Sunday, December 25, 2011

திறமை < திருகுதாளம்



 யார் வசதியானவர்கள்?

ர் அரசு அலுவலகத்தில் அல்லது ஒரு பாடசாலையில் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை வகிக்கும் ஒருவர் தனக்குக் கீழே பணிபுரிபவர்கள் எப்படியானவர்களாக இருக்க வேண்டுமென விரும்புவார்?

அவர், தனது நிருவாக விடயங்கள் தடையில்லாமல் நிகழ்வதற்கும் எதிர்பார்க்கும் குறிக்கோள்களை அடைவதற்கும் துணைபுரியக்கூடிய ஊழியர்களை வைத்திருக்க விரும்பினால் அது நியாயமானது.

ஆனால் இப்போதெல்லாம் சில அரிதான விதிவிலக்குகள் தவிர அதிகமான தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் எப்படியானவர்களை விரும்புகின்றார்கள் தெரியுமா? இதுபற்றியும் இன்றைய போக்குகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு வசதியாக இருவகையான பணியாளர்களைக் கருதுவோம்.

  • A  எனும்  ஊழியர்/ எழுதுவினைஞர்/ ஆசிரியர்  திறமையானவராகவும் துறைசார்ந்த நிபுணராகவும் இருக்கின்றார் என்றும்
  •  B எனும் பிறிதோர் ஊழியர் /எழுதுவினைஞர்/ ஆசிரியர் திறமை குறைந்தவராகவும் துறைசார் அறிவில் குறைபாடுகள் கொண்டவராகவும் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

நீங்கள் ஒரு திணைக்களத் தலைவராகவோ நிர்வாக அதிகாரியாகவோ அல்லது ஒரு பாடசாலை அதிபராகவோ இருந்தால் இந்த இருவரில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

 அட! என்ன கேள்வி இது? வேறுயாரை? Aயைத்தான் என்று அவசரப்படுகின்றீர்களா? அப்படியானால் உங்களுக்கு சமகால அனுபவம் போதவில்லை அல்லது பிழைக்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். சற்று இருங்கள்!


ஏனெனில், இன்னுமொரு நிபந்தனையும் உண்டு.

இந்த இருவரிலும் தமது இருப்பு சார்ந்த நலன்களுக்கும் ஏனைய பல நலன்களுக்கும் அதிக ஒத்தாசையாக இருக்கக் கூடியவர் யார்? என்று ஒரு  அளவுகோலும் இன்றைய பிழைக்கத் தெரிந்த தலைமைகளிடம் உள்ளன நண்பர்களே!


"ஏன் ஊழியர் ஒருவர் A யாகவும் மேலே கூறிய தனிப்பட்ட நலன்களுக்கு ஒத்துழைப்பவராகவும் இருக்க முடியாதா?" என நீங்கள் கேட்கலாம். அப்படியொரு சாத்தியமுள்ளதா? என்று பார்ப்போம்.

A வகையான ஒருவர், அவர் திறமைசாலியாக இருப்பதால் இயல்பாகவே அவரிடம் தன்னம்பிக்கை செறிந்திருக்கும். தவிர, எங்கேயும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருக்கும். அப்படியான ஒருவர் பொதுவாக சுயமரியாதை கொண்ட ஒருவராகவும் தனது ஆற்றல்கள் காரணமாக சிறிது கர்வமுள்ளவராக இருப்பார்கள். இப்படியானவர்கள் இலகுவில் அவசியமின்றி பிறருக்கு அடிபணிய விரும்புவதில்லை.

ஆனால் B வகையறாக்கள் அவ்வாறின்றி, தமது திறமைக் குறைவு காரணமாகவும் குறைபாடுகள் காரணமாகவும் தன்னம்பிக்கைக் குறைபாடுள்ளவர்களாகவே இருப்பார்கள். இதனால் தமது இருப்பு மற்றும்

பிறநலன்களுக்காக  Aபிரிவினருடன் போட்டியிட முடியாது. இதன்விளைவாக தமது தலைமையிலிருப்பவர்களிடமிருந்து சலுகை வழியிலும் பின்கதவு சூட்சுமங்களினாலும் மட்டுமே முன்னேற்றங்களைப் பெறமுடியும். எனவே இவர்களிடம் அதனைத் தவிர வேறு தெரிவுகள் இருக்க முடியாது அல்லவா?

இப்போது கூறுங்கள். இன்றிருக்கும்  ஆளுமையும் சமூகப் பிரக்ஞையுமற்ற பெரும்பாலான தலைமைகளுக்கு துதிபாடல் மற்றும் தனிநபர் சேவைகள் புரிவதற்கெல்லாம் வசதியானவர்கள் யார்?

யோசித்து வையுங்கள்! 
-Jesslya Jessly

No comments:

Post a Comment