் ஒன்றாகவே இருந்து வந்தது.
இங்கு ஒரு விடயத்தைக் கவனித்தாக வேண்டும். படகு விபத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான கடல்பயணம் வேண்டும் என்ற மூதூர்வாசிகளின் போராட்டம் சிறந்த இரு படகுகளைப் பெற்றுத்தந்த அதேவேளை முன்பு லோஞ்ச் காலத்தில் இருந்து வந்த 'ஒருநாளில் பலசேவைகள்' என்ற வசதி பறிபோனது.
இதை வேறுவிதமாகக் கூறினால், மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவனிடம், அவன் சாப்பாட்டின் தரம் சரியில்லை என்று சொல்லிவிட்டான் என்பதற்காக தினமும் பிரியாணிப் பொட்டலமொன்றைக் கொடுத்து, 'இந்தா பிடி! ஒருவேளை மட்டும் சாப்பிட்டுக் கொள் போதும்!' என்று கூறியதைப் போலானது நிலைமை.
அதன் பின்னர் நாட்டில் அடுத்தடுத்து தேர்தல்கள் பல வந்தன. விளைவாக மூதூர் பயணிகள் மீது அரசியல்வாதிகளுக்கு திடீர் கரிசனைகள் முளைக்கலாயின. அதன் பயனாக துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. சேருவில-II என்ற அந்தக் கப்பல் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது. பயண நேரமும் பாதியாகக் குறைந்தது.
ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையான பயணிகள்,மோட்டார் சைக்கிள்கள் என்ற கட்டுப்பாடுகள், போலீசாரின் பரிசோதனைக் கெடுபிடிகள் காரணமாக பாரமான மோட்டார் சைக்கிளைக் கூட ஏறத்தாழ 200 மீற்றர் நீளமான இறங்குதுறைக் கடல்பாலம் வழியாகத் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை, சமூகத்தில் எத்தனை கௌரவமானவராக இருந்த போதிலும் கப்பல் பயணி என்று வந்து விட்டால் தள்ளுமுள்ளுகளில் மாட்டி கௌரவம் குறைய வேண்டியதும் காயமடைய வேண்டியதுமான அவலம், என்றெல்லாம் மூதூர் மக்களுக்குரிய இம்சைகள் அதிகரித்தன.
இலங்கைத்தீவில் இனமுறுகல் நிலைமைகள் ஆரம்பித்து வன்முறைப் போராட்டமாக மாறி உச்சகட்டத்தை அடைந்த காலத்திலே அடிக்கடி பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுள் மூதூர் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. இயற்கையிலேயே புவியியல் காரணிகளால் போக்குவரத்து தொடர்புகளில் கணிசமானளவு பின்தங்கியிருந்த இப்பிரதேசம் இனமுறுகல் வன்முறைகளினால் மேலும் பின்தங்கிப்போயிருந்தது. மிகச்சரியாகக் கூறப்போனால், மூதூர் பட்டினத்திற்குள் மக்கள் நடமாடக்கூடிய பரப்பளவு சில சதுர கிலோமீற்றர்களுக்குள்யே அடங்கிப்போயிருந்தது.
ஒரு காலகட்டத்தில் இவ்வெல்லைக்குள்ளிருந்து பயணம்போகும் ஒருவர் பாதுகாப்பாகத் திரும்பி வந்தாலே பெரும்பேறு என அவரது குடும்பத்தினர் கருதுமளவுக்கு நிலைமைகள் இருந்தன. தவிர பயணப்பாதைகளின் பராமரிப்பு மற்றும் திருத்தவேலைகள் நீண்ட காலமாக சரிவர நிகழாததால் தரைவழிப் போக்குவரத்தின் தரமோ படுமோசமாக இருந்து வந்தது.
ஆனால் இவையெல்லாம் முடிவுக்கு வரக்கூடிய நிலைமை தோன்றியது என்னவோ ஒரு சடுதியான அரசியல் நிகழ்வு ஒன்றினால்தான். ஆம், 2001ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது பல தடவைகள் இரு தரப்பினராலும் பலமுறை மீறப்பட்ட பின்னர் உச்சகட்டமாக, விடுதலைப் புலிகள் மூதூரில் மாவிலாறு அணையின் துருசைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். சர்ச்சைக்குரிய பல நியாயங்களையும் நிபந்தனைகளையும் அரசுக்கு முன்வைத்து வயல்நிலங்களுக்குரிய நீரைப் பாயவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். பலநாள் இழுபறியின் பின்னர் அடுத்த கட்ட நகர்வாக மூதூர் நகரைக் கைப்பற்றினார்கள்.
இதுவே அவர்கள் செய்த தற்கொலைக்கு ஒப்பான மிகப்பெரும் தவறாகவும் அமைந்துவிட்டது. சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த அரசு மக்களை மீட்கவென நடவடிக்கையில் இறங்கியது. அதன்பின்னர் வெள்ளி முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்ததெல்லாம் யாவரும் அறிந்த வரலாறு.
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டதும் A-15வீதியினூடாக திருகோணமலைக்குச் செல்லும் கனவு நனவாகுமா என்ற நப்பாசை மூதூர் மக்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லைதானே. முன்பு ஒருகாலத்தில் பாதை இருந்த இடமே தெரியாதளவுக்கு உருக்குலைந்து போயிருந்த வழியால் பலர் போய்வர ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல அதிகமான மக்கள் துறையினூடாக தோணிகள் படகுகள் மூலம் பயணத்தில் ஈடுபடலானார்கள்.
கிழக்கின் நகரங்களை கரையோரத்தினூடாக இணைக்கும் அரசின் முயற்சி ஆரம்பித்தவுடன் கிண்ணியாப் பாலம் நிர்மாண வேலைகள் ஆரம்பித்து முடிவடைந்தது. அதன்பின் A-15 வீதியிலுள்ள ஏனைய பாலங்களான உப்பாறு, கங்கை, இறால்குழி...என்று தொடர்ந்து அன்று மணித்தியாலங்களை விழுங்கிய மூதூர்- திருகோணமலை பயணம் இன்று சில நிமிடங்களில் என்றாகிப் போயிருக்கின்றது.
இப்பொழுது கூறுங்கள். கிண்ணியாப்பாலம் என்பது மூதூருக்கான முன்னோடிப் பாலம்தானே?
(Contd...)
-'Mutur' Mohammed Rafi