Saturday, April 14, 2012

சிறுகதை:






நான் எனும் நீ!














'அழாதீங்கோ பிள்ளையள்!'


அழுதுபுரளும் அக்கா தங்கைகளைத் தானும் அழுது தேற்றிக் கொண்டிருக்கின்றார் முருகேசு மாமா. அம்மாவின் கூடப்பிறந்த தம்பி. அப்பா அகாலமாய்ச் செத்தபிறகு  தான் கலியாணமே செய்யாமல் அக்காவின் பிள்ளைகளாகிய எங்களை பாசத்தைக் கொட்டி பாடுபட்டு வளர்த்து ஆளாக்கியவர் அவர். அவரை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. ஆனால் வேறு என்னதான் செய்வது. சுற்றிக்கிடந்து அழுதுபுரள்வதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் சுற்றிநின்று இவர்களெல்லாம் கண்டபடி ஏசுவதைத் தாங்கத்தான் முடியுமா?

'தங்கச்சி அழாதனை...எல்லோரும் ஒருக்காத் தம்பியக் கடைசியாப் பார்த்துக் கொள்ளுங்கோ...அவனைக் கொண்டு போவோம்' என்று கூறிவிட்டு உடைந்து போய் ஹோவென அழுதவரை ஓடிவந்து பிடித்துக் கொண்டார்கள். அவரைப் பார்த்து அத்தனை பெண்களும் ஓலமிட,


'டேய் முருகேசு! இதென்னடா நீயும் பொம்பளை கணக்கா அழுது கொண்டிருக்கிறா....இஞ்ச வா சின்னராசு, இவன அங்கால ஒரு ஓரமா இருத்தி விடப்பு...வாங்க நாங்க ஆகவேண்டியதைப் பார்ப்போம்' என்று பக்கத்து வீட்டு மணியண்ணன்தான் நிலைமையைச் சீராக்கினார்.


நாலுபுறமும் பிடித்துப் பெட்டியைக் கவனமாக மூடிவர உலகமே இருளத் தொடங்கியது. முன்னும் பின்னும் உறவகள் சூழ நண்பர்களின் தோளிலேறியதும் உச்ச ஸ்தாயியில் கோரஸாக எழுந்த அழுகை ஓலம், வெளிவாசலில் படபடத்து வெடித்துக் காதுகிழித்த பட்டாசு வெடியோசைக்குள் மெல்லச் சரணடைந்தது. கடைசி ஊர்வலத்தின் காலடியோசைகள் அந்தச் செம்மண் பூமியின் மீது உரசுகையில் காற்றிலே சரசரக்கும் பனையோலைகளை நினைவூட்டின.


பள்ளிப்பருவத்திலிருந்து ஓடிப்பிடித்து விளையாடித்திரிந்த பனந்தோட்டங்கள் இன்னும் பசுமையாக இருந்தது நெஞ்சில். கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் விளையாடிய மேட்டுவட்டைத்திடலுக்கு கிழக்குப்புறமாக இருக்கும் சுடகாட்டுக்குத்தான் இந்தக் கடைசிப் பயணம். முன்னோக்கி நகரும் ஊர்வலத்திலிருந்து பின்னோக்கி ஊர்ந்தன நினைவுப் பாம்புகள்.


கார்த்திகேசு மகேசுவரன் என்பதுதான் எனது முழுப்பெயர். விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர். உறவுகளிலிருந்து நண்பர்கள் வரை 'மகேஸ்' என்றால்தான் தெரியும். வேலை கிடைத்ததிலிருந்து இரண்டு வருடங்கள் மட்டும்தான் ஊரிலிருந்தேன். சண்டையும் தொடங்கி அக்காவின் கலியாணமும் முடிந்த கையோடு அம்மா நோயில் விழுந்து விட்டா. முருகேசு மாமாவிடம் வீடு தோட்டம் எல்லாவற்றையும் பொறுப்புக் கொடுத்துவிட்டு ஐசிஆர்சி கப்பலில் ஏறி இந்தக் கோணேசப் பெருமான் குடியிருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்து ஆறுவரடங்கள் ஓடிவிட்டன. அம்மாவை இங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் செய்ய வசதியாக இங்கேயே இடமாற்றம் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அம்மாவை இனிமேல் காப்பாற்றவே முடியாது என்று வைத்தியர்கள் கைவிட்டதும் அவவுடைய திருப்திக்காகத் திருமணமும் செய்து கொண்டேன்.


அவளுக்கும், அதுதான் என் மனைவி செல்லம்மா, எனது ஊர்தான் பிறப்பிடம். தூரத்து உறவும் கூட. இந்த ஊரிலேதான் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எக்கவுண்ட்ஸ் கிளார்க்காக இருக்கிறாள். கலியாணம் நடந்து ஆறுமாதத்திற்குள் அம்மாவும் இறந்துவிட அவவின் விருப்பப்படியே பெருங்கஷ்டப்பட்டு கப்பலிலில் ஊருக்குக் கொண்டு சென்று ஈமச்சடங்குகளை முடித்துத் திரும்பியதெல்லாம் பழைய கதை. அன்றைக்கும் முருகேசு மாமா அழுத அழுகைதான் எல்லோருடைய நினைவிலும் இருக்கிறது. அதற்குப் பிறகு சண்டைகள் ஓய்ந்து நிலைமை சீராகி இப்போது ஒரு ஆறுமாதமாகத்தான் நிலைமை சீராகி ஊருக்கெல்லாம் போய்வர முடிகின்றது. அதன்பிறகு எங்கள் வாழ்க்கை கொஞ்ச நாள் சீராகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்குமே ஒரு திருப்பம் வருமல்லவா அப்படித்தான் வந்தது. இல்லை..இல்லை நானாகத் தேடிக்கொண்டது.


வேறு மாகாணங்களிலிருந்து இந்த ஊருக்கு இடம்மாற்றம் பெற்று வந்தவர்களுக்கு நகரச்சூழலுக்குள் வசதியாக பாடசாலைகள் கிடைப்பது முயல்கொம்புதான். அதற்கெல்லாம் தேவையான மேலிடத்துச் சிபாரிசுகள், செல்வாக்குகள், இதெல்லாம் கிடையாது எனக்கு. ஆனால் இந்த வில்லங்கங்கள் எதுவுமேயில்லாமல் அதிர்ஷ்டவசமாக நகரத்துக்குள்ளேயே தொந்தரவில்லாத பாடசாலையொன்று கிடைத்தது.



என்னுடைய குணமறிந்துதான் கடவுளாய்ப் பார்த்து அதைக் கொடுத்திருப்பார் போல. ஏனென்றால் நான் எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாதவன். இலேசில் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன். அதற்காக எல்லாவற்றையும் அப்படியே  ஏற்றுக் கொண்டு வாழ்பவனுமல்ல. வாழ்க்கை பற்றி எனக்கென்றும் சில தர்ம நியாயங்கள், அபிப்பிராயங்கள், சமூகக் கோபங்களெல்லாம் சத்தியமாய் உள்ளன. எல்லாவற்றுக்குமே எதிர்விளைவுகள் இருக்குமென உறுதியாக நம்புபவன் நான்.



ஒரு பாம்பு வீட்டுக்குள் வந்தால் கூட அது விஷமுள்ளதா இல்லையா என்று பார்த்து விட்டுத்தான் எனது தாக்குதல் இருக்கும். அது விஷமுள்ளதாக இருந்தால் கூட 'அது ஒன்றும் நம்மைக் கொத்துவதற்குத் திட்டமிட்டு வரவில்லையே' என்ற வியாக்கியானமெல்லாம் பேசி அதை எப்படியாவது வந்த வழியே அனுப்பிவிடத்தான் முயற்சிப்பேன்.



'இஞ்சப்பா, உந்த விசரக் கதையெல்லாம் விட்டுப் போட்டு அதை அடிச்சுக் கொல்லுங்கோவனப்பா. விட்டா இஞ்ச எங்கயாவது அயலுக்குள்ளதானே சுத்தித் திரியும். கெதியா அடியுங்கோவனப்பா!' எனக் கத்தும் செல்லம்மாவிடம், 'சரி, சுத்தித் தெரிந்தால் வேறு யார்ட்டயாவது வேண்டுவார்தானே? இல்லையெண்டாலும் கீரிப்பூனையள் ஆலாக்கள் தரவழியிட்ட மாட்டுப்படுவார்தானே' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என்னுடைய கையிலிருக்கும் தடியைப் பறித்து படமெடத்து நிற்கும் பாம்பின் தலையில் நச்சென்று ஓரே போடாய்ப் போட்டுக் கொல்லுவாள் செல்லம்மா.  என்மீதுள்ள கோபத்தையும் சேர்த்து சில அநாவசிய அடிகளையும் செத்தபாம்பு வாங்கிக் கட்டும்.  பிறகென்ன, அதன் மரணச்சடங்குகளை மட்டும் நான் பார்த்துக் கொள்வேன். இதுதான் என்னுடைய குணம்.


தானாய்க் கனிந்து கையில் கிடைத்த பக்கத்துப்  பாடசாலையில் நானும் காலடியிலிருக்கும் அலுவலகத்தில் செல்லம்மாவுமாக ஐந்தாறு வருடங்களை ஒருவாறு பிரச்சினையில்லாமல் ஓட்டிவிட்டோம். இன்னும் இரண்டொரு வருடத்தில்  நிலைமை மேலும்  சிறிது சீராகியதும் மாற்றம் எடுத்துக் கொண்டு ஊருக்கே போய்விடலாம் என்ற சிறு நப்பாசை கூட இருந்தது எங்களுக்கு. அந்த நேரத்தில்தான் என் தூரத்து உறவினன் ஒருவன் வந்து நிம்மதியைக் குலைத்தான்.


'அந்தாள்ர விசர்க்கதையள விடுங்கப்பா! கனகாலம் டவுனுக்குள்ள படிப்பிக்கிறவைய தூர இடங்களுக்கு மாத்தி விடப்போறமெண்டு ஒவ்வொரு வருசமுந்தான் சொல்லுவாங்க. இந்த நான் இங்க வந்து பத்துப் பதினைஞ்சு வருசமாகுது...இந்தக் கதை வருசம் தவறாம வரும். ஆனால் லேசில அப்பிடி நடவாது.'

'என்னப்பா இவ்வளவு திட்டமாச் சொல்றீர்?'

'பின்ன...? டவுனுக்குள்ள இருக்கிற ஸ்கூல்கள்ள இருக்கிற டீச்சர்மார்கள்ள அரைவாசிக்கு மேல உங்கட எடுயுக்கேஷன்  டிப்பார்ட்மெண்டில இருக்கிற மேலதிகாரிகள்ற மனுஷிமார்தானப்பா. அவங்கள எப்படியாவது தூர இடங்களுக்குப் படிப்பிக்கப் போடாமல் பார்த்துக் கொள்றதுக்காகத்தானே அந்தக் கதிரைகளிலே குந்திக் கொண்டிருக்கினம்..! அதெல்லாம் நடக்கிற காரியமில்ல.. சும்மா அதை நினைச்சு நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளாதீங்கப்பா!'


'இல்ல செல்லம், அவங்களாத் தூக்கித் தொலைக்குப் போட்டுக் கரைச்சல் தரமுன்னம் நானே கொஞ்சம் தூரமுள்ளதாக ஒரு வசதியான ஸ்கூலுக்கு மாற்றம் கெட்டு எடுத்திட்டால் நல்லதப்பா...! பிறகு அவையள் கண்டுபிடிச்சி அள்ளித் தூரத் தொலைய வீசேக்க தலையைச் சொறிஞ்சுகொண்டு நிக்கேலாது கண்டியே?'


'சரி, சரி. நீங்கள் சரியான  முன்ஜாக்கிரதை முத்தண்ணாதானே..? என்னென்டாலும் செய்யுங்கோ...ஆனால் எனக்கெண்டா நீங்க சும்மா கிடக்கிற சங்கை...' என்று தொடங்கி ஏதோ முனகிவிட்டுத் திரும்பித் தூங்கி விட்டாள்.


இது நடந்து இரண்டாவது வாரம் கழிந்ததும் நான் விண்ணப்பித்தபடியே இடமாற்றம் கிடைத்தது. புதிய பாடசாலை நகருக்கு வெளியே ஐந்து கிலோமீற்றர் தொலைவிலே பிரதான நெடுஞ்சாலையில் இருந்தது. நானும் புதிய பாடசாலைக்கு வந்து சேர ஆசிரியர் இடமாற்றத் திட்டமும் அமுலுக்கு வந்திருந்தது. புதிதாகக் கடமையேற்றிருந்த கண்டிப்பான  மேலதிகாரி ஒருவர் அதிரடி நடவடிக்கை எடுத்து, வேறு பாடசாலையென்றால் என்னவென்றே அறியாமல் கிடந்த பழம் பெருச்சாளிகளையெல்லாம் ஓடஓட விரட்டிக் கொண்டிருந்தார்.


'நல்லவேளை தப்பித்தோம்!' என்ற புளகாங்கிதமும் செல்லம்மாவின் கணிப்பு முதன்முதலாகப் பொய்யாய்ப் போன திருப்தியும் ஒன்றுசேர 'இப்ப என்னப்பா சொல்லுறீர்..எப்படி ஐயாவின் கணிப்பு?' என்று கொக்கரித்தேன். 'சரி, சரி ஓவராய்த் துள்ளாதீங்க! அதெல்லாம் எட்டு வருசத்துக்கு மேல் ஒரே பாடசாலையில இருந்தவைக்குத்தான் தூர இடங்களுக்கு டரான்ஸ்பர் தெரியுமா? நீங்க அஞ்சு வருசம்தானே இருந்த  நீங்க! அது தெரியாமல் அவசரப்பட்டுட்டீங்களப்பா! அதோட...' என்று இழுத்தாள்.


'அதோட என்னப்பா?'


'இல்ல இன்னம் கொஞ்சம் காலம் பொறுமையாக இருந்திருந்தா இப்ப நம்ம ஊர் நிலைமைகள் க்ளியராகிக் கொண்டு இருக்கிறதால இருந்த ஸ்கூல்ல இருந்தே நேரடியாக மாற்றம் எடுத்திருக்காலாம். சரி, விதி யாரை விட்டது. இப்ப போன இடத்தில என்ன தொல்லைகள் காத்திருக்குதோ?' என்றாள், சலிப்புடன்.


அவள் கூறிய தொல்லைகள் வந்த சேர அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. ஒருமாத காலத்துக்குள் எங்கள் பழைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றுவிட அவரது இடத்திற்கு புதியவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டார். 'எல்லாமே ஒரளவு பழக்கமாகிக் கொண்டிருக்கையில் இப்படியாகிவிட்டதே' என்று சங்கடம் உண்டானது எனக்கு. இனி புதியவரோடு முதலில் இருந்து பழகியாக வேண்டுமே?


புதிய அதிபர் பதவியேற்ற அன்றே ஆள் கொஞ்சம் வில்லங்கமானவர்தான் என்பது விளங்கி விட்டது எனக்கு. ஆசிரியர் கூட்டத்தில் அவர் ஆற்றிய முதலாவது உரையிலிருந்த அகந்தையும் பிறரைத் துச்சமாக நினைக்கும் குணமும் என்னை வேதனைப் படுத்தியதுடன் 'இருந்து இருந்து கடைசியில் தப்பான இடத்திற்குத்தான் வந்து விட்டோமோ?' என்ற சஞ்சலத்தையும் உண்டு பண்ணியது.


அன்று பாடசாலை முடிவடைந்ததும் சோர்வாக வீடு வந்து சேர்ந்தேன். 


மாலையில் செல்லம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாக, "இஞ்சருங்கோப்பா, கேட்டீங்களே...உங்களுக்குத்தான்  ஒரு நியூஸ்!' என்று உற்சாகமாய் ஆரம்பித்தவள் எனது முகத்தைப் பார்த்துவிட்டு, 'என்னப்பா ஒரு மாதிரி இருக்கிறீங்கள்..சுகமில்லையா? சாப்பிட்டீங்களா?' என்றாள், பதறிப்போய்.
'சேச்சே! அதெல்லலாம் ஒண்டுமில்ல. இந்த புதுசா வந்த ஆள்தான். கதை பேச்சு எல்லாம் அவ்வளவு சரியில்லை. ஆள் கொஞ்சம் சண்டித்தனம் போலக் கிடக்கப்பா!' என்றேன் பரிதாபமாக.


'ஆர்...? உங்கட புது அதிபரே? அந்த நியூஸ்தானப்பா இன்றைக்கு எங்கட ஒபிஸ் முழுக்கக் கதை. ஆள் கரைச்சல் பிடிச்சவர்தானாம். அவர் உங்கட ஸ்கூலுக்கு வர முதல் இருந்த இடத்தில பண்ணின அழிச்சாட்டியம் தாங்கேலாமத்தான் அந்த ஊர்ச்சனமெல்லாம் ஒண்டு கூடி அடிக்காத குறையாகத் துரத்தி விட்டவையாம். இப்ப யார் யார்டவோ காலைக் கையப் பிடிச்சுத்தான் உங்கட ஸ்கூலுக்கு வந்திருக்கிறாராம்..என்று கதைச்சவங்கள்!'


'இதென்ன செல்லம், நீ வேற பயப்படுத்திறீர். ஏற்கனவே அது விசயமாத்தான் நானே யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.'


'அட! அவர் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் உங்களுக்கென்னவாம்...? நீங்களென்ன உந்த தமிழ்ப்படத்து ஹீரோ கணக்காத்  தட்டிக்கேக்கவா போறீங்க..? வீட்டுக்குள்ள வந்து, 'என்னை அடி' எண்டு நிக்கிற பாம்பையே அடிக்காமல் பார்த்துக் கொண்டு சும்மா நிக்கிற ஆள் நீங்க. நீங்களும் உங்க வேலையும் எண்டு பேசாம இருக்கிறதுக்குச் சொல்லியா தரவேணும் உங்களுக்கு?' அவளது நையாண்டி புரிந்தாலும் அந்தப்பேச்சு சிறிது ஆறுதலைத் தந்தது.

***

புதிய அதிபரின் நிருவாகத்தின் கீழ் எப்படியோ ஓரிரு மாதங்கள் கடந்திருந்தன. அவரது தான்தோன்றித்தனமான போக்குகளாலும் முடிவுகளாலும் ஆசிரியர்கள் பலருடன் சிறுசிறு உரசல்கள் எழுந்தன. பலர் விட்டுக் கொடுத்தும் சிலர் தட்டிக்கேட்கவும் செய்யலானார்கள். குறிப்பாக பாடசாலை நிதிவிடயங்களில் பல சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுந்தன. அதிபர் தனது நலன்களுக்கு மட்டுமே ஒத்தாசையாக இருக்கும் ஆசிரியர்கள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு நிதி மோசடிகளிலே இறங்கியிருப்பதாக உள்ளுரிலே பரவலாக கதை அடிபடலாயிற்று. இதனால் நிலைமை சற்றுத் தீவிரமாகவும் ஆரம்பித்திருந்தது.



இந்த விவகாரங்களில் எல்லாம் பட்டுக் கொள்ளாமல் தாமரை இலைத் தண்ணீர்த்துளியாக நானுன்டு எனது வேலைகளுண்டு என்று இருந்து வந்ததால் அதிபரோடு எதுவித உரசல்களுமில்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தேன். இதனால்  'கழுவுற மீன்ல நழுவுற மீன்' என்று எனக்கு ஒரு பட்டப் பெயரும் சக ஆசிரியர்களுக்குள்ளே புழங்கியது.


இருந்தாலும் அதிபரின் நாகரீகமற்ற அணுகுமுறைகள், கையாடல்கள், 'அரசியல்வாதிகளின் செல்வாக்கினால் எவரையும் எதையும் சமாளித்து விடலாம்' என்ற அசட்டுத்துணிவு ஆகிய அவரது குணங்கள் மீது காட்டமான விமர்சனமிருக்கத்தான் செய்தது. ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் வெறுத்தபடி இயங்கியதுதான் இத்தனை காலமும் அந்தப் பாடசாலையில் எதுவிதப் பிரச்சினையுமின்றித் தப்பிப் பிழைத்து வந்ததன் இரகசியச் சூத்திரமாக இருந்தது.


ஆனாலும் எனக்குரிய வில்லங்கம் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொருட்காட்சிக் கொண்டாட்டத்தின் வடிவிலே காத்திருந்தது. மிகவும் கோலாகலமாக நடந்தேறிய அந்தக் கண்காட்சியின் நிகழ்வுகளை டிஜிட்டல் காமிராவில் படமெடுத்து கணனியில் ஆவணப்படுத்துகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். எனது உயர்தர வகுப்பு மாணவர்களை வைத்து திறமையாகச் செய்து முடிந்திருந்தேன். குறிப்பாக அதிபரையும் அவரது துதிபாடிகளையும் மிகவும் அழகாக எடுத்திருப்பதாக அதிருப்திக் குழுவினரின் கேலிப்பேச்சுகள் அதற்குரிய பக்கவிளைவாகக் கிடைத்தது எனக்கு.


***


ரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிலே ஓய்வாகப் படுத்திருந்தேன்.


தனது அம்மாவுக்குச் சுகமில்லை என்று முதல்நாள் மாலை பஸ்ஸில் ஊருக்குச் சென்றிருந்தாள்,  செல்லம்மா.  அவள் இன்று மாலைதான் திரும்புவதாகச் சொல்லியிருந்தாள். நேரத்துக்கு வந்து விடுவாளா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் சிணுங்கியது. மறுமுனையில் அதிபரின் குரல். பாடசாலைத் தொலைபேசியில் இருந்து  தன்னை உடனே வந்து சந்திக்குமாறு பதற்றமான குரலில் அழைத்தார். உடனடியாக வீட்டைப் பூட்டிக் கொண்டு பாடசாலையை நோக்கி விரைந்தேன்.

ஒரு விடுமுறை நாளுக்கேயுரிய வெறிச்சோடலுடன் இருந்தது பாடசாலை.
சிற்றூழியன் பார்த்திபன் மட்டும் வெளியில் நின்றிருக்க அதிபரின் அறை திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன். அதிபர் தனியாகத்தானிருந்தார்.

'வணக்கம் சேர்!'

'வாங்க, மகேஸ்வரன்..இப்படி வந்து இருங்க!'

நான் இருக்கவில்லை, ' என்ன விஷயம் சேர், அவசரம் என்றீங்க!'

'முதல்ல இருங்களேன்.. சொல்றேன்' என்றுவிட்டு சிறிது நேரம் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு ஏதோ முடிவுக்கு வந்தவராக, 'மகேஸ்வரன், உங்களுக்கு இங்கருந்து முழுசாக ஊர்போய்ச்சேர விருப்பமில்லையா?' என்று கேட்டார். முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.

எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. 'எனக்கு விளங்கேயில்ல சேர், நீங்க சொல்றது!'

'இஞ்ச பாருங்க! மகேஸ்வரன் சும்மா ஒண்ணும் தெரியாத பபா மாதிரி நடிக்க வேணாம் சரியா? நீங்க இதுவரைக்கும் எனக்குக் கரைச்சல் தராத ஆள்தான். ஆனா இப்ப நடந்திருக்கிற விஷயம் அப்படியில்ல. இங்க கொஞ்சப் பேர் எனக்கு எதிராக சும்மா அதை இதையெல்லாம் சொல்லிக் கொண்டு அலையிறாங்கள் தெரியுமா இல்லையா?


'அது ஒரளவு தெரியும்தான்! ஆனா இப்ப என்ன பிரச்சினை அதை முதல்ல..'


'நம்ம ஸ்கூல் கொம்ப்யூட்டர்ல இருந்த ஒரு முக்கியமான' படம் ஒண்டு எனக்கு எதிராக ஓடித்திரியிற ஆக்கள்ட கைக்குப்போய்ச் சேர்ந்திருக்கு... அது உங்களுக்குத் தெரியாம போயிருக்க இயலாது. ஏனென்டா நடந்த பொருட்காட்சி விழாவுல போட்டோ எடுக்கிறதுக்கெல்லாம் நீங்கதானே பொறுப்பாயிருந்தீங்க!


'பொருட்காட்சியில் எடுத்த போட்டோக்களில என்ன பிரச்சினை இருக்கப் போகுது சேர், அதில வெறும் ஆட்களும் பொருட்களும்தானெ இருக்கு..?' என்றேன், புரியாமல்.


'ஹலோ! என்ன ஜோக்கடிக்கிறதா நினைப்பா? அது..அது நான் சம்பந்தப்பட்ட படம். உங்களைப் பொருட்காட்சியில போட்டோ எடுத்துத் தரச் சொன்னால் அந்த நேரம் ஸ்கூல் கெண்டீன், கிச்சன் ஸ்டோருக்குள்ளயெல்லாம் ஏன்டாப்பா கெமராவைத் தூக்கிட்டு  அலைஞ்சனீங்கள்? ஆங்!' என்று அவர் சூடாகத் தொடங்கிய போது அவரது செல்போன் ஒலித்தது. உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறி மைதானத்தினுள் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.


எனக்குத் தலை வலித்தது. 'இது என்ன புது வம்பு?' என்று நான் யோசித்தக் கொண்டிருந்த போது அதுவரையில்  வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபன் சுற்றிவரப் பார்த்துவிட்டு மெல்ல என்னருகே வந்தான்.


'என்னடா பார்த்தீ! இதெல்லாம்?'


'ஸேர், நான் சொன்னதெண்டு சொல்லிராதீங்க! இவர் ஸ்கூல் கிச்சன் ஸ்டோர்ல இருந்து மதிய உணவு அரிசி மூடைகளை அவர்ர வேனில ஏற்றிக் கொண்டு நின்றதை நீங்க அன்றைக்கு வச்சிருந்த கெமராவில போட்டோ எடுத்திட்டீங்களாம். பொருட்காட்சி போட்டோவோட சேர்ந்து கொம்ப்யூட்டர்ல இருந்த அந்த போட்டோவையும் கொண்டு போயிட்டாங்களாம். அதுதான் அப்படித் துள்ளுறார். கவனம் ஸேர்!' என்று கிசுகிசுத்து விலகினான்.



இப்போதுதான் புரிந்தது எனக்கு. அன்றைக்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்து எல்லோரும் கலைந்து போன பின்பு அவரது வேன கிச்சன் ஸ்டோர் பக்கமாக நின்றது இதற்காகத்தானா? அதைப் படம் பிடித்தது யார்? ஏஎல் பையன்கள்தான் கெமராவை சார்ஜ் பண்ணவென்று இடையில் எடுத்துப் போனான்கள். ஒருவேளை...


'என்ன மகேஸ்வரன் ஸேர். இப்ப என்ன செய்யப்போறீங்க..? இங்க இருந்த படம் எப்படியோ அவங்கள்ற கைக்குப் போயிட்டுது. இனி அது எத்தனையோ கொப்பி போட்டிருப்பான்கள். இனி அதை வாங்கிப் பிரயோசனமில்ல.. ஆனா நீங்க நினைச்சா என்னைக் காப்பாத்தலாம்..' என்றபடி மீண்டும் உள்ளே வந்தார், அதிபர்


'சேர், அந்தக் கோணேசப் பெருமான் மேல சத்தியமாக, நான் எந்த வித்தியாசமான போட்டோவையும் எடுக்கவேயில்ல! இது எனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரச்சினை. நீங்க இப்படி மிரட்டுறது நியாயமே இல்ல! தெரியுமா? என்று நான் சூடானேன். கோபத்தில் என் விரல்கள் நடுங்கின.


'சரி, சரி இப்ப ஏன் வீணாக டென்ஷனாகிறீங்க?' என்று என்னைச் சமாதானப் படுத்துவது போல நெருங்கி வந்து தோளைத் தொட்டு, 'வாங்க மகேஸ்வரன் அப்படியே க்ரவுண்ட் வரைக்கும் போய் விளக்கமாய்ப் பேசலாம். பாரத்திபன்! ஒபிஸைப் பார்த்துக் கொள்! சேரோட ஒருக்கா கதைச்சிட்டு வாறேன்' என்றவாறு சற்றுத் தூரத்திலிருந்த நெருப்புவாகை மரத்தின் கீழே அழைத்துச் சென்றார்.


நான் திரும்பிப் பார்த்தபோது வாசலில் நின்றிருந்த பார்த்திபன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

***

னக்கு ஒரே யோசனையாக இருந்தது.

செல்லம்மா வேறு அம்மாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் இன்னும் இரண்டுநாள் கழித்து வருவதாக போனில் செய்தி அனுப்பியிருந்தாள். அவள் கூட இருந்தாலாவது சின்ன ஆறுதலாக இருந்திருக்கும்.


நேற்றுக் காலையில் அதிபரோடு பேசிய விடயம் தலையிடி தந்து கொண்டிருந்தது. நெருப்புவாகை மரத்தின் கீழ் அழைத்துச் சென்று அவர் கூறிய வார்த்தைகள் நெஞ்சிலே அமிலமாய் அரித்துக் கொண்டிருந்தது.


'மகேஸ்வரன், நீங்க ஒரு பட்டதாரி ஆசிரியர். புத்திசாலியும் கூட. இந்தக் காலத்துல இருக்கிற இடத்துக்கு ஏற்றமாதிரி நடந்து கொள்றதுதான் நல்லது. சரி, நான் உங்கள நம்புறன்...அந்தப் போட்டோவை யார் எடுத்தது கொடுத்தது எல்லாம் எனக்குத் தேவையில்ல. யாரைப் பிடிக்கலாமோ என்னவெல்லாம் செய்வீங்களோ தெரியாது. அந்தப் போட்டோவால எந்தப் பிரச்சினையும் ஏற்படாம நிப்பாட்டுறது உங்கட பொறுப்பு.  என்ன சொல்றீங்க?'


' நான் ஏன் சேர் இதுக்குப் பொறுப்ப நிக்க வேணும்? சம்பந்தமே இல்லாம என்னை ஏன் இதில மாட்டி விடுறீங்க..?'


'அப்படியா? சொல்றேன்' என்றுவிட்டு என்னைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தார்.


'போன ஏப்ரல் மாதம் ஏஎல் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பேராதனைப் பூங்காவுக்கு டுவர் ஒன்று போய் வந்தீங்களல்லவா? அன்டைக்கு நீங்களும் பிள்ளைகளும் வந்த பஸ் இடையில பழுதாகி இங்க இரவு ரெண்டு மணிக்கு வந்தது..அந்த நடு இரவுல பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்ப ஏலாம ஸ்கூல்லயே தங்க வச்சீங்களே நினைவிருக்கா?'


'இருக்கு...ஆனா அது நான் உங்களுக்கிட்ட போன் பண்ணிக் கேட்டுட்டுத்தானே...அதுக்கென்ன இப்போ?'


'அதுக்கென்னவா...? அன்டைக்கு பிள்ளைகளோட நீங்களும்தானே தங்கினீங்க.. அன்றிரவு இருட்டில யாரோ ஒருவன் தப்பா நடக்க ட்ரை பண்ணினான் என்று ஒரு ஏஎல் பெட்டை பொலீஸ் வரைக்கும் போனது தெரியும்தானே? அவன் யாரெண்டு தெரியாம இன்னும் அந்தக் கேஸ் பெண்டிங்ல இருக்கு ஞாபகமிருக்கா?'


'ஓம், அந்தக் கேஸ் இன்னும் முடியல்லையா..சேர்?'


'அதை முடிச்சு வைக்கணுமா?'


'என்ன.. சொல்றீங்க சேர்?'


'இல்ல இருட்டில தப்பா நடந்த அந்த ஆள் நீங்கதானென்டு பொலீஸ்ல கேஸை முடிச்சு வைக்கணுமா மகேஸ்வரன்?'


எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது! அதற்குப் பின்பு அவர் கூறிய எதுவுமே என் காதிலே ஏறவில்லை. எப்போது விடைபெற்று எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.


 'கடவுளே எத்தனை கௌரவமான குடும்பம் என்னுடையது. கார்த்திகேசு மாஸ்டர் என்றால் ஊரே கையெடுத்துக் கும்பிடும் கண்ணியவானின் குடும்பத்திலே இப்படி ஒரு கேவலமான பழிவிழுந்து போனால் நான் என்ன செய்வேன்? இது பொய்யென்று ஓடியாடி நிரூபிக்கலாம் என்று வைத்தாலும் 'ஒருவேளை இவன் செய்திருப்பானோ?' என்று ஊரில் ஒருவன் நினைச்சுக் கேட்டுவிட்டான் என்றால் அதை எப்படி என் குடும்பம் தாங்கும்? ஐயோ! இப்ப நான் எவனிட்டப் போய் அந்தப் போட்டோவைப் பற்றிக் கேட்கிறது?'


எனக்குத் தலையெல்லாம் விறைக்கத் தொடங்கியது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தேன். எங்காவது வெளியே போனால் யாரிடமாவது மனம் விட்டுப் பேசினால் நல்லது.... இருக்கும் மண்டைச்சூடும் குறையும்  என்று தோன்றியது. முகத்தைக் கழுவலாம் என்று குளியலறைக்குச் சென்றேன். உச்சந்தலைக் கொதிப்பு கூடியது. சூடுபோகக் குளித்தாலென்ன என்று தோன்றவே ஷவர் குழாயைத் திறந்தேன். அதுவும் சூடாக வரவே என் மண்டைச் சூட்டுக்கு இது சரிவராது குளுகுளுவென்றிருக்கும் பின்புறத் தோட்டத்துக் கிணற்றுத் தண்ணீர்தான் சரி என்று கயிற்று வாளியை எடுத்துக்கொண்டு அங்கு போனேன்.



அது ஒரு பழைய கிணறு. யாருமே பயன்படுத்துவதில்லை என்பதால் கிணற்றடி முழுவதும் காட்டுச்செடிகள் பற்றிக் கிடந்தது. கயிற்று வாளியைக் கப்பியில் செருகி உள்ளே இறக்கிய போது இலேசாக மயக்கம் வருவது போல இருந்தது. தலை உச்சியில் தீப்பிடித்தது போலத் தகித்தது. எப்படியாவது வாளியை இறக்கித் தண்ணீரை அள்ளிக் கொதிக்கும் மண்டையில் ஊற்றிவிட கைகள் பரபரத்தன. விரல்கள் நடுங்கின.
இதோ..இதோ தண்ணீரை அள்ளியாயிற்று. தண்ணீருடன் வாளியை மேலே இழுக்கும் போது.. அடச்சே! கிணற்றின் உள்சுவரில் பரட்டையாய் வளர்ந்திருந்த ஆலங்கொடியில் மாட்டிக் கொண்டது வாளி! இப்போதுதானா இது நடக்க வேணும்..? தலை கொதித்து பிளந்துவிடும் போலிருக்க கொஞ்சம் கையால் எட்டி வாளியை எடுக்கலாம் என்று குனிந்ததுதான் தாமதம். தலைசுற்றிக் கொண்டு வந்து..ஆ..ஐயோ என்ன நடக்கிறது? காற்றில் மிதப்பது போல...தலைகீழாக... நான் எங்கே போகிறேன்...?


ஆஹா! என்ன சுகம்?


என் தலையிலே டன் கணக்கிலே பனிக்கட்டிகளைக் கொட்டியது யார்? எவ்வளவு இதமாக இருக்கிறது.. தலையெல்லாம் குளிர்ந்து.. ஓ! இதென்ன வானம் ஒரு வட்டத் துண்டாகத் தெரிகின்றது..? ஆலங்கொடியும் அதிலே சிக்கிய வாளியும் தலைக்கு மேலே உயரத்தில் தெரிகின்றதே...ஆ! அப்படியானால்.. நான் இருப்பது எங்கே..? கடவுளே! கிணற்றுக்குள்ளேயா? ஆ! கை கால்களெல்லாம் விறைக்கின்றதே...ஆங்..ஆ..க்..ஹ்! மூச்சு..மூச்சு..ஆங்க்! ஆ!'

***


மோட்டுவட்டைத் திடலுக்கு வலப்புறமிருக்கும் சுடுகாட்டில் இறுதியாகச் செய்துமுடிக்க வேண்டிய அத்தனை சடங்குகளும் ஒன்றுவிடாமல் நடந்தேறின. முருகேசு மாமாவைக் கைத்தாங்கலாகச் சிலபேர் கொண்டு வந்தார்கள். அழுது அழுது அவரால் நிற்கக்கூட முடியவில்லை. ஈரவேட்டியுடன் ஓட்டைப் பானைசுமந்து சுற்றிவந்தவரிடம் கையிலே தீவட்டியைக் கொடுத்தார்கள். அதைக் கையில் எடுத்தவர் உடைந்துபோய், 'ஐயோ! மங்களமக்கா! என்ட கையில தூக்கி வளர்த்த உன்ட மகனுக்கு என்ட கையாலயே கொள்ளி வைக்கிறனே! ஐயோ! பாரக்கா இந்த அநியாயத்த..!' என்று பெருங்குரலெடுத்துக் கூவினார்.



திடீரென அழுகையை நிறுத்திவிட்டு வெறிபிடித்தவர்போல கட்டைகளால் பாரமேற்றி உடலை மூடிவைத்திருந்த சாணி வரட்டிகளையெல்லாம் சடுதியாய்க் கலைத்து,   'டேய் மகேசு! என்ட தங்கமே மகேசு!' என்று என் முகத்தின் மீது விழுந்து கதறியழுதார், என்னை வளர்த்த பாசமுள்ள முருகேசு மாமா.



சிறிது நேரத்தின் பின்பு எல்லோரும் அங்கிருந்த அகன்றுவிட, முருகேசு மாமா வைத்த தீயிலே தன்னந் தனியாக நான் எரிந்து கொண்டிருந்தேன்.

***


-மூதூர் மொகமட் ராபி

(நன்றி:  ஜீவநதி  சித்திரை 2012)

No comments:

Post a Comment