Monday, January 16, 2012

ரயிலே... ரயிலே... ஒருநிமிடம்!







இரயில் சிநேகிதிகள்!





'நாளை நமதே' என்று ஓர் பழைய எம்ஜியார் படம் அல்லது பழைய அமிதாப் காலத்து  ஹிந்திப்படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும். வில்லனால் சிறுவயதில் திசைக்கொன்றாய் பிரிந்துபோன சகோதரர்கள் கடைசியில் மேடையில் குடும்பப் பாட்டு ஒன்றைப் பாடித்தான் ஒன்று சேர்வார்கள்.


சரிதான், அதற்கும் இந்தப் பத்திக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று கேட்கிறீர்களா? இல்லாமலா எழுதப்போகின்றேன்... இதுவும் ஒரு பிரிவு பற்றிய கதைதான். ஆனால் பிரிந்தவர்கள் சகோதரர்களல்ல; நண்பர்கள்!

இது நடந்து ஏறத்தாழ 20  ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் பின்னிரவு மழையில் நனைந்த பூமியாய் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இன்னும்  மனதிலே ஈரமாகவேதான் இருக்கின்றது.
\
இதை நான் இப்போது எழுதுவதற்குரிய காரணமும் இந்தத் தொடரின் தலைப்பும் ஒன்றுதான். ஆம்! அது  என்றைக்கோ தவறவிட்டுவிட்ட எனது சிநேகிதிகள். 'அபியும் நானும்' என்ற திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்வார், 'நிகழ்கால நிகழ்ச்சிகள்தானே எதிர்காலத்தில் இனிமையான நினைவுகளாகின்றன' என்று.


அது உண்மைதான்!


1991ல் 'மீண்டும் தனது தோழிகளைச் சந்திக்கலாம்தானே' என்று அவன் அலட்சியமாக இருந்ததன் விளைவை இன்றுவரை பிரிவு என்னும் இதய வலியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.


ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல்சார்ந்த ஈர்ப்பைத் தவிர வேறு உறவுகள் உருவாக முடியாது என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்யும் நமது கீழைத்தேய சமூகத்தில் எனது சிநேகிதிகளுக்கும் அவனுக்குமிருந்த நட்பை நான், நீங்கள், சமூகம் எல்லோரும் எப்படிப் புரிந்து கொள்வோம்?

அன்றைக்கு இளம் யுவதிகளாக இருந்த அவர்கள் இப்போது குறைந்தது நடுத்தரவயது பெண்மணிகளாகி மனைவிகளாகவும் தாயாகவும் மாறியிருப்பார்கள். இயல்பாகவே குடும்பச்சூழல் காரணமாக கணவர் தொடங்கி குழந்தைகள்பராமரிப்பு வரை ஒரு குடும்பப்பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலையில் ஆண்களைப்போல கடந்தகால நட்புகளை நினைத்துப் பார்க்கவே நேரமிருக்காது.


அபூர்வமாக நேரமிருந்தாலும் கூட இவ்வாறான நட்புகளைத் தொடர்ந்து பேணுவதில் இருக்கும் சமூகக் காரணிகள் அவற்றை அனுமதிப்பதில்லை. ஆயினும் சிறுவயதிலே எப்போதோ எடுத்துக்கொண்ட ஓர் புகைப்படத்தை வெகுகாலம் கழித்துப் பார்க்கும்போது ஏற்படும் ஒருவித பரவச உணர்வுகள், பதின்வயதில் கேட்டு இரசித்த பாடல் ஒன்றை இப்போது கேட்கும்போது மனதிலே நிழலாடும் இனிய நினைவுகள்  இந்த பத்தியை வாசிக்க நேர்ந்தால் அவனது இனிய சிநேகிகிதிகளுக்கும் தோன்றலாம்.


நம்மோடு கூட இருப்பவருக்குக் காண்பிப்பதற்குள்ளே கணத்தில் மறைந்துவிடும் ஒரு நடுநிசி வால்வெள்ளி போல இதைப் படித்துவிட்டு பிறருக்குச் சொல்லாமலே இரசித்துவிட்டு மறந்தவிடலாம் தோழிகளே - உங்களால் முடிந்தால்!
 


அது 1991ம் வருடம். அப்போது அவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் (விஞ்.) பிரிவு மாணவன். முந்தைய ஆண்டில் வடகிழக்கு முழுவதும் தலைவிரித்தாடிய வன்செயல்களினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதிலே இருந்த சாத்தியமான உயிராபத்தை கருதி கொழும்பு அல்லது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் கோரிப் போராடிக் கொண்டிருந்த காலம் அது.


இடமாற்றம் பெறுவதிலேயிருந்த தாமதம், நம்பிக்கையீனம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயர்கல்வியைத் துறந்துவிட்டு அரசாங்கத் தொழில் ஒன்றில் நிரந்தரமாக இணைந்துவிடலாமா என்று மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையில் மிக முக்கியமான முடிவை தாமதிக்காமல் எடுத்தேயாக வேண்டிய புள்ளியில் அவன் இருந்த காலம் அது. இதனால் அவ்வப்போது கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்றுவரவேண்டியிருந்தது அவனுக்கு.


அவ்வாறு ஒருதடவை அவன் ரயில்வண்டியில் கொழும்பு சென்று கொண்டிருந்தான். அந்த நாட்களிலே திருகோணமலையிலிருந்து மாலையில் புறப்படும் ரயிலில் ஏறினால் கல்லோயாச் சந்தியில் இறங்கி மட்டக்களப்பிலிருந்து வரும் இரவு தபால் வண்டிக்குக் காத்துக்கிடந்து ஏறினால்தான் கொழும்புப் பயணம் செய்யலாம். அதுவும் சிலவேளகளில் மட்டக்களப்பிலிருந்து வரும் புகையிரதத்தின் பயணிகள் பெட்டியில் கூட்டம் நிரம்பி வழியும் அப்போதெல்லாம் நிற்பதற்குக் கூட இடம்போதாமலிருக்கும்.



அன்றும் கல்லோயாச் சந்தியில் வந்து நின்ற ரயிலிலில் கூட்டம் கதவுகள் வரை பிதுங்கி நின்றது. வழமையாக ரயில் நின்றால் சும்மாவேனும் புகையிரத மேடையில் இறங்கிவிட்டு ஏறும் ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் கூட 'எங்கே இறங்கினால் வேறுயாரும் இடத்தைப் பிடித்துவிடுவார்களோ' என்ற பயத்தில் அன்றிரவு தேன்கூட்டில் மொய்த்திருக்கும் தேனீக்களைப்போல இறங்காமல் ஒட்டியிருந்தார்கள்.


ஒவ்வொரு கதவாய் தேடியலைந்து எப்படியோ ஒருவழியாய் பயணிகள் பெட்டியினுள் எறிவிட்டான். முதுகில் தொங்கிய தோள்பையுடன் நின்றுகொண்டிருக்கும் பயணிகளைக்கடந்து உட்செல்வதே பெரும்பாடாக இருந்தது. வழிமுழுவதும் "Excuse-me" க்களை தாராளமாக வாரியிறைத்து ஒருவாறு ஓரளவு நெருக்கடி குறைந்த இடத்தில் போய் நின்று கொண்டான்.




அது ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியின் கடைசி இருக்கையுடன் சேர்ந்தவாறுள்ள ஒருமுனை என்பதால் வழியில் நிற்பதே சற்றுச் சிரமமாக இருந்தது. அவனும் இன்னும் சில இளைஞர்களும் கால்கள் வலிக்க நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையில் ஆறு அல்லது ஏழு இளம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றாக வந்திருப்பவர்கள் போலத் தோன்றியது.


இளைஞனான அவனது பார்வை இயல்பாக அவர்களை நோக்கி செல்லும் போதெல்லாம் அந்த இளம் பெண்களின் பார்வைகளுடன் எதேச்சையாக உரசிக் கொண்டது. அவர்கள் ஒன்று சேர்ந்து அவனையே பார்ப்பது போலிருந்தது  உண்மையா அல்லது பிரமையா என்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால் மெல்லிய கூச்ச உணர்வுக்குள்ளாகி தனது பார்வை வேறுபுறமாகத் திருப்பிக்கொள்ள முயன்றான். ஆனால்  அவர்கள் தன்னைப் பாரக்கிறார்களா என்று திரும்பிப் பார்க்கத்தோன்றியது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நின்றிருந்தான்.

இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் அந்த நள்ளிரவில் இருளைக் கிழித்தபடி விரைந்து கொண்டிருந்தது  இரவுத் தபால் வண்டி.
அப்போது ரயில்வே காவலர்கள் பயணச்சீட்டுகளைப் பரிசோதித்துக் கொண்டுவந்தனர். அதனால் இருக்கையிலிருந்தவர்கள் சற்று எழுந்து சீட்டுகளைக் காட்டிவிட்டு மீண்டும் தங்களுக்கிடையில் இடம்மாற்றிக் கொண்டு அமர்ந்தனர், அந்த இளம்பெண்கள்.



சிறிது நேரத்தில் அவனது தோள்பையை பின்னாலிருந்து யாரோ தட்டுவது போலிருக்கத் திரும்பிக் கீழே பார்த்தான். அந்த இளம்பெண்களில் ஒருத்தி சிரித்தவாறு தனக்குப் பக்கத்தில் சிறு இடத்தை அவனுக்காக   ஒதுக்கி அதிலே அமருமாறு சைகை செய்தாள். அவன் லேசாகத் தயங்கியபோது எதிரில் நின்றிருந்தவர்களிலே யாரோ அந்த இடத்தைக் குறிவைக்கவே சட்டென அந்த இடத்தில் இருந்துவிட்டான்.


நன்றி சொல்லிவிட்டு அவன் அமர்ந்தாலும் உண்மையில்  அவனும் சேர்ந்து உட்கார்வதற்கு அந்த இருக்கை போதாது. ஆனால் அது 'மனமிருந்தால்...' என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இடம் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவைப்பட்டிருக்கவில்லை அவனுக்கு.  தான் தயங்கிய வேளையிலே எதிரில் நின்ற வேறொரு இளைஞன் இதே இருக்கைக்கு முண்டியடித்தபோது இடம்தந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் அவன் காணத்தவறவில்லை. (Contd...)





-'Mutur ' Mohammed Rafi

Thursday, January 12, 2012

உடைவது சிலை - ஓயாத நிலை!





தொடரும் சிலை உடைப்புகள்!








ண்மையில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பிலே நடாத்திய ஆரப்பாட்ட ஊர்வலத்தையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இழுபறிகள் பற்றிய செய்திகளையும் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி மற்றும் பிற ஊடகங்களிலும் அறிந்திருக்கலாம்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தின்போது மாணவர்கள் எழுப்பிய கோஷங்களையும் கையில் ஏந்தியிருந்த சுலோகங்களையும் அவதானித்தபோது அவர்களுக்கும் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே நீண்டகால முறுகல்நிலை இருந்து வருவது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓர் ஆர்ப்பாட்டமாக வெடித்துக்  கிளம்புவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு சிலையின் உடைப்பு!


பல்கலைக்கழக மாணவர்களின் முன்னைய போராட்டங்களை நினைவூட்டும் வகையில் நிறுவிப் போற்றப்பட்டிருந்த ஒரு விடுதலைச்சிலை அன்றைய தினம் அதிகாலையில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது. இந்த விஷமவேலைக்கு யார் காரணம் என்று தெரியாத போதிலும் உபவேந்தர்தான் பின்னணி என்று மாணவர்களும் மாணவர்களின் உள்சதிவேலை என்று உபவேந்தரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரச்சினை இன்னும் சுமுக நிலையை எட்டப்படாத நிலையில் வழமைபோலவே பல்கலைக்கழகம் காலவரையறையின்றி...


சரி, அது  இருக்கட்டும் ஒருபுறம்!



 






இப்போது அறியப்படும் மற்றொரு செய்தியும் ஒரு சிலை உடைப்புத்தான்.
இது நிகழ்ந்திருப்பது தீவின் கிழக்கில் மட்டக்களப்புக்கும் காத்தான்குடிக்கும் இடைப்பட்ட பிரதேசமான ஆரையம்பதியில். மட்டக்களப்பு என்றதும் சட்டென யாருக்கும் நினைவுக்கு வருவது பாடும் மீன்களும் சுவாமி விபுலானந்தரும்தான்.


சுவாமி விபுலானந்தரைப் போன்றே தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் மற்றுமொரு மேதையான  சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலைதான் விஷமிகளால் உடைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அந்தச் சிலை நிறுவப்பட்ட தினத்திலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளதுதான் வேதனை. இதனை யார் செய்திருப்பார்கள் என்ற தேடலில் நேரமும் உழைப்பும்தான் விரயமாகுமே தவிர வேறுபயன்கள் கிடைக்கப்போவதில்லை.







இதேபோல ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு திருகோணமலை நகரிலும் நடந்தேறியதை பலர் மறந்திருப்பீர்கள். அதிலே பாதிக்கப்பட்டவர் தமிழ் பேசும் மக்களால் பெரிதும் போற்றப்படும் தந்தை செல்வநாயகத்தின்  உருவச்சிலை. தற்போது அவரது வேறு ஒரு சிலை அதேயிடத்தில் நிறுவப்பட்டுள்ள போதிலும் மீண்டும் அதே போல ஒரு விஷமச்செயல் நிகழாது என்பதற்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது.


அதேவேளை இதே திருகோணமலை நகரிலே சில வருடங்களுக்கு முன்னர் ஒரு உருவச்சிலை தொடர்பாக நிகழ்ந்த அமைதியின்மையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்செயல்களும் ஏனோ ஞாபக அரங்கேறுகின்றன. பல இரத்தக்களறிகள்.. சில உயிர்ப்பலிகள்.. நீதிமன்றத் தலையீடுகள் என்றெல்லாம் இழுபட்டு கடைசியில் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தின் இடது முனையிலே மிகவும் பாதுகாப்பாகி, முன்னிலும் பெரிதாகி, மேலும் சாந்தமாகி  பீடம் அமர்ந்தார் கொல்லாமையைப் போதித்த போதி-மாதவன்!

- Jesslya Jessly


குறிப்பு:   தினக்குரல் (2009.05.03 ஞாயிறு)  பத்திரிகையில் வெளியான  நண்பர் மூதூர் மொகமட் ராபி யின் இந்தக் கவிதை இன்றைய எனது பத்திக்கும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?



இன்றைய

திருகோணமலை!



வீதிக்கு வீதி சிறுகோயில்
தெருவுக்கு ஒரு பள்ளிவாசல்
சந்திகள் தோறும் மாதாசிலை
உச்சிமலையிலே புத்தபகவான்!


மூன்று புறமும் வங்கக்கடல்
நான்குதிசையும் காவல் அரண்
நெடிதுயர்ந்த நீதிமன்றம்
நின்றுபோகும் மணிக்கோபுரம்!


அலறியோடும் ஆம்பலன்சுகள்
அகதிகள் வழியும் ஆஸ்பத்திரி
காற்றும் வராத வாடகை வீடு
கனவிலும் ஓடும் கேபிள் டீவி!


ஓய்வே இல்லாத மனிதர்கள்
டியூஷன் குறையாத குழந்தைகள்
செல்போன் தின்னும் இளைஞர்கள்
செத்துப்போன லைப்ரரிகள்!


வயதுமீறிய ஆசைகள்
வசதிகள் பார்த்திடும் வேகங்கள்
மனசு முழுவதும் கொடூரங்கள்
குப்பைகளிலே குழந்தைப் பிணங்கள்!


-மூதூர் மொகமட் ராபி-

அங்கேயும் இப்படியா?





இதுவும் ஓர் அனுபவம்தான்!






ன்று ஒரு புதன்கிழமை.  ஒரு அலுவலாக மாகாணக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அண்மையில் நிகழ்ந்த ஆசிரியர் இடமாற்றங்கள் காரணமாக ஒர் பெரும் கூட்டமே காத்திருந்தது. மாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்திப்பதற்குரிய படிவத்தைப் பெற்று நிரப்பி நிர்வாக அலுவலரின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகே இரு நடுத்தர வயதைத்தாண்டிய பெண்மணிகள் காத்திருந்தனர். அவர்களின் உரையாடலை எதேச்சையாக அவதானித்ததிலே அவர்களிருவரும் மட்டக்களப்பிலிருந்து வந்திருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டேன்.


'உங்களது இலக்கம் எத்தனை தம்பி?' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். 'இல. 12' என்று நான் பதில் கூறியதும் அவர்களிருவரது முகத்திலும் ஏமாற்றம் கலந்த ஆச்சரிய மின்னல்கள்!
 'இதென்னது..நாங்க இருவரும் விடியல் காலையிலேயே வந்து காத்துக்கிடக்கிறோம். எங்களுக்கு 44! இப்ப வந்த உங்களுக்கு 12 தந்திருக்கிறாங்களே?' என்றார்கள்.


 'அப்படியா!' என்று வியந்துகேட்ட எனக்கு அவர்களது ஆதங்கம் புரிந்தது.  அவர்களது நிலையைப் பார்க்கப் பாவமாகத்தானிருந்தது. ஆனால் படிவத்திலேயே இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாற்றிக் கொடுக்கவும் முடியாது.



அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக, அரச அலுவலகங்களிலே நிகழும் இதுபோன்ற சிறியது முதல் பெரியது வரையிலான குளறுபடிகள் பற்றிய பேச்சை எடுத்தேன். அவ்வளவுதான் யாரிடம் இதுபற்றித் தங்களது உள்ளக் குமுறல்களையெல்லாம் கொட்டலாம் என்று காத்திருந்தவர்கள் போல் கொட்டித் தீரத்துவிட்டார்கள், ஆசிரியைகளான அந்தப் பெண்மணிகள் இருவரும்.

அப்போதுதான் புரிந்தது நம்மைப்போலவே ஒவ்வொரு ஆசிரியர்களுக்குள்ளும் பல உண்மைக் கதைகள் உள்ளன என்பது.


 ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களது அனுபவங்களை இங்கே அவற்றின் உள்ளடக்கம் காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதுள்ளது.


எனினும் அவர்களது உரையாடலின் இறுதியில், தங்களது பிரதேசத்தில் அண்மையிலே விநியோகிக்கப்பட்ட ஒரு கவிதை வடிவிலான துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தந்தனர். அன்புச் செல்வன் என்பவரின் பெயர் பொறித்திருக்கும் அதனை  இங்கே தருகின்றேன். பாருங்கள்:


- மூதூர் மொகமட்ராபி



நிர்வாக சுதந்திரம்!


ன்புடையீர்!


இதுவோர் அரச திணைக்களம்
ஆதலால் நீங்கள்
வரலாம் போகலாம்
வராமலும் இருக்கலாம்
வந்தவுடன் போகலாம்
நாளையும் வரலாம்!

கேள்வியில்லை
கேட்பாரில்லை!



அமர்ந்திருக்கலாம்
நடந்து திரியலாம்
அமைதியாயிருக்கலாம்
உரத்தும் பேசலாம்

ஏனென்று எந்தக்
கேள்வியுமில்லை

வேலை செய்யலாம்
செய்யாது இருக்கலாம்!



காலையில் வந்து
காணாமல்போய்
மாலையில் வந்து
ஒப்பமும் போடலாம்!

யாரும்வந்து யாரோடும்
வந்தவரோடு வாசலில் நிற்கலாம்
வாசலில் நின்றே
வேடிக்கை பாரக்கலாம்!



முறுக்குக் கொறிக்கலாம்
முட்டாய் தின்னலாம்
கொறித்துக் கொண்டே
கோலும் பேசலாம்

கைத்தொலைபேசியைக்
காதில்வைத்து
நடக்கலாம் சிரிக்கலாம்
நடனமும் ஆடலாம்

வேட்டிகட்டலாம்
டையும் கட்டலாம்
வெள்ளிக்கிழமை வேலைநாள்
வேறுபாடின்றி
பொட்டும் வைக்கலாம்!


விடுமுறை எடுக்கலாம்
எடுக்காமலிருக்கலாம்
விடுமுறைக்கடிதம்
தரலாம் விடலாம்;
பொறுப்புகள் எதுவும்
ஏற்காதிருக்கலாம்
ஏற்றால் எதுவும்
செய்யாதிருக்கலாம்

கேள்வியுமில்லை
கேட்பாருமில்லை!


அன்புடையீர்!

இதுவோர் அரசதிணைக்களம்
இங்கே யாரும் யாருக்கும்
அரசனுமில்லை
ஆண்டியுமில்லை

யாரும் வரவும்
யாரும் போகவும்
எந்தத் தடையும்
எவருக்கும் இல்லை!


இத்தனையும் செய்து
எத்தனை மகிழ்ச்சி
மாத முடிவில் ஒப்பமிட்டதும்
ஊதியம் கிடைக்கின்றது!

என்னருமைத் தாய்நாட்டின்
அரசநிர்வாகத்திற்கும்
ஜனநாயக சோஸலிச
சுதந்திரக் குடியரசிற்கும்
ஓ போடு!


-அன்புச் செல்வன்-

Tuesday, January 3, 2012

இன்னா செய்தாரை...!



ஒரு அதிபரும்  
ஒரு இறப்பர் முத்திரையும்!







முதல்நியமனம் கிடைத்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் எனது ஊரிலுள்ள பாடசாலையில் கடமையாற்றியபின்பு திருகோணமலை வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இடம் மாற்றம் பெற்று வந்திருந்தேன்.


அது ஆறாம் தரம் வரை மட்டுமேயுள்ள ஓர் சிறு பாடசாலை. ஒழுங்கான சுற்றுமதிலோ அடைப்புவேலியோ கிடையாது. அங்கு கடமையாற்றும் அதிபர் முதல் ஆசிரியர்கள் வரை அநேகர் நகரிலிருந்து வந்து செல்பவர்கள். இதனால் ஏறத்தாழ காலையில் கூடி பிற்பகலில் கலையும் அங்காடி போலத்தான் பாடசாலையும் நடந்து வந்தது.


அதிபர் நடுத்தர வயதைத் தாண்டிய மனிதர்.


நேர முகாமைத்துவம் என்றால், 'அது எந்த ஊருக்குப்போகும் வழி?' என்று கேட்பார். காலைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவுப் பொதியைப் பிரித்து பாண் துண்டுகளை மென்று தின்னும் அவரிடம் தனிமனித ஒழுக்கம் எவ்வாறிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.


அவருக்கு பாடசாலை நடவடிக்கைகளை விட அவர் வீட்டில் வைத்து நடாத்தும் துணிமணி வியாபாரமே முக்கியமாக இருந்தது. இதனால் காலையில் பாடசாலைக்கு நேரம் கழித்துத்தான் வருகை தருவார். அவரது அலுவலகம் திறக்கும் வரை ஆசிரியர்கள் உட்பட அனைவரும் காத்துக்கிடக்க வேண்டும்.


அதிபர் அல்லது அவரது உதவியாகச் செயற்பட்ட ஓர் பறங்கி இனத்தவரான ஆசிரியை வந்து, பக்கத்து வீடொன்றில் இருந்து அலுவலகத் திறப்புக்கோர்வையைப் பெற்று வந்தால்தான் பாடசாலைச் சுத்தம் உட்பட சகல கருமங்களும் ஆரம்பிக்கும். இதற்கிடையில் நேரம் முதலாம் பாடவேளை முடிவடைவயும் தறுவாயாகிவிடும்.



எனது கிராமத்து பாடசாலையில் சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் கடமையாற்றிப் பழகியிருந்த எனக்கு இந்தப்பாடசாலை நிருவாகத்தின் கீழ் பணிபுரிவது எப்படியிருந்திருக்கும். எவ்வளவுதான் முயன்ற போதிலும் இவரது நேர்த்தியற்ற போக்குகளுடன் சமரசம் செய்ய முடியாதிருந்தது. அத்துடன் நிர்வாக ரீதியாகச் சில தொல்லைகளையும் எனக்கு தர ஆரம்பித்திருந்தார். இதனால் அதிபருக்கும் எனக்குமிடையிலே சிறுசிறு முரண்பாடுகள் ஏற்படலாயின.

அது  ஒரு பிரச்சினையாக வெளித்தோன்றுவதற்கிடையிலே சிறிதுகாலம் பனிப்போர் நிலையில் இருந்து வந்தது. அந்தப் பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான அனுபவம்தான் இது!








நான் முரண்பட்டதிலிருந்து அதிபருக்கு என்னிலும் மற்றவர்களிலும் சந்தேகம் தோன்றி  வலுவடைய ஆரம்பித்தது. தனது நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கும் நானும் மற்றவர்களும் எங்கே தனக்கு ஏதாவது சதி செய்து விடுவோமோ என்று உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கினார். அதுவும் குறிப்பாக என்னில்தான் அதிக ஐயம் கொண்டிருந்தார் அவர்.


அந்தப் பீதியில் அடுத்த வகுப்பறைக்குச் செல்வதென்றால் கூட தனது அலுவலகத்தை  பூட்டிவிட்டுத்தான் செல்வார்.  அதிபரது இந்த அவசியமற்ற குலைநடுக்கத்தைப் பார்த்து ஆசிரியர்களாகிய நாங்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வதுண்டு.  நாள் செல்லச் செல்ல அவரது பீதி முற்றி அலுவலக இறப்பர் முத்திரைகளைக் கூட தனது காற்சட்டைப் பைகளுக்குள் வைத்துக்கொண்டு அலையுமளவுக்கு ஆகிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஒருநாள் மதிய நேரம் புழுக்கம் தாங்காமல் அலுவலகத்தை  பூட்டிவிட்டு மைதானத்தினருகேயிருந்த மாமரத்தின் கீழே உலாவிக் கொண்டிருந்தார் அதிபர். அவ்வாறு உலாவிக் கொண்டிருந்தவர் சட்டென தனக்குப் பின்னே யாரோ நடமாடுவது கண்டு திரும்பினார்.


ஒரு மாணவன் தனது உள்ளங்கைகளைப் பொத்தியவாறு நின்றிருந்தான்.


'சேர்! இந்தாங்க, இது கீழே எங்கேயோ விழுந்து கிடந்துதாம். இதை உங்களுக்கிட்ட குடுத்திட்டு வரச் சொன்னார்'   என்றபடி அவன் நீட்டிய கையில் இருந்தது,


அதிபரது இறப்பர் முத்திரை!


'இது எப்படிடா..?' என்று குழம்பிய அதிபர் அவசர அவசரமாக தனது காற்சட்டைப்பையினுள் கைவிட்டுத்தடவிப் பார்த்தார். அது கிழிந்து ஓட்டையாகி இருந்தது!


அவமானத்தில் முகம் சிவந்த அவர்,  "யார் தந்தது?" என்றார், ஆச்சரியத்துடன்.


'அந்தா நிக்கிறாரு... அந்த சேர்தான்' என்று அந்த மாணவன் கை காட்டிய திசையில் நின்று கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல;

அடியேன்தான்!



-மூதூர் மொகமட் ராபி


Monday, January 2, 2012

சிறுகதை:



செக்குமாடுகள்!










" Sir, May I come in?"

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.

இரவு ஆரம்பித்த மழை இன்னும் தூறிக்கொண்டிருப்பது ஆஸ்பத்திரி கண்ணாடி யன்னலினூடாக மழுப்பலாகத் தெரிந்தது. மழையினாலோ என்னவோ OPD வெறிச்சோடியிருக்க தூறல் மழையின் மெல்லிய ரீங்காரத் தாலாட்டிலே தூக்கம் கண்ணைச் சுழற்றிய போதுதான் இந்த ஆங்கில இடையூறு.


"yes, come in" என்ற எனது பதிலை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல உள்ளே நுழைந்தான் ஓர் இளைஞன். அவனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கலாம். நவீனரக ஆடைகளை மிக நேர்த்தியாக அணிந்து மிடுக்காக இருந்தான் அவன். பளபளப்பான சப்பாத்துக்கள், குளிர்க்கண்ணாடி, கையில் செல்போன், தோளில் பெரிய தோல்பை சகிதம் உள்ளே வந்தவன் தனது கனமான பையைத் தரையில் வைத்துவிட்டுச் சிறிது நேரம் என்னைப் பார்த்தவாறு நின்றிருந்தான். நோயாளிகளை அமர்த்தும் இருக்கையை காட்டி உட்காருமாறு சைகை செய்து விட்டு "Yes!"என்றேன்.

கழுத்துப்பட்டியைத் தளர்த்திக் கொண்டு என்னைச் சந்திக்க வந்த விடயத்தைப்பற்றி அவன் பேசத் தொடங்கிய போது வெளியே மழை உரத்துப் பெய்ய ஆரம்பித்தது. இந்தக் கதை அவன் பேசப்போகும் விடயத்தைப் பற்றியதல்ல என்பதால், அவன் பேசுவதற்கிடையிலே நான் யார் என்பதைச் சொல்லி முடித்து விடுகின்றேன்.


இன்றைய திகதிக்கு இந்த திருகோணமலை நகரிலே இருக்கும் தலைசிறந்த வைத்தியர்களின் பட்டியல் என்று ஏதாவது ஒன்று உங்கள் கையிலிருந்தால் அதிலே எனது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைத் தாண்டாது. சொந்தவீடு, பணக்கார மனைவி, நவீனரக AC கார், விலையுயர்ந்த செல்போன், மடிக்கணணி என்று சுகபோக வாழ்கைதான். இருந்தாலும் சுமார் 16 வருடங்களுக்கு முன்பு இதே திருகோணமலையின் தூசுபடிந்த தெருக்களிலே அப்பாவின் பழைய துருப்பிடித்த சைக்கிளில் பாடசாலைக்கும் டியூசனுக்கும் அலைந்து திரிந்த பழைய வாழ்க்கையை இன்னும் நான் மறந்துவிடவில்லை.










என்னோடு ஒன்றாகப் படித்தவர்களிலே நானும் அலஸ்தோட்டம் சின்னையா மெக்கானிக்கின் மகன் சின்னத்தம்பாவும்தான் மருத்துவத்துறைக்கு எடுபட்டோம். மற்றவர்கள் ஆளுக்கொரு துறையிலும் திசையிலும்  சென்றுவிட்டார்கள். இரண்டொருவர் இயக்கத்துக்கப் போனதுமுண்டு. ஆனால் போய் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அநேகமாகச் செத்திருப்பார்கள். சிலபேர் Swiss, Canada, Australia என்று புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கேள்வி. இங்கே இருப்பவர்களில் எங்கள் முன்வீட்டு பவானி அக்காவின் தம்பி ரதீஸ் மட்டும் நிலாவெளியில் ஒரு பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கின்றான. எப்போதாவது இருந்துவிட்டு ஒருநாள் என்னைக் காண வருவான். அப்படி வந்தால் பாடசாலைக்காலத்தில் பழகிய மாதிரியே தோழமையோடு பேசுவான். தவிர, எனக்கு படிக்கின்ற காலத்திலே நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே இருக்கவில்லை. ஓ! 'இருக்கவில்லை' என்றா சொன்னேன்?  'இருக்கவிடவில்லை' என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.



பாடசாலை விட்டதும் அஜந்தன், ஜிகான், மயூரன், இஜாஸ், பார்த்தீபன், ஸன்பர், ஸ்ரனிஸ்லாஸ் (உச்சரிப்பதற்குக் கடினம் என்பதால் பட்டப்பெயர்: தண்ணிக்கிளாஸ்), சின்னத்தம்பா உட்பட ஒரு குழு  football விளையாடப் போய்விடும். மெத்தடிஸ் பெண்கள் பாடசாலைக்கு முன்னாலுள்ள மைதானம்தான் அவர்களது சொர்க்க பூமி.



எல்லோரும் ஓடித் துரத்தி பந்தை உதைத்து விளையாடுவதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும் எனக்கு. ஆனால, தினமும் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் scholarship classes நினைவுக்கு வந்து ஆட்டத்தில் சேரவிடாமல் பயமுறுத்தும். விளையாடிக் குதூகலிக்க வேண்டிய மாலைவேளை முழுவதும் ஓரே இடத்தில் குந்திக்கொண்டிருக்கும் கொடுமை அது.



பாடசாலை இரண்டு மணிக்கு விடும் காலம் அது. வீடு சென்று சாப்பிட்டதுதான் தாமதம்  tuition கொப்பியைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிடுவேன். மூன்று மணிக்கு ஆரம்பிக்கும்  tuitionக்கு 2.30 க்கே ஓடும் ஆர்வம் புரியாமல் திகைப்பாள் அம்மா. அவவுக்குத் தெரியாது, மூன்று மணிவரை நான் நிற்கப்போவது football ground ல்தான் என்பது.







மைதானத்தில்  team பிரித்து விளையாடும்போது என்னை மட்டும் சேர்க்கவே மாட்டான்கள். விளையாட்டை நடுவிலே விட்டு tuition க்கு ஓடுபவனை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்? பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மட்டும் பந்தடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க tuition க்கு ஓடிப்போனால் மாஸ்டர் திட்டுவார். இதனால், tuition க்கும் போக முடியாமல் பந்தடிக்கும் நண்பர்களின் குதூகலக்களிப்பை விட்டு நகரவும் மனமில்லாமல், நிழல்வாகை மரத்தின் கீழே சாத்தியிருக்கும் சைக்கிள் பாரில் அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன்.



'டேய்! இந்தாடா வந்து விளையாடு..!' என்று நடுமைதானத்தில் நின்று நான் இருக்கும் மரத்தடியை நோக்கிப் பந்தை உயர்த்தியடிப்பான், சின்னத்தம்பா. பந்து என்னை நோக்கிப் பாய்ந்து வர, ஏதோ சொர்க்கத் திரவியம் கிடைத்தது போல இறங்கி ஓடிச்சென்று அவனைக்குறி வைத்து ஓங்கியடிப்பேன். பந்து மிகச்சரியாக தம்பாவின் கால்களுக்குள் போய் இறங்கும். அதைப் பார்த்து சில கணங்கள் திகைத்து நின்றுவிட்டு 'இந்தா நல்லாத்தானே shoot பண்ணுகிறாய்..பிறகு ஏண்டா team க்கு கூப்பிட்டா வர மாட்டேன்கிறாய்?' என்று வியந்து போய் கேட்பான் சின்னத்தம்பா. அவன் படிப்பிலும் நல்ல திறமைசாலி. கால்பந்து விளையாட்டிலும் சூரன். பந்து அவன் கால்களுக்குள் சென்று விட்டால் goal போடாமல் திரும்ப மாட்டான். பந்து அவனிடம் சும்மா நின்று பேசும்.









'டேய், வாடா விளையாட!' என்று எத்தனையோ முறை அவன் அழைத்திருக்கின்றான். அவன் வீட்டில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் விடுவார்கள். ஆனால் என் வீட்டிலோ விளையாட்டு என்ற அந்தப் பேச்சையே எடுக்க முடியாது. கால்பந்தை பார்த்தால் ஏறத்தாழ கால்பந்து போன்ற அப்பாவின் கோபமுகம்தான் நினைவுக்கு வரும். AGA office Chief Clerkஆக வேலைசெய்யும் அப்பாவின் மொத்த கௌரவமுமே நான் பெறவிருந்த  scholarship புள்ளிகளில்தான் உள்ளதாம். அதுவும் அவரது சக ஊழியர்களின் பிள்ளைகளை விட அதிக புள்ளிகள் பெற்றால்தான் மேலும் மதிப்பாம். அதற்காகவே விளையாடும் உரிமையைப் பறித்து பாடசாலை, வீடு, tuition என்ற மூன்று முனைகளுக்குள் மட்டுமே மேயும் செக்குமாடாக வளர்த்தெடுத்தவர்கள், எனது பெற்றோர்கள்.



Scholarship என்பது திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக அரசு நடாத்துகின்ற ஒரு போட்டிப் பரீட்சை. அதிலே சித்தியடைந்தாலும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அந்த உதவித்தொகை கிடைப்பதில்லை. ஆயினும், பாவிகளின் பாவங்களை பாரமுள்ள சிலுவையாக முதுகில் சுமந்த இயேசு பாலனைப்போல பெற்றவர்களின் வரட்டுக் கௌரவங்களையெல்லாம்  மூளையில் சுமக்கின்றார்கள் நமது பாலகர்கள்.



இதனை நினைக்கும்போது வேதனையும் வெறுப்பும் மனதிலே மண்டும். அறிவுக்குத் தேடிக்கற்பது வேறு; அடையமுடியாத வெகுமதிக்காக வருத்தித் திணிப்பது வேறு. இதனைப் புரியாமல் சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சிகளின் செட்டைகளிலே செங்கற்களைக் கட்டிப் பறக்கத் துரத்தும் நமது பெற்றோர்களின் அறியாமையை யாரிடம் சொல்லிப் புலம்புவது?



மாலையில் எனது பணி முடித்து காரில் வீடு திரும்புவேன். முன்பு எனது  நண்பர்கள் விளையாடிய மெத்தடிஸ் மைதானம் சிறுவர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் அதே தெருவிலுள்ள டியூட்டரிகளிலே பாலகர்கள் கூட்டம் அலைமோதும். அப்போதெல்லாம் விளையாடும் உரிமை மறுக்கப்பட்ட எனது பிள்ளைப்பருவமும் டியூட்டரிக் கொட்டில்களிலே அடைபட்டுக்கிடந்த வரட்சியான வாலிபப்பருவமும் நினைவுக்கு வர இதயத்தின் ஓரத்திலே மெல்லிய கசப்பணர்வு தோன்றி மறையும். அதேவேளை சின்னஞ்சிறுவர்கள் எங்காவது மைதானத்திலோ கடற்கரை மணலிலோ விளையாடுவதைப் பார்த்தால் என்மனம் ஆனந்தச் சிறகடிக்கும். எத்தனை அவசர வேலை இருந்தாலும் காரை நிறுத்தி அவர்களின் குதூகலக் களிப்பை கண்களிரண்டால் அள்ளிப்பருகிவிட்டுத்தான் நகர்வேன்.



இப்போது நினைத்துப் பார்த்தால் அன்றைய எனது கால்பந்து நண்பர்களைப் போல, கல்வியை வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஒன்றாக மட்டும் நினைத்துக் கற்வர்கள்தான் என்னை விடவும் கொடுத்து வைத்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமக்குக் கிடைத்த வாழ்க்கை என்ற அற்புத ரசத்தை அதன் ஒவ்வொரு துளியிலும் அனுபவித்தவர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் அவர்கள்தானே தவிர  என்னைப் போல படிப்பே வாழ்க்கையாய் வாழ்ந்த பணக்காரச் செக்குமாடுகளல்ல.









'Shall I display my drugs?' மருந்து நிறுவன இளைஞன் மீண்டும் என்னை அழைத்தபோது வெளியே மழை விட்டிருந்தது.

'Ok you proceed!'

'இதோ இருக்கு நான் சொன்ன sample. இது இப்பதான் புதுசா market க்கு வந்தது. ஆனா இதுல side effects அதிகம் but fast relief!' என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறிமாறிப் பேசிக் கொண்டு தனது மருந்துகளையும் மாத்திரைப் பட்டைகளையும் மேசையிலே அள்ளிப்பரப்பத் தொடங்கினான்.
அவனது ஒவ்வொரு அசைவும் வெகு நாசூக்காகவும் இலாவகமாகவும் இருந்தன. மருந்துப் பொருட்களோடு சேர்த்துத் தனது மருந்து நிறுவனத்தின் அடையாளக் குறிகளுள்ள sticker களையும் வைத்தான். பின்பு சற்றுத் தயங்கியபடி, "Doctor, this is very small gift from our company, if you don't mind.." ஒரு பெரிய பொதியை எனது மேசையின் ஓரமாக வைத்தான். அதிலே தொகையான chocolates, சத்துணவுகள், பால்மா வகைகள் உட்பட பல வகையான பொருட்கள் இருந்தன. அவை எல்லாமே நானும் என்னைப் போன்ற பிற வைத்தியர்களும் அவனது மருந்து நிறுவனத்தின் தயாரிப்புக்களை நோயாளிகளுக்குச் சிபாரிசு செய்வதற்காகத் தரப்படுவதுதான்.



இப்படியான மருந்துகள் எவ்வளவு தூரம் சரியானவை என்பது பொதுவாக யாருக்குமே தெரியாது. எல்லா மருந்து நிறுவனங்களும் ஏறத்தாழ ஒரே இரசாயன மூலப்பொருட்களைத்தான் பயன்படுத்துகின்றன. வர்த்தகப் பெயர்கள் மட்டுமே வேறுபடும். அவற்றைத் தயாரிக்கும்போது கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்புச் செயன்முறைகளில் இருக்கும் குறைபாடுகளினால் கூட விபரீதங்கள் நிகழலாம். புகழ்பெற்ற நிறுவனங்களும் இதிலே சறுக்குவதுண்டு.



சில ஆண்டுகளுக்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யில் ஆபத்தான கொழுப்பு இருப்பதாக நாட்டிலே செய்தி பரவிய வேளையிலே கேவலம் அந்தச் செய்தியின்  உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறக்கூட எங்களைப் போன்றவர்களால் முடியாதிருந்தது. பின்பு உண்மையில் தேங்காய் எண்ணெய்யில் ஆபத்தற்ற அவசியமான கொழுப்புகள்தான் உள்ளன என்ற உண்மை வெளிநாடுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டது.



அது போலத்தான் இப்போது இந்த மருந்துகளை மறுப்பதா அல்லது ஏற்பதா என்பதை என்னால் தீரமானிக்க முடியவில்லை. எனது கல்வித் தரமோ சமூக அந்தஸ்தோ இதற்கு உதவப்போவதில்லை. ஏனென்றால், நான் சிறுவயதிலிருந்து கற்றதெல்லாம் எதை? தேடலே இல்லாத வெறும் மூளையை நிரப்பும் கல்வியையும்  பரீட்சை மேசையிலே அதை வாந்தியெடுக்கும் மதிப்பீட்டையும்தானே? இவையெல்லாம் இயல்பான சிந்தனைத் திறனையும் சுயமான தேடலையும் கற்றுத்தரவில்லை. மாறாக, எல்லோரையும் பல்தேசிய கம்பனி வியாபாரிகளின் எடுபிடிகளாகத்தான் மாற்றியுள்ளன.


நான், இந்த மருந்து விற்கும் இளைஞன், ஆஸ்பத்திரி ஊழியர்கள், pharmacy க்காரன் முதல் ஏறத்தாழ எல்லோருமே மெல்ல மெல்ல multi-national companies எனும் மகா இயந்திரத்தின் மாற்றவே முடியாத பற்சக்கரங்களாகி விட்டோம். நாற்பது நாட்களிலே வியாபாரத்திற்குத் தயாராகும் Broilers chicken களுக்கும் ஐந்து வருடத்தில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வரும் எங்களைப் போன்றவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது. யாராவது ஓரிருவர் விதிவிலக்காக இருக்கக்கூடும். ஆனால் அவர்களெல்லாம் நிர்வாண நாட்டின் கோவணதாரிகளாக மட்டுமே வாழமுடியும்.


'Can I make my move, Doctor?' என்று கேட்டவன் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது.


'Hey! what do you think of me? will you take all these nonsense and throw away on your bloody drug company!  leave me alone!'என்று அவனது மருந்துகளையும் அன்பளிப்புகளையும் கற்பனையில் அள்ளி அவன் முகத்தில் வீசியெறிந்து துரத்தி விட்டேன்.


ஆனால் நிஜத்தில், "Thankyou verymuch, let's meet again Dr." என்று புன்னகைத்து விடைபெற்ற அந்த மருந்து விற்கும் இளைஞனை கைகுலுக்கி வழியனுப்பி வைத்தேன்.

அவன் வைத்துவிட்டுப் போன அன்பளிப்புப் பொதி என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

-மூதூர் மொகமட் ராபி 


குறிப்பு:- இந்தச் சிறுகதை அண்மையில் அதாவது 2011.12.18 அன்று ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமானது (பக்கம் 26). சிறு திருத்தங்களுடன் பிரசுரமான அந்தச் சிறுகதையின் முழுவடிவம் இதுவாகும்.

Friday, December 30, 2011

சிந்தனைக்கு:



கருத்துக்கோழைகள்
 
அல்லது
 
சக்கரைவியாதிப்புண்கள்!








ம்மவர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது.

 தமது உண்மையான உணர்வுகளை உள்ளபடியே நேர்மையாக வெளிப்படுத்தாமல் தானும் குழம்பி பிறரையும் குழப்பத்திற்குள்ளாக்குவது.


 ஒருவர் தனது கருத்துக்களை மற்றவரிடம் முன்வைக்கும்போது அந்தக் கருத்துகள் சிலவேளை கேட்டுக் கொண்டிருப்பவருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் ஒரு மரியாதை கருதி அதனை கேட்டுக் கொண்டிருப்பதிலே தவறில்லை.


ஆனால் அதையும் மீறி, 'ஆமாம் நீங்கள் சொல்வது வேதவாக்கு' என்று பாசாங்கு செய்வதைப் பற்றி என்ன கூறலாம்? இப்படிச் செய்வதனால் கருத்தைக்கூறுபவரை விடவும் அதை மிகையாக ஆமோதித்து அவரைப் பிழையாக வழி நடாத்தும் இரண்டாம் நபர்தான் மோசமான பேர்வழி எனலாம்.


இது ஒருவகை என்றால் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவும் அடுத்தவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பவர்கள் போலவும் நியாயமான உணர்வுகளையும் அக்கறையுடன் கேட்பவர்கள் போலவும் பாசாங்கு நாடகம் ஆடுவார்கள். ஆனால் உள்ளுக்குள் முற்றிலும் வேறு மாதிரி நடந்து கொள்வார்கள்.


இத்தகையோர் ஏதோ தாங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திப்பவர் எனக்காட்டி மற்றவர்களின் கவனத்தைக் கவரும் முனைப்புடன் நாமெல்லாம் சாதாரண வழக்கில் பயன்படுத்தாத சில கடினமான வார்த்தைகளை தேடியெடுத்து தமது புழக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.


அதாவது யாருக்கும் இலகுவில் புரியாத பதங்களை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் தானொரு அறிவுஜீவி போன்ற பிம்பத்தை மற்றவர்களிடம் உருவாக்குவதே அவர்களது ஓரே நோக்கம். ஆனால் உள்ளுக்குள் வெற்று வேட்டுக்களாக இருப்பார்கள். அவர்களது பேச்சுக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைளுக்கும் சம்பந்தமே இராது. உதாரணமாக பேச்செல்லாம் விண்வெளி ஓடங்கள் பற்றியிருக்கும் ஆனால் சிந்தனையோ மாட்டுவண்டி மேய்க்கும்.


 மேலே குறிப்பிட்ட இரு வகையானோரைத் தவிர பிறிதொரு விதமான மனிதர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள்.  இவர்கள் ஏற்கனவே நாம் முன்னிரு பந்திகளிலும் எடுத்தக் காட்டிய குணாம்சங்களோடு சேர்த்து இன்னொரு கேவலமான இயல்பையும் வைத்திருக்கிறார்கள்.


இவர்களுக்கு தம்மைத் தவிர வேறுயாரும் சிறந்த கருத்துக்களை முன்வைத்துவிடவோ கூடாது.  அப்படி வைத்து விட்டால் முகம் விடியவே விடியாது. அந்தக் கருத்துக்களை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் திராணியில்லாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வெம்பித்திரிவார்கள். அல்லது அவ்வாறான  கருத்துக் கூறிக் கண்ணைத்திறந்தவர்களை வேறுவழியிலே (கருத்துகளாலல்ல) மட்டம் தட்ட வழிதேடியலைவார்கள்.


அப்படியும் எதுவும் கிடைக்காவிட்டால் தனக்கு வேண்டியவர்களிடம் அவரைப் பற்றி புலம்பித் திரிவது, புறம் பேசுவது, அவதூறு சொல்லி அலைவது போன்ற கீழத்தரமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படியெல்லாம் செய்து தமது ஆற்றாமைக் காய்ச்சலைத் தணித்துக்கொள்ள முயல்வார்கள்.


ஆனால்  இதிலுள்ள பெரும் சோகம் என்னவென்றால் இந்தக் கோழைகள் ஒருபோதும் நிம்மதியடைவதில்லை. ஏனெனில் கருத்தால் கருத்தை வெல்ல முடியவில்லையே என்ற சோக முள் சக்கரை வியாதிக்காரனின் புண் போல எப்போதும் ஆறாமல் இருந்த அவர்கள் நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கும்!

-Jesslya Jessly

Wednesday, December 28, 2011

அழையா விருந்தாளிக்கு ஆண்டு நிறைவு - 7






ஓர் ஈர அனுபவம்!







ன்று ஓர் அழையா விருந்தாளியின் 7வது ஆண்டு நிறைவு!


2004ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தை அடுத்து வந்த ஞாயிறு தினம் அது. அதைச் சுனாமி என்றோ கடல்கோள் என்றோ அல்லது ஆழிப்பேரலை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து ஓர் அழையா விருந்தாளியாய் வந்து இந்த சமுத்திர நிலத்திணிவுகளின் கரையோரங்களில் அது ஏற்படுத்திய உடனடி அனர்த்தங்களையும் இன்றும் கூட தொடரும் அதன் மறைமுக விளைவுகளையும் மறந்துவிட பல வருடங்களும் அதைவிடப் பாரிய அனுபவங்களும் தேவைப்படும்.


அந்த நிமிடத்தில் கரையோரப்பகுதிகளில் நிரந்தரமாய் வாழ்ந்திருந்தவர்கள், தொழில் அல்லது தேவைகள் நிமித்தம் அங்கு சென்று வருபவர்கள், அன்றுதான் அப்படியான இடத்திற்கு வாழ்நாளில் சென்றிருந்தவர்கள்...என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.


கரையோரத்திலே பிறந்து அங்கேயே கிடந்து வளர்ந்தவர்களில் பலர் அன்றைய தினம் பார்த்து வேறு எங்கோ சென்றிருந்ததனால் உயிர்தப்பிவிட, கடல் என்றால் எப்படியிருக்கும் என்று அதற்கு முன்பு தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்தவர்களில் சிலர் உயிரிழந்திருப்பதுதான்,  ஒரு சோகமான வேடிக்கை.



அழிவு பொதுவானதாக இருந்தாலும் அன்றைய தினம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். 'அன்று நாங்கள் இன்ன இடத்திலிருந்தோம்...நீங்கள் எங்கிருந்தீர்கள்?'  என்று கேட்டு அவற்றினைப் பகிர்ந்து கொள்வது கூட
ஒருவித ஆறுதல்தான்.



 அவ்வாறான ஒர் அனுபவம்தான் இது:


கிறிஸ்துமஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை  பின்னிரவில் வெகுநேரம் வரை விழித்திருந்து பார்த்துவிட்டுத் தூங்கப்போயிருந்ததால் விடிந்தபின்னும் உறங்கிக் கொண்டிருந்தேன்."எழும்புங்க மச்சான்..எழும்புங்க..டவுனுக்குள்ள கடல்பொங்கி வெள்ளமாம்" என்று எனது மைத்துனி அறைக்கதவைத் தட்டினாள்.



ஒன்றும் புரியாமல் கையில் அகப்பட்ட  சட்டையை அணிந்து கொண்டு வீதிக்கு ஓடிவந்து பார்த்தால் நாலு கிமீ தள்ளியிருக்கும் நகரத்திலிருந்து வரும் வாகனங்களெல்லாம் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி விரைந்து வந்து கொண்டிருந்தன.என்னவென்று பார்ப்பதற்காகப் புறப்பட்ட பக்கத்து வீட்டவரின் மோட்டார் சைக்கிளில்  உடுத்தியிருந்த சாரத்துடன் காலில் செருப்புத்தானும் இல்லாமல் தொற்றிக்கொண்டேன். 



திருகோணமலைப் பிரதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் குன்றுகளின் மீது எப்போதுமே எனக்கு சந்தேகம் உள்ளது. ஆதிகாலத்தில் எரிமலை வெடிப்பு நிகழந்த இடமாக இருந்திருக்குமோவென்று. கன்னியா வெந்நீரூற்றுகளுக்கு கூறப்படும் புராணக்கதைகளை ஒதுக்கிவிட்டு யோசித்தால் இப்பகுதியில் பூமிக்கடியிலே எங்கோ இருக்கும் உருகிய பாறைக்குழம்பு (magma) தான் காரணமாக இருக்கவேண்டும் என்று புவியியல் அறிவு எச்சரிப்பதுண்டு. இதனால் கொட்டியாரக்குடாக்கடலில் உள்ள சிறுகுன்றுகளில் ஒன்றுதான் எரிமலையாய் குமுறிவிட கடலும் பொங்கிவிட்டதோ என்றுதான் நினைத்தேன்.


இரண்டு கிமீ தூரம் நகரை நோக்கிப்போயிருப்போம். மட்கோ  சந்தியைத் தாண்டி IOC பெற்றோல் நிரப்பு நிலையத்தருகே திருவிழாவுக்கூட்டம் பதற்றமாய் நின்றிருந்தது. மட்டிக்களி தொடக்கம் பொலீஸ் நிலையம் வரை கடல் எது வீதி எது என்று பிரித்தறியாதளவுக்கு எங்கும் ஒரே தண்ணீர் தண்ணீர்தான். இடுப்பளவு வெள்ளத்திலே சிலபேர் மட்டும் கண்களிலே பயப்பீதியுடன் குழந்தைகளைத் தலையில் தூக்கிக் கொண்டுவீதிவழியே கரையேறிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்கள் பயணம் புரிந்த பஸ் வண்டிகள், வாகனங்கள் நீரில் மூழ்கிக்கிடந்தன.


அவர்களின் கண்களில் இருந்த மிரட்சி பயம் தந்தாலும் நகரிலே  தாய் சகோதரிகள் இருப்பதால் அவர்களைப் பார்க்க எப்படியும் போகவே வேண்டிய நிலை எனக்கு. எனவே கூடவந்தவர் தடுத்தும் கேளாமல் வேறுவழியின்றி இறங்கிவிட்டேன்.



ஆனால் அந்தச் செயல் எவ்வளவு அசட்டுத்தனமானது என்பதை கடல் நீருக்குள் இறங்கிச்சில நிமிடங்களுக்குள்ளேயே தெரியவந்தது எனக்கு. வீதிவழியே மார்பளவு வெள்ள நீரோட்டத்தை எதிர்த்து என்னோடு சிலர் கூட வந்தபோதிலும் இடையிலேயே பின்வாங்கி விட்டனர். அப்பொழுதுதான் மட்டிக்களி கடலின் மேற்குப்புறமாக ஒரு மெகா சைஸ் கரும்பொலித்தீன் சுருள்போல சூரிய ஒளியில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. தூரத்தில் நின்றவர்கள் எல்லோரும் 'அலை வருது! அடுத்த அலைவருது!' என்று கத்துவது கேட்டது. பின்வாங்குவதற்கோ முன்னேறுவதற்கோ எனக்கு நேரமிருக்கவில்லை.



அப்போது நான் நின்று கொண்டிருந்த இடம் தற்போது நீர் வடிகாலமைப்புச் சபைத் தலைமையகத்தின்  பிரதான வாயில் இருக்கும் இடம். அந்த இடத்தில் ஏற்கனவே  வந்த அலைகளால் புரட்டிப்போடப்பட்ட வாகனங்களும் சரிந்து கிடந்த மின்கம்பங்களும் மட்டுமே இருந்தன. தொடுவானத்தில் தெரிந்த கரும் அலை கண்ணிமைக்கும் நேரத்தில் வெகு அருகில் தெரிந்தது.


திரண்டுவரும் கருமையான அலையின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாது பற்றிப்பிடித்துக்கொள்ளவும் எதுவுமில்லை. என்ன செய்யலாம் என்று பரபரத்தபோதுதான் சற்று அருகில் இருந்த ஒரு மின்கம்பத்திலே ஓர் பொலீஸ்காரன் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த மின்கம்பம் ஆள் ஏறி நிற்கத்தக்கதாக இடையிடையே இடைவெளிகள் கொண்ட புதிய வகையானது.முதுகுத்தண்டினூடாக ஏதோ சில்லிட்டுப்பாய்ந்து காதுமடல்களைச் தீய்த்துச் செல்ல,  அடுத்த கணம் நான் செயற்பட்ட வேகமிருக்கிறதே.. அது இன்றுவரை என்னாலேயே நம்ப முடியாதது.



ஆபத்து வரும்போது துரித கதியில் செயல்படுவதற்காக பாலூட்டி வகை உயிரினங்களுக்கெல்லாம் இயற்கை வைத்திருக்கும் அதிரினலீன் ஹோமோன் பற்றி இதை வாசிக்கும் நீங்களும் சிறிது அறிந்திருந்தால் அவசரப்பட்டு தெய்வச்செயல்,முன்பிறவிப் பயன் என்றெல்லாம் நெக்குருகத் தேவையில்லை. 


அந்த மார்பளவு கடல்நீரில் கம்பத்தை நெருங்கி வினாடிகளுக்குள் ஏறி,  "அனே மல்லி! மகே அத்த அல்லபாங்' என்று கதறிக் கைகொடுத்த பொலீஸ்காரனின் காலைச் சரியாகப்பற்றி... (அதுதான் என் கைக்கு எட்டியது! )  உன்னி நான் மேலே ஏறவும் உயர்ந்து வந்த அலை மிகச்சரியாக நாங்கள் இருவரும் நின்ற இடத்திலே வந்தவுடன் சட்டெனத் தாழ்ந்து பரவிச்செல்லவும் சரியாக இருந்தது.


அதன் பின்பு சென்ற அலை திரும்ப வந்து வடியும்வரை காத்திருந்தது...இறங்கி நகருக்குள் சென்றது.. 'திருகோணமலை நகரமே கடலுக்குள் மூழ்கிவிட்டது' என்ற வந்திகளுக்கு மாறாக நகரமத்தி ஒரு சொட்டுத் தண்ணீர்படாமல் இருந்தது... 'இதையெல்லாம் பார்த்தபிறகும் மனிசனுக்கு துனியா (உலக) ஆசை வருமா?' என்று சுனாமி ஞானம் பேசிய அதே வாயால் இன்று 'போங்க! போங்க! ஒவ்வொரு நாளும் தாறதுக்கு அதுக்கு வேறயாச் சம்பாதிக்கணும்'  என்று பிச்சைக்காரிகளை விரட்டும் கடை முதலாளிகளைச் சந்தித்தது...பற்றியெல்லாம் எழுதப்போனால் இப்போதைக்கு மீண்டுவரவே முடியாது என்பதால் நிறைவுசெய்கின்றேன் நண்பர்களே!





 
ஓரு சிறுகுறிப்பு:

                                  கடல்கோள் நிகழ்ந்து இரண்டொரு நாட்கள் கழியும் வரை 'சுனாமி' எனும் அந்த மந்திரச்சொல் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கிண்ணியாவில் ஓர் ஆசிரியர் மட்டும், அலைகள் கரையைத்தாக்கும் முன் கடல் வற்றிக்கொண்டு பின்வாங்கிச் சென்றதைக் கண்டவுடனேயே, 'டேய்! 'சுனாமி' வரப்போகுது கரையில யாரும் நிற்காதீங்க ஓடங்கடா!' எச்சரித்துக் குரலெழுப்பியவாறு தனது குடும்பத்தைக் காப்பாற்ற விரைந்திருக்கின்றார்.


அதற்குக் காரணம் அவரது பரந்துபட்ட வாசிப்பறிவுதான்.

இலங்கைத் தீவிலேயே சுனாமி என்ற சொல்லை, அந்த அனர்த்தத்திற்கு சற்று முன்னர் உச்சரித்தவர் அநேகமாக அவராகத்தான் இருப்பார். அவர் வேறுயாருமல்ல நண்பர் ஆங்கில ஆசிரியர் முனவ்வர் தான்.

-'Mutur' Mohammed Rafi
(on26.12.2011)

Sunday, December 25, 2011

திறமை < திருகுதாளம்



 யார் வசதியானவர்கள்?

ர் அரசு அலுவலகத்தில் அல்லது ஒரு பாடசாலையில் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை வகிக்கும் ஒருவர் தனக்குக் கீழே பணிபுரிபவர்கள் எப்படியானவர்களாக இருக்க வேண்டுமென விரும்புவார்?

அவர், தனது நிருவாக விடயங்கள் தடையில்லாமல் நிகழ்வதற்கும் எதிர்பார்க்கும் குறிக்கோள்களை அடைவதற்கும் துணைபுரியக்கூடிய ஊழியர்களை வைத்திருக்க விரும்பினால் அது நியாயமானது.

ஆனால் இப்போதெல்லாம் சில அரிதான விதிவிலக்குகள் தவிர அதிகமான தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் எப்படியானவர்களை விரும்புகின்றார்கள் தெரியுமா? இதுபற்றியும் இன்றைய போக்குகள் பற்றியும் அறிந்து கொள்வதற்கு வசதியாக இருவகையான பணியாளர்களைக் கருதுவோம்.

  • A  எனும்  ஊழியர்/ எழுதுவினைஞர்/ ஆசிரியர்  திறமையானவராகவும் துறைசார்ந்த நிபுணராகவும் இருக்கின்றார் என்றும்
  •  B எனும் பிறிதோர் ஊழியர் /எழுதுவினைஞர்/ ஆசிரியர் திறமை குறைந்தவராகவும் துறைசார் அறிவில் குறைபாடுகள் கொண்டவராகவும் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

நீங்கள் ஒரு திணைக்களத் தலைவராகவோ நிர்வாக அதிகாரியாகவோ அல்லது ஒரு பாடசாலை அதிபராகவோ இருந்தால் இந்த இருவரில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

 அட! என்ன கேள்வி இது? வேறுயாரை? Aயைத்தான் என்று அவசரப்படுகின்றீர்களா? அப்படியானால் உங்களுக்கு சமகால அனுபவம் போதவில்லை அல்லது பிழைக்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். சற்று இருங்கள்!


ஏனெனில், இன்னுமொரு நிபந்தனையும் உண்டு.

இந்த இருவரிலும் தமது இருப்பு சார்ந்த நலன்களுக்கும் ஏனைய பல நலன்களுக்கும் அதிக ஒத்தாசையாக இருக்கக் கூடியவர் யார்? என்று ஒரு  அளவுகோலும் இன்றைய பிழைக்கத் தெரிந்த தலைமைகளிடம் உள்ளன நண்பர்களே!


"ஏன் ஊழியர் ஒருவர் A யாகவும் மேலே கூறிய தனிப்பட்ட நலன்களுக்கு ஒத்துழைப்பவராகவும் இருக்க முடியாதா?" என நீங்கள் கேட்கலாம். அப்படியொரு சாத்தியமுள்ளதா? என்று பார்ப்போம்.

A வகையான ஒருவர், அவர் திறமைசாலியாக இருப்பதால் இயல்பாகவே அவரிடம் தன்னம்பிக்கை செறிந்திருக்கும். தவிர, எங்கேயும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருக்கும். அப்படியான ஒருவர் பொதுவாக சுயமரியாதை கொண்ட ஒருவராகவும் தனது ஆற்றல்கள் காரணமாக சிறிது கர்வமுள்ளவராக இருப்பார்கள். இப்படியானவர்கள் இலகுவில் அவசியமின்றி பிறருக்கு அடிபணிய விரும்புவதில்லை.

ஆனால் B வகையறாக்கள் அவ்வாறின்றி, தமது திறமைக் குறைவு காரணமாகவும் குறைபாடுகள் காரணமாகவும் தன்னம்பிக்கைக் குறைபாடுள்ளவர்களாகவே இருப்பார்கள். இதனால் தமது இருப்பு மற்றும்

பிறநலன்களுக்காக  Aபிரிவினருடன் போட்டியிட முடியாது. இதன்விளைவாக தமது தலைமையிலிருப்பவர்களிடமிருந்து சலுகை வழியிலும் பின்கதவு சூட்சுமங்களினாலும் மட்டுமே முன்னேற்றங்களைப் பெறமுடியும். எனவே இவர்களிடம் அதனைத் தவிர வேறு தெரிவுகள் இருக்க முடியாது அல்லவா?

இப்போது கூறுங்கள். இன்றிருக்கும்  ஆளுமையும் சமூகப் பிரக்ஞையுமற்ற பெரும்பாலான தலைமைகளுக்கு துதிபாடல் மற்றும் தனிநபர் சேவைகள் புரிவதற்கெல்லாம் வசதியானவர்கள் யார்?

யோசித்து வையுங்கள்! 
-Jesslya Jessly

Saturday, December 24, 2011

Happy Christmas & Newyear!







நண்பர்கள்

அனைவருக்கும்

இனிய

கிறிஸ்துமஸ் திருநாள்

மற்றும்

இன்னும் சில தினங்களிலே

பிறக்கவுள்ள

2012

புதுவருட வாழ்த்துக்கள்!

- Jesslya Jessly-

Thursday, December 22, 2011

நரிக்குறவனும் ஒரு எழிலரசியும்!




ஒரு நிழலும் ஒரு நிஜமும்! 


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'மகாநதி' எனும் ஒரு தமிழ் திரைப்படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். 


அந்தத் திரைப்படத்தில்   மக்கள் செல்வாக்குள்ள கிராமவாசி ஒருவர் தனக்கு எதிர்பாராத விதமாக அறிமுகமாகும் மோசடிப் பேர்வழி ஒருவனை நம்பி நகரத்தில் குடியேறி  நிதிநிறுவன சதிவலையில் வீழ்ந்து சிறை செல்லும்படியாகி விடுவதும் பின்பு அதற்குக் காரணமானவர்களை வித்தியாசமான முறையில் பழிதீர்த்து பிரிந்த உறவுகளை ஒன்றுசேர்ப்பதுதான் கதை.


இந்தக் கதையை மிகவும் சிறப்பாக திரைக்கதையாக்கம் செய்து  தனக்கேயுரிய மிகையில்லா நடிப்பால் அற்புதமான காவியமாக்கியிருப்பார், கமல்ஹாசன்.


அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும்.


இரண்டு வருடப் பலத்த போராட்டத்தின் பின்பு சிறையிலிருந்து கமல் பிணையில் வெளியில் வருவார் கமல். அப்போது அவரது தாயில்லாப் பிள்ளைகள் இரண்டும் தொலைந்து போயிருப்பார்கள். தன்னுடன் சிறையில் இருந்த மற்றொரு அப்பாவிப் பிராமணரான பூர்ணம் விஸ்வநாதனைத் துணைக்கழைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தேடியலைவார் கமல்.


அப்போது தற்செயலாக வீதியில் வித்தை காட்டிக்கொண்டிருக்கும் நரிக்குறவர்களிடம் வாழ்ந்திருக்கும் தன் மகனைக் கண்டு கொள்வார்கள். அவர்களிடம் தமது கண்ணீர்க் கதையைக்கூறி மகனை மீட்டுச் செல்வதற்காக அவன் தூங்கும் வரை அவர்களது குடிசையில் காத்திருப்பார்கள், கமலும் பூர்ணமும்.


அது இரவு உணவுவேளையாதலால் அவர்கள் இருவருக்கும் கடையில் வாங்கிவந்த சாப்பாட்டை ஒரு அலுமினியத்தட்டில் போட்டுக் கொடுத்து, "நீங்கள்லாம் எங்க சாப்பாட்டைச் சாப்பிடுவீகளா எஜமான்?" என்று தயங்கியவாறு கேட்பான், நரிக்குறவர்களின் குடும்பத்தலைவன்.

ஆச்சாரம் மிக்க பூர்ணம் தயங்கி, ஏதோ கூறி சமாளித்து நழுவ, 'என்னங்க கேள்வி இது? ரெண்டு வருசமா என் மகன் சாப்பிட்ட சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேனா?' என்று கண்கள் பனிக்க நன்றிப் பெருக்குடன் அதை வாங்கிச் சாப்பிடுவார் கமல்.


கடைசியில்,  பிரிவாற்றாமை தாளாமல் அழுதுபுலம்பும் நரிக்குறவப் பெண்களிடமிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகனைத் கனத்த மனதுடன் தூக்கிச் செல்வார் கமல். இந்தஉணர்வுபூர்வமான காட்சியமைப்பும்  அதை அற்புதமாகவும் இயல்பாகவும் நடித்த கலைஞர்களின் திறமையும் சிலாகிக்கத்தக்கது.


ஆனால் இந்தப் பத்தியில் நான் கூறவந்த விடயம் இதுவல்ல. இனிமேல் சொல்வதுதான்:


அந்தக் காட்சியில், ஓரிடத்தில் பூர்ணம் விஸ்வநாதன் நரிக்குறவனுக்கு நன்றி சொல்ல நினைத்து  பரம ஏழையான அவன் கைமாறாக எதையாவது எதிர்பார்க்கின்றானா என்பதையும் அறிவதற்காக அவனிடம், 'தம்பீ! இந்தப் புள்ளய இத்தனை காலமும் வளர்க்கிறதுக்கு எவ்வளவோ கஸ்டப்பட்டிருப்பீங்க...' என்று தயங்கித் தயங்கி பேச்சை ஆரம்பிப்பார்.


அதற்கு அவன், 'யோவ்! அய்யரே, எனக்கொண்ணும் கஸ்டமெல்லாம் கெடையதுய்யா! அதெல்லாம் உன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா...!'  என்பான் பளிச்சென்று.

மேலேயுள்ளது செலுலோய்ட் கதை. இனிவருவது நிஜக்கதை:


தமிழ்நாட்டிலே கும்பகோணம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியான இளைஞன் சத்யராஜின் கதையைக் கேளுங்கள்.


சத்யராஜ் கூலி வேலைபார்த்த சூளையில் தனக்கு ஒத்தாசையாக இருந்த யுவதியான சக தொழிலாளி  ரேகாவிடம் காதல்வயப்பட்டான். இவரும் திருமணம் செய்து கொள்ளத்தீர்மானித்த வேளையில் ரேகாவின் தந்தையின் பக்கமிருந்து சாதி வேற்றுமை பலமாகக் குறுக்கிட்டது. அத்துடன் வேலை பார்த்த இடத்திலிருந்து தனது ஊரான திருத்துறைப்பூண்டிக்கே அழைத்துச் செல்லப்பட்டாள் ரேகா.


இதனால் காதலர்கள் இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.


காதல் தோல்வியால் சிறிதுகாலம் கலங்கித் திரிந்தான் சத்யராஜ். இந்த நாட்களில் அவனது பரிதாபத்தைப் பார்த்து கலங்கிய முறைப்பெண் எழிலரசி  சத்யராஜுக்கு மிகவும் ஆறுதலாக இருந்து வந்தாள்.  காலக்கிரமத்தில் தனது பழைய காதல் நிறைவேறாது என்றுணர்ந்து  எழிலரசியை, அதுவும் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, மணமுடித்தான் சத்தியராஜ்.


ஆனால் அத்துடன் முடியவில்லை சத்யராஜின் பிரச்சினை. மறுபுறம் திருத்துறைப்பூண்டியில் அவனையே நினைத்து திருமணம் புரியாமல் வாழ்ந்த காதலி ரேகாவுக்கு இந்தத் திருமண விடயம் எப்படியோ தெரிந்துவிட ஆவேசம் பொங்கியவளாய் சத்யராஜின் இடத்திற்கே வந்திறங்கி விட்டாள்.


இதனால் ஏற்கனவே தன் பெற்றோருடன் எழிலரசிக்காக சமரசம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஏழை இளைஞன் செய்வதறியாது திகைத்துப் போனான்.  வேறு ஒரு நல்ல இளைஞனை மணந்து கொள்ளுமாறு ஊரவர்கள் எடுத்துக் கூறிய புத்திமதியெல்லாம் ரேகாவின் வைராக்கியத்திற்கு முன்பு எடுபடவேயில்லை. ஆற்றாமல் தீர்மானத்தை சத்யராஜ் எழிலரசி தம்பதிகளிடமே விட்டு விட்டு விலகினர் ஊர்ப் பெரியவர்கள்.


தன்னைக் கட்டிக் கொண்டவளைக் கைவிடவும் முடியாமல் காதலுக்காக ஊர் உறவுகளையெல்லாம் உதறிவிட்டு ஓடி வந்தவளை சேர்த்துக் கொள்ளவும் முடியாமல் தடுமாறிய சத்தியராஜின் சங்கடத்தைத் தீர்த்து வைக்க அந்த கனத்த இரவிலே துணிச்சலாக முடிவெடுத்தாள் ஒருத்தி.


 பின்னிரவிலே திரும்பிப் போன ஊரவர்கள் அதிகாலையில் ஒலித்த கல்யாண நாதசுர ஓசை கேட்டு ஆச்சரியப்பட்டு "இது என்ன கூத்து தாயி?" என்று சத்தியராஜின் வீட்டை நோக்கி விரைந்து வந்தார்கள்.


அங்கே புதுமாப்பிள்ளைக் கோலத்தில் ரேகாவுக்குத் தாலி கட்டிக்கொண்டிருந்தான் சத்தியராஜ். அருகிலே ஏற்கனவே அவன் கட்டிய தாலியுடன் மணக்கோலத்தில் எழிலரசியும் அட்சதை போட்டுக் கொண்டிருந்தாள்.


ஆம்! ஒரு பெண்ணின் மனம் மற்றோர் பெண்ணுக்குத்தான் தெரியும் என்பதை நிரூபிப்பது போல இருவரும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்து ரேகாவுடனும் சத்தியராஜுடனும் பேசி சம்மதிக்க வைத்தாள் அதிகம் படிக்காதவளான எழிலரசி.


"நான் இப்ப இரண்டு மாசம் கர்ப்பமாக இருக்கிறேங்க. இந்த நேரத்துல ஏம் மாமாவ எம்புட்டு விரும்பியிருந்தா அந்தப் பொட்டப் புள்ள ஊரு ஒறவையெல்லாம் வுட்டுப்போட்டு ஓடியாந்திருக்கும்? அதை வெரட்டிவுட்டா நா பொம்பளையே இல்லங்க! அதான் மாமாக்கிட்டப் பேசிச் சம்மதிக்க வச்சுட்டேனுங்க" என்று  பளிச்சென்று வெள்ளந்தியாகக் கூறும் எழிலரசியிடம் தான் ஒரு தியாகம் செய்த உணர்வோ கர்வமோ சிறிதும் தெரியவில்லை.


அந்த செலுலோயிட் கதையின் ஏழை நரிக்குறவனையும் இந்த நிஜக்கதையின் ஏழை எழிலரசியையும் நினைத்துப் பாருங்கள்.


நாம் வாழும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும் மத்தியதரத்தினரும்தான் போலித்தனமான சிந்தனைகளாலும் சமூகக்கட்டுப்பாடுகளாலும் கட்டுண்டு கிடப்பவர்கள். தம்மைச் சுற்றிலும் அவசியமேயில்லாத வேலிகளையும் தடைகளையும் அமைத்துக் கொண்டு சிறு பிரச்சினைகளைக்கூட பெரிது பண்ணிக் கொண்டு வாழ்பவர்கள். தைரியமாக முடிவெடுக்கத் திராணியின்றி உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்பவர்கள்.


வரட்டுக் கவுரவம் போலி அந்தஸ்துகளையெல்லாம் கட்டிக்கொண்டு அலைபவர்கள். "அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?" என்பதை நினைத்து நினைத்து அன்றாடம் சாகுபவர்கள். வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொண்டு பணக்கார நோய்களைத் தேடுபவர்கள். சுருக்கமாகச் சொன்னால், முகங்களை விற்றுவிட்டு முகமூடி மாட்டியவர்கள்தான் இந்த மேல் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர்.


ஆனால் ஆணும் பெண்ணும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் சாதாரண அன்றாடங்காய்ச்சி மக்களிடம் இந்த அவசியமில்லாத போலித்தனங்கள் கிடையாது. இவர்கள் வாழ்க்கையை நின்று நேருக்குநேர் போராடி வாழ்பவர்கள் என்பதால் எதையுமே யதார்த்தமாக அணுகுபவர்கள். இவர்களிடம் மெகா சீரியல் மாமிகள் கிடையாது. M.N.நம்பியார் போல கண்களை உருட்டும் அண்ணிகள் கிடையாது.


படுக்கையறைகளிலும் பட்டுப்புடவை, உதட்டுச்சாயம் மேக்கப் சகிதம் படுத்துறங்கும் பெண்கள் கிடையாது. சமையலறையில் கூட எதுகை மோனை வசனங்கள் அடுக்குமொழிகளால் பேசிக் கொள்ளும் டாடிகள் மம்மிகள் கிடையாது.  டை கட்டிக் கொண்டு போனும் லாப்டொப்புமாக பைக்கிலும் காரிலும் அலைந்து, தூக்கம் குறைந்த இளைஞர்கள் கிடையாது.


அது மட்டுமா, இளம்வயதில் புரட்சிகள் பேசிவிட்டு, வயதானதும் வசதியான வாழ்கைக்குள் ஓடி ஓளியும் கபட மனிதர்கள் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


ஒரு குக்கிராமத்துப் பெண் எழிலரசிக்கும் செங்கல் தொழிலாளி ரேகாவுக்கும்  ஒரே கணவனுக்கு இயல்பான மனைவிகளாக ஒரேவீட்டில் வாழும் சாத்தியமான துணிச்சல் எப்படி வந்தது என்று இப்போது புரிகிறதா?


இதை நமது மத்தியதர 'உதட்டுச்சாய' மாமிகளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியுமா? விதிவிலக்காக எங்காவது நிகழ்ந்தாலும்  இந்த வாழ்வை அந்த ஏழைப் பெண்களைப்போல இயல்பாக வாழத்தான் இவர்களால் முடியுமா என்ன ?


"கஸ்டமெல்லாம் ஒன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா!" எனும் நரிக்குறவனின் பதிலில் இருக்கும் வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயமின்மையெல்லாம் எங்கிருந்து வருகிறது தெரிகிறதா?


இனியாவது சிந்தித்துப் பாருங்கள்!

-மூதூர் மொகமட் ராபி

Wednesday, December 21, 2011

குதூகலம் Vs பெரிசுகள்!



நிறைவுநாள்!
இன்று
நிறைவுநாள்!







.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2011 இன்று முற்பகல் 11.30 உடன் நிறைவடைந்திருக்கின்றது. இப்பரீட்சையை நம்பிக்கையுடன் தோற்றி முடித்திருக்கும் பெரும் பொறுப்பு ஒன்றை இறக்கி வைத்த நிம்மதியில் உற்சாகம் கொப்பளிக்க நீங்கள் பரீட்சை நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சிகளையும் சிலர் உற்சாக மிகுதியால் நண்பர்களுக்கிடையே 'நீலமடிப்பு' எனும் நிறச்சாயங்களை ஊற்றித் தெளித்து ஒருவரையொருவர் 'அழகாக்கி'க் கொண்ட நிகழ்வுகளையும் காணும்போது எவ்வளவு மகிழ்ச்சியாகவுள்ளது தெரியுமா?

இந்த அனுபவங்கள் பாடசாலைப் பருவத்திற்கேயுரியவை மட்டுமல்ல பின்பு ஒருகாலத்தில் என்றும் நீங்காத பசுமையான நினைவுகளாக மாறி ஏங்கச் செய்யக்கூடியவை. சில பாடசாலைகளில் இந்தக் கடைசி நாள் கொண்டாட்டங்களுக்குத் தடை போட்டிருப்பார்கள்.

'ஐயோ இந்த காலாவதியான தினம் ஆகிப்போன பெருசுகளக்கெல்லாம் இப்படித்தான் சின்னஞ்சிறிசுகளின் குதூகலத்துக்குத் தடைபோடுவதிலே ஒரு குரூர திருப்தி' என்று நீங்கள் நினைப்பது ஓரளுவக்கு உண்மைதான். ஆனால் உங்களது நியாயமான மகிழ்ச்சிக்கு அதரவாக உள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


ஆயினும் முந்திய வருடங்களிலே சில மாணவர்கள் வரம்பு மீறி வீதியில் செல்லும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் செய்யும் வகையில் இந்த 'நீலமடிப்பு' கொண்டாட்டத்தை நடாத்தியதால்தான் உங்கள் மீது சில கட்டுப்பாடுகள் விழுந்துள்ளன. எனவே கிடைக்கும் சுதந்திரத்தை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் உங்களுக்கு ஆதரவாக இருந்துவரும் அவர்களுக்கும் அந்தக் காலாவதியான பெரிசுகளிடம் ஒரு நியாயம் இருக்குமல்லவா?

சரி அதெல்லாம் இருக்கட்டும்.
இனி என்ன செய்வதாக உத்தேசம்? சற்று இருங்கள் அது பற்றி விரிவாகப் பேசுவோம்.
 (தொடரும்)

-Jesslya Jessly

Tuesday, December 20, 2011

யார் அந்தப் பாவி?



ரு மரண தண்டனை!






ரு நீண்ட விசாலமான பலபேர் ஒரே நேரத்தில் ஒன்றாக உணவருந்தக்கூடிய சாப்பாட்டுக் கூடம் அது.


மதிய உணவுவேளை முடிவடைந்த ஒரு பிற்பகல்வேளையில் பெண் சிற்றூழியர்களால் அந்தக் கூடத்தின் கதவுகள் யன்னல்கள் அனைத்தும் சடுதியாக மூடப்படுகின்றன. இரு ஆண் ஊழியர்கள் சாக்குப் பைகள் சகிதம் எதையோ தேடும் உக்கிரப் பார்வையுடன் உள்ளே வருகின்றார்கள்.


அவர்களுக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் சில ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றது.


ஒன்றும் பயந்து விடாதீர்கள். வெகுநாளாக அந்த உணவுக்கூடத்தினுள்ளே புகுந்து தொல்லைதரும் மூன்று பூனைகளைக் கட்டி அப்புறப்படுத்தும் காட்சியைத்தான் விபரித்துக் கொண்டிருக்கின்றேன்.


என்ன இது? இதையெல்லாமா எழுதிக் கொண்டிருப்பீர்கள்...என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது.


 விசயம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்!


உள்ளே வந்தவர்கள் தாம் தேடி வந்த அந்த மூன்று வாயில்லா ஜீவன்களையும் எப்படியாவது சாக்குப்பைகளுக்குள்ளே கட்டிவிடும் நோக்கத்தில் மூன்று பூனைகளையும் பிடிப்பதற்காக துரத்தியோடுகின்றனர். சிறிது நேரம் அங்குமிங்கும் ஓடித்திரிந்து போக்குக்காட்டிய இரண்டு பூனைகள்  அவர்களின் முயற்சிகளையெல்லாம் வீணடித்து விட்டு எப்படியோ  தப்பியோடிவிட்டன.

களைத்துப் போன ஊழியர்கள் இருவரும் மீதமிருக்கும் பூனையையாவது எப்படியும் பிடித்து விடும் முனைப்பிலே தவித்தார்கள்.


அவர்களை இதுவரையில் பின்னாலிருந்து வழிப்படுத்திக் கொண்டிருந்த பெண்மணியின் முகத்திலே கோபம் கொப்பளித்தது.


வெண்ணிற அங்கியை அணிந்திருந்தவரான அந்தப் பெண்மணியின் வாயிலிருந்து சற்றும் எதிர்பாராத விதமாக வார்த்தைகள் உதிர்ந்தன.

"அந்தப் பூனையை அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்ல! தப்ப விடாதீங்க!"

மறுநிமிடம் அந்த வாயில்லா ஜீவன் கதறக் கதற சிறிதும் கருணையின்றி தடிகளால் இரத்தம் தெறிக்கத்  தெறிக்க அடித்து நையப்புடைக்கப்பட்டது.

அது எந்தளவுக்கென்றால் அந்தப் பரிதாபத்தைப் பார்க்கச் சகிக்காமல், 'தயவு செய்து கதவைத் திறந்து விடுங்கள்' என்று  கெஞ்சிய சில மாணவிகளையும் வெளியே போக விடாமல் வைத்துக் கொண்டு அவர்களின் முன்னிலையிலேயே அந்த சிறு அப்பாவிப் பூனை  துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டது.

ஒரு பிரபல பெண்கள் பாடசாலையின் விடுதியில் நடந்ததுதான் இந்தச் சம்பவம்.


இதிலே என்ன விசயம் இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக இதனைக் கூறவேண்டியுள்ளது.


ஆடம்பரச் சுகபோக வாழ்க்கைக்காக பொதுச்சொத்துகளில் மோசடி செய்யும் பெரும் பதவியிலுள்ளள சுயநல மனிதர்களைக் கூட கண்டும் காணாமல் சமாளித்து விட்டு விடுகின்ற இந்தக் காலத்தில், பாவம் தன் வயிற்றுப்பசிக்காக உணவைத் திருடிய அந்த வாயில்லாச் சிறு பிராணியை கொடூரமாக அடித்துக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்த பெண்மணி யார் தெரியுமா?


ஓர் ஆசிரியையான அவர் வேறுயாருமல்ல!


தன்னைக் கொல்ல வந்தவனையே மன்னித்து அவனுக்காகப் பிரார்த்தனை புரிந்தவரும் உலகுக்கு அன்பையும் கருணையையும் போதித்தவருமாகிய இயேசுக் கிறிஸ்து வின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்... ஒரு  கன்னியாஸ்திரி!

-Jesslya Jessly