அப்ரிடி: அதிரடிப் போராட்டம்!
கிரிக்கட், இன்றைய நவீன முதலாளித்துவ உலகில் தாம் ஏகாதிபத்திய சக்திகளாலும் பல்தேசியக் கம்பனிகளின் தரகர்களாலும் சுரண்டலுக்குள்ளாவதை மறைத்து மக்களை ஒருவித லாகிரியில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு பயன்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறிப்போய் விட்டிருக்கின்றது.
இதை சிந்திக்கக்கூடியவர்கள் நன்கறிவர்.
இதனாலேயே அவ்விளையாட்டினுள் ஊழல், சர்வதேச பேரம், சூது, திறமையான வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுதல் போன்ற இன்னோரன்ன பிறழ்வுகள் மலிந்து வருகின்றன.
ஆயினும், விளையாட்டு என்ற வகையில் கிரிக்கட்டை இரசிப்பதற்குத் தடையேதும் கிடையாது. அந்த வகையில் இன்றைய கிரிக்கட் அணிகள் பலவற்றில் திறமையான வீரர்கள் ஒதுக்கப்படுவதும் அதிலே பலர் காணாமற்போவதும் சிலர் மீண்டும் முயன்று போராடித் தம்மை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதும் நடந்து காலாகாலமாக கொண்டுதானிருக்கிறது.
மேற்கிந்தியாவின் கிறிஸ்கெயில் பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி ஆகிய இருவரையும் இதிலே குறிப்பிடலாம். கிறிஸ் கெயில் சிறந்த சகலதுறை அதிரடி வீரர். இவர் சிறந்த அதிரடித் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் மேற்கிந்திய அணி வெற்றிபெறும் சாத்தியமாகும் என்ற நிலை இன்னும் இருந்து வருகின்றது. தனது கிரிக்கட் நாட்டின் கிரிக்கட்சபையுடன் ஊதியம் தொடர்பான முறுகல் ஏற்பட்டதன் காரணமாக விலக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அதுவரையில் உள்முரண்பாடுகளால் பிளவடைந்து பின்தங்கியிருந்த தனது அணியை ஒன்றிணைத்து உற்சாகமூட்டி தனது சிறந்த பந்து வீச்சு சகலதுறை ஆட்டத்தின் மூலம் அரையிறுதியாட்டம் வரை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். தனிப்பட்ட வகையிலும் உலகக்கிண்ணத் தொடரில் 21 விக்கட்டுக்களை வீழ்த்தி புகழ் பெற்றிருந்தார். இத்தனையையும் நிகழ்த்திக் காட்டிய அந்தத் திறமைசாலிக்கு அந்நாட்டின் கிரிக்கட் சபை வழங்கிய பரிசு என்ன தெரியுமா? காரணத்தைக்கூட அறிவிக்காமல் அவரை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியதுதான்.
'ஒரு அணிக்குரிய வீரர்களைத் தெரிவு செய்வதிலே அவ்வணித் தலைவருக்குரிய பங்களிப்பே மிகவும் முக்கியமானது. பயிற்றுவிப்பாளர்களின் பிரதான பணி தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதுதான்' என்றார் அப்ரிடி. இயல்பிலேயே எதையும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் அப்ரிடியின் இந்தப் போக்கு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்த பழழ்பெருச்சாளிகளுக்கு ஒத்து வரவில்லை.
இதனால் ஏதோ சாக்குப்போக்குகளைக் கூறி அப்ரிடியை ஒரேயடியாக ஒதுக்குவதற்கு முனைந்தனர். அப்ரிடியின் நேர்மை, திறமை, இரசிகர்களின் ஆதரவு ஆகிய விடயங்களால் நேரடியாக ஓரங்கட்ட முடியாமல் போனதால் திரைமறைவு சித்துவேலைகள் நடக்கலாயின.
ஆனால், இதனை உணர்ந்த சுயமரியாதையுள்ளவரான அப்ரிடி, தன்னை மதிக்காத கிரிக்கட் நிர்வாகத்தின் கீழ் விளையாட விரும்பவில்லை என்றும் குறித்த தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்து அது கலைக்கப்படும் வரை நிபந்தனையுடனான தனது ஓய்வை அறிவித்திருந்தார். "மீண்டும் நான் சகல மரியாதைகளுடனும் அணிக்குத் திரும்புவேன்" என்றும் பேட்டியளித்திருந்தார்.
அப்ரிடியின் பங்களிப்பும் பிரபல்யமும் அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு இந்த இடைவெளி பயன்பட்டது. அப்ரிடி இல்லாத அணி கவர்ச்சியற்றது என்றும் கற்றுக்குட்டித்தனமானது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அப்ரிடியை மீண்டும் இணைக்கக்கோரி இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அலையும் வெகுண்டெழுந்தது.
இதற்கிடையில் இஜாஸ் பட் தலைமையிலான கிரிக்கட்சபை கலைக்கப்பட்டது.
இதனால் சில மாதங்கள் ஓய்வின் பின்பு மீண்டும் அப்ரிடி தனது ஓய்வை இடைநிறுத்திக் கொண்டு விளையாடத் தயாரானார். ஐக்கிய அரபு இராஜ்யத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் பாகிஸ்தான் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தொடரை பாகிஸ்தானுக்கு வென்று தரவேண்டிய நான்காவது ஆட்டம் கடந்த 20ம் திகதி சார்ஜாவில் ஆரம்பமானது.
இலங்கையின் பந்துவீச்சில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களைப் பறிகொடுத்திருந்த பாகிஸ்தான் அணி 71-5 என்ற நிலையில் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கையில் 6வது வீரராக களமிறங்கிய அப்ரிடி, தனது வழமையான அதிரடிப் பாணியை ஆரம்பத்தில் தேவைக்கேற்ப சாதுரியமாக நெகிழ்த்திப் பொறுமையுடனும் பின்பு விரைவாகவும் குவித்தார். பெறுமதியான அந்த 75 ஓட்டங்களின் உதவியுடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை ஓரளவு மரியாதைக்குரிய 200 ஓட்டங்கள் என்றானது.
201 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணி, ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய போதிலும் சங்கக்கார, ஜயவர்த்தன எனும் இரு வல்லவர்களின் 102 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெறும் வலுவான நிலையை அடைந்தது.
ஏறக்குறைய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் இலங்கையின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்று நினைத்துச் சோர்ந்து விட்ட நிலையில் ஒரே ஒரு வீரர், அப்ரிடி, மட்டும் தனது வலது முழங்காலின் உபாதையையும் பொறுத்துக் கொண்டு சளைக்காமல் பந்து வீசிக் கொண்டேயிருந்தார். அவரது இடைவிடாத முயற்சியின் பலன் 37.5 வது ஓவரிலே சங்கக்காரவின் விக்கட் தகர்ப்புடன் ஆரம்பமாகி மகேல ஜயவர்த்தன மெண்டிஸ் பெரேரா ப்ரஸன்ன என்று தொடர்ந்து 5-35 என்ற பந்து வீச்சுப் பெறுதியுடன் அணிக்கு 3-1 என்ற தொடர் வெற்றியாகவும் கனிந்தது.
ஒரு நிலையில் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட நிலையிலும் சோர்ந்து விடாது போராடி மீண்டெழுந்து தனது அவசியத்தை நிருபித்து... தன்னந் தனியாளாய் தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுத்து... தன்னை ஒதுக்கியவர்களையெல்லாம் ஆட்டத் திறமையால் வெட்கப்படச் செய்து நிமிர்ந்து நிற்கும் அப்ரிடியின் ஆளுமை போற்றத் தக்கதே.
-மூதூர் மொகமட்ராபி
No comments:
Post a Comment