Saturday, April 7, 2012

Handsome Idiots:அழகிய முட்டாள்கள் !

அல்லது

அடுப்பூதும் புல்லாங்குழல்கள்!
ன்றைய காலகட்டத்தை தகவல்-தொழினுட்ப யுகம் என்று கூறிப் பெருமைப்படுவதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இத்தனை நவீன தொடர்பாடல் சாதனங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் உண்மையில் பரந்துபட்ட விரிவான அறிவைக் கொண்டிருக்கின்றார்களா அல்லது அவற்றை அறிந்த கொள்ளுகின்ற ஆர்வத்தையாவது வைத்திருக்கிறார்களா என்று வினவினால் எப்படி பதில்  கிடைக்கும்   தெரியுமா?

குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் கேட்டுப் பாருங்களேன். ஒரு பேச்சுக்கு 'ஜெனிவா உடன்படிக்கை என்றால் தெரியுமா?' எனக்கேட்டால் எத்தனை பேருக்குச் சரியாகப் பதில் சொல்லத் தெரியும். அவ்வளவு ஏன் 'நமது நாட்டின் பிரதமரைத் தெரியுமா?' என்றால் 'ராஜபக்ச தானே?' என்று நம்மிடமே திருப்பிக் கேட்கும் பாடசாலை மாணவர்களே இருக்கின்றார்கள். அவர் நமது ஜனாதிபதி என்றால், 'ஓ! ராஜபக்ச என்று தெரியும் ஆனால் அவர் ஜனாதிபதியா பிரதமரா என்றுதான் தெரியாது' என்று அசடு வழிந்தவர்கள் கூட இருக்கின்றார்கள்.


இத்தனைக்கும் இவர்களில் பலர் அதி நவீன கைத்தொலைபேசி முதல் இணையத்தளம் உட்பட இன்றைய பிந்திய தொடர்பு சாதனங்களையெல்லாம் பயன்படுத்துபவர்கள்தான். அவ்வாறிருந்தும் இந்த காதுகளில் இயர்போன் தொங்கவிட்டபடி அலையும் இளைஞர்களது உலக அறிவு இலத்திரனியல் சாதனங்களே இல்லாதிருந்த காலங்களிலே வெறும் அச்சு ஊடகங்களைப் படித்த தலைமுறையினரின் உலக அறிவைவிடக் குறைவாக இருக்கின்றது.

இலத்திரனியல் சாதனங்களின் நடமாடும் தொங்குதளமாக  அலையும் இன்றைய இளைஞன் ஒருவனால் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கிரிக்கட் போட்டியொன்றைச் சொல்லக் கூடியளவுக்கு அதே வாரம் நடைபெறப்போகும் வானியல் அதிசயமொன்றைப் பற்றியோ அரசியல் மாற்றமொன்றைப் பற்றியோ  சொல்ல முடிவதில்லை. இது ஏன் என்று எப்போதாவது யோசித்துப் பார்;த்திருக்கின்றீர்களா?

இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் இப்போதிருக்கும் நவீன சாதனங்களையெல்லாம் தங்களது அறிவை விருத்தி செய்வதற்குப் பயன்படுத்துவதைவிட பணம் சம்பாதிப்பதற்கும் பொழுதுபோக்குவதற்குமே பெரிதும் பயன்படுத்துகின்றார்கள். மட்டுமன்றி,தாங்கள் அப்படியிருப்பது பற்றிய ஒரு குற்றவுணர்வு கூட அவர்களிடம் இல்லாதிருக்கின்றது. அதை ஒரு குறைபாடாகத்தானும் நினைப்பதில்லை. மாறாக அதை தங்களிடமுள்ள ஒரு தகுதியாக நினைக்கும் நச்சுப்போக்கு மெல்ல வளர்ந்து வருகின்றது.


உதாரணமாக தொலைக்காட்சியில் செய்திகள் வரும்போது சேனலைப் பட்டென்று மாற்றிவிட்டு, 'ஒரே போரிங் யா!' என்பது இப்போது பேஷன் போலாகி விட்டது.  இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த எந்தவொரு தலைமுறையினருக்கும் வாய்த்திராத அறிவுச் சமுத்திரம் இணையத்தில்கம்ப்யூட்டர் முன்னே பரந்து கிடக்கின்றது. ஆனால் அதைத் தேடுவதை விட்டு பாலியல் இயக்கங்களைத் தேடுவதிலும்  பேஸ்புக் போன்ற சமூகத்தளங்களில் அரட்டையடித்துக் கொண்டிருப்பதிலும்தானே அதிக பொழுதைச் செலவிடுகின்றார்கள்.


அடுத்து இத்தகையோரின் மொழிப் பயன்பாடு. இவர்கள் பேச முயலும் தமிழ்  இன்னுமொரு அதிசயம்.' நாங்கள் ஏதோ வேற்று நாட்டில் ஆங்கிலத்தில்தான் பிறந்து வளர்ந்தவர்கள் போலவும் இங்கே வந்து உங்கள் தமிழைப் பேச வேண்டியிருப்பதால் போனால் போகிறது என்று பேசுகின்றோம் என்பது போல வேண்டுமென்றே கொச்சையாக 'டமில்' பேசுவார்கள். தமிழில் ஒருகடிதம் கூட சரிவர எழுதத் தெரியாமல் இருப்பார்கள். கேட்டால், 'போர் யா!' தான்.

சரி இவர்கள் ஸ்டைல் காட்டும்ஆங்கிலத்தில் இவர்களது புலமை எப்படி என்று பார்த்தால்..அதுவும் கிழிந்து கட்டிய தோரணம்தான். 'யா! யா! யெஸ் யெஸ் நோ' இங்லீஷ்தான்! போனில் smsஒட்டை இங்லீஷ்தான் . அதுவும் எப்படி தெரியுமா?

“Hi machchan! 2maro naan vara maaten. you come ok?”
இப்போது கூறுங்கள், இப்படியானவர்களைப் பற்றிய இந்தப் பத்திக்கு நான் மேலே வைத்திருக்கும் தலைப்புச் சரியானதுதானே?

-Mutur Mohd. Rafi

No comments:

Post a Comment