Sunday, April 8, 2012

Are People Idiots?





நண்பன்  மற்றும் தோனி
நமக்குச் சொல்வதென்ன?






ண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படங்களில் நண்பன் மற்றும் தோனி ஆகிய இரண்டும் இரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டுவருகின்றன. இவை   இன்றைய கல்விமுறைமை பற்றிய விமர்சனங்களைத் தமது பிரதான கதைக்கருவாகக் கொண்டிருப்பதால் அது பற்றிய பார்வை மிகவும் அவசியமானது.


'நண்பன்' அதன் தலைப்புக்கேற்றவாறு மூன்று நண்பர்களின் நட்பின்
வலைப்பின்னலில் ஒரு பொறியியல் கல்லூரி வாழ்க்கையைக் களமாகக் கொண்டு இன்றுள்ள கல்வி முறைமையின் முரண்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் பார்வையாளர்களுக்கு முன்வைக்கும் திரைப்படம்.


வறுமை காரணமாக பெருந்தோட்டச் சொந்தக்காரரின் நிலத்தில் உழைத்து வாழும் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த அதீத திறமையுள்ள ஒருவன், தன் முதலாளியின் கட்டளையை மீற முடியாமல் அவரது மகனின் பெயரிலே அவனுக்கு பட்டம் பெற்றுக் கொடுப்பதற்காக பொறியியல் கல்லூரியில் சேருகின்றான்,


அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போராடும் கீழ்நிலை மத்தியதர ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து அம்மா, நோயாளித் தந்தை, முதிர்கன்னி அக்கா ஆகியோரை கரைசேர்ப்பதற்காக படித்து வேலை எடுக்கவேண்டுமே என்று அதே கல்லூரிக்கு வருகின்றான் பயந்து பயந்து படிக்கும் சுபாவமுள்ள மற்றொருவன்.


வனவிலங்குகளைப் படம்பிடித்து ஆவணப்படுத்தும் துறையிலே அடங்காத ஆர்வமிருந்தும் கடன் வாங்கிப் படிக்கவைக்கும் அரச ஊழியரான தந்தையின் வற்புறுத்தலுக்காக பொறியியல் பட்டம் பெற்றுச்செல்ல வருகின்றான்,  இன்னொருவன். இம்மூவரும் எதேச்சையாக கல்லூரி விடுதியின் ஒரே அறையில் தங்குவதனால் நண்பர்களாகின்றனர்.



இதேவேளை கல்வி உட்பட வாழ்க்கையின் உன்னதங்கள் அனைத்துமே கடுமையான போட்டியிட்டு வெற்றி பெறுவதில் மட்டுமேதான் உள்ளது என்பதை உறுதியாக நம்பும் அக்கல்லூரியின் முதல்வர் அதனை நோக்கியே தனது கல்லூரியின் மாணவர்களையும் கற்பிக்கும் பேராசிரியர்களையும் வழிநடாத்திவருகின்றார்.



இவர்களுக்கிடையில் நிகழும் வேடிக்கையான ஆனால் சிந்திக்க வைக்கும் போராட்டங்கள்தான் நண்பனின் கதை.


கல்வியியலாளர்களும் அறிஞர்களும் ஏற்கனவே கண்டறிந்து வைத்துள்ள விடயங்களை அடிப்படையாக வைத்து புதிய தேடல்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வெறுமனே பாடங்களை மனனம் செய்யும் ஆற்றலைச்  சோதித்துப் புள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையின் அபத்தங்களை படம் முழுவதிலும் தோலுரித்துக் காட்டிக் கொண்டே நகருகின்றது கதை.


இறுதியில் மூன்று நண்பர்களில் ஒருவனான கதாநாயகன், மனனம் செய்து சம்பாதிப்பதற்காக மட்டுமே படித்து வந்தவர்களெல்லாம் வியக்கும் வண்ணம் புதிய தேடல்களை ஊக்குவிக்கும் கல்வியை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி வெற்றிபெற்று வாழ்வதாகக் காண்பிக்கும் புள்ளியில் படம் நிறைவடைகின்றது.


இனி 'தோனி' ...






தோனியும் மத்தியதர வர்க்கக் குடும்பக்களுக்கேயுரிய கல்விக் கனவுகளைப் பற்றிய படம்தான். ஆனால் இங்கு ஆரம்ப இடைநிலைப்  பாடசாலைக்கல்வியும் அதனுடன் ஒட்டிய வாழ்க்கைச் சூழலும் கதைக்களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


மனைவியை இழந்த அரச ஊழியரான ஒரு தந்தை தனது சக்திக்கு மீறிய வகையிலே ஒரு தனியார் பாடசாலையில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைக்கின்றார். பிள்ளைகள் இருவரின் மீதும் மிகுந்த பாசமுள்ளவரான அவர், இதற்காக அலுவலகத்தில் மேலதிக வேலை, ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வது, கந்து வட்டிக்கு பணம் வாங்குவது என்று சுழன்றோடிக் கொண்டிக்கின்றார்.


ஆனால் ஒன்பதாம் தரம் கற்கும் அவரது மகனுக்கோ படிப்பைவிட  கிரிக்கட்டில்தான் ஆர்வமும் திறமையும் மிகுதியாகவுள்ளது. இதனால் இருவருக்குமிடையிலே அடிக்கடி சிறுசிறு மோதல்கள் உருவாகி வருகின்றது. அவனது ஆர்வத்தைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக படிப்புக்குத் தடையாக இருந்து வரும் கிரிக்கட்டிலிருந்து அவனைப் பிரித்தெடுப்பதற்கு முயன்று தோல்வியடைகின்றார் அந்தத் தந்தை. ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி முதன் முறையாக  மகனைக் கோபத்தில் அடித்துவிட எதிர்பாராமல் அவனது தலையில் பலத்த காயமேற்பட்டு விடுகின்றது. இதனால் அவன் கோமா நிலைக்குச் சென்று விடுகின்றான்.




அதன்பின்பு நிகழும் சம்பவங்களால் தந்தைக்கு அதுவரை மூடியிருந்த இன்னொரு உலகம் திறக்கின்றது. கல்வி பற்றிய அபத்தங்களையெல்லாம் நேரடி அனுபவங்களால் அறிந்து அவனது நியாயமான ஆர்வத்தைப் புரிந்து கொள்கின்றார். மகனுக்காக ஆவேசத்துடன் போராடக் களத்தில் இறங்கும் அவர் ஊடகங்களின் உதவியுடன் தற்போதைய கல்வி முறைமையின் தவறுகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துகின்றார்.


இதனால் ஒருகட்டத்தில் தனது வேலையைக் கூட பறிகொடுக்கும் நிலையில் சளைக்காது போராடி மாநில முதலமைச்சர் வரை செல்கின்றார். முதலமைச்சர் மற்றும் தன்னார்வத் தொண்டு புரியும் ஒரு மருத்துவத் தம்பதி ஆகியோரின் உதவியோடு மகனைக் குணப்படுத்தி அவனுக்குப் பிடித்த கிரிக்கட் துறையில் ஈடுபடுத்துவதோடு படம் முடிவடைகின்றது.


நண்பன் மற்றும் தோனி ஆகிய இரண்டு படங்களிலும் ஏறத்தாழ ஒரே அடிப்படைக் கருத்தையேதான் கூறியிருக்கின்றனர் எனினும் அவற்றை வெளிப்படுத்திய விதம் அதற்காகப் பயன்படுத்தியிருக்கும் கதைக்களம் ஆகியன வேறுபடுகின்றன.


வெறும் பொழுதுபோக்கையே பிரதானமாக வைத்து இயங்கும் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் அவ்வப்போது சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும் சில சமூகப் பிரக்ஞையுள்ள படங்களும் வந்து வெற்றி பெறுவதுண்டு. இவ்வாறு சமூக அக்கறையுள்ள  கதைக்கருவுடன் வெளிவரும் தமிழ் தென்னிந்திய இந்தியத் திரைப்படங்களிலே பின்வரும் போக்குகள் காலம் காலமாக இருந்து வருகின்றன.

1. சமூகப் பிரச்சினைகளை பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்படும் வகையிலே மிகைப்படுத்திக் காட்டுவது பின்பு அதற்குத் தீர்வு எதுவும் கூறாமல் விட்டுவிடுவது. (எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன் வகையறா படங்கள்)


2. பிரச்சினைகளை ஓரளவு யதார்த்தமாக காண்பிப்பது பின்பு அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத உப்புச்சப்பில்லாத தீர்வுகளை முன் வைப்பது. ( கே.பாலசந்தரின் பெரும்பான்மைப் படங்கள்)



3. சமூகப் பிரச்சினைகளுக்கு தனிமனிதர்களின் தவறுகளும் அயோக்கியத்தனங்களுமே காரணம் எனக்காட்டி அவர்களைத் திருத்தினால் அல்லது களையெடுத்தால் போதும் உலகமே சுபீட்சமாகி விடும் எனத் தீர்வு காண்பிக்கும் படங்கள். (இயக்குனர் ஷங்கரின் இந்தியன், அந்நியன் வகையறா படங்கள்)



ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் உட்பட சமூகத்திலுள்ள அனைத்துச் சீரழிவுகளுக்கும் காரணம் தனிமனிதர்களின் நேர்மையீனமோ அயோக்கியத்தனங்களோ கிடையாது. அவற்றையெல்லாம் மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கும் எதேச்சாதிகார அரசு இயந்திரங்களும் அவற்றின் ஆட்சிமுறையுமே என்பதை இவ்வாறான திரைப்படங்கள் காண்பிப்பதில்லை அல்லது அதனை வலியுறுத்துவதில்லை என்பதே உண்மை.


விதிவிலக்காக கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர், மௌனகுரு போன்ற சில படங்கள் வருகின்ற போதிலும் அவற்றிலும் அவை அழுத்தமாகக் காண்பிக்கப் படுவதில்லை. இதனால் இவ்வாறான திரைப்படங்களை ரசிக்கும் ஒரு பார்வையாளன் தான் சமூகத்தில் காணும் குளறுபடிகளுக்கு தனிமனிதர்களின் இயல்புகளே காரணம் என்று நினைக்குமளவுக்குத் தவறாக வழிநடாத்தப்படுகின்றான்.


நண்பனில் வில்லன் போன்று சித்தரிக்கப்படும் கல்லூரி முதல்வர் விருமாண்டி சந்தானம் இறுதியில் அர்த்தமில்லாத கல்விப் போட்டி பற்றிய உண்மையை சென்டிமென்டாக உணர்ந்து திருந்தி விடுவதனால் கல்வியை வியாபாரமாக்கி காசுபார்க்கும் முதலாளிகளின் வலைப்பின்னல்கள் மாறிவிடப் போவதில்லை.



தோனியில் கோமாவில் கிடக்கும் பையன் குணமாகி அவனுக்குப் பிடித்த கிரிக்கட்டை ஆடுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்த காரணத்தால் சமூகத்தைப் பார்த்து அந்த நடுத்தர வர்க்கத்து தந்தை எழுப்பிய கேள்விகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.


மாறாக சகல மனித அவலங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்து வருகின்ற இன்றைய சமூக அமைப்புக்கு எதிராக அனைத்து மக்களும் கிளர்ந்தெழுந்து நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வகையிலே ஒன்றிணைந்து போராட வேண்டியதைத்தானே உண்மையில் இப்படங்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

-Mutur Mohd. Rafi

No comments:

Post a Comment