Monday, December 3, 2012

சிறுகதை: கூண்டுக்கிளி





 


'ஆன்ரி இது உங்கடதுதானே...?'


தோளிலே டியுஷன் பையுடன் சைக்கிளை நிறுத்தி மேலே அண்ணாந்து பார்த்துக் கேட்டவனின் கையில் இருந்த பொருளைப் பார்த்ததும் ஓர் உயிர்ப்பான மின்சாரக்கம்பியை மிதித்ததைபோலிருந்தது எனக்கு.  இந்த நேரம் பார்த்து பொதுநூலகத்துக்குச் சென்றிருக்கும் எனது கணவரோ டியூஷன் போயிருக்கும் சுஜன்யாவோ வந்துவிடாமலிருக்க வேண்டுமே என்று மனம் பதைபதைத்தது.

'இரு தம்பி கொஞ்சம், கீழே இறங்கி வாறேன்'
'இது எப்படி இவன்ட கையில் வந்தது' என்று யோசித்தவாறு, என்று அவசர அவசரமாய் படியிறங்கத் தொடங்கினேன். எனது இளைய மகள் தனுஷாவுடன் கனகம் அக்காவின் டியூட்டரியில் படிக்கும் அடுத்த தெருப்பையன் துவாரகன்தான் அவன். அவனைப் 'புறா துவாரகன்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இரண்டு கிழமையாக எனது வீட்டிலே வீசிக்கொண்டிருக்கும் புயல்காற்றின் மையமாக இருக்கும் இந்தச் சனியன் எப்படிக் கீழே காத்திருக்கும் துவாரகனின் கைக்கு வந்தது?

மூன்று நாளைக்கு முன்புதான் நடுச்சாமத்திலே ஓசைப்படாமல் எழுந்து யாருக்கும் தெரியாமல் அதை நான் முன்பு ஒளித்து வைத்திருந்த இடத்திலிருந்து திரும்பவும் கையிலெடுத்தேன். பேய் பற்றி எனக்குள்ள மெலிதான பயத்தையெல்லாம் சிறிதுநேரம் ஒத்திவைத்துவிட்டு நாங்கள் வசித்த மாடிக்குடியிருப்பின் நாலாவது மாடிக்கு படியேறி மொட்டை மாடிக்கு வந்து வீசும் குளிர்காற்றிலே நின்று நிதானித்தேன்.

நான் செய்யப்போகும் காரியத்தை நினைத்து அன்றிரவு ஒரு மெலிதான குற்றவுணர்வு இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் என்னைப் புரிந்து கொள்ளாத கணவரையும் மகளையும் நினைத்த மாத்திரத்திலே மனதிலே மண்டிக்கொண்டு வந்த கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டி பலத்தைக் கூட்டி, இருட்டிலே ஏதோ ஒரு திசையிலே அதை வீசியெறிந்துவிட்டு ஓசைப்படாமல் வந்து ஒன்றுமே நடவாததுபோல மீண்டும் படுத்துக்கொண்டேன். அத்தனை உயரத்தில் இருந்து வீசியதால் நிச்சயம் வெகுதூரத்தில் எங்காவது விழுந்து நொறுங்கிச் சிதறியிருக்கும் என்று நம்பினேன். அப்படித் தலைமுழுகிய இந்தப் பீடை எப்படி இவனின் கையிலே முழுதாக வந்து சேர்ந்தது...?

'ம்மா.. அம்மா!'

படியிறங்கிக் கொண்டிருந்த எனக்கு மேலே வீட்டுக்குள்ளிருந்து அலறும் என் கடைக்குட்டிப் பையன் யதுவின் குரல் கேட்டது. 'இப்போதுதானே தூங்க வைத்தேன் அதற்குள்ளே எழும்பி விட்hனே..  அவனைப்போய்த் தூக்கிக் கொண்டு வருவதற்குள் கீழே நிற்பவன் போய் விடுவானே?' என்று யோசித்தபடியே திரும்பவும் அவசர அவசரமாக மேல் நோக்கி ஏறத் தொடங்கினேன். மின்னலாய் வீட்டிற்குள் நுழைந்து தொட்டிலினுள் கிடந்தவனைத் தூக்கித் தோளிலே போட்டபடி மீண்டும் படிகளில் தடதடவென இறங்கினேன்.

நான், கணவர், தோளுக்கு மேல் வளர்ந்த இரு மகள்கள், கடைசியாயப் பிறந்தவனான ஒன்பது மாத யதுஷன் இவர்கள்தான் எனது குடும்பம். எனது கணவர் சேவையிலிருந்து சுய விருப்பத்துடன் ஓய்வுபெற்ற ஓரு விமானப்படை உயரதிகாரி. அவருக்கு எல்லாமே நேர்த்தியாக இருக்க வேண்டும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சியமுள்ளவர். ஆனால் நானோ அவரது குணங்களுக்கு எதிரிடையாக எப்படியும் வாழ்ந்தால் போதும் என்ற இயல்புள்ளவள். எதைச் செய்வதானாலும் முன்கூட்டியே திட்டமிட்டு ஆயத்தம் செய்பவர் அவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவதிலே கெட்டிக்காரி நான்.
எனது கணவரது நேர்மை, தேசப்பற்று, நேரந்தவறாமை, அதீதசுத்தம், பரவலான உலக அறிவு,இவை எல்லாமே எனது மகள்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அக்கம் பக்கத்திலுள்ளவர்களிலிருந்து அவருடன் வேலைபுரிந்தவர்கள் வரை இன்றுவரை அவற்றுக்காகவே அவரைப் பெரிதும் மதிப்பார்கள். ஆனால் அத்தனைபேருக்கும் உதாரண மனிதரான அவரிடம் எனக்குப் பிரச்சினையாக இருப்பதே அவரது மேற்படி குணங்கள்தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது.

அவரைத் திருமணம் புரிந்த ஆரம்ப காலத்திலிருந்தே அவரது குணங்களை நானும் பெருமையாக நினைத்தவள்தான் என்றாலும் என்னால் அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது. அவருக்கு வீடு எப்போதுமே பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டும். அவருக்குரிய விருந்தினர்கள் வெகுகுறைவுதான் என்ற போதிலும் ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்த பிறகு முன்னறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆரம்பகாலத்திலே திருமணக் கவர்ச்சியினால் சிறிதுகாலம் நானும் ஒழுங்கானவள்தான் என்று அவரிடம் காட்டிக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்து நடித்துப் பார்த்தேன். ஆனால் என் சாயம் வெளுத்துப்போக அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

தன்னைப்போலவே தன்னைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்தான் அவர். ஆனால் அதற்காக மற்றவர்களை வருத்துவதில்லை. மாறாக பிறர் செய்யத்தவறும் வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருப்பார். அதைத்தான் இன்றுவரை என்னால் தாங்கமுடிவதில்லை. அப்படிச் செய்வது அவருக்கு வெகுஇயல்பானதாகத் தோன்றினாலும் அது ஏனோ என்னைக் குத்திக்காட்டுவதற்கென்றே அவர் செய்வது போலிருப்பதுண்டு. 'சே! அடித்தால் கூடத் தாங்க முடியுமே' எனும் ஆற்றாமை மனதிற்குள் ஆத்திரம் மாய்த் திரளும்.  அதை வெளிப்படையாகக் காட்டவும் வழியில்லாமல் மறைக்கவும் முடியாமல் சமையலறைப் பாத்திரங்களில் மீதுதான் காட்டுவேன்.

'ஹேய், என்ன எவ்லின்.. இன்டைக்கு கிச்சன் சத்தமெல்லாம் கூடுதலாக் கேக்குது..? ஓ! என்ட காதில இருந்த அடைப்பு சரியாயிட்டுது போல' என்பார். அதிலும் கூட எத்தனை நையாண்டி பார்த்தீர்களா? இதைக்கேட்டு அடுத்த அறையிலே படித்துக் கொண்டிருக்கும் மூத்தவள் சுஜன்யா உடனே வாய்விட்டுச் சிரிப்பது இன்னும் என்னைக் கோபப்படுத்தும்.

ஒரு சராசரிக் கணவனைப்போல இந்த ஆள் இருந்திருந்தால் கூட ஒரு சண்டைபோட்டு மனதினுள்ளே மண்டிக்கிடக்கும் ஆற்றாமையையெல்லாம் தீர்த்துவிடலாம். ஆனால் எல்லாவற்றிலும் நேர்த்தியான அந்த மனிதரின் செயல்களிலே இருக்கும் ஒழுங்கும் நேர்த்தியும்தான் வார்த்தை வெளிப்பாட்டிலும் இருக்கும். எனக்கு அவரைப்போல வெளிப்படையாகவும் திறமையாகவும் பேசும் குணம் கிடையாது என்பதனால் அவருடன் விவாதம் செய்யப்போனாலும் வீணே மூக்குடைபட்டுத் திரும்புவதைத்தவிர வேறுபலனேதும் கிட்டுவதில்லை எனக்கு.

திருமணமான புதிதில் அவரது உத்தியோகம் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து நானும்  தலைநகருக்கு வரவேண்டியதாக இருந்தது. அரசு அவருக்கு வழங்கியிருந்த சகல வசதிகளும் கொண்ட குவார்ட்டர்ஸ் ஒன்றில்தான் இருவரும் குடித்தனத்தை ஆரம்பித்தோம். குழந்தைகள் பிறக்கும் வரையிலே எங்களது வேறுபட்ட இயல்புகளால் இருவருக்குமிடையிலே பெரிய முரண்பாடுகள் ஏதும் தலையெடுத்திருக்கவில்லை. அதற்காக நாங்கள் மிகவும் அந்நியோன்னியமாக இருந்தோம் என்றும் சொல்லிவிட முடியாது. ஆரம்பத்திலே இனிமையாக இருந்த திருமணவாழ்க்கை, சிறிதுகாலம் போனதும் அது பெண்ணின் சுதந்திரங்களைப் பூட்டிவைக்கும் ஓர் அலங்காரச் சிறைதானோ என்று எண்ணத் தோன்றியது எனக்கு.

பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு வெகுதொலைவிலே அதுவரை ஒன்றாய்க் கிடந்த உறவுகளைப் பிரிந்து பெரும்பகுதி நேரத்தை தனிமையில் கழிப்பது வேதனை தந்தது. எப்போதாவது ஒரு தடவை யாராவது உறவினர்கள் தலைநகருக்கு ஏதாவது வேலையாக வந்தால் என்னையும் அவரையும் வந்து பார்த்துவிட்டுச் செல்வதுண்டு. அவ்வாறு வருபவர்களோடு புறப்பட்டு ஊருக்கே போய்விட்டாலென்ன என்று கூட சிலசமயங்களிலே நினைக்கத் தோன்றியிருக்கின்றது.

அடிக்கடி ஊருக்குச் சென்று எல்லோரையும் பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருக்கும். ஆனால் அதை உரிமையோடு நேரடியாக அவரிடம் கேட்டிருந்தால் அவரே, 'சரி போய் வா' என்று அனுமதி தந்திருக்கூடியவர்தான். ஏனென்றால் அவர் தனக்குத் தேவையானவற்றை சுற்றிவளைக்காமல் நெற்றிக்கு நேரே கேட்டுப் பெறுகின்ற பழக்கமுடையவர். நானோ எனக்கு விருப்பமான எதையுமே முரண்பட்டுப் பெறுபவள். சிறுவயதிலிருந்தே எதையாவது ஒன்றை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் அது எனக்கு கிடைத்தே ஆகவேண்டும். 'கிடைக்காது' என்று ஒரு தெரிவும் வாழ்க்கையில் நிறைய உண்டு என்பதை அப்போதெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இதனால் எதையும் சண்டை போட்டு அடைவதுதான் நான் பழகிய பழக்கம்.
ஊருக்குப் போய்வர அனுமதி கேட்டால் எங்கே ஒருவேளை மறுத்து விடுவாரோ என்ற அங்கலாய்ப்பிலே அவர் வேலைக்குச் சென்ற பின்பு அவரிடம் சொல்லாமலே ஊருக்கு பஸ்ஸேறிச் சென்றுவிடும் பழக்கத்தை ஆரம்பித்தேன். யாராவது உறவினர்கள் தலைநகருக்கு வந்திருப்பதாக அறிந்தால் போதும் உடனே ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கி அவர்களோடு சேர்ந்து, அவர் வேலைவிட்டு விமானப்படை முகாம் அலுவலகத்திலிருந்து வருவதற்கிடையில் ஊரைப்பார்த்து பாதி தூரத்தைக் கடந்திருப்பேன்.

இப்படி சொல்லாமல் புறப்படுவதிலே இன்னுமொரு வசதியும் உண்டு. அதாவது அவரிடம் சொல்லிவிட்டுச் செல்வதென்றால், 'நானும் வருகிறேன்' என்று சிலவேளை அவரும் கிளம்பி வந்துவிடுவார் அல்லது அவருக்கு வசதியான தினத்தில்தான் பயணத்தை வைத்துவிட்டு என்னையும் காத்திருக்கச் சொல்வார். அப்படி அவரும் ஊருக்கு வந்துவிட்டால் நான் அங்கு சென்று எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்?  எனவே இப்படித் தடாலடியாய்க் கிளம்பினால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் கிடையாது அல்லவா?
திடீரெனப் புறப்பட்டுப் போவதற்காக அசத்தலான பல பொய்க்காரணங்களைச் சோடித்து அவருக்குக் கூறவும் ஆரம்பித்தேன். ஊரிலுள்ள எனது உறவினர்களில் பலரை எனது கணவருக்குத் தெரியாது என்பதனால் அவர்களில் பலரைத் திடீர் சுகவீனர்களாக்கினேன். சாகும் வயதிலிருந்த சிலருக்கு முன்கூட்டிய மரணச் சடங்குகள்  கூட வைத்தேன். ஆனால் ஒன்று பொய்களின் சுவாரசியமே அவை என்றாவது ஒருநாள் பிடிபட்டுவிடுவதில்தானே இருக்கின்றது. எனது பொய்களும் காலக்கிரமத்திலே ஒவ்வொன்றாக அவரிடம் வெளுத்துப்போயின. ஆயினும் புதுமனைவியான என்னை பலமுறை லேசான கண்டிப்புடன் மன்னித்திருக்கின்றார்.

ஆனாலும் விளையாட்டுப்போல நினைத்து  ஆரம்பித்த சொல்லாமல் ஊர்கிளம்பும் படலம் அவரது புத்திமதி, ஆலோசனை, எச்சரிக்கை, கட்டளை எல்லாவற்றையும் மீறித் தொடர்ந்து நிகழவே எங்கள் வாழ்விலே பல குழப்பங்கள் உருவாகின. இதனால் ஒருகட்டத்தில் நல்ல மனிதராக அனைவராலும் அறியப்பட்டிருந்த எனது கணவருக்குள்ளே ஒளிந்து கிடந்த சில நிழலான பக்கங்களும் வெளிப்படலாயின. என்னைத் தனியாக விட்டு வேலைக்குச் செல்வதற்கே யோசிக்க ஆரம்பித்தார். இயல்பாக வீட்டிற்கு வரும் எனது உறவினர்களையெல்லாம் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கினார்.

'உன்னுடைய தேவைக்காக எந்தவொரு பொய்யையும் தயங்காமல் சொல்லக்கூடியவள்தான் நீ!' என்று ஒருநாள் என் முகத்துக்கு நேரே கூறினார். அன்றுதான் ஆரம்பித்தது தொல்லை. அதற்காகவே காத்திருந்ததைப் போல வலியச் சண்டைபிடித்து மீண்டும் ஊருக்குப் படையெடுத்தேன். இந்தத் தடவை கோபித்துக் கொண்டு வந்ததனால் அதையே சாக்காக வைத்து ஊரிலேயுள்ள உறவுகளோடு நீண்ட காலம் தங்கினேன். முறைப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தால் இப்படியெல்லாம் இஷ்டத்திற்கு இருக்க முடியுமா?

கிராமத்திலே ஏறத்தாழ ஒரு கோயில் பசுவாய் அலைந்தேன். அதற்கு வசதியாக என்னைப் பெற்று வளர்த்த குடும்பத்தினரும் சம்பிரதாயங்கள் அறியாதவர்களாக அல்லது அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களாக இருந்தார்கள். உறவினர்களில் சிலர் நான் எனது கணவரைப் பிரிந்திருப்பதைப்பற்றி பேசினால் போதும். உடனே எனக்குள்ள கற்பனைவளம் மற்றும் சமயோசித சாகசக்குணங்களை பயன்படுத்தி அவர்களிடம் எனது கணவரை ஒரு  பெண்ணை வதைக்கும் கொடுமைக்காரராகச் சித்தரித்து விடுவேன். எனது புனைவுகளையெல்லாம் அவர்கள் நம்பினார்களோ அல்லது நம்பியதுபோல நடித்தார்களோ தெரியவில்லை. ஆனால் அதற்குமேல் என்னைக் கேள்வி கேட்காமல் அனுதாபம் காண்பித்து வாளாவிருந்தார்கள். இதனால் என்பாடு கொண்டாட்டமாகியது.

ஒரு விமானப்படை அதிகாரியின் வசதியான வீட்டில் கூண்டுக்கிளியாக இருப்பதைவிட சொந்த மண்ணின் புழுதியிலே புரளும் சிட்டுக்குருவியாக இருப்பது சுவாரசியமாகத் தோன்றியது  எனக்கு. ஆனாலும் இவ்வாறான முதிர்ச்சியற்ற போக்குகளால் எனது வாழ்க்கையிலே ஏற்படவிருந்த நீண்டகாலப் பாதிப்பைப் பற்றி அந்த இருபத்து மூன்று வயதிலே புரியாமல் போய்விட்டது.

குழந்தைகள் பிறந்த பிறகு வாழ்க்கை எனக்கு தந்த சிக்கல்களையும் வாழ்க்கைக்கு நான் ஏற்படுத்திய சிக்கல்களையும் சொல்வதற்கு இந்தக் கதையின் களம் போதாது. ஒவ்வொரு குழந்தையைச் சுமக்கும்போதும் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது அவரிடம் வலிந்து கோபித்துக் கொண்டு ஊருக்கு வந்து விடுவதும் பின்பு உறவினர்கள் தலையிட்டு புத்திமதிகூறி திரும்பக்கொண்டு சேர்த்து விடுவதும் வழமையாகிப்போனது. அவருக்கும் அது பழகிப்போனது.

கணவரை விட்டு ஊருக்கு ஓடிவரும் ஒவ்வொரு தடவையும் கையிலிருக்கும் காசும் கழுத்திலிருக்கும் ஆபரணங்களும் கரையும். நான் விட்டெறியும் சில்லறைக்கு ஏவல்களை நிறைவேற்றும் உறவுகளும் ஏனைய காலங்களிலே சோற்றுக்கில்லாமல் அலையும் சிறுவர் பட்டாளமும்தான் என்னோடு திரிவார்கள். என் கையிலே பசையுள்ளபோது இளநீர், மாங்காய் புளியங்காய் பறித்துத் தருவது, சாப்பாட்டுக் கடைகளுக்குச் சென்று கொத்துரொட்டி மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு வருவது, ஆற்றிலே தோணியில் வைத்து வலிப்பது என்று எனது பின்னால் அடியாட்கள் போல அலையும் அவர்களுக்கு நிறைய வேலை இருக்கும் .

ஆனால் கையிலே காசில்லாமல் ஊரிலிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. ஏனென்றால் அதை வைத்துத்தான் தலைநகரிலும் கிராமத்திலுமாக  மாறிமாறியோடும் எனது வாழ்க்கையின் சாரமே இருந்தது. காசு பணம் தீர்ந்து நகைகளும் அடவுக்குப்போய் விட்டால் என் பின்னே அலையும் தொண்டர் கூட்டமும் இயல்பாகவே குறைந்துவிடும். அதன்பின்பு அடுத்திருக்கும் சில்லறைக் கடைக்குச் சென்று  ஒரு தலைவலி மாத்திரை வாங்கித்தரக்கூட ஆளிருக்காது.

அதுவரையில் எனது சாகசப்புளுகுகளை நம்பியவர்களும் நம்புவதுபோல நடித்தவர்களும் திடீரென பல்டியடித்து தர்க்கரீதியாகப் பேசவும் புத்திமதி கூறவும் ஆரம்பித்துவிடுவார்கள். நாட்டுக்கோழியறுத்து புரியாணி சமைத்துத்தந்த உறவுகள் ஒருவாய் தேனீர் தருவதற்கே அலுத்துக்கொள்வார்கள். சின்னச் சின்ன மனத்தாபங்கள் கூட வர தொடங்கும். நான் விட்டெறிந்த எலும்புகளுக்காக கால்களைச் சுற்றிய வந்தவையெல்லாம் ஒன்றுசேர்ந்து உறுமிக்குரைக்கத் தலைப்படுவதை எண்ணி மனம் வெம்பும்.

எனது கணவருடன் எனக்கிருந்த சீர்மையான வாழ்க்கையின் மேன்மை அப்போதுதான் மண்டையிலே உறைக்க ஆரம்பிக்கும். திடீரென ஒருநாள் ஊரிலிருந்து யாருமறியாமல் மாயமாவேன். அதற்கு அடுத்த காட்சியிலே தலைநகரிலேயுள்ள கணவரின் குவாட்டர்சில் இருப்பேன். வேலைக்குச் சென்று மாலையில் திரும்பும் கணவர் வீடு திறந்திருப்பதைப்பார்த்து நான் திரும்பி வந்திருப்பதைப் புரிந்து கொள்வார். சில நாட்கள் ஒரே வீட்டிற்குள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் நடமாடியபிறகு தவிர்க்க முடியாத உடல் தேவைகளின் நிமித்தம் உறவாகிவிடுவோம். சில வாரங்களுக்கு கடைத்தெரு புதிய ஆடைகள் தங்க நகைகள் கொள்வனவு மற்றும் தமிழ் சினிமா என்று சில மாதங்கள் தாக்குப் பிடிப்பேன். அதன் பிறகு முருங்கைமரம் வேதாளக்கதையாய் ஊருக்கு ஓடிவந்து விடுவேன்.

இப்படி நான் ஓடுகாலியாய் அலைந்ததற்கு காரணமாய் ஊரிலே பலரும் எனது கணவரைத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால் எனது கணவரின் ஒழுங்கு மற்றும் நேரம் தவறாமைக்கு ஈடுகொடுக்கமுடியாத எனது இயலாமைதான் இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்து போனது. இன்று நடுத்தரவயதையும் தாண்டி நிற்கும் என்னை எனது உறவுகள் மட்டுமல்ல இப்போது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் எங்களது இரு பெண் பிள்ளைகளும் கூட அறிந்து விட்டார்கள்.
எனது பெண்கள் குணத்திலும் நடத்தையிலும் என்னைப் போலல்லாமல் அவரைப்போலத்தான் வந்திருக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் அதற்காக நான் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எந்தத் தாய்தான் தனது பெண்கள் ஒழுங்கின்றி இருப்பதை விரும்புவாள்? ஆனால் நான் எனது பெண்கள் ஒவ்வொரு விடயத்திலும் அவரைப்போலவே கண்டிப்பாகவும் நேர்த்தியாகவும் இருப்பதைக்கூட என்மீது யாரோ விடுக்கும் சவாலாகத்தான் பார்க்கமுடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

அன்று படை அதிகாரியின் நேர்த்திக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது போலவே இன்று அவரின் வாரிசுகளிடமும் தடுமாறிக் கொண்டிருக்கின்றேன். அவராவது அவ்வப்போது ஓரளவு என்னைச் சகித்து விட்டுக்கொடுத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஏஎல் வகுப்பிலும் பத்தாம் ஆண்டிலும் கற்கும் எனது இரு ராட்சசிகளும் ஒரு சின்ன விடயத்தில் கூட விட்டுத்தரமாட்டார்கள்.
'அம்மா, இதென்ன இப்படிக் குப்பையா அயன் பண்ணி வச்சிருக்கீங்க. ஸ்கூல் யுனிபோமை இப்படியா அயன் பண்றது? அயன் பண்ணத் தெரியாட்டி தெரியாதென்று நேரடியாச் சொல்ல வேண்டியதுதானே' என்பாள் மூத்தவள் சுஜன்யா.

'அம்மா தலையைக்கட்டி நீங்க ஸ்கூலுக்குப் போனதேயில்லையா? ஏன் இப்படி ஏனோதானோன்று இழுத்துக் கட்டி வச்சிருக்கீங்க. ப்ரெண்ட்ஸ் எல்லாம் சிரிக்கப்போறாங்க!' என்று தனபங்குக்கு நையாண்டி செய்வாள் இளையவள் தனுஷா.

எனக்கு பொறுமை எல்லை மீறும்.

'அடியேய் எனக்கு இவ்வளவுதான் செய்யத் தெரியும்.. நான் குப்பைதான்.. இது பிடிக்கலண்டா இந்தா சுஜன்யா நீயே உன்ட உடுப்பை அயன் பண்ணு. தனுஷா நீ எல்லாத்தையும் ஒழுங்காச் செய்யுற உன்ட அப்பாவைக் கூப்பிட்டு அவரையே உனக்குத் அழகாக தலைகட்டச் சொல்லு சரியா?' என்று ஆத்திரத்தில் வெடிப்பேன்.

'உங்களுக்கு அப்பாவை இழுக்காட்டி சோறு செமிக்காதே! அப்பாவுக்குத் தலைகட்டத் தெரியாதுதான். ஆனா அதுக்கென்று அப்பா வந்தாரெண்டால் அதையும் அழகாகத்தான் செய்வார் தெரியுமா? சும்மா போம்மா!'
எனக்குச் சுருக்கென்று தைக்கும். அந்த நேரம் பார்த்து வோக்கிங் போய்விட்டு உள்ளே வரும் அவர் நிலைமை புரியாமல், ' இதென்ன கிச்சன் இப்படிக் கிடக்கு..?' என்று முணுமுணுத்தபடி சமையலறையைத் துப்பரவு செய்ய ஆரம்பித்து விடுவார்.
'இஞ்ச, தாங்க பாப்பம் அந்தத் தும்புத்தடியை விளையாடாம!' என்று வெடுக்கென்று அவர் கையிலிருந்து பிடுங்கி கோபம் உச்சிக்கேற கிச்சனைக் கூட்டிப்பெருக்க ஆரம்பிப்பேன்.

'இதை எப்பவோ செய்திருக்கலாம்' என்று முனகியபடி வெளியேறி வீட்டின் முன்புற  வாசலைக் கூட்டிப் பெருக்குவதற்கு ஆரம்பித்து விடுவார். வீட்டிலிருந்தால் கொஞ்ச நேரம்கூட சும்மாவே இருக்காத ஜென்மம்தான் அவர்.

'அது எப்படிம்மா அப்பாவுக்கு மட்டும் சமையல் தொடங்கி எல்லா வீட்டு வேலைகளுமே செய்யத் தெரிந்திருக்குது?' என்று அப்பாவி போல பேச்சை ஆரம்பிப்பாள் இளையவள்.

'அது அவர் என்னைக் கலியாணஞ் செய்ய முந்தி இருந்தே கொழும்புல தனியா இருந்தவர்தானே.. அதனால சமைச்சுப் பழகி இருப்பார்.' என்பேன் நான்.

'அப்படியா..? ஆனா நாங்க அப்படிக் கேள்விப் படல்லியே..' 
'அப்ப எப்பிடிடீ கேள்விப் பட்டீங்க?'
'அப்பா கொழும்புல பேச்சுலரா இருந்த காலம் முழுக்க ஸ்லேவ் ஐலண்ட் கேம்ப் மெஸ்லதானே சாப்பிட்டவராம்.. உங்களைக் கட்டினாப் பிறகுதான் வீட்டுல சமைக்கவே பழகினாராமே..'
'டீயேய் உனக்கு இதை யாருடி சொன்னது? இவள் சுஜன்யாதானே.. அவள்தாண்டி சொல்லியிருப்பாள் உனக்கு. அவள்தாண்டி அப்பா திறம் இந்த அம்மா குப்பையெண்டு அப்பாவுக்கு காவடி தூக்கிறவள்.. சனியன்'
'அம்மா, இப்ப எதுக்கு அக்காவை ஏசுறீங்க. எனக்கு அக்கா சொல்லவேயில்ல சொர்ணா மாமிதான் சொன்னவ.'
'நான் நம்ப மாட்டேன்டி. சொர்ணா கடைசி வரையும் சொல்லியிருக்க மாட்டா? அவவுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.'
'சரிம்மா.. அக்காதான் சொன்னவ. ஆனால் அவவுக்கு சொர்ணா மாமிதான் சொல்லித்தான் தெரியும்'
'அப்பிடி என்னவெல்லாம்டி அந்தத் திமிர் புடிச்ச சொர்ணா சொல்லித் தந்தவள். இப்ப சொல்லப்போறியா இல்லையா?' என்று நான் பத்ரகாளியாய் மாறியதால் பயந்து போன தனுஷா, இந்த உரையாடலுக்கு முன்புள்ள அத்தனை பராக்களிலும் நான் உங்களுக்கு மாய்ந்து மாய்ந்து கூறியவற்றையெல்லாம்  பயந்தபடியே சொல்லி முடித்தாள்.
அதற்குப்பிறகு என்னால் வாய்திறக்கவே முடியாமல் போனது. பெற்ற பிள்ளைகளிடமே ஒரு தாய் தலைகுனியும்படி ஆவது எத்தனை சங்கடமானது என்பதை யோசித்துப் பாருங்கள். சங்கடமும் லேசான அவமானமும் ஒன்று சேர்ந்து மெல்லிய பழியுணர்வாக உள்ளுர உருவெடுத்திருந்ததை நானே முதலில் அறிந்திருக்கவில்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா?
'ஏனம்மா அந்த நேரம் அப்பாவை இப்படிக் கஸ்டப்படுத்தின நீங்க? ஒழுங்கா மரியாதையா அப்பாவோட கொழும்பிலயே இருந்திருந்தா இப்ப இங்க திருகோணமலைக்கு வந்திருக்கவும் தேவையில்ல .. தேவையில்லாத கதைகேட்கவும் வேண்டியதில்லையே.' என்றாள்.
எனக்குக் கோபம் வந்தாலும் அவள் கூறியதிலிருந்த நியாயம் வாயை அடைத்துவிட்டிருந்தது. ஆனால் என்னுடைய கோபமெல்லாம் மூத்தவள் சுஜன்யா மீதுதான் திரும்பியது. அவளை எனக்குச் சும்மாவே அவ்வளவாகப் பிடிப்பதில்லை.  போதாததற்கு அவள் மனதில் தனது தகப்பனிலிருக்கும் மரியாதையில் துளியளவு கூட என்னிடம் இல்லாதவளாக இருந்து கொண்டிருந்தாள். அதுதான் அவள் மீது பாசத்தையும் மீறிய பழியுணர்வுக்குக் கூட காரணமாக இருந்துவந்தது.
சுஜன்யா மட்டுமென்றில்லை எனது கணவரோடு ஓரளவுக்கு மேல் நெருங்கிப் பழகும் யாரையுமே எனக்குப் பிடிப்பதில்லை. குறிப்பாக அவரைத்தேடிவந்து அவருக்கு நிகராக அமர்ந்து அரசியல், சினிமா, கிரிக்கட், விஞ்ஞானம் இலக்கியம் என்று சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கும் பேர்வழிகளை எனக்கு ஆகவே ஆகாது. ஆனாலும் எனது வெறுப்பை அவர்கள் மீது வெளிப்படையாகக் காண்பிக்க மாட்டேன்.
அந்த விருந்தினருக்கு உபசரிப்புகளில் குறையெல்லாம் வைக்க மாட்டேன். அவர்களோடு தேனாய் இனிக்கப்பேசி, 'இத்தனை இனிமையான மனைவியா இவருக்கு?' என்று அவர்கள் எனது கணவரைப் பார்த்துப் பொறாமைப்படுமளவுக்குப் பேசிப்பேசி உபசரிப்பேன். ஆனால் நெஞ்சுக்குள்ளே ஆற்றாமையெனும் உமி அடுப்பு உள்ளுரத் தணல்பூத்துக் கனன்று கொண்டிருக்கும். அவர்களது நட்பைப் பிரித்து விடுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து யோசித்தே எனக்குத் தூக்கம் வராது. கூடிய விரைவிலே எதையாவது செய்து அந்த சகவாசம் அதிக நாட்களுக்குத் தொடராதளவுக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடுவேன். அவரது நண்பர்கள் மட்டுமல்ல கணவருடன் நெருங்கி உறவாடிய எனது உறவினர்களைக்கூட அவரிடமே திருட்டுப்பட்டம் பெற்று உறவு துண்டிக்கப்படுமளவுக்கு மாட்டிவிடும் எனது கைங்கரியங்களை விபரித்தால் அதுவே ஒரு தனிக்கதையாகி விடும் அபாயமுண்டு.

என்னைப் பற்றி நானே இப்படிச் சொல்வதை வைத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலே வருகின்ற அத்தைகள் மாமிகள் போன்ற எதிர்மறைப் பாத்திரமாக என்னை நினைத்து விடாதீர்கள். நிஜ வாழ்க்கையில் நாயகிகள் என்றும் வில்லிகள் என்றும் தனித்தனியான குணாம்சங்களோடு யாரும் இருப்பதில்லையல்லவா? எனது சில இயல்புகளுக்கு எனக்கே காரணம் தெரிவதில்லை. சில சமயம் என்னையே எனக்குப் பிடிக்காமல் போகும் ஒரு சிக்கலான ஜென்மம்தான் நான்.
ஒருவிதத்திலே எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் வேண்டியவளாக இருக்க வேண்டுமென்று நினைப்பவள்தான் நான். எனது நலன்கள் பாதிக்கப்படும்போது மட்டும் எனது கணவரையோ பிள்ளைகளையோ பற்றி எனது உறவினர் யாரிடமாவது குறை சொல்லிக் கொண்டிருப்பேன். அவர்களும் எனது முகத்துக்காக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதுண்டு. சிலவேளை பேச்சுவாக்கில் தங்கள்  பங்குக்கு எனது கணவரையோ பிள்ளைகளையோ ஏதாவது குறை சொல்ல ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை என்னால் தாங்க முடியாது என்பதால் சட்டென அந்தர் பல்டியடித்து அதுவரை எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவரையே வாரிவிட்டு ஆளை விட்டால் போதும் என்று ஓடவைத்துவிடுவேன்.
இவ்வாறு அவரது நெருங்கிய சகாக்களைக்கூட எனது பாணியில் வேட்டையாடி விரட்டிய பின்பு அவர் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது உள்ளுர கவலையாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கும். முன்பு நான் வெட்டி விட்டவர்களை எங்காவது சந்திக்கும்போது மீண்டும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக முடியுமான முயற்சிகளைக்கூட செய்து பார்ப்பேன். ஆனால் அவர்களே பழையபடி மீண்டும் கணவரோடு மிகவும் நெருங்கிவிட்டால் போதும். உடனடியாக வெட்டிவிடும் படலத்தை ஆரம்பித்து விடுவேன். அவர்கள் எங்களுக்கு எவ்வளவு வேண்டியவர்களாகவும் உறவாகவும் இருந்தாலும் சரியே.
இப்படி என்னிடம் மாட்டியவர்களின் பட்டியலிலே கடைசியாக இடம்பிடித்தது யார் தெரியுமா?

வேறுயாருமல்ல. எனது மூத்த மகள் சுஜன்யாவேதான். அவள் உயர்தரவகுப்பு படிக்கும் பெண்ணாக வளர்ந்து விட்டது மட்டுமன்றி அப்படியே தகப்பனைப்போல பரந்த அறிவுள்ளவளாகவும் தர்க்க ரீதியாகச் சிந்திக்குமாற்றல் உள்ளவளாகவும் இருந்ததால் எனது கணவருக்குச் சமதையாக அமர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். தகப்பனோடு உட்கார்ந்து அரசியல், அரபுவசந்தம், செவ்வாய் கிரக ஆய்வுகள், எல்நினோ-லாநினா காலநிலை, இலக்கியம், கிரிக்கட் என்று உரையாடிக் கொண்டிருக்கத் தொடங்கியிருந்தாள். சுஜன்யா என்னுடைய பெண்தான். இருந்தாலும் இது பொறுக்குமா எனக்கு..? இவளுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே.. செய்தாக வேண்டுமே என்று பரபரத்தது மனது.
அவளுக்கு வெளியில் நிறைய நண்பர்களுண்டு. அவர்களோடு அடிக்கடி கைத்தொலைபேசித் தொடர்பில் இருப்பாள். அவர்களோடு நிறைய அறிவுபூர்வமான விடயங்களைப் பேசிக்கொண்டிருப்பாள். அவளது விலையுயர்ந்த போனில் ஜீபீஆர்எஸ் வசதியையும் வைத்துக் கொண்டு இணையத்தில் உலாவுவது அவளது பொழுதுபோக்காகவும் இருந்ததால்தான் அவளுக்கு இந்தளவு அறிவும் திமிரும்..
000

'ஆன்ரி கிரிக்கட் ப்ரக்டிசுக்கு நேரமாகுது..நான் போகணும் கெதியா வாங்க' என்று கீழேயிருந்து அவசரப்பட்டுக் கொண்டிருந்தான் துவாரகன். மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ள தினேஷைத் தோளிலே கிடத்தியபடி கீழே இறங்கி அவனை நோக்கி வாசலுக்கு நடந்து வந்தேன். தெருவை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு

'இது எப்பிடி உனக்கு..'

'இது வந்து.. கனகம் அக்காட டியூசன்ல சுஜன்யாட வகுப்புதான் நானும். நான் புறா வளர்க்கிறன்தானே அதுக்காக எங்கட வீட்டு மேல்மாடியில கட்டியிருந்த வலையை காலையில துப்புரவாக்க ஏறக்குள்ள விழுந்து கிடந்திச்சு ஆன்ரி. எடுத்துப் பார்த்தா..இது! சுஜன்யா இதை வகுப்புக்குக் கொண்டு வாறவ எங்களுக்கெல்லாம் காட்டியிருக்கிறதால டக்கெண்டு நினைவுக்கு வந்தது. 2012 ஆகஸ்ட்டில செவ்வாயில க்யுரியோசிட்டி விண்கலம் இறங்கப்போறதைக்கூட எல்லாருக்கும் சுஜன்யா இதுலதான் ஆன்ரி காட்டினவ. அவ இன்டைக்கு க்ளாசுக்கு வரல்ல. அதான் தர்றதுக்கு கொண்டு வந்தேன்' என்று அவன்  என்னிடம் நீட்டிய அந்த அழகான விலையுயர்ந்த வெளிநாட்டு செல்போனை கைநீட்டி வாங்கிக் கொண்டு நான் திரும்பியபோது..

என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் முன்னாள் விமானப்படை அதிகாரியான என் கணவர்.


-மூதூர் மொகமட் ராபி