Saturday, April 14, 2012

வதை ஒரு கதை!




பகதூரின் வேட்டை நாயும்

நமது முற்போக்குப் பெண்களும்!






மது நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண்கள் பலரிடம் எப்போது பார்த்தாலும் தங்களிடமிருக்கும் நகைகள் ஆடைகள் மற்றும் ஆடம்பர வீட்டுப் பொருட்களைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் போக்கை அல்லது தங்களிடம் இல்லாத ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போக்கை அவதானிக்கலாம்.


இத்தகையோரிடம், 'சரி, வசதியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு மனிதன் என்ற வகையில் நீங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் சுதந்திரமாக நடாத்தப்படுகின்றீர்களா?' என்று கேட்டுப் பாருங்கள்.


ஏதோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டு விட்டதுபோல நடந்து கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் ஆடம்பரங்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு தங்களின் வாழ்க்கையின் உண்மை நிலையை அறியாதவர்களாக செக்குமாடு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், குதிரை தன் முகத்தின் முன்னே தடியில் கட்டிவைத்திருக்கும் கரட் கிழங்கை துரத்தியோடுவது போல ஒன்று கிடைத்தால் மற்றொன்றுக்காக வாழ்க்கை முழுவதும் ஏங்கிக்கொண்டே செத்து மடிவார்கள்.


இத்தகைய மத்தியதரக் குடும்பத்துப் பெண்களில்  பலர் தமது பொழுதுபோக்குகளில் ஒன்றாக வாசிக்கும் பழக்கத்தை வைத்திருப்பதுண்டு. அவ்வாறு வாசிப்பவர்களிலும் கிடைப்பதையெல்லாம்  வாசிப்பவர்களும் இருக்கிறார்கள். மாறாக, தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும் இருக்கின்றார்கள். பெண்களிலே பொதுவாக அதிகமானோர் கவிதை மற்றும் புனை கதைகளிலே ஈடுபாடுள்ளவர்களாக இருப்பதுண்டு.  இவர்களிலே சிலர் வாசிப்பதோடு மட்டும் நிற்காமல் ஆக்கங்கள் பற்றிய தமது கருத்துக்களை ஊடகங்களுக்கோ அல்லது ஆக்கியவர்களுக்கோ தெரிவிக்கும் பழக்கமுள்ளவர்களாகவும் இருப்பர். இன்னும் சிலர் சுயமாக ஆக்கங்களை எழுதக்கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கின்றார்கள்.


தமது வாசிக்கும் பழக்கத்தால் ஏனைய பெண்களோடு ஒப்பிடும்போது இவர்கள் பல விடயங்களை ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பார்கள். பொதுவாக எந்தவொரு வியடமும் இவர்களுக்குப் புதிதான ஒன்றாக இருப்பதில்லை எனலாம். இந்தத் தகுதியே இவர்களை சமூகத்தில் உள்ள மூளைசாலிகளுடன் விரும்பியோ தற்செயலாகவோ இணைக்கின்றது எனலாம்.


இதன் விளைவாக பல முற்போக்கான கருத்துக்களைப் பற்றியும் அறியும் வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைக்கின்றது. இந்தக் கருத்துக்களின் விளைவாக ஒருநிலையில் தமது வாழ்வியல் நிலையை சுய விசாரணைக்கு உள்ளாக்கும் கட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பெண்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. இதனால் அதுவரை ஒரு பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து தான் பார்த்த வாழ்வியல் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாகின்றார்கள்.



பொதுவாக நமது சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் ஆளுமையையும் தீர்மானிக்கும் பல்வேறுபட்ட காரணிகளில் அவன் சார்ந்துள்ள மத நம்பிக்கைகளினதும்  சம்பிரதாயங்களினதும் பங்கு அளப்பரியது. இதனால் முற்போக்கான கருத்துகளை  உள்வாங்கும்போது அதுவரையிலே குடும்ப ரீதியாகவும் சமுதாயப்பிரிவுகள் ரீதியாகவும் சிறுவயது முதற்கொண்டு ஆழப்பதிக்கப்பட்ட பல அறிவியல் தர்க்க ரீதியில் ஆதாரமற்றதும் வெறும் நம்பிக்கை சார்ந்ததுமான கருத்தியல்களோடு முரண்பட வேண்டிய தேவையேற்படுகின்றது. இன்னும் கூறினால் மேற்கூறிய ஆதாரமற்ற கருத்தியல்களைத் தாண்டித்தான்தான் ஒருவர் தனது வாழ்வு பற்றி புதிய தேடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.


இது ஒரு ஆணுக்கே பலத்த சவாலான ஒன்றாக இருக்கும்போது ஒரு பெண்ணின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமானதல்ல. ஒரு ஆண் தனது சமூகத்தின் தடைகளைத்தாண்டி முற்போக்குக் கொள்கையுடையவனாகத் தன்னை வெளிக்காட்டும்போது அவன் சார்ந்த சமூகத்தின் விமர்சனம் அவனது கருத்தின் மீதுதான் முதலில் வைக்கப்படும். ஆனால், ஒரு பெண் அவ்வாறு துணிகையில் இனங்காணப்பட்டால் வைக்கப்படும் முதல் விமர்சனம் அவளது நடத்தை மீதாகத்தான் இருக்கும். இது நமது பெண்களைப் பொறுத்தவரை எத்தனை அபாயமானது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.


இதனால்தான் நமது சமூகத்திலே வாழும் சிந்தனைத் திறனுள்ள பெண்கள் கூட தமது எண்ணங்களை வெளிப்படுத்த  முன்வருவதில்லை. மீறி வெளிப்படுத்தினாலும் கூட சில வரம்புகளைத் தாண்டுவதுமில்லை.
ஆனால் ஒரு பெண் தனது வாழ்வில் ஒரு முறையாவது தான் சார்ந்திருக்கும் நம்பிக்கை சார்ந்த கருத்தியல்களினால் திணிக்கப்பட்ட விடயங்களுக்கு சிறு எதிர்ப்பையாவது காட்டி இருப்பாள் என்பதுதான் இதிலுள்ள முரண்நகை. 



குறைந்தபட்சம் பாடசாலைப் பருவத்தில் சக வயது மாணவர்களின் கேலிப்பேச்சுகளுக்கோ ஒதுக்கல்களுக்கோ ஆளாகும்போது அதிலுள்ள ஆண் - பெண் சமத்துவமின்மையை எதிர்த்து நிச்சயம் கேள்வி எழுப்பியிருப்பாள்.
மாணவப் பருவத்தில் பாடசாலையிலும் வீட்டிலும் தீரமாக எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு பெண் பின்பு மொத்த சமூக அமைப்பும் தன்னையும் தன்போன்ற பெண்களையும் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்துவதை அறிந்து வேறுவழியின்றி படிப்படியாக எதிர்ப்பை கைவிட்டு சரணாகதி அடைகின்றாள்.



பின்பு திருமணமாகும் வரை, தான் குடும்பத்தினருக்கு ஒரு பெரும் சுமை போன்று மறைமுகமாகவேனும் உணர்த்தப்படுகின்றாள். திருமணமானதும் கணவன் மற்றும் குழந்தைகளின் பணிவிடை பராமரிப்பு என்ற சிறுவட்டத்துக்குள் சிக்கிச் சுழன்று (சிக்க வைக்கப்பட்டு)  படிப்பதற்கோ அறிவுத்தேடலுக்கான வாசித்தலுக்கோ வழியின்றி வேலைகளுக்குள்ளேயே தன்னைத் தொலைத்து விடுகின்றாள்.


வேலைக்குச் செல்லும் பெண்களை எடுத்துக் கொண்டால் ஒரு விதத்தில் அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைத்தாலும் அவர்களை விடுவிப்பதாகக் கூறமுடியாது. வேலைக்குச் சென்று உழைத்துச் சம்பாதிக்கும் பெண் என்பதற்காக வீட்டு வேலைகளிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைப்பதில்லை. மாறாக இரண்டையும் செய்ய வேண்டிய இரட்டைச் சுமையாகி வேறு வடிவத்தில் அவளை விலங்கிடுகின்றது என்றேதான் சொல்ல வேண்டும்.


ஆக மொத்தம் இந்த படித்த மத்தியதரக் குடும்பப் பெண்கள் வாசிப்பறிவால் கிடைக்கும் முற்போக்குக் கருத்துகளின் முன்னோக்கிய உந்துதலுக்கும்  பாரம்பரிய மத சம்பிரதாயங்களின் பின்னோக்கிய இழுப்புக்கும் இடையிலான விளையுள் திசையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.



"சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பவர்களைத் தவிர மற்றவர்கள் கீழேயுள்ள கதையை வாசிக்க வேண்டாம்!  வாசிக்கவே வேண்டாம்!!




சிறுவயதிலே தமிழ் பாடப்புத்தகம் ஒன்றிலே நான் படித்த கதை ஒன்றிருக்கின்றது. பகதூர் எனும் ஒரு பணக்கார வேட்டைக்காரர் காட்டிற்குச் சென்று தனது பங்களாவிலே தங்கியிருக்கின்றார். ஒரு பகல் பொழுதில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரது வேட்டை நாய் தனியாகக் காட்டுக்குள் சென்று விடுகின்றது. அந்த அடர்ந்த கானகத்தின் நடுவிலே காட்டு நாய் ஒன்றைக் கண்டு விடுகின்றது.  இருவரும் அறிமுகமாகி உரையாடத் தொடங்குகின்றனர்.


இருவரும் தத்தமது வாழ்வைப் பற்றி பேசிக்கொள்கின்றனர். வேட்டை நாய் தனது எஜமானர் பகதூரின் வீட்டிலே கிடைக்கும் சிறந்த உணவு மற்றும் வசதியான தங்குமிடம் உட்பட அனைத்து சொகுசுகளையும் ஒன்றும் விடாமல் காட்டு நாய்க்கு எடுத்துக் கூறுகின்றது.


வேட்டைநாய் சொல்வதையெல்லாம் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த காட்டு நாய்க்கோ ஆச்சரியம் தாளவில்லை. காட்டிலே வெயிலிலும் மழையிலும் அலைந்து உணவுக்கும் நீருக்கும் போராடி வாழும் தனது வாழ்வை நினைத்து கவலையுறுகின்றது.  தானும் எஜமான் பகதூரின் வீட்டிலே வந்திருக்க முடியுமா? என வினவுகின்றது. அதற்கு உதவுவதாக வேட்டை நாயும் ஒப்புக்கொள்ளவே இருவரும்  சேர்ந்து பகதூரின் காட்டு பங்களாவை நோக்கி செல்கின்றனர். 


பங்களாவை நெருங்கும் தறுவாயில் வேட்டை நாயின் கழுத்திலிருந்த வளையம் போன்ற ஒரு தழும்பை  தற்செயலாக பார்த்து விடுகின்றது, அந்தக் காட்டுநாய். அதுபற்றி வினவியதும், வேட்டை இல்லாத நாட்களில் பகல் முழுவதும் தன்னை ஒரு பெறுமதியான வெள்ளிச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதைப்பற்றி பெருமை பொங்க விபரிக்கின்றது வேட்டை நாய்.


அதனைக் கேட்டதும் சட்டென நின்று விடுகின்றது காட்டு நாய். காரணம் கேட்கும் வேட்டை நாயை ஏளனமாய் பார்த்து, ' தூ அற்பனே! நான் காட்டிலே இருந்தாலும் கஷ்டமான வாழ்வை வாழ்ந்தாலும் சுதந்திரமாக இருக்கின்றேன். ஆனால் நீயோ வேளைக்குச் சாப்பாடு சொகுசுப் படுக்கை என்று வாழ்ந்தாலும் வெள்ளிச் சங்கிலியில் கட்டுண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். நான் வாழும் காட்டிலே எங்கு வேண்டுமானாலும் இஷ்டம்போல சென்று வருவேன். நீயோ அவர்கள் அவிழ்த்து விட்டால்தான் உலாவலாம்.  உன்னைப்போல என்னால் சொகுசாய் வாழ்வதற்காக சுதந்திரமில்லாமல் இருக்க முடியாது' என்றுவிட்டு காட்டுக்குள் திரும்பி ஓடிவிடுகின்றது.


-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment