Tuesday, December 20, 2011

யார் அந்தப் பாவி?



ரு மரண தண்டனை!






ரு நீண்ட விசாலமான பலபேர் ஒரே நேரத்தில் ஒன்றாக உணவருந்தக்கூடிய சாப்பாட்டுக் கூடம் அது.


மதிய உணவுவேளை முடிவடைந்த ஒரு பிற்பகல்வேளையில் பெண் சிற்றூழியர்களால் அந்தக் கூடத்தின் கதவுகள் யன்னல்கள் அனைத்தும் சடுதியாக மூடப்படுகின்றன. இரு ஆண் ஊழியர்கள் சாக்குப் பைகள் சகிதம் எதையோ தேடும் உக்கிரப் பார்வையுடன் உள்ளே வருகின்றார்கள்.


அவர்களுக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் சில ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றது.


ஒன்றும் பயந்து விடாதீர்கள். வெகுநாளாக அந்த உணவுக்கூடத்தினுள்ளே புகுந்து தொல்லைதரும் மூன்று பூனைகளைக் கட்டி அப்புறப்படுத்தும் காட்சியைத்தான் விபரித்துக் கொண்டிருக்கின்றேன்.


என்ன இது? இதையெல்லாமா எழுதிக் கொண்டிருப்பீர்கள்...என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது.


 விசயம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்!


உள்ளே வந்தவர்கள் தாம் தேடி வந்த அந்த மூன்று வாயில்லா ஜீவன்களையும் எப்படியாவது சாக்குப்பைகளுக்குள்ளே கட்டிவிடும் நோக்கத்தில் மூன்று பூனைகளையும் பிடிப்பதற்காக துரத்தியோடுகின்றனர். சிறிது நேரம் அங்குமிங்கும் ஓடித்திரிந்து போக்குக்காட்டிய இரண்டு பூனைகள்  அவர்களின் முயற்சிகளையெல்லாம் வீணடித்து விட்டு எப்படியோ  தப்பியோடிவிட்டன.

களைத்துப் போன ஊழியர்கள் இருவரும் மீதமிருக்கும் பூனையையாவது எப்படியும் பிடித்து விடும் முனைப்பிலே தவித்தார்கள்.


அவர்களை இதுவரையில் பின்னாலிருந்து வழிப்படுத்திக் கொண்டிருந்த பெண்மணியின் முகத்திலே கோபம் கொப்பளித்தது.


வெண்ணிற அங்கியை அணிந்திருந்தவரான அந்தப் பெண்மணியின் வாயிலிருந்து சற்றும் எதிர்பாராத விதமாக வார்த்தைகள் உதிர்ந்தன.

"அந்தப் பூனையை அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்ல! தப்ப விடாதீங்க!"

மறுநிமிடம் அந்த வாயில்லா ஜீவன் கதறக் கதற சிறிதும் கருணையின்றி தடிகளால் இரத்தம் தெறிக்கத்  தெறிக்க அடித்து நையப்புடைக்கப்பட்டது.

அது எந்தளவுக்கென்றால் அந்தப் பரிதாபத்தைப் பார்க்கச் சகிக்காமல், 'தயவு செய்து கதவைத் திறந்து விடுங்கள்' என்று  கெஞ்சிய சில மாணவிகளையும் வெளியே போக விடாமல் வைத்துக் கொண்டு அவர்களின் முன்னிலையிலேயே அந்த சிறு அப்பாவிப் பூனை  துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டது.

ஒரு பிரபல பெண்கள் பாடசாலையின் விடுதியில் நடந்ததுதான் இந்தச் சம்பவம்.


இதிலே என்ன விசயம் இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக இதனைக் கூறவேண்டியுள்ளது.


ஆடம்பரச் சுகபோக வாழ்க்கைக்காக பொதுச்சொத்துகளில் மோசடி செய்யும் பெரும் பதவியிலுள்ளள சுயநல மனிதர்களைக் கூட கண்டும் காணாமல் சமாளித்து விட்டு விடுகின்ற இந்தக் காலத்தில், பாவம் தன் வயிற்றுப்பசிக்காக உணவைத் திருடிய அந்த வாயில்லாச் சிறு பிராணியை கொடூரமாக அடித்துக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்த பெண்மணி யார் தெரியுமா?


ஓர் ஆசிரியையான அவர் வேறுயாருமல்ல!


தன்னைக் கொல்ல வந்தவனையே மன்னித்து அவனுக்காகப் பிரார்த்தனை புரிந்தவரும் உலகுக்கு அன்பையும் கருணையையும் போதித்தவருமாகிய இயேசுக் கிறிஸ்து வின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்... ஒரு  கன்னியாஸ்திரி!

-Jesslya Jessly

No comments:

Post a Comment