Sunday, December 11, 2011

ஒரு கடிதம் இரு நண்பர்கள்!

ன்புள்ள வாசகர்களே!


எனது நண்பர்களிலே ஒருவர் லண்டனிலே இருக்கிறார். முன்பு இங்கே இலங்கையில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.   மேல் படிப்புப் படித்துக் கொண்டே உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றிருக்கிறார்.


அவர் மிகவும் நேர்மையானவர். அத்துடன்  தான் நம்பும் இறைவனுக்கு உண்மையாகவே பயந்து வாழ்பவர்.

இந்த இரண்டு குணங்களும் போதாதா அவரால் பிழைக்க முடியாதிருப்பதற்கு?


ஆம், அவருக்கு லண்டன் போகும் போது ஓர் ஆசை இருந்தது. அது ஒன்றும் பெரிய ஆசையெல்லாம் கிடையாது. அதாவது  இலங்கையில் தனது ஊரிலே முழுமையாகக் கட்டி முடிக்கப்படாதுள்ள  இறையில்லம் ஒன்றுக்கு 10 பக்கட் சீமந்து வாங்கி அன்பளிப்புச் செய்ய வேண்டுமென்பததான் அந்த ஆசை. ஆனால் லண்டன் போய் பல வருடங்களாகியும் கூட அவரால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போனது ஏன் தெரியுமா?


வேறொன்றுமில்லை மேலே கூறிய இரு இயல்புகள்தான்.


நேர்மையாய் சம்பாதித்த பணத்தை மட்டும் வைத்து வாழ்வதற்கே போதாதிருக்கும் போது எங்கனம் தான தருமம் செய்வது? நேர்மைக்கும் சுபீட்சத்துக்கும் உள்ள தொடர்பை நீங்கள் இன்னம் விளக்கமாக அறிய வேண்டுமா....?

அப்படியானால்   மேலே நான் குறிப்பிட்ட லண்டன் நண்பருக்கு இலங்கையில் அவரது ஊரிலிருந்து  நெருங்கிய நண்பர் ஒருவர் வரைந்திருக்கும் கடிதமொன்றைப் பாருங்கள்!


இதோ அந்தக் கடிதம்:


மச்சான் சுலைமான்,

அஸ்ஸலாமு அலைக்கும்டா!


எப்படிச் சுகமா இருக்கியாடா? இந்தக்கடிதத்தை எழுதிறதை நினைச்சால் கவலையாகவும் சங்கடமாகவும் இருக்குடா. ஆனாலும் வேறு வழியில்லாததால்தான் அனுப்புறன். உண்மையான விசயத்தைச் சொல்றதுக்கு சொந்த மொழி அதுவும் பேச்சு மொழிநடைதான் நல்லது என்டதால அப்படியே எழுதுறன். சரிதானே?


மச்சான், இந்த உலகத்தில நேர்மையா வாழ்றதுக்கு வழியே இல்லடா. அப்படி நேர்மையா வாழ்ந்தா இந்த உலகமே நம்மள பைத்தியக்காரன் அல்லது பொழைக்கத் தெரியாதவன் என்றுதான் கணக்கெடுக்குதுடா. சின்னவியாபாரம் முதல் கொண்டு பெரிய அரசாங்கத் தொழில் வரைக்கும் பொய்யும் புரட்டும் லஞ்சமும் மோசடி களவும்தான்டா நடக்குது. இதில எதையாவது ஒரு பாவத்தையாவது செய்யாதவனால இன்றைய வாழ்க்கைக்குரிய மாதிரி சம்பாதிக்க இயலாது. அப்படிச் சம்பாதிக்க முடியல்லண்டா அப்படியானவன அவனைப்பெத்த தாய் முதல் கொண்டு அவனுக்குப் பிறந்த பிள்ளைகளும் கூட மதிக்காத நிலைமைதான்டா இப்ப இருக்குசிறு வட்டியைக்கூட பெறாதே என்று சொல்லியிருக்கிற சமூகத்திலதாண்டா கொள்ளை லாபம் வச்சு விக்கிறானுகள். போலியாக பொருளைத் தயாரிச்சு வித்து ஏமாத்துகிறான்கள். இலட்சக்கணக்கில லஞ்சம் வாங்கிட்டு கடமையைச் செய்யாம விடுறான்கள். பாடசாலையில கடமையைச் செய்யாம டியுசனுக்கு வரவைக்கிறான்கள்.தலையில் தொப்பியும் தொழுகையுமாக மீற்றர்ல மோசடி செய்து கள்ள கரண்ட் எடுக்கிறான்கள். இதையெல்லாம் ஆண்டவனுக்குப் பயப்படாமல் செய்துவிட்டு ஹஜ்ஜுக்கும் போறானுகள். பள்ளிவாசல் தலைவராகிறான்கள். அரசியல்வாதிகளோடு சேர்ந்து இரவுப் பார்ட்டி போட்டுக் குடிச்சிட்டு சுபஹுக்கும் வாறான்கள். வாப்பாமார் சுனாமி நிவாரணத்தில சுருட்டிச் சேர்த்த ஹறாமான பணத்தை முதலாக வைத்து மகன்மாரெல்லாம் ஹாட்வெயார் துணிக்கடை போட்டு  ஹலாலா வாழறானுகள் மச்சான்.இதையெல்லாம் ஏன் சொல்றேன் தெரியுமாடா. உன்னையும் என்னையும் போல இரண்டொரு மடையன்கள் லண்டன்லயும் நம்மட ஊர்களிலயும்  இருந்துக்கிட்டு நேர்மையாச் சம்பாதிச்சு முன்னுக்கு வரலாம் என்டு நம்பிக்கொண்டு வாழுறோமே...அந்த மடத்தனத்தை சொல்றதுக்குத்தான் இதை எழுதிறன்டா சுலைமான். மனிசன மனிசன் அடிச்சுத்திங்கிற நெலமை வந்திட்டுதுடா. இனியும் நம்ம நேர்மை அது இது என்டு சொல்லிக்கிட்டிருந்தா சரி வராது போல இருக்குதுடா.நான் இஞ்ச இந்த நிலைமையை அனுபவிச்சிட்டிருக்கிறேன். இந்த பொழைக்கத் தெரியாத வாழ்க்கை வாழ்ந்ததெல்லாம் போதும்டா என்று தோணுதுடா.உனக்கு நினைவிருக்காடா என்ட ஒரு மாமி தலையில ஒரு ஓப்பரேசனுக்கு காசு இல்லாம இருநதா என்டு சொன்னேனே. அந்த மாமியிட புருசன்ட தொழில் என்ன தெரியுமா? ப்ரைஸ் கொன்ட்ரோல் இன்ஸ்பெக்டர்! லஞ்சம் புழுத்து வழியுற வேலை. ஆனா எங்க மாமா அல்லாஹ்வுக்கு உண்மையாகவே பயப்படுறவரு. அவரோடு ஒத்த இன்ஸ்பெக்டர்மார்களிலே ஒரு காரோ பைக்கோ இல்லாத ஒரே ஒருவர் என்டா அது இவர்தான்.மாமிக்கு உயிராபத்தான நோய் வந்து ஒப்பரேசனுக்குக் காசு இல்லாத நெருக்கடியான நிலமையிலும் மனிசன் நேர்மையாக இருந்தாரு. கடைசியில என்ன ஆச்சு தெரியுமா? மாமி குணமடைஞ்சிட்டா. ஆனா இவரு மருந்துக்குச் செலவழிச்சுக் கடனாளியாகி  யோசனை பிடிச்சு மென்டலாகிவிடும் நிலைமைக்கு இருக்கிறாரு. இப்ப சொல்றா சுலைமான். தேவையா மச்சான் இந்த நேர்மை? பதில் சொல்றா சுலைமான்?நீ ஆண்டவனைத் தொழுதிட்டேயிரு. அவனுக்கு உண்மையாப் பயந்து வாழு. அப்பதான் உன்ட ஊர்ல இருக்கிற பள்ளிக்குக் கூட சீமந்து 10 பக்கட் வாங்கிக் குடுக்கேலாம இருப்பாய். அதையெல்லாம் விட்டுப்போட்டு பொழைக்கிற வழியப்பாரு மச்சான். இனி நானும் அதைத்தாண்டா செய்யப்போறன். நல்லது கெட்டா நாயிலும் கேடுன்டுவாங்க. ஏதோ உனக்கிட்டச் சொல்லணும் போல இருந்திச்சுடா. அதுதான்டா இந்த சாமத்துல ஈமெயில் பண்றன். உன்ட எண்ணத்தைச் சொல்லு மச்சான்.

இப்படிக்கு

இர்பான்


 ( குறிப்பு: பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன)- Jesslya Jessly

No comments:

Post a Comment