இதுவும் ஓர் அனுபவம்தான்!
அன்று ஒரு புதன்கிழமை. ஒரு அலுவலாக மாகாணக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அண்மையில் நிகழ்ந்த ஆசிரியர் இடமாற்றங்கள் காரணமாக ஒர் பெரும் கூட்டமே காத்திருந்தது. மாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்திப்பதற்குரிய படிவத்தைப் பெற்று நிரப்பி நிர்வாக அலுவலரின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகே இரு நடுத்தர வயதைத்தாண்டிய பெண்மணிகள் காத்திருந்தனர். அவர்களின் உரையாடலை எதேச்சையாக அவதானித்ததிலே அவர்களிருவரும் மட்டக்களப்பிலிருந்து வந்திருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டேன்.
'உங்களது இலக்கம் எத்தனை தம்பி?' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். 'இல. 12' என்று நான் பதில் கூறியதும் அவர்களிருவரது முகத்திலும் ஏமாற்றம் கலந்த ஆச்சரிய மின்னல்கள்!
'இதென்னது..நாங்க இருவரும் விடியல் காலையிலேயே வந்து காத்துக்கிடக்கிறோம். எங்களுக்கு 44! இப்ப வந்த உங்களுக்கு 12 தந்திருக்கிறாங்களே?' என்றார்கள்.
'அப்படியா!' என்று வியந்துகேட்ட எனக்கு அவர்களது ஆதங்கம் புரிந்தது. அவர்களது நிலையைப் பார்க்கப் பாவமாகத்தானிருந்தது. ஆனால் படிவத்திலேயே இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாற்றிக் கொடுக்கவும் முடியாது.
அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக, அரச அலுவலகங்களிலே நிகழும் இதுபோன்ற சிறியது முதல் பெரியது வரையிலான குளறுபடிகள் பற்றிய பேச்சை எடுத்தேன். அவ்வளவுதான் யாரிடம் இதுபற்றித் தங்களது உள்ளக் குமுறல்களையெல்லாம் கொட்டலாம் என்று காத்திருந்தவர்கள் போல் கொட்டித் தீரத்துவிட்டார்கள், ஆசிரியைகளான அந்தப் பெண்மணிகள் இருவரும்.
அப்போதுதான் புரிந்தது நம்மைப்போலவே ஒவ்வொரு ஆசிரியர்களுக்குள்ளும் பல உண்மைக் கதைகள் உள்ளன என்பது.
ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களது அனுபவங்களை இங்கே அவற்றின் உள்ளடக்கம் காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதுள்ளது.
எனினும் அவர்களது உரையாடலின் இறுதியில், தங்களது பிரதேசத்தில் அண்மையிலே விநியோகிக்கப்பட்ட ஒரு கவிதை வடிவிலான துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தந்தனர். அன்புச் செல்வன் என்பவரின் பெயர் பொறித்திருக்கும் அதனை இங்கே தருகின்றேன். பாருங்கள்:
- மூதூர் மொகமட்ராபி
நிர்வாக சுதந்திரம்!
அன்புடையீர்!
இதுவோர் அரச திணைக்களம்
ஆதலால் நீங்கள்
வரலாம் போகலாம்
வராமலும் இருக்கலாம்
வந்தவுடன் போகலாம்
நாளையும் வரலாம்!
கேள்வியில்லை
கேட்பாரில்லை!
அமர்ந்திருக்கலாம்
நடந்து திரியலாம்
அமைதியாயிருக்கலாம்
உரத்தும் பேசலாம்
ஏனென்று எந்தக்
கேள்வியுமில்லை
வேலை செய்யலாம்
செய்யாது இருக்கலாம்!
காலையில் வந்து
காணாமல்போய்
மாலையில் வந்து
ஒப்பமும் போடலாம்!
யாரும்வந்து யாரோடும்
வந்தவரோடு வாசலில் நிற்கலாம்
வாசலில் நின்றே
வேடிக்கை பாரக்கலாம்!
முறுக்குக் கொறிக்கலாம்
முட்டாய் தின்னலாம்
கொறித்துக் கொண்டே
கோலும் பேசலாம்
கைத்தொலைபேசியைக்
காதில்வைத்து
நடக்கலாம் சிரிக்கலாம்
நடனமும் ஆடலாம்
வேட்டிகட்டலாம்
டையும் கட்டலாம்
வெள்ளிக்கிழமை வேலைநாள்
வேறுபாடின்றி
பொட்டும் வைக்கலாம்!
விடுமுறை எடுக்கலாம்
எடுக்காமலிருக்கலாம்
விடுமுறைக்கடிதம்
தரலாம் விடலாம்;
பொறுப்புகள் எதுவும்
ஏற்காதிருக்கலாம்
ஏற்றால் எதுவும்
செய்யாதிருக்கலாம்
கேள்வியுமில்லை
கேட்பாருமில்லை!
அன்புடையீர்!
இதுவோர் அரசதிணைக்களம்
இங்கே யாரும் யாருக்கும்
அரசனுமில்லை
ஆண்டியுமில்லை
யாரும் வரவும்
யாரும் போகவும்
எந்தத் தடையும்
எவருக்கும் இல்லை!
இத்தனையும் செய்து
எத்தனை மகிழ்ச்சி
மாத முடிவில் ஒப்பமிட்டதும்
ஊதியம் கிடைக்கின்றது!
என்னருமைத் தாய்நாட்டின்
அரசநிர்வாகத்திற்கும்
ஜனநாயக சோஸலிச
சுதந்திரக் குடியரசிற்கும்
ஓ போடு!
-அன்புச் செல்வன்-
No comments:
Post a Comment