Thursday, July 11, 2013

குளிக்கப்போய் சேறுபூசும் நேத்ரா டீவி






ன்றைய தினம் (11.07.2013)  மாலை நமது நேத்திரா டீவி யில் ஒளிபரப்பான நோன்பு திறக்கும் விசேட ஒளிபரப்பினைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது மலைகள் பற்றி குர்-ஆனிலே குறிப்பிடப்படும் சில தகவல்கள் என்று பட விளக்கத்துடன் ஒரு நிகழ்ச்சியைக் காண்பித்தார்கள்.


'அடடா நமது ஆன்மீக நிகழ்ச்சிகளிலே அறிவியல் புகுந்து விளையாடுகின்றதே' என்று ஆவலுடன் பார்த்தபடியிருந்தவர்கள் பலர் அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் நெளிந்தார்கள். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகவும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களாகவும் இருந்ததே அதற்குக் காரணமாகும்.


ஆறாம் தரத்தில் ஆரம்ப புவியியல் பாடத்தைப் படிக்கும் ஒரு மாணவன் கூட கைகொட்டிச் சிரித்துவிடக்கூடியதாக இருந்தது அந்த 'ஆன்மீக அறிவியல்' நிகழ்ச்சி.


பாவம் நமது நேத்திரா டீவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.


ஆன்மீகத்தை மக்கள் இதுவரை எதுவித தடங்கலுமின்றி நம்பிக்கொண்டு இருக்கின்றபோது, இத்தகைய நிகழ்ச்சிகள் என்ன நோக்கித்திற்காக உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன என்பதுதான் எனக்குப் புரியவில்லை.


'இதோ பாருங்கள் எங்கள் ஆன்மீகத்துக்குள் இருக்கும் அறிவியலை!' என்று யாருக்கோ கலர்ஸ் காட்டப்போய்.... குளிக்கச் சென்று சேற்றைப் பூசிக்கொண்ட கதைபோலாக்கி விட்டார்கள், நமது நேத்ரா டீவி யினர்.


இப்படியெல்லாம் அறிவியலை திரித்து ஆன்மீகத்துக்குள் இறக்கினால், புவியியல் உண்மைகள் புரியாதவர்களும் டீவியில் எதைக்காண்பித்தாலும் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களும் வேண்டுமானால் நம்பலாம்.
ஆனால், சின்னஞ் சிறுபாராயத்திலிருந்தே அறிவியலை கற்றுவரும் புதிய தலைமுறைகள் இப்படியான திரித்தல்களை எவ்வாறு  ஏற்றுக்கொள்வார்கள்...?


'பூமியை தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?' (குர்-ஆன் 78:7)


இதில் மலைகளை முளைகளாக ஆக்கியிருப்பதாக குர்-ஆன் கூறுகிறது என்கிறார்கள் . இந்த வசனத்தில் மட்டுமல்லாது இன்னும் பல வசனங்களில் (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) மலைகளை 'முளைகள்' என குர்-ஆன் குறிப்பிடுகிறது.

சரி, மலைகளை முளைகளாக குறிப்பிடுவதில் உள்ள அறிவியல் உண்மை என்ன?



நாம் வாழும் பூமி பலவித அடுக்குகளாக உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் வேறு வேறு கனத்தில் அமைந்திருக்கிறது. வேறு வேறு கனத்தில் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ள பூமி சுற்றிக்கொண்டேயிருக்கிறது. ஒரு சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் எப்படி பல்வேறு அடுக்குகளும் அதே சீர்வேகத்தில் சுழல முடியும்?





ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு வேகத்தில் சுழலும் சாத்தியமுண்டல்லவா? ஆனால் அப்படி வேறு வேறு வேகத்தில் சுழன்றால் பூமி பூமியாக இருக்குமா? உயிரினங்கள் நிலைத்து வாழ முடியுமா?

இருப்பினும் அப்படி வேறு வேறு  வேகத்தில் சுழலாமல் ஒரே வேகத்தில் எப்படி சுழல்கிறது என்றால், மலைகள் பூமியில் முளைகளாக நடப்பட்டு பல்வேறு அடுக்குகளையும் ஒன்றாக இறுக்கிப்பிடித்து வைத்திருப்பதனால் தான் பூமி ஒரே சீரான வேகத்தில் சுழல்கிறது. அதனால் தான் நாமெல்லாம் வாழ முடிகிறது.


ஆகா இது எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மை?


நாம் வாழும் இந்த பூமி பல அடுக்குகளாகத்தான் இருக்கிறது. அதிலே பிரச்சினையில்லை. ஆனால் மலைகள் முளைகளாக இறுக்கிப் பிடித்துவைத்திருப்பதால் தான் பூமியால் சீராக சுழலமுடிகிறது என்று கூறுவதிலுள்ள அறிவியல் உண்மை என்ன?


முதலில் பூமியின் அடுக்குகளைப்பார்ப்போம். பூமியை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அதன் திணிவை மூன்றாக பிரிக்கலாம்,



1. inner core
2. outer core
3. mantle


இதில் இன்னர் கோர் திடப்பொருளாகவும், அவுட்டர் கோர் பாறைக்குழம்பாக திரவப்பொருளாகவும், மேண்டில் கனிம வளங்களை உள்ளடக்கிய திடப்பொருளாகவும் இருக்கிறது. மேண்டிலை மட்டும் அணுக்கமாகப் பார்த்தால் ஏதினோஸ்பியர், லிதோஸ்பியர், க்ரஸ்ட் என்று சில அடுக்குகளாகப்பிரிக்கலாம்.

இவற்றில் crust  என்பதில்தான் நாம் காணும் கடல், மலை, நிலம் என்று அனைத்தும் உள்ளன. இந்த க்ரஸ்டின் கனம் அதிகபட்சம் நூறு கிலோமீற்றர் வரை இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் நூறு கிலோமீற்றர் அளவுக்கு இல்லை சமமற்ற முறையில் ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கிறது. சில இடங்களில் பத்து கிமீ இருக்கலாம், சில இடங்களில் 20, 30 என அதிகபட்சம் 100 கிமீவரை.


இந்த அதிகபட்ச ஆழமானது மலைப்பகுதிகளில் இருக்கிறது. இதை வைத்துத்தான் இவர்கள் மலைகளை முளைகள் என்கிறார்கள்.





கவனிக்கவும் (படம்) மலைகளின் வேர்கள் எந்த அடுக்கையும் ஊடுருவிச்செல்லவில்லை. மற்ற இடங்களை விட அதிக ஆழமாக இருக்கிறது அவ்வளவுதான். இதை முளை என்றும் எல்லா அடுக்குகளையும் இறுக்கிப்பிடித்திருக்கிறது என்றும் கூறுவதற்கு  அசகாயத் துணிச்சல் தேவை.





"பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், ............அமைத்தான்.......... இந்த வசனத்தில் மலைகள் அதாவது முளைகள் இருப்பதால் தான் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்கிறது' என்று குர்-ஆன் கூறுவதாக நேத்ரா டீவியிலே இன்று மாலை சொல்கின்றார்கள்.


மலைகள் என்று கொண்டாலும் முளைகள் என்று கொண்டாலும் இதில் பொருள் மயக்கம் வருவதில்லை ஆனால் சொற்றொடரின் பொருளோ மயக்கம் வரவைக்கும் அளவிற்கு இருக்கிறது.


பூமி நம்மை அசைப்பதே இல்லையா?


அவ்வப்போது அது நிலநடுக்கம் எனும் பெயரில் நம்மை அசைத்து பல உயிர்களை கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறது தூரப்பகுதிகளை விட்டுவிடுவோம், மலைப்பகுதிகளிலாவது நிலநடுக்கம் வராமலிக்கிறதா? பல மாதங்களுக்கு முன்பு கூட ஈரான், இத்தாலிய மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் வரை மரணமடைந்தனர். ஆனால் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்ததாக குர்-ஆன் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.



பூமியின் மேற்பரப்பு கண்டத்தட்டுகளாக அமைந்திருக்கிறது.  நிலப்பகுதியிலும் கடல்களுக்கு அடியிலுமாக பூமி ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,ஆஸ்திரேலிய, யூரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக், கோகோஸ், நாஸ்கா, இந்தியா என்று பத்து பெரிய தட்டுகளாகவும்; இன்னும் சில சிறிய தட்டுகளாகவும் அமைந்துள்ளன.


அதேவேளை இந்தக் கண்டத்தட்டுகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. ஆண்டுக்கு ஒரு சென்ரிமீற்றர் முதல் 13cm வரை நகர்கின்றன. சில ஒன்றை ஒன்று விலகி நகர்கின்றன. சில ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.


இந்த நகர்வுகளை அல்லது அசைவுகளை மலைகள் கட்டுப்படுத்துகின்றனவா?


மாறாக இந்தியத்தட்டு யுரேசியத்தட்டுடன் மோதுவதால் தான் இமய மலை தோன்றியது இன்னும் ஆண்டுக்கு ஆண்டு அது வளர்ந்துகொண்டும் இருக்கிறது. புவியியல் அமைப்புகள் இப்படி இருக்க, மலைகள் எந்த அசைவைக்கட்டுப்படுத்துகின்றன?


இன்றுள்ள குர்-ஆனில் இதற்கு விளக்கம் ஒன்றுமில்லை, ஹதீஸ்களிலும் கூறப்படவில்லை. பின் யார் இதை விளக்குவது? தயவு செய்து வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்.


பூமிக்குள் மனிதனால் எவ்வளவு ஆழத்திற்கு செல்லமுடியும்?
அதிக அளவாக இதுவரை மூன்று கிலோமீற்றர் வரை சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். பத்து கிலோமீற்றருக்கு அதிகமான ஆழத்திற்கு குழாய்களை இறக்கியிருக்கிறார்கள். மூன்று கிலோமீற்றருக்கு கீழே மனிதர்கள் இறங்கவோ, இன்னும் ஆழமாக குழாய்களை இறக்கவோ தேவை ஒன்றும் இப்போதைக்கு ஏற்படவில்லை என்றாலும் இன்னும் ஆழமாக கீழே செல்வது சாத்தியக்குறைவானதுதான். ஆழம் செல்லச்செல்ல அதிகரிக்கும் வெப்பம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்கள் என பல பிரச்சனைகள் உள்ளன.


பூமியை பிளந்து மலையின் உச்சியளவுக்கு மனிதனால் செல்லமுடியாது என குர்-ஆன் உறுதியாக குறிப்பிட்டிருப்பதாக பலர் கதையளக்கின்றார்கள். பூமியில் உயரமான மலை இமயமலை, எவெரெஸ்ட் சிகரம் உயரம் சற்றேறக்குறைய 9 கிமீ. பூமியின் உயரமான மலையளவான இந்த அளவிற்கு பூமிக்குள் மனிதனால் செல்லமுடியாது என்று விவரிக்கிறார்கள்.


ஆனால், குர்-ஆன் அப்படி எங்காவது கூறியிருக்கிறதா?


"பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்" (குர்-ஆன் 17:37) பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. 


ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? "நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது."  


இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குர்-ஆனின் அறிவுரை இது.

பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குர்-ஆன் வாயிலாக இறைவன் நமக்குச் சொல்ல வருவது.


ஒரு ஒப்பீட்டுக்காக இறைவன் நமக்கு கூறுவதை அறிவியலாக எப்படி திரித்துவிட்டார்கள் பார்த்தீர்களா?


பிற்காலத்தில் மனிதர்கள் மலையின் உச்சியை ஏறியே அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள்  என்பதெல்லாம் அன்று இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.


நமது மதம் அறிவியல் சார்பான மதம், அறிவியலை முன்னறிவித்த மதம் என்று காட்டுவதற்காக எந்தவிதமான திரித்தலையும் செயலையும் செய்வதற்கு இந்த நேத்திரா டீவி யினர் போன்றவர்கள் பலர் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான் இவையே தவிர வேறு ஏதுமில்லை.

 - Omar Mukthar