இறங்குதுறை புளியமரம்
அத்தியாயம் 1
'ராபர்ட்! ராபர்ட்! மேலே ஓடி வா!'
ஸ்டீபனின் கூக்குரல் கேட்டு கண்விழித்தேன். 'நாம் வந்து சேர்ந்து விட்டோம்! ஹோ....!'
அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு கப்பலின் மேல்தளத்துக்கு ஓடிவந்தேன். ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும் ஸ்டீபனைத் தள்ளி விட்டு கண்களைச் சுருக்கியபடி கடலை உற்று நோக்கினேன். செம்பிழம்பாய் தகிக்கும் இளஞ்சூரியனின் கீழே வெகுதூரத்திலே பச்சைக் கம்பளமாய் ஜொலித்தது கரையோரம். மகிழ்ச்சி மேலிட ஓடிவந்து ஸ்டீபனை இறுகக்கட்டிக் கொண்டேன்.
இங்கிலாந்தின் கரையில் மீண்டும் நாங்கள் கால்பதித்த போது என்னை மீறி அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கப்பலை விட்டிறங்கியதும் தரையிலே முழந்தாளிட்டு அமர்ந்து விட்டேன். கடலோரப் பாறைகளின் முதுகிலே மோதிச்சிதறும் அலையோசைகளின் பின்னணி இசையில் கண்களை இறுகமூடிப் பிரார்த்தனை புரிந்தேன். மார்பிலே சிலுவை கீறி தாய் மண்ணை முத்தமிட்டு எழுந்து நின்றேன்.
'பரிசுத்த பிதாவே, உமக்கு எனது நன்றிகள்!'
இதே துறைமுகத்தின் கரையிலிருந்து நாங்கள் புறப்பட்டுச் சென்ற அந்த ஜனவரி மாதத்தின் காலைப்பொழுதை எனக்கு நன்றாக ஞாபகமிருந்தது. அதை இன்று தெரியும் துறைமுகத்துடன் பொருத்திப் பார்க்க முயன்று தோற்றுப் போனேன். பூமிப்பந்தின் உச்சியிலே பரந்து கிடக்கும் ஆட்டிக் சமுத்திரத்தையும் ஆகாயத்தையும் தவிர இங்குள்ள எல்லாமே மாறிவிட்டதைப் போலிருந்தது. யாருமே தெரிந்த முகங்களாக இருக்கவில்லை. நான் வந்திறங்கிய கப்பலின் பாய்கள் சுருக்கிக் கட்டப்பட்டு முடிந்ததும் சரக்குகள் இறக்கும் பணி ஆரம்பமானது.
'ராபர்ட்! அதோ அந்தக் குதிரை வண்டி என் கிராமத்துக்குப் போகிறாதாம். நான் போய் வருகிறேன்டா!' என்று தழுதழுத்தவன் என்னைப் பிரிய மனமின்றி அப்படியே இறுகக்கட்டிக் கொண்டான். ' வா ராபர்ட்! என் கிராமத்துக்கே போய்விடலாம்.. போய்விட்டு வரலாம்!'
'இல்லை..ஸ்டீவன்..வேண்டாம். நீ போய் உன் ஆட்களைப் பார்த்துவிட்டு பிறகு வா! உன்னைப் போலவேதான்..எனக்கும் என்னுடைய உறவுகளைப் பார்க்கும் ஆவல் கொல்லுகிறதடா. போய்வா! ஆண்டவன் அருளட்டும் உனக்கு!' என்று வழியனுப்பி வைத்தேன்.
' உன்னை அடுத்த வாரம் வந்து சந்திக்கிறேன் ராபர்ட்!' என்று கத்திக் கொண்டே குதிரை வண்டியில் ஏறி மறைந்தான் அவன்.
அங்குமிங்குமாக ஊடாடித் திரியும் பரபரப்பான துறைமுக மனிதர்களுக்கிடையே எனது உறவுகள் யாராவது வந்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு முகத்தையும் ஆவலாகத் தேடின எனது விழிகள். யாரையுமே காணவில்லை. எப்படி வருவார்கள்.. நானென்ன கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்தை நேரிலே கண்டறிய இந்தியாவுக்கு பயணம் செய்து விட்டுப் பரிவாரங்களுடன் வந்திறங்கும் இங்கிலாந்தின் சக்கரவர்த்தியா என்ன? கேவலம் ஒரு சாதாரண மாலுமியின் மகன். அதுவும் 20 ஆண்டுகளாய் தாய் நாட்டுடன் எதுவித தொடர்புமின்றி 'காணாமல் போனவன் '!
ஆம்!
பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் ஒன்றின் மாலுமிகளில் ஒருவானாய்ப் புறப்பட்டுச் சென்றவன், சிறிய சரக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலே கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டு ஒரு திருடனைப் போல வந்திறங்கினால் வரவேற்பதற்கு யார்தான் வருவார்கள்?
என்னைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் துறைமுக மனிதர்களைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்து விட்டு ஒரு வேதனைச் சிரிப்புடன் எழுந்து நின்றேன். பின்பு கீழ்த்திசையிலே கம்பீரமாக எழுந்து நிற்கும் மாதா கோயிலின் கோபுரத்தை நோக்கி மெல்ல நடக்கலானேன்.
1658ல் ஜனவரி மாதத்தின் கடைசிவாரத்தில் இதே துறைமுகத்திலே இருந்து நானும் எனது தகப்பனாரும் நண்பர்களும் கப்பலிலே புறப்பட்ட நாளை எண்ணிப்பார்த்தேன். அன்றைய தினம் அதிகாலை இதே மாதா கோயிலிலே பிரார்த்தனை முடித்து நாங்கள் அனைவரும் புறப்பட்ட நிகழ்வு ஏதோ நேற்று நடந்தது போல ஞாபகமிருக்கின்றது.
17 வயது வாலிபனாய் கப்பலிலே ஏறியபோது இத்தனை ஆண்டுகள் தாய் மண்ணையும் உறவுகளையும் பிரிந்திருக்கப் போகிறேன் என்றோ பெறுமதி மிக்க எனது வாலிபப்பருவத்தின் பெரும்பகுதியை உலகின் மறுகோடியிலுள்ள ஒரு சின்னஞ்சிறு தீவிலே வீணே அலைந்து திரிவதிலே கழிக்கப் போகிறேனென்றோ நான் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்திருந்தால் அந்தப் பயணத்தை நானும் எனது சகாக்களும் நினைத்துத்தான் பார்த்திருப்போமா?
மனிதவாழ்க்கையின் பின்னே நடக்கவிருக்கின்ற சம்பவங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு என்று ஒன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.. உறவுகளையும் சொந்த மண்ணையும் பிரிந்திருப்பது எத்தனை கொடுமையானது என்பதை மனிதர்கள் நன்கு அறிந்து கொள்வதற்காகத்தான் இறைவன் இத்தகைய அனுபவங்களைக் தருகின்றாரோ என்னவோ.. எத்தனை அலைச்சல் எத்தனை வகையான மனிதர்கள் எவ்வளவு சிரமங்கள் வேதனைகள்...ஆற்றாமைகள்!
நான் 14 வயதுச் சிறுவனாக இருந்தபோது ஏற்கனவே ஒருதடவை இந்தியாவுக்கு எனது தகப்பனாருடன் கடல் பயணம் சென்ற அனுபவம் உள்ளது. கடல் பயணங்கள் இலகுவானவை அல்ல. அலைக்கழிக்கும் சூறாவளிகளும் புரட்டிப்போடும் புயல் காற்றுகளும் தொற்று நோய்களும் நமது உயிரைக் குடிக்கக் காத்திருக்கும். குடிநீரும் உணவுப் பண்டங்களும் தீர்ந்து போனால் நிலைமை அவ்வளவுதான். குடிநீருக்காக அறிந்திராத தீவுகளிலே கரையிறங்கினால் அங்குள்ள ஆதிவாசிகளாலோ அல்லது கடற்கொள்ளையர்களாலோ கொல்லப்பட வாய்ப்புண்டு.
இவை மட்டுமல்ல கடலின் சில இடங்களிலே தீய ஆவிகளின் நடமாட்டம் பற்றிய கதைகள் கூட உண்டு. இப்படியெல்லாம் அலைவதை விட சொந்த மண்ணிலேயே இருந்துவிடுவது விவேகமான விடயம்தான். ஆயினும் நமது வாழ்க்கையை சவால்கள் எதையுமே எதிர்கொண்டு சாதிக்காமல் உப்புச்சப்பின்றி வெறுமனே வாழ்ந்து கொண்டிருப்பதை விட உயிராபத்துமிக்க கப்பல் பயணங்கள் எவ்வளவோ மேலானது என்றுதான் இப்போதும் கூறுவேன்.
இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவன் திடீரென பிறிதொரு கண்டத்திலே சின்னஞ்சிறு தீவிலே வேறுபட்ட காலநிலையின் கீழே வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்ட மனிதர்களுடன் நீண்டகாலம் இணங்கி வாழ்வதென்றால் எவ்வளவு கடுமையானது. புதிய சூழல், புரியாத மொழி, கரடுமுரடான பாதைகள், பழக்கமில்லாத உணவுகள், தொற்று நோய்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததையும் இப்போது அங்கிருந்து விடுதலையாகி சுதந்திரமாய் வந்துசேர்ந்ததையும் நினைத்தால் ஒருவித வேதனைச் சுகமாயிருந்தது.
இந்த உலகத்தின் மறுபுறத்திலும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கும் வாழ்க்கையுள்ளது.. பண்பாடுகள் கலாசாரம் உள்ளது என்பதை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவாவது குறைந்தபட்சம் இந்த அனுபவங்கள் உதவியிருக்கின்றன என்பதை நினைக்கும் போதுதான் சிறிது ஆறுதலாக இருக்கின்றது. இவற்றைவிட அந்தச் சிறுதீவிலே எனக்கிருந்த மற்றுமொரு ஆறுதலான விடயம் என்று ஒன்றிருந்தால் அது எனது தோழி லூசியாதான்.
அத்தியாயம் 2
என்னையும் எனது உயிர் நண்பன் ஸ்டீபனையும் போலன்றி, என்னோடு வந்து அந்தத் தீவிலே வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டிருந்த சகபாடிகளில் பெரும்பாலனவர்கள் தீவிலிருந்த சுதேசிப் பெண்களைத் திருமணம் முடித்திருந்தார்கள் அல்லது அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி எங்கள் கடல் பயணத்திலே துணையாக வந்திருந்த மாலுமிகளில் ஒருவனுக்கும் அந்தத்தீவின் பூர்வீகக்குடிப் பெண்ணுக்கும் பிறந்தவள்தான் லூசியா.
ஐரோப்பியச் சிறுமிகளுக்கேயுரிய உடல்வாகும் வெளிர் நீலநிறக்கண்களும் அந்தத் தீவின் ஆதிவாசிகளுக்கேயுரிய கருமை நிறமும் சடைக் கூந்தலும் சேர்ந்த கலவையாக இருந்தாள் அவள்.
நானும் எனது நெருங்கிய தோழன் ஸ்டீபனும் வாழ்ந்து வந்த கிராமத்து வீட்டின் அருகில்தான் லூசியாவும் இருந்தாள். ஊரைச்சேரும் வழியுமின்றி உறவுகளைப் பார்த்திடும் வகையுமின்றி உடல் அலைச்சலும் மனவுளைச்சலுமாய் திரிந்த எனக்கு ஒரே நிழல்மரம் அந்தச் சிறுபெண்ணின் சகவாசம்தான்.
லூசியா அறிமுகமானதே ஒரு சுவாரசியமான கதைதான்.
தீவை விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் சரியான தருணம் பார்த்திருந்த கடைசி வருடங்களில்தான் லூசியாவின் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. கண்டி மன்னரின் அதிகாரிகளிடம் அனுமதிபெற்று கண்டி இராச்சியத்தில் மத்திய பகுதியிலிருந்த தென்னை மரச்சோலைகள் நிறைந்த கிராமமொன்றிற்கு வந்து சேர்ந்திருந்தோம். அங்கிருந்த விவசாயி ஒருவனிடம் சிறுபகுதி நிலத்தை வாங்கி வீடொன்றைக் கட்டி முடித்திருந்தோம். அந்த வீட்டைக் கட்டுவதற்காகச் சில பொருட்களைத் தேடி வாங்குவதற்காக கிராமத்துக்குள்ளே நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அதற்கு முன்பு எங்களைப் போன்றவர்களை பார்த்தேயிராத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சென்ற வழி முழுவதும் அந்தக் கிராமத்துவாசிகள் தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள்.அவர்களில் சிலர் நாங்கள் கேட்பதற்கு முன்பே அவர்களாகவே ஏதோ ஒரு இடத்தை நோக்கி வழிகாட்டினார்கள். அவர்களது செயல் சரியாகப் புரியாமல் அவர்கள் காண்பித்த ஒரு தென்னஞ்சோலைக்குள் நுழைந்தோம். அங்கு கிடுகுகளால் வேயப்பட்டிருந்த கூரைகொண்ட மண் குடிசை ஒன்றிருந்தது. ஆனால் அந்தக் குடிசை அதுவரை அந்தத் தீவிலே பார்த்த குடிசைகள் போல இருக்கவில்லை. அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது.
சுதேசிகளின் குடிசைகள் பொதுவாகத் தாழ்வாகவும் அதன் நுழைவாயில்கள் ஒருவர் தலையைக் குனிந்து சென்றால் மட்டுமே உள்ளே நுழையக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் இதுவோ நன்கு உயரமானதாகவும் விசாலமான வாயில் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குடிசை வீட்டின் வெளியே பெண்கள் பலர் கூடி தென்னோலைகள் பின்னிக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் குழந்தைகளைச் சுமந்தபடி வேலை செய்யும் பெண்களுடன் அளாவளாவிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் இடுப்புகளில் ஏறத்தாழத் விழுந்து விடுவதுபோல குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களைக் கடந்து செல்கையிலே தற்செயலாக நீலநிறக் நிறக்கண்களையுடைய குழந்தை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு நின்று விட்டேன் நான்.
அந்தக் குழந்தையின் கண்களும் முகவெட்டும் அவளின் தாய்போலிருந்த சுதேசிப்பெண்ணுக்கு மட்டுமல்ல அந்தச்சூழலுக்கே கூடப் பொருத்தமின்றி தனியாகத் நெருடிக் கொண்டிருந்தது. ஒருவித சந்தேகத்துடன் அந்தப் பெண்ணை நெருங்கிச் சென்று நான் பேசவிழைந்த போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அந்தப் பெண் குடிசைக்குள்ளிருந்த யாரையோ உரத்து அழைத்தாள். அதைக்கேட்டு வெளியிலே வந்து பார்த்தவன் யார் தெரியுமா?
அவன்தான் எங்களோடு வந்து இந்தத் தீவில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவனான மாலுமி X. அவன் சில நாட்கள் எங்களோடு இருந்துவிட்டு கண்டி அரசனின் அதிகாரிகளின் காலாட்படையில் வேலைதேடிக்கொண்டு பிரிந்து சென்றவன்.
அவனைக் கண்டதும் முதலிலில் அடையாளம் புரியவில்லை. ஐரோப்பிய உடல்வாகையும் நிறத்தையும் தவிர ஏறத்தாழ சுதேசிகள் போலத்தான் தோன்றமளித்தான். உள்நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு அவர்களைப் போலவே ஆகியிருந்தான். அவனுக்கும் எங்களைக் கண்டதில் வெகு ஆனந்தம். எங்களை உபசரித்து தன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். எங்களைப் பிரிந்து சென்றபின் நடந்தவற்றையெல்லாம் கேட்டறிந்து கொண்டதோடு நாங்கள் அந்தக் கிராமத்துக்கு வந்திருப்பதன் காரணத்தையும் தெரிந்து கொண்டு வீடு கட்டுவதற்குத் தேவையான பண்டங்ளை பெறுவதற்கும் உதவினான் அவன்.
சுதேசப் பெண்ணுடனான மணவாழ்க்கை காரணமாக எங்களையும் விட கண்டியச் சிங்கள மொழியை நன்கு பேசப் பழகியிருந்த அவன், எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதற்கு நாங்கள் கிடைத்திருப்பதாகக்கூறி மகிழ்ந்தான். இவை எல்லாவற்றையும் விட அவன் சற்று முன்பு வரும் வழியில் பார்த்த நீலக் கண்கள் கொண்ட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து அது தனது மகள்தான் என்று காட்டியதுதான் முக்கிய விடயம். அந்தக் குழந்தைதான் பின்னர் எனது சிறு தோழியான லூசியா.
குழந்தை லூசியாவை கண்ட அந்த நாள் முதல் அவள் என் மனதில் இடம் பிடித்து விட்டாள். அதன் பிறகு தினமும் குழந்தையை நானும் ஸ்டீபனும் குடியிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருப்பது X க்கு வாடிக்கையானது. அவளோடு விளையாடுவதிலும் அவளை ஓர் ஆங்கிலச் சிறுமி போலவே உடைகள் தயாரித்து அலங்கரித்து மகிழ்வதிலும் எனக்கு திருப்தியாக இருந்தது. தினமும் அவளுக்கு ஆங்கிலத்தைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல்லிக் கொடுப்பது அவளுடன் விளையாடுவது அவளை அழைத்துக் கொண்டு நடை பயில்வது என்று... சொல்லப் போனால் சிறுமி லூசியா எனக்கும் ஸ்டீபனுக்கும் மற்றும் எங்களோடு இருந்த மற்றைய தோழர்களுக்கும் செல்லப் பிள்ளையாகி விட்டாள்.
அந்தத் தீவை விட்டுத் தப்பி வந்ததிலே அவளது பிரிவு ஒன்றுதான் இன்னும் எனக்கிருக்கும் ஒரே வேதனை. பாவம் அவள். நான் இங்கு நலமாக வந்து சேர்ந்திருப்பதை யார் மூலமாவது அவளுக்குத் தகவல் அனுப்பி வைக்க வேண்டும்.
அத்தியாயம் 3
அந்தத் தீவிலே கண்டி இராச்சிய மன்னர் ரத்கசிங்கனின் கைதிகள் நாங்கள். ஆனாலும் கைதிகள் எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது விநோதமான ஒரு தண்டனை. அதாவது நாங்கள் கண்டி மன்னரின் இராச்சியத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அங்குள்ள பெண்களைக் காதலித்தோ முறைப்படியோ திருமணம் புரியலாம். தொழில்களைச் செய்யலாம். ஆனால் அங்கிருந்து தப்பிச் செல்வது மட்டும் முடியாது. அந்த இராச்சியத்துக்குள் எங்கு சென்றாலும் மன்னரின் அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக எல்லைப் பகுதிகளிலே நடமாடும் போது இத்தகைய கண்காணிப்பு அளவுக்கதிகமாக இருப்பதுண்டு. ஐரோப்பியர்களான எங்களை இலகுவில் அடையாளங் காணமுடியுமென்பதால் அங்குள்ள மக்களே மன்னரின் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி விடுவார்கள்.
அந்தப் பசுமையான தீவில் அலைந்து திரிந்திலே அங்கு வாழும் மக்களின் குணாதிசயங்களும் அவர்களது மொழியும் எங்கள் எல்லோருக்கும் ஓரளவு பழகிவிட்டிருந்தது. இதனால் எங்களில் பலர் அந்த தீவின் மலைவாழ் பெண்களுடன் பழகலானார்கள். அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. எத்தனை காலம்தான் இந்த விநோதமான திறந்தவெளிச்சிறை வாழ்வைத் துணையின்றித் தனிமையிலே கழிப்பது. வயிற்றுப் பிழைப்புக்காக தொப்பிகள் தயாரித்து விற்பது நெல்தானிய வியாபாரம் செய்வது என்று வயிற்றைக் கழுவிப் பொழுதைக் கழித்தாலும் இயற்கைத் தேவை என்று ஒன்று உள்ளதல்லவா?
திறந்தவெளிச் சிறைவாழ்வின் அலைச்சல்களும் தோல்வியில் மட்டுமே முடிவடையும் எங்கள் தப்பிச் செல்லும் முயற்சிகளும் தாங்க முடியாத சலிப்பையும் விரக்தியையும் தரலாயின. நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி காலம் கழிந்து கொண்டிருந்தது. எனது கப்பல் சகாக்களிலே மிகவும் வயதில் குறைந்தவர்கள் நானும் எனது தோழன் ஸ்டீபனும்தான். மற்றவர்களெல்லாம் நடுத்தர வயதிற்கு வந்து விட்டார்கள். இனியும் இந்தத் தீவை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்பதிலே நம்பிக்கைகள் வற்றித் தீர்ந்து விட்ட நிலையிலே அவர்கள் அந்த உத்தேசத்தை முற்றாகவே கைவிட்டு சுதேசிப் பெண்களைத் மணம் முடித்து வாழத் தொடங்கியிருந்தார்கள்.
எங்கள் சகாக்களில் பலருக்கு சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் உத்தேசம் கூட மெல்ல மறந்தே போனது. அவர்களைக் குற்றம் சொல்வதற்குமில்லை. ஆபத்தான கொடிய விலங்குகள் வாழும் காடுகளும் நீர்நிலைகளும் செங்குத்தான மலைக்குன்றுகளும் நிறைந்த இந்த இராச்சியத்தை விட்டு தப்பிச் செல்வது எங்களைப் போன்ற ஐரோப்பியர்களுக்குச் சாத்தியமில்லை. சீரான பாதைகளில்லை. வழிகாட்டிகளின் உதவியில்லை. அப்படித்தான் சிரமப்பட்டு காட்டின் வழியே சென்றாலும் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் கூட எங்களைச் சுலபமாக அடையாளங்கண்டு மன்னனின் படையாட்களுக்குத் தகவல் கூறிவிடுவார்கள். தப்பிச் செல்ல முனைந்து பாதியிலே அகப்படுவதானது ஏற்கனவே எங்களுக்கு இருந்து வரும் சுதத்திரத்தைக் கூடத் தின்றுவிடும்.
இதையெல்லாம் அனுபவத்திலே நன்கு அறிந்தவர்களான எங்கள் சகாக்கள் அந்தத் தீவின் வாழ்க்கையை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டதிலே ஆச்சரியமில்லைதான். நானும் எனது நண்பன் ஸ்டீபனும் மட்டுமே இந்த விடயத்திலே விதிவிலக்காக அங்கிருந்து தப்பிச் செல்வது என்பதிலே கடைசிவரை உறுதியாய் இருப்பதெனத் தீர்மானித்தோம்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு புயலிலே மாட்டி எங்களது கப்பலின் பாய்மரம் முறிந்து நாங்கள் குடாக்கடலில் நங்கூரமிட்டுக் கிடந்தபோது நிகழ்ந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றேன்.
அது கி.பி.1659ம் ஆண்டு. கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான பிரமாண்டமான கப்பல் ஆன் இந்தியாவின் மசூலிப் பட்டினத்தின் துறைமுகத்தில் பிரிட்டிஷ் கொடிபறக்க கம்பீரமாக நின்றிருந்தது. கப்பலின் தலைவனாகிய எனது தந்தையார் ரொபர்ட் நொக்ஸ் கப்பலின் மேல்தளத்தில் நின்று கப்பல் புறப்படுவதற்குரிய கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரது மகனும் கப்பலின் உதவி மாலுமிகளில் ஒருவனுமாகிய நான் உட்பட ஏனைய பணியாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். பாய்மரங்கள் விரிக்கப்பட்டு அவற்றின் கயிறுகளின் உறுதிப்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.
1657ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி முதல் இந்தியக் கரைகளின் துறைமுகங்களிலே தரித்து நின்று அங்குள்ள உள்ளுர் வியாபாரிகளிடம் புடவைகள், கம்பளங்கள் உட்பட பல்வேறு விதமான சரக்குகளையும் கொள்வனவு செய்து ஏற்றிக்கொண்டு சரியாக இரு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டோம்.
இந்து சமுத்திரத்தின் கடல் அலைகளைப் பிளந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது எங்கள் ஆன்.
அத்தியாயம் 4
ஊர்திரும்பப்போகும் மகிழ்ச்சியிலே மிகவும் உற்சாகமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தோம்.
கப்பலெங்கும் ஒரே மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்தது. மசூலியின் தென்னங்கள்ளும் இந்தியச் சுருட்டுகளும் தாராளமாகப் புழங்கியது. ஆடல்களும் பாடல்களுமாய் குதூகலம் நுரைத்துப் பொங்கியது. 'இதோ பார்! இதுதான் இந்தியப் பெண்களின் நடனம்' என்று அபிநயம் பிடித்து ஆடிக்காட்டினான் லவ்லேண்ட் என்பவன். அனைவரும் கைதட்டி ஆரவரிக்க ' ஹேய்! இதைப் பார்! இது நாகப்பாம்பு நடனம்!' என்று என்று இரு முழங்கால்களையும் மடித்து பின்புறமாக மடிந்து முதுகு தரையில் படுமாறு படுத்து இரு கைகளையும் ஒன்று சேர்த்து வளைந்து வளைந்து ஆடினான் அவன். அதற்கேற்றாற்போல மகுடி ஒன்றைக் கொண்டு வந்து ஊதினான் ஸ்டீவன்.
' ஏய்! அந்தக் கறுப்பு சலவைக்காரிதானே இந்த மகுடியை உனக்குப் பரிசளித்தாள்? உண்மையைச் சொல்லு!' என்று ஸ்டீவனைக் கலாயத்தான் லவ்லேண்ட்.
'இல்லை...இல்லை! நீ, 'முத்தம் கொடு!' என்று கேட்டுப் பின்னால் அலைந்தாயே பாசி மணி ஊசி விற்கும் குறத்திப்பெண்... அவள்தான் கொடுத்தாள்'
'சரி, எனக்குத்தான் தரவில்லை உனக்காவது கொடுத்தாளா?'
' கொடுத்திருப்பாள்..அதற்குள் ஒருத்தன் வந்து கெடுத்து விட்டான்'
'யாருடா அது? நம்ம மக்டொனால்டா?'
'இல்லடா, அவளுடைய புருஷன்!'
கப்பலே சிரிப்பால் அதிர்ந்திட, தூரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தவர்களோடு நின்றிருந்த எனது தந்தை லேசாக முறுவலித்தார்.
ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.
புறப்பட்டு ஒரு தினம் முடிவடைவதற்கிடையில் கிழக்கு வானம் சட்டென இருண்டு பெரும் புயலுக்குரிய அத்தனை அறிகுறிகளையும் காண்பிக்கத் தொடங்கி விட்டது. பாய்மரங்களை இறக்கிக் கொள்வதற்குக்கூட அவகாசம் தராமல் விரைந்து வந்த புயல்காற்று மழையுடன் சேர்ந்து சுழன்றடித்ததில் கப்பல் எங்கள் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
'பாய் மரத்தை இறக்குங்கள்! விரைவாக இறக்குங்கள்!' என்று எனது தந்தையின் கட்டளை ஓலமிடும் காற்றினூடே கேட்டது ஆனால் அலைக்கழிக்கும் புயல்காற்று அதற்கு இடம் தரவேயில்லை. கப்பல் அலைகளின் மேல் சமநிலை தவறி அல்லாடிக் கொண்டிருந்தது. எனது தந்தை எத்தனையோ பல கப்பற்பயணங்கள் புரிந்த அனுவபம் மிகுந்த ஓர் திறமையான மாலுமி. இது போன்ற பல கடற்புயல்களை நிறையப் பார்த்தவர். பாய்மரங்களை இறக்குவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் சடுதியாக, 'பாய்மரங்களை வெட்டிச் சாய்த்து விடுங்கள்! யோசிக்க வேண்டாம் வெட்டிவிடுங்கள்!' என்ற கட்டளை அவரிடமிருந்து வந்தது. வேறுவழியின்றி உடனே அதனைச் செய்து முடித்தோம். அதன் பிறகு கப்பலின் அலைக்கழிவு ஓரளவு குறைந்தாலும் கடல் நீரோட்டத்தில் சிக்கி அது எங்கோ ஒருபுறமாக இழுபட்டுச் செல்வதை உணர்ந்தோம். எங்கு செல்கின்றோம் என்ன நடக்கப் போகிறது என்பது எதுவுமே புரியவில்லை. இழுபட்டுச் செல்லும் வேகத்தில் எங்காவது பாறைகளில் மோதினால் என்னாகும் என்பதை நினைத்துப் பாரக்கவே பயந்தோம்.
பின்னிரவில் ஆரம்பித்த அந்தப் போராட்டம் மறுநாள் அதிகாலை விடியும் வரை இடைவிடாமல் வரை நீடித்தது.
அத்தியாயம் 5
கிழக்கு வெளுத்தபோது புயலின் உக்கிரம் படிப்படியாகக் குறைந்து மெல்ல ஓய்ந்து போனது.
பளீரென விடிந்தபோது எங்கள் கப்பல் ஒரு விரிந்த குடாவுக்குள்ளே மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்திலே கண்ணுக்கெட்டிய தூரத்திலே தென்னந்தோப்புகள் நிறைந்த மனித சஞ்சாரமற்ற வெண்ணிறக் கடற்கரை நீள நெடுகிலும் கோடிட்டுச் செல்ல தொடுவானம் கிழக்குப் புறமாகத் தெரிந்தது. ஒருவாறு கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தினோம். அது ஓர் ஆழமற்ற கடல்பகுதியாக இருந்தது. கலங்கல் நிறைந்த கடல் நீரையும் அதில் மிதந்து வரும் நீர்த்தாவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது கப்பல் ஓர் ஆற்றுமுகத்துக்கருகே வந்திருப்பது பரிந்தது முதலில் நாங்கள் இருப்பது எந்தப்பகுதியில் என்று யூகிக்க முடியவில்லை. புயல் கிழக்கிலிருந்து வீசியிருந்ததை வைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிழக்குக் கரையோரக் குடா ஒன்றுக்குள்தான் நாங்கள் வந்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம்.
முதலில் அதை ஏற்றுக் கொண்ட எனது தந்தை , பின்பு தேசப்படத்தை வைத்துக் கணித்து நாம் இருப்பது இந்தியாவின் தென்புறமுள்ள தீவிலிருக்கும் கிழக்குக் கரையோரத்தில் என்றார். அந்தத்தீவில் 'யக்காக்கள்' எனும் பேய் மனிதர்கள் இருப்பதாகத் தான் கேள்விப்பட்தையும் கூறினார். பின்புதான் நாங்கள் தரித்து நின்ற இடம் சிலோன் தீவின் திரிக்கோணமலையை அடுத்துள்ள கொட்டியாரக்குடா என்று அறிந்தேன்.
அன்று கொட்டியாரக்குடாக் கடலிலே நாங்கள் நங்கூரமிட்டுக் கிடந்தபோது இந்தத்தீவின் கரைகளில் இறங்கி கண்டி இராச்சிய மன்னன் ரத்க சிங்கவின் அதிகாரிகளின் பேராசைக்கும் சூழ்ச்சிக்கும் பலியாகி பாரிய அனுபவங்களைப் பெறப்போகிறோம் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
கப்பலின் பாய்மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுச் சேதமடைந்து கிடந்தன. அவற்றைப் புதிதாக அமைத்தால் மட்டுமே பயணத்தைத் தொடரமுடியும். எனவே கரைக்குச் சென்று புதிதாக மரங்களைக் கொண்டு வந்து முறிந்துபோன பாய்மரங்களை திருத்திக் கொண்டு மீண்டும் எங்கள் பயணத்தை தொடரலாம் என்று எங்கள் குழுவில் சிலர் நினைத்தார்கள். கரைக்குப் போகாமல் இருக்கும் கருவிகளைக் கொண்டு முறிந்த பாய்மரங்களை ஓரளவு திருத்திக்கொண்டு மீண்டும் மசூலிப் பட்டணத்துக்கே போய் அங்கிருந்து மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது.
கரைக்குப் போவதிலே இருக்கும் ஆபத்தை எண்ணித்தான் நான் எனது எண்ணத்தை வலியுறுத்தினேன் என்றபோதிலும் திருத்தியமைத்துச் செல்லும் பாய்மரத்தினால் சாதாரண காற்றைக் கூடத் தாங்க முடியாது என்பதை நானும் அறிந்துதானிருந்தேன். அதுமட்டுமன்றி, பெரும் சமுத்திரங்களைக் கடந்து வெகுதூரம் போகவேண்டிய கடற்பயணத்தில் நடுவழியில் திருத்தங்களை மேற்கொள்வதெல்லாம் சாத்தியமில்லை. தவிர, இந்த புயலினால் உண்டான தாமதத்தினால் உணவு, குடிநீரின் அளவும் குறைந்து விட்டதால் அவற்றையும் சேகரித்தாக வேண்டும்.
ஆனால் ஐரோப்பியர்களாகிய நாங்கள் கரையோரத்திற்குச் சென்று இறங்குவது அத்தனை நல்ல முடிவல்ல என்று தோன்றியது. எனவே எங்களோடு இந்தியப் புடவைகளை எடுத்து வந்திருந்த வியாபாரி ஒருவனை சிறுபடகு மூலமாக கரைக்கு அனுப்பிவைத்து அங்குள்ளவர்களோடு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். முதலில் இந்திய வியாபாரி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனினும் பின்பு எங்களில் சிலரும் துணைக்கு வருவதாகக் கூறியதையடுத்து சம்மதித்தான்.
ஆனால் எங்களுக்குச் சிரமம் எதுவும் வைக்காமல் கரையிலிருந்து சிறுபடகு ஒன்று எங்களது கப்பலை நோக்கி வரத் தொடங்கியது. அது படகு என்று கூடக் கூறமுடியாதபடி மிகச் சிறியதாகவும் ஒடுக்கமாகவும் இருந்தது. அதிலே வந்தவர்களில் படகோட்டிகளைத்தவிர ஏனைய இருவரையும் கயிற்று ஏணிகளின் உதவியுடன் கப்பலுக்குள்ளே வரவழைத்தோம். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் விநோதமாக இருந்தன. அவர்கள் பேசிய மொழியை கப்பலில் வந்த இந்திய வியாபாரியால் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவர்கள் எங்களோடு நட்புறவை விரும்புவதாகத் தெரிந்தது.
அவர்களது முகபாவனைகளையும் சைகைகளையும் வைத்து அவர்கள் அந்தப் பிரதேசத்தின் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் என்று புரிந்து கொண்டோம். 'திசாவ' எனும் சொல்லை பலமுறை உச்சரித்து தம்மோடு கொண்டு வந்திருப்பதிருந்த பழங்களையும் மற்றும் சில வகைக் கிழங்குகளையும் தொட்டுத் தொட்டுக் காட்டியதிலிருந்து திசாவை எனும் அவர்களது எஜமானர் எங்களது வருகையை பெரிதும் விரும்புகின்றார் என்பதையும் அறிந்து கொண்டோம். ஆனால் அதெல்லாம். எங்களது வியாபாரக் கப்பலில் குவிந்திருந்த விலையுயர்ந்த பொருட்களை அபகரிக்கும் நோக்கத்திலே திசாவை என்பவன் எங்களைத் தங்களது வலையில் விழவைப்பதற்காகச் செய்த தந்திரங்களில் ஒன்று என்பதை பின்பு வெகுதாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.
எங்களுக்கும் கரைக்குச் சென்று திரும்ப வேண்டிய தேவை இருந்ததால் திசாவையின் அழைப்பை ஏற்றுக் கொண்ட கப்பலின் தலைமை மாலுமியான எனது தந்தையார் எங்களில் சிலரை கரைக்கு அனுப்பி வைப்பதெனத் தீர்மானித்தார். அந்தக் குழுவினரைத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று திரும்பும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திசாவையின் ஆட்களின் படகுகள் வழிகாட்ட கரையை நோக்கிப் புறப்பட்டோம்.
கப்பலிலிருந்து நேரே தெரிந்த மணற்கடற்கரைக்குச் செல்லாமல் கண்டல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் களப்புப் பகுதியினூடாகப் பயணித்து கொட்டியாபுர எனும் இடத்தில் நானும் எங்கள் குழுவும் கரையிறங்கினோம். அந்த இடம் பெருவிருட்சங்கள் நிறைந்த சோலையாக இருந்தது. கரையிலே இறங்கியதும் சிறிது தூரம் நடந்து சென்றதும் ஒரு கிளைபரப்பிய விசாலமான பெரிய புளிய மரம் ஒன்று தென்பட்டது. அதன் கீழ் பற்றைச்செடிகள் எதுவுமின்றித் திடலாக இருந்ததால் அந்த மரத்தின் கீழே இளைப்பாறினோம்.
சிறிது நேரத்தில் நாங்கள் திசாவை என்று அழைக்கப்பட்டவன் மாடுகள் பூட்டிய கூடாரம் போன்ற வண்டியில் சில ஆட்கள் புடைசூழ அங்கு வந்திறங்கினான். அவனது காவலுக்கு வந்திருந்தவர்களின் கைகளில் கூரிய ஈட்டிகள் போன்ற கழிகள் இருந்தன. திசாவை நடத்தர உயரமுள்ள வாட்டசாட்டமுள்ளவனாக இருந்தான். அவனது உடைகள் விநோதமாக இருந்தன. புளிய மரநிழலில் அமர்ந்திருந்த எங்களைக் கண்டதும் மிகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.
அவன் வந்தது போன்ற அலங்கரிக்கப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கும் மாட்டு வண்டிகளில் எம்மை ஏற்றி மணல் நிரம்பிய பாதையினூடாக தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். அந்த இடம் உறுதியான அடியைக் கொண்ட மரங்களடர்ந்த சோலையாகும். பனை ஓலைகளால் கட்டப்பட்ட வேலிகள் அதன் மத்தியில் சிறு மைதானம் போல திடல் இருந்தது. அந்தத் திடலைச் சூழ களிமண்ணால் மெழுகிக் கட்டப்பட்டு தென்னோலைகளால் வேயப்பட்டிருந்த சற்று அகலமான குடிசைகள் பல இருந்தன. அவற்றில் ஒன்றிற்குள் நாங்கள் இளைப்பாறுமாறு விடப்பட்டோம்.
அங்கு வைத்து வாழை, பலா, மற்றும் நாங்கள் அறிந்திராத பழ வகைகளையும் நெருப்பில் வாட்டிப் பதப்படுத்திய இறைச்சியையும் உண்ணத்தந்து விருந்தளித்தான் திசாவை. தனது முகபாவங்களாலும் சைகையாலும் அவன் எனது தந்தையைச் சந்திக்க விரும்புவதாகவும் அன்றிரவு தங்களது விருந்தாளியாக எங்களைத் தங்கிச் செல்லுமாறு வேண்டினான். பாய்மரங்கள் அமைப்பதற்குரிய மரங்களைத் தேடிக்கொள்ள வேண்டிய தேவையிருந்ததால் அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டோம். மறுநாள் நாங்கள் பாய்மரத்தைக் கொண்டு படகுமூலமாய் கப்பலுக்கு கொண்டு சேர்த்ததும் கப்பலின் தலைமை மாலுமியை கரைக்கு அழைத்து வருவதாகத் திசாவையிடம் உறுதியளித்திருந்தேன்.
அதன்படி எங்கள் குழுவில் ஒரு பகுதியினர் திசாவையின் ஆட்களோடு காடுகளுக்குள் சென்று தேவையான மரங்களைப் பெற்று வந்தனர். எங்களது கருவிகளைக் கொண்டு பாய்மரம் செப்பனிடும் வேலையையும் ஆரம்பித்தோம். எங்களது தச்சுக் கருவிகளையும் வேலைத்திறனையும் ஆச்சரியமாகப் பார்த்தவாறு நின்றிருந்தார்கள், திசாவையின் காவலாளிகள். பொழுது அடிவானத்திற்கு இறங்கி இருட்டும் போதுதான் அந்த வேலைகள் முடிவடைந்தன.
இரவானதும் தேங்காய் எண்ணெய் மற்றும் விலங்குக் கொழுப்பை உருக்கிப் பெற்ற எண்ணெய்களில் திரிகள் வைத்த விளக்குகள் ஏற்றப்பட்டன. வீதிகளில் மக்கள் தீப்பந்தங்களோடு உலாவினார்கள். முக்கியமான சந்திகளில் காடா விளக்குகள் எரிந்தன. இரவு உணவுக்குப் பின்பு வேலைக் களைப்பின் அயர்வினால் எல்லோரும் உறங்கலானார்கள்; என்னைத்தவிர.
மறுநாள் கப்பலின் தலைமை மாலுமியை அழைத்து வருவதாகத் திசாவையிடம் உறுதியளித்திருந்தாலும், பாய்மரங்களை கப்பலுக்கு எடுத்துச் சென்றதும் திரும்பி வராமல் சென்றுவிடுவதே எனது உள்நோக்கமாக இருந்தது. ஏனெனில் திசாவையின் அளவுகடந்த உபசரிப்புக்குப் பின்னால் கபட நோக்கம் எதுவும் மறைந்து இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்ததுதான் காரணம். ஆனால் அதை நான் எனது கூட வந்தவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை.
அன்றிரவு மிகுந்த யோசனையுடன் கழிந்தது.
அத்தியாயம் 6
மறுநாள் பொழுது கானகப் பறவைகளின் இன்னிசைக்கச்சேரியுடன் புலர்ந்தது.
கடற்பறவைகளின் ஒலிகளை மட்டுமே கேட்டுக்கேட்டுப் புளித்துப் போய்க்கிடந்த கப்பல் தோழர்கள் எங்கள் காதுகளில் அந்த அழகிய குருவிகளின் சங்கீதம் தேன் வார்த்தது. எங்களது இக்கட்டான சூழ்நிலையையும் மறந்து அந்தப் பட்சிகளையும் அவற்றின் இனிய கீதங்களையும் ரசித்தவாறிருந்தோம்.
காலைப் பனியில் குளித்திருந்த மரங்களின் இலைகளிலிருந்து நீர் சொட்டியது. சிறிய வேம்பு மரக் கன்று ஒன்றின் தண்டுகளை உடைத்து பல்துலக்கியபடியே நாங்கள் இருந்த குடிசைப் பகுதியிலிருந்து சிறிது தூரம் நடந்து மேட்டுப்பகுதி ஒன்றிற்கு வந்தோம். அங்கிருந்த ஒர் உயர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்து ஏறினேன். அதன் உச்சிக்கு வந்ததும் அதுவரையில் நான் பார்த்திராத ஓர் அழகிய பரந்த நிலப்பரப்பு என் கண்முன்னே விரிந்தது. கிழக்குத் திசையில் மூடுபனிப்படலத்தினூடே ஆகாயத்துடன் ஒன்றிவிட்ட கடலும் சூரியக் கிரணங்களின் கீழே வெள்ளிப் பாம்புகளாய் பளபளத்து நெளியும் கிளையாறுகளும் தென்பட்டன. அதன் கரையோரங்களில் தென்னை மரங்களும் பனைமரத்தோப்புகளும் இருந்தன.
முந்திய தினம் நாங்கள் வந்து இறங்கிய கரையோரப் பகுதியும் அதிலே நின்றிருக்கும் மனித சஞ்சாரமும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கரையோரம் பெரும்பாலும் சதுப்பு நிலமாகவே இருந்தது. ஓங்கி வளர்ந்த கண்டல் மரங்களும் நீண்ட இளம் பச்சை நிறமுள்ள புல்வகைகளும் சில இடங்களில் குட்டையாக வளர்ந்த பற்றைச் செடிகளும் இருந்தன. ஏனைய மூன்று திசைகளிலும் அங்காங்கே தெரிந்த ஓரிரு சிறு குடிசைகள் தவிர கண்ணுக்கெட்டியவரை மரங்கள் அடர்ந்த காடுகளே தெரிந்தன. சில இடங்களில் புகை வருவதிலிருந்து அங்கு மனிதக்குடியிருப்புகள் இருப்பதை யூகிக்கக் கூடியதாக இருந்தது. தென்கிழக்குத் திசையில் ஒட்டகங்களின் திமில்கள் போல வரிசையாகச் செல்லும் காடுகள் அடர்ந்த குன்றுகள் இருந்தன.
காலையில் எங்களுக்கு தடல்புடலான உணவை ஏற்பாடு செய்திருந்தான் திசாவை. அதன் பின்பு கடலிலே நங்கூரமிட்டு நிற்கும் எங்கள் கப்பலுக்கு ஏதாவது செய்தி இருந்தால் தரலாம் என்றான். திசாவையின் உதவியாட்கள் பலர் முன்பறமிருந்த திடலில் குழமி நின்றிருந்தார்கள். அவர்களது பேச்சிலிருந்து எங்கள் கப்பலுக்குரிய உணவுப் பொருட்களையும் முதல்நாள் மாலையில் நாங்கள் செய்து முடித்ததுத் தயாராக வைத்திருந்த பாய்மரத்தையும் அவர்களே கொண்டு செல்லப் போவதாகத் தெரிந்தது.
அதாவது தாங்கள் படகுகளில் சென்று கப்பல் தலைவனை வரவேற்று அழைத்து வரப்போவதாகவும் எங்களை ஓய்வெடுக்குமாறும் கூறினர். நாங்கள் சென்று எனது தந்தையை அழைத்து வருவதாக முதல்நாளில் செய்திருந்த ஏற்பாடு இரவுக்குள் திசாவையினால் மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். திசாவையின் உபசரிப்பில் கபட நோக்கம் இருப்பதாக நான் கருதியது ஏறத்தாழ உண்மையாகி விட்டதையும் உணர்ந்து கொண்டேன்.
கப்பலுக்கு எங்களை அனுப்பிவைத்தால் நாங்கள் மீண்டும் திரும்பி வரப்போவதில்லை என்பதை எப்படியோ திசாவை யூகித்து விட்டான். அதனால்தான் எங்களை மரியாதைப் பணயக் கைதிகளாய் வைத்திருக்கின்றான் என்பது எனக்கும் எனது தோழர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது. திசாவையின் வஞ்சகம் புரிந்தாலும் அப்போது நாங்கள் இருந்த நிலையிலே அவனைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனமில்லை என்பதால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி நடப்பது என்று முடிவு செய்தோம். ஆனால் கப்பலிலுள்ள எனது தந்தையும் மற்றவர்களும் திசாவையின் வார்த்தைகளை நம்பி கரைக்கு வருவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று மட்டும் விரும்பினேன்.
அதற்காக திசாவை கேட்டுக் கொண்டபடி, கப்பலுக்கு அவர்கள் புறப்படுகையில், 'ஒருபோதும் கரைக்கு வரவேண்டாம்!' என்று ஆங்கிலத்தில் எழுதிய செய்தி ஓலையைக் கொடுத்து விட்டேன். இருந்தும் அந்தச் செய்தி எனது தந்தையிடம் உண்மையிலேயே கொடுப்பார்களா என்பதிலும் எனக்குச் சந்தேகமிருந்தது. அதனால் கப்பலுக்குச் அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்த நீண்ட பச்சை வாழைப்பழங்களில் ஒன்றிலே இரகசியமாக அதே செய்தியை விரல் நகத்தினால் குறியீடாகப் பொறித்துவிடலாமா என்று நான் நினைத்தபோதிலும் சூழ்நிலை காரணமாக அது கைகூடவில்லை.
அன்றுமட்டும் எனது முயற்சி கைகூடியிருந்து அந்தச் செய்தி கப்பலுக்கும் எட்டியிருந்தால் பின்பு நடந்தவை எல்லாமே வேறுவிதமாக மாறியிருந்திருக்கக் கூடும் அல்லவா?
அத்தியாயம் 7
திசாவையின் ஆட்கள் கப்பலுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.
நாங்கள் கரையிலிருப்பதால் அங்கு என்ன நடைபெறப்போகிறது என்பதை அனுமானிக்க முடியவில்லை. எங்களது செய்தி எனது தந்தைக்கு தரப்படுமா? தரப்படாமல் போனல் கூட திசாவையின் ஆட்களின் நடத்தையிலிருந்து அவர்களின் தந்திரத்தைப் புரிந்து கொண்டுவிட மாட்டாரா? 'கடவுளே இங்கிருந்தே கப்பலில் இருக்கும் தந்தைக்குத் தகவல் சொல்லும் மாயவித்தைக் கருவிகள் ஏதேனுமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..' என்றெல்லாம் விசித்திரமாக என்மனம் பதறியது.
எனது தந்தை ஓர் நட்பை விரும்பும் மனிதர். அதிலுள்ள சூழ்ச்சிகளை இலகுவில் புரிந்து கொள்ள மாட்டார். அதுவும் அவரது மகனாகிய நான் இங்கிருப்பதால் நிச்சயம் திசாவையின் ஆட்களை நம்பிக் கரைக்கு வருவதற்குத்தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனாலும் 'கப்பலிலிருந்து இங்கு வந்தவர்களில் ஏன் ஒருவராவது திசாவையின் ஆட்களோடு கூடவரவில்லை?' என்று அவர் யோசிப்பாராயின் நிலைமை வேறுவிதமாக மாறலாம்.
'கடவுளே அவ்வாறே அவர் நினைத்திட வேண்டும். நாங்கள் இளைஞர்கள். திசாவையின் ஆட்களை எப்படியோ சமாளித்து மீண்டும் கப்பலுக்குச் சென்று விடலாம். ஆனால் வயதான தந்தையும் அங்கிருப்பவர்களும் இங்கு வந்து விட்டால் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்.
இப்போது என்ன செய்வது என்று யோசித்தவாறே அன்றைய எங்கள் பொழுது கழிந்தது.அந்த இடம் திசாவை பிரதேசத்துக்குரிய அலுவல்களைக் கவனிக்கும் ஓர் இடம்தான் . நாங்கள் தங்கியிருந்த கொட்டியாபுரத்தில் எங்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஒரே இடத்தில் இருந்து கொண்டிருப்பது எங்களுக்குச் சலிப்பைத் தந்தது. அதனால் இந்தப் பகுதியை கால்நடையாகச் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். அதற்கு சில நிபந்தனைகளோடு ஒத்துக் கொண்டான் திசாவை. அவையாவன எங்களோடு அவனது ஆட்கள் இருவர் துணைக்கு வருவார்கள், எங்கு சென்றாலும் பொழுது மறைவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும், மற்றையது கடலோரங்களுக்கோ களப்புப்பகுதிகளுக்கோ செல்லக் கூடாது என்பவைதான் அந்த நிபந்தனைகள்.
அந்த நிபந்தனைகளின் உள்நோக்கம் தெளிவாகவும் எதற்காக நாங்கள் வெளியே சுற்றிப்பார்க்க விரும்பினோமோ அதனை முறியடிப்பதாகவும் இருந்தது. இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு திசாவையின் ஆட்களோடு கால்நடையாகவே கிளம்பினோம்.
இறங்குதுறையிலே நாங்கள் ஓய்வெடுத்த அந்தப் பெரிய புளிய மரத்தின் அடியில் இருந்து கிழக்குத் திசையிலே நடக்கத் தொடங்கினோம். மரங்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதைகளும் மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய சற்று அகலமான மணல் பாதைகளுமே அங்கு இருந்தன. காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவதானமாக வருமாறு காவலாளிகள் எச்சரித்தார்கள். நாங்கள் செல்லும் வழியில் இடையிடையே யானைகளின் விட்டைகள் காய்ந்து கிடந்தன. காட்டுச் செடிகளின் சிறுமுட்கள் எங்கள் உடைகளைப் பிறாண்டின.
ஏறத்தாழ இரண்டு பர்லாங்குகள் நடந்தபோது ஒரு சிறு கிளையாறு வந்தது. அதனருகே சிறிது மனித சஞ்சாரமிருந்தது. ஆற்றைக் கடந்து செல்வதற்காக இருபுறமும் பெரிய மரங்களில் பிணைக்கப்பட்ட தொங்குபாலம் போன்று வலுவான கயிற்றுப் பாலம் இருந்தது. அதன்மீது ஒவ்வொருவராகத்தான் கடந்து செல்ல முடிந்தது.
அங்கிருந்த மனிதர்கள் பரட்டைத் தலையும் கறுத்த தேகமும் கொண்டிருந்தார்கள். இடுப்பின் கீழ் மட்டுமே துணியினாலான உடையிருக்க வெற்றுடம்போடும் காணப்பட்டார்கள். பெண்களும் கூட ஏறத்தாழ அவ்வாறே காணப்பட்டார்கள். அவர்களது கைகளில் ஒரு முனை கூர்மையான நீண்ட கழிகள் இருந்தன அவற்றினால் ஆற்றின் கரையோர சேற்றுத்திட்டுகளில் குற்றிக்குற்றி கருமை நிறத்தில் கையகலத்தில் கிண்ணம் போலிருந்த எதையோ ஒன்றைக் கிளறியெடுத்து இடுப்பிலே இருந்த துணிப்பையினுள் சேகரித்துக் கொண்டிருக்க இன்னும் சிலர் அவற்றை ஒரு பாறாங்கல்லிலே வைத்து உடைத்து அதனுள்ளிருந்து பஞ்சு போன்ற சதைப்பகுதியை மட்டும் மண் சட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் உடைத்துக் கிடந்த பீங்கான் போன்ற வெண்ணிறத்துண்டுகள் குவியலாகக் கிடந்தன.நாங்கள் அனைவரும் ஆற்றைக் கடந்தபோது எங்களை அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்;.
அங்கிருந்த மனிதர்கள் பரட்டைத் தலையும் கறுத்த தேகமும் கொண்டிருந்தார்கள். இடுப்பின் கீழ் மட்டுமே துணியினாலான உடையிருக்க வெற்றுடம்போடும் காணப்பட்டார்கள். பெண்களும் கூட ஏறத்தாழ அவ்வாறே காணப்பட்டார்கள். அவர்களது கைகளில் ஒரு முனை கூர்மையான நீண்ட கழிகள் இருந்தன அவற்றினால் ஆற்றின் கரையோர சேற்றுத்திட்டுகளில் குற்றிக்குற்றி கருமை நிறத்தில் கையகலத்தில் கிண்ணம் போலிருந்த எதையோ ஒன்றைக் கிளறியெடுத்து இடுப்பிலே இருந்த துணிப்பையினுள் சேகரித்துக் கொண்டிருக்க இன்னும் சிலர் அவற்றை ஒரு பாறாங்கல்லிலே வைத்து உடைத்து அதனுள்ளிருந்து பஞ்சு போன்ற சதைப்பகுதியை மட்டும் மண் சட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் உடைத்துக் கிடந்த பீங்கான் போன்ற வெண்ணிறத்துண்டுகள் குவியலாகக் கிடந்தன.நாங்கள் அனைவரும் ஆற்றைக் கடந்தபோது எங்களை அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்;.
அதன் பின்பு நாங்கள் மற்றொரு வழியாகச் சென்றோம்.
அது ஒரு குடியிருப்புகள் உள்ள பகுதியாக இருந்தது. அங்கு நிறைய கடல் சிப்பிகளும் ஊரிகளின் ஓடுகளும் குவியல் குவியலாய் கிடந்தன. அவற்றுக்கருகிலே தூசுபடிந்த பரட்டைத்தலை ஆண்கள் பெரும் மரக்குற்றிகளை கோடரிகளால் பிளந்து கொண்டிருக்க பெண்கள் விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று மனிதர்களின் உயரமுள்ள அகலமான பெரும் அடுப்புகள் பற்றவைக்கப்பட்டுப் அழுக்கு வெண்ணிறத்தில் புகைந்த வண்ணமிருந்தன. அந்த இடமே வெண்ணிறச் சுண்ணாம்புத்துகள்களால் நிறைந்திருந்தது. அதனருகே மாட்டு வண்டிகள் பல நின்றிருக்க அவற்றிலே சாக்குப்பைகளில் பொதியேற்றிக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சுண்ணாம்புச் சூளையிலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும் எம்மை வியந்துபோய் பார்த்தார்கள்.
அந்த வழியே இன்னும் சிறிது தூரம் சென்று வரலாம் என்று நாங்கள் முனைந்தபோது உடன் வந்த திசாவையின் ஆட்கள் இருவரும் மறுத்துவிட்டனர். இப்போது அதற்கு நேரெதிரே திரும்பி தென்கிழக்காக செல்லத் தொடங்கினோம். அந்த சுண்ணாம்புச் சூளை வழியாகச் சென்றால் கடற்கரையை அடையலாம் என்பதனை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன்.
ஆங்காங்கே சில குடியிருப்புகள் இருந்தனவே தவிர செறிவான மனித சஞ்சாரம் அந்தப் பகுதிகளில் குறைவாகவே இருந்தது. வெகுதூரத்தில் மூன்று நான்கு குன்றுகள் தெரிந்தன. அந்தப் பக்கமாக சில பர்லாங்குகள் நடந்ததிலே வெண்ணிறத் தூரிகைகள் போன்று உச்சியில் பூத்துச் நிற்கும் ஒருவகை உயரமான புற்கள் கரை நெடுகிலும் செழித்து வளர்ந்திருக்கும் சிறுகிளையாறு ஒன்றைக் கண்டோம். அதன் கரைவழியே நடந்து சென்று விட்டு இறுதியாக அங்கிருந்து நேரே இறங்குதுறைப் புளிய மரம் இருந்த திசையை நோக்கித் திரும்பி வந்தோம்.
இந்த வழியில் மட்டும் காடுகள் இடையிடையே அழிக்கப்பட்டு பரந்த வெறும் நிலங்களாக இருந்தன. அவற்றில் நெல், இறுங்கு, சோளம் போன்ற தானியங்கள் மற்றும் சில காய்கறிகள் விளைந்த தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மத்தியில் நிலத்தில் நடப்பட்டிருந்த தடிகளிலே மண்பானையொன்று தென் மீது வெள்ளைச் சுண்ணாம்பினால் மனித முகம் போல வரையப்பட்டு கவிழ்க்கப்பட்டுக் காணப்பட்டது. சில இடங்களிலே வைக்கோலால் செய்த உருவப்பொம்மைகளையும் கட்டி வைத்திருந்தார்கள்.
தோட்டங்களைச் சுற்றிலும் பயிர்களை கால்நடைகள் அழித்துவிடாதபடி கழிகள் கொண்டு சுற்றிலும் நேர்த்தியாக அடைத்திருந்தனர். அவற்றின் சிறிய நுழைவாயில்களை மரவுரிகளில் கழிகளைக் கிடையாக கோர்த்துக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகளில் மட்டும் வேலி மரக்குற்றிகளில் தேவையான போது எடுத்துவிட்டு மீண்டும் கூடியதாக நீண்ட உருளைக் குற்றிகளை கிடைத்தடுப்பாக வைத்திருந்தார்கள். வாயில்களில் துணிபோன்றும் மெழுகுபோன்றும் இருந்த எரிந்து அணைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு தோட்டத்தின் முன்புறமும் ஏதாவது நிழல்தரும் மரமொன்றின் கீழே பெரும் பாறாங்கல் ஒன்றின் மீது நீர் நிறைந்த மண்பானையும் அதன்மேல் அள்ளிப் பருகுவதற்காக நன்கு சீவித் துப்புரவு செய்யப்பட்ட தேங்காய்ச் சிரட்டை ஒன்றும் காணப்பட்டது.
வழியிலே எதிர்ப்பட்ட நடக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைக் கண்டோம். எங்களைப் பார்த்துப் பயந்துபோய் நின்றவரிடம் பேச்சுக் கொடுத்தோம். முதலில் தயங்கி நின்றவர் பின்பு எங்களது மொழியில் நாங்கள் சைகைகளுடன் பேச அவரது மொழியில் சைகைகளைப் பயன்படுத்திப் பேசலானார். என்ன சொல்கிறார் என்பதை சரியாகப் புரியாது போனாலும் அவரோடு பேசியது மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அவரது வேண்டுகோளை ஏற்று அவர் இருந்த தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆழமான கிணற்றிலே இருந்து தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பயந்துபோய் விலகி நின்றவர்கள் பின்பு நாங்கள் தமது பாட்டனாருடன்தான் வந்திருப்பதை அறிந்து அருகிலே வந்தார்கள். ஆண்கள் நீண்ட தலைமுடியை பின்புறமாக வளர்த்திருந்தார்கள். இடுப்பில் மட்டும் துணியைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். பெண்கள் இடுப்பிலும் மார்பிலும் தைக்கப்படாத துணிகளை அணிந்து காணப்பட்டார்கள். காதுகள் எங்கும் துளையிட்டு ஓசையெழுப்பும் உலோகத்தாலான ஆபரணங்களையும் அணிந்திருந்தார்கள்.
பரட்டைத் தலையுடன் இருந்த சிறுவர்களும் சிறுமிகளும் எங்களருகே பயந்தபடியே வந்து எங்களையும் எங்கள் உடைகளையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். அந்த வயதான மனிதர் எங்களை அங்கிருந்த மரக்குற்றிகள் மீது அமரவைத்து ஒரு வகை அவித்த கிழங்குகளை உண்ணத்தந்தார். அவை இரு சாண்கள் நீளத்தில் இருபெருவிரல்களின் மொத்தத்தில் அடியில் பருத்தும் நுனியில் கூரியதாகவும் ஏறத்தாழ கொக்குகளின் அலகுகள் போல இருந்தன. அவற்றை எப்படி உண்பதென எனக்கும் நண்பர்களுக்கும் தெரியவில்லை. அக்கிழங்குகள் நீளவாக்கிலே தும்பு நார்கள் நிறைந்ததாக வேறு இருந்தன. பின்பு அந்த முதியவர் செய்து காட்டியது போலவே தும்புகளை நீங்கி உண்டோம். ஆரம்பத்திலே சிறிது கசப்புச் சுவையுடன் இருந்தாலும் போகப்போகச் சுவையாகவே இருந்தது.
பின்னர் நாங்கள் அவரிடம் விடைபெற்ற போது ஆரஞ்சு நிறத்தில் தோலும் உள்ளே வெண்ணிறச் சுளைகளும் இருந்த பழங்களையும் பால்போன்ற திரவம் வடியும் சிறு மஞசள்நிறப் பழங்களையும் அன்பளிப்பாகத் தந்தனுப்பினார். மொழி புரியாத போதிலும் அந்தக் காட்டு மனிதர்களின் உபசரிப்பை வியந்தபடியே நடந்தோம்.
இப்படியான காட்சிகளையும் மனிதர்களையும் பார்த்தவாறே திசாவை எம்மைத் தங்க வைத்திருந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தபோது மதிய உணவு தயாராக இருந்தது. நீண்ட நேரம் வெயிலில் நடந்ததால் ஏற்பட்ட அயர்வும் உண்டகளையும் சேர எம்மையறியாமலே உறங்கிப் போனோம்.
(தொடரும்)
-'Mutur' Mohammed Rafi
No comments:
Post a Comment