கடந்து வந்த பாதையில் பதிந்திருக்கும் நமது சொந்தக் காலடிச் சுவடுகளைத் திரும்பிப் பார்ப்பதிலே ஒரு சுகம் இருக்கத்தான் செய்கின்றது. இப்போதிருந்து நாம் பிறந்த ஆண்டு வரை அல்லது மறுதலையாக பிறந்த ஆண்டிலிருந்து இப்போது வரை ஒவ்வொரு வருடமும் நமக்கு நிகழ்ந்த வாழ்க்கையின் பிரதான மைல் அல்லது கிலோமீற்றர் கற்களை குறித்து வைத்துப் பாருங்கள். நமக்கே சுவாரசியமாக இருக்கும்.
உதாரணமாக இங்கே எனது நெருங்கிய நண்பர் ஒருவரது குறிப்புக்களை அவரது அனுமதியுடன் தருகின்றேன். இவர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு உரியவற்றைத் தொகுத்திருக்கின்றார். நீங்களும் செய்து பாருங்களேன்!
Jesslya Jessly
2011 பல சிறுகதைகள் எழுதினேன். பத்திரிகைகளுக்குரிய வகையில் எனது போக்கை மாற்றாமல் எனது திருப்திக்கே எழுதியதால் பிரபல தேசியப் பத்திரிகை ஒன்றில் ஒரு கதை மட்டுமே -"பலிக்கடா"- பிரசுரமானது. எனக்கென ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்
2006 எனது தகப்பனுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்தோம். வீட்டைச் சுற்றி எல்லை மதில் கட்டினேன். புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை முதன்முதலாக வாங்கினேன்.
2001 பேராதனை கலாசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து மீண்டும் பழைய இடத்துக்குக்குத் திரும்பியிருந்தேன். அங்கு சில சதி முயற்சிகளைத் துணிவுடன் போராடி முறியடித்தேன்.
1996 இரண்டாவது குழந்தைக்குத் தகப்பனானேன். மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மனைவியையும் குழந்தைகளையும் உடனடியாகப் பிரிய மனமின்றி பயிற்சியை இரு வருடங்களுக்கு ஒத்திப்போட்டேன்.
1991 பல பிரச்சினைகள் காரணமாக பல்கலைக்கழகப் படிப்பைத் துறந்து அரச தொழிலுக்கு வரவேண்டிய நிலையில் சரியான முடிவெடுத்து ஊர்திரும்பினேன். மனமுடைந்து விடாமலிருந்ததில் காதலியின் அன்பும் நண்பர்களின் ஒத்தாசையும் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தன.
1986 ஊரில் ஏற்பட்ட இனமுறுகல் கலவரங்களையடுத்து மீண்டும் உயர்தரம் படிப்புக்காக வெளியுர் வாசம். தேவையில்லாத காதல் உட்பட பல பிரச்சினைகளைச் சந்தித்த ஆண்டு.
1981 மீண்டும் ஊரையும் நண்பர்களையும் பிரிந்து வெளியுர் கல்லூரியில் படிப்பு.
1976 எனது குடும்பத்தினரின் மீள் வருகையின் பின்னர் உள்ளுர் நண்பர்களுடன் சொந்த ஊரை சல்லடையிட்டது.
1971 இரம்மியமான சிறு கிராமத்தில் வசிப்பு. பால்யபருவ நினைவுகளின் மண்டலம் மனதை விட்டு நீங்காதது.
No comments:
Post a Comment