கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஏராளமான விருதுகளை வென்றெடுத்த ஆங்கிலத் திரைப்படமான க்ராவிட்டி யை அண்மையில் பார்த்தேன். ப்ளு-ரே எனும் சிறப்பு ஒளித்தகடு வடிவமும் வழமையான டீவீடி தகடும் இருந்தன. சாதாரண வடிவில் பார்க்கும்போதே திரைப்படத்தின் ஒளிப்பதிவும் தொழினுட்ப நுணுக்கங்களும் வியக்க வைக்கின்றன. முப்பரிமாண சிறப்பு வடிவத்தில் பார்த்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றுகின்றது
இனி படத்திற்கு வருவோம்..
நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக ஐந்து பேர் அடங்கிய விண்வெளி தொழினுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று பூமியிலிருந்து 600 கிலோ மீற்றர் உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைக்காட்டியைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கின்றது.
அவ்வேளையில் எதிர்பாராதவிதமாக பயன்பாடு தீர்ந்துபோன செய்மதி ஒன்று அழிக்கப்பட்டதன் காரணமாக உண்டான சிதறல்கள் மிகுந்த வேகத்துடன் இக்குழுவினரின் விண்வெளி ஓடம், தொலைகாட்டி, மற்றும் குழுவினரையும் தாக்குகின்றது. இதனால் விண்வெளி ஓடம் பலத்த சேதமுறுவதனால் அதனுள் பாதுகாப்பற்றிருந்த வல்லுனர்கள் இருவரும் உடனடியாக மரணிக்கின்றனர். வெளியே தொலைகாட்டியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவர்களில் மூவரில் ஒருவரும் மரணிக்க, அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரரான மெற் கோவ்லாஸ்க்கி (Matt Kowalski) யும் மருத்துவப் பொறியியலாளரான வீராங்கனையான டாக்டர் ரையான் ஸ்டோனும் (Ryan Stone)விண்வெளியில் வீசப்படுகின்றனர்.
தனது முதலாவது விண்வெளிப்பயணத்தில் வந்திருக்கும் டாக்டர் ரையான் மிகவும் பயந்து தவிக்கின்றார். ஆயினும் அனுபவஸ்தரான மெற் கோவ்லாஸ்க்கி தன்னிடமிருக்கும் உந்துவிசை வாயுக்கலனின் உதவியோடு ரையானைத் தேடிப்பிடித்து ஆசுவாசப்படுத்தியவாறு எப்படியாவது பூமிக்குத் திரும்பும் முயற்சியில் ஈடுபடுகின்றார். இதற்காக 1400 கிலோ மீற்றர் தூரத்தில் தாழ்வாக பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி உந்துவிசைக் கலனின் உதவியோடு பயணிக்கின்றனர்.
அவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தை இவர்கள் நெருங்கும் போது மெற் கோவ்லாஸ்க்கியின் வாயுக்கொள்கலன் தீர்ந்து விடுகின்றது. இதனால் விண்வெளி நிலையத்தை அடைந்து அதைப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்காக இருவரும் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கின்றது. முடிவில் ரையான் மட்டுமே பற்றிக்கொள்ள இருவரும் ஊசலாடுகின்றனர். இருவருமே சாவதைவிட ஒருவராவது உயிர் பிழைப்பதுதான் விவேகம் என்று கூறிவிட்டு பற்றிப்பிடித்துக்கொள்ள மெற் தன்னைத்தானே விடுவித்து Dr. Ryan னை விண்வெளி நிலையத்தினுள் சென்று உயிர்தப்புமாறு கூறுகின்றார்.
Dr. Ryan விண்வெளி நிலையத்தினுள்ளே நுழைந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றார். அதேவேளை மெற் முடிவில்லாத விண்வெளியில் கட்டுப்பாடின்றி மிதக்கின்றார். தொடர்ந்து வானொலித் தொடர்பில் இருக்கும் Matt, Dr. Ryan Stone க்கு பூமிக்குத் தப்பிச் செல்லக்கூடிய சாத்தியங்களை கூறியவாறு இறுதியில் தொடர்பற்றுப் போகின்றார்.
சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கு நிலையில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க பல சேதங்களோடு விண்வெளி வீரர்களால் கைவிடப்பட்ட நிலையில் வெறிச்சோடிக்கிடக்கின்றது. பூமிக்குத் தப்பிச் செல்வதற்குள்ள ஒரே வழியான சோயுஸ் தரையிறங்கு கலனும் தவறுதலாக பரசூட் விரிந்த காரணத்தால் புறப்படுவதற்குப் பொருத்தமில்லாத நிலையிலே விண்வெளி நிலையத்தின் பாகங்களுக்குள் சிக்குண்டு கிடக்கின்றது.
அதை விடுவிப்பதற்காக மீண்டும் Ryan விண்வெளி உலாவருகின்றார். அப்பொழுது நிகழும் விண்வெளிச் சிதறல்களின் தாக்குதலினால் எதிர்பாராத நல்விளைவாக சோயுஸ் தரையிறங்கு கலன் விடுபட்டுத் தனியாகின்றது. இதனால் நம்பிக்கை கொள்ளும்Ryan அதனுள் நுழைந்து இயக்குவதற்கு முயல்கின்றார். ஆயினும் எரிபொருள் தீர்ந்த காரணத்தால் அது கிளம்ப மறுக்கின்றது. இதனால் நம்பிக்கையிழந்த Ryan ஒரு கட்டத்தில் ஒக்ஸிஜனின் அளவைக்குறைத்து வைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றார். ஆயினும் மீண்டும் உத்வேகம் வந்து முடிவை மாற்றிக்கொண்டு மாற்று வழியொன்றைக் கண்டறிகின்றார்.
அதன்படி வெடித்து வேறாகும் வகையில் சோயுஸ் கொள்கலனை இயக்கி சற்றுத் தூரத்தில் பூமியை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் சீனாவின் Tiangong விண்வெளி நிலையத்தைச் சென்றடைகின்றார். அதுவோ சிறிது நேரத்தில் ஈர்ப்பு விசைக்குள்ளாகியதன் காரணமாக பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் இழுபடுகின்றது. காற்று மண்டலத்தினுள் பிரவேசித்ததும் விண்வெளி நிலையத்தின் பாகங்கள் உரசி தீப்பிடித்து வெடிக்கின்றன. ஆயினும் Ryan இருக்கும் Shenzhou குடுவைப்பகுதி தனியாகப் பிரிந்து வந்து தன்னியக்க பாரசூட் விரிதலுடன் அரிசோனா பிரதேசத்திலுள்ள ஏரியொன்றினுள் (Powel lake) வந்து வீழ்கின்றது.
குடுவையினுள்ளே ஏற்படும் புகையினால் வெளியேறுவதற்காக கதவைத் திறக்கின்றார் Ryan. இதனால் குடுவை நீர் நிறைந்து ஏரியின் அடியில் மூழ்குகின்றது. வெகுசிரமத்துடன் விண்வெளியுடையை கழற்றி விட்டு ஏரியின் மேல்மட்டத்திற்கு வருகின்றார். மெல்ல நீந்திக் கரைசேர்ந்து மணலில் வீழ்ந்து கிடந்த பின்பு எழுந்து நிற்பதுடன் வானை அண்ணாந்து பார்த்துவிட்டு தடுமாற்றத்துடன் முன்னோக்கி நடப்பதுடன் படம் முடிவடைகின்றது.
கதை இதுதான்.
-Mutur Mohammed Rafi