Saturday, September 3, 2011

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை!




அடையாள   அட்டைகள்









அன்றாட வாழ்வில் நாம் பொதுவாக பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்துகின்றோம். பாடசாலை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டை, தொழில் நிறுவன அட்டைகள் என்று பல்வேறு அடையாள அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் நமது புகைப்படம் மற்றும் முக்கியமான விபரங்கள் காணப்படுவதுண்டு.


ஆனால், காலம் செல்லச் செல்ல நமது அடையாள அட்டைகளில் இருக்கும் புகைப்படத்துக்கும் நமது உண்மையான தோற்றத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் தோன்றவாரம்பித்து மெல்ல மெல்ல அந்த வித்தியாசங்கள் அதிகரித்து, ஒரு கட்டத்தில் உற்றுப்பார்த்தாலும் கூட ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்க முடியாதளவு  வேறுபட்டுப் போய் விடுவதும்  உண்டு.


புகைப்படம் மட்டுமல்ல கால ஓட்டத்தில் நமது சுயவிபரங்களில் கூட சில மாற்றங்கள் உண்டாகிவிடுவதுண்டு. ஒரு காலத்தில் மாணவனாயிருப்பவர் தொழில் செய்பவராவதும் தனியாளாய் இருப்பவர் மணமுடித்தவராவதும் போன்ற மாற்றங்களைக் கூறலாம்.


இவ்வாறாக நமது தோற்றத்திலும் சுயவிபரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றினை நாம் வாழ்வின் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு வேறு புகைப்படம் பதிய விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து 'மாட்டேன் போ! நான் சின்ன வயதில் எடுத்த படம்தான் அழகாயிருக்கிறது.' என்று நீங்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிந்து புதிதாக  அடையாள அட்டை ஒன்றைப் பெற மறுத்தால் சிரமம் யாருக்கு என்று யோசித்துப் பாருங்கள்.


 ஒரு பழைய அடையாள அட்டை - அது ஒருகாலத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்த போதிலும்- எப்படி இன்றைய தேவைக்கு உதவாமல் போய்விடுகின்றதோ அப்படித்தான் நாம் ஒருகாலத்தில் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த சில விடயங்களும் வழக்கொழிந்து போய் விடுகின்றன.

இது காலத்தின் யதார்த்தம். விரும்பியோ விரும்பாமலோ இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கின்றது. மாறாக, வரட்டுப்பிடிவாதம் பிடித்து நீங்கள் நின்றால் இன்றைய யதார்த்த உலகை புரிந்து கொள்வதிலும் அதற்கேற்ப உங்கள் வாழ்வியலை எடுத்துச் செல்வதிலும் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இப்போது யோசித்துப் பாருங்கள்....

இன்று நாம் வாழ்வியல் தேவைகளுக்காக பின்பற்றி வருகின்ற சித்தாத்தங்கள், கொள்கைகள் உட்பட எல்லாமே நமது அடையாள அட்டைகள் போன்றதுதான். அவற்றிலே தெளிவாக  நாள், மாதம், ஆண்டு கொண்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே தவிர அவை அனைத்துக்கும் ஒரு செல்லுபடியாகும் கால எல்லை இருக்கத்தான் செய்கின்றது.


நாம் எவ்வளவுதான் புனிதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும்   இயற்கை எனும் இரக்கமற்ற சிற்பி காலம் எனும் உளி கொண்டு அனைத்தையும் செதுக்கிக் கொண்டேதான் இருக்கின்றான்.


வேறு வார்த்தைகளிலே சொல்லப்போனால் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் என்றுமே மாறாமல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரே விடயம்.


தவிர, இன்றைய இளைய தலைமுறைச் சிறார்களின் பரந்துபட்ட அறிவுக்கு இடம்கொடுக்கும் வகையில் நாம் அனைவருமே தயாராக வேண்டியிருக்கின்றது. ஒரு காலத்தில் 'அது ஆகாது' என்றோ 'இது கூடாது' என்றோ கூறினாலே போதும் ஒரு விடயத்திலிருந்து இளையவர்களைத் தடுத்துவிடக்கூடியதாக இருந்தது.


பின்பு அந்த நிலை சிறிது மாற்றமடைந்து 'அது ஆகாது!' என்பதற்கு நாம் ஏதாவது விளக்கம் தர வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு அந்த விளக்கம் கூட அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டியுள்ளது என்பதுதான் மறுக்கவே முடியாத யதார்த்தம்.


நிலைமை இவ்வாறிருக்கும் போது இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு நமது பழைய துருப்பிடித்த கொள்கைகளையே இன்னும் வரட்டுத்தனமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் வேலைக்காகுமா?


இடைவிடாது மாறிக் கொண்டேயிருக்கும் நமது உலகில் சிலபேரின் பேச்சுக்களைச் செவிமடுத்திருப்பீர்கள். அதாவது, தாங்கள் வேதவாக்காகக் கருதும் அல்லது நம்பும் சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகளில் வாழ்ந்திருப்பார்கள். அவை எதுவித மாற்றத்திற்கும் உட்படாமல் இருக்கின்றது என்று பெருமையடிப்பதையும் கூட பார்த்திருப்பீர்கள்.


 இவர்களுக்காகச் சிரிப்பதா அழுவதா கூறுங்கள்?


 சரி, அதெல்லாமிருக்கட்டும், 'மாற்றமேயுறாதிருக்கும்'  அவற்றைச் சிலாகித்து, எக்காலத்திற்கும் பொருந்திப்போகக் கூடியவை என்று  இவர்கள் கூறுவார்களேயானால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.

இதுகுறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!


- Jesslya Jessly


1927     இருவருமே(அன்னை) தெரேஸாதான்!   1997






"எல்லாமே மாற்றமடையும் -என்பதைத்தவிர மற்ற எல்லாமே மாற்றத்திற்குள்ளாகும்!"

Friday, September 2, 2011




சிறகுகள்
வலைப்பூவைப்
பார்வையிடும்
நண்பர்கள்
அனைவருக்கும் 
எனது உற்சாகமான
ரமழான் வாழத்துக்கள்!

இந்தப் பண்டிகையை
வெறுமனே
களியாட்டங்களாய்
மட்டும்
கொண்டாடித்
திருப்தியடைந்து விடாமல்
நமது வாழும்
சூழலிலுள்ள
சக மனிதர்களில்
தேவையுள்ளவர்களிலே
குறைந்தபட்சம்
ஒருவருக்காவது 
போதுமான
உணவு, உடை,
மற்றும்
அவசியமான
பண்டங்களை
வழங்கி
இன்புறுவோம்!
Jesslya Jessly

Thursday, September 1, 2011

நாயுடன் ஒரு பேட்டி

('செருப்புடன் ஒரு பேட்டி' என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையைப்  கடித்ததன் விளைவு)






உங்கள் இனம் பற்றி ஏதாவது இயம்புவீர்களா?

உதவுவதற்கென்றே உருவெடுத்தோம்
மிருகமெனப்பெயரெடுத்தும்
காடுகளில் வாழ்ந்ததில்லை
வீடுகளன்றி எமக்கு போக்கிடம் வேறில்லை.
காவல் காக்கும் கடமைதான் கடவுள் எமக்கு தந்த வரம்
மிச்சம் மீதிவரும் போது நாங்கள் இருப்பதும் தெரியவரும்
வித்தை காட்டியும் பிழைப்பார்கள்
எம்மை விற்றும் பிழைப்பார்கள்.

ஒழுங்காய் உணவு தரவில்லை என்று புலம்புகிறீர்களே உன்னதமான நன்றியறிதலுக்கு உங்களைத்தானே உதாரணமாகச் சொல்கின்றோம்.

அன்பு பொங்கி வரும் போது 'நன்றியுள்ள நாய் 'என்பீர்கள்
சந்தோசம்.
ஆத்திரம் தலைக்கேறினால்
நன்றி கெட்டநாய் என்கிறீர்களே!

சரி போகட்டும் முதல் முதலாக உம் இனத்தை விண்ணுக்கனுப்பிப்பி மண்ணில் பெருமை தரவில்லையா?

வாவ்..வவ.வவ்(அஹ்தாகப்பட்டது- ஹஹ்ஹஹ்ஹா!...)
விண்ணுக்கெமமையணுப்பினீர்
விக்கினமின்றித் உதவி புரிந்தோம். எம்மைப்பலியாக அனுப்பி பரீட்சித்தீர்
பின்னர் குஷியாகப்போகப்புறப்பட்டீர்.
ஓகே...ஓகே..காட்டில் வாழக்கடவாமல் வீட்டில் வாழவழிவிட்டோம். வீட்டுவாயிலிலும் எமதன்றி உமது பேரையன்றோ பொறித்திடடோம். மட்டுமா 'கடிநாய் கவனம்' என்றொரு கௌரவத்தையும கச்சிதமாய் தந்திட்டோம்.

கள்ளர் கயவர் அண்டாது துள்ளிக்குதித்து வெருண்டோட
எழுதியிருந்தால் தப்பில்லை.
பஞ்சம் பசி பட்டினி என்று
கெஞ்சித்திரியும் மாந்தர்களை
மறித்துது; திருப்பி அனுப்பி விட
நாங்கள் இல்லா வீடுகளிலும்
எங்கள் நாமம் உண்டல்லோ?!

உயர் தர வீடுகளிலும் உல்லாசமாக வாழ்கிறீர்கள் தானே?

கழுத்தோடு கட்டி கையில் வைத்துக்கொண்டு
பிஸ்கட்டை எறிந்து பிடிக்கச்சொல்லி
என் உணவு வேளை அங்கு உல்லாச வேலையாகிறது.(.......மௌனம்........)
மாடிவீட்டு மழலைகள் போல்
தெருவோரச் சுதந்திரத்துக்காக தினம் ஏங்குகிறோம்.
அக்கரைப்பச்சைகள் எங்களுக்கும் உண்டு.

சரி சரி. கொஞ்சம் பொதுவாகப் பேசுவோம். அது ஏன் அடிக்கடி வைக்கோல் போரில் போய் படுக்துக்கொள்கின்றீர்கள்.

நாங்கள் படுப்பது கிடக்கட்டும். .அது உங்கள் 'படுப்பு' வகையறா போன்றல்ல.
சீசனுக்கு சீசன் ஊரூராய் வந்து. உள்வீடுவரை
அழையாது புகுந்து-கவனியும் அழையாது புகுவது நாங்கள் மாத்திரம் அல்ல
உருகிவழிந்து உணர்ச்சியூட்டி உங்கள் பொன்னான வாக்குகளை
வாரியள்ளிக் கொண்டு போய் கூவிவிற்றுவிட்டு
உயர் சபையில் போய் ஒரு ஆட்சி முடியுமட்டும்
'படுத்து'திரிகிறார்களே !!!!!
அவர்களது நெஞ்சுச்சட்டை பிடித்து
நாக்கைப்பிடுங்கிச்சாக
நாலு கேள்வி கேட்க துணிவிருக்கா
(மௌனம்)
அதாவது
 உரிமையுள்ள பசு உண்ண வந்தால் ஒன்றும் செய்வதில்லை.
ஊரான் பசு வந்தால் உறுமத்தவறுவதில்லை. அவ்வளவுதான்.

உண்மை. அந்தவகையில் நீங்கள் எவ்வளவோ மேல். இன்னொன்று .எதில் அடிபட்டாலும் காலைத்தானே தூக்குகிறீர்கள். அது ஏன்?

வேறெதற்கு......
எல்லாம் ஒரு அனுதாபத்தை எதிர் பார்த்து;த்தான்
இருந்தாலும்
ஏனெதற்கென்றில்லாமல் நீங்கள் எடுத்ததற்கெல்லாம அனுதாபம் தேடி
கண்ணீர் விடுதலிலும் பார்க்க
எம் கால் தூக்கல் பிசகில்லை காண்.

சரி... .கால் கிடக்கட்டும். அது ஏன் உங்கள் வாலை நிமிர்த்தவே முடியாதுள்ளது?

ஏன் முடியாது.
நீங்களாக நினைத்தால் முடியாது.
நாங்கள் நினைக்க வேண்டும். எனவே எங்கள் வாலை நிமிர்த்துவது இருக்கட்டும்.
எங்கள் வால் நிமிர்ந்தாலும் நிமிரும். உங்களில் வால்பிடிப்பவர்களை நிமிர்த்தமுடியும்h? (மனதுக்குள்: வால் ஒன்றுதான் குறை)

இந்த கால் வால் என்று நமது பேட்டி வந்துவிட்டதால் அந்தவரிசையில் அவசியம் ஒன்று கேட்டாக வேண்டும். அதாவது குறிப்பாக மின்கம்பங்களைக்கண்டு விட்டால்  உடனே அபிசேகஞ்செய்யத்தொடங்கிவிடுகிறீர்களே......

பதில் ரொம்பமுக்கியமோ?
அடுத்தவனின்
அந்தரங்கம் அறிந்து
அம்பலப்படுத்தி
அதில் சுகங்காணும்
கேவலமான புத்தியை
உங்களோடு மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
................ அவசியம் தெரியணுமாம்..வாhhhவ்-(அதாவது- 'ஹூம்ம்ம்...')

எதற்கெடுத்தாலும் விரக்தியாகவே பேசுகிறீர்களே. திருப்திப்படும்படியாக எதுவுமில்லையா?

ஏன் இல்லை.
'நாயைச் சுடுவது போல்...'
என்பது மாறி
'மனிதனைச்சுடுவது போல் ;;;
என்று
நாம் கூறும் நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்களே!!!

அதுவும் அப்படியா....சரி...உங்களுக்குப் பிடித்த கூற்று.

நன்றி கெட்டமக்களைவிட
நாங்கள் மேல் என்று
நீங்கள் சொல்வது.

(ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி நமக்கே கடிவிழுதே!!!ருட்டமாத்தவேண்டியதுதான்.) ஓக்கே  உங்களுக்கும் நிறைய நியாயமான பிரச்சிளைனகளும் பொறுப்புக்களும் கடமைகளும் இருப்பது தெரிகிறது. அதனால உங்களவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி பிரச்சினைகள் தேவைகள் பற்றிப் பேசினால் என்ன?

எம்மை தனியாகக் கண்டாலே கல்லெடுக்கிறீர்கள்.
இந்த லட்சணத்தில் எங்கே கூட்டம் கூடுவது?!
மீறி கல்யாணவீட்டிலோ கத்ததம் பாத்தியாவிலோ
ஒன்று கூடினால்
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே திடீர்தாக்குதலுக்கு உள்ளாகி விடுகிறோம்.
இதை யாரிடம் போய்முறையிடுவது. முறையிட்டாலும் முடிவுகிட்டுமா?
ஒருவிசாரனைக் கொமிசனைப்போட்டு மூடி. இனந்தெரியாத நபர் என்று எங்களுக்கும் தீர்ப்புத்தந்து விடமாட்டீர்கள்.?

இறுதியாக ஒரு கேள்வி. எதையாவது பற்றி சீரியசாக சிந்திப்பதுண்டா?

உண்டு.
சில தலைவர்களையும் சில அதிகாரிகளையும்
பார்க்கும் போது
அவர்களை அடித்து
மன்னிக்கவும் கடித்து
விரட்டிவிட்டு
அவ்விடத்தை
நாங்களே வகித்தாலென்ன என்று சிந்திப்பதுண்டு.....
என்ன சொல்கிறீர்கள்???


Mutur- Abdullah

Monday, August 29, 2011

காலடிச்சுவடுகள்





கடந்து வந்த பாதையில் பதிந்திருக்கும் நமது சொந்தக்  காலடிச் சுவடுகளைத் திரும்பிப் பார்ப்பதிலே ஒரு சுகம் இருக்கத்தான் செய்கின்றது. இப்போதிருந்து நாம் பிறந்த ஆண்டு வரை அல்லது மறுதலையாக பிறந்த ஆண்டிலிருந்து இப்போது வரை ஒவ்வொரு வருடமும் நமக்கு நிகழ்ந்த  வாழ்க்கையின் பிரதான மைல் அல்லது கிலோமீற்றர் கற்களை குறித்து வைத்துப் பாருங்கள். நமக்கே சுவாரசியமாக இருக்கும்.

உதாரணமாக இங்கே எனது நெருங்கிய நண்பர் ஒருவரது குறிப்புக்களை  அவரது அனுமதியுடன் தருகின்றேன். இவர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு உரியவற்றைத் தொகுத்திருக்கின்றார்.  நீங்களும் செய்து பாருங்களேன்!

 Jesslya Jessly


2011   பல சிறுகதைகள் எழுதினேன். பத்திரிகைகளுக்குரிய வகையில் எனது போக்கை மாற்றாமல் எனது திருப்திக்கே  எழுதியதால்  பிரபல தேசியப் பத்திரிகை ஒன்றில் ஒரு கதை மட்டுமே -"பலிக்கடா"- பிரசுரமானது.  எனக்கென  ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்


2006  எனது தகப்பனுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்தோம். வீட்டைச் சுற்றி எல்லை மதில் கட்டினேன். புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை முதன்முதலாக வாங்கினேன்.



2001   பேராதனை கலாசாலையில்  பயிற்சியை வெற்றிகரமாக முடித்து மீண்டும் பழைய இடத்துக்குக்குத் திரும்பியிருந்தேன். அங்கு சில சதி முயற்சிகளைத் துணிவுடன் போராடி முறியடித்தேன்.



1996   இரண்டாவது குழந்தைக்குத் தகப்பனானேன். மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மனைவியையும் குழந்தைகளையும் உடனடியாகப் பிரிய மனமின்றி  பயிற்சியை இரு வருடங்களுக்கு ஒத்திப்போட்டேன்.



1991  பல பிரச்சினைகள் காரணமாக பல்கலைக்கழகப் படிப்பைத் துறந்து அரச தொழிலுக்கு வரவேண்டிய நிலையில் சரியான முடிவெடுத்து ஊர்திரும்பினேன். மனமுடைந்து விடாமலிருந்ததில் காதலியின் அன்பும் நண்பர்களின் ஒத்தாசையும் எனக்கு மிகப்  பெரிய பலமாக இருந்தன.

1986   ஊரில் ஏற்பட்ட இனமுறுகல் கலவரங்களையடுத்து மீண்டும் உயர்தரம் படிப்புக்காக வெளியுர் வாசம். தேவையில்லாத காதல் உட்பட பல பிரச்சினைகளைச் சந்தித்த ஆண்டு.


1981   மீண்டும் ஊரையும் நண்பர்களையும் பிரிந்து வெளியுர் கல்லூரியில் படிப்பு.

1976  எனது குடும்பத்தினரின்  மீள் வருகையின் பின்னர்  உள்ளுர் நண்பர்களுடன் சொந்த ஊரை சல்லடையிட்டது.


1971  இரம்மியமான சிறு கிராமத்தில் வசிப்பு. பால்யபருவ நினைவுகளின் மண்டலம் மனதை விட்டு நீங்காதது.




 


Saturday, August 27, 2011

இப்தார் எனும்...


 இந்த வீணடிப்பு ஏன்?

ரமழான்  மாதம் எனப்படும் நோன்பு காலம்  உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் மக்களால்  ஒரு புனிதமான காலமாக  கருதப்பட்டு வருகின்றது. நோன்பு எனும் விரதத்தின் நோக்கங்கள் பலவாறாக இருப்பினும் புலன்களை ஒருமுகப்படுத்தி இறைவன் காட்டிய வழியில் நமது கவனத்தையும் வாழ்க்கை முறையையும் எடுத்துச் செல்வதுதான் அதன் முக்கியமான நோக்கம் என்பதை மறுப்பேதுமின்றி யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். 

இது தவிர, சமூகத்தின் பல்வேறு பொருளாதார மட்டங்களில் இருக்கும் மக்கள் அன்றாட உணவுக்குக் கூட அல்லலுறும் ஏழைகள் பற்றி நினைத்துப் பார்பபதற்கும் அவர்களது வயிற்றுப்பசியின் கொடுமைகளை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்புத் தருவதும்  ரமழானின் மற்றொரு உப நோக்கம். அவ்வாறு உணரும் போது வசதி படைத்தவர்கள் மட்டுமல்லாது ஓரளவு இயலுமானவர்களும் தம்மால் முடிந்தளவுக்கு அவ்வாறான அல்லலுறும் மக்களுக்கு உணவை வழங்குவார்கள், அவர்களது வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு வேண்டிய உதவி ஒத்தாசை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதுதான் அதன் உள்ளார்ந்த நல்லெண்ண எதிர்பார்ப்பு.  சரி, இருக்கட்டும்..





இன்று நமது சமூகத்தில் நடக்கும் இப்தார் எனும் நோன்பு திறக்கும் சடங்கு பற்றி சற்று பார்ப்போமா? இப்தார் என்பது நல்ல விடயம்தான். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இஸ்லாமிய மதத்தில் ஒன்று கூடி நோன்பு திறப்பது சிறந்த விடயம்தான். ஆனால் தற்போது நமது நாட்டிலும் பல ஊர்களிலே ஒழுங்குபடுத்தி நடாத்தப்படும்  இப்தார் விருந்துகளுக்கு நீங்கள் சென்றிந்தால் இப்தாரை முடித்து விட்டு எழுந்து வரும் போது நோன்பு திறந்தவர்களுக்காக வழங்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களிலே பாதி அல்லது சிறுபகுதி சாப்பிடப்பட்டு விட்ட நிலையிலே மீந்து போய் கிடக்கும் அல்லது வீணாகிக் கிடக்கும் உணவுப் பண்டங்களின் அளவை நிச்சயம் கண்ணுற்று இருப்பீர்கள். இந்த மிஞ்சிய உணவுகள் நமக்குப் போதிக்கும் ரமழானின் நோக்கம்தான் என்ன?


நமது ஊரிலும் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் ஒருபிடி உணவுக்கு வழியின்றி அல்லலுறும் இலட்சக்கணக்கான சிறுவர்களின் பெண்களின் ஆண்களின் தோற்றங்களை ஒரு நிமிடம் உங்கள் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அல்லது இதே வலைத்தளத்தில் பின்தொடரும் பிணந்தின்னிக் கழுகினால் சாவதற்கு காத்திருக்கப்படும் ஆபிரிக்கச் சிறுமியின்  இந்தப் புகைப்படத்தையும் ஆக்கத்தையும் சிறிது பாருங்கள்.




இதன் பிறகு உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் இஸ்லாமியத் தூண்களே... இஸ்லாமிய கூரைகளே... இஸ்லாமியப் படிக்கட்டுகளே.. நீங்கள் செய்து கொண்டிருப்பது எதை?

இஸ்லாத்தின் பெயரால் வற்புறுத்தித் திருமணம் செய்யப்பட்ட வயோதிபக் கணவனுக்கு பணிவிடை செய்ய மறுத்ததற்காய் ஆப்கானில் இளம் மனைவியின் மூக்கை அறுத்ததைக் கூட நியாயப்படுத்தும்  இஸ்லாமியத் தூண்களே...

ஊராரின் பெண்கள் அதிகம் படிக்கக் கூடாது என்ற நியாயமில்லாத தடையை மீறி இரகசியமாய் கல்விகற்று முதுமாணிப் பட்டம் பெற்றதற்காக பாகிஸ்தானில் மகளையும் அவளது தாயையும் அடைத்து வைத்து மானபங்கபடுத்தியதைக் கண்டிக்க மனமில்லாமல்,  குருரமாய் ரசித்துக் கூறும் இஸ்லாத்தின் கூரைகளே..

 எஜமானியின் கைக்குழந்தைக்கு அனுபவமின்றிப் பாலூட்டியதனால் நேர்ந்த கைமோசச் சாவுக்காக  இலங்கை மூதூரின் றிசானா நபீக் எனும்  சிறுமிப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து சவூதியில் சிறைவைத்திருக்கும் அவலம் பற்றி பொழுதுபோக்காய் வம்பளக்கும்  இஸ்லாமியப் படிக்கட்டுகளே...


நன்றாக யோசித்துப் பாருங்கள். உலகம் முழுவதும் பட்டினிச் சாவில் நமது முஸ்லீம் மக்களும் கூட இறந்து கொண்டிருக்கும் போது பசியே இல்லாத ருசிக்கு மட்டும் சாப்பிடும் தனவந்தர்களுக்கு விருந்து போட்டு உணவை டன் கணக்கிலே வீணடிக்கும் செயல்தான் நமது ரழழானின் நோக்கமா?

- Jesslya Jessly

"வயிறு நிறைந்த பின்பும் உண்பதை நிறுத்தாதவன் தன் பற்களால் தனது புதைகுழியைத் தோண்டுகின்றான்."

Tuesday, August 23, 2011

மிகப்பெரும் சமூக ஆபத்தை நோக்கி...



ஏன் இந்த மர்ம மனிதர்கள்?











என்ன தலைப்பு குழப்புகின்றதா? உண்மைதான்! 'யார் இந்த...' என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால்  'ஏன் இந்த...' என்பதுதான் பொருத்தம் என்பதை இக்கட்டுரையை முழுமையாக வாசித்தால் புரியும்.

அண்மைக்காலமாக மர்மமனிதர்களைப் பற்றி யாராவது ஏதாவது பேசாதிருந்தால் ஒன்றில் அவர்கள் ஊமைகளாகவோ அல்லது சுய உணர்வு இல்லாதவர்களாகவோதான் இருக்க முடியும். அந்தளவுக்கு நமது மக்கள் அனைவரினதும் குறிப்பாக தமிழ், மற்றும் தமிழ்பேசும் மக்கள் வாழுமிடங்களில் பேசு பொருளாக மாறிவிட்டார்கள்  இந்த மர்ம மனிதர்கள்.

இவர்கள் யார்....? என்பதுதான் இன்று பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது. இதைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ ஊடகங்களோ கிடையாது எனலாம். அந்தளவுக்கு எல்லோரும் உண்மைகளையும் அவற்றோடு சேர்த்து தங்கள் கற்பனைகளையும் கலந்து நிறையவே எழுதி விட்டார்கள்.

இவர்கள் யார் என்ற கேள்விக்கு தற்போது நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வரும் சம்பவங்களும் அந்தச் சம்பவங்கள் அனைத்திலும்  தெளிவாகத் தோன்றும்  பொதுவான தன்மைகளும்  பதிலை யூகிப்பதற்கு உதவி வருகின்றன. அந்தச் சம்பவங்களின் இடமும் ஆட்களும்தான் வேறுபடுகின்றார்களே தவிர மற்றப்படி இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல் சம்பவங்களில் பொதுவான நான்கு அல்லது ஐந்து அம்சங்கள்தான் சாரமாக உள்ளது.

1. பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ள அல்லது சுலபமாக அணுகக்கூடிய பெண்களை இலக்கு வைத்து மறைந்திருந்து தாக்குதல்.

2. தாக்கிவிட்டுத் சடுதியாகத் தப்பியோடுதல் அல்லது பிரதேசவாசிகளிடம் அகப்படுதல்

3. தாக்கி விட்டுத் தப்பியோடினால் குறிப்பிட்ட 'சில இடங்களை' நோக்கி ஓடிச்சென்று மறைதல் அல்லது பிரதேசவாசிகளிடம் மாட்டிக்கொண்டால் சட்டத்தின் கைகளில் ஒப்படைக்கப்படல்.

4. அவ்வாறு  ஒப்படைக்கப்பட்ட  பின்பு தடுத்து வைத்தலோ அல்லது நீதிமன்ற விசாரணையோ இன்றி விடுவிக்கப்படல்.

5. மர்ம மனிதர்கள் வெறும் வதந்திதான். பொதுமக்கள் யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று  மக்களுக்குத் தெரிவித்தல்.

இப்போது யோசித்துப் பாருங்கள்... இவற்றைச் செய்பவர்கள் யார் என்பது இலேசாகப் புரிந்திருக்கும். 'ஓ! அதுதான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே' என்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொண்டால் நல்லது. யார் என்பதை யூகிப்பது ஒன்றும் சிரமமில்லைதான். ஆனால் இதை ஏன் அவர்கள் செய்கின்றார்கள்..? என்பதற்கு விடை காண்பதற்கு நாம் இந்த விடயத்தை சற்று ஆழமாக நோக்கியாக வேண்டும்.

முதலில் ஒன்றைப் தெரிந்து கொள்ளுங்கள். இந்தத் தாக்குதல்களைச் செய்பவர்கள் நமது சமூகத்திலே சாதாரணமாக காணப்படும் தொழில்ரீதியான திருடர்களோ பகுதி நேரத் திருடர்களோ கிடையாது. இவை எதுவுமே திருட்டுக்கான தாக்குதல்கள் அல்ல. ஏனெனில் இதுவரை அறியப்பட்ட தாக்குதல்களில் திருட்டுக்கான எந்த ஆதாரமும் இதுவரை அகப்படவில்லை. சிறுசிறு குற்றச் செயல்களிலே ஈடுபடுகின்ற சமூகவிரோதிகளோ அல்லது மனப்பிறழ்வு ஆசாமிகளோ கூடக் கிடையாது. ஏனெனில் சிறிதும் பயமின்றி குறுகிய நேரத்துக்குள் தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்யும் பாணியே அதைக் கூறுகின்றது.

வழமையான நமது மாண்புமிகு ஊர்த் திருடர்கள் சமூகவிரோதிகளிடம் ஒரு பழக்கமுள்ளது. 'எங்கே மாட்டிக் கொண்டுவிடுவோமோ'  என உள்ளுர்வாசிகளுக்கு பயந்து பயந்துதான் எதையாவது செய்வது வழமை. அப்படிச் செய்யும்போது பரபரப்புக் காரணமாக நிறைய விடயங்களைச் சொதப்பலாகச் செய்து மாட்டிக் கொள்வார்கள். அல்லது தடயங்களை விட்டுச் செல்வார்கள்.

இந்த மர்ம மனிதர்கள் யாரும் எதிர்பாராத நேரத்திலே  திடீரெனத் தாக்குவது, எவ்வளவு உயரமான இடங்களுக்கும் சட்டெனத் தாவிக்குதித்தேறிச் செல்வது, விரைவாக ஓடுவது, சட்டென மறைந்து கொள்வது தங்களை மறைத்துக் கொள்ள சில திரவியங்களைப் பூசிக்கொள்வது ஆகிய நேரில் பாரத்த பொதுமக்களின் வர்ணனைகளை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக இவர்கள் திறமையாகப் பயிற்சி பெற்ற ஆட்களாகத்தான் இருக்க வேண்டும்.

தவிர இரவு பகலாகக் காவலிருக்கும் உள்ளுர்வாசிகளின் கண்காணிப்பையும் தாண்டி எந்த வேளையிலும் தங்களது தாக்குதல் இலக்குக்கு வந்து சேருவதும் தாக்குதல் முடிவடைந்ததும் உடனடியாக இடத்தை விட்டு அப்புறப்படுவதும் சந்தேகத்துக்குரியதாகவுள்ளது. பொதுமக்கள் பலரின் அபிப்பிராயப்படி 'சில வாகனங்கள்' ஊருக்குள் வந்து சென்ற பின்புதான் இவர்கள் வருவதும் அதேபோல மறைவதும் இடம்பெறுகின்றது. எனவே இந்த மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற சில வலுவான சக்திகள் இருந்து வருகின்றன என்பதை நாம் அனுமானிக்கலாம்.

அதுமட்டுமன்றி வழமையாக பசிக்குத் தேங்காய் திருடும் ஓர் ஏழைத் தொழிலாளியைக் கூட ஆர்ப்பட்டமாய் 'கண்டுபிடிக்கும்'  அத்துடன் நையப்புடைத்து வீரத்தைக் காட்டும் நமது சட்டத்தின் காவலர்கள் இந்த மர்ம மனிதர்கள் விடயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கருணாமூர்த்திகளாக இருக்கின்றார்கள்?

தொழிலுக்கும் செல்லாமல் இரவு முழுவதும் தூக்கமின்றி கூட்டமாகக் கண்விழித்திருந்துக் காவலிருந்து, பலர் முன்னிலையில் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுக்கப்படும் சந்தேக மர்ம நபர்களை ஒரு மரியாதைக்காவது தடுப்புக்காவலுக்குட்படுத்தாமல் விடுவித்து விடுமளவுக்கு அகிம்சா மூர்த்திகளாக அதுவும் ஒரே சமயத்தில் ஆகிப்போனதன் மர்மம்தான் என்ன?

இதனை திட்டமிட்டு நடாத்துபவர்களை பொதுமக்களின் கோபாவேசமான தாக்குதல்கிளிலிருந்து காப்பாற்றுவது ஒன்றுதான் ஏதோ தங்களது தலையாய கடமை என்பது போலவும் மற்றதெல்லாம் வதந்தி என்பது போலவும்தான் நடந்து கொள்கின்றார்கள்,  நமது வரிப்பணத்திலே நம்மைப் 'பாதுகாக்கும்' நமது சட்டத்தின் காவலர்கள்! என்ன வேடிக்கை இது.

வீதி விபத்தில் பாதசாரியை மோதிவிட்டுத் காவல் நிலையத்தை நோக்கித் தப்பியோடும் பஸ் சாரதியையும் இந்த மர்ம மனிதர்களையும் ஒன்றுபோலவே பார்க்கும் நமது காவல் தெய்வங்களின் கருணைதான் என்னே. ஆகா..ஆகா..அற்புதம்!

எது எவ்வாறான போதிலும் இந்த மர்மங்களுக்கு ஒரு வலுவான பின்னணி இருக்கத்தான் செய்கின்றது. இந்த திட்டமிட்டு வரவழைத்துக் கொண்ட பயங்கர நிலைமையை வைத்து எதைச் சாதிக்க விரும்புகின்றார்களோ அதற்கு எதிர்மாறான நிலைமையையே சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது மட்டும் உறுதி.

இதற்காகச் செய்யப்படும் தகிடுதத்தங்களை எத்தனை சாதுரியமாக மறைத்தாலும் கூட உண்மை எனும் சூரியன் ஒருநாள் எதிர்பாரத திசையில்; உதிக்கவே செய்வான். அன்று, இதற்கு முன்பு இவ்வுலகில் இறுமாந்து வாழ்ந்த எத்தனையோ ஆதிக்க சக்திகளின் இரும்புக் கோட்டைகள் தவிடுபொடியானதைப் போல இந்த மக்கள் விரோத சக்திகளும் மண்ணோடு மண்ணாகியே ஆகவேண்டும் என்பது மட்டும் நிஜம்.

இறுதியாக....

 இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கடைசியாகக் கிடைக்கும் செய்திகளின்படி தற்போது அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் விரக்தியுற்ற பொதுமக்கள் தங்கள் எஜமானர்களின் சம்பிரதாயமான ஆலோசனைகளையும் பசப்புரைகளையும் தூக்கி வீசிவிட்டு சட்டத்தை தங்களது சொந்தக் கைகளிலே எடுத்து விட்டிருக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.


இது மட்டும் தொடரும் உண்மையானால், நமது நாட்டில்  இதுவரை நடந்த எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய மிகப்பெரிய சமூக ஆபத்து இது ஒன்றுதான்! 


-Jesslya Jessly



இரத்தத்தில் கையை நனைப்பவன் கண்ணீரால்தான்
அதைக் கழுவியாக வேண்டும்!

Monday, August 22, 2011

ஒப்பிட்டுப் பாருங்கள்:



பட்டினிச் சிறுமியும் பார்த்திருக்கும் கழுகும்! 





மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்! நன்றாக உற்றுப் பாருங்கள். இதைப் பார்த்தால் என்ன தோன்றுகின்றது? இது நாம் வாழும் இன்றைய ஏற்றத்தாழ்வு மிகுந்த உலகின் பரிதாப நிலையின் அப்பட்டமான உண்மைகளில் ஒன்று. ஆபிரிக்க நாடொன்றில் தலைவிரித்தாடும் பஞ்சத்தினால் ஏற்பட்ட அவலக் காட்சி இது.

பசி பட்டினியினால் மெலிந்து வலுவிழந்து கைவிடப்பட்ட ஒரு சிறுமி நடக்கவும் வழியின்றி தன் உடலைத் தானே இழுத்தவாறு  ஏறத்தாழ ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கப்பால் ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் அமைக்கப்பட்டுள்ள உணவு முகாமை நோக்கி ஊர்ந்து செல்வதையும்  அவள் எப்போது சாவாள் எப்போது கொத்தி அவளை தின்னலாம் என்ற நோக்கத்தோடு பின்  நடந்தவாறே பின் தொடரும் ஒரு பிணந்தின்னிக் கழுகையும்தான் இந்த அற்புதமான புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.

இந்தச் சிறுமியின் அவல வாழ்க்கையை ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். பின்பு, வேளாவேளைக்கு உணவு மற்றும் நொறுக்குத் தீனி. ஆடைகள் ஆடம்பர வசதிகள் பொழுதுபோக்குகள் இவையெல்லாம் இருந்தும் கூட போதவில்லையே என்று கவலை கொள்வதும்...

சீரியல் நாடகங்கள், கிரிக்கட் போட்டிகள் போன்ற அற்ப விடயங்களைத்  தவற விட்டு விட்டாலே ஏதோ குடியே முழுகிப்போய் விட்டது போல அலட்டிக் கொள்வதும்.....

பிறந்த நாள் விழாக்கள், நண்பர்களின் விருந்துகள், இப்தார் விருந்து கேளிக்கைகள் என்று பசியே அறியாத மனிதர்களுக்கொல்லாம்  உணவை வழங்கி அவற்றைக் கூட முழுமையாகச் சாப்பிடாமல் வீணடித்து அவ்வாறு வீணடிப்பதையே பெருமையாகப் பீற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதுமான நம்மில் பலரின் வழ்க்கையையும் சிறிது நினைத்துப் பாருங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகும் ஒரு சொட்டுக் கண்ணீர்  உங்கள் விழிகளிலிருந்து உதிரவில்லையென்றால்... இதற்குப் பிறகும்  உணவை வீண் விரயமாக்குவதற்கு உங்களுக்கு மனம் வருமென்றால் நீங்களெல்லாம் மனிதர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.  




-Jesslya Jessly

"எவராவது தாம் தவறே செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தம் வாழ்நாளில் எதையுமே புதிதாய் முயன்று பார்த்ததில்லை என்றுதான் அர்த்தம்"
- ஐன்ஸ்டைன்

Thursday, August 18, 2011

நினைப்பதைக் கூறுங்கள்...

ஒரே நாளில் நடந்த மனதை உறுத்தும் இரு நிகழ்வுகள்!






 இம்மாதம்  (ஆகஸ்ட்) இரண்டாம் திகதி ஒரே நாளில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களைப் பாருங்கள்.

சம்பவம் 1 :

இந்தியாவின் கோவை நகரில் சாவிநகார் (Savinagar) எனும் 4 வயதுச் சின்னஞ் சிறுமி தான் வசித்து வந்த மாடிக்குடியிருப்பின் மின்தூக்கியின்  தானியங்கிக் கதவுகளுக்குள் மாட்டி உடல் நசிந்து உயிரை விட்டாள்.

சம்பவம் 2:

இங்கிலாந்தின் லண்டன் நகரில்  க்றிஸ் ஸ்டேர்ணிபோர்ட் (Chris Sternyford) எனும் 20 வயது இளைஞன் தான் வசித்து வந்த அறையிலே  கணினியில் தொடர்ச்சியாக 12 மணிநேரம் விளையாட்டில் ஈடுபட்டதன் காரணமாக அதீத  அயர்ச்சியின் காரணமாக உயிரை விட்டான். இதனை அங்குள்ள மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். (நன்றி: சுடர் ஒளி)

முதல் சம்பவத்தில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த தாயின் கவனக்குறைவினால் மாடிக்குடியிருப்பின் மின்தூக்கியின் (Lift/elevator) அருகில் வந்த சிறுமி மற்றவர்கள் பொத்தானை அழுத்தி அதனை இயக்குவதைப் பார்த்துவிட்டுத் தானும் அவ்வாறே செய்ய முனைந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. மின்தூக்கியின் தானியங்கிக் கதவுகள் இரண்டும் வேகமாக மூடிக்கொண்ட வேளையில் இதனைத் தள்ளித் தாங்கத் தெரியாதவளான அப்பாவிச் சிறுமி பாவம் பரிதாபமாக நசுங்கி செத்திருக்கிறாள்.

இரண்டாவது சம்பவத்தில் இருபது வயது இளைஞன் கணினி (computer games) விளையாட்டில் ருசி கண்டு தொடர்ச்சியாக 12 மணிநேரம் விளையாடிய பொறுப்பற்ற செயலே அவனது அகால மரணத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த இருசம்பவங்களையும் வெறுமனே வழமையாக நிகழும் விபத்துக்களாகவும் பார்க்கலாம். இதனையே இன்றைய நவீன சமூகப்போக்குகளின் குறியீட்டுச் சம்பவங்களாகவும் காணலாம்.

அதாவது குழந்தைகளைக் கவனிப்பதிலே தாய்,தகப்பன் மற்றும் வீட்டிலுள்ளவர்களின் கவனம் சிதறுகின்றளவுக்கு  இன்றைய வாழ்வியல் கூறுகள் மாறி வருவதை இவ்வாறான சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. மறுபுறம் இன்றைய இளைய தலைமுறையினர் நவீன இலத்திரனியல் சாதனங்களின் பயன்படுத்துதலில்  காட்டும் அபரிமிதமான ஆர்வத்தையும் அதிலுள்ள ஆபத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த இரு சம்பவங்களும் உங்கள் மனதிலே ஏற்படுத்தும் தாக்கங்களை எமக்கு அனுப்பலாம். வெளிப்படுத்தத் தயாராகவுள்ளோம்.
 - Jesslya Jessly

Monday, August 15, 2011

தொடர் கட்டுரை:



யுத்தம் சரணம்  கச்சாமி!




-4-





விஜயன் வந்தான். ஆண்டான். இறந்தான். அப்புறம் ஒரு வருடத்துக்கு அங்கே மன்னன் கிடையாது. பிறகு கி.மு. 504-ல் பாண்டு வாசுதேவன். அப்புறம் அபயா என்று இன்னொரு மன்னன். அதன்பின் பதினேழு வருடங்களுக்கு மன்னர்கள் இல்லை. மீண்டும் 437-ல் பாண்டுக அபயா.அப்புறம் முட சிவன். பிறகு தேவனாம் பிரியதிஸா. உதியா. மகாசிவா. சூர திஸா. சேனா குதிகா. அஸேலா. எலரா. தத்த காமனி. சதா திஸா. துலந்தனா. லஞ்சதிஸா. கல்லத நாகா. வட்டகாமனி. மகா சூலி மகாதிஸா. கோர நாகா. திஸா. சிவா. வடுகா. தாகு பாதிக திஸா. நிலியா. அநுலா. குடகண்ணதிஸா. பதிகபயா.
ஒரு மரியாதைக்காக இருபத்தெட்டு வினாடிகள் செலவு செய்து இந்தப் பெயர்களையாவது வாசித்துவிடுங்கள். இந்த வரிசையில் இன்னும் பல பேர் உண்டு. விஜயன் காலம் தொடங்கி, அடுத்த இருநூறு வருஷங்களுக்கு இலங்கையை ஆண்டவர்கள் இவர்கள். மகா வம்சம், கர்மசிரத்தையாக இந்த மன்னர்களின் கதைகளைப் பக்கம் பக்கமாக வருணிக்கிறது. அவர்கள் ஆண்டு அனுபவித்தது, கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று, குடிமக்களை வாழவைத்தது வகையறாக் கதைகளுக்கு இடையே, பவுத்தம் தழைத்த வரலாறைச் சொல்வதுதான் அதன் அடிப்படை நோக்கம்.
பவுத்தத்திலுமேகூட சித்தாந்தங்களை மேலே வைக்காமல், பிட்சுக்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதே மகா வம்சத்தின் குறிக்கோள். ஒரு காலத்தில் யூதர்கள் மத்தியில்    'ராஃபிகள்' (சுயடிடிi) எனப்படும் அவர்களுடைய மதகுருக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை  இத்துடன் எளிதாக ஒப்பிட இயலும்.
அரசன் என்ன தவறு செய்தாலும் பிட்சுக்களின் காலில் விழுந்துவிட்டால் போதும். 'நீ செய்த செயல் தீச்செயல் ஆகும். மரியாதைக்குரிய பிட்சுக்களுடன் சமரசம் செய்துகொள். அவ்வாறு செய்தால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய்!' என்று மிக நேரடியாக இதனைச் சொல்லிவிடுகிறது மகாவம்சம்.

பவுத்தத்தின் அடிப்படைகள் என்று நாம் மிக மேலோட்டமாக அறிந்தவற்றிலிருந்தும்கூட இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம் வேறுபட்டிருப்பதை இதனுடன் ஒப்பிட்டு அறிய இயலும். வழிபாடு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் தொடங்கி அரசியல், சமூகக் கட்டமைப்பு வரை இந்த வித்தியாசத்தைப் பல தளங்களில் உணர முடியும். இன்றைக்கும் அதிபரை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர்களாகவே இலங்கை பிட்சுக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் பிட்சுக்களைத் திருப்தி செய்யக்கூடியதா என்று பார்த்துப் பார்த்துத்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தேவை என்று கருதினால் பிட்சுக்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அரசியல் களத்தில் இறங்கிவிடுவார்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனத் தீர்மானங்கள், சில கொலைச் சம்பவங்களும்கூட.
மத ஆராய்ச்சி இங்கு நோக்கமல்ல என்றாலும், இலங்கையின் சரித்திரத்தைப் பேசும்போது பவுத்தத்தின் வருகையும், அது தழைத்த விதத்தை அறிவதும் இன்றியமையாதது.
பிட்சுக்கள் பவுத்தத்தைப் பரப்பினார்கள். மன்னர்கள் பிட்சுக்களை ஆதரித்தார்கள். எங்கும் பவுத்த விஹாரங்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன. மூலைக்கு மூலை பிரமாண்டமாக நிறுவப்பட்ட புத்தர் சிலைகள், அவரை நினைவுகூர்வதற்கு அல்லாமல், பவுத்தத்தின் மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு மன்னனும் எத்தனை விஹாரங்களைக் கட்டினான் என்பதைக் கொண்டு, அவனது சிறப்பு பதிவு செய்யப்பட்டது. ஒருவன் திறமையான அரசனா இல்லையா என்பதைக் கூட, அவன் எத்தனை விஹாரங்கள் கட்டினான் என்பதைப் பார்த்துத்தான் மகா வம்சம் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது.
கி.மு. 273-லிருந்து 232 வரை ஆண்டு, மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் நிகரற்ற பேரரசராக அறியப்பட்டவர், அசோகர். அவருடைய மகனும் மகளும், கி.மு. 250-லிருந்து 210 வரை இலங்கையை ஆண்ட தேவனாம் பிரியதிசா என்னும் மன்னனின் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து அங்கே பவுத்தம் பரவத் தொடங்கியதாக இலங்கை சம்பந்தப்பட்ட பொதுவான சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன.
கலிங்க யுத்தம், அதன் வெற்றி, இறுதியில் அசோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம், பவுத்தத்தைத் தழுவியது, அதனைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டது பற்றியெல்லாம் நாம் அறிவோம். அதன் ஓர் அத்தியாயம், அசோகர் தன் மகன் மகிந்தனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தது. உடன்பிறப்புகள் இருவரும் புத்தர் மெய்ஞானம் அடைந்த இடத்தில் இருந்த போதி மரத்தின் கிளை ஒன்றை இலங்கைக்கு எடுத்து வருவதாக மகா வம்சம் கூறுகிறது.
இலங்கையில் பவுத்தம் தழைத்ததற்கு இச்சம்பவம் ஒரு மிக முக்கியமான தொடக்கம். சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி மகா வம்சம் இதனை விரிவாக வருணித்தாலும், அசோகருக்கு மகிந்தன் என்றும் சங்கமித்திரை என்றும் இரு குழந்தைகள் இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அசோகர் காலக் கல்வெட்டுகளில்கூடக் கிடையாது. ஆனால் என்ன செய்ய முடியும்? மகா வம்சம் சொல்லிவிட்டால் இலங்கையில் அப்பீலே கிடையாது.
மகா வம்சம் விவரிக்கும் மன்னர் பரம்பரையில் சில தமிழ் மன்னர்களும் உண்டு. ராஜராஜ சோழனுக்கு முன்னால் சோழ தேசத்திலிருந்து படையெடுத்துச் சென்று, வென்று ஆண்டவர் உண்டு. ஆனால் முழு இலங்கைத் தீவையும் ஆண்ட ஒரே மன்னன் என்று யாருமில்லை. எல்லோரும் பிராந்திய மன்னர்கள்தாம், சிற்றரசர்கள்தாம். அல்லது சற்றே பெரிய சைஸில் ஒரு மன்னன், பகுதி வாரியாக அவனுக்குக் கப்பம் கட்டும் சிறு மன்னர்கள்.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களுடன் இதனை ஒப்பிடலாம். தேசியம் என்கிற ஒற்றை உணர்வைப் பொதுவில் எதிர்பார்க்க இயலாத சூழல். அது பின்னிணைப்பாகப் பிறகு சேர்ந்த கருத்தாக்கம். இங்காவது ஒளரங்கசீப் காலத்தில் காஷ்மீர் முதல் ஆந்திரப் பிரதேசம் வரைக்கும் ஒரே பேரரசு பரவியிருந்தது. இலங்கையில் அம்மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய மன்னர்கள். நிறைய யுத்தங்கள். வாரிசு அரசியல்கள். மகா வம்சமே, நாகர் அரசர்கள் பற்றியும் யட்சர் குல மன்னர்கள் பற்றியும் (இந்த யட்சர்தான் தமிழில் இயக்கர் ஆகிறார்.) பல இடங்களில் குறிப்பிடுகிறது.
லங்கைத் தீவு முழுவதையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்த முதல் மன்னனாக ராஜராஜ சோழனைத்தான் சொல்லவேண்டும். கி.பி. 1018 முதல் 1055 வரையிலான முப்பத்தேழு வருடங்களுக்கு இலங்கையில் சோழக்கொடி பறந்தது. ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்நாட்டு பள்ளிப் புத்தகங்களிலும் இடம்பெறவேண்டியவர்களானார்கள்.
இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இலங்கையில் புலிக்கொடி கட்டுவதற்கு ராஜராஜ சோழன் அங்கிருந்த சில தமிழ் மன்னர்களையும் வீழ்த்த வேண்டியிருந்தது என்பதைச் சுலபமாகப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவார்கள். இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு, சிங்களர் ஆளும் தெற்கு என்றெல்லாம் அவர் பிரித்து யோசிக்கவில்லை. அந்நாளைய எல்லா மன்னர்களுக்கும் இருந்தது போன்ற ஒரே லட்சியம்தான். நாடு பிடிக்கும் லட்சியம். நம் இனம், மாற்று இனம் என்றெல்லாம் சோழப்பெருந்தகை பார்க்கவில்லை. ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்து அழைத்து வந்தாரா? அது போதும், 'போற்றிப் பாடடி பெண்ணே' என்று சொல்லிவிடுவார்கள்.
முப்பத்தேழு வருடங்கள் என்பது சற்றே நீண்ட காலகட்டம்தான். இல்லையா? முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன், முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று வாய் வலிக்கும் வரை புகழ்ந்து தள்ளிவிட்ட பிற்பாடு, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்து வந்த யாரும் சரியாக அமையவில்லை. ஒரு சிங்கள மன்னன் தான் அந்தக் காரியத்தைச் செய்தான்.
பெயர், விஜயபாகு. கி.பி. 1055 முதல் 1110 வரை மத்திய இலங்கையில் உள்ள பொலனருவாவைத் தலைநகராகக் கொண்டு இந்த மன்னன் நிறுவிய ஆட்சி, இலங்கையில் பவுத்தம் புத்துணர்ச்சி கொண்டு அதிவேகமாக வளர்வதற்கு ஒரு காரணமானது. விஜயபாகுவின் பேரன் பராக்கிரமபாகு இன்றைக்கும் பாடப்புத்தகங்களில் வசிப்பவர்.
பொலனறுவவிலிருந்து முழு இலங்கையையும் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் மன்னர் குடும்பத்துத் திருமணங்களெல்லாம் தென்னிந்தியப் பெண்களுடனேயே இருந்து வந்திருக்கிறது. இதன்மூலம் அன்னியப் படையெடுப்புகளைத் தவிர்க்க நினைத்திருக்கலாம். தேசத்தின் உள் கட்டமைப்பை ஒழுங்கு செய்து கொஞ்சம் நிம்மதியான நல்லாட்சி வழங்க உத்தேசித்திருக்கலாம்.

ஒரு விடயம். அப்போதுகூட மன்னர் குடும்பத்துக்குள்ளே, பங்காளிகளுக்குள்ளே பகையும் சண்டையும் இருந்ததே தவிர, மக்களுக்குள் பிரிவினை அல்லது ஒற்றுமை பற்றிய சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லை.
பொலனறுவ பேரரசுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அரசு என்பது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மாகா என்கிற மாகன் என்னும் கலிங்க மன்னன் நிறுவிய அரசு.
அதுநாள் வரை தெற்கிலும் மத்தியிலும் நிலைகொண்டுதான் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வடக்கு எல்லையில் கடலோர யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டு முழு இலங்கையிலும் வீசிய புயல் என்று இந்த மன்னனின் படையெடுப்பைச் சொல்லலாம்.

இந்த மாகனைத் தமிழ் மன்னன் என்று யாழ்ப்பாண சரித்திரங்கள் சொல்கின்றன. கூடவே குழப்புவதற்குத் தோதாக 'கலிங்கத்திலிருந்து வந்த தமிழ் மன்னன்' என்றும் சொல்கின்றன. கலிங்கம் என்றால் இன்றைய ஒரிஸ்ஸா.
கி.பி. 1215 என்பது தமிழகத்தில் பாண்டியர் காலம். ஜடாவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி புரிந்த சமயம். அந்த வருடம்தான் மாகன், யாழ்ப்பாணத்துக்கு  வந்து இறங்குகிறான். அடுத்த வருடமே இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜடாவர்மனுக்குப் பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்துவிடுகிறான். கலிங்க_ பாண்டிய யுத்தங்களின் நீட்சியாகவே இந்தப் படையெடுப்பை நாம் எடுத்துக்கொள்ள இயலும்.
கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மாகன் யாழ்ப்பாணத்தில் இருந்து முழு இலங்கையையும் ஆண்டிருக்கிறான். இலங்கையின் சரித்திரத்தில் அநேகமாக முதன்முதலில் மதம் சார்ந்த தீவிரவாதச் செயல்களை ஆரம்பித்துவைத்தவன் என்று இவனைத்தான் சொல்ல வேண்டும். தேசமெங்கும் பல பவுத்த விஹாரங்களை உடைத்து நொறுக்கியது, புத்தர் சிலைகளை நாசம் செய்தது, சிங்களப் பெண்கள் கற்பழிப்பு என்று இருபது வருஷங்களையும் ரணகளமாகவே கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான்.
பிறகு பாண்டியர்கள் வந்தார்கள். ஜெயவீர சிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்று அந்த மன்னனுக்குப் பெயர். 1260-ல் யாழ்ப்பாணம் வந்து இறங்கி, கிட்டத்தட்ட பாதி இலங்கைக்கு மேல் கைப்பற்றி ஆட்சி புரிந்த இந்த மன்னனின் காலத்தில் இருந்துதான் நாம் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்களைச் சற்று க்ளோசப்பில் பார்க்க முடிகிறது.
அவர்கள் முத்துக் குளித்தார்கள். விவசாயம் செய்தார்கள். படித்தார்கள். பக்தி செய்தார்கள். சாதிக்கொரு வீதி அமைத்து ஒரு மாதிரி பிரபுத்துவ சமத்துவம் பேணினார்கள். நல்லூரில் மட்டும் அறுபத்து நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்களும், ஒவ்வொரு சாதியினரும் வசிக்கத் தனித்தனிவீதிகளும் இருந்திருக்கின்றன. 'மேனிச் சுத்தம் பராமரிக்காத தீண்டாச் சாதியினரை' இந்த வீதிகளுக்குள் விடாதபடியினால்தான் 1816-க்கு முன்னால் வரை இலங்கையில் வயிற்றுப்போக்கு நோயே யாருக்கும் வந்ததில்லை என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் சொல்கிறது.
முகம் சுளிக்கவே வேண்டாம். சாதி விடயத்தில் தமிழ்நாட்டுக்கு சற்றும் சளைத்ததல்ல இலங்கை.
1505-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்து சேரும் வரையிலான அத்தீவின் சரித்திரம் என்பது பெருமளவு மன்னர்களின் சரித்திரமாகவே எழுதப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பெரிதாக அறிந்துகொள்ள இயலாது.
அந்த வருடம் ஃப்ரான்ஸிஸ்கோ டி அல்மெய்தா  என்ற முதல் போர்த்துக்கீசியர் இலங்கையில் காலெடுத்து வைத்தார். சுற்று முற்றும் பார்த்தவருக்கு ஏழு தனித்தனி ராஜ்ஜியங்களாக இலங்கை சிதறுண்டு, சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்சிதான் முதலில் உறுத்தியது. அப்புறம் கொழும்பு நகரில் வானளாவ உயர்ந்து நின்ற கோட்டை.
அடடே! பிரமாதமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டார்.

(தொடரும்)

Sunday, August 14, 2011

சிறுகதை :

ராஜதந்திரம் /  கடைசிப்பந்து!








நாற்பத்தியாறாவது ஓவரின் கடைசிப்பந்து.

சற்று முன் களமிறங்கிய புதிய துடுப்பாட்டக்காரனுக்கு இறுக்கமான களத்தடுப்பமைத்து மிகவும் அவதானமாக வீசிக்கொண்டிருந்தார் பிரபல  சுழல்பந்து வீச்சாளர். அவரது முதல் ஐந்து பந்துகளையும் மரியாதை கொடுத்துத் தடுத்தாடிக் கொண்டிருந்தவன் கடைசிப்பந்தை யாருமே எதிர்பாhரதவிதமாக க்ரீஸை விட்டு இறங்கிவந்து ஒரு தூக்குத் தூக்கிவிட மைதானத்துக்கு வெளியேயுள்ள கார்பார்க்கை நோக்கிப் பறந்தது பந்து.

'இட்ஸ் எ ஹிமாலயன் ஸிக்ஸ்!' என்று தொலைக்காட்சி வர்ணனையாளர் உரத்துக் கீச்சிட அதுவரை உடைமாற்றும் அறையின் முன் வராந்தாவிலே அமர்ந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த எனது வயிற்றினுள் ஏதோ உருண்டது. மூன்றே மூன்று விக்கட்டுகள்  எஞ்சியிருக்க இன்னும் இருபத்தி நான்கு பந்துகளில் நாற்பத்து எட்டு ஓட்டங்கள் என்றது எதிரேயிருந்த இலத்திரனியல் திரை.

உலகமே இமைகளை மூட மறந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப்போகும் பரபரப்பான ஆட்டம். கிரிக்கட்டில் இரண்டு திறமை வாய்ந்த அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி என்பதையெல்லாம் தாண்டி எங்களது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் ஒரு யுத்தம் போலத்தான் இந்த இரவு-பகல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியின் முடிவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் பொறுமையிழந்து அரங்கத்தில் இரைந்து கத்திக் கொண்டிருந்தார்கள்.

தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கும் இருநாட்டு இரசிகனையும் நினைத்துப் பார்த்தால் எனக்குக் மிகவும் கவலையாக இருந்தது. ஒரு விளையாட்டைக் கூட வெறும் விளையாட்டுணர்வுடன் இரசிக்க முடியாதளவு  குரோதம் எப்படி இந்த இரு நாட்டு மக்களுக்கிடையே உருவானது? நாங்கள் எல்லோருமே முன்பு ஒரு காலத்தில் ஒரே மக்களாகத்தானே இருந்தோம். அடிமைகளாக எம்மை வைத்திருந்த வெள்ளைக்காரர்கள் வரும்வரை மதநம்பிக்கைகள் தவிர உடலமைப்பு, உணவு, உடை பழக்க வழக்கம், சுதந்திர உணர்வு எல்லாமே பொதுவாகத்தானே இருந்தது. எவனோ ஒரு ஆங்கில தேசாதிபதி தேசப்படத்திலே கிழித்த பென்ஸில் கோடுதானே ஒரே இரவில் எல்லைக்கோடாகி ஒன்றாய் வாழ்ந்த சகோதரர்களை இப்படி மறைமுக எதிரிகளாக்கியது... அன்று அவர்கள் செய்த பிரித்தாளும் தந்திரம் இரு ஏழை நாடுகளையும் இன்றும் கூட மோத வைத்துக் கொண்டிருக்கின்றதே..? மக்களே ஒன்றுபட நினைத்தாலும் கூட இந்தப் பிரிவினைகளை வைத்து காசுபார்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முதலாளிகளும் அதனை விரும்ப மாட்டார்கள். அதற்காகவே ஏதாவது பகைமையை  வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்..சே! எவ்வளவு காலம்தான் இவர்களோடு சேர்ந்து நாங்களும் இந்த முட்டாள்தனத்தக்குத் துணைபோவது?

'அதோ எதிரணியின் காப்டன் தனது அணி வெற்றியை ருசிக்குமா இல்லையா என்ற ஆழ்ந்த யோசனையுடன்.....' என்று பிதற்றியவாறு தொலைக்காட்சி கொண்டு மீண்டும் எனது முகத்தை இடதுபுறமிருந்து நெருங்கி வந்தது. வெறுப்பு மேலிட வலதுபுறமாய் எதையோ குனிந்து தேடுவது போல பாவனை செய்து வேண்டுமென்றே திரும்பிக் கொண்டேன். 'ப்ளடி பாஸ்டர்ட்ஸ்!'

ஒருபுறம் அனுபவமுள்ள உதவிக் காப்டன்  விக்கட்டைக் காப்பாற்றிக் கொண்டு ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருந்தான். எப்போதுமே நிலைத்து நின்று ஆடுவதுதான் அவனது பாணி. ஆனாலும் தேவையான ஓட்டவிகிதத்துக்கு ஏற்ற வேகத்தில் ஆடமுடியாத களநிலவரம். மறுமுனையிலே புதிதாக வந்திருப்பவன் வெறும் பந்து வீச்சாளன்தான். இன்னும் சிறிது நேரத்துக்குத் தாக்குப்பிடிப்பது கூட கடினம். ஆனாலும் கிரிக்கட்டில் எதுவுமே சாத்தியம்தான்.

அடுத்த ஓவரை யாருக்குக் கொடுப்பது என்று அவசர ஆலோசனை நடந்து முடிந்து களத்தடுப்பாளர்கள் பிரிந்து செல்ல, துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் தமது கையுறையணிந்த முஷ;டிகளைக் குத்திக் கொண்டு தத்தம் முனைகளுக்குச் சென்றனர்.

ஆரம்ப வேகப்பந்துவீச்சாளனின் முதலாவது பந்துக்கு அருகில் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் பெறப்பட்டது. மீண்டும் புதியவன் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்கத் தயாரானான். இரண்டாவது பந்தை முழுவேகத்தில் ஓடிவந்து குறுகிய நீளத்தில் போட தலைக்கு மேலாக ஒரு மின்னல் வேகச்சுழற்றல்! அவ்வளவுதான் பைன்-லெக் திசையில் உயரே எழுந்த பந்து ரசிகர்கள் கூட்டத்திற்குள் போய் விழுந்தது. மற்றுமொரு சிக்ஸ்! அரங்கமே மயான அமைதி கொண்டது.

இருபத்தியிரண்டு பந்திலே நாற்பத்தியொரு ஓட்டங்கள்!

எனக்கு மயக்கமே வரும்போல இருந்தது. 'ஒருவேளை இலக்கை அடைந்து விடுவார்களோ' என்ற மெலிதான சந்தேகம் முதன்முறையாக இப்போதுதான் வந்தது. இவ்வளவு தூரம் சொல்லி வைத்தும் இப்படியாகி விட்டதே என்ற சலிப்பில் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.

என்னைச்சூழந்து எங்களது அணியின் பயிற்சியாளர்களும் அதிகாரிகளும் சிறிது பதற்றமாய் அமர்ந்திருக்க மைதானத்தின் மறுகோடியில் இருந்த பிரமாண்டமான இலத்திரனியல் திரையிலே அவ்வப்போது எங்களைத் தேடிப்பிடித்துக் காண்பித்தார்கள். குறிப்பாக எனது முகத்தை மிகவும் நெருக்கமாக காட்டிக் கொண்டிருந்தது டெலிவிஷன் காமிரா. போட்டியின் ஒவ்வொரு  கட்டத்திலும் எனது முகபாவம் எப்படியிருக்கிறது என்று உலகம் முழுவதும் காண்பிக்கும் வரலாற்றுக் கடமை அவர்களுக்கு. அவர்களுக்குத் தெரியாமல் கிரிக்கட் வீரர்கள் நாங்கள் இப்போதெல்லாம் கழிப்பறைக்குக்கூடச் செல்ல முடியாது. இதுதான் எங்களது பிரபல்யத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை.

மீண்டும் மைதானத்திலே ஆரவாரம்.

அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்ளை விளாசியிருந்தான் அந்தப் புதிய வீரன். மைதானத்தின் பெரும் பகுதி அதிர்ச்சியில் உறைந்திருக்க இடதுபக்க மூலையிலிருந்த இரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. அந்த இரு எல்லைக்கோடு தாண்டிய ஓட்டங்களையும் சலித்துப் போகும்வரை மீளக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

பதினெட்டுப் பந்துகள், 32 ஓட்டங்கள்!

நான் அதிர்ச்சியிலே தடுமாறியிருக்க அருகிலிருந்த கைத்தொலைபேசி குழந்தையாய் சிரித்து என்னைக் கூப்பிட்டது. அதன் திரையிலே ஒளிர்ந்த எண்களைப் பார்த்ததும் சட்டென எழுந்து கொண்டேன். அருகிலே அமர்ந்திருந்தவர்களை விலக்கியவாறு உடைமாற்றும் அறையை நோக்கி நடக்கலானேன். எனது அந்தரங்க அறைக்குள் நான் போய்ச் சேரும் வரையிலும் என்னை விடாமல் வால்பிடித்தன காமிராக்கள்.


'Shit!'

உள்ளே போனதும் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு கழிப்பறை  நிலைக்கண்ணாடியில் ஓங்கி என்மீதே குத்தி சத்தமாய் கத்தித் தீர்த்தேன்.. நல்லவேளை சற்று உறுதியான கண்ணாடியாக இருந்ததால் காயமின்றித் தப்பினேன்.

மீண்டும் சிரித்த செல்போனை இயக்கி, 'யெஸ்' என்றேன்.  மறுமுனையில் சில வினாடிகள் நீடித்த சற்றுக் குழப்பமான ஒலிகளுக்குப் பிறகு, 'ஹலோ கெப்டன், அங்கே என்னதான் நடக்குது? அவன்  புதிசா வந்தவன் என்ன இந்த அடி அடிக்கிறான்...நீங்களெல்லாம் என்ன பண்ணிட்டிருக்கீங்க...இப்படியே போனா..அவ்வளவுதான் நீங்களெல்லாம் ஊருக்கே வரவேண்டியதில்ல..' என்று எரிந்து விழுந்தார் எங்கள் வெளியுறவுச் செயலர்.

'அவன் அடிக்கிறதுக்கு நான் என்ன செய்யலாம் சேர்? அவன் பெட்ஸ்மேனில்ல... வெறும் போலர்தான். அதுவும் எக்ஸ்ட்ரா ப்ளேயர்! இந்த டூணமெண்டில இதுக்கு முதல் அவன் விiயாடவே இல்ல. ப்ரேக் டைமில ப்ளேயர்சுக்கு ஓடியோடி ட்ரிங்ஸ் கொடுத்திட்டிருந்தான். இப்ப அவன் இறங்கின பிறகுதான் இப்படி அடிப்பானென்றே எங்களுக்கும் தெரியுது..' என்றேன்.

'அதெல்லாம் எனக்குத் தெரியாது தம்பி. உங்களுக்கு ஏற்கனவே நம்மோட நிலைமையைப் பற்றி விளக்கமாச் சொல்லிட்டோம். நீங்களும் ஒத்துக்கிட்டிருக்கீங்க...இல்லையா?'

'ஆமாம். வேற வழி?'

'இந்த மெட்ச்சின் முடிவிலதான் நம்ம எதிர்காலமே இருக்கு...தி எனதர் திங்.. திஸ் ஈஸ் பிஎம் றிக்வெஸ்ட் தெரியும்தானே?'

'ம்ம்..ம்ம்'

' திரும்பவும் ஞாபகப்படுத்திறன். நம்ம நிலைமை முக்கியமானது. ஒருபக்கம் அவன்கள் ஆப்கான், ஈராக், லிபியா என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஒவ்வொன்றையும் அடிச்சுக்கிட்டே வாறான். அவன் சொல்றதை கேட்காவிட்டால் எங்களையும் அழிச்சு கற்காலத்துக்கே கொண்டு போகப்போறதா மிரட்டல் விடுறான்.  இந்த நேரம் நாங்க இவங்களோடயும் தொடர்ந்து பகைச்சுக் கொண்டிருக்க இயலாது. அப்படியிருந்தா ஒருபக்க ஆதரவும் இல்லாம தனிச்சுப் போயிடுவோம்..'

'.......'

' இப்ப கொஞ்ச காலமாகத்தான் பழையதெல்லாம் மறந்து இரண்டு நாட்டுக்கும் நட்புறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகி வருது. இந்த நேரம் பார்த்து முக்கியமான ரெண்டு பேருக்கும் இந்த முக்கியமான கிரிக்கட் போட்டியும் வந்திட்டுது. இட்ஸ் அன்போச்சுனேற் ஐ நோ.. அதனாலதான் சொல்றோம்..போட்டி நடக்கிறது அங்க அவங்கட ஊருல... அவங்கட அத்தனை ஆட்களுக்கும் முன்னுக்கும் அவமானப்பட்டா நம்மளோட அத்தனை முயற்சியும் வீணாகிடும். புரியுதா கெப்டன்?'

'ம்ம்..புரியுது!'

' குட்! எனக்குத் தெரியும் .. நீங்க டீமோட நிறைய கஷ;டப் பட்டிருக்கீங்க..பட் இப்ப நம்ம நிலைமைதான் இப்ப கிரிக்கட்டை விட முக்கியம் கெப்டன்! ஸோ டூ வாட் வீ டோல்ட். ஆனா ..ஏதாவது வித்தியாசமா செய்யுறதா நினைச்சுட்டு...உங்க இஷ;டத்துக்கு வேற ஏதாவது..செய்யாதீங்க.. டோன்ட் ட்ரை எனி றிஸ்க். சரிதானே டூ சம்திங். வாட் எபவுட் யுவர் வைஸ் கெப்டன்? அவனுக்குச் சொல்லியிருக்கிறீங்கதானே விசயத்தை...?'

'Ok..ok, சொல்லியிருக்கிறேன்'

'நாங்களும் இங்க டீவி பார்த்திட்டுத்தான் இருக்கிறம்.  ஹீ ஈஸ் ஸ்டில் இன் த மிடில்?தென் வாட்ஸ் தாட் பூல் டூயிங் இன் த மிடில், கெப்டன்?'
'ஓகே!.. ஓகே..! இதோ இந்த ஓவர் முடிய கூல்ட்ரிங்ஸ் கொடுத்து மெஸேஜ் அனுப்புறன்' என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் முகத்திலடித்தாற் போல மற்றொரு ஸிக்சர் வந்து விழுந்தது.

'அடச்சே! ஹரி அப்! ஹரி அப்!' என்று இரைந்து கத்திவிட்டு போனை வைத்தார், வெளியுறவுச் செயலர் சலிப்புடன்.

மீண்டும் வெளியில் வந்து பழைய இடத்தில் அமர்ந்தேன்.

14 பந்துகளில் 26 ஓட்டங்கள்!
'ஆண்டவனே.. இந்த ஓவர் முடிவதற்கு இன்னும் இரண்டு பந்து வீச்சுகள் வேறு உள்ளதே. அந்த இரண்டு பந்தையும் அவனே சந்தித்தால் வெளுத்து வாங்கி விடுவானே. சே! இந்த மடையன்கள் என்ன போலிங் போடுகிறான்கள்...பருப்பையும் உழுந்தையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகப்பந்துல ஒரு காரமே கிடையாது!' என்று சம்பந்தமேயில்லாமல் உள்ளுக்குள் புழுங்கினேன்.
'இவன்கள் மெட்ச்சைக் கொண்டு போனால் ஊருக்கு வரவே தேவையில்லை என்று சொல்லிட்டார். இதென்ன கொடுமை. மற்றவங்களெல்லாம் நிம்மதியாயிருக்க எனக்கு மட்டும் ஏனிந்த...'

மீண்டும் ஒலித்தது செல்போன்.

'சரி, அதுதான் சொல்லிட்டேனே.. பிறகு ஏன்..' என்று கோபத்தில் நான் கத்த,
'அப்பா..நான் Sheenu குட்டி பேசுறேன்பா! என்ன ஆச்சு உங்களுக்கு? டீவியில மெட்ச் பார்க்கிறன்பா.. ஏன் நீங்க விளையாடல்ல...?' என்றவள் நர்சரி போகும் எனது ஒரே செல்ல மகள்.

'ஹாய் Sheenu.. ! எப்படியிருக்கேடா.. எனக்கு காலில சுளுக்கு அதாலதான் விளையாடல்ல.' என்றேன், சட்டென வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.

'அப்பா, நம்ம டீச்சர் ஆன்ரி சொல்றாங்க நம்ம டீம் தோத்துடுமாம்...உண்மையாப்பா? நாங்கதானே வெல்லுவோம்? சொல்லுங்கப்பா...நாங்கதானே?'

எனது கண்களில் என்னையறியாமலே கண்ணீர் துளிர்த்தது. இந்த வெற்றிக் கிண்ணத்துக்காகத்தான் எத்தனை முயற்சி எத்தனை பயிற்சி? எவ்வளவு பிரிவுகள்.. அவமானங்கள்.. போராட்டங்கள். எத்தனை கோடி பிரஜைகளின் கனவுகள் இது... ஒரு கணம் அத்தனையையும் நினைத்துப் பார்த்தேன். 
சட்டென உடைந்தது எனது கண்ணீர்க்குளம்.

மைதானத்திலிருக்கும் திரையிலே எனது முகம் பெரிதாய் தெரியவர சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டேன். மெல்லச் சுதாரித்துக் கொண்டு, 'சரிம்மா, நம்ம டீம்தான் வெல்லும். கவலைப்படாதீங்க.'

' சரி, வேர்ல்ட் கப் யானை பொம்மை ஒன்டு வாங்கிட்டு வாங்கப்பா!'
'கட்டாயம் வாங்கிட்டு வாறேன்டா!' என்று அவளைச் சமாதானப்படுத்திய பின்பு மறுமுனையில் காத்திருந்த மனைவியோடு இரண்டொரு வார்த்தை அவசரமாக உரையாடிவிட்டு கீழே இறங்கி,  மற்றவர்களுக்குக் காத்திராமல் கையில் கிடைத்த குளிர்பானங்களை அள்ளிக் கொண்டு மைதானத்தின் மத்தியை நோக்கி ஓடினேன். 

-Mohammed Rafi

"நரிகள் புத்திமதி கூற ஆரம்பித்தால் உனது கோழிகளைப் பத்திரப்படுத்து!"