Monday, August 15, 2011

தொடர் கட்டுரை:



யுத்தம் சரணம்  கச்சாமி!




-4-





விஜயன் வந்தான். ஆண்டான். இறந்தான். அப்புறம் ஒரு வருடத்துக்கு அங்கே மன்னன் கிடையாது. பிறகு கி.மு. 504-ல் பாண்டு வாசுதேவன். அப்புறம் அபயா என்று இன்னொரு மன்னன். அதன்பின் பதினேழு வருடங்களுக்கு மன்னர்கள் இல்லை. மீண்டும் 437-ல் பாண்டுக அபயா.அப்புறம் முட சிவன். பிறகு தேவனாம் பிரியதிஸா. உதியா. மகாசிவா. சூர திஸா. சேனா குதிகா. அஸேலா. எலரா. தத்த காமனி. சதா திஸா. துலந்தனா. லஞ்சதிஸா. கல்லத நாகா. வட்டகாமனி. மகா சூலி மகாதிஸா. கோர நாகா. திஸா. சிவா. வடுகா. தாகு பாதிக திஸா. நிலியா. அநுலா. குடகண்ணதிஸா. பதிகபயா.
ஒரு மரியாதைக்காக இருபத்தெட்டு வினாடிகள் செலவு செய்து இந்தப் பெயர்களையாவது வாசித்துவிடுங்கள். இந்த வரிசையில் இன்னும் பல பேர் உண்டு. விஜயன் காலம் தொடங்கி, அடுத்த இருநூறு வருஷங்களுக்கு இலங்கையை ஆண்டவர்கள் இவர்கள். மகா வம்சம், கர்மசிரத்தையாக இந்த மன்னர்களின் கதைகளைப் பக்கம் பக்கமாக வருணிக்கிறது. அவர்கள் ஆண்டு அனுபவித்தது, கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று, குடிமக்களை வாழவைத்தது வகையறாக் கதைகளுக்கு இடையே, பவுத்தம் தழைத்த வரலாறைச் சொல்வதுதான் அதன் அடிப்படை நோக்கம்.
பவுத்தத்திலுமேகூட சித்தாந்தங்களை மேலே வைக்காமல், பிட்சுக்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதே மகா வம்சத்தின் குறிக்கோள். ஒரு காலத்தில் யூதர்கள் மத்தியில்    'ராஃபிகள்' (சுயடிடிi) எனப்படும் அவர்களுடைய மதகுருக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை  இத்துடன் எளிதாக ஒப்பிட இயலும்.
அரசன் என்ன தவறு செய்தாலும் பிட்சுக்களின் காலில் விழுந்துவிட்டால் போதும். 'நீ செய்த செயல் தீச்செயல் ஆகும். மரியாதைக்குரிய பிட்சுக்களுடன் சமரசம் செய்துகொள். அவ்வாறு செய்தால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய்!' என்று மிக நேரடியாக இதனைச் சொல்லிவிடுகிறது மகாவம்சம்.

பவுத்தத்தின் அடிப்படைகள் என்று நாம் மிக மேலோட்டமாக அறிந்தவற்றிலிருந்தும்கூட இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம் வேறுபட்டிருப்பதை இதனுடன் ஒப்பிட்டு அறிய இயலும். வழிபாடு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் தொடங்கி அரசியல், சமூகக் கட்டமைப்பு வரை இந்த வித்தியாசத்தைப் பல தளங்களில் உணர முடியும். இன்றைக்கும் அதிபரை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர்களாகவே இலங்கை பிட்சுக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் பிட்சுக்களைத் திருப்தி செய்யக்கூடியதா என்று பார்த்துப் பார்த்துத்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தேவை என்று கருதினால் பிட்சுக்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அரசியல் களத்தில் இறங்கிவிடுவார்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனத் தீர்மானங்கள், சில கொலைச் சம்பவங்களும்கூட.
மத ஆராய்ச்சி இங்கு நோக்கமல்ல என்றாலும், இலங்கையின் சரித்திரத்தைப் பேசும்போது பவுத்தத்தின் வருகையும், அது தழைத்த விதத்தை அறிவதும் இன்றியமையாதது.
பிட்சுக்கள் பவுத்தத்தைப் பரப்பினார்கள். மன்னர்கள் பிட்சுக்களை ஆதரித்தார்கள். எங்கும் பவுத்த விஹாரங்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன. மூலைக்கு மூலை பிரமாண்டமாக நிறுவப்பட்ட புத்தர் சிலைகள், அவரை நினைவுகூர்வதற்கு அல்லாமல், பவுத்தத்தின் மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு மன்னனும் எத்தனை விஹாரங்களைக் கட்டினான் என்பதைக் கொண்டு, அவனது சிறப்பு பதிவு செய்யப்பட்டது. ஒருவன் திறமையான அரசனா இல்லையா என்பதைக் கூட, அவன் எத்தனை விஹாரங்கள் கட்டினான் என்பதைப் பார்த்துத்தான் மகா வம்சம் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது.
கி.மு. 273-லிருந்து 232 வரை ஆண்டு, மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் நிகரற்ற பேரரசராக அறியப்பட்டவர், அசோகர். அவருடைய மகனும் மகளும், கி.மு. 250-லிருந்து 210 வரை இலங்கையை ஆண்ட தேவனாம் பிரியதிசா என்னும் மன்னனின் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து அங்கே பவுத்தம் பரவத் தொடங்கியதாக இலங்கை சம்பந்தப்பட்ட பொதுவான சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன.
கலிங்க யுத்தம், அதன் வெற்றி, இறுதியில் அசோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம், பவுத்தத்தைத் தழுவியது, அதனைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டது பற்றியெல்லாம் நாம் அறிவோம். அதன் ஓர் அத்தியாயம், அசோகர் தன் மகன் மகிந்தனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தது. உடன்பிறப்புகள் இருவரும் புத்தர் மெய்ஞானம் அடைந்த இடத்தில் இருந்த போதி மரத்தின் கிளை ஒன்றை இலங்கைக்கு எடுத்து வருவதாக மகா வம்சம் கூறுகிறது.
இலங்கையில் பவுத்தம் தழைத்ததற்கு இச்சம்பவம் ஒரு மிக முக்கியமான தொடக்கம். சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி மகா வம்சம் இதனை விரிவாக வருணித்தாலும், அசோகருக்கு மகிந்தன் என்றும் சங்கமித்திரை என்றும் இரு குழந்தைகள் இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அசோகர் காலக் கல்வெட்டுகளில்கூடக் கிடையாது. ஆனால் என்ன செய்ய முடியும்? மகா வம்சம் சொல்லிவிட்டால் இலங்கையில் அப்பீலே கிடையாது.
மகா வம்சம் விவரிக்கும் மன்னர் பரம்பரையில் சில தமிழ் மன்னர்களும் உண்டு. ராஜராஜ சோழனுக்கு முன்னால் சோழ தேசத்திலிருந்து படையெடுத்துச் சென்று, வென்று ஆண்டவர் உண்டு. ஆனால் முழு இலங்கைத் தீவையும் ஆண்ட ஒரே மன்னன் என்று யாருமில்லை. எல்லோரும் பிராந்திய மன்னர்கள்தாம், சிற்றரசர்கள்தாம். அல்லது சற்றே பெரிய சைஸில் ஒரு மன்னன், பகுதி வாரியாக அவனுக்குக் கப்பம் கட்டும் சிறு மன்னர்கள்.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களுடன் இதனை ஒப்பிடலாம். தேசியம் என்கிற ஒற்றை உணர்வைப் பொதுவில் எதிர்பார்க்க இயலாத சூழல். அது பின்னிணைப்பாகப் பிறகு சேர்ந்த கருத்தாக்கம். இங்காவது ஒளரங்கசீப் காலத்தில் காஷ்மீர் முதல் ஆந்திரப் பிரதேசம் வரைக்கும் ஒரே பேரரசு பரவியிருந்தது. இலங்கையில் அம்மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய மன்னர்கள். நிறைய யுத்தங்கள். வாரிசு அரசியல்கள். மகா வம்சமே, நாகர் அரசர்கள் பற்றியும் யட்சர் குல மன்னர்கள் பற்றியும் (இந்த யட்சர்தான் தமிழில் இயக்கர் ஆகிறார்.) பல இடங்களில் குறிப்பிடுகிறது.
லங்கைத் தீவு முழுவதையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்த முதல் மன்னனாக ராஜராஜ சோழனைத்தான் சொல்லவேண்டும். கி.பி. 1018 முதல் 1055 வரையிலான முப்பத்தேழு வருடங்களுக்கு இலங்கையில் சோழக்கொடி பறந்தது. ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்நாட்டு பள்ளிப் புத்தகங்களிலும் இடம்பெறவேண்டியவர்களானார்கள்.
இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இலங்கையில் புலிக்கொடி கட்டுவதற்கு ராஜராஜ சோழன் அங்கிருந்த சில தமிழ் மன்னர்களையும் வீழ்த்த வேண்டியிருந்தது என்பதைச் சுலபமாகப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவார்கள். இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு, சிங்களர் ஆளும் தெற்கு என்றெல்லாம் அவர் பிரித்து யோசிக்கவில்லை. அந்நாளைய எல்லா மன்னர்களுக்கும் இருந்தது போன்ற ஒரே லட்சியம்தான். நாடு பிடிக்கும் லட்சியம். நம் இனம், மாற்று இனம் என்றெல்லாம் சோழப்பெருந்தகை பார்க்கவில்லை. ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்து அழைத்து வந்தாரா? அது போதும், 'போற்றிப் பாடடி பெண்ணே' என்று சொல்லிவிடுவார்கள்.
முப்பத்தேழு வருடங்கள் என்பது சற்றே நீண்ட காலகட்டம்தான். இல்லையா? முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன், முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று வாய் வலிக்கும் வரை புகழ்ந்து தள்ளிவிட்ட பிற்பாடு, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்து வந்த யாரும் சரியாக அமையவில்லை. ஒரு சிங்கள மன்னன் தான் அந்தக் காரியத்தைச் செய்தான்.
பெயர், விஜயபாகு. கி.பி. 1055 முதல் 1110 வரை மத்திய இலங்கையில் உள்ள பொலனருவாவைத் தலைநகராகக் கொண்டு இந்த மன்னன் நிறுவிய ஆட்சி, இலங்கையில் பவுத்தம் புத்துணர்ச்சி கொண்டு அதிவேகமாக வளர்வதற்கு ஒரு காரணமானது. விஜயபாகுவின் பேரன் பராக்கிரமபாகு இன்றைக்கும் பாடப்புத்தகங்களில் வசிப்பவர்.
பொலனறுவவிலிருந்து முழு இலங்கையையும் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் மன்னர் குடும்பத்துத் திருமணங்களெல்லாம் தென்னிந்தியப் பெண்களுடனேயே இருந்து வந்திருக்கிறது. இதன்மூலம் அன்னியப் படையெடுப்புகளைத் தவிர்க்க நினைத்திருக்கலாம். தேசத்தின் உள் கட்டமைப்பை ஒழுங்கு செய்து கொஞ்சம் நிம்மதியான நல்லாட்சி வழங்க உத்தேசித்திருக்கலாம்.

ஒரு விடயம். அப்போதுகூட மன்னர் குடும்பத்துக்குள்ளே, பங்காளிகளுக்குள்ளே பகையும் சண்டையும் இருந்ததே தவிர, மக்களுக்குள் பிரிவினை அல்லது ஒற்றுமை பற்றிய சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லை.
பொலனறுவ பேரரசுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அரசு என்பது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மாகா என்கிற மாகன் என்னும் கலிங்க மன்னன் நிறுவிய அரசு.
அதுநாள் வரை தெற்கிலும் மத்தியிலும் நிலைகொண்டுதான் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வடக்கு எல்லையில் கடலோர யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டு முழு இலங்கையிலும் வீசிய புயல் என்று இந்த மன்னனின் படையெடுப்பைச் சொல்லலாம்.

இந்த மாகனைத் தமிழ் மன்னன் என்று யாழ்ப்பாண சரித்திரங்கள் சொல்கின்றன. கூடவே குழப்புவதற்குத் தோதாக 'கலிங்கத்திலிருந்து வந்த தமிழ் மன்னன்' என்றும் சொல்கின்றன. கலிங்கம் என்றால் இன்றைய ஒரிஸ்ஸா.
கி.பி. 1215 என்பது தமிழகத்தில் பாண்டியர் காலம். ஜடாவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி புரிந்த சமயம். அந்த வருடம்தான் மாகன், யாழ்ப்பாணத்துக்கு  வந்து இறங்குகிறான். அடுத்த வருடமே இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜடாவர்மனுக்குப் பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்துவிடுகிறான். கலிங்க_ பாண்டிய யுத்தங்களின் நீட்சியாகவே இந்தப் படையெடுப்பை நாம் எடுத்துக்கொள்ள இயலும்.
கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மாகன் யாழ்ப்பாணத்தில் இருந்து முழு இலங்கையையும் ஆண்டிருக்கிறான். இலங்கையின் சரித்திரத்தில் அநேகமாக முதன்முதலில் மதம் சார்ந்த தீவிரவாதச் செயல்களை ஆரம்பித்துவைத்தவன் என்று இவனைத்தான் சொல்ல வேண்டும். தேசமெங்கும் பல பவுத்த விஹாரங்களை உடைத்து நொறுக்கியது, புத்தர் சிலைகளை நாசம் செய்தது, சிங்களப் பெண்கள் கற்பழிப்பு என்று இருபது வருஷங்களையும் ரணகளமாகவே கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான்.
பிறகு பாண்டியர்கள் வந்தார்கள். ஜெயவீர சிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்று அந்த மன்னனுக்குப் பெயர். 1260-ல் யாழ்ப்பாணம் வந்து இறங்கி, கிட்டத்தட்ட பாதி இலங்கைக்கு மேல் கைப்பற்றி ஆட்சி புரிந்த இந்த மன்னனின் காலத்தில் இருந்துதான் நாம் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்களைச் சற்று க்ளோசப்பில் பார்க்க முடிகிறது.
அவர்கள் முத்துக் குளித்தார்கள். விவசாயம் செய்தார்கள். படித்தார்கள். பக்தி செய்தார்கள். சாதிக்கொரு வீதி அமைத்து ஒரு மாதிரி பிரபுத்துவ சமத்துவம் பேணினார்கள். நல்லூரில் மட்டும் அறுபத்து நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்களும், ஒவ்வொரு சாதியினரும் வசிக்கத் தனித்தனிவீதிகளும் இருந்திருக்கின்றன. 'மேனிச் சுத்தம் பராமரிக்காத தீண்டாச் சாதியினரை' இந்த வீதிகளுக்குள் விடாதபடியினால்தான் 1816-க்கு முன்னால் வரை இலங்கையில் வயிற்றுப்போக்கு நோயே யாருக்கும் வந்ததில்லை என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் சொல்கிறது.
முகம் சுளிக்கவே வேண்டாம். சாதி விடயத்தில் தமிழ்நாட்டுக்கு சற்றும் சளைத்ததல்ல இலங்கை.
1505-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்து சேரும் வரையிலான அத்தீவின் சரித்திரம் என்பது பெருமளவு மன்னர்களின் சரித்திரமாகவே எழுதப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பெரிதாக அறிந்துகொள்ள இயலாது.
அந்த வருடம் ஃப்ரான்ஸிஸ்கோ டி அல்மெய்தா  என்ற முதல் போர்த்துக்கீசியர் இலங்கையில் காலெடுத்து வைத்தார். சுற்று முற்றும் பார்த்தவருக்கு ஏழு தனித்தனி ராஜ்ஜியங்களாக இலங்கை சிதறுண்டு, சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்சிதான் முதலில் உறுத்தியது. அப்புறம் கொழும்பு நகரில் வானளாவ உயர்ந்து நின்ற கோட்டை.
அடடே! பிரமாதமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டார்.

(தொடரும்)

No comments:

Post a Comment