Tuesday, April 10, 2012

Why these Kolaivery?

'அப்பாடா  தப்பிச்சோம்!'


ண்மையிலே தற்செயலாக சில இணையத்தளங்களைத் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஓர் உயிர்ப்பான மின்சாரக் கம்பியை தொட்டது போலிருந்தது.அனைத்து இணையத்தளங்களும் நம்பகமானவை அல்ல என்பதையும் இணையத்தில் வெளிவருகின்ற அத்தனை செய்திகளும் முற்றிலும் உண்மையானவை அல்ல என்பதையும் நான் நன்கறிவேன். ஆயினும் ஏற்கனவே அச்சு ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் பேசப்பட்ட செய்திகளை இணையத்திலே காட்சிவழி காணும்போதுதான் மேற்கூறிய அதிர்ச்சி.


சிறுவயதிலும் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்திலும் நாமெல்லாம் ஒரு முஸ்லீம் நாட்டிலே பிறந்திருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கின்றேன். ஆனால் இப்போது முஸ்லீம் நாடுகளில் நடைபெறுகின்ற பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பார்க்கும்போது 'அப்பாடா  தப்பிச்சோம்!' என்று  ஆசுவாசப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு அங்கு பெண்கள் பற்றிய விடயங்கள் உள்ளன.


இப்படி நான் சொல்வதால் ஏனைய நாடுகளிலெல்லாம் பெண்களைப் பூப்போல வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகாது. உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா விலுள்ள  உள்ள இஸ்லாமிய நாடுகளில்தான் மிக அதிகளவான பெண் கொடூரங்கள் பதிவாகின்றன என்று அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


பொதுவாக இவ்வாறான புள்ளி விவரங்கள் வெளியானவுடன் அந்தத் தகவல்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை.  இவை சரியானவைதான் அல்லது உண்மைக்கு மிகக்கிட்டியவைதான் என்பது நம் அறிவுக்குத் தெரிந்தாலும் உணர்வுக்கு உறைப்பதில்லை. விளைவாக உண்மையை எதிர்கொள்ளத் திராணியின்றி   சோற்றுக்குள் முழுப்பூசணிக்காய் விடயம் போல உடனடியாக அவற்றைக் கடந்து சென்றுவிடத்தான் முயல்கின்றோம். அல்லது தப்பிப்பதற்கான காரணங்களைத் தேடுகின்றோம்.


 'மேற்குலகின் சதி' என்றும் 'அமெரிக்காவின் திரிக்கப்பட்ட செய்தி'
 'யூத ஊடகங்களின் வேலை' என்று சில தயாரிக்கப்பட்ட சொற்றொடர்கள் கூட இதெற்கனத் தயாராக வைத்திருப்போம்.  இத்தகைய சதிகளெல்லாம் முற்றிலும் நமது பிரமையென்று கூறமுடியாது. ஆனால் வீட்டுக்கூரையில் ஒரு மாங்காய் விழுந்தால் கூட அதையும்  'அமெரிக்கச்சதி' என்று கூப்பாடு போடுவதால்தான் அதற்கெல்லாம்  சிறு அதிர்ச்சி மதிப்புக்கூடக்; கிடைப்பதில்லை.


உலக நாடுகளில் நிகழும் மனித சமூகத்துக்கு எழுச்சியும் உயர்ச்சியும் தரக்கூடிய செயற்பாடுகள் பற்றிய செய்திகளை இந்த மேற்குலக யூத ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தால் அல்லது திரிபுபடுத்தி வெளியிட்டால் அதைக் காட்டமாக எதிர்க்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை. அதேவேளை மனித நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்களை - அவை எங்கு நிகழ்ந்தாலும் -  அதே ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியுலகுக்கு கொண்டு வந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.


சரி, முஸ்லீம் நாடுகளில் தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தேடுவோமா?


அறிஞர் பெர்னாட்ஷா ஒரு தடவை,    'சமூகம் குற்றங்களுக்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறது. குற்றவாளிகள் அதனைச் செய்து முடிக்கின்றார்கள்'   என்றார்.


அதாவது எந்தவொரு தனிமனிதனும் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்துமுடிக்க வேண்டும் எனும் தன்முனைப்போடு அதனைப் புரிவதில்லை. அவனைச் சுற்றியுள்ள சமூகக்காரணிகளே பெரும்பாலும் ஒரு குற்றத்தை நோக்கி உந்துகின்றன.


அப்படிப் பார்த்தால் பெண்கள் மீது அதிகமான குற்றங்களை இழைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மதப்பிரிவினர் எதுவிதமான குற்றவுணர்வுமின்றி அல்லது ஒப்பீட்டளவிலே குறைவான  குற்றவுணர்வுகளுடன் முன்வருகின்றனர் என்றால் அவர்களை வழிநடாத்தும்  மத கலாசார விழுமியங்களிலோ சமூகப் பொருளாதாரக் காரணிகளிலோ அல்லது அவற்றின் தவறான பின்பற்றல்களிலோதான்  தவறுகள் இருக்க வேண்டும்.


இதனை ஒர் இலகுவான உதாரணத்தின் ஊடாகப் புரிந்து கொள்ளலாம்.


அதாவது ஒரு கடலோரக் கிராமத்திலுள்ளவர்களையும் விவசாயக் கிராமத்திலுள்ளவர்களையும் ஒப்பிட்டால் பொதுவாக கடலோரமுள்ள மீனவர்கள்தான் விவசாயிகளை விடவும் வாழ்க்கையில் எந்தவொரு விடயத்திற்கும் சட்டெனத் துணிந்து இறங்கி முகம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  காரணம் அவர்களது ஜீவனோபாயத் தொழில்.
கடல் என்பது ஓர் ஆபத்து நிறைந்த பகுதி. காலநிலைக்கேற்ப அமைதியாகவும் கொந்தளிப்பாகவும் இருப்பது. சமயத்தில் சட்டென புயல் சூறாவளி கடற்கோள் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு உயிரைப் போக்கிவிடக்கூடிய சாத்தியமுள்ளது. கடலில் தொழிலுக்காக இறங்கும் மீனவன் ஒருவன் இவ்வாறான அபாயங்களுக்கெல்லாம் அன்றாடம் முகம் கொடுப்பதால் வாழ்க்கையின் சவால்களையும் அவன் துணிச்சலாக எதிர்கொள்கின்றான்.


இதுபோல, பிறந்தது முதல் குறித்த ஒருவித மதச்சடங்குகள் சம்பிரதாயங்களிலே ஊறித்திளைக்கும் சமூகப் பிரிவினர் அதற்கேயுரிய பண்புகளுடன் வளர்ந்து வருவது இயல்புதானே. பொதுவாக  நமது இஸ்லாமிய மதம் ஏனைய மதங்களோடு ஒப்பிடுகையில் நமது சமூகப் பெண்களை அதிகமான கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கின்றது. இதை பெருமையாகவும் கூடக் கருதுகின்றது.


இங்கு மதக்கட்டுப்பாடுகள் இருபாலாருக்கும் பொதுவானவை எனக் கூறப்பட்டாலும் கூட ஆண்களுக்குரிய சுதந்திரமும் சலுகைகளும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான் தெளிவான உண்மை.

'ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் (தேவை)' (குரான் 2:282)

பெண்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாவும் மெல்லியர்கள். எனவே அவர்களை சமூகச் சீரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்குத்தான் மறைத்து வைத்திருக்கின்றோம் என்று எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பெண்களின் உடலை முழுமையாக மறைத்து வைத்திருப்பதுதான் நாம்; வழங்கும் ஒரே 'பாதுகாப்பு' தவிர சமூகப்பாதுகாப்பு என்பதெல்லாம் திரைமறைவிலே கூட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.தவிர, நமது திருமண வாழ்வின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் முன்மாதிரிகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை பெண்கள் என்பவர்கள் ஒரு ஆணுக்கிருக்கும் ஆடுகள், ஒட்டகைகள், குதிரைகள் போன்ற கால்நடைகள், உணவு குடிபானங்கள் சொத்துக்கள் போல போகப் பொருள்களில் சேர்த்தியானவர்கள் என்றுதான் தெளிவாகச் சொல்கின்றது.

'தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள், ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம்  தரும் பொருட்கள்'  (குரான் 3:14)

ஒர் ஆண் ஒரேசமயத்தில் நான்கு மனைவியரை வைத்திருக்கலாம் என்பதுடன் அந்த மனைவியரின் சம்மதமின்றியே தன்னிச்சையாய் விவாகரத்தும் செய்து விடலாம். இதற்குச் சில நிபந்தனைகள் உபவிதிகள் இருந்தபோதிலும் அவையெல்லாம் ஒர் ஆணுக்கிருக்கும் இந்த எதேச்சாதிகாரத்துக்கு எந்தவிதத்திலும் ஊறுவிளைவிக்காதவை.


ஒரு கணவனின் உடல் இச்சைக்கு மறுக்கும் (எத்தகைய
காரணமிருந்தபோதும்) பெண்ணை இரவு விடியும் வரை வானவர்கள் சப்பிப்பார்கள் என்று கூறும் வேதங்களிடம் ஒரு பெண் என்ன சமூகப்பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும்?

'கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை (வானவர்களால்) சபிக்கப்பட்டவளாகிறாள்.' (புஹாரி: 3237)


நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இளைஞர்கள் பலர் தமது காதலை மறுத்த இளம் பெண்கள் மீது அசிட் வீசி ஆத்திரத்தைத் தீர்க்கும் கொடுமையை வெகு சாதாரணமாகச் செய்து வருகின்றார்கள். வற்புறுத்தித் திருமணம் செய்விக்கப்பட்ட முதியவருடன் ஒன்றாக வாழ மறுத்த இளம் பெண்ணுக்கு மூக்கையும் காதுகளையும் அறுத்து விட்டிருக்கின்றார்கள். தன்னை விட அதிகமாகக் கல்வி கற்பதற்கு ஒத்தாசை புரிந்ததற்காக மனைவியின் தாயையும் தங்கையையும் பாலியல் வல்லுறவுத்தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். இப்படி எத்தனையோ பெண்வதைகள் சிறிதும் குற்றவுணர்வின்றி அரங்கேறிக்கொண்டேயிருக்கின்றன.

(இதோ அதற்குரிய அத்தாட்சிப் படங்கள்).
இப்போது கூறுங்கள் தன்னோடு காலம் முழுவதும் தாயாய் குழந்தைகளாய் சகோதரிகளாய் மனைவியாய் ஒன்றாக வாழும் பெண்களை துச்சமாக நினைக்கும் மனோபாவம் ஒரு இஸ்லாமிய ஆண் மகனுக்கு எங்கிருந்து வருகின்றது?


தனது உடல் இச்சைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம் என்றும் 'தலாக் தலாக் தலாக்' என்று மூன்று முறை ஒரு ஆண் தன் மனைவியைப் பார்த்துக்கூறி விட்டாலே விவாகரத்து ஆகிவிடும் என்று ஆணின் மேலாதிக்கத்துக்கு இறைவனின் வேதமே பக்கபலமாக இருக்கும்போது யாருக்குத்தான் தைரியம் வராது?


இந்திய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் முகம்மது அஸ்ஸாருதீன் இதற்கு வாழும் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.


அவர் தனது முதல் மனைவி நவ்ரினை எவ்வாறு மனைவியின் விருப்பத்திற்கு மாறாக தலாக் கூறி விவாகரத்துச் செய்திருந்தார் தெரியுமா?அதுவரை அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அஸ்ஸார் சங்கீதா பிஜ்லானி எனும் அழகிய இந்தி நடிகையிலே மையல் கொண்டு அவருடன் இரகசிய உறவை வளர்த்து ஊர்சுற்றத் தொடங்கினார். ஒருகட்டத்தில் இந்தவிடயம் இந்திய  ஊடகங்கள் மூலம் அம்பலமாகியதும் வேறுவழியின்றி நவ்ரினிடம் வந்து இரண்டாம் திருமணத்துக்கு விருப்பத்தைக் கேட்டார். நவ்ரின் அதற்கு உடன்பட மறுத்ததும் சில நாட்கள் வரை காத்திருந்து விட்டு திடீரென ஒருநாள் வந்த அஸ்ஸார் அவரைப் பார்த்து 'தலாக்..தலாக்..தலாக்' என்று மும்முறை கூறிவிட்டுச் சென்றதும் இஸ்லாமியக் காரியம் முடிந்து விட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் இந்தியத் திருமணச்சட்டத்தின் விவகாரங்கள்தான்.


'பெண்களுக்கும் விவாகரத்துரிமை என்றதும் ஆண்களைப் போல் 'தலாக்' எனும் சொல்லை மும்முறை கூறி பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட முடியாது. ஆண்கள் செய்யும் விவாகரத்திற்கும் பெண்கள் செய்யும் விவாகரத்திற்கும் இடையே நடைமுறையில் வேறுபாடு இருக்கிறது. பெண்களின் விவாகரத்திற்கு  'குலாஉ' என்று பெயர். விவாகரத்து பெற விரும்பும் பெண் தலைவரிடம் (நீதிமன்றம்) சென்று முறையிட வேண்டும். அவர் கணவனை அழைத்து, திருமணத்தின் போது கணவன் கொடுத்த மணக் கொடையை மனைவி திரும்பக் கொடுத்ததும் இருவருக்கும் இடையிலான திருமணம் முறிந்ததாக கொள்ளப்படும்.


ஆண்களின் விவாகரத்தான தலாக்கிற்கும் பெண்களின் விவாகரத்தான குலாவிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.  ஆண்களின் தலாக் மூன்று கட்டங்களாக நிகழ்வது, பெண்களின் குலா ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆண்களின் தலாக் யாரிடமும் முறையிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக மனைவியிடமே கூறிவிடலாம், பெண்களின் 'குலாஉ' பொதுவான தலைவரிடம் முறையிட்டே செய்யமுடியும். இவைகளை இஸ்லாம் கூறும் குடும்பவியல் நடைமுறைகளோடு ஒப்பு நோக்கினால் இந்த விவாகரத்து நடைமுறைகள் எந்த நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்.


ஆண்களுக்கு நான்கு முறைப்படியான மனைவிகளும் கூடவே எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி இருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு கீழ்படிய மறுக்கும் மனைவியை படுக்கையில் விலக்கிவைத்து, அடித்து கட்டுப்படுத்தும் அனுமதியும் கணவனுக்கு இருக்கிறது. இதனோடு இணைந்து தலாக் எனும் விவாகரத்து மனைவியை மிரட்டுவதற்கு வழிவகை செய்து தருகிறது. பொதுவான ஒருவரிடம் முறையிட வேண்டிய தேவையின்றி படிப்படியாக இரண்டு முறை தலாக் கூறினாலும் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். ஆக, மனைவியை தனக்கு கட்டுப்பட்டவளாக நடக்க வைப்பதற்கான உச்ச கட்ட ஆயுதமாக ஆணுக்கு தலாக் பயன்படுகிறது.

(இதை நடைமுறையில் யாரும் காணலாம்)


ஒரு மனைவி இறந்தால் அவளின் உடமைகளின் பெரும்பகுதிக்கு கணவனே வாரிசாக இருக்கும் நிலையில், திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட மணக் கொடை கணவனிடம் திரும்பிச் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு பொதுவான ஒருவரிடம் முறையிட்டுத்தான் பெண் விவாகரத்து பெற முடியும். அதேநேரம் மனைவி முறையிட்டு கணவனும் ஒப்புக் கொண்டு விட்டால் அந்தக் கணமே விவாகரத்து செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இதுவே ஆணுக்கு தவணை முறையில் செய்யப்படுவதால் அவனுக்கு இருக்கும் அவகாசம் பெண்ணுக்கு இல்லை. எனவே பெண் தனக்கு பிடிக்காத கணவனை விவாகரத்து செய்வது என்பது வேறு வழியில்லாத நிலையில் எதிர்காலம் குறித்த பயத்தையும் மீறித்தான் செய்ய முடியும். இது கணவனின் ஏற்க முடியாத செயல்களையும் கூட சகித்துப் போக வைக்கிறது. இதுவே ஆண் என்றால் தனக்கு கட்டுப்பட மறுப்பவளை தலாக் கூறி மிரட்டி அவள் பணிந்ததும் ஏற்றுக் கொள்ள முடியும்.' (நன்றி : செங்கொடி இணையத்தளம்)


இப்போது பார்த்தீர்களா இஸ்லாம் நமது பெண்களுக்கு வழங்கியுள்ள சமூகப்பாதுகாப்பை? தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு ஓர் இஸலாமிய ஆண் என்பதால் அஸ்ஸாருக்கு  பக்கபலமாக அமைந்தது எது?


'ஏன் அஸ்ஸார் போலவே நவ்ரீனும் மற்றொரு திருமணம் முடித்து வாழ வேண்டியதுதானே' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி:இதே போல நவ்ரீனுக்கு ஒரு வேற்று ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்ய நாடியிருந்தால் இதே போல சுலபமாக தலாக் (3) மூலம் காரியம் முடித்திருக்க முடியுமா? இதற்கு உங்கள் சட்டங்கள் பாரபட்சமின்றி சமவுரிமை வழங்குமா? வழங்குவார்களா நமது மார்க்க அறிஞர்கள்?


நிலைமை இப்படி இருப்பதால்தானே நாமெல்லாம் எவ்வளவுதான் மூடி மறைக்க நினைத்தாலும் இஸ்லாமிய நாடுகளில் பெண்வதை அதிகமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செய்திகள் வந்து நமது முகத்திலேயே ஓங்கி அறைந்து கொண்டிருக்கின்றன.


இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நாமெல்லாம் இஸ்லாமியர்கள் தனியே அல்லது பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் அல்லாமல் பல்லின மக்கள் வாழும் நாடுகளில் பிறந்தது கூட அந்த அல்லாஹ்வின் அருள்தான் போலிருக்கின்றது.


- Jesslya Jessly

3 comments:

 1. பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு உரிமைகளையும் , சிறப்புகலையும், அந்தஸ்த்துகலையும் வழங்கியுள்ளதை மறைத்து இஸ்லாமியர்கள் மீது உள்ள கால்புனர்சியை இங்கே பதித்துள்ளீர்கள்.உண்மையில் இஸ்லாமும், நபிகள் நாயகமும் ஒருபோதும் பெண்களை போதை பொருளாக கருதுவது போல் மாயை ஏற்படுத்தி உள்ளீர்கள்.கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.

  இஸ்லாம் தரும் உரிமைகள் பல அதில் சில ....

  கல்வி பெற உரிமை மற்றும் அது அவர்கள் கடமை.

  தமது சொந்த சுயாதீன சொத்து உரிமை.

  அவர்கள் விரும்பினால் தங்கள் தேவைக்கு பணம் சம்பாதிக்கவும் வேலை தேடிக்கொள்ளவும் சேமித்துக் கொள்ளளவும் உரிமை வழங்கப் பட்டுள்ளது

  சம செயல்களுக்காக பரிசு என்ற சமத்துவ அந்தஸ்து

  தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் மற்றும் அதனைக் கேட்கவும் உரிமையுண்டு

  அனைத்து அவள் தேவைகளையும் கணவரிடமிருந்து கேட்கும் உரிமை.

  தனது திருமணம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உரிமை.


  ''கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'' என்ற இக்கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் நியாயமான காரணங்கள் இருந்தால் ஷரீஅத் சட்டத்தின்படி விவாகரத்து பெறலாம் என்று அனுமதிக்கிறது.

  தகுந்த காரணமின்றி விவாகரத்து கேட்கும் ஒரு பெண் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பெண்களுடைய உரிமை சம்பந்தமாக எழும் வழக்குகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெண் நீதிபதி இருக்க வேண்டும் என்று இமாம் அபூஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

  ஒரு ஆணைப்போல ஒரு பெண் விவாகரத்து சொல்வதற்கு உரிமைகள் குறைவாக தரப்பட்டிருப்பதின் காரணம் பெண்கள் பொதுவாக உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவு எடுப்பவர்கள், பிறகு அதற்காக வருந்துபவர்கள்.

  தன் சொந்த பணத்தை (சொத்தை)தான் வைத்துக் கொள்ள உரிமை. அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை
  அவரது கணவரிடமிருந்து பாலியல் திருப்தி பெற உரிமை. பாலியல் சக்தியற்ற கணவரிடமிருந்து பிரிந்து விட உரிமை.

  விவாகரத்து பெற்றால் அவர்களின் குழந்தைகள் தங்களின் பாதுகாப்பில் வைத்து நல்ல முறையில் வைத்து வளர்க்கும் உரிமை

  மணமகனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்பாத மணமகனை மணமுடிக்க மறுப்பதும் அவளுக்கு உரிமையுண்டு. கட்டாய திருமணம் அனுமதிக்கப் படவில்லை. இங்கு பெண்களை மதிக்காத காலகட்டத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு உரிமைகளை வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.

  ReplyDelete
 2. ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது,அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதாமாக சமூகம் எனவும் நிரூபித்தது.


  மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)

  மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (04:32)

  பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (04:07)

  ReplyDelete
 3. இஸ்லாம் பெண்ணுக்கு எழுத்துரிமை, கல்வி கற்க உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை, விவாக மற்றும் விவாகரத்து உரிமை (பல மதங்கள் இந்த உரிமையைப் பெண்களுக்கு இன்னும் வழங்கவில்லை) போன்ற இன்னும் ஆண் பெற்றுள்ள அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது மட்டுமல்லாமல், பெண்ணின் முப்பருவங்களைச் சுட்டிக்காட்டி, குழந்தை, மனைவி, தாய் ஆகிய மூன்று நிலைகளில் அவளுக்குள்ள தனிச் சிறப்புக்களையும் தெளிவாகவே சுட்டி செயல்படுத்தியும் வருகிறது.

  பெண்குழந்தைகள் பெறுவது சாபக் கேடு என்று கருவிலேயே அவற்றைக் கொல்லும் இந்த நாளிலே, பெண் குழந்தையின் வளர்ப்பின் சிறப்பு பற்றி 1420 ஆண்டுக்கு முன்னரே இஸ்லாம் எவ்வளவு பெரிய சிகரத்தில் பெண்ணின் பெருமையை வைத்துள்ளது என்றால்,
  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், யாரிடம் இரண்டு பெண் குழந்தைகள் இருந்து அவற்றை நல்ல முறையில் பராமரித்து கல்வி புகட்டி, ஒழுக்கத்துடன் வளர்க்கிறாரோ அவரும்நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தம் இரு விரல்களையும் சமமாக நிறுத்தி சுட்டிக் காட்டினார்கள்.

  அதுபோலவே, உங்களில் சிறந்தவர் யார் எனில், உங்கள் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே! என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

  பெண்களுக்கான உரிமைகளில் சில :

  சொந்தமாக்கிக் கொள்ளல் :

  வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம் போன்ற ஆபரண வகைகள், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருப்பினும் சரி.

  திருமணம் :

  திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்க மறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்துவமாக விளங்குகின்றது.

  கல்வி கற்கும் உரிமை :

  தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவள். இறைவனைப் பற்றியும், இறைமறையைப் பற்றியும், இறைத்தூதரின் வாழ்வு, ஒழுக்க மாண்புகள் மற்றும் இந்த உலக வாழ்வுக்குரிய அனைத்துக் கல்விகளையும், மனித சமுதாயத்திற்குப் பயன்படக் கூடியவற்றையும் கற்றுக் கொள்ளும்படி இறைமறை ஆணையும்,பெண்ணையும் வலியுறுத்திக் கூறுகின்றது.

  அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள் (47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதால், இஸ்லாத்தில் கல்வி கற்பதன் அவசியம் பற்றி நமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  ReplyDelete