Monday, January 23, 2012

ஒரு வரலாற்றுத் தொடர்கதை:







இறங்குதுறை புளிமரம்




அத்தியாயம் 1









'ராபர்ட்! ராபர்ட்! மேலே ஓடி வா!'


ஸ்டீபனின் கூக்குரல் கேட்டு கண்விழித்தேன். 'நாம்  வந்து சேர்ந்து விட்டோம்! ஹோ....!'


அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு கப்பலின் மேல்தளத்துக்கு ஓடிவந்தேன். ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும் ஸ்டீபனைத் தள்ளி விட்டு கண்களைச் சுருக்கியபடி கடலை உற்று நோக்கினேன். செம்பிழம்பாய் தகிக்கும் இளஞ்சூரியனின் கீழே வெகுதூரத்திலே பச்சைக் கம்பளமாய் ஜொலித்தது கரையோரம். மகிழ்ச்சி மேலிட ஓடிவந்து ஸ்டீபனை இறுகக்கட்டிக் கொண்டேன்.



இங்கிலாந்தின் கரையில் மீண்டும்  நாங்கள் கால்பதித்த போது என்னை மீறி அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கப்பலை விட்டிறங்கியதும் தரையிலே முழந்தாளிட்டு அமர்ந்து விட்டேன். கடலோரப் பாறைகளின் முதுகிலே மோதிச்சிதறும் அலையோசைகளின் பின்னணி இசையில் கண்களை இறுகமூடிப் பிரார்த்தனை புரிந்தேன். மார்பிலே சிலுவை கீறி  தாய் மண்ணை முத்தமிட்டு எழுந்து நின்றேன்.



'பரிசுத்த பிதாவே, உமக்கு எனது நன்றிகள்!'



இதே துறைமுகத்தின் கரையிலிருந்து நாங்கள் புறப்பட்டுச் சென்ற அந்த ஜனவரி மாதத்தின் காலைப்பொழுதை எனக்கு நன்றாக ஞாபகமிருந்தது.  அதை இன்று தெரியும் துறைமுகத்துடன் பொருத்திப் பார்க்க முயன்று  தோற்றுப் போனேன். பூமிப்பந்தின் உச்சியிலே பரந்து கிடக்கும் ஆட்டிக் சமுத்திரத்தையும் ஆகாயத்தையும் தவிர இங்குள்ள எல்லாமே மாறிவிட்டதைப் போலிருந்தது. யாருமே தெரிந்த முகங்களாக இருக்கவில்லை. நான் வந்திறங்கிய கப்பலின் பாய்கள் சுருக்கிக் கட்டப்பட்டு முடிந்ததும் சரக்குகள் இறக்கும் பணி ஆரம்பமானது.


'ராபர்ட்! அதோ அந்தக் குதிரை வண்டி என் கிராமத்துக்குப் போகிறாதாம். நான் போய் வருகிறேன்டா!' என்று தழுதழுத்தவன் என்னைப் பிரிய மனமின்றி அப்படியே இறுகக்கட்டிக் கொண்டான். ' வா ராபர்ட்! என் கிராமத்துக்கே போய்விடலாம்.. போய்விட்டு வரலாம்!'

'இல்லை..ஸ்டீவன்..வேண்டாம். நீ போய் உன் ஆட்களைப் பார்த்துவிட்டு பிறகு வா! உன்னைப் போலவேதான்..எனக்கும் என்னுடைய உறவுகளைப் பார்க்கும் ஆவல் கொல்லுகிறதடா. போய்வா! ஆண்டவன் அருளட்டும் உனக்கு!' என்று வழியனுப்பி வைத்தேன்.

' உன்னை அடுத்த வாரம் வந்து சந்திக்கிறேன் ராபர்ட்!' என்று கத்திக் கொண்டே குதிரை வண்டியில் ஏறி மறைந்தான் அவன்.


அங்குமிங்குமாக ஊடாடித் திரியும் பரபரப்பான துறைமுக மனிதர்களுக்கிடையே எனது உறவுகள் யாராவது வந்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு முகத்தையும் ஆவலாகத் தேடின எனது விழிகள். யாரையுமே காணவில்லை. எப்படி வருவார்கள்.. நானென்ன கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்தை நேரிலே கண்டறிய இந்தியாவுக்கு பயணம் செய்து விட்டுப் பரிவாரங்களுடன் வந்திறங்கும் இங்கிலாந்தின் சக்கரவர்த்தியா என்ன? கேவலம் ஒரு சாதாரண மாலுமியின் மகன். அதுவும் 20 ஆண்டுகளாய் தாய் நாட்டுடன் எதுவித தொடர்புமின்றி 'காணாமல் போனவன் '!


ஆம்!



பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் ஒன்றின் மாலுமிகளில் ஒருவானாய்ப் புறப்பட்டுச் சென்றவன்,   சிறிய சரக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலே கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டு ஒரு திருடனைப் போல வந்திறங்கினால்  வரவேற்பதற்கு யார்தான் வருவார்கள்?



என்னைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் துறைமுக மனிதர்களைச் சிறிது நேரம்  வெறித்துப் பார்த்து விட்டு ஒரு வேதனைச் சிரிப்புடன் எழுந்து நின்றேன். பின்பு கீழ்த்திசையிலே கம்பீரமாக எழுந்து நிற்கும் மாதா கோயிலின் கோபுரத்தை நோக்கி மெல்ல நடக்கலானேன்.



1658ல் ஜனவரி மாதத்தின் கடைசிவாரத்தில் இதே துறைமுகத்திலே இருந்து நானும் எனது தகப்பனாரும் நண்பர்களும் கப்பலிலே புறப்பட்ட நாளை எண்ணிப்பார்த்தேன். அன்றைய தினம் அதிகாலை இதே மாதா கோயிலிலே பிரார்த்தனை முடித்து நாங்கள் அனைவரும் புறப்பட்ட நிகழ்வு ஏதோ நேற்று நடந்தது போல ஞாபகமிருக்கின்றது.



17 வயது வாலிபனாய் கப்பலிலே ஏறியபோது இத்தனை ஆண்டுகள் தாய் மண்ணையும் உறவுகளையும் பிரிந்திருக்கப் போகிறேன் என்றோ பெறுமதி மிக்க எனது வாலிபப்பருவத்தின் பெரும்பகுதியை உலகின் மறுகோடியிலுள்ள ஒரு சின்னஞ்சிறு தீவிலே வீணே அலைந்து திரிவதிலே கழிக்கப் போகிறேனென்றோ நான் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்திருந்தால் அந்தப் பயணத்தை நானும் எனது சகாக்களும்  நினைத்துத்தான் பார்த்திருப்போமா?



மனிதவாழ்க்கையின் பின்னே நடக்கவிருக்கின்ற சம்பவங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு என்று ஒன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.. உறவுகளையும் சொந்த மண்ணையும் பிரிந்திருப்பது எத்தனை கொடுமையானது என்பதை மனிதர்கள் நன்கு அறிந்து கொள்வதற்காகத்தான் இறைவன் இத்தகைய அனுபவங்களைக் தருகின்றாரோ என்னவோ.. எத்தனை அலைச்சல் எத்தனை வகையான மனிதர்கள் எவ்வளவு சிரமங்கள் வேதனைகள்...ஆற்றாமைகள்!



நான்  14 வயதுச் சிறுவனாக இருந்தபோது ஏற்கனவே ஒருதடவை இந்தியாவுக்கு எனது தகப்பனாருடன் கடல் பயணம் சென்ற அனுபவம் உள்ளது. கடல் பயணங்கள் இலகுவானவை அல்ல. அலைக்கழிக்கும் சூறாவளிகளும் புரட்டிப்போடும் புயல் காற்றுகளும் தொற்று நோய்களும் நமது உயிரைக் குடிக்கக் காத்திருக்கும். குடிநீரும் உணவுப் பண்டங்களும் தீர்ந்து போனால் நிலைமை அவ்வளவுதான். குடிநீருக்காக அறிந்திராத தீவுகளிலே கரையிறங்கினால் அங்குள்ள ஆதிவாசிகளாலோ அல்லது கடற்கொள்ளையர்களாலோ கொல்லப்பட வாய்ப்புண்டு.




இவை மட்டுமல்ல கடலின் சில இடங்களிலே தீய ஆவிகளின் நடமாட்டம் பற்றிய கதைகள் கூட உண்டு.  இப்படியெல்லாம் அலைவதை விட சொந்த மண்ணிலேயே இருந்துவிடுவது விவேகமான விடயம்தான். ஆயினும் நமது வாழ்க்கையை சவால்கள் எதையுமே எதிர்கொண்டு சாதிக்காமல் உப்புச்சப்பின்றி வெறுமனே வாழ்ந்து கொண்டிருப்பதை விட உயிராபத்துமிக்க கப்பல் பயணங்கள் எவ்வளவோ மேலானது என்றுதான் இப்போதும் கூறுவேன்.




இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவன் திடீரென பிறிதொரு கண்டத்திலே சின்னஞ்சிறு தீவிலே வேறுபட்ட காலநிலையின் கீழே வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்ட மனிதர்களுடன் நீண்டகாலம் இணங்கி வாழ்வதென்றால் எவ்வளவு கடுமையானது. புதிய சூழல், புரியாத மொழி,  கரடுமுரடான பாதைகள், பழக்கமில்லாத உணவுகள், தொற்று நோய்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததையும் இப்போது அங்கிருந்து  விடுதலையாகி சுதந்திரமாய் வந்துசேர்ந்ததையும் நினைத்தால் ஒருவித வேதனைச் சுகமாயிருந்தது.



இந்த உலகத்தின் மறுபுறத்திலும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கும் வாழ்க்கையுள்ளது.. பண்பாடுகள் கலாசாரம் உள்ளது என்பதை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவாவது குறைந்தபட்சம்  இந்த அனுபவங்கள் உதவியிருக்கின்றன என்பதை நினைக்கும் போதுதான் சிறிது ஆறுதலாக இருக்கின்றது. இவற்றைவிட அந்தச் சிறுதீவிலே எனக்கிருந்த மற்றுமொரு ஆறுதலான விடயம் என்று ஒன்றிருந்தால் அது எனது தோழி லூசியாதான்.



அத்தியாயம் 2








என்னையும் எனது உயிர் நண்பன் ஸ்டீபனையும் போலன்றி, என்னோடு வந்து அந்தத் தீவிலே வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டிருந்த சகபாடிகளில் பெரும்பாலனவர்கள்  தீவிலிருந்த சுதேசிப் பெண்களைத் திருமணம் முடித்திருந்தார்கள் அல்லது அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி எங்கள் கடல் பயணத்திலே துணையாக வந்திருந்த மாலுமிகளில்  ஒருவனுக்கும் அந்தத்தீவின் பூர்வீகக்குடிப் பெண்ணுக்கும் பிறந்தவள்தான் லூசியா.


ஐரோப்பியச் சிறுமிகளுக்கேயுரிய  உடல்வாகும்  வெளிர் நீலநிறக்கண்களும் அந்தத் தீவின் ஆதிவாசிகளுக்கேயுரிய கருமை நிறமும் சடைக் கூந்தலும் சேர்ந்த  கலவையாக இருந்தாள் அவள்.


நானும் எனது நெருங்கிய தோழன் ஸ்டீபனும் வாழ்ந்து வந்த கிராமத்து  வீட்டின் அருகில்தான் லூசியாவும் இருந்தாள்.  ஊரைச்சேரும் வழியுமின்றி உறவுகளைப் பார்த்திடும் வகையுமின்றி உடல் அலைச்சலும் மனவுளைச்சலுமாய் திரிந்த எனக்கு ஒரே நிழல்மரம் அந்தச் சிறுபெண்ணின் சகவாசம்தான்.

லூசியா அறிமுகமானதே ஒரு சுவாரசியமான கதைதான்.

தீவை விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் சரியான தருணம் பார்த்திருந்த கடைசி வருடங்களில்தான் லூசியாவின் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. கண்டி மன்னரின் அதிகாரிகளிடம் அனுமதிபெற்று கண்டி இராச்சியத்தில் மத்திய பகுதியிலிருந்த தென்னை மரச்சோலைகள் நிறைந்த கிராமமொன்றிற்கு வந்து சேர்ந்திருந்தோம். அங்கிருந்த விவசாயி ஒருவனிடம் சிறுபகுதி நிலத்தை வாங்கி வீடொன்றைக் கட்டி முடித்திருந்தோம். அந்த வீட்டைக் கட்டுவதற்காகச் சில பொருட்களைத் தேடி வாங்குவதற்காக கிராமத்துக்குள்ளே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அதற்கு முன்பு எங்களைப் போன்றவர்களை பார்த்தேயிராத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சென்ற வழி முழுவதும் அந்தக் கிராமத்துவாசிகள் தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள்.அவர்களில் சிலர் நாங்கள் கேட்பதற்கு முன்பே அவர்களாகவே ஏதோ ஒரு இடத்தை நோக்கி வழிகாட்டினார்கள். அவர்களது செயல் சரியாகப் புரியாமல் அவர்கள் காண்பித்த  ஒரு தென்னஞ்சோலைக்குள் நுழைந்தோம். அங்கு  கிடுகுகளால் வேயப்பட்டிருந்த கூரைகொண்ட மண் குடிசை ஒன்றிருந்தது. ஆனால் அந்தக் குடிசை அதுவரை அந்தத் தீவிலே பார்த்த குடிசைகள் போல இருக்கவில்லை. அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது. 


சுதேசிகளின் குடிசைகள் பொதுவாகத் தாழ்வாகவும் அதன் நுழைவாயில்கள் ஒருவர் தலையைக் குனிந்து சென்றால் மட்டுமே உள்ளே நுழையக் கூடியதாகவும் இருக்கும்.  ஆனால் இதுவோ நன்கு உயரமானதாகவும் விசாலமான வாயில் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தது.


அந்தக் குடிசை வீட்டின் வெளியே பெண்கள் பலர் கூடி தென்னோலைகள் பின்னிக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள்  குழந்தைகளைச் சுமந்தபடி வேலை செய்யும் பெண்களுடன் அளாவளாவிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் இடுப்புகளில் ஏறத்தாழத் விழுந்து விடுவதுபோல குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களைக் கடந்து செல்கையிலே தற்செயலாக நீலநிறக் நிறக்கண்களையுடைய குழந்தை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு நின்று விட்டேன் நான்.







அந்தக் குழந்தையின்  கண்களும் முகவெட்டும் அவளின் தாய்போலிருந்த சுதேசிப்பெண்ணுக்கு மட்டுமல்ல அந்தச்சூழலுக்கே கூடப் பொருத்தமின்றி தனியாகத் நெருடிக் கொண்டிருந்தது. ஒருவித சந்தேகத்துடன் அந்தப் பெண்ணை நெருங்கிச் சென்று நான் பேசவிழைந்த போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அந்தப் பெண் குடிசைக்குள்ளிருந்த யாரையோ உரத்து அழைத்தாள். அதைக்கேட்டு வெளியிலே வந்து பார்த்தவன் யார் தெரியுமா?


அவன்தான் எங்களோடு வந்து இந்தத் தீவில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவனான மாலுமி X.  அவன் சில நாட்கள் எங்களோடு இருந்துவிட்டு கண்டி அரசனின் அதிகாரிகளின் காலாட்படையில் வேலைதேடிக்கொண்டு பிரிந்து சென்றவன்.


அவனைக் கண்டதும் முதலிலில் அடையாளம் புரியவில்லை. ஐரோப்பிய உடல்வாகையும் நிறத்தையும் தவிர ஏறத்தாழ சுதேசிகள் போலத்தான் தோன்றமளித்தான். உள்நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு அவர்களைப் போலவே ஆகியிருந்தான். அவனுக்கும் எங்களைக் கண்டதில் வெகு ஆனந்தம். எங்களை உபசரித்து தன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். எங்களைப் பிரிந்து சென்றபின் நடந்தவற்றையெல்லாம் கேட்டறிந்து கொண்டதோடு நாங்கள் அந்தக் கிராமத்துக்கு வந்திருப்பதன் காரணத்தையும் தெரிந்து கொண்டு வீடு கட்டுவதற்குத் தேவையான பண்டங்ளை பெறுவதற்கும் உதவினான் அவன்.


சுதேசப் பெண்ணுடனான மணவாழ்க்கை காரணமாக எங்களையும் விட கண்டியச்  சிங்கள மொழியை நன்கு பேசப் பழகியிருந்த அவன், எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதற்கு நாங்கள் கிடைத்திருப்பதாகக்கூறி மகிழ்ந்தான். இவை எல்லாவற்றையும் விட அவன்  சற்று முன்பு வரும் வழியில் பார்த்த நீலக் கண்கள் கொண்ட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து அது தனது மகள்தான் என்று காட்டியதுதான் முக்கிய விடயம். அந்தக் குழந்தைதான் பின்னர் எனது சிறு தோழியான லூசியா.



குழந்தை லூசியாவை கண்ட அந்த நாள் முதல் அவள் என் மனதில் இடம் பிடித்து விட்டாள். அதன் பிறகு தினமும் குழந்தையை நானும் ஸ்டீபனும் குடியிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருப்பது X க்கு வாடிக்கையானது. அவளோடு விளையாடுவதிலும் அவளை ஓர் ஆங்கிலச் சிறுமி போலவே உடைகள் தயாரித்து அலங்கரித்து மகிழ்வதிலும் எனக்கு திருப்தியாக இருந்தது. தினமும் அவளுக்கு ஆங்கிலத்தைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல்லிக் கொடுப்பது அவளுடன் விளையாடுவது அவளை அழைத்துக் கொண்டு நடை பயில்வது என்று... சொல்லப் போனால் சிறுமி லூசியா எனக்கும் ஸ்டீபனுக்கும் மற்றும் எங்களோடு இருந்த மற்றைய தோழர்களுக்கும் செல்லப் பிள்ளையாகி விட்டாள்.


அந்தத் தீவை விட்டுத் தப்பி வந்ததிலே அவளது பிரிவு ஒன்றுதான் இன்னும் எனக்கிருக்கும் ஒரே வேதனை. பாவம் அவள். நான் இங்கு நலமாக வந்து சேர்ந்திருப்பதை யார் மூலமாவது அவளுக்குத் தகவல் அனுப்பி வைக்க வேண்டும்.




அத்தியாயம் 3







 ந்தத் தீவிலே கண்டி இராச்சிய மன்னர் ரத்கசிங்கனின் கைதிகள் நாங்கள். ஆனாலும் கைதிகள் எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது  விநோதமான ஒரு தண்டனை. அதாவது நாங்கள் கண்டி மன்னரின் இராச்சியத்துக்குள்  எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அங்குள்ள பெண்களைக் காதலித்தோ முறைப்படியோ திருமணம் புரியலாம்.  தொழில்களைச் செய்யலாம். ஆனால் அங்கிருந்து தப்பிச் செல்வது மட்டும் முடியாது. அந்த இராச்சியத்துக்குள் எங்கு சென்றாலும் மன்னரின் அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக எல்லைப் பகுதிகளிலே நடமாடும் போது இத்தகைய கண்காணிப்பு அளவுக்கதிகமாக இருப்பதுண்டு. ஐரோப்பியர்களான எங்களை இலகுவில் அடையாளங் காணமுடியுமென்பதால் அங்குள்ள மக்களே மன்னரின் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி விடுவார்கள்.



அந்தப் பசுமையான தீவில் அலைந்து திரிந்திலே அங்கு வாழும் மக்களின் குணாதிசயங்களும் அவர்களது மொழியும் எங்கள் எல்லோருக்கும் ஓரளவு பழகிவிட்டிருந்தது. இதனால் எங்களில் பலர் அந்த தீவின் மலைவாழ் பெண்களுடன் பழகலானார்கள். அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. எத்தனை காலம்தான் இந்த விநோதமான திறந்தவெளிச்சிறை வாழ்வைத் துணையின்றித் தனிமையிலே கழிப்பது. வயிற்றுப் பிழைப்புக்காக தொப்பிகள் தயாரித்து விற்பது நெல்தானிய வியாபாரம் செய்வது என்று வயிற்றைக் கழுவிப் பொழுதைக் கழித்தாலும்  இயற்கைத் தேவை  என்று ஒன்று உள்ளதல்லவா?



திறந்தவெளிச் சிறைவாழ்வின் அலைச்சல்களும் தோல்வியில் மட்டுமே முடிவடையும் எங்கள் தப்பிச் செல்லும் முயற்சிகளும் தாங்க முடியாத சலிப்பையும் விரக்தியையும் தரலாயின. நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி காலம் கழிந்து கொண்டிருந்தது. எனது கப்பல் சகாக்களிலே மிகவும் வயதில் குறைந்தவர்கள் நானும் எனது தோழன் ஸ்டீபனும்தான். மற்றவர்களெல்லாம் நடுத்தர வயதிற்கு வந்து விட்டார்கள். இனியும் இந்தத் தீவை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்பதிலே  நம்பிக்கைகள் வற்றித் தீர்ந்து விட்ட நிலையிலே அவர்கள் அந்த உத்தேசத்தை முற்றாகவே கைவிட்டு சுதேசிப் பெண்களைத் மணம் முடித்து வாழத் தொடங்கியிருந்தார்கள்.



எங்கள் சகாக்களில் பலருக்கு சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் உத்தேசம் கூட மெல்ல மறந்தே போனது. அவர்களைக் குற்றம் சொல்வதற்குமில்லை. ஆபத்தான கொடிய விலங்குகள் வாழும் காடுகளும் நீர்நிலைகளும் செங்குத்தான மலைக்குன்றுகளும் நிறைந்த இந்த இராச்சியத்தை விட்டு தப்பிச் செல்வது எங்களைப் போன்ற ஐரோப்பியர்களுக்குச் சாத்தியமில்லை. சீரான பாதைகளில்லை. வழிகாட்டிகளின் உதவியில்லை. அப்படித்தான் சிரமப்பட்டு காட்டின் வழியே சென்றாலும் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் கூட எங்களைச் சுலபமாக அடையாளங்கண்டு மன்னனின் படையாட்களுக்குத் தகவல் கூறிவிடுவார்கள். தப்பிச் செல்ல முனைந்து பாதியிலே அகப்படுவதானது ஏற்கனவே எங்களுக்கு இருந்து வரும் சுதத்திரத்தைக் கூடத் தின்றுவிடும்.



இதையெல்லாம் அனுபவத்திலே நன்கு அறிந்தவர்களான எங்கள் சகாக்கள் அந்தத் தீவின் வாழ்க்கையை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டதிலே ஆச்சரியமில்லைதான். நானும் எனது நண்பன் ஸ்டீபனும் மட்டுமே இந்த விடயத்திலே விதிவிலக்காக அங்கிருந்து தப்பிச் செல்வது என்பதிலே கடைசிவரை உறுதியாய் இருப்பதெனத் தீர்மானித்தோம்.


ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு புயலிலே மாட்டி எங்களது கப்பலின் பாய்மரம் முறிந்து நாங்கள் குடாக்கடலில் நங்கூரமிட்டுக் கிடந்தபோது நிகழ்ந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றேன்.


அது கி.பி.1659ம் ஆண்டு. கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான பிரமாண்டமான கப்பல் ஆன் இந்தியாவின் மசூலிப் பட்டினத்தின் துறைமுகத்தில் பிரிட்டிஷ் கொடிபறக்க கம்பீரமாக நின்றிருந்தது. கப்பலின் தலைவனாகிய எனது தந்தையார் ரொபர்ட் நொக்ஸ் கப்பலின் மேல்தளத்தில் நின்று கப்பல் புறப்படுவதற்குரிய கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரது மகனும் கப்பலின் உதவி மாலுமிகளில் ஒருவனுமாகிய நான் உட்பட ஏனைய பணியாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். பாய்மரங்கள்  விரிக்கப்பட்டு அவற்றின் கயிறுகளின் உறுதிப்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

1657ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி முதல் இந்தியக் கரைகளின் துறைமுகங்களிலே தரித்து நின்று அங்குள்ள உள்ளுர் வியாபாரிகளிடம் புடவைகள், கம்பளங்கள் உட்பட  பல்வேறு விதமான சரக்குகளையும் கொள்வனவு செய்து ஏற்றிக்கொண்டு சரியாக இரு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டோம்.


இந்து சமுத்திரத்தின் கடல் அலைகளைப் பிளந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது எங்கள் ஆன்.



அத்தியாயம் 4









ர்திரும்பப்போகும் மகிழ்ச்சியிலே மிகவும் உற்சாகமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தோம்.


கப்பலெங்கும் ஒரே மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்தது. மசூலியின் தென்னங்கள்ளும் இந்தியச் சுருட்டுகளும் தாராளமாகப் புழங்கியது. ஆடல்களும் பாடல்களுமாய் குதூகலம் நுரைத்துப் பொங்கியது. 'இதோ பார்!  இதுதான் இந்தியப் பெண்களின் நடனம்' என்று அபிநயம் பிடித்து ஆடிக்காட்டினான் லவ்லேண்ட் என்பவன். அனைவரும் கைதட்டி ஆரவரிக்க ' ஹேய்! இதைப் பார்! இது நாகப்பாம்பு நடனம்!' என்று என்று இரு முழங்கால்களையும் மடித்து பின்புறமாக மடிந்து முதுகு தரையில் படுமாறு படுத்து இரு கைகளையும் ஒன்று சேர்த்து வளைந்து வளைந்து ஆடினான் அவன். அதற்கேற்றாற்போல மகுடி ஒன்றைக் கொண்டு வந்து ஊதினான் ஸ்டீவன்.

' ஏய்! அந்தக் கறுப்பு சலவைக்காரிதானே இந்த மகுடியை உனக்குப் பரிசளித்தாள்? உண்மையைச் சொல்லு!' என்று ஸ்டீவனைக் கலாயத்தான் லவ்லேண்ட்.

'இல்லை...இல்லை! நீ, 'முத்தம் கொடு!' என்று கேட்டுப் பின்னால் அலைந்தாயே  பாசி மணி ஊசி விற்கும் குறத்திப்பெண்... அவள்தான் கொடுத்தாள்'

'சரி, எனக்குத்தான் தரவில்லை உனக்காவது கொடுத்தாளா?'

' கொடுத்திருப்பாள்..அதற்குள் ஒருத்தன் வந்து கெடுத்து விட்டான்'

'யாருடா அது?   நம்ம மக்டொனால்டா?'

'இல்லடா, அவளுடைய புருஷன்!'


கப்பலே சிரிப்பால் அதிர்ந்திட, தூரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தவர்களோடு நின்றிருந்த எனது தந்தை  லேசாக முறுவலித்தார்.


ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.


புறப்பட்டு ஒரு தினம் முடிவடைவதற்கிடையில் கிழக்கு வானம் சட்டென இருண்டு பெரும் புயலுக்குரிய அத்தனை அறிகுறிகளையும் காண்பிக்கத் தொடங்கி விட்டது. பாய்மரங்களை இறக்கிக் கொள்வதற்குக்கூட அவகாசம் தராமல் விரைந்து வந்த புயல்காற்று மழையுடன் சேர்ந்து சுழன்றடித்ததில் கப்பல் எங்கள் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.


'பாய் மரத்தை இறக்குங்கள்! விரைவாக இறக்குங்கள்!' என்று எனது தந்தையின் கட்டளை ஓலமிடும் காற்றினூடே கேட்டது ஆனால் அலைக்கழிக்கும் புயல்காற்று அதற்கு இடம் தரவேயில்லை. கப்பல் அலைகளின் மேல் சமநிலை தவறி அல்லாடிக் கொண்டிருந்தது. எனது தந்தை எத்தனையோ பல கப்பற்பயணங்கள் புரிந்த  அனுவபம் மிகுந்த ஓர் திறமையான மாலுமி. இது போன்ற பல கடற்புயல்களை நிறையப் பார்த்தவர்.  பாய்மரங்களை இறக்குவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் சடுதியாக, 'பாய்மரங்களை வெட்டிச் சாய்த்து விடுங்கள்! யோசிக்க வேண்டாம் வெட்டிவிடுங்கள்!' என்ற கட்டளை அவரிடமிருந்து வந்தது. வேறுவழியின்றி உடனே அதனைச் செய்து முடித்தோம். அதன் பிறகு கப்பலின் அலைக்கழிவு ஓரளவு குறைந்தாலும் கடல் நீரோட்டத்தில் சிக்கி அது எங்கோ ஒருபுறமாக இழுபட்டுச் செல்வதை உணர்ந்தோம். எங்கு செல்கின்றோம் என்ன நடக்கப் போகிறது என்பது எதுவுமே புரியவில்லை. இழுபட்டுச் செல்லும் வேகத்தில் எங்காவது பாறைகளில் மோதினால் என்னாகும் என்பதை நினைத்துப் பாரக்கவே பயந்தோம்.


பின்னிரவில் ஆரம்பித்த அந்தப் போராட்டம் மறுநாள் அதிகாலை விடியும் வரை இடைவிடாமல் வரை நீடித்தது.




அத்தியாயம் 5










கிழக்கு வெளுத்தபோது புயலின் உக்கிரம் படிப்படியாகக் குறைந்து மெல்ல ஓய்ந்து போனது.


பளீரென விடிந்தபோது எங்கள் கப்பல் ஒரு விரிந்த குடாவுக்குள்ளே மிதந்து  கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்திலே கண்ணுக்கெட்டிய தூரத்திலே தென்னந்தோப்புகள் நிறைந்த மனித சஞ்சாரமற்ற வெண்ணிறக் கடற்கரை நீள நெடுகிலும் கோடிட்டுச் செல்ல தொடுவானம் கிழக்குப் புறமாகத் தெரிந்தது. ஒருவாறு கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தினோம். அது ஓர் ஆழமற்ற கடல்பகுதியாக இருந்தது. கலங்கல் நிறைந்த கடல் நீரையும் அதில் மிதந்து வரும் நீர்த்தாவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது கப்பல் ஓர் ஆற்றுமுகத்துக்கருகே வந்திருப்பது பரிந்தது முதலில் நாங்கள் இருப்பது எந்தப்பகுதியில் என்று யூகிக்க முடியவில்லை. புயல் கிழக்கிலிருந்து வீசியிருந்ததை வைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிழக்குக் கரையோரக் குடா ஒன்றுக்குள்தான் நாங்கள் வந்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம்.


முதலில் அதை ஏற்றுக் கொண்ட எனது தந்தை , பின்பு தேசப்படத்தை வைத்துக் கணித்து நாம் இருப்பது இந்தியாவின் தென்புறமுள்ள தீவிலிருக்கும் கிழக்குக் கரையோரத்தில் என்றார். அந்தத்தீவில் 'யக்காக்கள்' எனும் பேய் மனிதர்கள் இருப்பதாகத் தான் கேள்விப்பட்தையும் கூறினார். பின்புதான் நாங்கள் தரித்து நின்ற இடம் சிலோன் தீவின் திரிக்கோணமலையை அடுத்துள்ள கொட்டியாரக்குடா என்று அறிந்தேன்.


அன்று கொட்டியாரக்குடாக் கடலிலே நாங்கள் நங்கூரமிட்டுக் கிடந்தபோது இந்தத்தீவின் கரைகளில் இறங்கி கண்டி இராச்சிய மன்னன் ரத்க சிங்கவின் அதிகாரிகளின் பேராசைக்கும் சூழ்ச்சிக்கும் பலியாகி   பாரிய அனுபவங்களைப் பெறப்போகிறோம் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

கப்பலின் பாய்மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுச் சேதமடைந்து கிடந்தன. அவற்றைப் புதிதாக அமைத்தால் மட்டுமே பயணத்தைத் தொடரமுடியும். எனவே கரைக்குச் சென்று புதிதாக மரங்களைக் கொண்டு வந்து முறிந்துபோன பாய்மரங்களை திருத்திக் கொண்டு  மீண்டும் எங்கள் பயணத்தை தொடரலாம் என்று எங்கள் குழுவில் சிலர் நினைத்தார்கள். கரைக்குப் போகாமல் இருக்கும் கருவிகளைக் கொண்டு முறிந்த பாய்மரங்களை ஓரளவு திருத்திக்கொண்டு மீண்டும் மசூலிப் பட்டணத்துக்கே போய் அங்கிருந்து மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது.


கரைக்குப் போவதிலே இருக்கும் ஆபத்தை எண்ணித்தான் நான் எனது எண்ணத்தை வலியுறுத்தினேன் என்றபோதிலும் திருத்தியமைத்துச் செல்லும் பாய்மரத்தினால் சாதாரண காற்றைக் கூடத் தாங்க முடியாது என்பதை நானும் அறிந்துதானிருந்தேன். அதுமட்டுமன்றி, பெரும் சமுத்திரங்களைக் கடந்து வெகுதூரம் போகவேண்டிய கடற்பயணத்தில் நடுவழியில் திருத்தங்களை மேற்கொள்வதெல்லாம் சாத்தியமில்லை. தவிர, இந்த புயலினால் உண்டான தாமதத்தினால் உணவு, குடிநீரின் அளவும் குறைந்து விட்டதால் அவற்றையும் சேகரித்தாக வேண்டும்.
ஆனால் ஐரோப்பியர்களாகிய நாங்கள் கரையோரத்திற்குச் சென்று இறங்குவது அத்தனை நல்ல முடிவல்ல என்று தோன்றியது. எனவே எங்களோடு இந்தியப் புடவைகளை எடுத்து வந்திருந்த வியாபாரி ஒருவனை சிறுபடகு மூலமாக கரைக்கு அனுப்பிவைத்து அங்குள்ளவர்களோடு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். முதலில் இந்திய வியாபாரி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனினும் பின்பு எங்களில் சிலரும் துணைக்கு வருவதாகக் கூறியதையடுத்து சம்மதித்தான்.


ஆனால் எங்களுக்குச் சிரமம் எதுவும் வைக்காமல் கரையிலிருந்து சிறுபடகு ஒன்று எங்களது கப்பலை நோக்கி வரத் தொடங்கியது. அது படகு என்று கூடக் கூறமுடியாதபடி மிகச் சிறியதாகவும் ஒடுக்கமாகவும் இருந்தது. அதிலே வந்தவர்களில் படகோட்டிகளைத்தவிர ஏனைய இருவரையும் கயிற்று ஏணிகளின் உதவியுடன் கப்பலுக்குள்ளே வரவழைத்தோம். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் விநோதமாக இருந்தன. அவர்கள் பேசிய மொழியை கப்பலில் வந்த இந்திய வியாபாரியால் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவர்கள் எங்களோடு நட்புறவை விரும்புவதாகத் தெரிந்தது.



அவர்களது முகபாவனைகளையும் சைகைகளையும் வைத்து அவர்கள் அந்தப் பிரதேசத்தின் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் என்று புரிந்து கொண்டோம். 'திசாவ'  எனும் சொல்லை பலமுறை உச்சரித்து  தம்மோடு கொண்டு வந்திருப்பதிருந்த பழங்களையும் மற்றும் சில வகைக் கிழங்குகளையும் தொட்டுத் தொட்டுக் காட்டியதிலிருந்து திசாவை எனும் அவர்களது எஜமானர் எங்களது வருகையை பெரிதும் விரும்புகின்றார் என்பதையும் அறிந்து கொண்டோம். ஆனால் அதெல்லாம். எங்களது வியாபாரக் கப்பலில் குவிந்திருந்த விலையுயர்ந்த பொருட்களை அபகரிக்கும் நோக்கத்திலே திசாவை என்பவன் எங்களைத் தங்களது வலையில் விழவைப்பதற்காகச் செய்த தந்திரங்களில் ஒன்று என்பதை பின்பு வெகுதாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.



எங்களுக்கும் கரைக்குச் சென்று திரும்ப வேண்டிய தேவை இருந்ததால் திசாவையின் அழைப்பை ஏற்றுக் கொண்ட  கப்பலின் தலைமை மாலுமியான எனது தந்தையார் எங்களில் சிலரை கரைக்கு அனுப்பி வைப்பதெனத் தீர்மானித்தார். அந்தக் குழுவினரைத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று திரும்பும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.



திசாவையின் ஆட்களின் படகுகள் வழிகாட்ட கரையை நோக்கிப் புறப்பட்டோம்.

கப்பலிலிருந்து நேரே தெரிந்த மணற்கடற்கரைக்குச் செல்லாமல் கண்டல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் களப்புப் பகுதியினூடாகப் பயணித்து கொட்டியாபுர எனும் இடத்தில் நானும் எங்கள் குழுவும் கரையிறங்கினோம். அந்த இடம் பெருவிருட்சங்கள் நிறைந்த சோலையாக இருந்தது.  கரையிலே இறங்கியதும் சிறிது தூரம் நடந்து சென்றதும் ஒரு    கிளைபரப்பிய  விசாலமான பெரிய புளிய மரம் ஒன்று தென்பட்டது. அதன் கீழ் பற்றைச்செடிகள் எதுவுமின்றித் திடலாக இருந்ததால் அந்த மரத்தின் கீழே இளைப்பாறினோம்.



சிறிது நேரத்தில் நாங்கள் திசாவை என்று அழைக்கப்பட்டவன் மாடுகள் பூட்டிய கூடாரம் போன்ற வண்டியில்  சில ஆட்கள் புடைசூழ அங்கு  வந்திறங்கினான். அவனது காவலுக்கு வந்திருந்தவர்களின் கைகளில் கூரிய ஈட்டிகள் போன்ற கழிகள் இருந்தன. திசாவை நடத்தர உயரமுள்ள வாட்டசாட்டமுள்ளவனாக இருந்தான். அவனது உடைகள் விநோதமாக இருந்தன. புளிய மரநிழலில் அமர்ந்திருந்த எங்களைக் கண்டதும்  மிகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.

அவன் வந்தது போன்ற அலங்கரிக்கப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கும் மாட்டு வண்டிகளில் எம்மை ஏற்றி மணல் நிரம்பிய பாதையினூடாக தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். அந்த இடம் உறுதியான அடியைக் கொண்ட மரங்களடர்ந்த சோலையாகும். பனை ஓலைகளால் கட்டப்பட்ட வேலிகள் அதன் மத்தியில் சிறு மைதானம் போல திடல் இருந்தது. அந்தத் திடலைச் சூழ களிமண்ணால் மெழுகிக் கட்டப்பட்டு தென்னோலைகளால் வேயப்பட்டிருந்த சற்று அகலமான குடிசைகள் பல இருந்தன.  அவற்றில் ஒன்றிற்குள் நாங்கள் இளைப்பாறுமாறு விடப்பட்டோம்.

அங்கு வைத்து வாழை, பலா, மற்றும் நாங்கள் அறிந்திராத பழ வகைகளையும் நெருப்பில் வாட்டிப் பதப்படுத்திய இறைச்சியையும் உண்ணத்தந்து விருந்தளித்தான் திசாவை. தனது முகபாவங்களாலும் சைகையாலும் அவன் எனது தந்தையைச் சந்திக்க விரும்புவதாகவும் அன்றிரவு தங்களது விருந்தாளியாக எங்களைத் தங்கிச் செல்லுமாறு வேண்டினான். பாய்மரங்கள் அமைப்பதற்குரிய மரங்களைத் தேடிக்கொள்ள வேண்டிய தேவையிருந்ததால் அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டோம்.  மறுநாள் நாங்கள் பாய்மரத்தைக் கொண்டு படகுமூலமாய் கப்பலுக்கு கொண்டு சேர்த்ததும்  கப்பலின் தலைமை மாலுமியை கரைக்கு அழைத்து வருவதாகத் திசாவையிடம் உறுதியளித்திருந்தேன்.


அதன்படி எங்கள் குழுவில் ஒரு பகுதியினர் திசாவையின் ஆட்களோடு காடுகளுக்குள் சென்று தேவையான மரங்களைப் பெற்று வந்தனர். எங்களது கருவிகளைக் கொண்டு பாய்மரம் செப்பனிடும் வேலையையும் ஆரம்பித்தோம். எங்களது தச்சுக் கருவிகளையும் வேலைத்திறனையும் ஆச்சரியமாகப் பார்த்தவாறு நின்றிருந்தார்கள், திசாவையின் காவலாளிகள். பொழுது அடிவானத்திற்கு இறங்கி இருட்டும் போதுதான்  அந்த வேலைகள் முடிவடைந்தன.


இரவானதும் தேங்காய் எண்ணெய் மற்றும் விலங்குக் கொழுப்பை உருக்கிப் பெற்ற எண்ணெய்களில் திரிகள் வைத்த விளக்குகள் ஏற்றப்பட்டன. வீதிகளில் மக்கள் தீப்பந்தங்களோடு உலாவினார்கள். முக்கியமான சந்திகளில் காடா விளக்குகள் எரிந்தன. இரவு உணவுக்குப் பின்பு வேலைக் களைப்பின் அயர்வினால்  எல்லோரும் உறங்கலானார்கள்; என்னைத்தவிர.

  மறுநாள்  கப்பலின் தலைமை மாலுமியை அழைத்து வருவதாகத் திசாவையிடம் உறுதியளித்திருந்தாலும், பாய்மரங்களை கப்பலுக்கு எடுத்துச் சென்றதும் திரும்பி வராமல் சென்றுவிடுவதே எனது உள்நோக்கமாக இருந்தது. ஏனெனில் திசாவையின் அளவுகடந்த உபசரிப்புக்குப் பின்னால்  கபட நோக்கம் எதுவும் மறைந்து இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்ததுதான் காரணம். ஆனால் அதை நான் எனது கூட வந்தவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை.


அன்றிரவு மிகுந்த யோசனையுடன் கழிந்தது. 




அத்தியாயம் 6






றுநாள் பொழுது கானகப் பறவைகளின் இன்னிசைக்கச்சேரியுடன் புலர்ந்தது.

கடற்பறவைகளின் ஒலிகளை மட்டுமே கேட்டுக்கேட்டுப் புளித்துப் போய்க்கிடந்த கப்பல் தோழர்கள் எங்கள் காதுகளில் அந்த அழகிய குருவிகளின் சங்கீதம் தேன் வார்த்தது. எங்களது இக்கட்டான சூழ்நிலையையும் மறந்து அந்தப் பட்சிகளையும் அவற்றின் இனிய கீதங்களையும் ரசித்தவாறிருந்தோம்.


காலைப் பனியில் குளித்திருந்த மரங்களின் இலைகளிலிருந்து நீர் சொட்டியது. சிறிய வேம்பு மரக் கன்று ஒன்றின் தண்டுகளை உடைத்து பல்துலக்கியபடியே நாங்கள் இருந்த குடிசைப் பகுதியிலிருந்து சிறிது தூரம் நடந்து மேட்டுப்பகுதி ஒன்றிற்கு வந்தோம். அங்கிருந்த ஒர் உயர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்து ஏறினேன். அதன் உச்சிக்கு வந்ததும் அதுவரையில் நான் பார்த்திராத ஓர் அழகிய பரந்த நிலப்பரப்பு என் கண்முன்னே விரிந்தது. கிழக்குத் திசையில் மூடுபனிப்படலத்தினூடே ஆகாயத்துடன் ஒன்றிவிட்ட கடலும் சூரியக் கிரணங்களின் கீழே வெள்ளிப் பாம்புகளாய் பளபளத்து நெளியும்  கிளையாறுகளும் தென்பட்டன. அதன் கரையோரங்களில் தென்னை மரங்களும் பனைமரத்தோப்புகளும் இருந்தன.

முந்திய தினம் நாங்கள் வந்து இறங்கிய கரையோரப் பகுதியும் அதிலே நின்றிருக்கும் மனித சஞ்சாரமும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கரையோரம் பெரும்பாலும் சதுப்பு நிலமாகவே இருந்தது. ஓங்கி வளர்ந்த கண்டல் மரங்களும் நீண்ட இளம் பச்சை நிறமுள்ள புல்வகைகளும் சில இடங்களில் குட்டையாக வளர்ந்த பற்றைச் செடிகளும் இருந்தன.  ஏனைய மூன்று திசைகளிலும் அங்காங்கே தெரிந்த ஓரிரு சிறு குடிசைகள் தவிர கண்ணுக்கெட்டியவரை மரங்கள் அடர்ந்த காடுகளே தெரிந்தன. சில இடங்களில் புகை வருவதிலிருந்து அங்கு மனிதக்குடியிருப்புகள் இருப்பதை யூகிக்கக் கூடியதாக இருந்தது.  தென்கிழக்குத் திசையில் ஒட்டகங்களின் திமில்கள் போல வரிசையாகச் செல்லும் காடுகள் அடர்ந்த குன்றுகள் இருந்தன.


காலையில் எங்களுக்கு தடல்புடலான  உணவை ஏற்பாடு செய்திருந்தான் திசாவை. அதன் பின்பு கடலிலே நங்கூரமிட்டு நிற்கும் எங்கள் கப்பலுக்கு ஏதாவது செய்தி இருந்தால் தரலாம் என்றான். திசாவையின்  உதவியாட்கள் பலர் முன்பறமிருந்த திடலில் குழமி நின்றிருந்தார்கள்.  அவர்களது பேச்சிலிருந்து எங்கள் கப்பலுக்குரிய உணவுப் பொருட்களையும் முதல்நாள் மாலையில் நாங்கள் செய்து முடித்ததுத் தயாராக வைத்திருந்த பாய்மரத்தையும் அவர்களே  கொண்டு செல்லப் போவதாகத் தெரிந்தது. 



அதாவது தாங்கள் படகுகளில் சென்று கப்பல் தலைவனை வரவேற்று அழைத்து வரப்போவதாகவும்  எங்களை  ஓய்வெடுக்குமாறும் கூறினர். நாங்கள் சென்று எனது  தந்தையை அழைத்து வருவதாக முதல்நாளில் செய்திருந்த ஏற்பாடு இரவுக்குள் திசாவையினால்  மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  திசாவையின் உபசரிப்பில் கபட நோக்கம் இருப்பதாக நான் கருதியது ஏறத்தாழ உண்மையாகி விட்டதையும் உணர்ந்து கொண்டேன்.



கப்பலுக்கு எங்களை அனுப்பிவைத்தால்  நாங்கள் மீண்டும்  திரும்பி வரப்போவதில்லை என்பதை எப்படியோ திசாவை யூகித்து விட்டான். அதனால்தான் எங்களை மரியாதைப் பணயக் கைதிகளாய் வைத்திருக்கின்றான் என்பது எனக்கும் எனது தோழர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது. திசாவையின் வஞ்சகம் புரிந்தாலும் அப்போது நாங்கள்  இருந்த நிலையிலே அவனைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனமில்லை  என்பதால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி நடப்பது என்று முடிவு செய்தோம். ஆனால் கப்பலிலுள்ள எனது தந்தையும் மற்றவர்களும் திசாவையின் வார்த்தைகளை நம்பி கரைக்கு வருவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று மட்டும் விரும்பினேன்.


அதற்காக திசாவை கேட்டுக் கொண்டபடி, கப்பலுக்கு அவர்கள் புறப்படுகையில், 'ஒருபோதும் கரைக்கு வரவேண்டாம்!'  என்று ஆங்கிலத்தில் எழுதிய செய்தி ஓலையைக் கொடுத்து விட்டேன். இருந்தும் அந்தச் செய்தி எனது தந்தையிடம் உண்மையிலேயே கொடுப்பார்களா என்பதிலும் எனக்குச் சந்தேகமிருந்தது. அதனால் கப்பலுக்குச் அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்த நீண்ட பச்சை வாழைப்பழங்களில் ஒன்றிலே இரகசியமாக அதே செய்தியை விரல் நகத்தினால்  குறியீடாகப் பொறித்துவிடலாமா என்று நான் நினைத்தபோதிலும் சூழ்நிலை காரணமாக அது கைகூடவில்லை.


அன்றுமட்டும் எனது முயற்சி கைகூடியிருந்து அந்தச் செய்தி கப்பலுக்கும் எட்டியிருந்தால் பின்பு நடந்தவை எல்லாமே வேறுவிதமாக மாறியிருந்திருக்கக் கூடும் அல்லவா?



அத்தியாயம் 7









திசாவையின் ஆட்கள் கப்பலுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.
நாங்கள் கரையிலிருப்பதால் அங்கு என்ன நடைபெறப்போகிறது என்பதை அனுமானிக்க முடியவில்லை. எங்களது செய்தி எனது தந்தைக்கு தரப்படுமா? தரப்படாமல் போனல் கூட திசாவையின் ஆட்களின் நடத்தையிலிருந்து அவர்களின் தந்திரத்தைப் புரிந்து கொண்டுவிட மாட்டாரா? 'கடவுளே இங்கிருந்தே கப்பலில் இருக்கும் தந்தைக்குத் தகவல் சொல்லும் மாயவித்தைக் கருவிகள் ஏதேனுமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..' என்றெல்லாம் விசித்திரமாக என்மனம் பதறியது.

எனது தந்தை ஓர் நட்பை விரும்பும் மனிதர். அதிலுள்ள சூழ்ச்சிகளை இலகுவில் புரிந்து கொள்ள மாட்டார். அதுவும் அவரது மகனாகிய நான் இங்கிருப்பதால் நிச்சயம் திசாவையின் ஆட்களை நம்பிக் கரைக்கு வருவதற்குத்தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனாலும் 'கப்பலிலிருந்து இங்கு வந்தவர்களில் ஏன் ஒருவராவது திசாவையின் ஆட்களோடு கூடவரவில்லை?' என்று அவர் யோசிப்பாராயின் நிலைமை வேறுவிதமாக மாறலாம்.


'கடவுளே அவ்வாறே அவர் நினைத்திட வேண்டும். நாங்கள் இளைஞர்கள். திசாவையின் ஆட்களை எப்படியோ சமாளித்து மீண்டும் கப்பலுக்குச் சென்று விடலாம். ஆனால் வயதான தந்தையும் அங்கிருப்பவர்களும் இங்கு வந்து விட்டால் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்.



இப்போது என்ன செய்வது என்று யோசித்தவாறே அன்றைய எங்கள் பொழுது கழிந்தது.அந்த இடம் திசாவை  பிரதேசத்துக்குரிய அலுவல்களைக் கவனிக்கும் ஓர்  இடம்தான் .  நாங்கள் தங்கியிருந்த கொட்டியாபுரத்தில் எங்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  ஒரே இடத்தில் இருந்து கொண்டிருப்பது எங்களுக்குச் சலிப்பைத் தந்தது. அதனால் இந்தப் பகுதியை கால்நடையாகச் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். அதற்கு சில நிபந்தனைகளோடு ஒத்துக் கொண்டான் திசாவை. அவையாவன எங்களோடு அவனது ஆட்கள் இருவர் துணைக்கு வருவார்கள், எங்கு சென்றாலும் பொழுது மறைவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும், மற்றையது கடலோரங்களுக்கோ களப்புப்பகுதிகளுக்கோ செல்லக் கூடாது என்பவைதான் அந்த நிபந்தனைகள்.


அந்த நிபந்தனைகளின் உள்நோக்கம் தெளிவாகவும் எதற்காக நாங்கள் வெளியே சுற்றிப்பார்க்க விரும்பினோமோ அதனை முறியடிப்பதாகவும் இருந்தது. இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு திசாவையின் ஆட்களோடு கால்நடையாகவே கிளம்பினோம்.



இறங்குதுறையிலே நாங்கள் ஓய்வெடுத்த அந்தப் பெரிய புளிய மரத்தின் அடியில் இருந்து கிழக்குத் திசையிலே நடக்கத் தொடங்கினோம். மரங்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதைகளும் மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய சற்று அகலமான மணல் பாதைகளுமே அங்கு இருந்தன. காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவதானமாக வருமாறு காவலாளிகள் எச்சரித்தார்கள். நாங்கள் செல்லும் வழியில் இடையிடையே யானைகளின் விட்டைகள் காய்ந்து கிடந்தன. காட்டுச் செடிகளின் சிறுமுட்கள் எங்கள் உடைகளைப் பிறாண்டின.



ஏறத்தாழ இரண்டு  பர்லாங்குகள் நடந்தபோது ஒரு சிறு கிளையாறு வந்தது. அதனருகே சிறிது மனித சஞ்சாரமிருந்தது. ஆற்றைக் கடந்து செல்வதற்காக இருபுறமும் பெரிய மரங்களில் பிணைக்கப்பட்ட தொங்குபாலம் போன்று வலுவான கயிற்றுப் பாலம் இருந்தது. அதன்மீது ஒவ்வொருவராகத்தான் கடந்து செல்ல முடிந்தது.


அங்கிருந்த மனிதர்கள்  பரட்டைத் தலையும் கறுத்த தேகமும் கொண்டிருந்தார்கள். இடுப்பின் கீழ் மட்டுமே துணியினாலான உடையிருக்க வெற்றுடம்போடும் காணப்பட்டார்கள். பெண்களும் கூட ஏறத்தாழ அவ்வாறே காணப்பட்டார்கள். அவர்களது கைகளில் ஒரு முனை கூர்மையான நீண்ட கழிகள் இருந்தன அவற்றினால் ஆற்றின் கரையோர சேற்றுத்திட்டுகளில் குற்றிக்குற்றி கருமை நிறத்தில் கையகலத்தில் கிண்ணம் போலிருந்த எதையோ ஒன்றைக் கிளறியெடுத்து இடுப்பிலே இருந்த துணிப்பையினுள் சேகரித்துக் கொண்டிருக்க இன்னும் சிலர் அவற்றை ஒரு பாறாங்கல்லிலே வைத்து உடைத்து அதனுள்ளிருந்து பஞ்சு போன்ற சதைப்பகுதியை மட்டும் மண் சட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் உடைத்துக் கிடந்த பீங்கான் போன்ற வெண்ணிறத்துண்டுகள் குவியலாகக் கிடந்தன.நாங்கள் அனைவரும் ஆற்றைக் கடந்தபோது எங்களை அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்;.


அதன் பின்பு நாங்கள் மற்றொரு வழியாகச் சென்றோம்.


அது ஒரு குடியிருப்புகள் உள்ள பகுதியாக இருந்தது. அங்கு நிறைய கடல் சிப்பிகளும் ஊரிகளின் ஓடுகளும் குவியல் குவியலாய் கிடந்தன. அவற்றுக்கருகிலே தூசுபடிந்த பரட்டைத்தலை ஆண்கள் பெரும் மரக்குற்றிகளை கோடரிகளால் பிளந்து கொண்டிருக்க பெண்கள் விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று மனிதர்களின் உயரமுள்ள  அகலமான பெரும் அடுப்புகள் பற்றவைக்கப்பட்டுப் அழுக்கு வெண்ணிறத்தில் புகைந்த வண்ணமிருந்தன. அந்த இடமே வெண்ணிறச் சுண்ணாம்புத்துகள்களால் நிறைந்திருந்தது. அதனருகே மாட்டு வண்டிகள் பல நின்றிருக்க அவற்றிலே சாக்குப்பைகளில் பொதியேற்றிக் கொண்டிருந்தார்கள்.


அந்தச் சுண்ணாம்புச் சூளையிலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும் எம்மை வியந்துபோய் பார்த்தார்கள்.


அந்த வழியே இன்னும் சிறிது தூரம் சென்று வரலாம் என்று நாங்கள் முனைந்தபோது உடன் வந்த திசாவையின் ஆட்கள் இருவரும் மறுத்துவிட்டனர். இப்போது அதற்கு நேரெதிரே திரும்பி தென்கிழக்காக  செல்லத் தொடங்கினோம். அந்த சுண்ணாம்புச் சூளை வழியாகச் சென்றால் கடற்கரையை அடையலாம் என்பதனை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன்.

ஆங்காங்கே சில குடியிருப்புகள் இருந்தனவே தவிர செறிவான மனித சஞ்சாரம் அந்தப் பகுதிகளில் குறைவாகவே இருந்தது. வெகுதூரத்தில் மூன்று நான்கு குன்றுகள் தெரிந்தன. அந்தப் பக்கமாக சில பர்லாங்குகள் நடந்ததிலே வெண்ணிறத் தூரிகைகள் போன்று உச்சியில் பூத்துச் நிற்கும் ஒருவகை உயரமான புற்கள் கரை நெடுகிலும்  செழித்து வளர்ந்திருக்கும் சிறுகிளையாறு ஒன்றைக் கண்டோம். அதன் கரைவழியே நடந்து சென்று விட்டு இறுதியாக அங்கிருந்து நேரே இறங்குதுறைப் புளிய மரம் இருந்த திசையை நோக்கித் திரும்பி வந்தோம்.


இந்த வழியில் மட்டும் காடுகள் இடையிடையே அழிக்கப்பட்டு பரந்த வெறும் நிலங்களாக இருந்தன. அவற்றில் நெல், இறுங்கு, சோளம் போன்ற தானியங்கள் மற்றும் சில காய்கறிகள் விளைந்த தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மத்தியில் நிலத்தில் நடப்பட்டிருந்த தடிகளிலே மண்பானையொன்று தென் மீது வெள்ளைச் சுண்ணாம்பினால் மனித முகம் போல வரையப்பட்டு கவிழ்க்கப்பட்டுக் காணப்பட்டது. சில இடங்களிலே வைக்கோலால் செய்த உருவப்பொம்மைகளையும் கட்டி வைத்திருந்தார்கள்.


தோட்டங்களைச் சுற்றிலும் பயிர்களை கால்நடைகள் அழித்துவிடாதபடி கழிகள் கொண்டு சுற்றிலும் நேர்த்தியாக அடைத்திருந்தனர். அவற்றின் சிறிய நுழைவாயில்களை மரவுரிகளில் கழிகளைக் கிடையாக கோர்த்துக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகளில் மட்டும் வேலி மரக்குற்றிகளில் தேவையான போது எடுத்துவிட்டு மீண்டும் கூடியதாக நீண்ட உருளைக் குற்றிகளை கிடைத்தடுப்பாக வைத்திருந்தார்கள். வாயில்களில் துணிபோன்றும் மெழுகுபோன்றும் இருந்த எரிந்து அணைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு தோட்டத்தின் முன்புறமும் ஏதாவது நிழல்தரும் மரமொன்றின் கீழே பெரும் பாறாங்கல் ஒன்றின் மீது நீர் நிறைந்த மண்பானையும் அதன்மேல் அள்ளிப் பருகுவதற்காக நன்கு சீவித் துப்புரவு செய்யப்பட்ட தேங்காய்ச் சிரட்டை ஒன்றும் காணப்பட்டது.

வழியிலே எதிர்ப்பட்ட நடக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைக் கண்டோம். எங்களைப் பார்த்துப் பயந்துபோய் நின்றவரிடம் பேச்சுக் கொடுத்தோம். முதலில் தயங்கி நின்றவர் பின்பு எங்களது மொழியில் நாங்கள் சைகைகளுடன் பேச அவரது மொழியில்  சைகைகளைப் பயன்படுத்திப் பேசலானார். என்ன சொல்கிறார் என்பதை சரியாகப் புரியாது போனாலும் அவரோடு பேசியது மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அவரது வேண்டுகோளை ஏற்று அவர் இருந்த தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆழமான கிணற்றிலே இருந்து தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பயந்துபோய் விலகி நின்றவர்கள் பின்பு நாங்கள்  தமது பாட்டனாருடன்தான் வந்திருப்பதை அறிந்து அருகிலே வந்தார்கள். ஆண்கள் நீண்ட தலைமுடியை பின்புறமாக வளர்த்திருந்தார்கள். இடுப்பில் மட்டும் துணியைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். பெண்கள் இடுப்பிலும் மார்பிலும் தைக்கப்படாத துணிகளை அணிந்து காணப்பட்டார்கள். காதுகள் எங்கும் துளையிட்டு ஓசையெழுப்பும் உலோகத்தாலான ஆபரணங்களையும் அணிந்திருந்தார்கள்.  

பரட்டைத் தலையுடன் இருந்த சிறுவர்களும் சிறுமிகளும் எங்களருகே பயந்தபடியே வந்து எங்களையும் எங்கள் உடைகளையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். அந்த வயதான மனிதர் எங்களை அங்கிருந்த மரக்குற்றிகள் மீது அமரவைத்து ஒரு வகை அவித்த கிழங்குகளை உண்ணத்தந்தார். அவை இரு சாண்கள் நீளத்தில் இருபெருவிரல்களின் மொத்தத்தில் அடியில் பருத்தும் நுனியில் கூரியதாகவும் ஏறத்தாழ  கொக்குகளின் அலகுகள் போல இருந்தன. அவற்றை எப்படி உண்பதென எனக்கும் நண்பர்களுக்கும் தெரியவில்லை. அக்கிழங்குகள் நீளவாக்கிலே தும்பு நார்கள் நிறைந்ததாக வேறு இருந்தன. பின்பு அந்த முதியவர் செய்து காட்டியது போலவே தும்புகளை நீங்கி உண்டோம். ஆரம்பத்திலே சிறிது கசப்புச் சுவையுடன் இருந்தாலும் போகப்போகச் சுவையாகவே இருந்தது.


பின்னர் நாங்கள் அவரிடம் விடைபெற்ற போது ஆரஞ்சு நிறத்தில் தோலும் உள்ளே வெண்ணிறச் சுளைகளும் இருந்த பழங்களையும் பால்போன்ற திரவம் வடியும் சிறு மஞசள்நிறப் பழங்களையும் அன்பளிப்பாகத் தந்தனுப்பினார். மொழி புரியாத போதிலும் அந்தக் காட்டு மனிதர்களின் உபசரிப்பை வியந்தபடியே நடந்தோம்.
இப்படியான காட்சிகளையும் மனிதர்களையும் பார்த்தவாறே திசாவை எம்மைத் தங்க வைத்திருந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தபோது மதிய உணவு தயாராக இருந்தது. நீண்ட நேரம் வெயிலில் நடந்ததால் ஏற்பட்ட அயர்வும் உண்டகளையும் சேர எம்மையறியாமலே உறங்கிப் போனோம். 



(தொடரும்)


-'Mutur' Mohammed Rafi




Sunday, January 22, 2012

குச்சியா துப்பாக்கியா?



சபாஷ்!

சரியான போட்டி!






தி எனப்படும் ஆதிநாராயணன்  ஒரு நேர்மையான பொலீஸ் உயரதிகாரி. அதேவேளை ஒரு சராசரி மனிதனாக சமூக அவலங்கள் பற்றிய விமர்சனமும் கோபமும் கொண்டவன். சமூகக் குற்றவாளிகளையும் நியாயம் மறுக்கப்பட்டதற்காகப் போராடும் தீவிரவாதிகளையும் வேறுபிரித்துப் புரிந்துகொள்ளும் அறிவுள்ள அதேவேளை அரசு இயந்திரத்தைக் குழப்புவதற்காக அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் உடைமைகளையும் அழிவுக்குள்ளாக்கும் நாசவேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை வன்மையாக எதிர்ப்பவன்.


தன்னைப் போலவே நேர்மையான மற்றொரு அதிகாரியான நண்பன் அப்பாஸுடன் சேர்ந்து பத்ரி என்பவனின் தலைமையில் இயங்கும் ஒரு தீவிரவாதக்கும்பலை மடக்குவதற்காகத் திட்டமொன்றை இரகசியமாய் செயற்படுத்துகின்றான்.


அந்தத் திட்டத்தின் போக்கிலே ஒருநாள் காரொன்றிலே வரும் சில தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கின்றனர். அவர்களில் காரை ஓட்டிவந்தவனைத் தவிர மற்றவர்களை உயிருடன் பிடிக்க முடியவில்லை. இதனால் 'நான் வெறும் கூலிக்கு அமர்த்தப்பட்ட வன்; தீவிரவாதிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை' என்று சாதித்துக் கொண்டிருக்கும் அந்தக் கார்ச் சாரதியை தனது காவலில் வைத்து விசாரிக்கின்றான் ஆதி.


பொலீஸ் காவலில் இருவரும் விளக்கு வெளிச்சத்தின் கீழ் எதிரெதிராக அமர்ந்திருக்க ஆரம்பமாகின்றது விசாரணை.

தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் பலியான குழந்தைகளின் உடல்களின் புகைப்படங்களை அவன் முன்னே பரப்புகிறான் ஆதி...

 'இதெல்லாம் ப்ளாக் அண்ட் வைட்! கலர்ல பார்க்கணும் ஒரே ரத்தம்! ஆனா ஒரே கலர்! இதுல ஒரு போட்டோ ம்ம்.. இது.. டைம் மெகசின்ல கலர்ல வந்துது. உலகப்புகழ் நமக்கு எப்படியெல்லாம் கிடைக்குது பார்த்தியா?


உன்னப் பார்த்தா இந்த மாதிரி வீண்பலி குடுக்கிற கூட்டத்தில இருக்கிறவன் மாதிரித் தெரியலியே..? You are seem to be driven by an idiology! சித்தாந்தத்தினால உந்தப்பட்டவன் மாதிரி இருக்கேன்னு சொன்னேன். உன்னப் பார்த்தாப் படிச்சவன் மாதிரித் தெரியுது..உன் கண்ணுல கலாசார பலம் தெரியுது. மத்தவங்க உயிர்கள் மேல மரியாதை இல்லாத இந்த மாதிரி ஆளுங்களப் பத்தி என்ன நெனைக்கிற..?


சித்தாந்தம் எதுவாக வேணும்னா இருக்கட்டுமே..சாமி,மதம், அரசியல், மக்கள்நல மேம்பாடு இப்படியெல்லாம் சொல்லிட்டா உயிரைப் பறிக்கிற உரிமை வந்திடுமா என்ன? அதுக்காக ஒரு கன்னத்தில அடிச்சா மறுகன்னத்தைக் காட்டுங்கன்னு சொல்லல்ல.. உங்க கோபத்தை எங்ககிட்ட காட்டுங்க ..அதான் சாகிறதுக்குத்தான் தயாரா இருக்கிறோமே..யார் கண்டா, செத்துப்போன இந்த இருபத்தைஞ்சு முப்பது குழந்தைகள்ல ஒண்ணு ரெண்டு உன்னைப்போல தீவிரவாதியாகக் கூட வந்திருக்கலாமில்லியா?

இதைக் கேட்டதும் நக்கலாகக் கைதட்டுகின்றான் பிடிபட்ட அந்தத் தீவிரவாதி.

' என்ன ஏதாவது தப்பாகப் பேசிட்டேனா.. உங்க நம்பிக்கைக்கு விரோதமா ஏதாவது சொல்லிட்டேனா? சரி, நீங்க நம்பறது எதுன்னு சொல்லுங்க அதைப்பத்திப் பேசுவோம்..எதிலயாவது நம்பிக்கை இருக்கா? கண்டிப்பா கடவுள் நம்பிக்கை இருக்காது..எனக்கும் இல்ல அப்படீன்னா நம்புவியா?


இந்த பாரு எனக்கு அடிச்சுப் பேசவைக்கிறதில நம்பிக்கை இல்ல...நீயே பேசு...எனக்குக் காது இருக்கு கேட்கும்! நானும் ஒன்ன மாதிரி மனுசன்தானே? எனக்கும் ஒன்ன மாதிரி சமுதாயக் கோபமெல்லாம் இருக்கு! உன் கோபம் எனக்குப் புரியும். நீ என்னை நம்பலாம். நான் ஒரு நேர்மையான பொலீஸ் ஓபிஸர்!'  என்று கூற ஆதியைப் பார்த்து நக்கலாகச் நமுட்டுச்சிரிப்பொன்று சிரிக்கின்றான் அந்த ட்ரைவர்.


'அப்படிச் சிரிக்காதே! என்னோட நேர்மையை கேலி செஞ்சாப் பிடிக்காது. சிரி..! இப்ப சிரிப்பே.. அப்புறம் அழுவே! அப்புறம் பேசுவே..இன்னும் கொஞ்சம் அழுத்தினா நெஜம் கூடப்பேசுவே. எனக்கு நெறையப் பொறுமையும் நேரமும் இருக்கு!'

என்று அத்துடன் வீட்டுக்குத் திரும்பும் ஆதிக்கு தான் விசாரித்துக் கொண்டிருக்கும் அந்த ட்ரைவர்தான் தீவிரவாதிகளின் தலைவன் பத்ரி என்பது  மறுநாள் எதிர்பாராதவிதமாகத் தெரிய வருகின்றது.


அவசர அவசரமாக மீண்டும் பொலீஸ் காவலறைக்கு வருகின்றான் ஆதி.


இப்போது ஆதிக்கும் பத்ரிக்கும் இடையே நிகழும் உரையாடலைக் கேளுங்கள் நண்பர்களே!


'என்னடா நீ இவ்வளவு திமிரா பயப்படாம இருக்கியேன்னு யோசிச்சிட்டே இருந்தேன். ம்ம்.. பார்த்ததுமே தெரிஞ்சிருக்கணும் நீ அடியாள் டைப் இல்லேன்னு.. பத்ரி! இப்ப நீதான் தலைவன்னு தெரிஞ்சப்புறம் பெச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாமே! சி எம் கூட டைரக்டா பேசலாம். ஏறபாடு செய்ய முடியும்'


'ஒங்க பேச்சுவார்த்தையில எனக்கு நம்பிக்கையில்ல...நான் போராளி!'


'ம்! அப்ப இங்கயே சாகவேண்டியதுதான்!'


'நான் செத்தா விழுற விதையில ஆயிரம் பத்ரி மொளைப்பாங்க!'


'அதெல்லாம் மொளைக்க மாட்டாங்க! நீ செத்தா பயம்தான் மொளைக்கும்! (சிரிப்புடன்) நீ கனவு கண்டிட்டிருக்கிற புரட்சி இயக்கம் இதெல்லாம் என்னிக்கோ நீர்த்துப் போச்சு..ஒனக்குச் சித்தாத்தம் கத்துக்கொடுத்தபெரியவங்கள்ளாம் செத்துப்போயிட்டாங்க..பாதிப்பேர்..
ரிட்டயராயிட்டாங்க...இப்ப மிச்சம் இருக்கிறது ஒன்னமாதிரி ஆளுங்கதான் பொறுக்கிக்கும் போராளிக்கும் கலப்புத் திருமணம் செஞ்சதில பொறந்த புள்ளை நீ ஒனக்கப்புறமிருக்கிற சந்ததிய உத்துப்பார் சினிமா பாத்து வளர்ந்த பலகீனமான கூட்டம்தான் தெரியும்.. அவங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும் இல்ல மிதிச்சி நசுக்கிடும்!'


' அதுக்கு முன்னால உங்க அரசாங்கமே விலைக்குவரும்.  அப்போ பாம்பை நசுக்கிற மாதிரி தலையை மிதிச்சி நசுக்கிடுவோம். ஆனா கொஞ்சநேரம் வால் மட்டும் துள்ளிட்டிருக்கும். இப்போ தலையில கால் வச்சாச்சு... அதான் நீ ரொம்பத் துள்ளறே!'


'இரு...இரு! நீ மிதிச்சது தலையா வாலாங்கறது பேசவேண்டியவன் பேசினாப்புறம்தானே தெரியும்?'


சில குறுக்கீடுகளுக்குப் பிறகு மீண்டும் தொடருகின்றது உரையாடல்


'உனக்குத் தூக்குத் தண்டனை இல்லாம என்னால செய்ய முடியும்..
அரசாங்கம் ஒரு சின்ன டீலுக்கு ஒத்துப்போறமாதிரி என்னால செய்ய முடியும்.. நம்மளோட இந்தச் சண்டை இப்போதைக்குத்தீரப் போறதில்ல... தற்காலிகத் தோல்வியை சமரசப்பேச்சுவார்த்தையா மாத்திக்கறதுதானே கெட்டிக்காரத்தனம்? உனக்குத் தெரியாததா...நான் சொல்லிக் கொடுக்கணுமா? ஒத்துக்க! சிம்ப்பிள் டீல்!'


'எங்கிட்டேயே டீல் பேசறியா? நான் உனக்கொரு ஓபர் சொல்றேன். இட்ஸ் ட்டூ எ டீல் ஓகே?'


'ஓகே, சொல்லு!'


'நீ தோற்கிற சைட்ல இருந்துக்கிட்டு உன் திறமைய வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கிற...எங்க சைடுக்கு வா! ஜெயிக்கிற சைட்! எங்ககூட உங்க ஆளுங்க நெறையப் பேர் இருக்காங்க'


'யூ பாஸ்டர்ட். என்ன ஒனக்கு வேலை செய்யச் சொல்றியா? நான் யார் கூடப் பேசிட்டிருக்கிற தெரியுமா?


'ஆதி!  DCP! நேர்மையான கொம்பன்!'


'கரெக்ட்! ரொம்ப நேர்மையான கொம்பன்..! நான் நம்பற நேர்மைக்காகவே வாழ்ந்திட்டிருக்கிறவன்!'


'நான் நம்பற கொள்கைக்காகவே சாகத் தயாராயிருக்கிறவன்.இப்ப சொல்லு... யார் கொம்பன்?'



'ம்? நீதான்! வாய்கிழியப் பேசுறதில. பத்ரி நீ சொல்றது மத்தவங்களுக்குக் கேட்டாதான் நீ சொல்றதும் புரியும்! அரசாங்கம் பேசினா இந்த ஒலகத்துக்கே கேக்கும். நீ பேசினா இந்த ரூம்ல எனக்கு மட்டும்தான் கேக்கும்!


எப்படியிருக்கிறது உரையாடல்? இன்னுமிருக்கிறது கேளுங்கள்.


ஒரு கட்டத்தில் பொலீஸ் துறையினுள்ளே கூட ஊடுருவியிருக்கும் தீவிரவாதி பத்ரியின் பலம் ஆதிக்குத் தெரிய வருகின்றது. இதனால் பத்ரியை அடித்துக் காயப்படுத்திவிட்டு ஆஸ்பத்ரிக்கு எடுத்துச் செல்வதுபோல போக்குக் காட்டி ஒதுக்கப்புறமாக ஓரிடத்தில் வைத்து சுட்டுத்தள்ளுவதற்காகத் துப்பாக்கிமுனையில் நிறுத்துகின்றான் ஆதி.


'பத்ரி! இதுதான் நீ சாகப்பொற இடம்...ஆஸ்பத்திரிக்குப்போற வழியில தப்பிச்சிப்போக முயற்சி பண்ணின சுட்டேன் செத்திட்டே அவ்வளவுதான்'

'இப்ப புரியதா...? ஒரு மனுசனை பொறுமையோட எல்லைக்கே விரட்டி அவனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்தைப் பறிச்சிட்டா உன்னமாதிரி ஆளு கூட கோபம் வந்து என்னை மாதிரியே தீவிரவாதியாகிடுவான்'


'நீதான் கொள்கைக்காகச் சாகிற கொம்பனாச்சே... எங்கே சாகு! எப்படிச் சாகிறென்னு பார்க்கிறேன்'.


'தேவைப்படும்போது மட்டும்தான் நாங்க உயிரைத் தியாகம் செய்வோம் தேவையில்லாம உயிரை விரயம் பண்றது எனக்குப் பிடிக்காது. உன்னை மாதிரி சம்பளம் பென்சன் செத்தா இன்ஷுரன்ஸ் இதெல்லாம் கிடையாது. எங்களோடது சேவை நோக்கமுள்ள சமுதாயம்தான். Free social service society! இப்ப சொல்லு யாரு பெரியவன்?'


'ஆமாடா.. இந்த யாரு பெரியவன் என்ற இந்தச் சின்னத்தனமான போட்டியில சிக்கித்தான்  உங்க கூட்டமே சின்னாபின்னமாச்சு. யார் பெரியவன்னு தைரியமிருந்த சொஸைட்டியில வந்த காட்டு! சேவை செய்!  காட்டுல இருந்து என்னடா பண்றீங்க?'


'நான்  செய்யத் தயாராக இருக்கேன். ஆனா செய்ய விடுவான்களா உன் முதலாளிங்க.. அரசியல்வாதிங்க..? உன்னைத் திட்டம் போட்டு ட்ரெயினிங் கொடுத்து பொலீஸ்காரனாக்கிய அதே அரசியல்வாதிங்கதான் என்னைக் காட்டுக்குள்ள வச்சித் தீவிரவாதியாக்கினான் வைச்சிருக்கிறான். எதையும் திங்கிற அந்த அரசியல் பன்னிங்களைத் தொரத்தினாத்தான் நீயும் நானும் நன்மை செய்ய முடியும்!'


'அந்தப் பன்னிங்களத் தொரத்த குச்சி போதும்! துப்பாக்கி தேவையில்ல.. அரசியலைத் திருத்த பல வழிகள் இருக்கு. துப்பாக்கியால பொறக்கிற அரசியல் துப்பாக்கியாலதான்  சாகும். துப்பாக்கி புரட்சிக்குத் தேவையான ஆயுதம்ங்கி நம்பிக்கை  எல்லோருக்குமே போயிட்டிருக்கு.


'அப்போ நீ எதுக்குத் துப்பாக்கி வச்சிருக்க?'


'நீதான் காரணம்! உங்கமாதிரி ஆளுங்ககிட்டயிருந்து என்னையும் என்னை நம்பியிருக்கிறவங்களையும் பாதுகாக்கணுமில்ல?'

'அப்போ எங்களப் பார்த்து பயமிருக்குங்கற உண்மையை நீ ஒத்துக்கிறே?'

'உண்மையை ஒத்துக்கிற தைரியம் எங்கிட்ட இருக்கு...அதுக்குத் தைரியமில்லாத முட்டாள் நீதான்?'

'பேசிக்கிட்டேயிருக்கே....? கொல்லத்தான என்னை இங்க கொண்டு வந்தே Go ahead! 'ரொம்ப கோபமாயிருக்கேல்ல. ஆனா உன்னால என்னக் கொல்ல முடியாது!'

'அப்படியா!'

'ஆனா..எந்த உறுத்தலும் இல்லாம உன்ன என்னால கொல்ல முடியும். உன்னோட முட்டாள்தனமான சட்டம் நீ ஆசைப்படற எதையுமே செய்ய விடாது. நீ என்னைக் கொன்னுட்டா உன்னோட மிடில்க்ளாஸ் மனசாட்சி உன்ன உறுத்தி உறுத்திக் கொன்னுடும். என்னைக் கொல்றதுக்காக நீ நம்பற நேர்மையை நீ மதிக்கிற காக்கிச்சட்டையை கறைபடுத்த முடியும்னா அதுவும் எனக்கு வெற்றிதான். Go ahead! I'm honoured go ahead!


'பத்ரி! இந்த விளையாட்டுல ஜெயிக்கிறதோ தோற்கிறதோ முக்கியமில்ல. சாகிறதும் உயிரோட இருக்கிறதும்தான். Thanks, நல்ல நேரத்தில நல்லபுத்தி சொன்னே. ஆனா.. கெட்டிக்காரத்தனமாப் பேசி சாவுலருந்து தப்பிச்சிட்டதா நெனைக்காதே.. இன்னும் கொஞ்ச நாள்ல சாகிற வரம் கேட்டு நீ என்கிட்ட கெஞ்சப்போறே. வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான். உன் பயத்தை உன் கண்ணுல நா பார்த்திட்டேன்! அதை மெதுவா..நிதானமா..வெளிய கொண்டு வந்து ஒனக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் அதுல எக்ஸ்பர்ட்!'

இப்படிப் போகிறது நண்பர்களே, அந்த உரையாடல்.


இவை ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு திரையிடப்பட்ட குருதிப் புனல் படத்தில் வரும் உரையாடல்கள். இவற்றில் அடங்கியிருக்கும் கருத்துகள்  நம் ஒவ்வொருவருக்கும் உடன்பாடானவையா இல்லையா என்பது தெரியாவிட்டாலும்  அவை  இன்றும் கூட உறைக்கின்ற -யதார்த்தங்கள் என்றாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?


இதைப்பற்றி உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் நண்பர்களே!


-'Mutur' Mohammed Rafi

Monday, January 16, 2012

ரயிலே... ரயிலே... ஒருநிமிடம்!







இரயில் சிநேகிதிகள்!





'நாளை நமதே' என்று ஓர் பழைய எம்ஜியார் படம் அல்லது பழைய அமிதாப் காலத்து  ஹிந்திப்படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும். வில்லனால் சிறுவயதில் திசைக்கொன்றாய் பிரிந்துபோன சகோதரர்கள் கடைசியில் மேடையில் குடும்பப் பாட்டு ஒன்றைப் பாடித்தான் ஒன்று சேர்வார்கள்.


சரிதான், அதற்கும் இந்தப் பத்திக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று கேட்கிறீர்களா? இல்லாமலா எழுதப்போகின்றேன்... இதுவும் ஒரு பிரிவு பற்றிய கதைதான். ஆனால் பிரிந்தவர்கள் சகோதரர்களல்ல; நண்பர்கள்!

இது நடந்து ஏறத்தாழ 20  ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் பின்னிரவு மழையில் நனைந்த பூமியாய் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இன்னும்  மனதிலே ஈரமாகவேதான் இருக்கின்றது.
\
இதை நான் இப்போது எழுதுவதற்குரிய காரணமும் இந்தத் தொடரின் தலைப்பும் ஒன்றுதான். ஆம்! அது  என்றைக்கோ தவறவிட்டுவிட்ட எனது சிநேகிதிகள். 'அபியும் நானும்' என்ற திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்வார், 'நிகழ்கால நிகழ்ச்சிகள்தானே எதிர்காலத்தில் இனிமையான நினைவுகளாகின்றன' என்று.


அது உண்மைதான்!


1991ல் 'மீண்டும் தனது தோழிகளைச் சந்திக்கலாம்தானே' என்று அவன் அலட்சியமாக இருந்ததன் விளைவை இன்றுவரை பிரிவு என்னும் இதய வலியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.


ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல்சார்ந்த ஈர்ப்பைத் தவிர வேறு உறவுகள் உருவாக முடியாது என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்யும் நமது கீழைத்தேய சமூகத்தில் எனது சிநேகிதிகளுக்கும் அவனுக்குமிருந்த நட்பை நான், நீங்கள், சமூகம் எல்லோரும் எப்படிப் புரிந்து கொள்வோம்?

அன்றைக்கு இளம் யுவதிகளாக இருந்த அவர்கள் இப்போது குறைந்தது நடுத்தரவயது பெண்மணிகளாகி மனைவிகளாகவும் தாயாகவும் மாறியிருப்பார்கள். இயல்பாகவே குடும்பச்சூழல் காரணமாக கணவர் தொடங்கி குழந்தைகள்பராமரிப்பு வரை ஒரு குடும்பப்பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலையில் ஆண்களைப்போல கடந்தகால நட்புகளை நினைத்துப் பார்க்கவே நேரமிருக்காது.


அபூர்வமாக நேரமிருந்தாலும் கூட இவ்வாறான நட்புகளைத் தொடர்ந்து பேணுவதில் இருக்கும் சமூகக் காரணிகள் அவற்றை அனுமதிப்பதில்லை. ஆயினும் சிறுவயதிலே எப்போதோ எடுத்துக்கொண்ட ஓர் புகைப்படத்தை வெகுகாலம் கழித்துப் பார்க்கும்போது ஏற்படும் ஒருவித பரவச உணர்வுகள், பதின்வயதில் கேட்டு இரசித்த பாடல் ஒன்றை இப்போது கேட்கும்போது மனதிலே நிழலாடும் இனிய நினைவுகள்  இந்த பத்தியை வாசிக்க நேர்ந்தால் அவனது இனிய சிநேகிகிதிகளுக்கும் தோன்றலாம்.


நம்மோடு கூட இருப்பவருக்குக் காண்பிப்பதற்குள்ளே கணத்தில் மறைந்துவிடும் ஒரு நடுநிசி வால்வெள்ளி போல இதைப் படித்துவிட்டு பிறருக்குச் சொல்லாமலே இரசித்துவிட்டு மறந்தவிடலாம் தோழிகளே - உங்களால் முடிந்தால்!
 


அது 1991ம் வருடம். அப்போது அவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் (விஞ்.) பிரிவு மாணவன். முந்தைய ஆண்டில் வடகிழக்கு முழுவதும் தலைவிரித்தாடிய வன்செயல்களினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதிலே இருந்த சாத்தியமான உயிராபத்தை கருதி கொழும்பு அல்லது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் கோரிப் போராடிக் கொண்டிருந்த காலம் அது.


இடமாற்றம் பெறுவதிலேயிருந்த தாமதம், நம்பிக்கையீனம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயர்கல்வியைத் துறந்துவிட்டு அரசாங்கத் தொழில் ஒன்றில் நிரந்தரமாக இணைந்துவிடலாமா என்று மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையில் மிக முக்கியமான முடிவை தாமதிக்காமல் எடுத்தேயாக வேண்டிய புள்ளியில் அவன் இருந்த காலம் அது. இதனால் அவ்வப்போது கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்றுவரவேண்டியிருந்தது அவனுக்கு.


அவ்வாறு ஒருதடவை அவன் ரயில்வண்டியில் கொழும்பு சென்று கொண்டிருந்தான். அந்த நாட்களிலே திருகோணமலையிலிருந்து மாலையில் புறப்படும் ரயிலில் ஏறினால் கல்லோயாச் சந்தியில் இறங்கி மட்டக்களப்பிலிருந்து வரும் இரவு தபால் வண்டிக்குக் காத்துக்கிடந்து ஏறினால்தான் கொழும்புப் பயணம் செய்யலாம். அதுவும் சிலவேளகளில் மட்டக்களப்பிலிருந்து வரும் புகையிரதத்தின் பயணிகள் பெட்டியில் கூட்டம் நிரம்பி வழியும் அப்போதெல்லாம் நிற்பதற்குக் கூட இடம்போதாமலிருக்கும்.



அன்றும் கல்லோயாச் சந்தியில் வந்து நின்ற ரயிலிலில் கூட்டம் கதவுகள் வரை பிதுங்கி நின்றது. வழமையாக ரயில் நின்றால் சும்மாவேனும் புகையிரத மேடையில் இறங்கிவிட்டு ஏறும் ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் கூட 'எங்கே இறங்கினால் வேறுயாரும் இடத்தைப் பிடித்துவிடுவார்களோ' என்ற பயத்தில் அன்றிரவு தேன்கூட்டில் மொய்த்திருக்கும் தேனீக்களைப்போல இறங்காமல் ஒட்டியிருந்தார்கள்.


ஒவ்வொரு கதவாய் தேடியலைந்து எப்படியோ ஒருவழியாய் பயணிகள் பெட்டியினுள் எறிவிட்டான். முதுகில் தொங்கிய தோள்பையுடன் நின்றுகொண்டிருக்கும் பயணிகளைக்கடந்து உட்செல்வதே பெரும்பாடாக இருந்தது. வழிமுழுவதும் "Excuse-me" க்களை தாராளமாக வாரியிறைத்து ஒருவாறு ஓரளவு நெருக்கடி குறைந்த இடத்தில் போய் நின்று கொண்டான்.




அது ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியின் கடைசி இருக்கையுடன் சேர்ந்தவாறுள்ள ஒருமுனை என்பதால் வழியில் நிற்பதே சற்றுச் சிரமமாக இருந்தது. அவனும் இன்னும் சில இளைஞர்களும் கால்கள் வலிக்க நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையில் ஆறு அல்லது ஏழு இளம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றாக வந்திருப்பவர்கள் போலத் தோன்றியது.


இளைஞனான அவனது பார்வை இயல்பாக அவர்களை நோக்கி செல்லும் போதெல்லாம் அந்த இளம் பெண்களின் பார்வைகளுடன் எதேச்சையாக உரசிக் கொண்டது. அவர்கள் ஒன்று சேர்ந்து அவனையே பார்ப்பது போலிருந்தது  உண்மையா அல்லது பிரமையா என்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால் மெல்லிய கூச்ச உணர்வுக்குள்ளாகி தனது பார்வை வேறுபுறமாகத் திருப்பிக்கொள்ள முயன்றான். ஆனால்  அவர்கள் தன்னைப் பாரக்கிறார்களா என்று திரும்பிப் பார்க்கத்தோன்றியது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நின்றிருந்தான்.

இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் அந்த நள்ளிரவில் இருளைக் கிழித்தபடி விரைந்து கொண்டிருந்தது  இரவுத் தபால் வண்டி.
அப்போது ரயில்வே காவலர்கள் பயணச்சீட்டுகளைப் பரிசோதித்துக் கொண்டுவந்தனர். அதனால் இருக்கையிலிருந்தவர்கள் சற்று எழுந்து சீட்டுகளைக் காட்டிவிட்டு மீண்டும் தங்களுக்கிடையில் இடம்மாற்றிக் கொண்டு அமர்ந்தனர், அந்த இளம்பெண்கள்.



சிறிது நேரத்தில் அவனது தோள்பையை பின்னாலிருந்து யாரோ தட்டுவது போலிருக்கத் திரும்பிக் கீழே பார்த்தான். அந்த இளம்பெண்களில் ஒருத்தி சிரித்தவாறு தனக்குப் பக்கத்தில் சிறு இடத்தை அவனுக்காக   ஒதுக்கி அதிலே அமருமாறு சைகை செய்தாள். அவன் லேசாகத் தயங்கியபோது எதிரில் நின்றிருந்தவர்களிலே யாரோ அந்த இடத்தைக் குறிவைக்கவே சட்டென அந்த இடத்தில் இருந்துவிட்டான்.


நன்றி சொல்லிவிட்டு அவன் அமர்ந்தாலும் உண்மையில்  அவனும் சேர்ந்து உட்கார்வதற்கு அந்த இருக்கை போதாது. ஆனால் அது 'மனமிருந்தால்...' என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இடம் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவைப்பட்டிருக்கவில்லை அவனுக்கு.  தான் தயங்கிய வேளையிலே எதிரில் நின்ற வேறொரு இளைஞன் இதே இருக்கைக்கு முண்டியடித்தபோது இடம்தந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் அவன் காணத்தவறவில்லை. (Contd...)





-'Mutur ' Mohammed Rafi

Thursday, January 12, 2012

உடைவது சிலை - ஓயாத நிலை!





தொடரும் சிலை உடைப்புகள்!








ண்மையில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பிலே நடாத்திய ஆரப்பாட்ட ஊர்வலத்தையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இழுபறிகள் பற்றிய செய்திகளையும் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி மற்றும் பிற ஊடகங்களிலும் அறிந்திருக்கலாம்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தின்போது மாணவர்கள் எழுப்பிய கோஷங்களையும் கையில் ஏந்தியிருந்த சுலோகங்களையும் அவதானித்தபோது அவர்களுக்கும் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே நீண்டகால முறுகல்நிலை இருந்து வருவது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓர் ஆர்ப்பாட்டமாக வெடித்துக்  கிளம்புவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு சிலையின் உடைப்பு!


பல்கலைக்கழக மாணவர்களின் முன்னைய போராட்டங்களை நினைவூட்டும் வகையில் நிறுவிப் போற்றப்பட்டிருந்த ஒரு விடுதலைச்சிலை அன்றைய தினம் அதிகாலையில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது. இந்த விஷமவேலைக்கு யார் காரணம் என்று தெரியாத போதிலும் உபவேந்தர்தான் பின்னணி என்று மாணவர்களும் மாணவர்களின் உள்சதிவேலை என்று உபவேந்தரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரச்சினை இன்னும் சுமுக நிலையை எட்டப்படாத நிலையில் வழமைபோலவே பல்கலைக்கழகம் காலவரையறையின்றி...


சரி, அது  இருக்கட்டும் ஒருபுறம்!



 






இப்போது அறியப்படும் மற்றொரு செய்தியும் ஒரு சிலை உடைப்புத்தான்.
இது நிகழ்ந்திருப்பது தீவின் கிழக்கில் மட்டக்களப்புக்கும் காத்தான்குடிக்கும் இடைப்பட்ட பிரதேசமான ஆரையம்பதியில். மட்டக்களப்பு என்றதும் சட்டென யாருக்கும் நினைவுக்கு வருவது பாடும் மீன்களும் சுவாமி விபுலானந்தரும்தான்.


சுவாமி விபுலானந்தரைப் போன்றே தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் மற்றுமொரு மேதையான  சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலைதான் விஷமிகளால் உடைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அந்தச் சிலை நிறுவப்பட்ட தினத்திலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளதுதான் வேதனை. இதனை யார் செய்திருப்பார்கள் என்ற தேடலில் நேரமும் உழைப்பும்தான் விரயமாகுமே தவிர வேறுபயன்கள் கிடைக்கப்போவதில்லை.







இதேபோல ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு திருகோணமலை நகரிலும் நடந்தேறியதை பலர் மறந்திருப்பீர்கள். அதிலே பாதிக்கப்பட்டவர் தமிழ் பேசும் மக்களால் பெரிதும் போற்றப்படும் தந்தை செல்வநாயகத்தின்  உருவச்சிலை. தற்போது அவரது வேறு ஒரு சிலை அதேயிடத்தில் நிறுவப்பட்டுள்ள போதிலும் மீண்டும் அதே போல ஒரு விஷமச்செயல் நிகழாது என்பதற்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது.


அதேவேளை இதே திருகோணமலை நகரிலே சில வருடங்களுக்கு முன்னர் ஒரு உருவச்சிலை தொடர்பாக நிகழ்ந்த அமைதியின்மையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்செயல்களும் ஏனோ ஞாபக அரங்கேறுகின்றன. பல இரத்தக்களறிகள்.. சில உயிர்ப்பலிகள்.. நீதிமன்றத் தலையீடுகள் என்றெல்லாம் இழுபட்டு கடைசியில் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தின் இடது முனையிலே மிகவும் பாதுகாப்பாகி, முன்னிலும் பெரிதாகி, மேலும் சாந்தமாகி  பீடம் அமர்ந்தார் கொல்லாமையைப் போதித்த போதி-மாதவன்!

- Jesslya Jessly


குறிப்பு:   தினக்குரல் (2009.05.03 ஞாயிறு)  பத்திரிகையில் வெளியான  நண்பர் மூதூர் மொகமட் ராபி யின் இந்தக் கவிதை இன்றைய எனது பத்திக்கும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?



இன்றைய

திருகோணமலை!



வீதிக்கு வீதி சிறுகோயில்
தெருவுக்கு ஒரு பள்ளிவாசல்
சந்திகள் தோறும் மாதாசிலை
உச்சிமலையிலே புத்தபகவான்!


மூன்று புறமும் வங்கக்கடல்
நான்குதிசையும் காவல் அரண்
நெடிதுயர்ந்த நீதிமன்றம்
நின்றுபோகும் மணிக்கோபுரம்!


அலறியோடும் ஆம்பலன்சுகள்
அகதிகள் வழியும் ஆஸ்பத்திரி
காற்றும் வராத வாடகை வீடு
கனவிலும் ஓடும் கேபிள் டீவி!


ஓய்வே இல்லாத மனிதர்கள்
டியூஷன் குறையாத குழந்தைகள்
செல்போன் தின்னும் இளைஞர்கள்
செத்துப்போன லைப்ரரிகள்!


வயதுமீறிய ஆசைகள்
வசதிகள் பார்த்திடும் வேகங்கள்
மனசு முழுவதும் கொடூரங்கள்
குப்பைகளிலே குழந்தைப் பிணங்கள்!


-மூதூர் மொகமட் ராபி-

அங்கேயும் இப்படியா?





இதுவும் ஓர் அனுபவம்தான்!






ன்று ஒரு புதன்கிழமை.  ஒரு அலுவலாக மாகாணக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அண்மையில் நிகழ்ந்த ஆசிரியர் இடமாற்றங்கள் காரணமாக ஒர் பெரும் கூட்டமே காத்திருந்தது. மாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்திப்பதற்குரிய படிவத்தைப் பெற்று நிரப்பி நிர்வாக அலுவலரின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகே இரு நடுத்தர வயதைத்தாண்டிய பெண்மணிகள் காத்திருந்தனர். அவர்களின் உரையாடலை எதேச்சையாக அவதானித்ததிலே அவர்களிருவரும் மட்டக்களப்பிலிருந்து வந்திருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டேன்.


'உங்களது இலக்கம் எத்தனை தம்பி?' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். 'இல. 12' என்று நான் பதில் கூறியதும் அவர்களிருவரது முகத்திலும் ஏமாற்றம் கலந்த ஆச்சரிய மின்னல்கள்!
 'இதென்னது..நாங்க இருவரும் விடியல் காலையிலேயே வந்து காத்துக்கிடக்கிறோம். எங்களுக்கு 44! இப்ப வந்த உங்களுக்கு 12 தந்திருக்கிறாங்களே?' என்றார்கள்.


 'அப்படியா!' என்று வியந்துகேட்ட எனக்கு அவர்களது ஆதங்கம் புரிந்தது.  அவர்களது நிலையைப் பார்க்கப் பாவமாகத்தானிருந்தது. ஆனால் படிவத்திலேயே இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாற்றிக் கொடுக்கவும் முடியாது.



அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக, அரச அலுவலகங்களிலே நிகழும் இதுபோன்ற சிறியது முதல் பெரியது வரையிலான குளறுபடிகள் பற்றிய பேச்சை எடுத்தேன். அவ்வளவுதான் யாரிடம் இதுபற்றித் தங்களது உள்ளக் குமுறல்களையெல்லாம் கொட்டலாம் என்று காத்திருந்தவர்கள் போல் கொட்டித் தீரத்துவிட்டார்கள், ஆசிரியைகளான அந்தப் பெண்மணிகள் இருவரும்.

அப்போதுதான் புரிந்தது நம்மைப்போலவே ஒவ்வொரு ஆசிரியர்களுக்குள்ளும் பல உண்மைக் கதைகள் உள்ளன என்பது.


 ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களது அனுபவங்களை இங்கே அவற்றின் உள்ளடக்கம் காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதுள்ளது.


எனினும் அவர்களது உரையாடலின் இறுதியில், தங்களது பிரதேசத்தில் அண்மையிலே விநியோகிக்கப்பட்ட ஒரு கவிதை வடிவிலான துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தந்தனர். அன்புச் செல்வன் என்பவரின் பெயர் பொறித்திருக்கும் அதனை  இங்கே தருகின்றேன். பாருங்கள்:


- மூதூர் மொகமட்ராபி



நிர்வாக சுதந்திரம்!


ன்புடையீர்!


இதுவோர் அரச திணைக்களம்
ஆதலால் நீங்கள்
வரலாம் போகலாம்
வராமலும் இருக்கலாம்
வந்தவுடன் போகலாம்
நாளையும் வரலாம்!

கேள்வியில்லை
கேட்பாரில்லை!



அமர்ந்திருக்கலாம்
நடந்து திரியலாம்
அமைதியாயிருக்கலாம்
உரத்தும் பேசலாம்

ஏனென்று எந்தக்
கேள்வியுமில்லை

வேலை செய்யலாம்
செய்யாது இருக்கலாம்!



காலையில் வந்து
காணாமல்போய்
மாலையில் வந்து
ஒப்பமும் போடலாம்!

யாரும்வந்து யாரோடும்
வந்தவரோடு வாசலில் நிற்கலாம்
வாசலில் நின்றே
வேடிக்கை பாரக்கலாம்!



முறுக்குக் கொறிக்கலாம்
முட்டாய் தின்னலாம்
கொறித்துக் கொண்டே
கோலும் பேசலாம்

கைத்தொலைபேசியைக்
காதில்வைத்து
நடக்கலாம் சிரிக்கலாம்
நடனமும் ஆடலாம்

வேட்டிகட்டலாம்
டையும் கட்டலாம்
வெள்ளிக்கிழமை வேலைநாள்
வேறுபாடின்றி
பொட்டும் வைக்கலாம்!


விடுமுறை எடுக்கலாம்
எடுக்காமலிருக்கலாம்
விடுமுறைக்கடிதம்
தரலாம் விடலாம்;
பொறுப்புகள் எதுவும்
ஏற்காதிருக்கலாம்
ஏற்றால் எதுவும்
செய்யாதிருக்கலாம்

கேள்வியுமில்லை
கேட்பாருமில்லை!


அன்புடையீர்!

இதுவோர் அரசதிணைக்களம்
இங்கே யாரும் யாருக்கும்
அரசனுமில்லை
ஆண்டியுமில்லை

யாரும் வரவும்
யாரும் போகவும்
எந்தத் தடையும்
எவருக்கும் இல்லை!


இத்தனையும் செய்து
எத்தனை மகிழ்ச்சி
மாத முடிவில் ஒப்பமிட்டதும்
ஊதியம் கிடைக்கின்றது!

என்னருமைத் தாய்நாட்டின்
அரசநிர்வாகத்திற்கும்
ஜனநாயக சோஸலிச
சுதந்திரக் குடியரசிற்கும்
ஓ போடு!


-அன்புச் செல்வன்-

Tuesday, January 3, 2012

இன்னா செய்தாரை...!



ஒரு அதிபரும்  
ஒரு இறப்பர் முத்திரையும்!







முதல்நியமனம் கிடைத்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் எனது ஊரிலுள்ள பாடசாலையில் கடமையாற்றியபின்பு திருகோணமலை வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இடம் மாற்றம் பெற்று வந்திருந்தேன்.


அது ஆறாம் தரம் வரை மட்டுமேயுள்ள ஓர் சிறு பாடசாலை. ஒழுங்கான சுற்றுமதிலோ அடைப்புவேலியோ கிடையாது. அங்கு கடமையாற்றும் அதிபர் முதல் ஆசிரியர்கள் வரை அநேகர் நகரிலிருந்து வந்து செல்பவர்கள். இதனால் ஏறத்தாழ காலையில் கூடி பிற்பகலில் கலையும் அங்காடி போலத்தான் பாடசாலையும் நடந்து வந்தது.


அதிபர் நடுத்தர வயதைத் தாண்டிய மனிதர்.


நேர முகாமைத்துவம் என்றால், 'அது எந்த ஊருக்குப்போகும் வழி?' என்று கேட்பார். காலைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவுப் பொதியைப் பிரித்து பாண் துண்டுகளை மென்று தின்னும் அவரிடம் தனிமனித ஒழுக்கம் எவ்வாறிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.


அவருக்கு பாடசாலை நடவடிக்கைகளை விட அவர் வீட்டில் வைத்து நடாத்தும் துணிமணி வியாபாரமே முக்கியமாக இருந்தது. இதனால் காலையில் பாடசாலைக்கு நேரம் கழித்துத்தான் வருகை தருவார். அவரது அலுவலகம் திறக்கும் வரை ஆசிரியர்கள் உட்பட அனைவரும் காத்துக்கிடக்க வேண்டும்.


அதிபர் அல்லது அவரது உதவியாகச் செயற்பட்ட ஓர் பறங்கி இனத்தவரான ஆசிரியை வந்து, பக்கத்து வீடொன்றில் இருந்து அலுவலகத் திறப்புக்கோர்வையைப் பெற்று வந்தால்தான் பாடசாலைச் சுத்தம் உட்பட சகல கருமங்களும் ஆரம்பிக்கும். இதற்கிடையில் நேரம் முதலாம் பாடவேளை முடிவடைவயும் தறுவாயாகிவிடும்.



எனது கிராமத்து பாடசாலையில் சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் கடமையாற்றிப் பழகியிருந்த எனக்கு இந்தப்பாடசாலை நிருவாகத்தின் கீழ் பணிபுரிவது எப்படியிருந்திருக்கும். எவ்வளவுதான் முயன்ற போதிலும் இவரது நேர்த்தியற்ற போக்குகளுடன் சமரசம் செய்ய முடியாதிருந்தது. அத்துடன் நிர்வாக ரீதியாகச் சில தொல்லைகளையும் எனக்கு தர ஆரம்பித்திருந்தார். இதனால் அதிபருக்கும் எனக்குமிடையிலே சிறுசிறு முரண்பாடுகள் ஏற்படலாயின.

அது  ஒரு பிரச்சினையாக வெளித்தோன்றுவதற்கிடையிலே சிறிதுகாலம் பனிப்போர் நிலையில் இருந்து வந்தது. அந்தப் பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான அனுபவம்தான் இது!








நான் முரண்பட்டதிலிருந்து அதிபருக்கு என்னிலும் மற்றவர்களிலும் சந்தேகம் தோன்றி  வலுவடைய ஆரம்பித்தது. தனது நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கும் நானும் மற்றவர்களும் எங்கே தனக்கு ஏதாவது சதி செய்து விடுவோமோ என்று உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கினார். அதுவும் குறிப்பாக என்னில்தான் அதிக ஐயம் கொண்டிருந்தார் அவர்.


அந்தப் பீதியில் அடுத்த வகுப்பறைக்குச் செல்வதென்றால் கூட தனது அலுவலகத்தை  பூட்டிவிட்டுத்தான் செல்வார்.  அதிபரது இந்த அவசியமற்ற குலைநடுக்கத்தைப் பார்த்து ஆசிரியர்களாகிய நாங்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வதுண்டு.  நாள் செல்லச் செல்ல அவரது பீதி முற்றி அலுவலக இறப்பர் முத்திரைகளைக் கூட தனது காற்சட்டைப் பைகளுக்குள் வைத்துக்கொண்டு அலையுமளவுக்கு ஆகிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஒருநாள் மதிய நேரம் புழுக்கம் தாங்காமல் அலுவலகத்தை  பூட்டிவிட்டு மைதானத்தினருகேயிருந்த மாமரத்தின் கீழே உலாவிக் கொண்டிருந்தார் அதிபர். அவ்வாறு உலாவிக் கொண்டிருந்தவர் சட்டென தனக்குப் பின்னே யாரோ நடமாடுவது கண்டு திரும்பினார்.


ஒரு மாணவன் தனது உள்ளங்கைகளைப் பொத்தியவாறு நின்றிருந்தான்.


'சேர்! இந்தாங்க, இது கீழே எங்கேயோ விழுந்து கிடந்துதாம். இதை உங்களுக்கிட்ட குடுத்திட்டு வரச் சொன்னார்'   என்றபடி அவன் நீட்டிய கையில் இருந்தது,


அதிபரது இறப்பர் முத்திரை!


'இது எப்படிடா..?' என்று குழம்பிய அதிபர் அவசர அவசரமாக தனது காற்சட்டைப்பையினுள் கைவிட்டுத்தடவிப் பார்த்தார். அது கிழிந்து ஓட்டையாகி இருந்தது!


அவமானத்தில் முகம் சிவந்த அவர்,  "யார் தந்தது?" என்றார், ஆச்சரியத்துடன்.


'அந்தா நிக்கிறாரு... அந்த சேர்தான்' என்று அந்த மாணவன் கை காட்டிய திசையில் நின்று கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல;

அடியேன்தான்!



-மூதூர் மொகமட் ராபி


Monday, January 2, 2012

சிறுகதை:



செக்குமாடுகள்!










" Sir, May I come in?"

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.

இரவு ஆரம்பித்த மழை இன்னும் தூறிக்கொண்டிருப்பது ஆஸ்பத்திரி கண்ணாடி யன்னலினூடாக மழுப்பலாகத் தெரிந்தது. மழையினாலோ என்னவோ OPD வெறிச்சோடியிருக்க தூறல் மழையின் மெல்லிய ரீங்காரத் தாலாட்டிலே தூக்கம் கண்ணைச் சுழற்றிய போதுதான் இந்த ஆங்கில இடையூறு.


"yes, come in" என்ற எனது பதிலை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்தவன் போல உள்ளே நுழைந்தான் ஓர் இளைஞன். அவனுக்கு இருபத்தி ஐந்து வயதிருக்கலாம். நவீனரக ஆடைகளை மிக நேர்த்தியாக அணிந்து மிடுக்காக இருந்தான் அவன். பளபளப்பான சப்பாத்துக்கள், குளிர்க்கண்ணாடி, கையில் செல்போன், தோளில் பெரிய தோல்பை சகிதம் உள்ளே வந்தவன் தனது கனமான பையைத் தரையில் வைத்துவிட்டுச் சிறிது நேரம் என்னைப் பார்த்தவாறு நின்றிருந்தான். நோயாளிகளை அமர்த்தும் இருக்கையை காட்டி உட்காருமாறு சைகை செய்து விட்டு "Yes!"என்றேன்.

கழுத்துப்பட்டியைத் தளர்த்திக் கொண்டு என்னைச் சந்திக்க வந்த விடயத்தைப்பற்றி அவன் பேசத் தொடங்கிய போது வெளியே மழை உரத்துப் பெய்ய ஆரம்பித்தது. இந்தக் கதை அவன் பேசப்போகும் விடயத்தைப் பற்றியதல்ல என்பதால், அவன் பேசுவதற்கிடையிலே நான் யார் என்பதைச் சொல்லி முடித்து விடுகின்றேன்.


இன்றைய திகதிக்கு இந்த திருகோணமலை நகரிலே இருக்கும் தலைசிறந்த வைத்தியர்களின் பட்டியல் என்று ஏதாவது ஒன்று உங்கள் கையிலிருந்தால் அதிலே எனது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைத் தாண்டாது. சொந்தவீடு, பணக்கார மனைவி, நவீனரக AC கார், விலையுயர்ந்த செல்போன், மடிக்கணணி என்று சுகபோக வாழ்கைதான். இருந்தாலும் சுமார் 16 வருடங்களுக்கு முன்பு இதே திருகோணமலையின் தூசுபடிந்த தெருக்களிலே அப்பாவின் பழைய துருப்பிடித்த சைக்கிளில் பாடசாலைக்கும் டியூசனுக்கும் அலைந்து திரிந்த பழைய வாழ்க்கையை இன்னும் நான் மறந்துவிடவில்லை.










என்னோடு ஒன்றாகப் படித்தவர்களிலே நானும் அலஸ்தோட்டம் சின்னையா மெக்கானிக்கின் மகன் சின்னத்தம்பாவும்தான் மருத்துவத்துறைக்கு எடுபட்டோம். மற்றவர்கள் ஆளுக்கொரு துறையிலும் திசையிலும்  சென்றுவிட்டார்கள். இரண்டொருவர் இயக்கத்துக்கப் போனதுமுண்டு. ஆனால் போய் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அநேகமாகச் செத்திருப்பார்கள். சிலபேர் Swiss, Canada, Australia என்று புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கேள்வி. இங்கே இருப்பவர்களில் எங்கள் முன்வீட்டு பவானி அக்காவின் தம்பி ரதீஸ் மட்டும் நிலாவெளியில் ஒரு பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கின்றான. எப்போதாவது இருந்துவிட்டு ஒருநாள் என்னைக் காண வருவான். அப்படி வந்தால் பாடசாலைக்காலத்தில் பழகிய மாதிரியே தோழமையோடு பேசுவான். தவிர, எனக்கு படிக்கின்ற காலத்திலே நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே இருக்கவில்லை. ஓ! 'இருக்கவில்லை' என்றா சொன்னேன்?  'இருக்கவிடவில்லை' என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.



பாடசாலை விட்டதும் அஜந்தன், ஜிகான், மயூரன், இஜாஸ், பார்த்தீபன், ஸன்பர், ஸ்ரனிஸ்லாஸ் (உச்சரிப்பதற்குக் கடினம் என்பதால் பட்டப்பெயர்: தண்ணிக்கிளாஸ்), சின்னத்தம்பா உட்பட ஒரு குழு  football விளையாடப் போய்விடும். மெத்தடிஸ் பெண்கள் பாடசாலைக்கு முன்னாலுள்ள மைதானம்தான் அவர்களது சொர்க்க பூமி.



எல்லோரும் ஓடித் துரத்தி பந்தை உதைத்து விளையாடுவதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும் எனக்கு. ஆனால, தினமும் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் scholarship classes நினைவுக்கு வந்து ஆட்டத்தில் சேரவிடாமல் பயமுறுத்தும். விளையாடிக் குதூகலிக்க வேண்டிய மாலைவேளை முழுவதும் ஓரே இடத்தில் குந்திக்கொண்டிருக்கும் கொடுமை அது.



பாடசாலை இரண்டு மணிக்கு விடும் காலம் அது. வீடு சென்று சாப்பிட்டதுதான் தாமதம்  tuition கொப்பியைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிடுவேன். மூன்று மணிக்கு ஆரம்பிக்கும்  tuitionக்கு 2.30 க்கே ஓடும் ஆர்வம் புரியாமல் திகைப்பாள் அம்மா. அவவுக்குத் தெரியாது, மூன்று மணிவரை நான் நிற்கப்போவது football ground ல்தான் என்பது.







மைதானத்தில்  team பிரித்து விளையாடும்போது என்னை மட்டும் சேர்க்கவே மாட்டான்கள். விளையாட்டை நடுவிலே விட்டு tuition க்கு ஓடுபவனை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்? பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மட்டும் பந்தடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க tuition க்கு ஓடிப்போனால் மாஸ்டர் திட்டுவார். இதனால், tuition க்கும் போக முடியாமல் பந்தடிக்கும் நண்பர்களின் குதூகலக்களிப்பை விட்டு நகரவும் மனமில்லாமல், நிழல்வாகை மரத்தின் கீழே சாத்தியிருக்கும் சைக்கிள் பாரில் அமர்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன்.



'டேய்! இந்தாடா வந்து விளையாடு..!' என்று நடுமைதானத்தில் நின்று நான் இருக்கும் மரத்தடியை நோக்கிப் பந்தை உயர்த்தியடிப்பான், சின்னத்தம்பா. பந்து என்னை நோக்கிப் பாய்ந்து வர, ஏதோ சொர்க்கத் திரவியம் கிடைத்தது போல இறங்கி ஓடிச்சென்று அவனைக்குறி வைத்து ஓங்கியடிப்பேன். பந்து மிகச்சரியாக தம்பாவின் கால்களுக்குள் போய் இறங்கும். அதைப் பார்த்து சில கணங்கள் திகைத்து நின்றுவிட்டு 'இந்தா நல்லாத்தானே shoot பண்ணுகிறாய்..பிறகு ஏண்டா team க்கு கூப்பிட்டா வர மாட்டேன்கிறாய்?' என்று வியந்து போய் கேட்பான் சின்னத்தம்பா. அவன் படிப்பிலும் நல்ல திறமைசாலி. கால்பந்து விளையாட்டிலும் சூரன். பந்து அவன் கால்களுக்குள் சென்று விட்டால் goal போடாமல் திரும்ப மாட்டான். பந்து அவனிடம் சும்மா நின்று பேசும்.









'டேய், வாடா விளையாட!' என்று எத்தனையோ முறை அவன் அழைத்திருக்கின்றான். அவன் வீட்டில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் விடுவார்கள். ஆனால் என் வீட்டிலோ விளையாட்டு என்ற அந்தப் பேச்சையே எடுக்க முடியாது. கால்பந்தை பார்த்தால் ஏறத்தாழ கால்பந்து போன்ற அப்பாவின் கோபமுகம்தான் நினைவுக்கு வரும். AGA office Chief Clerkஆக வேலைசெய்யும் அப்பாவின் மொத்த கௌரவமுமே நான் பெறவிருந்த  scholarship புள்ளிகளில்தான் உள்ளதாம். அதுவும் அவரது சக ஊழியர்களின் பிள்ளைகளை விட அதிக புள்ளிகள் பெற்றால்தான் மேலும் மதிப்பாம். அதற்காகவே விளையாடும் உரிமையைப் பறித்து பாடசாலை, வீடு, tuition என்ற மூன்று முனைகளுக்குள் மட்டுமே மேயும் செக்குமாடாக வளர்த்தெடுத்தவர்கள், எனது பெற்றோர்கள்.



Scholarship என்பது திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக அரசு நடாத்துகின்ற ஒரு போட்டிப் பரீட்சை. அதிலே சித்தியடைந்தாலும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அந்த உதவித்தொகை கிடைப்பதில்லை. ஆயினும், பாவிகளின் பாவங்களை பாரமுள்ள சிலுவையாக முதுகில் சுமந்த இயேசு பாலனைப்போல பெற்றவர்களின் வரட்டுக் கௌரவங்களையெல்லாம்  மூளையில் சுமக்கின்றார்கள் நமது பாலகர்கள்.



இதனை நினைக்கும்போது வேதனையும் வெறுப்பும் மனதிலே மண்டும். அறிவுக்குத் தேடிக்கற்பது வேறு; அடையமுடியாத வெகுமதிக்காக வருத்தித் திணிப்பது வேறு. இதனைப் புரியாமல் சின்னஞ்சிறு வண்ணத்துப் பூச்சிகளின் செட்டைகளிலே செங்கற்களைக் கட்டிப் பறக்கத் துரத்தும் நமது பெற்றோர்களின் அறியாமையை யாரிடம் சொல்லிப் புலம்புவது?



மாலையில் எனது பணி முடித்து காரில் வீடு திரும்புவேன். முன்பு எனது  நண்பர்கள் விளையாடிய மெத்தடிஸ் மைதானம் சிறுவர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் அதே தெருவிலுள்ள டியூட்டரிகளிலே பாலகர்கள் கூட்டம் அலைமோதும். அப்போதெல்லாம் விளையாடும் உரிமை மறுக்கப்பட்ட எனது பிள்ளைப்பருவமும் டியூட்டரிக் கொட்டில்களிலே அடைபட்டுக்கிடந்த வரட்சியான வாலிபப்பருவமும் நினைவுக்கு வர இதயத்தின் ஓரத்திலே மெல்லிய கசப்பணர்வு தோன்றி மறையும். அதேவேளை சின்னஞ்சிறுவர்கள் எங்காவது மைதானத்திலோ கடற்கரை மணலிலோ விளையாடுவதைப் பார்த்தால் என்மனம் ஆனந்தச் சிறகடிக்கும். எத்தனை அவசர வேலை இருந்தாலும் காரை நிறுத்தி அவர்களின் குதூகலக் களிப்பை கண்களிரண்டால் அள்ளிப்பருகிவிட்டுத்தான் நகர்வேன்.



இப்போது நினைத்துப் பார்த்தால் அன்றைய எனது கால்பந்து நண்பர்களைப் போல, கல்வியை வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஒன்றாக மட்டும் நினைத்துக் கற்வர்கள்தான் என்னை விடவும் கொடுத்து வைத்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமக்குக் கிடைத்த வாழ்க்கை என்ற அற்புத ரசத்தை அதன் ஒவ்வொரு துளியிலும் அனுபவித்தவர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் அவர்கள்தானே தவிர  என்னைப் போல படிப்பே வாழ்க்கையாய் வாழ்ந்த பணக்காரச் செக்குமாடுகளல்ல.









'Shall I display my drugs?' மருந்து நிறுவன இளைஞன் மீண்டும் என்னை அழைத்தபோது வெளியே மழை விட்டிருந்தது.

'Ok you proceed!'

'இதோ இருக்கு நான் சொன்ன sample. இது இப்பதான் புதுசா market க்கு வந்தது. ஆனா இதுல side effects அதிகம் but fast relief!' என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறிமாறிப் பேசிக் கொண்டு தனது மருந்துகளையும் மாத்திரைப் பட்டைகளையும் மேசையிலே அள்ளிப்பரப்பத் தொடங்கினான்.
அவனது ஒவ்வொரு அசைவும் வெகு நாசூக்காகவும் இலாவகமாகவும் இருந்தன. மருந்துப் பொருட்களோடு சேர்த்துத் தனது மருந்து நிறுவனத்தின் அடையாளக் குறிகளுள்ள sticker களையும் வைத்தான். பின்பு சற்றுத் தயங்கியபடி, "Doctor, this is very small gift from our company, if you don't mind.." ஒரு பெரிய பொதியை எனது மேசையின் ஓரமாக வைத்தான். அதிலே தொகையான chocolates, சத்துணவுகள், பால்மா வகைகள் உட்பட பல வகையான பொருட்கள் இருந்தன. அவை எல்லாமே நானும் என்னைப் போன்ற பிற வைத்தியர்களும் அவனது மருந்து நிறுவனத்தின் தயாரிப்புக்களை நோயாளிகளுக்குச் சிபாரிசு செய்வதற்காகத் தரப்படுவதுதான்.



இப்படியான மருந்துகள் எவ்வளவு தூரம் சரியானவை என்பது பொதுவாக யாருக்குமே தெரியாது. எல்லா மருந்து நிறுவனங்களும் ஏறத்தாழ ஒரே இரசாயன மூலப்பொருட்களைத்தான் பயன்படுத்துகின்றன. வர்த்தகப் பெயர்கள் மட்டுமே வேறுபடும். அவற்றைத் தயாரிக்கும்போது கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்புச் செயன்முறைகளில் இருக்கும் குறைபாடுகளினால் கூட விபரீதங்கள் நிகழலாம். புகழ்பெற்ற நிறுவனங்களும் இதிலே சறுக்குவதுண்டு.



சில ஆண்டுகளுக்கு முன்னர் தேங்காய் எண்ணெய்யில் ஆபத்தான கொழுப்பு இருப்பதாக நாட்டிலே செய்தி பரவிய வேளையிலே கேவலம் அந்தச் செய்தியின்  உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறக்கூட எங்களைப் போன்றவர்களால் முடியாதிருந்தது. பின்பு உண்மையில் தேங்காய் எண்ணெய்யில் ஆபத்தற்ற அவசியமான கொழுப்புகள்தான் உள்ளன என்ற உண்மை வெளிநாடுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டது.



அது போலத்தான் இப்போது இந்த மருந்துகளை மறுப்பதா அல்லது ஏற்பதா என்பதை என்னால் தீரமானிக்க முடியவில்லை. எனது கல்வித் தரமோ சமூக அந்தஸ்தோ இதற்கு உதவப்போவதில்லை. ஏனென்றால், நான் சிறுவயதிலிருந்து கற்றதெல்லாம் எதை? தேடலே இல்லாத வெறும் மூளையை நிரப்பும் கல்வியையும்  பரீட்சை மேசையிலே அதை வாந்தியெடுக்கும் மதிப்பீட்டையும்தானே? இவையெல்லாம் இயல்பான சிந்தனைத் திறனையும் சுயமான தேடலையும் கற்றுத்தரவில்லை. மாறாக, எல்லோரையும் பல்தேசிய கம்பனி வியாபாரிகளின் எடுபிடிகளாகத்தான் மாற்றியுள்ளன.


நான், இந்த மருந்து விற்கும் இளைஞன், ஆஸ்பத்திரி ஊழியர்கள், pharmacy க்காரன் முதல் ஏறத்தாழ எல்லோருமே மெல்ல மெல்ல multi-national companies எனும் மகா இயந்திரத்தின் மாற்றவே முடியாத பற்சக்கரங்களாகி விட்டோம். நாற்பது நாட்களிலே வியாபாரத்திற்குத் தயாராகும் Broilers chicken களுக்கும் ஐந்து வருடத்தில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வரும் எங்களைப் போன்றவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது. யாராவது ஓரிருவர் விதிவிலக்காக இருக்கக்கூடும். ஆனால் அவர்களெல்லாம் நிர்வாண நாட்டின் கோவணதாரிகளாக மட்டுமே வாழமுடியும்.


'Can I make my move, Doctor?' என்று கேட்டவன் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது.


'Hey! what do you think of me? will you take all these nonsense and throw away on your bloody drug company!  leave me alone!'என்று அவனது மருந்துகளையும் அன்பளிப்புகளையும் கற்பனையில் அள்ளி அவன் முகத்தில் வீசியெறிந்து துரத்தி விட்டேன்.


ஆனால் நிஜத்தில், "Thankyou verymuch, let's meet again Dr." என்று புன்னகைத்து விடைபெற்ற அந்த மருந்து விற்கும் இளைஞனை கைகுலுக்கி வழியனுப்பி வைத்தேன்.

அவன் வைத்துவிட்டுப் போன அன்பளிப்புப் பொதி என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

-மூதூர் மொகமட் ராபி 


குறிப்பு:- இந்தச் சிறுகதை அண்மையில் அதாவது 2011.12.18 அன்று ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமானது (பக்கம் 26). சிறு திருத்தங்களுடன் பிரசுரமான அந்தச் சிறுகதையின் முழுவடிவம் இதுவாகும்.

Friday, December 30, 2011

சிந்தனைக்கு:



கருத்துக்கோழைகள்
 
அல்லது
 
சக்கரைவியாதிப்புண்கள்!








ம்மவர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது.

 தமது உண்மையான உணர்வுகளை உள்ளபடியே நேர்மையாக வெளிப்படுத்தாமல் தானும் குழம்பி பிறரையும் குழப்பத்திற்குள்ளாக்குவது.


 ஒருவர் தனது கருத்துக்களை மற்றவரிடம் முன்வைக்கும்போது அந்தக் கருத்துகள் சிலவேளை கேட்டுக் கொண்டிருப்பவருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் ஒரு மரியாதை கருதி அதனை கேட்டுக் கொண்டிருப்பதிலே தவறில்லை.


ஆனால் அதையும் மீறி, 'ஆமாம் நீங்கள் சொல்வது வேதவாக்கு' என்று பாசாங்கு செய்வதைப் பற்றி என்ன கூறலாம்? இப்படிச் செய்வதனால் கருத்தைக்கூறுபவரை விடவும் அதை மிகையாக ஆமோதித்து அவரைப் பிழையாக வழி நடாத்தும் இரண்டாம் நபர்தான் மோசமான பேர்வழி எனலாம்.


இது ஒருவகை என்றால் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவும் அடுத்தவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பவர்கள் போலவும் நியாயமான உணர்வுகளையும் அக்கறையுடன் கேட்பவர்கள் போலவும் பாசாங்கு நாடகம் ஆடுவார்கள். ஆனால் உள்ளுக்குள் முற்றிலும் வேறு மாதிரி நடந்து கொள்வார்கள்.


இத்தகையோர் ஏதோ தாங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திப்பவர் எனக்காட்டி மற்றவர்களின் கவனத்தைக் கவரும் முனைப்புடன் நாமெல்லாம் சாதாரண வழக்கில் பயன்படுத்தாத சில கடினமான வார்த்தைகளை தேடியெடுத்து தமது புழக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.


அதாவது யாருக்கும் இலகுவில் புரியாத பதங்களை அடிக்கடி உச்சரிப்பதன் மூலம் தானொரு அறிவுஜீவி போன்ற பிம்பத்தை மற்றவர்களிடம் உருவாக்குவதே அவர்களது ஓரே நோக்கம். ஆனால் உள்ளுக்குள் வெற்று வேட்டுக்களாக இருப்பார்கள். அவர்களது பேச்சுக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைளுக்கும் சம்பந்தமே இராது. உதாரணமாக பேச்செல்லாம் விண்வெளி ஓடங்கள் பற்றியிருக்கும் ஆனால் சிந்தனையோ மாட்டுவண்டி மேய்க்கும்.


 மேலே குறிப்பிட்ட இரு வகையானோரைத் தவிர பிறிதொரு விதமான மனிதர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள்.  இவர்கள் ஏற்கனவே நாம் முன்னிரு பந்திகளிலும் எடுத்தக் காட்டிய குணாம்சங்களோடு சேர்த்து இன்னொரு கேவலமான இயல்பையும் வைத்திருக்கிறார்கள்.


இவர்களுக்கு தம்மைத் தவிர வேறுயாரும் சிறந்த கருத்துக்களை முன்வைத்துவிடவோ கூடாது.  அப்படி வைத்து விட்டால் முகம் விடியவே விடியாது. அந்தக் கருத்துக்களை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் திராணியில்லாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வெம்பித்திரிவார்கள். அல்லது அவ்வாறான  கருத்துக் கூறிக் கண்ணைத்திறந்தவர்களை வேறுவழியிலே (கருத்துகளாலல்ல) மட்டம் தட்ட வழிதேடியலைவார்கள்.


அப்படியும் எதுவும் கிடைக்காவிட்டால் தனக்கு வேண்டியவர்களிடம் அவரைப் பற்றி புலம்பித் திரிவது, புறம் பேசுவது, அவதூறு சொல்லி அலைவது போன்ற கீழத்தரமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படியெல்லாம் செய்து தமது ஆற்றாமைக் காய்ச்சலைத் தணித்துக்கொள்ள முயல்வார்கள்.


ஆனால்  இதிலுள்ள பெரும் சோகம் என்னவென்றால் இந்தக் கோழைகள் ஒருபோதும் நிம்மதியடைவதில்லை. ஏனெனில் கருத்தால் கருத்தை வெல்ல முடியவில்லையே என்ற சோக முள் சக்கரை வியாதிக்காரனின் புண் போல எப்போதும் ஆறாமல் இருந்த அவர்கள் நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கும்!

-Jesslya Jessly