Wednesday, December 28, 2011

அழையா விருந்தாளிக்கு ஆண்டு நிறைவு - 7






ஓர் ஈர அனுபவம்!







ன்று ஓர் அழையா விருந்தாளியின் 7வது ஆண்டு நிறைவு!


2004ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தை அடுத்து வந்த ஞாயிறு தினம் அது. அதைச் சுனாமி என்றோ கடல்கோள் என்றோ அல்லது ஆழிப்பேரலை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து ஓர் அழையா விருந்தாளியாய் வந்து இந்த சமுத்திர நிலத்திணிவுகளின் கரையோரங்களில் அது ஏற்படுத்திய உடனடி அனர்த்தங்களையும் இன்றும் கூட தொடரும் அதன் மறைமுக விளைவுகளையும் மறந்துவிட பல வருடங்களும் அதைவிடப் பாரிய அனுபவங்களும் தேவைப்படும்.


அந்த நிமிடத்தில் கரையோரப்பகுதிகளில் நிரந்தரமாய் வாழ்ந்திருந்தவர்கள், தொழில் அல்லது தேவைகள் நிமித்தம் அங்கு சென்று வருபவர்கள், அன்றுதான் அப்படியான இடத்திற்கு வாழ்நாளில் சென்றிருந்தவர்கள்...என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.


கரையோரத்திலே பிறந்து அங்கேயே கிடந்து வளர்ந்தவர்களில் பலர் அன்றைய தினம் பார்த்து வேறு எங்கோ சென்றிருந்ததனால் உயிர்தப்பிவிட, கடல் என்றால் எப்படியிருக்கும் என்று அதற்கு முன்பு தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்தவர்களில் சிலர் உயிரிழந்திருப்பதுதான்,  ஒரு சோகமான வேடிக்கை.



அழிவு பொதுவானதாக இருந்தாலும் அன்றைய தினம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். 'அன்று நாங்கள் இன்ன இடத்திலிருந்தோம்...நீங்கள் எங்கிருந்தீர்கள்?'  என்று கேட்டு அவற்றினைப் பகிர்ந்து கொள்வது கூட
ஒருவித ஆறுதல்தான்.



 அவ்வாறான ஒர் அனுபவம்தான் இது:


கிறிஸ்துமஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை  பின்னிரவில் வெகுநேரம் வரை விழித்திருந்து பார்த்துவிட்டுத் தூங்கப்போயிருந்ததால் விடிந்தபின்னும் உறங்கிக் கொண்டிருந்தேன்."எழும்புங்க மச்சான்..எழும்புங்க..டவுனுக்குள்ள கடல்பொங்கி வெள்ளமாம்" என்று எனது மைத்துனி அறைக்கதவைத் தட்டினாள்.



ஒன்றும் புரியாமல் கையில் அகப்பட்ட  சட்டையை அணிந்து கொண்டு வீதிக்கு ஓடிவந்து பார்த்தால் நாலு கிமீ தள்ளியிருக்கும் நகரத்திலிருந்து வரும் வாகனங்களெல்லாம் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி விரைந்து வந்து கொண்டிருந்தன.என்னவென்று பார்ப்பதற்காகப் புறப்பட்ட பக்கத்து வீட்டவரின் மோட்டார் சைக்கிளில்  உடுத்தியிருந்த சாரத்துடன் காலில் செருப்புத்தானும் இல்லாமல் தொற்றிக்கொண்டேன். 



திருகோணமலைப் பிரதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் குன்றுகளின் மீது எப்போதுமே எனக்கு சந்தேகம் உள்ளது. ஆதிகாலத்தில் எரிமலை வெடிப்பு நிகழந்த இடமாக இருந்திருக்குமோவென்று. கன்னியா வெந்நீரூற்றுகளுக்கு கூறப்படும் புராணக்கதைகளை ஒதுக்கிவிட்டு யோசித்தால் இப்பகுதியில் பூமிக்கடியிலே எங்கோ இருக்கும் உருகிய பாறைக்குழம்பு (magma) தான் காரணமாக இருக்கவேண்டும் என்று புவியியல் அறிவு எச்சரிப்பதுண்டு. இதனால் கொட்டியாரக்குடாக்கடலில் உள்ள சிறுகுன்றுகளில் ஒன்றுதான் எரிமலையாய் குமுறிவிட கடலும் பொங்கிவிட்டதோ என்றுதான் நினைத்தேன்.


இரண்டு கிமீ தூரம் நகரை நோக்கிப்போயிருப்போம். மட்கோ  சந்தியைத் தாண்டி IOC பெற்றோல் நிரப்பு நிலையத்தருகே திருவிழாவுக்கூட்டம் பதற்றமாய் நின்றிருந்தது. மட்டிக்களி தொடக்கம் பொலீஸ் நிலையம் வரை கடல் எது வீதி எது என்று பிரித்தறியாதளவுக்கு எங்கும் ஒரே தண்ணீர் தண்ணீர்தான். இடுப்பளவு வெள்ளத்திலே சிலபேர் மட்டும் கண்களிலே பயப்பீதியுடன் குழந்தைகளைத் தலையில் தூக்கிக் கொண்டுவீதிவழியே கரையேறிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்கள் பயணம் புரிந்த பஸ் வண்டிகள், வாகனங்கள் நீரில் மூழ்கிக்கிடந்தன.


அவர்களின் கண்களில் இருந்த மிரட்சி பயம் தந்தாலும் நகரிலே  தாய் சகோதரிகள் இருப்பதால் அவர்களைப் பார்க்க எப்படியும் போகவே வேண்டிய நிலை எனக்கு. எனவே கூடவந்தவர் தடுத்தும் கேளாமல் வேறுவழியின்றி இறங்கிவிட்டேன்.



ஆனால் அந்தச் செயல் எவ்வளவு அசட்டுத்தனமானது என்பதை கடல் நீருக்குள் இறங்கிச்சில நிமிடங்களுக்குள்ளேயே தெரியவந்தது எனக்கு. வீதிவழியே மார்பளவு வெள்ள நீரோட்டத்தை எதிர்த்து என்னோடு சிலர் கூட வந்தபோதிலும் இடையிலேயே பின்வாங்கி விட்டனர். அப்பொழுதுதான் மட்டிக்களி கடலின் மேற்குப்புறமாக ஒரு மெகா சைஸ் கரும்பொலித்தீன் சுருள்போல சூரிய ஒளியில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. தூரத்தில் நின்றவர்கள் எல்லோரும் 'அலை வருது! அடுத்த அலைவருது!' என்று கத்துவது கேட்டது. பின்வாங்குவதற்கோ முன்னேறுவதற்கோ எனக்கு நேரமிருக்கவில்லை.



அப்போது நான் நின்று கொண்டிருந்த இடம் தற்போது நீர் வடிகாலமைப்புச் சபைத் தலைமையகத்தின்  பிரதான வாயில் இருக்கும் இடம். அந்த இடத்தில் ஏற்கனவே  வந்த அலைகளால் புரட்டிப்போடப்பட்ட வாகனங்களும் சரிந்து கிடந்த மின்கம்பங்களும் மட்டுமே இருந்தன. தொடுவானத்தில் தெரிந்த கரும் அலை கண்ணிமைக்கும் நேரத்தில் வெகு அருகில் தெரிந்தது.


திரண்டுவரும் கருமையான அலையின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாது பற்றிப்பிடித்துக்கொள்ளவும் எதுவுமில்லை. என்ன செய்யலாம் என்று பரபரத்தபோதுதான் சற்று அருகில் இருந்த ஒரு மின்கம்பத்திலே ஓர் பொலீஸ்காரன் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த மின்கம்பம் ஆள் ஏறி நிற்கத்தக்கதாக இடையிடையே இடைவெளிகள் கொண்ட புதிய வகையானது.முதுகுத்தண்டினூடாக ஏதோ சில்லிட்டுப்பாய்ந்து காதுமடல்களைச் தீய்த்துச் செல்ல,  அடுத்த கணம் நான் செயற்பட்ட வேகமிருக்கிறதே.. அது இன்றுவரை என்னாலேயே நம்ப முடியாதது.



ஆபத்து வரும்போது துரித கதியில் செயல்படுவதற்காக பாலூட்டி வகை உயிரினங்களுக்கெல்லாம் இயற்கை வைத்திருக்கும் அதிரினலீன் ஹோமோன் பற்றி இதை வாசிக்கும் நீங்களும் சிறிது அறிந்திருந்தால் அவசரப்பட்டு தெய்வச்செயல்,முன்பிறவிப் பயன் என்றெல்லாம் நெக்குருகத் தேவையில்லை. 


அந்த மார்பளவு கடல்நீரில் கம்பத்தை நெருங்கி வினாடிகளுக்குள் ஏறி,  "அனே மல்லி! மகே அத்த அல்லபாங்' என்று கதறிக் கைகொடுத்த பொலீஸ்காரனின் காலைச் சரியாகப்பற்றி... (அதுதான் என் கைக்கு எட்டியது! )  உன்னி நான் மேலே ஏறவும் உயர்ந்து வந்த அலை மிகச்சரியாக நாங்கள் இருவரும் நின்ற இடத்திலே வந்தவுடன் சட்டெனத் தாழ்ந்து பரவிச்செல்லவும் சரியாக இருந்தது.


அதன் பின்பு சென்ற அலை திரும்ப வந்து வடியும்வரை காத்திருந்தது...இறங்கி நகருக்குள் சென்றது.. 'திருகோணமலை நகரமே கடலுக்குள் மூழ்கிவிட்டது' என்ற வந்திகளுக்கு மாறாக நகரமத்தி ஒரு சொட்டுத் தண்ணீர்படாமல் இருந்தது... 'இதையெல்லாம் பார்த்தபிறகும் மனிசனுக்கு துனியா (உலக) ஆசை வருமா?' என்று சுனாமி ஞானம் பேசிய அதே வாயால் இன்று 'போங்க! போங்க! ஒவ்வொரு நாளும் தாறதுக்கு அதுக்கு வேறயாச் சம்பாதிக்கணும்'  என்று பிச்சைக்காரிகளை விரட்டும் கடை முதலாளிகளைச் சந்தித்தது...பற்றியெல்லாம் எழுதப்போனால் இப்போதைக்கு மீண்டுவரவே முடியாது என்பதால் நிறைவுசெய்கின்றேன் நண்பர்களே!





 
ஓரு சிறுகுறிப்பு:

                                  கடல்கோள் நிகழ்ந்து இரண்டொரு நாட்கள் கழியும் வரை 'சுனாமி' எனும் அந்த மந்திரச்சொல் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கிண்ணியாவில் ஓர் ஆசிரியர் மட்டும், அலைகள் கரையைத்தாக்கும் முன் கடல் வற்றிக்கொண்டு பின்வாங்கிச் சென்றதைக் கண்டவுடனேயே, 'டேய்! 'சுனாமி' வரப்போகுது கரையில யாரும் நிற்காதீங்க ஓடங்கடா!' எச்சரித்துக் குரலெழுப்பியவாறு தனது குடும்பத்தைக் காப்பாற்ற விரைந்திருக்கின்றார்.


அதற்குக் காரணம் அவரது பரந்துபட்ட வாசிப்பறிவுதான்.

இலங்கைத் தீவிலேயே சுனாமி என்ற சொல்லை, அந்த அனர்த்தத்திற்கு சற்று முன்னர் உச்சரித்தவர் அநேகமாக அவராகத்தான் இருப்பார். அவர் வேறுயாருமல்ல நண்பர் ஆங்கில ஆசிரியர் முனவ்வர் தான்.

-'Mutur' Mohammed Rafi
(on26.12.2011)

No comments:

Post a Comment