Sunday, August 14, 2011

சிறுகதை :

ராஜதந்திரம் /  கடைசிப்பந்து!








நாற்பத்தியாறாவது ஓவரின் கடைசிப்பந்து.

சற்று முன் களமிறங்கிய புதிய துடுப்பாட்டக்காரனுக்கு இறுக்கமான களத்தடுப்பமைத்து மிகவும் அவதானமாக வீசிக்கொண்டிருந்தார் பிரபல  சுழல்பந்து வீச்சாளர். அவரது முதல் ஐந்து பந்துகளையும் மரியாதை கொடுத்துத் தடுத்தாடிக் கொண்டிருந்தவன் கடைசிப்பந்தை யாருமே எதிர்பாhரதவிதமாக க்ரீஸை விட்டு இறங்கிவந்து ஒரு தூக்குத் தூக்கிவிட மைதானத்துக்கு வெளியேயுள்ள கார்பார்க்கை நோக்கிப் பறந்தது பந்து.

'இட்ஸ் எ ஹிமாலயன் ஸிக்ஸ்!' என்று தொலைக்காட்சி வர்ணனையாளர் உரத்துக் கீச்சிட அதுவரை உடைமாற்றும் அறையின் முன் வராந்தாவிலே அமர்ந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த எனது வயிற்றினுள் ஏதோ உருண்டது. மூன்றே மூன்று விக்கட்டுகள்  எஞ்சியிருக்க இன்னும் இருபத்தி நான்கு பந்துகளில் நாற்பத்து எட்டு ஓட்டங்கள் என்றது எதிரேயிருந்த இலத்திரனியல் திரை.

உலகமே இமைகளை மூட மறந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப்போகும் பரபரப்பான ஆட்டம். கிரிக்கட்டில் இரண்டு திறமை வாய்ந்த அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி என்பதையெல்லாம் தாண்டி எங்களது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் ஒரு யுத்தம் போலத்தான் இந்த இரவு-பகல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியின் முடிவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் பொறுமையிழந்து அரங்கத்தில் இரைந்து கத்திக் கொண்டிருந்தார்கள்.

தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கும் இருநாட்டு இரசிகனையும் நினைத்துப் பார்த்தால் எனக்குக் மிகவும் கவலையாக இருந்தது. ஒரு விளையாட்டைக் கூட வெறும் விளையாட்டுணர்வுடன் இரசிக்க முடியாதளவு  குரோதம் எப்படி இந்த இரு நாட்டு மக்களுக்கிடையே உருவானது? நாங்கள் எல்லோருமே முன்பு ஒரு காலத்தில் ஒரே மக்களாகத்தானே இருந்தோம். அடிமைகளாக எம்மை வைத்திருந்த வெள்ளைக்காரர்கள் வரும்வரை மதநம்பிக்கைகள் தவிர உடலமைப்பு, உணவு, உடை பழக்க வழக்கம், சுதந்திர உணர்வு எல்லாமே பொதுவாகத்தானே இருந்தது. எவனோ ஒரு ஆங்கில தேசாதிபதி தேசப்படத்திலே கிழித்த பென்ஸில் கோடுதானே ஒரே இரவில் எல்லைக்கோடாகி ஒன்றாய் வாழ்ந்த சகோதரர்களை இப்படி மறைமுக எதிரிகளாக்கியது... அன்று அவர்கள் செய்த பிரித்தாளும் தந்திரம் இரு ஏழை நாடுகளையும் இன்றும் கூட மோத வைத்துக் கொண்டிருக்கின்றதே..? மக்களே ஒன்றுபட நினைத்தாலும் கூட இந்தப் பிரிவினைகளை வைத்து காசுபார்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முதலாளிகளும் அதனை விரும்ப மாட்டார்கள். அதற்காகவே ஏதாவது பகைமையை  வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்..சே! எவ்வளவு காலம்தான் இவர்களோடு சேர்ந்து நாங்களும் இந்த முட்டாள்தனத்தக்குத் துணைபோவது?

'அதோ எதிரணியின் காப்டன் தனது அணி வெற்றியை ருசிக்குமா இல்லையா என்ற ஆழ்ந்த யோசனையுடன்.....' என்று பிதற்றியவாறு தொலைக்காட்சி கொண்டு மீண்டும் எனது முகத்தை இடதுபுறமிருந்து நெருங்கி வந்தது. வெறுப்பு மேலிட வலதுபுறமாய் எதையோ குனிந்து தேடுவது போல பாவனை செய்து வேண்டுமென்றே திரும்பிக் கொண்டேன். 'ப்ளடி பாஸ்டர்ட்ஸ்!'

ஒருபுறம் அனுபவமுள்ள உதவிக் காப்டன்  விக்கட்டைக் காப்பாற்றிக் கொண்டு ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருந்தான். எப்போதுமே நிலைத்து நின்று ஆடுவதுதான் அவனது பாணி. ஆனாலும் தேவையான ஓட்டவிகிதத்துக்கு ஏற்ற வேகத்தில் ஆடமுடியாத களநிலவரம். மறுமுனையிலே புதிதாக வந்திருப்பவன் வெறும் பந்து வீச்சாளன்தான். இன்னும் சிறிது நேரத்துக்குத் தாக்குப்பிடிப்பது கூட கடினம். ஆனாலும் கிரிக்கட்டில் எதுவுமே சாத்தியம்தான்.

அடுத்த ஓவரை யாருக்குக் கொடுப்பது என்று அவசர ஆலோசனை நடந்து முடிந்து களத்தடுப்பாளர்கள் பிரிந்து செல்ல, துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் தமது கையுறையணிந்த முஷ;டிகளைக் குத்திக் கொண்டு தத்தம் முனைகளுக்குச் சென்றனர்.

ஆரம்ப வேகப்பந்துவீச்சாளனின் முதலாவது பந்துக்கு அருகில் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் பெறப்பட்டது. மீண்டும் புதியவன் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்கத் தயாரானான். இரண்டாவது பந்தை முழுவேகத்தில் ஓடிவந்து குறுகிய நீளத்தில் போட தலைக்கு மேலாக ஒரு மின்னல் வேகச்சுழற்றல்! அவ்வளவுதான் பைன்-லெக் திசையில் உயரே எழுந்த பந்து ரசிகர்கள் கூட்டத்திற்குள் போய் விழுந்தது. மற்றுமொரு சிக்ஸ்! அரங்கமே மயான அமைதி கொண்டது.

இருபத்தியிரண்டு பந்திலே நாற்பத்தியொரு ஓட்டங்கள்!

எனக்கு மயக்கமே வரும்போல இருந்தது. 'ஒருவேளை இலக்கை அடைந்து விடுவார்களோ' என்ற மெலிதான சந்தேகம் முதன்முறையாக இப்போதுதான் வந்தது. இவ்வளவு தூரம் சொல்லி வைத்தும் இப்படியாகி விட்டதே என்ற சலிப்பில் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.

என்னைச்சூழந்து எங்களது அணியின் பயிற்சியாளர்களும் அதிகாரிகளும் சிறிது பதற்றமாய் அமர்ந்திருக்க மைதானத்தின் மறுகோடியில் இருந்த பிரமாண்டமான இலத்திரனியல் திரையிலே அவ்வப்போது எங்களைத் தேடிப்பிடித்துக் காண்பித்தார்கள். குறிப்பாக எனது முகத்தை மிகவும் நெருக்கமாக காட்டிக் கொண்டிருந்தது டெலிவிஷன் காமிரா. போட்டியின் ஒவ்வொரு  கட்டத்திலும் எனது முகபாவம் எப்படியிருக்கிறது என்று உலகம் முழுவதும் காண்பிக்கும் வரலாற்றுக் கடமை அவர்களுக்கு. அவர்களுக்குத் தெரியாமல் கிரிக்கட் வீரர்கள் நாங்கள் இப்போதெல்லாம் கழிப்பறைக்குக்கூடச் செல்ல முடியாது. இதுதான் எங்களது பிரபல்யத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை.

மீண்டும் மைதானத்திலே ஆரவாரம்.

அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்ளை விளாசியிருந்தான் அந்தப் புதிய வீரன். மைதானத்தின் பெரும் பகுதி அதிர்ச்சியில் உறைந்திருக்க இடதுபக்க மூலையிலிருந்த இரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. அந்த இரு எல்லைக்கோடு தாண்டிய ஓட்டங்களையும் சலித்துப் போகும்வரை மீளக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

பதினெட்டுப் பந்துகள், 32 ஓட்டங்கள்!

நான் அதிர்ச்சியிலே தடுமாறியிருக்க அருகிலிருந்த கைத்தொலைபேசி குழந்தையாய் சிரித்து என்னைக் கூப்பிட்டது. அதன் திரையிலே ஒளிர்ந்த எண்களைப் பார்த்ததும் சட்டென எழுந்து கொண்டேன். அருகிலே அமர்ந்திருந்தவர்களை விலக்கியவாறு உடைமாற்றும் அறையை நோக்கி நடக்கலானேன். எனது அந்தரங்க அறைக்குள் நான் போய்ச் சேரும் வரையிலும் என்னை விடாமல் வால்பிடித்தன காமிராக்கள்.


'Shit!'

உள்ளே போனதும் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு கழிப்பறை  நிலைக்கண்ணாடியில் ஓங்கி என்மீதே குத்தி சத்தமாய் கத்தித் தீர்த்தேன்.. நல்லவேளை சற்று உறுதியான கண்ணாடியாக இருந்ததால் காயமின்றித் தப்பினேன்.

மீண்டும் சிரித்த செல்போனை இயக்கி, 'யெஸ்' என்றேன்.  மறுமுனையில் சில வினாடிகள் நீடித்த சற்றுக் குழப்பமான ஒலிகளுக்குப் பிறகு, 'ஹலோ கெப்டன், அங்கே என்னதான் நடக்குது? அவன்  புதிசா வந்தவன் என்ன இந்த அடி அடிக்கிறான்...நீங்களெல்லாம் என்ன பண்ணிட்டிருக்கீங்க...இப்படியே போனா..அவ்வளவுதான் நீங்களெல்லாம் ஊருக்கே வரவேண்டியதில்ல..' என்று எரிந்து விழுந்தார் எங்கள் வெளியுறவுச் செயலர்.

'அவன் அடிக்கிறதுக்கு நான் என்ன செய்யலாம் சேர்? அவன் பெட்ஸ்மேனில்ல... வெறும் போலர்தான். அதுவும் எக்ஸ்ட்ரா ப்ளேயர்! இந்த டூணமெண்டில இதுக்கு முதல் அவன் விiயாடவே இல்ல. ப்ரேக் டைமில ப்ளேயர்சுக்கு ஓடியோடி ட்ரிங்ஸ் கொடுத்திட்டிருந்தான். இப்ப அவன் இறங்கின பிறகுதான் இப்படி அடிப்பானென்றே எங்களுக்கும் தெரியுது..' என்றேன்.

'அதெல்லாம் எனக்குத் தெரியாது தம்பி. உங்களுக்கு ஏற்கனவே நம்மோட நிலைமையைப் பற்றி விளக்கமாச் சொல்லிட்டோம். நீங்களும் ஒத்துக்கிட்டிருக்கீங்க...இல்லையா?'

'ஆமாம். வேற வழி?'

'இந்த மெட்ச்சின் முடிவிலதான் நம்ம எதிர்காலமே இருக்கு...தி எனதர் திங்.. திஸ் ஈஸ் பிஎம் றிக்வெஸ்ட் தெரியும்தானே?'

'ம்ம்..ம்ம்'

' திரும்பவும் ஞாபகப்படுத்திறன். நம்ம நிலைமை முக்கியமானது. ஒருபக்கம் அவன்கள் ஆப்கான், ஈராக், லிபியா என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஒவ்வொன்றையும் அடிச்சுக்கிட்டே வாறான். அவன் சொல்றதை கேட்காவிட்டால் எங்களையும் அழிச்சு கற்காலத்துக்கே கொண்டு போகப்போறதா மிரட்டல் விடுறான்.  இந்த நேரம் நாங்க இவங்களோடயும் தொடர்ந்து பகைச்சுக் கொண்டிருக்க இயலாது. அப்படியிருந்தா ஒருபக்க ஆதரவும் இல்லாம தனிச்சுப் போயிடுவோம்..'

'.......'

' இப்ப கொஞ்ச காலமாகத்தான் பழையதெல்லாம் மறந்து இரண்டு நாட்டுக்கும் நட்புறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகி வருது. இந்த நேரம் பார்த்து முக்கியமான ரெண்டு பேருக்கும் இந்த முக்கியமான கிரிக்கட் போட்டியும் வந்திட்டுது. இட்ஸ் அன்போச்சுனேற் ஐ நோ.. அதனாலதான் சொல்றோம்..போட்டி நடக்கிறது அங்க அவங்கட ஊருல... அவங்கட அத்தனை ஆட்களுக்கும் முன்னுக்கும் அவமானப்பட்டா நம்மளோட அத்தனை முயற்சியும் வீணாகிடும். புரியுதா கெப்டன்?'

'ம்ம்..புரியுது!'

' குட்! எனக்குத் தெரியும் .. நீங்க டீமோட நிறைய கஷ;டப் பட்டிருக்கீங்க..பட் இப்ப நம்ம நிலைமைதான் இப்ப கிரிக்கட்டை விட முக்கியம் கெப்டன்! ஸோ டூ வாட் வீ டோல்ட். ஆனா ..ஏதாவது வித்தியாசமா செய்யுறதா நினைச்சுட்டு...உங்க இஷ;டத்துக்கு வேற ஏதாவது..செய்யாதீங்க.. டோன்ட் ட்ரை எனி றிஸ்க். சரிதானே டூ சம்திங். வாட் எபவுட் யுவர் வைஸ் கெப்டன்? அவனுக்குச் சொல்லியிருக்கிறீங்கதானே விசயத்தை...?'

'Ok..ok, சொல்லியிருக்கிறேன்'

'நாங்களும் இங்க டீவி பார்த்திட்டுத்தான் இருக்கிறம்.  ஹீ ஈஸ் ஸ்டில் இன் த மிடில்?தென் வாட்ஸ் தாட் பூல் டூயிங் இன் த மிடில், கெப்டன்?'
'ஓகே!.. ஓகே..! இதோ இந்த ஓவர் முடிய கூல்ட்ரிங்ஸ் கொடுத்து மெஸேஜ் அனுப்புறன்' என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் முகத்திலடித்தாற் போல மற்றொரு ஸிக்சர் வந்து விழுந்தது.

'அடச்சே! ஹரி அப்! ஹரி அப்!' என்று இரைந்து கத்திவிட்டு போனை வைத்தார், வெளியுறவுச் செயலர் சலிப்புடன்.

மீண்டும் வெளியில் வந்து பழைய இடத்தில் அமர்ந்தேன்.

14 பந்துகளில் 26 ஓட்டங்கள்!
'ஆண்டவனே.. இந்த ஓவர் முடிவதற்கு இன்னும் இரண்டு பந்து வீச்சுகள் வேறு உள்ளதே. அந்த இரண்டு பந்தையும் அவனே சந்தித்தால் வெளுத்து வாங்கி விடுவானே. சே! இந்த மடையன்கள் என்ன போலிங் போடுகிறான்கள்...பருப்பையும் உழுந்தையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகப்பந்துல ஒரு காரமே கிடையாது!' என்று சம்பந்தமேயில்லாமல் உள்ளுக்குள் புழுங்கினேன்.
'இவன்கள் மெட்ச்சைக் கொண்டு போனால் ஊருக்கு வரவே தேவையில்லை என்று சொல்லிட்டார். இதென்ன கொடுமை. மற்றவங்களெல்லாம் நிம்மதியாயிருக்க எனக்கு மட்டும் ஏனிந்த...'

மீண்டும் ஒலித்தது செல்போன்.

'சரி, அதுதான் சொல்லிட்டேனே.. பிறகு ஏன்..' என்று கோபத்தில் நான் கத்த,
'அப்பா..நான் Sheenu குட்டி பேசுறேன்பா! என்ன ஆச்சு உங்களுக்கு? டீவியில மெட்ச் பார்க்கிறன்பா.. ஏன் நீங்க விளையாடல்ல...?' என்றவள் நர்சரி போகும் எனது ஒரே செல்ல மகள்.

'ஹாய் Sheenu.. ! எப்படியிருக்கேடா.. எனக்கு காலில சுளுக்கு அதாலதான் விளையாடல்ல.' என்றேன், சட்டென வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.

'அப்பா, நம்ம டீச்சர் ஆன்ரி சொல்றாங்க நம்ம டீம் தோத்துடுமாம்...உண்மையாப்பா? நாங்கதானே வெல்லுவோம்? சொல்லுங்கப்பா...நாங்கதானே?'

எனது கண்களில் என்னையறியாமலே கண்ணீர் துளிர்த்தது. இந்த வெற்றிக் கிண்ணத்துக்காகத்தான் எத்தனை முயற்சி எத்தனை பயிற்சி? எவ்வளவு பிரிவுகள்.. அவமானங்கள்.. போராட்டங்கள். எத்தனை கோடி பிரஜைகளின் கனவுகள் இது... ஒரு கணம் அத்தனையையும் நினைத்துப் பார்த்தேன். 
சட்டென உடைந்தது எனது கண்ணீர்க்குளம்.

மைதானத்திலிருக்கும் திரையிலே எனது முகம் பெரிதாய் தெரியவர சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டேன். மெல்லச் சுதாரித்துக் கொண்டு, 'சரிம்மா, நம்ம டீம்தான் வெல்லும். கவலைப்படாதீங்க.'

' சரி, வேர்ல்ட் கப் யானை பொம்மை ஒன்டு வாங்கிட்டு வாங்கப்பா!'
'கட்டாயம் வாங்கிட்டு வாறேன்டா!' என்று அவளைச் சமாதானப்படுத்திய பின்பு மறுமுனையில் காத்திருந்த மனைவியோடு இரண்டொரு வார்த்தை அவசரமாக உரையாடிவிட்டு கீழே இறங்கி,  மற்றவர்களுக்குக் காத்திராமல் கையில் கிடைத்த குளிர்பானங்களை அள்ளிக் கொண்டு மைதானத்தின் மத்தியை நோக்கி ஓடினேன். 

-Mohammed Rafi

"நரிகள் புத்திமதி கூற ஆரம்பித்தால் உனது கோழிகளைப் பத்திரப்படுத்து!"

No comments:

Post a Comment