Thursday, March 13, 2014

பிரபல்யத்தின் விலை








துவரை தமிழ்கூறும் நல்லுலகில் எத்தனையோ பல எழுத்தாளர்கள் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்களிலே 'சுஜாதா'வும் ஒருவர்.


இந்த ஆளுமை மிக்க எழுத்தாளரைப்பற்றி சமகாலத்தவர்களான நமக்கு அதிகம் கூறவேண்டியதில்லை.

அவர் இறந்துபோய் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் ஏற்படுத்தி விட்டுச்சென்ற பாதிப்புகளிலிருந்து இன்னும் நீங்க முடியாமலும் விரும்பாமலும் இருக்கின்றோம்.

அத்தகைய மனிதரின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய சில 'நம்ப முடியாத' தகவல்கள் கடந்த ஆண்டின் மே மாதமளவில் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஒரு தினசரியில் வெளியாகி பரபரப்பேற்படுத்தியது. அவரை பல விதங்களிலும் சிலாகித்தவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் கூட அந்த விவரங்கள் அதிர்ச்சியாகவே அமைந்தன.

அதுகுறித்து பலரும் பலவிதமாக விமர்சித்தனர். எழுத்தாளனின் எழுத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஒரு சாராரும், 'இல்லை..இல்லை.. த. வா. யையும் சேர்த்தே அவனை புரிந்துகொள்ள வேண்டும்' என்று மற்றொரு சாராரும் விவாதித்து இன்றுவரை பட்டை கிளப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயம் பற்றி ஜெயமோகன் மற்றும் பலரும் என்ன கருதுகின்றார்கள் என்பதை கீழே தருகின்றேன். படியுங்கள்:

ஜெயமோகனிடம் ஸ்ரீகாந்த் எனும் வாசகர் கேட்கும் கேள்வியும் அதற்கான ஜெயமோகனின் பதிலும். (கேள்வி அதன் அநாவசிய நீளம் கருதி குறுக்கப்பட்டுள்ளது)


-Jesslya Jessly



 

Q: சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..

 
வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம். அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி வெளியாக உள்ளது..

 

'அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்... அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்... அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்... ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க... அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்...''

 

''அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு... சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது... சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை...

 

''அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்...''

 

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.

 
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா 'ஆப் தி ரெகார்ட்' பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது..

'எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்' என்று கூறியுள்ளார்..

 


 
ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆன பின் நொந்துகிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த  ஆசை?

 

இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா?

 

Answer:

அன்புள்ள ஸ்ரீகாந்த்,

 

நீங்கள் மிகவும் இளைஞர். ஆகவேதான் இந்தப்பதற்றம். யோசித்துப் பாருங்கள். இந்த வயதில் நீங்கள் வாழ்க்கையைப்பற்றி கொண்டுள்ள ஏராளமான நம்பிக்கைகள் வரும் வருடங்களில் அழியப்போகின்றன. விளைவாக நீங்கள் உடைந்து மறு ஆக்கம் பெறுவீர்கள். அந்த நிகழ்வுகள் மூலமே உங்களுடைய உண்மையான ஆளுமை உருவாகி வரப்போகிறது. அரசியல் நம்பிக்கைகள், ஒழுக்க நம்பிக்கைகள், தத்துவங்கள் பற்றிய மன உருவகங்கள் எல்லாமே மண்ணில் கால் பதிக்கப் போகின்றன. அதன் வழியாக நீங்கள் மதிக்கும் பலர் மதிப்பை இழப்பார்கள். பலர் புதிய வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரிவார்கள்

 

நம் இளமையில் கையை விட்டு சைக்கிள் ஓட்டும் ஒரு மாமாவை கண்டு வியந்து அவரை ஆதர்ச புருஷராக நினைத்திருப்போம். இன்று அப்படி இல்லை அல்லவா? இதுதான் வாழ்க்கையின் பரிணாமம். ஆகவே பிம்ப உடைவுகள் பற்றி பதற்றம் வேண்டாம். அது ஓர் இயல்பான நிகழ்வு

 

சுஜாதா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரது பிம்பம் ஒன்று உங்கள் மனதில் உருவாகி வந்துள்ளது. அதை கொஞ்சம் அவர் உருவாக்கினார். கொஞ்சம் ஊடகங்கள் உருவாக்கின. கொஞ்சம் நீங்களே உருவாக்கி கொண்டீர்கள் அது உடையாமல் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள். அப்படி உடையாமல் அதை பார்த்துக்கொள்ள வேண்டியது உலகத்தின் கடமை என நினைக்கிறீர்கள், இல்லையா? நடக்கிற காரியமா அது?

 

ஓர் இலக்கிய வாசகனாக நீங்கள் உண்மையின் பக்கம் நிலைத்திருக்க வேண்டும் இல்லையா? உண்மையை வழிபட வேண்டும். உண்மையை தேடவேண்டும் இல்லையா? பிறிதொருவர் பற்றிய உண்மையை இந்த அளவுக்கு அஞ்சும் நீங்கள் எப்படி உங்களைப் பற்றிய உண்மையை தேடிச்செல்ல முடியும்? எப்படி அதை எதிர்கொள்ள முடியும்? அப்படி முடியாவிட்டால் நீங்கள் வாசிக்கும் இலக்கியத்திற்கு என்னதான் அர்த்தம்?

 

நான் சில மாதங்கள் முன்பு ஒரு கட்டுரையில் சுஜாதாவின் வீட்டுக்குச் சென்றபோது அவர் பெரிய நாமம் தரித்து வந்ததைக் கண்டதாக எழுதியிருந்தேன். அப்போது இணையத்தில் பலர் என்னை வசைபாடினர். அவதூறு செய்கிறேன் என்றும், சுஜாதா மிக நவீனமானவர் என்றும் வாதாடினர். ஆதாரம் காட்ட முடியுமா என்று கூவினர். அவர்கள் இப்போது ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் எந்நிலையிலும் மனசாட்சிக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே சொல்கிறேன் என்று இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அது என் இலக்கியக் கடமை. அதைச்சொல்ல தைரியமில்லா விட்டால் இந்த வேலையை எதற்காகச் செய்ய வேண்டும்?

 

நானறிந்தவரை சுஜாதா மிக ஆசாரமானவ்ர். தென்கலை அய்யங்காராக மட்டுமே தன்னை உணர்ந்தவர். அது ஓர் உண்மை. அதை எதிர்கொள்ள ஏன் அஞ்சவேண்டும்? இப்போது அவரது மனைவி அவரைப்பற்றிச் சொல்லும் எல்லாமே உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் என் அப்பா அப்படித்தான் இருந்தார். சுஜாதா அவரது தலைமுறை. அவரது தலைமுறையில் அப்படி இல்லாதவர்கள் மிகமிக அபூர்வம். அதற்காக நான் என் அப்பாவை வெறுத்துவிட்டேனா என்ன? அவரை ஆராதிப்பதை விட்டுவிட்டேனா என்ன? அப்படி வெறுக்க ஆரம்பித்தால் சென்ற தலைமுறையில் எத்தனை பேர் நமக்குத் தேறுவார்கள்?

 

தலைமுறைகள் தோறும் மதிப்பீடுகள் மாறுகின்றன. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் பிற்பட்ட மதிப்பீடு கொண்டவர்களாகத்தான் தெரிவோம். மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலச்சூழலை வைத்துப் புரிந்து கொண்டால் இத்தகைய மனக்குழப்பங்களில் இருந்து தப்ப முடியும். எனக்கு சுஜாதா ஒரு பழைமைவாதி என நன்றாகவே தெரியும். அது எனக்கு அவர் மீதிருந்த மதிப்பை சற்றும் குறைக்கவில்லை. எனக்கு அவர் இலக்கியவாதி அல்ல, ஆனால் ஒரு வகையில் அவர் என் ஹீரோதான்.

 

அப்படியென்றால் சுஜாதாவின் நவீனத்துவ முகம் என்ன நடிப்புதானா? இல்லை. இலக்கியவாதியின் அகம் செயல்படும் விதமே அதுதான். படைப்புகளில் சுதந்திரப் போராட்டத்தை கிண்டலடித்த புதுமைப்பித்தன் நிஜ வாழ்க்கையில் சுதந்திரப் போரில் ஈடுபட விரும்பினார் என அரை நூற்றாண்டுக்குப்பின் அவரது மனைவி வெளிபடுத்திய கடிதங்கள் ஜகண்மணி கமலாவுக்கு ஸகாட்டின . சுதந்திரப்போரில் ஈடுபட முடியாமல் அவரை வாழ்க்கையும் நோயும் கட்டிப்போட்டன. ஆகவே அவர் அதை தன் ஆக்கங்களில் நக்கலாக மாற்றி வெளிப்படுத்தினார்

 

ஒழுக்கவாதியான சுந்தர ராமசாமி ஒழுக்க மீறல்கள் மீது ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தார். ஒழுக்க மீறலை வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜி.நாகராஜனின் அகம் ஒழுக்கம் மீதே படிந்திருந்தது. குறத்தி முடுக்கை அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் எழுத்து அவனை அப்படியே காட்டுவதில்லை. அவனுடைய ஆசைகளை, கனவுகளை, எதிர்பார்ப்புகளைக்கூடத்தான் அது காட்டுகிறது

 

நம் முந்தைய் தலைமுறையில்தான் அறிவியல் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பதை காணலாம். இன்று எழுபது, எண்பது வயதானவர்களிடம் இந்த இரட்டைநிலையைக் காணலாம். அவர்களுக்கு அவர்கள் வளர்ப்பு காரணமாக சாதி மதம் சார்ந்த ஆசாரவாத நோக்கு இருக்கும். கூடவே நவீன அறிவியல் வழிபாட்டு நோக்கும் இருக்கும். பிள்ளைகள் 'சயன்சும் கணக்கும்' படிக்க வேண்டுமென விரும்புவார்கள். சுஜாதாவின் அகம் ஆசாரமான சூழலில் உருவாகி நவீனத்துவம் நோக்கி எம்ப முயன்றது என்று சொல்லலாம். அவர் விஞ்ஞானியாக ஆக முயன்ற ஆசார வைணவர்.

 

இத்தகைய இருபாற்பட்ட ஊசலாட்டமே எந்த படைப்பாளியையும் உருவாக்குகிறது. அதுவே அவரை நுணுக்கமாக அவதானிக்கச் செய்கிறது. திண்ணையில் ஏறி நின்று ஊர்வலம் பார்ப்பதைப்போல என்று சொல்லலாம். ஊர்வலத்தில் செல்பவர்களுக்கு அதைப்பார்க்கும் கண் இருப்பதில்லை. சுஜாதா ஏறி நின்ற திண்ணை வைணவம். அவர் அவதானித்த ஊர்வலம் அறிவியல்.

 

எழுத்தாளனிடம் எழுத்தை எதிர்பார்க்க பழகுங்கள். அவனுடைய எழுத்தைப் புரிந்து கொள்ள அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை கவனியுங்கள். அந்தரங்க வாழ்க்கையை வைத்து எழுத்தாளனை மதிப்பிடாதீர்கள். அப்படி மதிப்பிடப்போனால் உலகில் மிக மிகச் சில எழுத்தாளர்களே எஞ்சுவார்கள். எழுத்தாளனின் அகம் கொந்தளிப்புகளும் ஊசலாட்டங்களும் நிறைந்தது. அவனுடைய நிலையின்மையே அவனை எழுத்தாளனாக ஆக்குகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்

 

கலைஞர்களை தத்துவவாதிகளுடன் ஒப்பிடக்கூடாது. தத்துவஞானியின் ஒருமையும் தர்க்க ஒழுங்கும் கொண்ட நோக்கு அவனிடம் இருக்காது. கலைஞனை அரசியல் செயல்பாட்டாளர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒற்றை நோக்கும் அர்ப்பணிப்பும் தைரியமும் இருக்காது. கலைஞர்களை சாதாரணமான நல்ல மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் சாதாரண மனிதர்களின் எளிய வாழ்க்கை நோக்கு இருக்காது

 

கலைஞனிடம் மேலே சொன்ன எவரிடமும் இல்லாத ஒரு விஷயம் இருக்கிறது. மொழியைக் கருவியாக்கி ஆழ்மனதுக்குள் செல்லும் நுட்பம். ஆகவேதான் அவர்கள் எவரை விடவும் கலைஞன் காலத்தில் வாழ்கிறான். சமூகத்தின் ஆழ்மனம் கலைஞன் வழியாகவே முன் செல்கிறது. கலைஞன் மட்டுமே ஒரு சோற்றுப்பதம் கொண்டு ஒரு பானைச்சோற்றை மதிப்பிட முடிகிறது. அதற்காகவே நாம் இலக்கியத்தை வாசிக்கிறோம்

 

நாம் எழுத்தாளர்களிடம் அவர்கள் எழுத்தை விட்டுவிட்டு என்ன செய்தார்கள் என்பதையே பார்க்கிறோம். சுதந்திரப்போரில் ஈடுபட்டார், ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். அரசியல் போர்களில் முன்னணி வகித்தார், மக்கள் சேவை ஆற்றினார், ஆகவே நல்ல எழுத்தாளன் என்கிறோம். முற்போக்குச் சிந்தனையாளர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனியவர் ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். இவையெல்லாம் அல்ல எழுத்தாளன். எழுத்துதான் எழுத்தாளன்.

 

இந்த அடிப்படைகள் இலக்கியம் வாசிப்பவனுக்கு இயல்பாகவே பிடி கிடைக்கும். உலக இலக்கியவாதிகளில் சிலரையேனும் அவதானித்திருப்பவனுக்கு புரியும் . மலையாளம் போன்ற சூழல்களில் இதை மீண்டும் மீண்டும் பேசி நிறுவிய விமர்சகர்களும் இலக்கிய இதழாளர்களும் உண்டு. தமிழில் நமக்கு இலக்கிய அடிப்படைகளை எவருமே சொல்லித் தருவதில்லை. நாமே புரிந்துகொள்ளும் அளவுக்கு வாசிப்பும் இல்லை. ஆகவேதான் எழுத்தாளனை நோக்கி 'நீ என்ன சமூக சேவை செய்தாய்?' என்றெல்லாம் கேட்கும் கோழிமுட்டை மொண்ணைத்தனம் நமக்கு வாய்த்திருக்கிறது

 

சுஜாதாவின் மனைவி வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் செய்திகளினால் என்ன ஆகப்போகிறது? சுஜாதா தமிழின் உரைநடையை நவீனப் படுத்திய முக்கியமான நடையாளர் என்பது இல்லை என்றாகி விடுமா? இல்லை அவர் எழுதிய நல்ல சிறுகதைகளும் நாடகங்களும் மோசமானவை ஆகிவிடுமா? இல்லை அவர் தமிழின் பெரும் பத்திரிகை சூழலில் அறிவியலை அறிமுகம் செய்தவர் என்பது மறைந்து விடுமா?

 

நான் அவரை என் நாயகனாகவே இன்றும் வைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவரது எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் உள்ளவரை அவர் அப்படித்தான் நீடிப்பார். அவர் அவற்றை எழுதவில்லை சமையற்காரன் தான் எழுதினார் என்று நிரூபிக்கப் படுமானால் அதை மறுபரிசீலனை செய்வேன்.