Monday, March 5, 2012

சிறுகதை:






ஆறுகால்
விமானங்கள்!




நேற்று மாலையில் இருந்தே பசி தாங்காமல் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றேன். சரியாக ஒரு முழுநாளும் கடந்து விட்டது. இன்னமும் நான் கொலைப்பட்டினி என்றால் நம்புவீர்களா? அங்குமிங்கும் அலைந்து திரிந்தாலும் யாரும் வசமாக மாட்டுகிறார்களில்லை. வயிறு ஒட்டிப்போய் கால்களெல்லாம் பலமிழந்தது போய் தொய்ந்து கிடக்கின்றது. இருந்தாலும் நம்பிக்கையிழக்கவில்லை நான்.

'உணவு கிடைக்காத காலங்களிலே மெல்ல அலைச்சலைக் குறைத்து ஓய்வெடுத்துக்கொள்வதே உத்தமம்' என்பதுதான்  என்னைப் போன்றவர்களின் மூளையின் ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளுமிருக்கும்  செய்தி. எங்கள் உடல் மொழிகளே அதை நினைவூட்டி  விடும். ஆனாலும் யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி வந்து மாட்டாமலா போய் விடுவான்? அப்படி ஒருவன் வந்துசேரும் வரைகூட காத்திருக்கப் பொறுமையில்லை எனக்கு. எதையும் தேடியலைந்து உண்ணும் வேட்டையில்தான்  எனக்கு எப்போதுமே ஒரு அலாதி இன்பம். இருந்தாலும் இன்றைக்கு என் நிலைமை கொஞ்சம் மோசம்தான்.
கடைசி முயற்சியாக அயலிலிருந்த ஒரு தகரக்கூரை வீட்டினுள்ளே  மெல்ல எட்டிப் பார்த்தேன். அதற்குள் சிறு மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கைச் சுற்றியிருந்து இரண்டு மூன்று பையன்கள் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்கள். 'ஆகா! இதுதான் எனக்குப் பொருத்தமான வெளிச்சம்..புகுந்து விளையாடிட வேண்டியதுதான்' என்று வாயைச் சப்புக்கொட்டி உள்ளே நுழையப் தயாரான போதுதான்  சே!அந்தச் சண்டாளி- அந்தப் பையன்களின் தாய்- சட்டென வந்து, 'கரண்ட் வந்திட்டுது பிள்ளைகள்..சரி இனி லாம்பை ஊதி நூத்து விடுங்க' என்று மின்குமிழை எரியச்செய்து காரியத்தையே கெடுத்து விட்டாள், பாவி!

கண்ணெல்லாம் கூசிப்போய் துண்டைப்பிடி துணியைப்பிடியென்று ஒரே பாய்ச்சலில் பறந்து வந்துவிட்டேன். ஆம், இப்போது கொஞ்ச காலமாக வெளிச்சம் பிரகாசமாக இருந்தால் போதும். அத்தனை கண்களும் வலிக்கின்றன. அவற்றிலும் நிறையவே பழுதடைந்து பார்க்கும் உருவமெல்லாம் ஓட்டைகள் விழுந்து நெய்யரி வடிவத்தில்தான்  தெரிகின்றது. 

ஆம்! எனக்குப் புரிந்துவிட்டது.

நீண்ட காலம் வாழ்ந்து புணர்ந்து கணக்கில்லாமல் வாரிசுகள் ஈன்று அடுத்த சந்ததியை வளப்படுத்தியவள் நான். வயதாகி விட்டது. இனி எனக்கு இயற்கை மரணம்தான். சின்ன வயசிலே எவ்வளவு சுறுசுறுப்பான பெண் நான் தெரியுமா? எவ்வளவு வெளிச்சமிருந்தாலும் கும்மிருட்டானாலும் சும்மா அதிரடியாய் வேட்டையாடுவேன். வேட்டையிலே துடிக்கத் துடிக்கக் கடித்துச் சுவைத்து விட்டு கணப்பொழுதில் கம்பி நீட்டுவேன். என் அழகையும் இளமையையும் பார்த்து எத்தனை பயல்கள்தான் சுற்றித் திரிந்திருக்கிறான்கள்.  வேட்டைக்கு வந்த இடத்திலே என்னைப் பார்த்து கவனம் பிசகி அடிவாங்கியே உயிரை விட்டவன்கள் எத்தனைபேர். குறிதவறி விபத்தில் மாட்டியவனும் நெருப்பில் விழுந்தவனும் இராட்சதக் காற்றாடிக்குள்ளே அகப்பட்டு கால்களை உடைத்துக் கொண்டவனும்தான் எத்தனை எத்தனை?

எவ்வளவு சுவாரசியமான காலங்கள் அவை.  சுதந்திரம், சந்தோசம், காதல், காமம், சோகம், ஏமாற்றம், துணிவு...என்று கலவையான அனுபவங்கள். எத்தனை வீரதீரச்செயல்கள்,.. வேடிக்கை நிகழ்வுகள், அனுபவங்கள்...அவற்றில் எதைச் சொல்வது எதை விடுவது? ஆங்! இருங்கள்! ஒரு அனுபவம் உள்ளது. அதை நிச்சயம் நீங்கள்  கேட்கத்தான் வேண்டும்.  அதைச் சாகும்போது நினைத்தாலும் ஒருதடவை சிரித்துவிட்டுத்தான் சாவேன் என்றால் பாரத்துக் கொள்ளுங்களேன்.

அது ஒரு புதன்கிழமையின் காலைநேரம். திருகோணமலை  நீதிமன்ற வீதி வழியாக மனையாவெளியிலுள்ள வண்ணான் குளத்தை நோக்கிப்போய்க் கொண்டிருந்தேன்.  அப்போது திடீரென அடித்த பலமான காற்றிலே எப்படியோ வழிதவறி ஒரு பெரிய கட்டிடத்திற்குள் வந்துவிட்டேன்.
அது ஒரு பெரிய மண்டபம். சிறு மேடை போலிருந்த ஒரு முனையிலே நீளமான மேசைகளும் பெரிய நாற்காலிகளும் போடப்பட்டிருக்க மண்டபம் முழுவதும் குறிப்பெழுதுவதற்கு வசதியாக ஒருபுறம் சற்று அகலக் கைப்பிடி வைத்த நாற்காலிகளால் நிறைந்திருந்தது. மண்டபத்தின் ஒரு முனையிலிருந்த சுவரிலே ஒரு பெரிய  வெள்ளை நிறப்பலகை மாட்டியிருந்தது. அதிலே ஒரு பெண்ணை ஓவியமாய் வரைந்து வைத்திருந்தார்கள். அதை உற்றுப் பார்த்தேன். அட! என்ன ஆச்சரியம்?  அது ஏறத்தாழ என்னைப் போலவே இருந்தது.  தூரத்தில் இருந்து அது நான்தான் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்பி விடுவீர்கள். நீண்ட கால்களையெல்லாம் எடுப்பாக நீட்டியபடி ஒய்யாரமாக நான் நின்றிருந்தேன், படத்தில். அதன் கீழே என்னவெல்லாமோ எழுதி வேறு வைத்திருந்தார்கள்.

சரி, வந்ததுதான் வந்தோம் இங்கே என்னதான் நடக்கிறது என்று பார்த்திட்விட்டுத்தான் போவோமே என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் வாகனங்கள் சில வந்து நிற்கும் சத்தங்கள் கேட்டன. மூக்குக் கண்ணாடிகள், கழுத்துப்பட்டிகள் , தொந்தியில் வழுகும் நீளக்கால்சட்டைகள் அணிந்த வழுக்கைத்தலை மனிதர்கள் நிறையப்பேர் பைல்களை அள்ளிக் கொண்டு உள்ளே நுழைய அவர்களின் பின்னே மெலிந்த சில வற்றல் உருவங்கள் ஏதேதோ கம்பிகள் நீண்ட குழாய்கள் போன்றவற்றையெல்லாம் சுமந்து கொண்டு வந்தன. மெல்ல மெல்லக்கூட்டம் அதிகரித்து நாற்காலிகள் நிரம்பின.  சற்று நேரத்தில் மண்டபம் முக்கால்வாசி நிறைந்து விட்டது. மின்விளக்குகள் அத்தனையும் எரிந்து மின்விசிறிகள் சுழல மண்டபமே பளிச்சென்றிருந்தது.

மேடையில் அமர்ந்திருந்த ஓர் உயரமான வழுக்கைத்தலை ஆசாமி தொண்டையைச் செருமிக் கொண்டு ஏதோ பேசத் தொடங்கினார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையென்றும் கூறலாம். அவர் என்னவெல்லாமோ நிறையப் பேசினாலும் எனது கவனமெல்லாம் சுவரில் வரையப்பட்டிருந்த என்னையொத்த அந்த உருவத்திலேதான்  இருந்தது. அதைப் பற்றி ஏதாவது பேசுகிறார்களா என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இலேசாகக் கொட்டாவி வர ஆரம்பித்து விட்டது. பகல் தூக்கமில்லாத நேரங்களில் இப்படித்தான் கண்ணைக்கட்டுவது வழக்கம். போதாதற்கு வரும் வழியில் ஒரு நல்ல வேட்டை வேறு மாட்டியிருந்தது. அதிலே வயிறுமுட்ட ஒரு பிடிபிடித்து விட்டு வந்ததால் தூக்கம்  சுற்றியடித்தது. அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்.

எனக்கொரு பழக்கம் கண்ணயர்ந்தால் போதும், கனவு வந்து விடும்.

அப்படித்தான் அன்றும் வந்தது. சினிமாவில் படம் ஆரம்பித்ததும் தணிக்கைக்குழுச் சான்றிதழ் காட்டுவார்களே அதுபோல  நான்  கனவு காண ஆரம்பித்தால் ஒவ்வொரு முறையும் நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருக்கும்  ஆலமரத்தடிக் கோயில்குளம்தான் முதலில் வரும். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் வளவுக்குள்ளேயும் குடிசைகளுக்குள்ளேயும் போய் நின்று ரகசிய வேட்டையை ஏதோ பெரிய உலகசாதனை போல பேசிக்கொண்டிருக்கும் என் சிறுவயது நண்பர்கள் வருவார்கள். அதன் பிறகுதான் புதிய கனவின் காட்சிகள் ஆரம்பமாகும். அன்றும் அப்படித்தான் வந்தது. பின்பு ஏதேதோ காட்சியெல்லாம் காலப்பிரமாண ஒழுங்கின்றி வந்து கொண்டிருந்தது.

தம்பலகாமம் ரயில் நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்து  ஆசைகாட்டி என்னை இங்கே நகரத்துக்குக்  கூட்டி வந்தவளான கொழும்பு நண்பி சரோஜி வந்தாள். கனவில் கூட ஆதவன் பட சரோஜாதேவி போல மிகை ஒப்பனையுடன்தான்; இருப்பாள் அவள். அதன் பிறகு இங்கே டவுனுக்கு வந்த புதிதில் என்னைக் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய அந்தப் படுபாவி வந்தான். கிராமத்திலிருந்து வந்தவளை என்னமாய் நைச்சியமாய்ப் பேசிக் கிறங்கடித்தான். முன்னும் பின்னும் சுற்றியலைந்து பாட்டுப்பாடி இந்த உலகத்தில் என்னைக் கவனிப்பதைவிட தனக்கு வேறுவேலையே கிடையாததைப் போல பாசாங்கு செய்து பின்னாலேயே திரிந்தான் அந்த நயவஞ்சகன்.  பின்பு தனக்குத் தேவையானதை அனுபவித்து முடித்து என்னைக் கர்ப்பமாக்கியதும் கழன்று கொண்டான் படுபாவி.

அவனது வாரிசுகளைச் சுமந்து கொண்டு தன்னந்தனியாகக் கஷ்டப்பட்டுத் திரிந்தவளை மறந்து விட்டு ஏதோ இந்த உலகத்திலேயே பிஸியானவன் போல கொஞ்ச நாள் போக்குக் காட்டியவன் பின்பு வேறு ஒருத்தியுடன் அலைந்தான். எனது முதல் பிரசவத்துக்கே கூட அவன் வரவில்லையென்றால் நம்புவீர்களா? கண்ணீரிலும் தண்ணீரிலுமாக  பிரசவித்த  வாரிசுகளையெல்லாம் அவமானந்தாங்காமல் நான் இரகசியமாய் கைவிட்டோடிய அந்த சோக நாளை என்னால் மறக்கத்தான் முடியுமா? பாவிமகன்! இவன் ஏன்தான் இன்னும் எனது கனவில் வந்து கொண்டிருக்கிறானோ...? அவனுக்குப் பிறகு இந்த பரபரப்பான நகர வாழ்வில்தான் எத்தனை காதல்கள்.. எத்தனை கூடல்கள்? எண்ணிக்கையே மறந்து போன பிரசவங்கள்தான் எத்தனை...ம்ம்! எல்லாம் பழகிப்போய்..பழசாகிப்போ...'

'படபடபடபடபடபட' வென்று திடிரெனக்கிளம்பிய கைதட்டல் ஒலியில் கனவு கலைந்து துள்ளியெழுந்தேன்.

மேடையில் முதலில் பேசியவர் அமர, மற்றுமொரு வழுக்கைத் தலையர்  வந்தார். கையிலே குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு சுவரிலிருந்த எனது படத்தில் தொட்டுத் தொட்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் இருந்த எனது படத்தோடு வேறு சிலவற்றையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நாங்கள் ஓய்வெடுக்கும் இடங்கள், குளியலறைகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றின் படங்கள் கூட அங்கு இருந்தன. இதைல்லாம் இவர்களுக்கு எதற்குச் சொல்லித் தருகின்றார்கள்...?

அடச்சீ! இதென்ன கூத்து? எங்களது பிரசவங்கள் சம்பந்தமான படங்களையெல்லாம் வைத்திருக்கிறார்களே. ஓ! இது அநியாயம்! அப்பட்டமான உரிமைமீறல் இது! ஐயோ! போதாதற்கு அதையெல்லாம்  தொட்டுத் தொட்டுக்காட்டி வேறு கொச்சைப் படுத்துகின்றார்களே! அதுமட்டுமல்ல, அதோ எங்களது குழந்தை வாரிசுகளின் வளர்ச்சிப் பருவங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அதுசரி, எங்களது அந்தரங்கமெல்லாம் இவர்களுக்கு எதற்கு?

சரி, என்னதான் சொல்லுகிறார் என்று கொஞ்சம் காது கொடுத்தேன். 'நண்பர்களே! இது நமது உயிர்களுக்கெல்லாம் விடுக்கப்பட்டுள்ள பலத்த சவால். எனவே கடந்த காலங்களைப் போல இதைச்  சாதாரணமான ஒன்றாக நினைத்து விட்டு விடக்கூடாது. எங்கேயெல்லாம் இருக்கிறார்களோ வளர்கின்றார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அவற்றையெல்லாம் அழித்தொழித்தாக வேண்டிய அவசியம் வந்துவிட்டது. நமது தலைமுறையினரைப் பாதுகாப்பதற்காக இந்த அழித்தொழிப்பை நாம் உடனடியாக இன்று முதல் புதிய வேகத்துடன் செய்வோம்!'

'அட! படுபாவிகளா! இப்போதுதானே விளங்குகின்றது உங்கள் இனஒழிப்புத் திட்டம்? எங்களைப் பூண்டோடு அழித்து விட்டு நீங்கள் மட்டும் நன்றாக வாழத்திட்டமா?'

எனக்கு வெறியே பிடித்து விட்டது. 'அடேய்! இருங்கடா இதோ வாறேன்'  என்று  பிரகாஷ்ராஜ் கணக்காய் கத்திக் கொண்டு அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து புறப்பட்டேன். மேடையில் வீற்றிருந்த தொந்தி கணபதிகள், வழுக்கைத் தலையர்கள், படம் போட்டவன்கள் கூட்டத்துக்கு வந்தவன்கள், கேட்டுக் குறிப்பெடுத்தவன்கள்.... என்று அவர்களிலே எந்தத்தரப்பையும் விட்டு வைக்காது கண்ணில் பட்டவன்களையெல்லாம் தாக்கித் துவம்சம் செய்தேன். என்னுடைய தாக்குதலின் வலிதாங்காமல்  திருப்பித் தாக்கத் தேடியவர்களை  வெட்டுப்போட்டுக் கோபமூட்டி ரசித்தேன்.
ஆனாலும் அந்த இராட்சசன்கள் என்னையும் எனது தாக்குதலையும் ஒரு பொருட்டாகவே கணக்கெடுக்காமல் தங்களது நிகழ்வை நடாத்திக் கொண்டிருந்தான்கள். அதைத்தான் என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. இறுதியில் மண்டபத்தை இருட்டாக்கி விட்டு பிரமாண்டமான திரையில் அசைந்து திரியும் எங்களது சகல பருவங்கனின் தோற்றங்களையும் படம் போட்டுக் காட்டினான்கள்.  அதிலே எங்களை எப்படியெல்லாம் முற்றாக அழித்து முடிக்கலாம் என்பதை செய்கைமுறை விளக்கங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தான்கள் அந்த இரக்கமற்ற பாவிகள். அதைப் பார்த்ததும் உடம்பே வெலவெலத்துப் போனது எனக்கு.

இதை எப்படியாவது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அவர்களை எச்சரித்தாக வேண்டும் என்று பரபரத்தது மனது. உடனடியாக அங்கிருந்து வெளியேறி கண்ணில்பட்ட  எனது சகாக்களையெல்லாம் நிறுத்தினேன். ஒவ்வொரு மரத்தின் கீழும் சில பையன்கள் தனது காதலிகள் சகிதம் ஸ்டைலாக நின்றிருந்தான்கள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடியோடி அவன்களிடம் விசயத்தைச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் என் வாய் நொந்ததுதான் கிடைத்த பலன். ஒருவனாவது எனது கதையை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டுமே..... 'ஆ! அப்படியா சேதி?' என்று ஏதோ, 'இன்றைக்கு நிலாவெளியில மழையாமே' என்பது போல கேட்டு விட்டு அவனவன் வேலையைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தான்கள்.
 'சே! காமக் கிறுக்கன்கள்'
எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. எவ்வளவு பெரிய சீரியஸான விசயத்தைத் தற்செயலாகக் கண்டு அங்கேயே கிடந்து துப்பறிந்து கண்டுபிடித்துச் சொல்கிறோம். இவன்கள் என்னடா என்றால்  குடிபோதையிலும் பெண்களோடு சுற்றுவதிலுமே பொழுதைப் போக்கிக் கொண்டு கவனிக்காமலல்லவா இருக்கிறான்கள். இந்தப் பையன்களே இப்படித்தான். பக்கத்தில் பெண்கள் இருந்து விட்டால் போதும்.  'காலுக்குள் பாம்பு' என்பதும் 'கடிதம் வந்திருக்கிறது' என்பதும் ஒரே செய்திதான். கவனிக்கவே மாட்டான்கள்.

சரி, அவன்கள் கிடக்கட்டும். என் போன்ற பெண்கள்தான் இனப்பற்றுள்ளவர்கள். பொறுப்பானவர்கள். புத்திசாலிகள். ஓகே! யாராவது நண்பிகளிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே என்னைக் குறுக்கறுத்து விரைந்து கொண்டிருந்தாள்   நம்ம ஆதவன் 'மேக்கப் சரோஜாதேவி'.
'ஏய், சரோஜி..சரோஜி நில்லுடி!' அவளைப் பின்னாலேயே துரத்திப் போய் க்றீன் ரோட் சந்தி தாண்டியதும் நடுவழியில் மடக்கி விசயத்தை விபரமாய் சொல்லி முடித்தேன்.
'அடிப்போடி இவளே! இதுக்காடி அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த என்னை சடன் பிரேக் போட வைத்தாய்?' என்றாள் சரோஜியும் அந்த பொறுப்பில்லாத பையன்களைப் போலவே.
' யேய்! என்ன மாதிரி பொம்பளைடி நீ? அங்க என்னடான்டா நம்மளைக் கொல்றதுக்கு மண்டபம் போட்டுத் திட்டநதீட்டிப் படம் காட்டிட்டு இருக்கிறான்கள். அதை வந்து சொன்னால் நீங்களெல்லாம் கண்டுக்கவே மாட்டேன்றீங்களேடி?' என்று கோபத்தில் காச்சு மூச்சென்று காதுகிழியக் கத்தினேன்.
'சரி, சரி வாடி, என் பின்னால ஏறிக்கோ. இடத்தைச் சொல்லு. போய்ப் பார்ப்போம். என்னதான் அப்படிச் செய்றான்களென்று..?'
ஆதார வைத்தியசாலைக்கு அருகிலுள்ள அந்த இடத்தைச் சொன்னேன். முதலில் க்றீன் வீதியும் டொக்யாட் வீதியும் சந்திக்கும் நெல்சன் தியேட்டர் சந்திக்கு வந்து சேர்ந்தோம். அப்போது மக்கெய்சர் பொதுமைதானத்திலே பெரும் கூட்டம் ஒன்று காணப்பட்டது. போக்குவரத்துப் போலீசாரின் காவலோடு நூற்றுக் கணக்கிலே பாடசாலை மாணவர்களும் மாணவிகளும் வெள்ளைச் சீருடையில் கையிலே பல சுலோகங்கள் கொடிகள் மற்றும் பதாகைகளோடு 'ஒழிக! ஒழிக!' என்று கத்திக் கொண்டு வரிசையாக எங்கோ சென்று கொண்டிருந்தார்கள். எங்கும் ஒரே இரைச்சலாக இருந்தது.
'யாரையடி ஒழிக.. ஒழிக என்றான்கள்?' என்று கேட்டாள் சரோஜி.
'தெரியல்லியே.. வா முன்னுக்குப் போய்ப் பார்க்கலாம்;;!' என்று ஒரு முழுச்சுற்றுச் சுற்றித்திரும்பினோம்.
'ஒழிப்போம்! ஒழிப்போம்!'
'சுத்தமாக வைத்திருப்போம்' 'கைது செய்! கைது செய்!  மீறுவோரைக் கைது செய்!'
'அடியேய், இது ஏதோ அரசியல் மீட்டிங் போல இருக்குடி' என்றாள் சரோஜி.

'போடி!  அதுக்கு ஏண்டி ஸ்கூல் பிள்ளைகள் வந்திருக்குதுகள்?' என்று விட்டு அந்தப் பிள்ளைகள் கையில் வைத்திருந்த பதாகைகளிலுள்ள படத்தைப் பார்த்தேன். அவ்வளவுதான் எனக்கு மயக்கமே வந்து விட்டது.
அதிலும் என்னுடைய படங்கள்;தான் நிறைய இருந்தது!
'அங்க பார்டி! நம்ம படம்! போச்சுடி! எல்லோரும் ஒண்ணாக் கிளம்பிட்டாய்ங்கடி! இங்க பார்டீ! இந்தா நடந்து வாறான்களே தொந்தி மாமாவெல்லாம்! இவன்கள்தாண்டி அங்க மண்டபத்தில படங்காட்டி என்னைப் பயங்காட்டியவன்கள். அவன்களுக்குப் பின்னாலே பாரு... நிறைய பிக்- அப் வாகனங்களிலே நம்ம உருவங்களைத்தான் பெரிசா கட் அவுட்டெல்லாம் வச்சுக் கொண்டு வாறான்கள்றீ! என்ன கொடுமைடீ இது?' என்று கத்திக் கொண்டே இருந்தேன் நான்..
'சரி, கத்ததாதே காது நோகுது! விடு, ஏதாவது செய்து தொலையட்டும்'
'இந்தப் பக்கம் பார்! ஐஸ்கிறீம் கடைக்கு முன்னுக்கு! நம்மள மாதிரி வேஷம் கட்டி, ஸ்கூல் பிள்ளைகள் வீதி நாடகம் போடுதுகள்றீ.. வாடி போய்ப் பார்ப்போம்.. எனக்கு நாடகம்டா உயிர் தெரியுமா?'  சட்டெனச் சூழ்நிலையை மறந்து குதூகலித்தேன்.
'வேணாம்டீ! நம்மளையெல்லாம் சீரியல்ல வாற மாமிகள் போல கொடுமைக்காரிகளா சித்தரிப்பாங்களடி! அதைப் பார்த்தாக் கவலையாயிருக்கும் விடு!' என்று என்னைத் தடுத்தாள் சரோஜி.
'அ..ஆமால்ல? அதுவும் சரிதான்! இதைப்பாரேன்,  நம்ம கட்-அவுட்களை!  அதையெல்லாம் எங்கடி கொண்டு போறான்கள்? அங்கப் பாருடீ நடுவுல இருக்கிற கட்-அவுட்டை பார்த்தாக்கா..  நம்ம ரஜினி படத்துல நடிச்சானே...யாருடீ அவன்? சே! பேர் வருதில்ல.. அவன் மாதிரி இல்ல?' என்று ஜொள்ளு விட்ட சரோவுக்கு விட்டேன் நடுமண்டையிலே ஒரு குட்டு.
'ஓம்டீ, இப்ப அது ரொம்ப முக்கியம்! என்னடி இது? எல்லாத்தையும் ஊர்வலமா நடு க்றவுண்டுக்குக் கொண்டு போறானுகள்...? ஓ! அது என்னது புகை வருது?'
 'பு...புகையா? என்ன மடத்தனமிது..? கட்-அவுட்டுக்குப் போய் யாராவது புகைப் போடுவாங்களா? என்னடி பிரயோசனம்? உயிரோட இருக்கிற நாங்களே இப்ப புகைக்குப் பயப்படுறதில்ல..மடையன்கள்? '
'நீதாண்டி மடைச்சி சரோ! புகையில்லடி அது! நம்மைப் பத்தவைக்கிறான்கள்றீ! விளங்கல்லயா உனக்கு? நமக்கெல்லாம் கொடும்பாவி எரிக்கிறான்கள்றீ... நாசமாப் போனவன்கள்... சே! நம்மளோட எவ்வளவு கோபமிருந்தா இந்தளவுக்கு போயிருப்பான்கள்?
இருவரும் சிறிது நேரம் தேம்பியழுதோம்.
'அடியேய்..! நான் ஒண்ணு சொல்லுவேன் நீ..' பம்மினாள் சரோஜி.
' என்ன? கோபிக்கக் கூடாது! அதானே? சரி சொல்லித் தொலை?'
'அவனுகள் நம்மள வெறுக்கிறதிலேயும் கொஞ்சம் நியாயம் இருக்குடி.! நாம இதுவரைக்கும் அவனுகள்ல எவ்வளவு பேரைத்தான் சாகடிச்சிருக்கோம்? யோசிச்சுப் பாரு! எத்தனை சின்னப் பாலகன்களை ஸ்கூல் புள்ளைகளை...'
' என்னடி இப்படிப் பல்டியடிக்கிறாய் நீ...? அதுக்கு நாம என்னடி செய்யுறது..? நம்ம என்ன வேணும்டாடீ செய்யுறோம். வேட்டையாடுறது நம்ம ஜீவனோபாயம்?'
'நீ சொல்றது உண்மைதான்.  வயிற்றுக்காகத்தான் போராடி நாம வாழுறோம். அதுக்குள்ள  இடையில சில சனியன்கள் வந்து நமக்கே தெரியாம நமக்குள்ளே வந்து சேருதுகளே. அதுகளாலதான் நமக்கு எவ்வளவு கெட்ட பெயர், எதிர்ப்புகள் பாரு'
'சரி, அதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்? நாமே உயிரைப் பணயம் வச்சு வேட்டையாடுறோம்.  ஒருதுளி சாப்பாட்டுக்கே தினமும் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோம்?  
'அதாவது வித்தை பிழைச்சா வீரமரணம்!'
'நல்லாச் சொன்னாயடி! ஆனா இவனுகள் நம்மளைக் கோபிக்காம  இடையில வந்து சேருற அந்தச் சனியன்களைப் புடிச்சி ஏதாவது செய்யட்டுமே. அதை விட்டுட்டு நம்ம சாதியைத்தானே அழிக்கத் திரிகின்றான்கள்!'
'சரிடி. அழாத.! வா இப்ப நாம நீ சொன்ன இடத்துக்குப் போவோம்.'
நாங்கள் போன இடம்; ஆஸ்பத்திரிக்கு அருகிலிருந்த ஒரு உயரமான கூரை கொண்ட நவீன பெரிய கட்டிடம். அதன் வாசலிலே புதிய  பெயர்ப்பலகை ஒன்று நீல நிறப் பட்டுத்துணியால் திரையிடப்பட்டு யாரோ திறந்து வைப்பதற்கு வசதியாக  இழுகயிறு நாடாக்கள் எல்லாம் பொருத்தித் தயாராக இருந்தது. அதனால் அது என்ன இடம் என்பதை எங்களால்  படித்துப்பார்க்க முடியாமல் போனது. ஆனாலும் கட்டிடத்தின் ஒரு மூலையிலே சிவப்புச் சிலுவைக்குறி ஒன்று இருந்தது. அதனால் அது ஏதோ ஆஸ்பத்திரியோடு சம்பந்தப்பட்ட இடமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஓரளவு யூகித்தோம்.
 அந்தக்கட்டிடத்தின் கதவுகள் யாவும் இப்போது அடைக்கப்பட்டுக் கிடந்தது.  அதுமட்டுமல்ல அந்த வளாகமே யாருமின்றி வெகுஅமைதியாய் இருந்தது.

'இதுதானே நீ வந்த இடம்? எங்கடி ஒருத்தனையும் காணேல்ல'
'ஓமோம். இங்கதான் நம்மள அழிக்கிறதுக்குப் பெரிய மாஸ்டர் ப்ளான்கள் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தான்கள். இப்ப அதுகளச் செய்யத்தான்  எல்லோரும் போயிருக்கிறான்கள் போல'

இருவரும் அங்கிருந்த ஜேம் மரமொன்றின் கிளை மீது அமர்ந்தோம்.
'சரி, என்னென்ன ப்ளான்கள் எல்லாம் போட்டான்கள்? ஒருதடவை சொல்லு பார்ப்போம்' என்றாள் சரோஜி. நான் ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்திச் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரெனப் பாய்ந்து 'கொஞ்சமிரு..இரு!' என்று இடைமறித்தாள் சரோஜி.
'ஏண்டி நிப்பாட்டிறாய்?'
'இல்லடி, முதல்ல  நீ சொன்னியே, இந்த நகரத்தைச் சுத்தமாக வச்சிருக்கிறது குப்பைகளை கண்டபடி போடாமப்  பாத்துக்கிறது..என்று. அந்தத் திட்டமெல்லாம் பிரச்சினையில்ல.. அதெல்லாம் இவனுகள் வழமையாக் கத்துறதுதான். இந்த ஊர்ல யாரும் அதுகளைக் கணக்கே எடுக்கிறதில்ல.. அதனால நாம தப்பிடலாம்...ஆனா இந்தக் கடைசியில சொன்னீயே ஒண்ணு...அதுதான்டி கொஞ்சம் யோசனையாயிருக்குடீ'
'எதுடீ?  டவுண் முழுக்க ஒரு இடம் விடாமத்தேடி நம்ம வாரிசுகளையெல்லாம் கண்டு பிடிச்சி அழிக்கப்போறதாச் சொன்னதா?
'அதுவும்தான்! அதுகூடப் பரவாயில்லடீ, அடுத்ததாச் சொன்னீயே அப்படி நம்ம வாரிசுகள் வளர்கிறதுக்கு இடம்கொடுக்கிற காணிச் சொந்தக்காரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்போறதாச் சொன்னியே... அதுதாண்டி எனக்கு வயித்துல நெருப்பைக் கொட்டுது..'
'போடி சும்மா! அந்தக் கவலையே உனக்கு வேணாம்! அதெல்லாம் நம்ம ஊரிலிருக்கும் ரெண்டு வகை காக்கிச் சட்டைகளும் சேர்ந்து லஞ்சம் வாங்கியே இந்தத் திட்டத்தைக் குட்டிச்சுவராக்கிடுவாங்க! நீ பயப்பிடாதடி!'
' அட! அப்பிடியெல்லாம் கெடுத்திடக் கூடாது என்றுதானாம்  இந்த முறை  இதுக்கென்றே பெரிய இடத்திலிருந்தே  நேரடியா ஒரு அதிரடிக் குழு இறங்கியிருக்குதாம். அது என்னமோ ஒழிப்புக் குழுவாமே? அது  இங்கதான் எங்கேயோ ஒரு பில்டிங்ல இருக்காமே. ஆயிரக் கணக்குல தண்டப்பணம் அறவிடப் போறாங்களாம்.'
'ஐயய்யோ! காசுபோயிருமென்று தெரிஞ்சா போதும். இந்த ஊர்ச் சனங்கள்லாம். உடனே உசாராகிடுவாங்க தெரியுமா உனக்கு? அப்பிடி மட்டும் ஆகிவிட்டால் இங்கே ஒரு சிரட்டை, இளநீர்க்கோம்பை,  யோகட்கப் எதுவுமே இல்லாம ஊரே சுத்தமாகிடும் தெரியுமா?'
'அப்ப இந்த முறை நாம தப்பவே முடியாது என்கிறியா' என்றேன் சோகத்துடன்.
' ஓம்டீ! அவனுகள் இண்டைக்கே இந்தத் திட்டத்தைத் தொடங்கிட்டானுகளாம்.  என்னதான் செய்யலாம் இனி? இருக்கப்போகும் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமா  இருந்திட்டுச் சாகலாம்' என்று சலித்துப்போய்  அந்தக் கட்டிடத்தினை ஒரு சற்றுச்சுற்றி வரலாமென்று எழுந்தேன். நானும் எழுந்திருக்க சரியாக பலமான காற்றும்  வீசத் தொடங்கியது.  சுழன்றடித்த காற்றின் வேகத்தில் நான் சற்று உயரே போக... மேலே ஏதோ ஒன்று வித்தியாசமாய் தென்பட்டது.
'அது என்ன கட்டிடத்தின்  மேல் கூரையில் ஏதோ தெரிகிறதே?' என்று காற்றின் உதவியோடு சற்று உயர்ந்து எழுந்து போய்ப் பார்த்தேன்.
அட! இது என்ன கூத்து? ஆகா! என் கண்களையே நம்ப முடியவில்லை.
'சரோஜி! இங்க வந்து பார்டீ! கவலையை விடு! நம்ம சந்ததி ஒருநாளும் அழியவே அழியாதுடி.!'
இரண்டு கூரையின் விளிம்புகள் சந்திக்கும் இடத்தில் பெரிய வாய்க்கால் போல ஒரு நீளமான பிளாஸ்டிக் பீலி ஒன்று இருந்தது!  அதற்குள் தேங்கிக் கிடந்த நீருக்குள்ளே பல கோடிக்கணக்கிலே நீச்சலடித்து சந்தோஷமாக துள்ளி விளையாடிக் கொண்டிருந்தார்கள் எங்களது வாரிசுகளான  நுளம்புக் குடம்பிகள்!
அப்போது சுழன்றடித்த காற்றிலே நீலப்பட்டுத்திரை கழற்றி வீசப்பட கட்டிடத்தின் பெயர்ப்பலகையில், 'டெங்கு மற்றும் மலேரியா நோய் நுளம்பு  ஒழிப்பு மத்திய நிலையம்' என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன்.
***

-மூதூர் மொகமட் ராபி