Monday, April 9, 2012

நாட்டார் பாடல்கள்:











ட்டுக்கல்வி பெரும்பாலும் இல்லாத நாட்டுப்புற மக்களிடையே எழுதாக் கவிகளாகத் தொன்று தொட்டு வழங்கிவரும் பாடல்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. பாடல்கள் மட்டுமன்றிக் கதைகள், பழமொழிகள் போன்றனவும் உள்ளன. இவை எல்லாவற்றையும் ஒருசேரக் குறிப்பதற்கு ஆங்கிலத்தில் Folk lore எனும் பெயர் வழங்குகின்றது.


தமிழ் மொழியிலே இத்தகைய இலக்கியத்தைக் குறிப்பதற்கு நாட்டுப்பாடல்கள், நாடோடிப்பாடல்கள், கிராமியப்பாடல்கள், பாமரர் பாடல்கள், மக்கள் கவிதைகள் எழுதாக் கவிதைகள், வாய்மொழி இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம், நாட்டார் இலக்கியம், நாட்டிலக்கியம் என்பன போன்ற பெயர்கள் வழங்கி வருகின்றன.


பொதுவாக நோக்குமிடத்து இப்பாடல்கள் நாட்டுப்புறங்களில் வாழும் எழுத்தறிவில்லாத, பெயரறியாக் கவிஞர்களால் பாடப் பெறுபவை எனும் கருத்தே இப்பெயர்களில் இழையோடியிருப்பதைக் காணலாம். எழுத்தறிவு அதிகமில்லாத பாமர மக்களினால் பாடப்பெறுபவையாயினும் இவை இசை கலந்த இனிய பாடல்களாயும் கேட்போர் செவிக்கும் இதயத்துக்கும் இன்பமளிக்க வல்லனவாயும் உள்ளன. இதனாலேயே   இப்பாடல்களைக் 'கவிதைகள்'  என்றும் நாகரிக உலகம் ஏற்றுக்கொள்கின்றது.


தமிழில் உள்ள நாட்டுப்பாடல்களைத் தேடித் தொகுத்து வகைப்படுத்தி நூல்களாக வெளியிடுவதில் அண்மைக்காலமாக அறிஞர் பலர் முயன்று வந்துள்ளனர். இலங்கையிலே வட்டாரக்கல்விப் பரிசோதகராகக் கடமையாற்றியவாரான தி. சாதாசிவ ஐயர், இற்றைக்கு ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கிய  வசந்தன் கவிகள் எனும் நாட்டுப்பாடல்களைத் திரட்டி வெளியிட்டார். அவருக்குப்பின் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம், மட்டுநகர் எப். எக்ஸ். சி. நடராஜா, கலாநிதி சு. வித்தியானந்தன் போன்றோர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டனர்.


இலங்கை முஸ்லீம் மக்களிடையே வழங்கும் பாடல்களும் தொகுக்கப்பட வேண்டியுள்ளன. மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) என்னும் நூலுக்கு அதன் பதிப்பாசிரியர் எழுதிய ஆங்கில முன்னுரையிலே, முஸ்லீம் மக்களிடையே வழங்கி வரும் நாட்டுப்பாடல்கள் இன்னும் வளர்ச்சியடைந்து வருகின்றன என்றும் இவ்வளர்ச்சிக்கு முக்கியமாக முஸ்லீம் பெண்களே உதவுகின்றனர் என்றும், இப்பாடல்கள் பெரும்பாலும் காதல் பாடல்களாகவும் சிறுபான்மை உள்ளுர் நிகழ்ச்சிகள் பற்றியவையாயும் உள்ளன என்றும், மட்டக்களப்புப் பிரதேசத்தின் தென்பகுதியில் கரவாகுப்பற்று, அக்கரைப்பற்று கிராமங்களிலுள்ள முஸ்லீம் பெண்கள் இத்தகைய கவிகளை இயற்றுவதில் சிறந்து விளங்குகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார். முஸ்லீம் மக்களிடையே வழங்குகின்ற நாட்டுப்பாடல்களில் இஸ்லாமியக் கலாசாரத்தோடு தொடர்புடைய அரபுச்சொற்கள் வெவ்வேறு அளவுகளிலே கலந்திருப்பதையும் காணலாம்.

கீழ்வரும் நாட்டார் பாடலில்...

கிராமத்து இளைஞன் ஒருவனின் பாசாங்கில்லாத காதல் உணர்வின் யோக்கியத்தை அனுபவித்துப் பாருங்கள்:



'ஆசைக்கிளியே என்ர ஆசியத்து உம்மாவே
ஓசைக்குரலாலே – உங்க உம்மாவைக் கூப்பிடுகா!


கடலே நீ இரையாதே காற்றே நீ வீசாதே
நிலவே நீ எறியாதே – என்ர நீலவண்டுபோய்ச் சேருமட்டும்!


மாமி மகளே என்ர மருதங்கிளி வங்கிசமே
ஏலங் கிராம்பே உன்னை என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?


கைவிடுவேன் என்று எண்ணிக் கவலைப்படாதே கண்ணார்
அல்லாமேல் ஆணை – உன்னை அடையாட்டிக் காட்டுப்பள்ளி!


சீனத்துச் செப்பே – என்ர சிங்காரப் பூநிலவே
வானத்தைப்பார்த்து – மச்சி வாடுவது என்னத்திற்கோ?


ஓதிப்படிச்சி ஊர்புகழ வாழ்ந்தாலும்
ஏழைக்குச் செய்த தீங்கை அல்லா எள்ளளவும் ஏற்கமாட்டான்!


காவற்பரணில் நானும் கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சி வந்தென் காலூன்றக் கண்டேனே!

காசிதரட்டா மச்சி கதைத்திருக்க நான் வரட்டா
தூதுவரக் காட்டிடட்டா – இப்ப சொல்கிளியே உன்சம்மதத்தை!'




இதைப் படித்தபின்பு இன்று வரும் சினிமாக் காதல் பாடல்களின் வரிகளையும் கேட்டுப்பாருங்கள்.  வித்தியாசம் நிச்சயம் புரியும்.


நன்றி:  'நாட்டார் பாடல்கள்' - கல்வி வெளியீட்டுத் திணக்களம் (1981)

தொகுப்பு: மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment