கடவுள் இருக்கிறார்..?
கடவுள் அல்லது நம்மைமீறிய ஒரு சக்தி இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபிக்கப்பட்ட சான்றுகளும் இதுவரை இல்லை. ஆனால் வெறும் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத விடயங்களில் நின்று கொண்டோ, வெகுஜன பாமர மக்களின் அறியாமை மற்றும் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் உண்மையாக்கிவிட முயல்கின்றார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை இது தான் மீண்டும் மீண்டும் வேறு வடிவங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கடவுள் இல்லை என்பதை யாராலும் நிரூபிக்க முடியாது என்பதால் கடவுள் இருக்கிறார் என்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே அதுதான் கடவுள் இருப்பதற்கான ஆதாரம், என்பது அவர்களின் வாதமுறைமை.
ஒன்று இருக்கிறது என உறுதியாக கூறவேண்டும் என்றாலே அதன் இருப்பு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப் பட்டிருக்கவில்லை என்றால் அதை யூகமாக மட்டுமே கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பார்கள். கடவுள் உண்மையாகவே இருக்கிறாரா? என்று கேட்டால் ஆம் என்பார்கள். இந்த இல்லை-ஆம் முரண்பாடுகளுக்கு இடையில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டிவைத்திருக்கும் வரையில், அவர்களால் உண்மைக்கு அருகில் கூட வரமுடியாது.
கடவுள் மறுப்பு என்பது, கடவுள் இருப்பின் விளைவால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் கண்டு உருவானதல்ல. என்று கடவுள் எனும் சிந்தனை எப்போது மனிதனிடம் தோன்றியதோ அந்தக் கணமே அதன் மறுப்பும் தோன்றிவிட்டது. கடவுள் இருப்பு எப்படி மனிதச் சிந்தையில் தோன்றியதோ ஆதுபோலவே கடவுள் மறுப்பும் மனிதச் சிந்தையில் தோன்றியது தான். அதை மதத்தின் பெயரால் செய்யப்படும் மூடநம்பிக்கைகளைப் பார்த்துத்தான் தோன்றியது என்று யாராவது நினைத்தால் அது, கடவுள் இருப்பும் கடவுள் மறுப்பும் சமநிலையில் இருப்பதல்ல நிலை தாழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒருவித குறியீடு.
கடவுள் மறுப்பு அறிவியலோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அது சமூகவியல், பயன்பாடு போன்றவற்றுடனும் தொடர்புடையது. ஆனால் கடவுள் மறுப்பு என்றதும் மக்களின் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தோன்றியது என்பதும், அறிவியல் விளக்கமளிக்காததையும் நாம் ஏற்கவில்லையா என்று கேட்பதும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதைதான். கடவுள் மறுப்பு கடவுள் மற்றும் இருப்பு என்பதை அறிவியலை விளங்கி வாழ்பவர்கள், அறிவியலை விலக்கி வாழ்பவர்கள் என்று பிரிவினை செய்ய இயலாது. ஏனெனில் மனிதர்கள் அனைவருமே அறிவியலை ஏற்று அறிவியலுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். அதேநேரம் சொந்த சாதக பாதகங்களை, கலாச்சார மரபுகளை முன்வைத்து சில நம்பிக்கைகளயும் கொண்டிருக்கிறார்கள். இது இருப்பு, மறுப்பு என்ற இரு நிலையிலுள்ளவர்களுக்கும் பொருந்தும். இதைக் கொண்டு அறிவியல் விளக்கமளிக்காதையும் கூட ஏற்றுக் கொள்பவர்கள் கடவுளை மறுக்கக் கூடாது என கூற முடியுமா?
அறிவியல் விளக்கமளிக்காத ஒன்றை கேள்விக்குட்படுத்தாமல் ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. ஆனால் விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை என்று உலகில் எதுவுமில்லை.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
(1) காலக்கெடு தேதிக்கு முன்பே கெட்டுப் போகும் உணவு,
(2) காலக்கெடு தேதி முடிந்த பிறகும் நல்ல நிலையில் இயங்கும் மின்கலம்(battery cells)
இவைகள் அறிவியல் முரண்பாடா? ஒரு பொருளின் கெடுதேதி என்பது அந்தப் பொருளில் இருக்கும் சேர்மங்கள், அவற்றின் இரசாயனவியல் தாக்கங்கள், தாக்கம்புரியும் வெளியிலுள்ள வாயுக்கள், நொதிகளால் ஏற்படும் பயன்மாற்றம் முதலியவைகளைக் கொண்டு எந்த தன்மையில் அது மக்களுக்கு பயன்படுகிறதோ அந்த தன்மையை எவ்வளவு காலத்தில் அது இழக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கணிப்பது.
இந்த கணிப்புகள் வெகுசில போதுகளில் தவறிப்போகலாம். அப்படி தவறுவது அறிவியல் தவறல்ல. முன்னதாகவே கெட்டுப் போன உணவையோ, பின்னாலும் இயங்கும் மின்கலத்தையோ ஆய்வுக்கு உட்படுத்தினால் ஏன் அவை கணிப்பை மீறின என்பது புலப்படும். அவை கணிப்பை மீறிய காரணமும் அறிவியலுக்கு உட்பட்டு இருக்குமேயன்றி அறிவியல் முரண்பாடாக இருக்காது. இதை அறிவியல் முரண்பாடாக சுட்டுவதே சூழலை தனக்கு சாதகமாக வளைக்கும் நரித்தனம் தான்.
இந்த கணிப்புகள் வெகுசில போதுகளில் தவறிப்போகலாம். அப்படி தவறுவது அறிவியல் தவறல்ல. முன்னதாகவே கெட்டுப் போன உணவையோ, பின்னாலும் இயங்கும் மின்கலத்தையோ ஆய்வுக்கு உட்படுத்தினால் ஏன் அவை கணிப்பை மீறின என்பது புலப்படும். அவை கணிப்பை மீறிய காரணமும் அறிவியலுக்கு உட்பட்டு இருக்குமேயன்றி அறிவியல் முரண்பாடாக இருக்காது. இதை அறிவியல் முரண்பாடாக சுட்டுவதே சூழலை தனக்கு சாதகமாக வளைக்கும் நரித்தனம் தான்.
சுண்டி விடப்படும் ஒரு நாணயத்தில் எந்தப்பக்கம் மேலாக விழும் என்பது வெற்று யூகமா? அல்ல அதுவும் அறிவியல் தான். எந்தப் பக்கம் விழுவதற்கும் 50:50 வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக செய்யப்பட்டிருக்கும் உலோக அச்சுக்கோர்ப்புகளின் கனத்தைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் விழுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட அறிவியலால் கூறமுடியும். இதை அறிவியலல்லாத வெற்று யூகம் என்று கூற முடியுமா?
அறிவியியலல்லாமல் செய்யப்படும் வெற்று யூகங்கள் கூட தன்னிச்சையாக மனிதனுக்குள்ளிருந்து கிளைத்து விடுவதில்லை. வாழ்ந்த சூழல், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் துணைகொண்டே யூகங்கள் எழும். ஆக வெற்று யூகங்களைக்கூட அறிவியலுக்குள் வகைப்படுத்த முடியும்.. குறிப்பிட்ட மனிதன் ஒன்றை அறிந்திருக்கிறனா இல்லையா என்பதையும் தாண்டி வாழ்வில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.
அறிவியியலல்லாமல் செய்யப்படும் வெற்று யூகங்கள் கூட தன்னிச்சையாக மனிதனுக்குள்ளிருந்து கிளைத்து விடுவதில்லை. வாழ்ந்த சூழல், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் துணைகொண்டே யூகங்கள் எழும். ஆக வெற்று யூகங்களைக்கூட அறிவியலுக்குள் வகைப்படுத்த முடியும்.. குறிப்பிட்ட மனிதன் ஒன்றை அறிந்திருக்கிறனா இல்லையா என்பதையும் தாண்டி வாழ்வில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் அதைவிட்டு எழும்போது தன் கால்களை செங்கோணத்திலோ, விரிகோணத்திலோ நிலத்தில் ஊன்றி எழுவதில்லை. உள்வசமாய் சற்று மடக்கி குறுங்கோணத்தில் வைத்தே எழுகிறான். இதன் அறிவியல் காரணத்தை எல்லா மனிதர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அமர்ந்திருக்கும் போது மனிதனின் மொத்த எடையும் பிட்டப் பகுதியிலுருந்து நாற்காலியின் நான்கு கால்களின் மையப்பகுதில் புவியீர்ப்பு நிலை கொண்டிருக்கும். எழும்போது எடையின் புவியீர்ப்பு மையத்தை நாற்காலியிலிருந்து பாதங்களுக்கு மாற்றும் போது புவியீர்ப்பு மையத்திற்கு வெளியிலிருந்தால் எழுவதில் சிரமம் ஏற்படும். அதனால் பாதங்களை அந்த மையத்திற்குள் கொண்டுவந்து எடையை மாற்றி பின் நகர்கிறார்கள். இந்த அறிவியல் விளக்கம் ஒருவருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த அறிவியல் விதிக்கு உட்பட்டே அவரின் செயல்கள் இருக்கும். இது போல் மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அறிவியலுக்கு உட்பட்டே அமைகிறது. இவ்வாறு செயல்படும் அறிவியலை யாரும் மறுப்பதில்லை, மறுக்கவும் முடியாது, ஒருவர் கடவுளை ஏற்றாலும் மறுத்தாலும் இது தான் நிலை. இதில் எங்கிருந்து அறிவியல் மெய்பிக்காத நிலை வருகிறது?
மனிதன் மரபு ரீதியாக, கலாச்சார ரீதியாக சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறான். இதை காரணமாக காட்டியும், மக்களின் அறிதல் குறைகளை காரணமாக காட்டியும் கடவுளின் இருப்பை மெய்பிக்க முயல்வது ஒருவழியில் கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்வது தான். ஏனென்றால் ஒரு நிலைப்பாடு சரியா? தவறா? ஏற்கலாமா? கூடாதா? என்பதைத் தீர்மானிக்க அறிவியலைத் தவிர வேறொரு கருவி மக்களிடம் இல்லை. எந்த ஒன்றில் ஐயம் ஏற்பட்டாலும் அதை அறிவியலைக் கொண்டு தீர்ப்பது தான் சரியானதாக இருக்கும். அதேநேரம் அறிவியல் என்பது மனித அனுபவங்களை தொகுத்து சோதித்தறிந்து அந்த சோதனையின் முடிவுகளைக் கொண்டு பொதுவிதிகளை அடைவது. மீண்டும் மீண்டும் அவை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இயங்கியலுக்கு இயைபவை ஏற்றுக் கொள்ளப்படும், மாறானவை தள்ளப்படும்.
அறிவியல் மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது தான் என்றாலும் அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது, புதிய உயரங்களை எட்டிக் கொண்டே இருக்கிறது. அது எட்டாத உயரங்கள் இருக்கிறதா? ஆம். அடுத்து அடுத்து என உயரங்களைத் தேடிக் கொண்டே இருப்பதால், நுண்ணியமாக நுழைந்து கொண்டே இருப்பதால் எப்போதும் அது தேடலிலேயே தொடரும், அதுதான் அறிவியலின் இயல்பு. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் இந்த இடத்திற்கு மேல் எட்டவில்லை எனவே, அதற்கு மேல் இருப்பதாக எங்களால் கூறப்படும் கடவுளை ஏற்றுக்கொள் என்பது இயலாமை.
அது இயலாமை மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட.
எப்படியென்றால், எதையும் மக்களுக்கு விளக்கிக்கூறி புரியவைப்பதுதான் மக்களை உயர்த்துவதற்கான வழியேயன்றி, மக்களிடம் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி ஒருவரிடம் இருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கையை இன்னொருவரிடம் பதியவைப்பதல்ல.
சரி, ஒருவன் அறிவியலின் அடிப்படையில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை. எப்போதும் சரியாக இருப்பது சாத்தியமும் அல்ல. சரி, தவறு என்பதும் உண்மை என்பதும் எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தக் கூடியதும் அல்ல. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பூமியில் தான் உண்மை வேறொரு சூரியக் குடும்பத்திலுள்ள கோளில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூற முடியுமா? வேண்டுமானால் எந்த திசையில் உதிக்கிறதோ அந்த திசைக்கு கிழக்கு என பெயர் வைத்துக் கொள்ளலாம். பூமியிலேயே கூட பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் திசையை மாற்றிக் கொண்டால் (அப்படி மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது) அப்போது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது உண்மையாக இருக்காது.
நிரந்தரமான உண்மை என்று எதுவுமில்லை. மனிதனின் சூழல், ஆற்றல், வாய்ப்புகள், தேவைகளைப் பொருத்து உண்மைகளும், சரியா தவறா என்பதும் மாறுபடும். இதை பாமரருக்கும் எளிமையாக புரியவைக்க ஒரு எடுத்துக்காட்டை கூறலாம். பன்றியை உண்ணக்கூடாது என்பது சில மதத்தினருக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் இறைவனுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை எனும்போது, மனிதர்களின் சிந்தனை எப்போதும் சரியாக இருக்காது என்பதை தன்னுடைய நம்பிக்கைக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன பெயரிடுவது? நடப்பு உலகில் அரசை எதிர்த்து போராடுவதும், போராடத் தூண்டுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை, இதையே ஆளும் வர்க்க கோணத்திலிருந்து பார்த்தால் அது அரச துரோகம். இங்கு எது சரியானது என்று பார்த்து அதை ஆதரிக்க வேண்டுமேயல்லாது, சிந்தனை மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடியது எனவே கடவுளை நம்பு என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?
பொதுவாக மனிதர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது சரியா? தவறா? எனும் அடிப்படையில் எடுக்கும் முடிவே அவர்களை சரியான நிலைப்பாட்டில் இருத்தி வைக்கும். சரியான நிலைப்பாட்டில் தாம் இருக்க வேண்டும் எனும் நினைப்பு இருக்கும் வரை ஒருவனால் சொந்த சாதக பாதகங்கள் குறித்து கவலைப்பட முடியாது. கடவுள் இருப்பு மறுப்பு எனும் பிரச்சனையில் நம்பிக்கையாளர்களை விட மறுப்பாளர்களே சரியா தவறா எனும் கேள்விக்கு அருகில் நிற்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் தான் விமர்சனம் இருக்கிறது, அவர்களிடம் தான் மீளாய்வு இருக்கிறது. அவ்வாறன்றி சிலர் தாங்களும் சாதகமான நிலைப்பாட்டில் அல்ல சரியான நிலைபாட்டில் இருக்கவே விரும்புகிறோம் என்று கூறுவார்களாயின் தங்களை மீளாய்வு செய்து கொள்ளட்டும்.
கடவுளை மனிதன் விமர்சிக்க முடியுமா? மனிதன் என்பவன் யார்? அவனது தகுதிகள், எல்லைகள் என்னென்ன? என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். இது போன்ற தெளிவு கடவுளுக்கு இருக்கிறதா? மனிதன் எவ்வாறு ஐயங்களுக்கு ஆட்படாதவாறு தெளிவாக இலங்குகிறானோ அது போன்று கடவுளும் தெளிவாக இயங்கினால் தான் இரண்டையும் ஒப்பிட முடியும்.
அவ்வாறன்றி மனிதன் தெளிவான நிலையிலும் கடவுள் மாயமான நிலையிலும் இருக்கும் போது இரண்டையும் ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளின் தகுதிக்கு அருகில் வருவதாக நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடவுள் எனும் கருத்து மனிதனுக்கு தோன்றிய காலத்தில் கடவுளுக்கு என்னென்ன தகுதிகளை மனிதன் ஏற்படுத்தியிருந்தானோ அதைவிட அதிக தகுதிகளோடு இன்று மனிதன் இருக்கிறான். வேறு வடிவத்தில் கூறினால் மனிதனின் அறிவும் தகுதியும் உயர உயர கடவுளின் அறிவும் தகுதியும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
சிறு குழந்தைகள் ஒருவித கணித விளையாட்டொன்றை விளையாடுவார்கள். யார் அதிக மதிப்புள்ள எண்ணைக் கூறுவது என்பது போட்டியாக இருக்கும். மாறிமாறி அதிக மதிப்பை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து நீ எவ்வளவு கூறினாலும் அதைவிட ஒன்று அதிகம் என்று கூறினால் என்ன நிலை வருமோ அந்த நிலை தான் கடவுளின் தகுதி.
அதாவது மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருப்பதாக கருதப்படும் இடைவெளி எப்போதும் குறையாது தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது கடவுளை விமர்சிக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை என்று கூறினால் அதன் பொருள் என்ன? கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. மனிதனுக்கு மனிதனே அடிமையாக இருத்தல் கூடாது எனும் போது ஆண்டவனுக்கு தான் அடிமை என அறிவித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?
ஒன்றின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால், அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. சரியாக செய்யப்பட்டிருந்தால் அதை எதிர்கொண்டு விளக்கம் கூறுங்கள். தவறாக செய்யப்பட்டிருந்தால் எந்த விதத்தில் அது தவறான விமர்சனம் என்று தெளிவியுங்கள். அதை விடுத்து, கடவுளை விமர்சிக்க மனிதனுக்கென்ன தகுதி இருக்கிறது என்றால் அது நாலாம்தர அரசியல்வாதிகளின் அணுகுமுறை.
கோடிக்கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தில் ஒரு துளியைப் போன்ற சூரியக் குடும்பத்தில் அதனில் தூசைப் போன்ற பூமியில் பல லட்சம் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து பூண்டற்றுப் போன பின்னில் துணுக்கைப் போன்ற மனிதர்களுடைய மனதில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் இப்பேரண்டத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டு அதையும் தாண்டி வியாபித்திருக்கிறார் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை. அதிலும் அதை விமர்சிக்கவும் தகுதியில்லை என்பது அறியாமையினும் அடங்காமை. இவ்வாறு அடங்காத அறியாமையை கொண்டிருக்கு நம்பிக்கையாளர்கள் அந்த அடங்காத அறியாமையையே முற்று முழுமை என்பது மனமுரண்டா அல்லது அதனிலும் மேலா?
- Jesslya Jessly
No comments:
Post a Comment