நெஞ்சுரமிருக்கிறது தோழி!
இரக்கமற்றவளே
எழுதிக்கொள் இதனை..!
நான் ஓர் ஏழை
எனது பெயரோ அநாதை
எனது கண்களிலே
கண்ணீர் மட்டுமல்ல
இதயத்திலிருந்து
இரத்தமும்கூடத்தான் வற்றிவிட்டது
இருந்தாலும்
இரக்கத்தை எதிர்பார்த்து
இனியும் உன்னிடத்தில் நான்
இரந்திடப்போவதில்லை!
நீ விரும்பும்போது சூடிடவும்
வேண்டாதபோது வீசிவிடவும்
நான் ஒன்றும் உன்வீட்டு
முற்றத்து மல்லிகையல்ல!
ஆம்!
ஒரு கடினமான கற்பாறைமீது
முளைத்திருக்கும் முட்செடிபோல
என் வாழ்க்கை வரண்டது!
எனது கிளைகளிலே நீ
வாசனைப் பூக்களையோ
வசந்தகாலப் பறவைகளையோ
தயவுசெய்து தேடிவராதே!
ஒருதுளி நீருக்கே
என்வேர்கள் இங்கே
ஒரு ஜீவ மரணப்போராட்டம்
நடாத்திக் கொண்டிருக்கின்றது!
ஆனாலும்
நீ வந்து நீருற்ற வேண்டியதில்லை
ஏனெனில்-
கற்பாறைகளையே கசக்கிப்பிழிந்து
நீர்பருகும் நெஞ்சுரம்
என் வேர்களுக்கு
நிறையவே இருக்கிறது....!
-மூதூர் மொகமட் ராபி
நன்றி: வீரகேசரி 1990.03.11
No comments:
Post a Comment