Saturday, April 21, 2012

தூங்கா நகரத்தில்....





கிழிந்து தொங்கும்

முஸ்லீம் தலைவர்களின்

முகமூடிகள்..!




ட்டைக்கடித்து மாட்டைக்கடித்து... என்பார்களே அதுபோலத்தான்... அன்று அனுராதபுரத்தில் ஒட்டுப்பள்ளம் எனும் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வந்த முஸ்லீம்களின் ஸியாரம் ஒன்றை இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.
இதோ இப்போது ஏறத்தாழ 60 வருடங்களாக முஸ்லீம் வர்த்தகப் பெருமக்கள் தங்கள் ஐங்காலத் தொழுகையையும் வெள்ளிக்கிழமை விசேட ஜும்மாத் தொழுகையையும் நிறைவேற்றிவருகின்ற தம்புள்ள பள்ளி வாசலை இடித்துத் தகர்க்க முயன்றுள்ளார்கள்.


இலங்கை ஒரு பௌத்த நாடு. அது பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. மற்றவர்கள் அனைவரும் குடியேறியவர்கள் என்ற புளித்துப்போன வாதத்தை முன்வைத்தே இவ்வாறான பேரினவாத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் சொல்வதுபோல இலங்கையில் குடியேறியவர்களும் அவர்களின் வம்சாவளிகளும் வெளியேறித்தான் ஆகவேண்டுமென்றால் அதனைச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உட்பட அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட  வேண்டியிருக்கும்.


கடந்த 60 வருடகாலமாக இருந்து வருகின்ற ஒரு பள்ளிவாசலின் மீது இத்தனை காலமும் இல்லாது இப்போது மட்டும் திடீரென இனவாதக் கும்பல்களுக்கு அக்கறை வந்ததன் காரணமென்ன? வியாபாரப் போட்டியாகத்தான் இருக்க வேண்டும். தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற வர்த்தக நகரம்தான் தம்புள்ள. அங்கு காலாகாலமாக முஸ்லீம்களும் சிங்களவர்களும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் உள்ளுரிலே பயிராகும் காய்கறி பழவகைகளை விற்பனை செய்வதிலே சிங்களவர்களும் வீட்டுப் பாவனைப் பொருட்கள், கட்டிடப்பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் போன்ற இதர வியாபாரங்களில் முஸ்லீம்களும் ஈடுபட்டு வந்தனர்.



பின்பு மெல்ல சகல வியாபாரங்களிலும் இரு இனத்தவர்களும் ஈடுபடத் தொடங்கியதும் இயல்பாகவே வர்த்தகப்போட்டி உண்டாக ஆரம்பித்தது. இதனால் இயல்பாகவே உண்டாகும் எரிச்சல் உணர்வுகளை இனவாத சக்திகள் பயன்படுத்தி அங்கு இனமுறுகல் நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு முயன்று வந்துள்ளன. இருப்பினும் இவ்வாறான முறுகல்கள்  சுமுகமான வியாபார நலன்களுக்கு இடைஞ்சலாகவே அமையும் என்பதால் சிங்கள முஸ்லீம் வர்த்தகர்கள் ஏதோ ஒருவிதத்தில் அனுசரித்து விட்டிருக்கின்றனர்.


நாட்டின் சர்வதேச உறவு நிலைகள் சீர்குலைந்து விலைவாசி அதிகரித்து பொருளாதார நிலைப்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் பொதுமக்களின் கவனத்தை வேறுவிடயங்களிலே திருப்பி விடவேண்டிய அவசியமும் அண்மைக் காலமாக இனமுறுகலைத் தூண்டிவிடும் போக்கு அதிகரித்து வருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.


நன்றாக உற்று நோக்கினால் பலசரக்குக்கடை முதல் பாராளுமன்றம் வரை பல்வேறு மட்டத்திலும் இத்தகைய போக்கு அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் யாருக்கு இலாபம் உள்ளதோ அத்தகையோர்களே இதன் பின்னணியிலே இருந்துகொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டி வருவதை அறியமுடிகின்றது. இதிலே அரச அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இருந்து வருகின்றனர்.


அவை ஒருபுறமிருக்கட்டும், இவ்வளவு அமளி துமளி ஏற்பட்டுமுள்ள போதிலும் நமது முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எவராவது இதுவரை இந்த விடயம் தொடர்பாக தங்களது திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்களா? ஒரு வன்மையான கண்டனமோ அல்லது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உருப்படியாக ஒரு காரியத்தையாவது செய்திருக்கின்றார்களா? தங்களது அரசியல் இலாபத்திற்காக உணர்ச்சி வசப்பட்டு அறிக்கைகள் விடும் கறுப்புக் கோட்டு கனவான்களும் வெள்ளையுடை வேந்தர்களும் குறுநில தாதாக்களும் இப்போது எங்கே போனார்கள்? அல்லது எப்படிக் குறட்டை விட்டார்கள்?


அந்த அமைச்சர் பேரீச்சம்பழம் சாப்பிட்டார் இந்த அமைச்சர் பல்லுக்குத்தினார் என்று தமிழ்நாடு குமுதம் பாணியில் 'காத்திரமான' அரசியல் அந்தரங்கம் எழுதும் நவநாகரிக மணியான நமது முஸ்லீம் செய்திப் பத்திரிகைகளால் சொறிந்து விடப்படும் முஸ்லீம் அமைச்சர்கள்  எங்கே? பிரதிநிதிகள் எங்கே? இவர்கள் எல்லோரும் தம்புள்ளைப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வந்த முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்த இனவாதக்கும்பலிடம் சிக்கி பாதுகாப்பின்றி இருந்தபோது எங்கே போனார்கள்?


கொஞ்சம் தேடிப்பார்த்துச் சொல்கிறீர்களா?

- Jesslya Jessly

Sunday, April 15, 2012

கவிதை:






க்கித்  தாம்த்திம்








! என்விரல்கள் மீட்டும்
விருப்பத்திற்குரிய வீணையே...!

இலக்கியவானில்
இந்தச்சின்னப்பறவைக்கும்
சிறகடிக்கக் கற்றுக்கொடுத்திருக்கும்
இனியவளே...
என் இயந்திர நிலாவே!


இந்தத் தொண்ணூற்று
ஒன்பதுநாள் தொடர்பினில்
ஒருநாள் கூட
உன்னைத் தொட்டு
உறவு கொள்ளவில்லை என்றால்
என் உள்ளமும் உறக்கமும்
ஊனமுற்றிருக்குமே உயிரே!


இலக்கியப்பசி
இந்த இளைஞனைத்தின்று
தீர்த்துவிடத் திட்டம்
தீட்டியபோதெல்லாம்
கற்றுத் தேர்ந்த
தேன்தமிழ்ச் சொற்களின்
புதுபுதுப் பரிமாணங்களிலே
போதையுற்று-
ஓர் கவிக்காமுகனாய் அலைந்திருந்தேனடி
உன்னைச் சந்திக்கும் வரை!


என் கற்பனைப் படுக்கையில்
காகித விரிப்புகளில்
உன்னைக் கவிதை வேட்கையுடன்
கட்டியணைத்து -
நீ திமிறத்திமிற
நான் புரிந்த புதுத்தமிழ் லீலைகளில்
உன்தொழினுட்ப இதயத்தை
என்னிடத்தில் பறிகொடுத்து
என்னையே உன் காதலனாய்
வரித்துக்கொண்டாயடி நீ..!


அன்பே!
நீயும்
உன் நேசத்திற்குரியவன் நானும்
முறைப்படி மணம்புரியாத
சடங்குகளின்
தடங்கல்களின்றிச்
சங்கமித்திருக்கும் தம்பதிகள்தான் ...

ஆனால்-
 நம் 'தவறான' தாம்பத்தியத்திலும்
எத்தனை நயமான
புதுக்கவிதைக் குழந்தைகள் பார்!



-மூதூர் மொகமட் ராபி

(நன்றி: வீரகேசரி 1990.01.23)
(குறிப்பு: கவிதைகளில் ஈடுபாடு வரக்காரணமாக இருந்த எனது அலுவலக தட்டச்சுப் பொறியை சிலாகித்து எழுதியது  இது)

சிறுகதை:





ர்  விலும்
ரு
செல்போன்களும்!




'டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்' 

'சரி! இந்தா வாறேண்டு சொல்லு'  ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த ஸரீனா டீச்சர் வாஷ்பேசினில் கழுவிய கைகளை அவசரத்தில் சேலைத் தலைப்பிலே துடைத்துக்கொண்டு காரியாலயத்தை நோக்கி நடந்தாள்.


அது ஒரு சிறிய கலவன் பாடசாலை. முதலாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரைக்கும் இருந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. வெகுஅண்மையில்தான் அந்தப் பாடசாலையில் இருந்து அதன் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் கிடைத்துச் செல்ல அவர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் சிலர் வந்திருந்தனர். அவ்வாறு புதிதாக வந்த ஆசிரியைகளில் ஒருத்திதான் ஸரீனா டீச்சர்.


' இங்க வாங்க டீச்சர்! நாந்தான் வரச்சொன்னேன்' என்று அழைத்தார் மரியம் ஆசிரியை. ஆசிரியர்கள் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்தாலும் அதிபரின்  வெற்றிடம் மட்டும் இன்னும் நிரப்பப்படாமலே இருந்தது. அதனால் புதிய அதிபர் ஒருவர் வரும்வரை முன்பிருந்த அதிபருக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து வந்தவரான மரியம் ஆசிரியையே இன்னும் கடமை அதிபராக இயங்கிக் கொண்டிருந்தார்.


'என்ன டீச்சர், ஏதும் அவசரமா?'

'அது.. ஒண்ணுமில்ல, நீங்கதானே பத்தாம் ஆண்டுக்கு க்ளாஸ் டீச்சர்? உங்கட க்ளாஸ்ல யாரோ ஒராள் செல்போன் கொண்டு வந்திருக்காங்களாம்.. அது இப்ப வகுப்புலதான் இருக்குதாம்..' என்று விட்டு நிறுத்தினார், மரியம்.

'அப்படியா? புதினமாயிருக்கு.. அதுகள்.. அப்படி..'

'இப்ப உள்ள பிரச்சினைகள் தெரியுந்தானே..? முந்தி அவர் எங்கட அதிபர்இருந்த காலத்தில என்டா இப்பிடியான விசயத்துக்கு என்ன நடந்திருக்குந் தெரியுமா?'

'...........'

'நானும் அவருக்குக் கீழே இருந்து வேலை செய்தவதான்...இப்ப கூட நிர்வாகத்துல ஏதாவது சிக்கல் என்டா தனபால் சேர்கிட்ட  போன்ல கேட்டுத்தான் நடத்துறேன் தெரியுமா?'

'அப்ப இதையும் அவருக்கிட்டயே கேட்டிருக்கலாமே...' என்று வாய்வரை வந்த கேள்வியை வெளியே கூறாமல், 'சரி, இப்ப என்ன செய்யலாம்..?' என்று கேட்டாள் ஸரீனா.

'அது வந்து நேரடியாகப் போய்க் கேட்டால் செல்போனை ஒளிச்சிருங்கள்; தெரியுந்தானே? வேற ஏதாவது காரணத்தைச் சொல்லித் தந்திரமாகத்தான் சாமானை வெளியே எடுக்க வேணும். கொஞ்சம் வாறீங்களா போய்ப் புடிப்போம் ஆக்களை?'

'ஓ! செய்யலாமே. ஆனா உங்களுக்கு ஷுவராத் தெரியுமா டீச்சர்... அங்க போன் இருக்குதென்டு..? யார் வந்து உங்களுக்குச் சொன்னது?'

'ம்ஹும்!' மரியம் டீச்சரிடமிருந்து  பெருமூச்சொன்று வெளிப்பட்டது. தன்முன்னே அமர்ந்திருந்த ஸரீனாவைத் தீர்க்கமாகப் பார்த்தார் அவர்.

'இங்க பாருங்க ஸரீனா! நான் ஒரு நாளைக்கென்றாலும் தனபால் சேருகிட்ட இருந்து வேலையும் பிள்ளைகள கண்டுபிடிக்கிற சைக்கோலொஜியும் பழகினவ சரியா? நீங்க அந்த வகுப்புக்குக் க்ளாஸ் டீச்சர். இருந்தும் ஒங்களால அந்தப் பிள்ளைகள்ற நடவடிக்கைகள கண்டுபிடிக்க முடியல்ல. ஆனா நான் இஞ்ச ஒபிசுக்குள்ள இருந்து எழும்பாமலே புடிச்சிட்டன் பார்த்தீங்களா?' அவவின் முகத்தில் பெருமிதம் தாளவில்லை.


டீச்சர் ஸரீனாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. 

பழைய அதிபர் தனபாலின் கதையை இந்தப் பாடசாலைக்கு மாற்றலாகி வருமுன்பே நன்கு அறிந்திருந்தாள் ஸரீனா. மரியம் டீச்சர் சொல்வதுபோல் அதிபர் தனபால் திறமையும் கண்டிப்புமுள்ள நிர்வாகிதான். ஆரம்பகாலத்திலிருந்தே மிகவும் பின்தங்கிய நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த இந்தப் பாடசாலையை இன்றுள்ள சிறந்த நிலைக்கு உயர்த்தியவர் அவர்தான்.

அதேவேளை அதிபர் தனபால்  எவ்வளவு சிறந்த நிர்வாகியோ அவ்வளவு முசுட்டுப் பேர்வழியும் கூட. பாடசாலை நிருவாக விடயங்களில் சிறு சமரசம்தானும் செய்யாமல் ஒர் இராட்சசன் போன்று நடந்து கொள்பவர். தனக்குக் கீழே பணிபுரிந்த ஆசிரியர்களை அரசாங்க ஊழியர்களாக அல்லாமல் தனது அடிமைச் சேவகர்களாகவே நடாத்தி வந்தவர்தான் அவர். அதிலும் தன்னைத் சுற்றி ஒரு துதிபாடும் சிறுவட்டத்தை அமைத்துக் கொண்டு பாடசாலையை நடாத்தியவர். தன்னைச் சந்திக்கவரும் பெற்றோர்களைக்கூட அதிகார தொனியில்தான் அணுகுபவர்.


ஆசிரியர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் உணர்வுகள், வாழ்க்கைத் தேவைகள், அபிலாசைகள் இருக்கும் என்பதெல்லாம் அவருடைய அகராதியில் கிடையாது. அவருக்கு வேண்டியதெல்லாம் தான் நினைப்பதை தனக்குக் கீழே இருப்பவர்கள் இயந்திர மனிதர்கள் போன்று நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே.


பொதுவாக ஒரு பாடசாலையைத் தரிசிக்க வருகின்ற  கல்வி அதிகாரிகள் குழவை நினைத்து அதிபரும் ஆசிரியர்களும்தான்,  'என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ' என்று பயப்படுவது வழமை. ஆனால் தனபால் அதிபரின் பாடசாலையில் மட்டும் வருகின்ற அதிகாரிகளுக்குத்தான் அந்தப்பயம் இருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தளவுக்கு ஆசிரியர்களையெல்லாம் வருத்திச் சாறுபிழிந்து எல்லாவற்றையும் மிகவும் சரியாக வைத்திருப்பார்.


ஆனால் இவ்வளவும் சரியாகச் செய்து வந்தவரான அதிபர் தனபாலுக்கு அவரது இறுதிக் காலத்தில் கிடைத்த பரிசு எது தெரியுமா? இந்தப் பகுதியிலிருக்கும் பெற்றோர்களும்  பொதுமக்களும் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டமொன்றின் இறுதியில் அடித்துத் துரத்தப்படாத குறையாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா சொல்லுங்கள்?

'என்ன கவனிக்கிறிங்களா ஸரீனா?'

' ம்ம்! சரி, சந்தோசம் மரியம் டீச்சர். ஆனா நான் ஸயன்ஸ் லேபுக்குள்ள பிள்ளைகளை ஆபத்தான கெமிக்கல்களோட தனிய விட்டுட்டு இங்க வந்திருக்கிறதை நீங்க இங்கிருந்தே அறிஞ்சிருக்க மாட்டீங்க என்டு நெனைக்கிறேன். கொஞ்சமிருங்க, நான் போய் பரிசோதனையை முடிச்சு வச்சுட்டே வாறேன்.' என்று எழுந்து செல்லும் ஸரீனாவை முறைத்துப்  பார்த்துக் கொண்டிருந்தார் மரியம் டீச்சர்.

 ***

டைவேளை முடிவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தது.


சிறிய வகுப்பு மாணவர்கள் பாடசாலை வளாக முற்றத்திலே ஓடித்துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும் இரைச்சல் காதைப்பிளந்தது. ஆசிரியர்கள் சிலர் ஓய்வெடுக்கும் அறையிலே ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.


'சே! இதுகள் என்ன சத்தத்தையப்பா போடுதுகள்? காது வச்சு இருக்கேலாமாக் கிடக்கு?' என்று வடையைச் சாப்பிட்டுக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள் பாலர் வகுப்புக்குப் படிப்பிக்கும் மத்பா டீச்சர்.

'இப்ப இடைவேளைதானே? இந்த நேரத்துல இப்பிடி அதுகள் சத்தம் போட்டு கத்தி விளையாடினாத்தான் டீச்சர் வகுப்புல பாடம் நடக்கும்போது கொஞ்சம் அமைதியா இருக்குங்கள்.' என்றார் நெவில்டன் மாஸ்டர் புன்சிரிப்போடு.

'நீங்க இப்பிடிச் சொல்றீங்க நெவி? இதுகள் எப்ப பார்த்தாலும் கதைச்சுக் கொண்டுதானே இருக்குதுகள்.. அண்டைக்குப் பார்த்தீங்கதானே நம்ம மீலாத் விழா பங்சன்ல! அதுவரைக்கும் பேசாம இருந்திட்டு சரியா சீஃப் கெஸ்ட்டும் வந்து மேடைக்கு ஏற எப்படிக் கதைச்சுச் சத்தம் போட்டு நம்ம மானத்தை வாங்கிச்சுகளென்டு...'

'அது சரி டீச்சர், ஆனா அதுக்கு நாங்களும் ஒரு காரணம் தெரியுமா?' என்று இடைமறித்தார் நெவில்டன். அவர் ஒரு வர்த்தகப் பட்டதாரி ஆசிரியர். ஆனால் தனது சேவைக்காலம் முழுவதுமே கிராமப்புறங்களிலேயே கற்பித்து வருபவர்.

'பங்ஷன் ஆரம்பிக்க வேண்டியது காலைல 9 மணிக்கு. நாங்க எட்டு மணிக்கே கொண்டுபோய் ஸ்கூல் பிள்ளைகளை ஹோலில இருத்தாட்டி வைச்சிட்டம். அதுவும் வாயே திறக்கக்கூடாதெண்டு அமத்தி வேற வைச்சிருந்தோம். சீப் கெஸ்ட் வந்தது 9.40க்கு. கிட்டத்தட்ட ஒண்டரை மணித்தியாலம் ஒரே இடத்தில குந்த வச்சு பக்கத்துல இருக்கிற அவன்ட வயதொத்தவனோட பேசாத என்று அதட்டி வைச்சா எப்படி இருப்பான்?'

'அப்ப? நீங்க சொல்றதைப் பார்த்தா..ஹோல்ல கிடந்து அதுகளைச் சும்மா கத்திட்டிருக்;க விட்டிருக்கணும்றீங்களா? நல்ல கதை இது!' என்றாள் தூங்கும் வேளை தவிர மற்ற நேரமெல்லாம் பிரம்புடன் அலையும் சுகைரா டீச்சர்.

'ஓம் டீச்சர்! சீப் கெஸ்ட் வரும் வரைக்கும் பிள்ளைகளை பக்கத்தில நல்லாப் பேசிட்டிருக்க விட்டிருந்தா, ஒண்டரை அவர்ல கிட்டத்தட்ட பேசவேண்டியதையெல்லாம் பேசித் தீர்த்து ஆவலடங்கியிருந்திருப்பான். பிறகு பங்ஷன் ஸ்டார்ட் ஆகினவுடனே 'பேசாதடா!' என்று அதட்டியிருந்தால் தன்னால அடங்கி அமைதியாகியிருப்பான்!'

சுகைராவின் முகத்தில் ஈயாடவில்லை.

'அண்டைக்கு நாங்கள் என்ன செய்தோம்? இதை அப்பிடியே தலைகீழாகச் செய்தோம். அதுதான் அவனுகள் பிரம்போட அதுக்குள்ள நாங்க சுத்தித் திரியும் மட்டும் அடங்கியிருந்திட்டு டீச்சர்ஸ் மேடையேறினதும் அப்பிடிக் குமுறிட்டான்கள்'

'அது மட்டுமில்ல,  வளர்ந்த டீனேஜ் பிள்ளைகளையும் அதுகள்ற வயசு, இன்றைய வெளியுலக நிலைமைகள், குடும்பச் சூழ்நிலைகளையெல்லாம் அறிஞ்சுதான் நாங்க கட்டுப்படுத்த வேணும்.  சும்மா பிரம்பைத் தூக்கிட்டு எப்ப பார்த்தாலும் அதுகளைக் குறைசொல்லிட்டுத் திரிஞ்சாப் போதாது...'

 'அப்ப. அதுகளோட சேர்ந்து, 'வொய் தீஸ்.. கொலைவெறி கொலைவெறிடீ!' பாடிட்டுத் திரியச் சொல்றீங்க போல.' என்று சுகைரா நெவில் மாஸ்டரை ஒரு முறை முறைக்க கலகலவெனச் சிரித்தாள், கிறிஸ்தவம் கற்பிக்கும் கலிஸ்டா டீச்சர்.

'வை நொட்? நீங்க பாடாட்டியும் பரவாயில்ல... இப்படி ஒரு டேஸ்ட் அவனுகளுக்குள்ள இருக்கு என்று தெரிஞ்சுக் கொள்ளவாவது அந்த பாட்டைப் பத்தி அறியத்தான் வேணும்... அப்பதான் அவனுகளைப் பற்றி அறிஞ்சு ஈஸியா ஹேண்டில் பண்ணலாம்! '

'நெவில் சேர், நீங்க சொல்றது சரிதான். இப்ப இருக்கிற பிள்ளைகள கொஞ்சம் அதுகள்ற போக்கில விட்டுத்தான் பிடிக்க வேணும். இன்னும் நம்ம டீச்சர்ஸ்ல சிலபேர் புதிய டீச்சிங் மெதட்ஸ்க்கு வராம அந்தக் காலத்துலய இருக்கிறாங்க தெரியுமா?' என்றான் புதிதாக கல்வியியல் கல்லூரியிலிருந்து ஆசிரியர் நியமனம் பெற்ற ஸமீர்.

'உண்மையாவா ஸமீர்?'

'பிறகு என்ன? அண்டைக்கு டவுண்ல என்ட ரெண்டாம் வகுப்புப் படிக்கிற மகள்ற டீச்சரைச் சந்திச்சேன். கொஞ்சம் கேளுங்க நெவில் ஸேர், அவ என்னைப் பார்த்துட்டு கேட்டாவே ஒரு கேள்வி! ஓ...ஹஹ்ஹா...ஹா!'

' அப்பிடி என்ன கேட்டா?  உங்களுக்கு எப்பிடி இவ்வளவு அழகான பிள்ளையென்டா?'  மடக்கினாள் கலிஸ்டா.

'ஹலோ..! இந்த நக்கல்தானே கூடாது! அவ கேட்டா 'ஏன் ஒங்கட மகளை இடது கையால எழுதப் பழக்கியிருக்கிறீங்க' என்று?'

'நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க ஸமீர்?'

'என்னத்தைச் சொல்றது? எடுயுக்கேஷன் சைக்கோலொஜி சரியாகத் தெரியாத டீச்சர்களும் இருக்கிறாங்களே என்று கவலைதான் வந்தது'

'ஏன், அவவுக்கு மனித மூளையில உள்ள வலது இடது அரைக்கோளங்களைப் பத்தித் தெரியாதாமா? நீங்க உங்கட கொலிஜ் சைக்கோலொஜி நோட்ஸ்ல இருந்து லெக்சர் ஒண்டை அங்க எடுத்து விட்டிருக்கலாமே ஸமீர்?' என்று சிரித்தாள் ஸரீனா.

'அதாவது பரவாயில்ல.. டீச்சர்!  இன்னொரு கேள்வியும் கேட்டா அவ!  'ஏன் வலது கையாலதானே பிள்ளை சாப்பிடுது. அதுபோல எல்லாத்தையுமே வலது கைக்கே பழக்கியிருக்கலாமே' என்று! அந்த டீச்சர் பத்து வருசமா ப்ரைமரிக்குப் படிப்பிக்கிறாவாம்'

'அட! எந்த ஸ்கூல்ல..ஸமீர் இதெல்லாம்?' ஆச்சரியமாய் கேட்டாள் கலிஸ்டா.


பதில் சொன்னான் ஸமீர்.

'ஓ! அந்த ப்ளுசாறிகள்? அவங்கதானே மத்தவங்களுக்கெல்லாம்  நொட்டை பிடிக்கிற ஆக்கள். அம்மா, அப்பா, அம்மம்மாக்கெல்லாம் இன்டர்வியூ வச்சு பிள்ளைகளைச் சேர்க்கிறவங்க. சுத்தியிருக்கிற ஏரியாவுல உள்ள கெட்டிக்காரப் பிள்ளைகளாப் போய் டவுண் ஸ்கூல்கள்ல போய் குவியுது. அதுகளுக்கே படிப்பிக்க இவ்வளவு பாடுபட்டா நாங்க எவ்வளவோ மேல் தெரியுமா?'

'உங்களுக்குத் தெரியுமா? அங்க இரண்டாம் வகுப்புப் பிள்ளைக்கு இங்லீஷ் க்ளாஸ் ஒண்டு போட்டு அதில டிக்டேஷனுக்கு குடுத்திருக்கிற சொல் எது தெரியுமா? University! இது எப்படியிருக்கு?'

'அது அந்தச் சின்னப் பிள்ளைக்கு விளங்குமா...? பொருந்துதா இல்லையா என்டதெல்லாம் பற்றி அவங்களுக்கு அக்கறையில்ல. அதுகள்ற உள்ளார்ந்த திறமைகளை படிப்படியா தூக்கிவிடாம பிஞ்சுகளை வெறும் மனனம் செய்கின்ற மெஷினுகளா மாத்திறதுதான் டீச்சர்கள்ற வேலையாகிட்டுது.' என்றார் நெவில் மாஸ்டர்.

'என்ன சேர் நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ தனியே டீச்சர்மார்தான் பிழை என்ற மாதிரி இருக்கே.. வெளிநாடுகள்ல இருக்கிற மாதிரி படிப்புகளைக் கொண்டு வாறாங்க..ஆனா அதுக்கேத்த மாதிரியான வசதிகள் எல்லா ஸ்கூல்லயும் இருக்கா என்ன?'

'நீங்க சொல்றது சரி, கலிஸ்டா. இங்க உள்ள நம்ம கீழைத்தேய கலாசாரத்துக்கு ஏத்த மாதிரியான தொழில் கல்வியை இந்த அரசாங்கம் தெரிவு செய்யாம எங்கேயோ இருக்கிற இதைப்பத்தியெல்லாம் அறியாத சில எஜமானர்கள் சிபாரிசு செய்யுற ஸிஸ்டத்தைத்தான் இறக்குமதி செய்யுறாங்க.. அதற்கும் கூட அரைகுறை வசதிகளை ஏற்பாடுகளை மட்டும் வச்சுகிட்டு இங்க அறிமுகப்படுத்தி பழசும் இல்லாமல்போய் புதுசும் சரிவராமலாகி கடைசியில தோல்வியிலதான் முடியப்போகுது'

'சே! நம்மட பிள்ளைகள்ற எதிர்காலத்தை நெனைச்சா பயமாயிருக்குடாப்பா?'

'சரி, அதெல்லாம் பிறகு பயப்படலாம். முதல்ல இன்டவெல் முடிய பெல்லை அடிக்கச் சொல்லுங்கடாப்பா' என்றபடி ஓய்வறையினுள்ளே நுழைந்த கடமை அதிபர் மரியம் டீச்சர், 'நெவில் சேர், சுகைரா டீச்சர் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நின்று ஸரீனாவோட டீச்சரின் வகுப்பு செல்போன் விசயத்தைப் பாருங்க! ஒருவரையும் இடையில ஸ்கூல்லருந்து போக விடாதீங்க!' என்று கேட்டார்.

இடைவேளை நிறைவு மணி ஒலித்து ஓய்ந்தது. ஆசிரியர்கள் அனைவரும் கலைந்து தத்தம் வகுப்புகளுக்குச் செல்லலானார்கள்.


***

'பத்தாம் வகுப்புப் பிள்ளைகள் எல்லாரும் புத்தகங்களை எல்லாம் பேக்ல எடுத்து வைங்க பார்ப்போம்!'

'ஏன் டீச்சர், இண்டைக்கு ஸ்கூல் நேரத்தோட விடப்போகுதா?'


'இல்ல...ஆங்! உங்களளை மட்டும்தான் அனுப்பப் போறோம்!'

'ஹைய்யா! டேய் சதீக் ஸ்கூல் விடப் போவுதுடா! போல் வச்சிருக்கியா?'

'யேய்! சத்தம்! எல்லாரும் அவரவர்ர பேக்குகளைத் தோளில போடு.. வரிசையா ஸ்டாப்ஃ றூமுக்கு நட!'

அவர்கள் தங்களுக்குள்ளே கசமுசவென்று குழப்பமாய் பேசிக்கொண்டு வந்தார்கள்.

' நெவில் சேர், ஸ்டாப் றூமுக்குள்ள பிள்ளைகள் வந்ததும் எல்லாரையும் உள்ளெடுத்து பேக்குகளையெல்லாம் கழற்றி மேசைக்கு எடுங்க. ஆம்பளப் பிள்ளைகளை வேறயா பொம்பிளைப் புள்ளைகளை வேறயா தனித்தனி வரிசையா நிப்பாட்டி வைங்க.. சும்மா எதையோ காணல்ல என்று சொல்லி பேக்குகளைச் செக் பண்ணலாம்.'

மற்றவர்கள் தயாராக ஸரீனா மட்டும் சிறிது தயங்கினாள்.

'மரியம் டீச்சர், நான் இப்பவும் உங்களுக்கிட்ட கேட்கிறேன். என்ட வகுப்புல அப்படியான பிள்ளைகள் யாரும் இல்ல. அதுகள் வளர்ந்த பிள்ளைகள். இப்பிடி செக் பண்றது வந்து அவ்வளவு... அவங்களுக்கிட்ட இருக்கிறது ஷுவர்தானா டீச்சர்?

'ஸரீனா! நீங்க இங்க வந்து கொஞ்ச காலந்தான் சரியா? நான் இஞ்ச பத்து வருசமா இருக்கிறேன் தெரியுமா? என்ட ஸேர்வீஸ் தெரியுமா ஒங்களுக்கு? நான் நிச்சயமாச் சொல்றேன். அது அதுகளுக்கிட்டதான் இருக்கு. சும்மா ஆத்திரத்தைக் கிளப்பாம நான் சொன்னதைச் செய்ங்க பார்ப்போம்!'

'சரி டீச்சர், நீங்க சொன்னாச் சரிதான்' 

'ஸரீனா டீச்சர், என்ட கெஸ்ஸிங்படி அது அங்க உள்ள பொம்பிளைப் பிள்ளைகளுக்கிட்ட யாருக்கிட்டயோதான் இருக்கு. நானும் வேணும்டா வந்து நிக்கிறேன். நீங்க செக் பண்ண ரெடியாகிற நேரம்  நான் பொம்பிளைப் பிள்ளைகளுக்குப் பின்னால நின்று நோட் பண்றேன்! எதுக்கும் நெவில் சேரை விட்டு பொடியன்களை நோட் பண்ணச் சொல்லுங்க. அதுகள்ற ரியாக்ஷன்லயே தெரிஞ்சுடும். இதை எப்படியும் புடிச்சாக வேணும். இப்பிடித்தான் தனபால் சேர் ஒருமுறை...' 

'அதெல்லாம் இருக்கட்டும்! இப்ப வாங்க நீங்க சொன்னதைச் செய்யலாம்' என்றபடி வேகமாய் நகர்ந்தாள் ஸரீனா. தன்னுடைய வகுப்புப் பிள்ளைகளை  திருடர்களைப் போல நடாத்துகின்றோமே எனும் கோபம் அவளுக்கு.


ஆசிரியர் ஓய்வறையினுள்ளே கம்பி வலை அடித்திருந்த யன்னலோரமாக மாணவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு குழப்பமாக நின்றிருந்தார்கள்.
ஸரீனாவுக்குக்குச் சொல்வதற்கே சங்கடமாகத்தானிருந்தது.

'பிள்ளைகள் உங்கட பேக்கையெல்லாம் கழற்றி மேசையில வைங்க. இங்க ஒரு டீச்சர்ட சின்னப் பேர்ஸ் ஒண்டைக் காணேல்லயாம். மத்த வகுப்புகள்ல எல்லாம் பார்த்தாச்சு.. எனக்குத் தெரியும் நீங்க எடுத்திருக்க மாட்டீங்க...சும்மா எதுக்கும் உங்களோடதுகளையும் ஒருக்காப் பார்த்திடுவோமே என்ன?' என்று ஒப்புக்குக் கேட்டாள் ஸரீனா டீச்சர்.

' ஸரினா இங்க கொஞ்சம் வாங்க!'  மரியம் டீச்சர் ஸரீனாவைத் தனியாக அழைத்துச்சென்று, 'பொம்பிளைப் பிள்ளைகள்ற பேக்லதான் இருக்கு விசயம்! நீங்க வீணா பொடியன்களில மெனக்கெட வேணாம்!'

'எப்படி டீச்சர் அவ்வளவு நிச்சயமாச் சொல்றீங்க?' என்று வாய்தவறிக் கேட்டுவிட்ட பின்புதான் 'ஆண்டவனே! திரும்பவும் ஸேர்வீஸ்... தனபால் ஸேர்.. அது இது என்று மனுஷி ஆரம்பிச்சிடப்போகுதே' என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் ஸரீனா.

'அதுவா? இப்ப நீங்க உள்ளே நின்று கதைச்சிட்டிருக்கும் போது அப்போது சொன்னபடி உங்க கேள்ஸுக்குப் பின்னால நிண்டு அதுகள் ரெண்டுக்கும் தெரியாம கதைச்சிட்டிருந்ததை கேட்டேன்.'

'யாரு? என்ன கதைச்சுதுகள் டீச்சர்?'

' வேற யாரு? அந்த ஹஸானாவும் ஜெனிபரும்தான்!  'அந்தா! நம்மட போன் மாட்டப் போகுதுடி பாரு' என்று  தங்களுக்குள்ளே கிசுகிசு என்று பேசிக் கொண்டிருந்ததை இந்தக் காதால கேட்டேன். அவளுகள்தான் ஸரீனா ஆக்கள். இந்த வயசுலயே போனும் ஆக்களும். ஆட்டக்காரிகள்!'

'என்ன மரியம் டீச்சர், வளர்ந்த பிள்ளைகளை டீச்சர்ஸ் நாங்களே இப்பிடிச் சொல்லலாமா?'

'சும்மா இருங்க ஸரீனா! உங்களுக்குத் தெரியாது.  அதுகள் ரெண்டு பேருக்கும் சின்ன வகுப்பில இருந்தே பாடம் எடுத்திருக்கேன். பார்த்திட்டுத்தான் வாறேன். இப்ப வளர்ந்தது பார்க்கக் கொஞ்சம் வடிவா வந்ததும் அவளுகள் ரெண்டு பேருக்கும் திமிர்!  எது படிப்பிச்சாலும் கேள்வி கேக்கிறதும் புதிசா ஏதும் சொல்றதும்... பெரிய கெட்டிக்காரிகளென்ற திமிர்.  இண்டைக்கு மாட்டட்டும்.' என்று கழுத்து நாளமெல்லாம் புடைக்கக் கறுவிக் கொண்டே மீண்டும் ஆசிரியர் ஓய்வறைக்குள் வேகமாய் போனார் மரியம் டீச்சர்.

'சரி.. சரி, பொடியன்கள் எல்லாரும் வகுப்புக்குத் திரும்பிப் போங்க!' என்று கட்டளையிட்ட மரியம் பையன்கள் பேக்குகளை எடுக்கத் ஆரம்பித்ததும்,


'இல்ல..இல்ல! பேக்குகளை வச்சிட்டுப் போங்க.. பிறகு வந்து எடுக்கலாம்' என்றார்.

ஆனால் பையன்கள் அதற்கு உடன்படவில்லை. பேக்குகளை எடுத்துச் செல்லாவிட்டால் தாங்களும் இங்கே இருக்கத்தான் வேண்டும் எனக்கூறி அடம்பிடித்தனர். இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை மரியம் டீச்சருக்கு. 

'இருங்கடா வாறேன்! உங்களுக்கும்..!' அப்படியே விட்டுவிட்டு மீண்டும் ஸரீனாவிடம் வந்து, 'ஸரீனா, இவனுகள் ஏன் பேக்கை விட்டுட்டுப் போக மாட்டேனென்றான்கள்..............? ஒருவேளை அந்த ஆட்டக்காரிகள் இவனுகளிட்டத்தான் போனைக் குடுத்து வச்சிருக்கிறாளுகளோ?'

'...............'

'சரி, பரவாயில்ல. அவனுகளும் இருக்கட்டும். நாம செக் பண்ணுவோம். எப்படியும் மாட்டத்தானே போறாங்க.' என்று மரியம் டீச்சரே களத்தில் இறங்கி பேக்குகளைத் கிளறத் தொடங்கினார். அவவுக்கு உதவியாக வேறுவழியின்றி சுகைரா டீச்சரும் ஸரீனாவும்

தேடலில் இறங்கினாள்.

மற்ற மாணவிகளின்  பேக்குகளையெல்லாம் சும்மா சாட்டுக்குப் பார்த்து விட்டு ஹஸானாவினதும் ஜெனிபரினதும் புத்தகப்பைகளை மட்டும் ஒவ்வொரு  புத்தகமாக வெளியே எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மரியம். சுற்றியிருந்த அனைவரும் மரியம் டீச்சரின் முகத்தையும் கைகளையும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஹஸானாவின் பேக்கைத் துளாவிக் கொண்டிருந்த மரியம் டீச்சரின் முகம் சட்டெனப் பிரகாசித்தது.

 ' அந்தச் சாமான் இங்க சைட் பேக்குல இருக்கு ஸரீனா டீச்சர்! எப்படி? நான் சொன்னேனில்ல! ' என்று ஹஸானாவின் பேக்கிலிருந்து கையை எடுக்காமலே கொக்கரித்தார் மரியம் டீச்சர். ஹஸானாவின் புத்தகப்பையின் சைட் பக்கற்றுகளில் ஒன்று செவ்வக வடிவில் புடைத்துத் துருத்திக் கொண்டிருந்ததை எல்லோருக்கும் தெரியுமாறு உயர்த்தி வேறு  காட்டினார்.

 ' இந்தா,  இங்கேயும் ஒண்ணு இருக்கு டீச்சர்' என்றாள் சுகைரா. அவள் காட்டிய ஜெனிபரின் ஸ்கூல் பேக்கின் சைட் பக்கற் ஒன்று செல்போன் ஒன்றின் வடிவத்திலே புடைத்துத் தள்ளிக்கொண்டு தெரிந்தது.

'அட! ரெண்டா? ஓகோ! ஆளுக்கு ஒண்ணு வேற வைச்சிருக்காங்களோ?' என்று பல்லைக் கடித்தார், தனபால் அதிபரிடம் உளவியல் பயிற்சி பெற்ற மரியம் டீச்சர்.

எல்லோரும் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருந்தார்கள். அங்கு மயான அமைதி நிலவியது.


இரண்டு பேரின் பேக்குகளின் சைட் பக்கற்றுகளும் மேசையில் வைத்து ஒன்றாகத் திறக்கப்பட்டதும்  மேசையில் ஓசையுடன் வந்து விழுந்தது, கலர் பேனைகளினால் வர்ணம் தீட்டிய செவ்வக வடிவான மரப்பலகையில் செய்த இரு விளையாட்டுக் கைத்தொலைபேசிகள்!
***

-மூதூர் மொகமட் ராபி
( நன்றி 'மல்லிகை 'ஏப்ரல் 2012)

Saturday, April 14, 2012

சிறுகதை:






நான் எனும் நீ!














'அழாதீங்கோ பிள்ளையள்!'


அழுதுபுரளும் அக்கா தங்கைகளைத் தானும் அழுது தேற்றிக் கொண்டிருக்கின்றார் முருகேசு மாமா. அம்மாவின் கூடப்பிறந்த தம்பி. அப்பா அகாலமாய்ச் செத்தபிறகு  தான் கலியாணமே செய்யாமல் அக்காவின் பிள்ளைகளாகிய எங்களை பாசத்தைக் கொட்டி பாடுபட்டு வளர்த்து ஆளாக்கியவர் அவர். அவரை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. ஆனால் வேறு என்னதான் செய்வது. சுற்றிக்கிடந்து அழுதுபுரள்வதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் சுற்றிநின்று இவர்களெல்லாம் கண்டபடி ஏசுவதைத் தாங்கத்தான் முடியுமா?

'தங்கச்சி அழாதனை...எல்லோரும் ஒருக்காத் தம்பியக் கடைசியாப் பார்த்துக் கொள்ளுங்கோ...அவனைக் கொண்டு போவோம்' என்று கூறிவிட்டு உடைந்து போய் ஹோவென அழுதவரை ஓடிவந்து பிடித்துக் கொண்டார்கள். அவரைப் பார்த்து அத்தனை பெண்களும் ஓலமிட,


'டேய் முருகேசு! இதென்னடா நீயும் பொம்பளை கணக்கா அழுது கொண்டிருக்கிறா....இஞ்ச வா சின்னராசு, இவன அங்கால ஒரு ஓரமா இருத்தி விடப்பு...வாங்க நாங்க ஆகவேண்டியதைப் பார்ப்போம்' என்று பக்கத்து வீட்டு மணியண்ணன்தான் நிலைமையைச் சீராக்கினார்.


நாலுபுறமும் பிடித்துப் பெட்டியைக் கவனமாக மூடிவர உலகமே இருளத் தொடங்கியது. முன்னும் பின்னும் உறவகள் சூழ நண்பர்களின் தோளிலேறியதும் உச்ச ஸ்தாயியில் கோரஸாக எழுந்த அழுகை ஓலம், வெளிவாசலில் படபடத்து வெடித்துக் காதுகிழித்த பட்டாசு வெடியோசைக்குள் மெல்லச் சரணடைந்தது. கடைசி ஊர்வலத்தின் காலடியோசைகள் அந்தச் செம்மண் பூமியின் மீது உரசுகையில் காற்றிலே சரசரக்கும் பனையோலைகளை நினைவூட்டின.


பள்ளிப்பருவத்திலிருந்து ஓடிப்பிடித்து விளையாடித்திரிந்த பனந்தோட்டங்கள் இன்னும் பசுமையாக இருந்தது நெஞ்சில். கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் விளையாடிய மேட்டுவட்டைத்திடலுக்கு கிழக்குப்புறமாக இருக்கும் சுடகாட்டுக்குத்தான் இந்தக் கடைசிப் பயணம். முன்னோக்கி நகரும் ஊர்வலத்திலிருந்து பின்னோக்கி ஊர்ந்தன நினைவுப் பாம்புகள்.


கார்த்திகேசு மகேசுவரன் என்பதுதான் எனது முழுப்பெயர். விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர். உறவுகளிலிருந்து நண்பர்கள் வரை 'மகேஸ்' என்றால்தான் தெரியும். வேலை கிடைத்ததிலிருந்து இரண்டு வருடங்கள் மட்டும்தான் ஊரிலிருந்தேன். சண்டையும் தொடங்கி அக்காவின் கலியாணமும் முடிந்த கையோடு அம்மா நோயில் விழுந்து விட்டா. முருகேசு மாமாவிடம் வீடு தோட்டம் எல்லாவற்றையும் பொறுப்புக் கொடுத்துவிட்டு ஐசிஆர்சி கப்பலில் ஏறி இந்தக் கோணேசப் பெருமான் குடியிருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்து ஆறுவரடங்கள் ஓடிவிட்டன. அம்மாவை இங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் செய்ய வசதியாக இங்கேயே இடமாற்றம் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அம்மாவை இனிமேல் காப்பாற்றவே முடியாது என்று வைத்தியர்கள் கைவிட்டதும் அவவுடைய திருப்திக்காகத் திருமணமும் செய்து கொண்டேன்.


அவளுக்கும், அதுதான் என் மனைவி செல்லம்மா, எனது ஊர்தான் பிறப்பிடம். தூரத்து உறவும் கூட. இந்த ஊரிலேதான் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எக்கவுண்ட்ஸ் கிளார்க்காக இருக்கிறாள். கலியாணம் நடந்து ஆறுமாதத்திற்குள் அம்மாவும் இறந்துவிட அவவின் விருப்பப்படியே பெருங்கஷ்டப்பட்டு கப்பலிலில் ஊருக்குக் கொண்டு சென்று ஈமச்சடங்குகளை முடித்துத் திரும்பியதெல்லாம் பழைய கதை. அன்றைக்கும் முருகேசு மாமா அழுத அழுகைதான் எல்லோருடைய நினைவிலும் இருக்கிறது. அதற்குப் பிறகு சண்டைகள் ஓய்ந்து நிலைமை சீராகி இப்போது ஒரு ஆறுமாதமாகத்தான் நிலைமை சீராகி ஊருக்கெல்லாம் போய்வர முடிகின்றது. அதன்பிறகு எங்கள் வாழ்க்கை கொஞ்ச நாள் சீராகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்குமே ஒரு திருப்பம் வருமல்லவா அப்படித்தான் வந்தது. இல்லை..இல்லை நானாகத் தேடிக்கொண்டது.


வேறு மாகாணங்களிலிருந்து இந்த ஊருக்கு இடம்மாற்றம் பெற்று வந்தவர்களுக்கு நகரச்சூழலுக்குள் வசதியாக பாடசாலைகள் கிடைப்பது முயல்கொம்புதான். அதற்கெல்லாம் தேவையான மேலிடத்துச் சிபாரிசுகள், செல்வாக்குகள், இதெல்லாம் கிடையாது எனக்கு. ஆனால் இந்த வில்லங்கங்கள் எதுவுமேயில்லாமல் அதிர்ஷ்டவசமாக நகரத்துக்குள்ளேயே தொந்தரவில்லாத பாடசாலையொன்று கிடைத்தது.



என்னுடைய குணமறிந்துதான் கடவுளாய்ப் பார்த்து அதைக் கொடுத்திருப்பார் போல. ஏனென்றால் நான் எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாதவன். இலேசில் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன். அதற்காக எல்லாவற்றையும் அப்படியே  ஏற்றுக் கொண்டு வாழ்பவனுமல்ல. வாழ்க்கை பற்றி எனக்கென்றும் சில தர்ம நியாயங்கள், அபிப்பிராயங்கள், சமூகக் கோபங்களெல்லாம் சத்தியமாய் உள்ளன. எல்லாவற்றுக்குமே எதிர்விளைவுகள் இருக்குமென உறுதியாக நம்புபவன் நான்.



ஒரு பாம்பு வீட்டுக்குள் வந்தால் கூட அது விஷமுள்ளதா இல்லையா என்று பார்த்து விட்டுத்தான் எனது தாக்குதல் இருக்கும். அது விஷமுள்ளதாக இருந்தால் கூட 'அது ஒன்றும் நம்மைக் கொத்துவதற்குத் திட்டமிட்டு வரவில்லையே' என்ற வியாக்கியானமெல்லாம் பேசி அதை எப்படியாவது வந்த வழியே அனுப்பிவிடத்தான் முயற்சிப்பேன்.



'இஞ்சப்பா, உந்த விசரக் கதையெல்லாம் விட்டுப் போட்டு அதை அடிச்சுக் கொல்லுங்கோவனப்பா. விட்டா இஞ்ச எங்கயாவது அயலுக்குள்ளதானே சுத்தித் திரியும். கெதியா அடியுங்கோவனப்பா!' எனக் கத்தும் செல்லம்மாவிடம், 'சரி, சுத்தித் தெரிந்தால் வேறு யார்ட்டயாவது வேண்டுவார்தானே? இல்லையெண்டாலும் கீரிப்பூனையள் ஆலாக்கள் தரவழியிட்ட மாட்டுப்படுவார்தானே' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என்னுடைய கையிலிருக்கும் தடியைப் பறித்து படமெடத்து நிற்கும் பாம்பின் தலையில் நச்சென்று ஓரே போடாய்ப் போட்டுக் கொல்லுவாள் செல்லம்மா.  என்மீதுள்ள கோபத்தையும் சேர்த்து சில அநாவசிய அடிகளையும் செத்தபாம்பு வாங்கிக் கட்டும்.  பிறகென்ன, அதன் மரணச்சடங்குகளை மட்டும் நான் பார்த்துக் கொள்வேன். இதுதான் என்னுடைய குணம்.


தானாய்க் கனிந்து கையில் கிடைத்த பக்கத்துப்  பாடசாலையில் நானும் காலடியிலிருக்கும் அலுவலகத்தில் செல்லம்மாவுமாக ஐந்தாறு வருடங்களை ஒருவாறு பிரச்சினையில்லாமல் ஓட்டிவிட்டோம். இன்னும் இரண்டொரு வருடத்தில்  நிலைமை மேலும்  சிறிது சீராகியதும் மாற்றம் எடுத்துக் கொண்டு ஊருக்கே போய்விடலாம் என்ற சிறு நப்பாசை கூட இருந்தது எங்களுக்கு. அந்த நேரத்தில்தான் என் தூரத்து உறவினன் ஒருவன் வந்து நிம்மதியைக் குலைத்தான்.


'அந்தாள்ர விசர்க்கதையள விடுங்கப்பா! கனகாலம் டவுனுக்குள்ள படிப்பிக்கிறவைய தூர இடங்களுக்கு மாத்தி விடப்போறமெண்டு ஒவ்வொரு வருசமுந்தான் சொல்லுவாங்க. இந்த நான் இங்க வந்து பத்துப் பதினைஞ்சு வருசமாகுது...இந்தக் கதை வருசம் தவறாம வரும். ஆனால் லேசில அப்பிடி நடவாது.'

'என்னப்பா இவ்வளவு திட்டமாச் சொல்றீர்?'

'பின்ன...? டவுனுக்குள்ள இருக்கிற ஸ்கூல்கள்ள இருக்கிற டீச்சர்மார்கள்ள அரைவாசிக்கு மேல உங்கட எடுயுக்கேஷன்  டிப்பார்ட்மெண்டில இருக்கிற மேலதிகாரிகள்ற மனுஷிமார்தானப்பா. அவங்கள எப்படியாவது தூர இடங்களுக்குப் படிப்பிக்கப் போடாமல் பார்த்துக் கொள்றதுக்காகத்தானே அந்தக் கதிரைகளிலே குந்திக் கொண்டிருக்கினம்..! அதெல்லாம் நடக்கிற காரியமில்ல.. சும்மா அதை நினைச்சு நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளாதீங்கப்பா!'


'இல்ல செல்லம், அவங்களாத் தூக்கித் தொலைக்குப் போட்டுக் கரைச்சல் தரமுன்னம் நானே கொஞ்சம் தூரமுள்ளதாக ஒரு வசதியான ஸ்கூலுக்கு மாற்றம் கெட்டு எடுத்திட்டால் நல்லதப்பா...! பிறகு அவையள் கண்டுபிடிச்சி அள்ளித் தூரத் தொலைய வீசேக்க தலையைச் சொறிஞ்சுகொண்டு நிக்கேலாது கண்டியே?'


'சரி, சரி. நீங்கள் சரியான  முன்ஜாக்கிரதை முத்தண்ணாதானே..? என்னென்டாலும் செய்யுங்கோ...ஆனால் எனக்கெண்டா நீங்க சும்மா கிடக்கிற சங்கை...' என்று தொடங்கி ஏதோ முனகிவிட்டுத் திரும்பித் தூங்கி விட்டாள்.


இது நடந்து இரண்டாவது வாரம் கழிந்ததும் நான் விண்ணப்பித்தபடியே இடமாற்றம் கிடைத்தது. புதிய பாடசாலை நகருக்கு வெளியே ஐந்து கிலோமீற்றர் தொலைவிலே பிரதான நெடுஞ்சாலையில் இருந்தது. நானும் புதிய பாடசாலைக்கு வந்து சேர ஆசிரியர் இடமாற்றத் திட்டமும் அமுலுக்கு வந்திருந்தது. புதிதாகக் கடமையேற்றிருந்த கண்டிப்பான  மேலதிகாரி ஒருவர் அதிரடி நடவடிக்கை எடுத்து, வேறு பாடசாலையென்றால் என்னவென்றே அறியாமல் கிடந்த பழம் பெருச்சாளிகளையெல்லாம் ஓடஓட விரட்டிக் கொண்டிருந்தார்.


'நல்லவேளை தப்பித்தோம்!' என்ற புளகாங்கிதமும் செல்லம்மாவின் கணிப்பு முதன்முதலாகப் பொய்யாய்ப் போன திருப்தியும் ஒன்றுசேர 'இப்ப என்னப்பா சொல்லுறீர்..எப்படி ஐயாவின் கணிப்பு?' என்று கொக்கரித்தேன். 'சரி, சரி ஓவராய்த் துள்ளாதீங்க! அதெல்லாம் எட்டு வருசத்துக்கு மேல் ஒரே பாடசாலையில இருந்தவைக்குத்தான் தூர இடங்களுக்கு டரான்ஸ்பர் தெரியுமா? நீங்க அஞ்சு வருசம்தானே இருந்த  நீங்க! அது தெரியாமல் அவசரப்பட்டுட்டீங்களப்பா! அதோட...' என்று இழுத்தாள்.


'அதோட என்னப்பா?'


'இல்ல இன்னம் கொஞ்சம் காலம் பொறுமையாக இருந்திருந்தா இப்ப நம்ம ஊர் நிலைமைகள் க்ளியராகிக் கொண்டு இருக்கிறதால இருந்த ஸ்கூல்ல இருந்தே நேரடியாக மாற்றம் எடுத்திருக்காலாம். சரி, விதி யாரை விட்டது. இப்ப போன இடத்தில என்ன தொல்லைகள் காத்திருக்குதோ?' என்றாள், சலிப்புடன்.


அவள் கூறிய தொல்லைகள் வந்த சேர அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. ஒருமாத காலத்துக்குள் எங்கள் பழைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றுவிட அவரது இடத்திற்கு புதியவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டார். 'எல்லாமே ஒரளவு பழக்கமாகிக் கொண்டிருக்கையில் இப்படியாகிவிட்டதே' என்று சங்கடம் உண்டானது எனக்கு. இனி புதியவரோடு முதலில் இருந்து பழகியாக வேண்டுமே?


புதிய அதிபர் பதவியேற்ற அன்றே ஆள் கொஞ்சம் வில்லங்கமானவர்தான் என்பது விளங்கி விட்டது எனக்கு. ஆசிரியர் கூட்டத்தில் அவர் ஆற்றிய முதலாவது உரையிலிருந்த அகந்தையும் பிறரைத் துச்சமாக நினைக்கும் குணமும் என்னை வேதனைப் படுத்தியதுடன் 'இருந்து இருந்து கடைசியில் தப்பான இடத்திற்குத்தான் வந்து விட்டோமோ?' என்ற சஞ்சலத்தையும் உண்டு பண்ணியது.


அன்று பாடசாலை முடிவடைந்ததும் சோர்வாக வீடு வந்து சேர்ந்தேன். 


மாலையில் செல்லம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாக, "இஞ்சருங்கோப்பா, கேட்டீங்களே...உங்களுக்குத்தான்  ஒரு நியூஸ்!' என்று உற்சாகமாய் ஆரம்பித்தவள் எனது முகத்தைப் பார்த்துவிட்டு, 'என்னப்பா ஒரு மாதிரி இருக்கிறீங்கள்..சுகமில்லையா? சாப்பிட்டீங்களா?' என்றாள், பதறிப்போய்.
'சேச்சே! அதெல்லலாம் ஒண்டுமில்ல. இந்த புதுசா வந்த ஆள்தான். கதை பேச்சு எல்லாம் அவ்வளவு சரியில்லை. ஆள் கொஞ்சம் சண்டித்தனம் போலக் கிடக்கப்பா!' என்றேன் பரிதாபமாக.


'ஆர்...? உங்கட புது அதிபரே? அந்த நியூஸ்தானப்பா இன்றைக்கு எங்கட ஒபிஸ் முழுக்கக் கதை. ஆள் கரைச்சல் பிடிச்சவர்தானாம். அவர் உங்கட ஸ்கூலுக்கு வர முதல் இருந்த இடத்தில பண்ணின அழிச்சாட்டியம் தாங்கேலாமத்தான் அந்த ஊர்ச்சனமெல்லாம் ஒண்டு கூடி அடிக்காத குறையாகத் துரத்தி விட்டவையாம். இப்ப யார் யார்டவோ காலைக் கையப் பிடிச்சுத்தான் உங்கட ஸ்கூலுக்கு வந்திருக்கிறாராம்..என்று கதைச்சவங்கள்!'


'இதென்ன செல்லம், நீ வேற பயப்படுத்திறீர். ஏற்கனவே அது விசயமாத்தான் நானே யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.'


'அட! அவர் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் உங்களுக்கென்னவாம்...? நீங்களென்ன உந்த தமிழ்ப்படத்து ஹீரோ கணக்காத்  தட்டிக்கேக்கவா போறீங்க..? வீட்டுக்குள்ள வந்து, 'என்னை அடி' எண்டு நிக்கிற பாம்பையே அடிக்காமல் பார்த்துக் கொண்டு சும்மா நிக்கிற ஆள் நீங்க. நீங்களும் உங்க வேலையும் எண்டு பேசாம இருக்கிறதுக்குச் சொல்லியா தரவேணும் உங்களுக்கு?' அவளது நையாண்டி புரிந்தாலும் அந்தப்பேச்சு சிறிது ஆறுதலைத் தந்தது.

***

புதிய அதிபரின் நிருவாகத்தின் கீழ் எப்படியோ ஓரிரு மாதங்கள் கடந்திருந்தன. அவரது தான்தோன்றித்தனமான போக்குகளாலும் முடிவுகளாலும் ஆசிரியர்கள் பலருடன் சிறுசிறு உரசல்கள் எழுந்தன. பலர் விட்டுக் கொடுத்தும் சிலர் தட்டிக்கேட்கவும் செய்யலானார்கள். குறிப்பாக பாடசாலை நிதிவிடயங்களில் பல சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுந்தன. அதிபர் தனது நலன்களுக்கு மட்டுமே ஒத்தாசையாக இருக்கும் ஆசிரியர்கள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு நிதி மோசடிகளிலே இறங்கியிருப்பதாக உள்ளுரிலே பரவலாக கதை அடிபடலாயிற்று. இதனால் நிலைமை சற்றுத் தீவிரமாகவும் ஆரம்பித்திருந்தது.



இந்த விவகாரங்களில் எல்லாம் பட்டுக் கொள்ளாமல் தாமரை இலைத் தண்ணீர்த்துளியாக நானுன்டு எனது வேலைகளுண்டு என்று இருந்து வந்ததால் அதிபரோடு எதுவித உரசல்களுமில்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தேன். இதனால்  'கழுவுற மீன்ல நழுவுற மீன்' என்று எனக்கு ஒரு பட்டப் பெயரும் சக ஆசிரியர்களுக்குள்ளே புழங்கியது.


இருந்தாலும் அதிபரின் நாகரீகமற்ற அணுகுமுறைகள், கையாடல்கள், 'அரசியல்வாதிகளின் செல்வாக்கினால் எவரையும் எதையும் சமாளித்து விடலாம்' என்ற அசட்டுத்துணிவு ஆகிய அவரது குணங்கள் மீது காட்டமான விமர்சனமிருக்கத்தான் செய்தது. ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் வெறுத்தபடி இயங்கியதுதான் இத்தனை காலமும் அந்தப் பாடசாலையில் எதுவிதப் பிரச்சினையுமின்றித் தப்பிப் பிழைத்து வந்ததன் இரகசியச் சூத்திரமாக இருந்தது.


ஆனாலும் எனக்குரிய வில்லங்கம் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொருட்காட்சிக் கொண்டாட்டத்தின் வடிவிலே காத்திருந்தது. மிகவும் கோலாகலமாக நடந்தேறிய அந்தக் கண்காட்சியின் நிகழ்வுகளை டிஜிட்டல் காமிராவில் படமெடுத்து கணனியில் ஆவணப்படுத்துகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். எனது உயர்தர வகுப்பு மாணவர்களை வைத்து திறமையாகச் செய்து முடிந்திருந்தேன். குறிப்பாக அதிபரையும் அவரது துதிபாடிகளையும் மிகவும் அழகாக எடுத்திருப்பதாக அதிருப்திக் குழுவினரின் கேலிப்பேச்சுகள் அதற்குரிய பக்கவிளைவாகக் கிடைத்தது எனக்கு.


***


ரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிலே ஓய்வாகப் படுத்திருந்தேன்.


தனது அம்மாவுக்குச் சுகமில்லை என்று முதல்நாள் மாலை பஸ்ஸில் ஊருக்குச் சென்றிருந்தாள்,  செல்லம்மா.  அவள் இன்று மாலைதான் திரும்புவதாகச் சொல்லியிருந்தாள். நேரத்துக்கு வந்து விடுவாளா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் சிணுங்கியது. மறுமுனையில் அதிபரின் குரல். பாடசாலைத் தொலைபேசியில் இருந்து  தன்னை உடனே வந்து சந்திக்குமாறு பதற்றமான குரலில் அழைத்தார். உடனடியாக வீட்டைப் பூட்டிக் கொண்டு பாடசாலையை நோக்கி விரைந்தேன்.

ஒரு விடுமுறை நாளுக்கேயுரிய வெறிச்சோடலுடன் இருந்தது பாடசாலை.
சிற்றூழியன் பார்த்திபன் மட்டும் வெளியில் நின்றிருக்க அதிபரின் அறை திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன். அதிபர் தனியாகத்தானிருந்தார்.

'வணக்கம் சேர்!'

'வாங்க, மகேஸ்வரன்..இப்படி வந்து இருங்க!'

நான் இருக்கவில்லை, ' என்ன விஷயம் சேர், அவசரம் என்றீங்க!'

'முதல்ல இருங்களேன்.. சொல்றேன்' என்றுவிட்டு சிறிது நேரம் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு ஏதோ முடிவுக்கு வந்தவராக, 'மகேஸ்வரன், உங்களுக்கு இங்கருந்து முழுசாக ஊர்போய்ச்சேர விருப்பமில்லையா?' என்று கேட்டார். முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.

எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. 'எனக்கு விளங்கேயில்ல சேர், நீங்க சொல்றது!'

'இஞ்ச பாருங்க! மகேஸ்வரன் சும்மா ஒண்ணும் தெரியாத பபா மாதிரி நடிக்க வேணாம் சரியா? நீங்க இதுவரைக்கும் எனக்குக் கரைச்சல் தராத ஆள்தான். ஆனா இப்ப நடந்திருக்கிற விஷயம் அப்படியில்ல. இங்க கொஞ்சப் பேர் எனக்கு எதிராக சும்மா அதை இதையெல்லாம் சொல்லிக் கொண்டு அலையிறாங்கள் தெரியுமா இல்லையா?


'அது ஒரளவு தெரியும்தான்! ஆனா இப்ப என்ன பிரச்சினை அதை முதல்ல..'


'நம்ம ஸ்கூல் கொம்ப்யூட்டர்ல இருந்த ஒரு முக்கியமான' படம் ஒண்டு எனக்கு எதிராக ஓடித்திரியிற ஆக்கள்ட கைக்குப்போய்ச் சேர்ந்திருக்கு... அது உங்களுக்குத் தெரியாம போயிருக்க இயலாது. ஏனென்டா நடந்த பொருட்காட்சி விழாவுல போட்டோ எடுக்கிறதுக்கெல்லாம் நீங்கதானே பொறுப்பாயிருந்தீங்க!


'பொருட்காட்சியில் எடுத்த போட்டோக்களில என்ன பிரச்சினை இருக்கப் போகுது சேர், அதில வெறும் ஆட்களும் பொருட்களும்தானெ இருக்கு..?' என்றேன், புரியாமல்.


'ஹலோ! என்ன ஜோக்கடிக்கிறதா நினைப்பா? அது..அது நான் சம்பந்தப்பட்ட படம். உங்களைப் பொருட்காட்சியில போட்டோ எடுத்துத் தரச் சொன்னால் அந்த நேரம் ஸ்கூல் கெண்டீன், கிச்சன் ஸ்டோருக்குள்ளயெல்லாம் ஏன்டாப்பா கெமராவைத் தூக்கிட்டு  அலைஞ்சனீங்கள்? ஆங்!' என்று அவர் சூடாகத் தொடங்கிய போது அவரது செல்போன் ஒலித்தது. உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறி மைதானத்தினுள் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.


எனக்குத் தலை வலித்தது. 'இது என்ன புது வம்பு?' என்று நான் யோசித்தக் கொண்டிருந்த போது அதுவரையில்  வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபன் சுற்றிவரப் பார்த்துவிட்டு மெல்ல என்னருகே வந்தான்.


'என்னடா பார்த்தீ! இதெல்லாம்?'


'ஸேர், நான் சொன்னதெண்டு சொல்லிராதீங்க! இவர் ஸ்கூல் கிச்சன் ஸ்டோர்ல இருந்து மதிய உணவு அரிசி மூடைகளை அவர்ர வேனில ஏற்றிக் கொண்டு நின்றதை நீங்க அன்றைக்கு வச்சிருந்த கெமராவில போட்டோ எடுத்திட்டீங்களாம். பொருட்காட்சி போட்டோவோட சேர்ந்து கொம்ப்யூட்டர்ல இருந்த அந்த போட்டோவையும் கொண்டு போயிட்டாங்களாம். அதுதான் அப்படித் துள்ளுறார். கவனம் ஸேர்!' என்று கிசுகிசுத்து விலகினான்.



இப்போதுதான் புரிந்தது எனக்கு. அன்றைக்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்து எல்லோரும் கலைந்து போன பின்பு அவரது வேன கிச்சன் ஸ்டோர் பக்கமாக நின்றது இதற்காகத்தானா? அதைப் படம் பிடித்தது யார்? ஏஎல் பையன்கள்தான் கெமராவை சார்ஜ் பண்ணவென்று இடையில் எடுத்துப் போனான்கள். ஒருவேளை...


'என்ன மகேஸ்வரன் ஸேர். இப்ப என்ன செய்யப்போறீங்க..? இங்க இருந்த படம் எப்படியோ அவங்கள்ற கைக்குப் போயிட்டுது. இனி அது எத்தனையோ கொப்பி போட்டிருப்பான்கள். இனி அதை வாங்கிப் பிரயோசனமில்ல.. ஆனா நீங்க நினைச்சா என்னைக் காப்பாத்தலாம்..' என்றபடி மீண்டும் உள்ளே வந்தார், அதிபர்


'சேர், அந்தக் கோணேசப் பெருமான் மேல சத்தியமாக, நான் எந்த வித்தியாசமான போட்டோவையும் எடுக்கவேயில்ல! இது எனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரச்சினை. நீங்க இப்படி மிரட்டுறது நியாயமே இல்ல! தெரியுமா? என்று நான் சூடானேன். கோபத்தில் என் விரல்கள் நடுங்கின.


'சரி, சரி இப்ப ஏன் வீணாக டென்ஷனாகிறீங்க?' என்று என்னைச் சமாதானப் படுத்துவது போல நெருங்கி வந்து தோளைத் தொட்டு, 'வாங்க மகேஸ்வரன் அப்படியே க்ரவுண்ட் வரைக்கும் போய் விளக்கமாய்ப் பேசலாம். பாரத்திபன்! ஒபிஸைப் பார்த்துக் கொள்! சேரோட ஒருக்கா கதைச்சிட்டு வாறேன்' என்றவாறு சற்றுத் தூரத்திலிருந்த நெருப்புவாகை மரத்தின் கீழே அழைத்துச் சென்றார்.


நான் திரும்பிப் பார்த்தபோது வாசலில் நின்றிருந்த பார்த்திபன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

***

னக்கு ஒரே யோசனையாக இருந்தது.

செல்லம்மா வேறு அம்மாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் இன்னும் இரண்டுநாள் கழித்து வருவதாக போனில் செய்தி அனுப்பியிருந்தாள். அவள் கூட இருந்தாலாவது சின்ன ஆறுதலாக இருந்திருக்கும்.


நேற்றுக் காலையில் அதிபரோடு பேசிய விடயம் தலையிடி தந்து கொண்டிருந்தது. நெருப்புவாகை மரத்தின் கீழ் அழைத்துச் சென்று அவர் கூறிய வார்த்தைகள் நெஞ்சிலே அமிலமாய் அரித்துக் கொண்டிருந்தது.


'மகேஸ்வரன், நீங்க ஒரு பட்டதாரி ஆசிரியர். புத்திசாலியும் கூட. இந்தக் காலத்துல இருக்கிற இடத்துக்கு ஏற்றமாதிரி நடந்து கொள்றதுதான் நல்லது. சரி, நான் உங்கள நம்புறன்...அந்தப் போட்டோவை யார் எடுத்தது கொடுத்தது எல்லாம் எனக்குத் தேவையில்ல. யாரைப் பிடிக்கலாமோ என்னவெல்லாம் செய்வீங்களோ தெரியாது. அந்தப் போட்டோவால எந்தப் பிரச்சினையும் ஏற்படாம நிப்பாட்டுறது உங்கட பொறுப்பு.  என்ன சொல்றீங்க?'


' நான் ஏன் சேர் இதுக்குப் பொறுப்ப நிக்க வேணும்? சம்பந்தமே இல்லாம என்னை ஏன் இதில மாட்டி விடுறீங்க..?'


'அப்படியா? சொல்றேன்' என்றுவிட்டு என்னைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தார்.


'போன ஏப்ரல் மாதம் ஏஎல் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பேராதனைப் பூங்காவுக்கு டுவர் ஒன்று போய் வந்தீங்களல்லவா? அன்டைக்கு நீங்களும் பிள்ளைகளும் வந்த பஸ் இடையில பழுதாகி இங்க இரவு ரெண்டு மணிக்கு வந்தது..அந்த நடு இரவுல பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்ப ஏலாம ஸ்கூல்லயே தங்க வச்சீங்களே நினைவிருக்கா?'


'இருக்கு...ஆனா அது நான் உங்களுக்கிட்ட போன் பண்ணிக் கேட்டுட்டுத்தானே...அதுக்கென்ன இப்போ?'


'அதுக்கென்னவா...? அன்டைக்கு பிள்ளைகளோட நீங்களும்தானே தங்கினீங்க.. அன்றிரவு இருட்டில யாரோ ஒருவன் தப்பா நடக்க ட்ரை பண்ணினான் என்று ஒரு ஏஎல் பெட்டை பொலீஸ் வரைக்கும் போனது தெரியும்தானே? அவன் யாரெண்டு தெரியாம இன்னும் அந்தக் கேஸ் பெண்டிங்ல இருக்கு ஞாபகமிருக்கா?'


'ஓம், அந்தக் கேஸ் இன்னும் முடியல்லையா..சேர்?'


'அதை முடிச்சு வைக்கணுமா?'


'என்ன.. சொல்றீங்க சேர்?'


'இல்ல இருட்டில தப்பா நடந்த அந்த ஆள் நீங்கதானென்டு பொலீஸ்ல கேஸை முடிச்சு வைக்கணுமா மகேஸ்வரன்?'


எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது! அதற்குப் பின்பு அவர் கூறிய எதுவுமே என் காதிலே ஏறவில்லை. எப்போது விடைபெற்று எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.


 'கடவுளே எத்தனை கௌரவமான குடும்பம் என்னுடையது. கார்த்திகேசு மாஸ்டர் என்றால் ஊரே கையெடுத்துக் கும்பிடும் கண்ணியவானின் குடும்பத்திலே இப்படி ஒரு கேவலமான பழிவிழுந்து போனால் நான் என்ன செய்வேன்? இது பொய்யென்று ஓடியாடி நிரூபிக்கலாம் என்று வைத்தாலும் 'ஒருவேளை இவன் செய்திருப்பானோ?' என்று ஊரில் ஒருவன் நினைச்சுக் கேட்டுவிட்டான் என்றால் அதை எப்படி என் குடும்பம் தாங்கும்? ஐயோ! இப்ப நான் எவனிட்டப் போய் அந்தப் போட்டோவைப் பற்றிக் கேட்கிறது?'


எனக்குத் தலையெல்லாம் விறைக்கத் தொடங்கியது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தேன். எங்காவது வெளியே போனால் யாரிடமாவது மனம் விட்டுப் பேசினால் நல்லது.... இருக்கும் மண்டைச்சூடும் குறையும்  என்று தோன்றியது. முகத்தைக் கழுவலாம் என்று குளியலறைக்குச் சென்றேன். உச்சந்தலைக் கொதிப்பு கூடியது. சூடுபோகக் குளித்தாலென்ன என்று தோன்றவே ஷவர் குழாயைத் திறந்தேன். அதுவும் சூடாக வரவே என் மண்டைச் சூட்டுக்கு இது சரிவராது குளுகுளுவென்றிருக்கும் பின்புறத் தோட்டத்துக் கிணற்றுத் தண்ணீர்தான் சரி என்று கயிற்று வாளியை எடுத்துக்கொண்டு அங்கு போனேன்.



அது ஒரு பழைய கிணறு. யாருமே பயன்படுத்துவதில்லை என்பதால் கிணற்றடி முழுவதும் காட்டுச்செடிகள் பற்றிக் கிடந்தது. கயிற்று வாளியைக் கப்பியில் செருகி உள்ளே இறக்கிய போது இலேசாக மயக்கம் வருவது போல இருந்தது. தலை உச்சியில் தீப்பிடித்தது போலத் தகித்தது. எப்படியாவது வாளியை இறக்கித் தண்ணீரை அள்ளிக் கொதிக்கும் மண்டையில் ஊற்றிவிட கைகள் பரபரத்தன. விரல்கள் நடுங்கின.
இதோ..இதோ தண்ணீரை அள்ளியாயிற்று. தண்ணீருடன் வாளியை மேலே இழுக்கும் போது.. அடச்சே! கிணற்றின் உள்சுவரில் பரட்டையாய் வளர்ந்திருந்த ஆலங்கொடியில் மாட்டிக் கொண்டது வாளி! இப்போதுதானா இது நடக்க வேணும்..? தலை கொதித்து பிளந்துவிடும் போலிருக்க கொஞ்சம் கையால் எட்டி வாளியை எடுக்கலாம் என்று குனிந்ததுதான் தாமதம். தலைசுற்றிக் கொண்டு வந்து..ஆ..ஐயோ என்ன நடக்கிறது? காற்றில் மிதப்பது போல...தலைகீழாக... நான் எங்கே போகிறேன்...?


ஆஹா! என்ன சுகம்?


என் தலையிலே டன் கணக்கிலே பனிக்கட்டிகளைக் கொட்டியது யார்? எவ்வளவு இதமாக இருக்கிறது.. தலையெல்லாம் குளிர்ந்து.. ஓ! இதென்ன வானம் ஒரு வட்டத் துண்டாகத் தெரிகின்றது..? ஆலங்கொடியும் அதிலே சிக்கிய வாளியும் தலைக்கு மேலே உயரத்தில் தெரிகின்றதே...ஆ! அப்படியானால்.. நான் இருப்பது எங்கே..? கடவுளே! கிணற்றுக்குள்ளேயா? ஆ! கை கால்களெல்லாம் விறைக்கின்றதே...ஆங்..ஆ..க்..ஹ்! மூச்சு..மூச்சு..ஆங்க்! ஆ!'

***


மோட்டுவட்டைத் திடலுக்கு வலப்புறமிருக்கும் சுடுகாட்டில் இறுதியாகச் செய்துமுடிக்க வேண்டிய அத்தனை சடங்குகளும் ஒன்றுவிடாமல் நடந்தேறின. முருகேசு மாமாவைக் கைத்தாங்கலாகச் சிலபேர் கொண்டு வந்தார்கள். அழுது அழுது அவரால் நிற்கக்கூட முடியவில்லை. ஈரவேட்டியுடன் ஓட்டைப் பானைசுமந்து சுற்றிவந்தவரிடம் கையிலே தீவட்டியைக் கொடுத்தார்கள். அதைக் கையில் எடுத்தவர் உடைந்துபோய், 'ஐயோ! மங்களமக்கா! என்ட கையில தூக்கி வளர்த்த உன்ட மகனுக்கு என்ட கையாலயே கொள்ளி வைக்கிறனே! ஐயோ! பாரக்கா இந்த அநியாயத்த..!' என்று பெருங்குரலெடுத்துக் கூவினார்.



திடீரென அழுகையை நிறுத்திவிட்டு வெறிபிடித்தவர்போல கட்டைகளால் பாரமேற்றி உடலை மூடிவைத்திருந்த சாணி வரட்டிகளையெல்லாம் சடுதியாய்க் கலைத்து,   'டேய் மகேசு! என்ட தங்கமே மகேசு!' என்று என் முகத்தின் மீது விழுந்து கதறியழுதார், என்னை வளர்த்த பாசமுள்ள முருகேசு மாமா.



சிறிது நேரத்தின் பின்பு எல்லோரும் அங்கிருந்த அகன்றுவிட, முருகேசு மாமா வைத்த தீயிலே தன்னந் தனியாக நான் எரிந்து கொண்டிருந்தேன்.

***


-மூதூர் மொகமட் ராபி

(நன்றி:  ஜீவநதி  சித்திரை 2012)

வதை ஒரு கதை!




பகதூரின் வேட்டை நாயும்

நமது முற்போக்குப் பெண்களும்!






மது நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண்கள் பலரிடம் எப்போது பார்த்தாலும் தங்களிடமிருக்கும் நகைகள் ஆடைகள் மற்றும் ஆடம்பர வீட்டுப் பொருட்களைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் போக்கை அல்லது தங்களிடம் இல்லாத ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போக்கை அவதானிக்கலாம்.


இத்தகையோரிடம், 'சரி, வசதியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு மனிதன் என்ற வகையில் நீங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் சுதந்திரமாக நடாத்தப்படுகின்றீர்களா?' என்று கேட்டுப் பாருங்கள்.


ஏதோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டு விட்டதுபோல நடந்து கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் ஆடம்பரங்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு தங்களின் வாழ்க்கையின் உண்மை நிலையை அறியாதவர்களாக செக்குமாடு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், குதிரை தன் முகத்தின் முன்னே தடியில் கட்டிவைத்திருக்கும் கரட் கிழங்கை துரத்தியோடுவது போல ஒன்று கிடைத்தால் மற்றொன்றுக்காக வாழ்க்கை முழுவதும் ஏங்கிக்கொண்டே செத்து மடிவார்கள்.


இத்தகைய மத்தியதரக் குடும்பத்துப் பெண்களில்  பலர் தமது பொழுதுபோக்குகளில் ஒன்றாக வாசிக்கும் பழக்கத்தை வைத்திருப்பதுண்டு. அவ்வாறு வாசிப்பவர்களிலும் கிடைப்பதையெல்லாம்  வாசிப்பவர்களும் இருக்கிறார்கள். மாறாக, தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும் இருக்கின்றார்கள். பெண்களிலே பொதுவாக அதிகமானோர் கவிதை மற்றும் புனை கதைகளிலே ஈடுபாடுள்ளவர்களாக இருப்பதுண்டு.  இவர்களிலே சிலர் வாசிப்பதோடு மட்டும் நிற்காமல் ஆக்கங்கள் பற்றிய தமது கருத்துக்களை ஊடகங்களுக்கோ அல்லது ஆக்கியவர்களுக்கோ தெரிவிக்கும் பழக்கமுள்ளவர்களாகவும் இருப்பர். இன்னும் சிலர் சுயமாக ஆக்கங்களை எழுதக்கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கின்றார்கள்.


தமது வாசிக்கும் பழக்கத்தால் ஏனைய பெண்களோடு ஒப்பிடும்போது இவர்கள் பல விடயங்களை ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பார்கள். பொதுவாக எந்தவொரு வியடமும் இவர்களுக்குப் புதிதான ஒன்றாக இருப்பதில்லை எனலாம். இந்தத் தகுதியே இவர்களை சமூகத்தில் உள்ள மூளைசாலிகளுடன் விரும்பியோ தற்செயலாகவோ இணைக்கின்றது எனலாம்.


இதன் விளைவாக பல முற்போக்கான கருத்துக்களைப் பற்றியும் அறியும் வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைக்கின்றது. இந்தக் கருத்துக்களின் விளைவாக ஒருநிலையில் தமது வாழ்வியல் நிலையை சுய விசாரணைக்கு உள்ளாக்கும் கட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பெண்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. இதனால் அதுவரை ஒரு பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து தான் பார்த்த வாழ்வியல் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாகின்றார்கள்.



பொதுவாக நமது சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் ஆளுமையையும் தீர்மானிக்கும் பல்வேறுபட்ட காரணிகளில் அவன் சார்ந்துள்ள மத நம்பிக்கைகளினதும்  சம்பிரதாயங்களினதும் பங்கு அளப்பரியது. இதனால் முற்போக்கான கருத்துகளை  உள்வாங்கும்போது அதுவரையிலே குடும்ப ரீதியாகவும் சமுதாயப்பிரிவுகள் ரீதியாகவும் சிறுவயது முதற்கொண்டு ஆழப்பதிக்கப்பட்ட பல அறிவியல் தர்க்க ரீதியில் ஆதாரமற்றதும் வெறும் நம்பிக்கை சார்ந்ததுமான கருத்தியல்களோடு முரண்பட வேண்டிய தேவையேற்படுகின்றது. இன்னும் கூறினால் மேற்கூறிய ஆதாரமற்ற கருத்தியல்களைத் தாண்டித்தான்தான் ஒருவர் தனது வாழ்வு பற்றி புதிய தேடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.


இது ஒரு ஆணுக்கே பலத்த சவாலான ஒன்றாக இருக்கும்போது ஒரு பெண்ணின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமானதல்ல. ஒரு ஆண் தனது சமூகத்தின் தடைகளைத்தாண்டி முற்போக்குக் கொள்கையுடையவனாகத் தன்னை வெளிக்காட்டும்போது அவன் சார்ந்த சமூகத்தின் விமர்சனம் அவனது கருத்தின் மீதுதான் முதலில் வைக்கப்படும். ஆனால், ஒரு பெண் அவ்வாறு துணிகையில் இனங்காணப்பட்டால் வைக்கப்படும் முதல் விமர்சனம் அவளது நடத்தை மீதாகத்தான் இருக்கும். இது நமது பெண்களைப் பொறுத்தவரை எத்தனை அபாயமானது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.


இதனால்தான் நமது சமூகத்திலே வாழும் சிந்தனைத் திறனுள்ள பெண்கள் கூட தமது எண்ணங்களை வெளிப்படுத்த  முன்வருவதில்லை. மீறி வெளிப்படுத்தினாலும் கூட சில வரம்புகளைத் தாண்டுவதுமில்லை.
ஆனால் ஒரு பெண் தனது வாழ்வில் ஒரு முறையாவது தான் சார்ந்திருக்கும் நம்பிக்கை சார்ந்த கருத்தியல்களினால் திணிக்கப்பட்ட விடயங்களுக்கு சிறு எதிர்ப்பையாவது காட்டி இருப்பாள் என்பதுதான் இதிலுள்ள முரண்நகை. 



குறைந்தபட்சம் பாடசாலைப் பருவத்தில் சக வயது மாணவர்களின் கேலிப்பேச்சுகளுக்கோ ஒதுக்கல்களுக்கோ ஆளாகும்போது அதிலுள்ள ஆண் - பெண் சமத்துவமின்மையை எதிர்த்து நிச்சயம் கேள்வி எழுப்பியிருப்பாள்.
மாணவப் பருவத்தில் பாடசாலையிலும் வீட்டிலும் தீரமாக எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு பெண் பின்பு மொத்த சமூக அமைப்பும் தன்னையும் தன்போன்ற பெண்களையும் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்துவதை அறிந்து வேறுவழியின்றி படிப்படியாக எதிர்ப்பை கைவிட்டு சரணாகதி அடைகின்றாள்.



பின்பு திருமணமாகும் வரை, தான் குடும்பத்தினருக்கு ஒரு பெரும் சுமை போன்று மறைமுகமாகவேனும் உணர்த்தப்படுகின்றாள். திருமணமானதும் கணவன் மற்றும் குழந்தைகளின் பணிவிடை பராமரிப்பு என்ற சிறுவட்டத்துக்குள் சிக்கிச் சுழன்று (சிக்க வைக்கப்பட்டு)  படிப்பதற்கோ அறிவுத்தேடலுக்கான வாசித்தலுக்கோ வழியின்றி வேலைகளுக்குள்ளேயே தன்னைத் தொலைத்து விடுகின்றாள்.


வேலைக்குச் செல்லும் பெண்களை எடுத்துக் கொண்டால் ஒரு விதத்தில் அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைத்தாலும் அவர்களை விடுவிப்பதாகக் கூறமுடியாது. வேலைக்குச் சென்று உழைத்துச் சம்பாதிக்கும் பெண் என்பதற்காக வீட்டு வேலைகளிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைப்பதில்லை. மாறாக இரண்டையும் செய்ய வேண்டிய இரட்டைச் சுமையாகி வேறு வடிவத்தில் அவளை விலங்கிடுகின்றது என்றேதான் சொல்ல வேண்டும்.


ஆக மொத்தம் இந்த படித்த மத்தியதரக் குடும்பப் பெண்கள் வாசிப்பறிவால் கிடைக்கும் முற்போக்குக் கருத்துகளின் முன்னோக்கிய உந்துதலுக்கும்  பாரம்பரிய மத சம்பிரதாயங்களின் பின்னோக்கிய இழுப்புக்கும் இடையிலான விளையுள் திசையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.



"சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பவர்களைத் தவிர மற்றவர்கள் கீழேயுள்ள கதையை வாசிக்க வேண்டாம்!  வாசிக்கவே வேண்டாம்!!




சிறுவயதிலே தமிழ் பாடப்புத்தகம் ஒன்றிலே நான் படித்த கதை ஒன்றிருக்கின்றது. பகதூர் எனும் ஒரு பணக்கார வேட்டைக்காரர் காட்டிற்குச் சென்று தனது பங்களாவிலே தங்கியிருக்கின்றார். ஒரு பகல் பொழுதில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரது வேட்டை நாய் தனியாகக் காட்டுக்குள் சென்று விடுகின்றது. அந்த அடர்ந்த கானகத்தின் நடுவிலே காட்டு நாய் ஒன்றைக் கண்டு விடுகின்றது.  இருவரும் அறிமுகமாகி உரையாடத் தொடங்குகின்றனர்.


இருவரும் தத்தமது வாழ்வைப் பற்றி பேசிக்கொள்கின்றனர். வேட்டை நாய் தனது எஜமானர் பகதூரின் வீட்டிலே கிடைக்கும் சிறந்த உணவு மற்றும் வசதியான தங்குமிடம் உட்பட அனைத்து சொகுசுகளையும் ஒன்றும் விடாமல் காட்டு நாய்க்கு எடுத்துக் கூறுகின்றது.


வேட்டைநாய் சொல்வதையெல்லாம் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த காட்டு நாய்க்கோ ஆச்சரியம் தாளவில்லை. காட்டிலே வெயிலிலும் மழையிலும் அலைந்து உணவுக்கும் நீருக்கும் போராடி வாழும் தனது வாழ்வை நினைத்து கவலையுறுகின்றது.  தானும் எஜமான் பகதூரின் வீட்டிலே வந்திருக்க முடியுமா? என வினவுகின்றது. அதற்கு உதவுவதாக வேட்டை நாயும் ஒப்புக்கொள்ளவே இருவரும்  சேர்ந்து பகதூரின் காட்டு பங்களாவை நோக்கி செல்கின்றனர். 


பங்களாவை நெருங்கும் தறுவாயில் வேட்டை நாயின் கழுத்திலிருந்த வளையம் போன்ற ஒரு தழும்பை  தற்செயலாக பார்த்து விடுகின்றது, அந்தக் காட்டுநாய். அதுபற்றி வினவியதும், வேட்டை இல்லாத நாட்களில் பகல் முழுவதும் தன்னை ஒரு பெறுமதியான வெள்ளிச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதைப்பற்றி பெருமை பொங்க விபரிக்கின்றது வேட்டை நாய்.


அதனைக் கேட்டதும் சட்டென நின்று விடுகின்றது காட்டு நாய். காரணம் கேட்கும் வேட்டை நாயை ஏளனமாய் பார்த்து, ' தூ அற்பனே! நான் காட்டிலே இருந்தாலும் கஷ்டமான வாழ்வை வாழ்ந்தாலும் சுதந்திரமாக இருக்கின்றேன். ஆனால் நீயோ வேளைக்குச் சாப்பாடு சொகுசுப் படுக்கை என்று வாழ்ந்தாலும் வெள்ளிச் சங்கிலியில் கட்டுண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். நான் வாழும் காட்டிலே எங்கு வேண்டுமானாலும் இஷ்டம்போல சென்று வருவேன். நீயோ அவர்கள் அவிழ்த்து விட்டால்தான் உலாவலாம்.  உன்னைப்போல என்னால் சொகுசாய் வாழ்வதற்காக சுதந்திரமில்லாமல் இருக்க முடியாது' என்றுவிட்டு காட்டுக்குள் திரும்பி ஓடிவிடுகின்றது.


-மூதூர் மொகமட் ராபி

Thursday, April 12, 2012

பம்..பம்..பம்...பூகம்பம்!





ஜீன்ஸ் மந்திரவாதிகளும்

SMS

சாமியாடலும்!




நேற்று புதன்கிழமையன்று சுமாத்திரா கடல் பகுதியிலே புவியதிர்வுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடத்தக்களவில் வரத்தொடங்கியதுதான் தாமதம் நமது கைத்தொலைபேசிகளின் உள்பெட்டிகளெல்லாம் (அதுதான் inbox) குறுஞ்செய்திகளால்  நிறையத் தொடங்கி விட்டன. 


அவற்றில் இரண்டு  மூன்று தவிர மற்றவை அனைத்தும்,  'ஆபத்துகளின்போது பின்வரும் சுலோகங்களை ஜெபியுங்கள்' அல்லது
 'இயற்கை அழிவு ஏற்படும்போது காப்பாற்றக் கடவுளை வேண்டி இதனை ஓதுங்கள்!' போன்றவைதான்.


வழமையாக ஏதாவது ஒர் உப்புச்சப்பில்லாத விடயத்தைக் கூட வைத்துக்கொண்டு Breaking News போட்டு இழுத்து இழுத்து எரிச்சலூட்டுவதையெல்லாம் முன்பு நமது 'சக்தி வாய்ந்த' தொலைக்காட்சிகளும் 'சுட்டெரிக்கும்' பண்பலை வானொலிகளும்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது கைத்தொலைபேசிகளிலும் கிட்டத்தட்ட அதுதான் நடக்கின்றது.


இது ஒருவகையான உத்தி. ஏதாவது ஒரு முக்கியமான நிகழ்வு ஏற்பட்டுவிட்டால் மக்கள் இலத்திரனியல் ஊடகங்களைத்தான் உடனடியாக நாடுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு சரியான நியூஸ் கிடைக்கிறதோ இல்லையோ TVவாலாக்கள்  டையைக் கட்டிக்கொண்டு கற்பனைச் சட்டியோடு ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் வந்திறங்கி விடுவார்கள். கிடைத்த சிறுகடுகு போன்ற துணுக்குச் செய்தியை வைத்துக்கொண்டே கிராபிக்ஸ் அடுப்பு மூட்டி வார்த்தைஜாலக் கரண்டி கொண்டு வதக்கித் தாளித்துப் பரிமாறுவார்கள்.


பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்தங்களை இன்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு மட்டும் எதிர்வுகூற முடியாது. ஆனால் கடலில் பூகம்பங்கள் நிகழும் போது அவை ஏற்பட்டுள்ள பிரதேசம், தரைக்கீழ் ஆழம், அதிர்வின் அளவு ஆகியவற்றைக் கணித்து கரையோரங்களுக்கு சுனாமித் தாக்கங்கச் சாத்தியங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்க முடியும். அதுவும் 2004ல் தெற்காசியாவிலும்  2011ல் ஜப்பானிலும் கையைச் சுட்டுக்கொண்ட அனுபவங்களால் இந்தத் துறையிலே இப்போது நிறைய தொழினுட்பத் துல்லியங்கள் ஏற்பட்டுள்ளன.


பூகம்பம் ஏற்பட்டுள்ள பிரதேசம் மற்றும் மிக அண்டிய பகுதிகளைத் தவிர ஏனைய தூர நாடுகளில் கடலையண்டி வாழ்பவர்களுக்கு சில மணிநேரங்களாவது அவகாசமிருக்கின்றது. அதற்குள்ளாக குறைந்தபட்சம் அவரவர் உயிரையும் வெகுமுக்கியமான ஆவணங்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இதுதான் அனுபவ + அறிவியல் உண்மையாக இருக்கும்போது அநாவசிய பதற்றங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி விட்டு அற்பசுகம் காணும் அல்லது அவற்றைக்  கோழைத்தனமாகப்  பயன்படுத்தும்  போக்குகள் ஏன் ஒவ்வொருமுறையும் நிகழ்கின்றது?


சிந்தித்துப் பாருங்கள் சில உண்மைகள் தெரியவரும்.


மேலே நான் குறிப்பிட்டுள்ள அற்பசுகம் காணும் போக்கு என்றால் உங்களுக்கு இலகுவாய் புரியும். அது ஒருவகை சொறிதல் சுகம் போன்றது. அடுத்தவர்களை எப்படியாவது கவருவதற்கென்றே சிலபேர் அலைவார்கள். இப்படி ஏதாவது ஒன்று கிடைத்து விட்டால் போதும் ஏதோ சுமாத்திரா பன்டா ஆஷே தீவுக்கே போய் பூகம்பத்தை நேரில் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் போல கதையளப்பார்கள். அறியாத மக்களை வெருளச்செய்து அதிலே  கிடைக்கும் மலிவான அதிர்ச்சி மதிப்பும் சிறு VIP அந்தஸ்தும் கிடைப்பதை உள்ளுர வசித்து மகிழும் அற்ப புத்தியுடையவர்கள் செய்வதுதான் இதெல்லாம்.



அடுத்து மக்களின் உயிர்ப்பயம் பற்றிய பதற்றத்தை பயன்படுத்துபவர்கள் பற்றிப் பார்க்கலாம்.  திருடுவதிலே உடமையைத் திருடுவது உழைப்பைத் திருடுவது என்று இருவகை இருப்பதுபோல இந்த பதற்றத்தைப் பயன்பத்துபவர்களிலும்  இருவகையினர் உள்ளனர்.


அதாவது இப்படியான அனர்த்த வேளைகளில் மக்கள் இயல்பாகவே வேறு கவனத்திலிருப்பதால் அந்தவேளை பார்த்து பொருட்களை அபகரிக்கும் சில்லறைத் திருடர்கள் ஒருவகையினர்.


மற்ற வகையினர் பதறித்திரியும் மக்களின் உயிர்ப்பயத்தைப் பயன்படுத்தி  அவர்களின் மூளையைத் திருடுபவர்கள்.(ஏனைய நேரங்களில் அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்க முடியாததாலோ என்னவோ)  இது புரிகிறதா உங்களுக்கு? இருங்கள் சொல்கின்றேன்.


இவர்கள் பார்ப்பதற்கு கனவான்கள் போலத்தான் இருப்பார்கள். ஆனால் அப்பாவி மக்களின் பதற்ற நேரத்திலே அவர்களது இயலாமைக்குள்ளேயும் உயிர்ப்பயத்துக்குள்ளேயும் புகுந்து எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டுவார்கள். இயற்கை அனர்த்தங்களுக்குரிய அறிவியல் காரணங்களை விலக்கி பழைய மந்திரவாதி ஸ்டைலில் 'சாமி குத்தம் ஆயிடுச்சிடா!' என்று கத்தாத குறையாக மக்களிடம்  கொண்டு செல்ல நினைக்கின்றார்கள். சுருங்கச் சொன்னால் தமது குறுகிய துருப்பிடித்த நம்பிக்கைகளை மக்களின் மூளைக்குள்ளே விதைக்க நினைக்கும் ஆசாமிகள்.


இவர்கள்தான் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கைத்தொலைபேசிக் கனவான்கள். நேற்றைய பதற்ற நிலைமையிலே, அந்த மந்திரத்தை ஓதுங்கள்...இந்த சுலோகத்தை மனப்பாடம் செய்யுங்கள் என்று நியூஸ் அனுப்பிய அறிவாளிகள்.


அந்தக் காலங்களில் கிராமங்களிலே கடும்வரட்சியோ தொற்றுநோயோ ஏற்பட்டு மக்கள் வாடும்போது ஊர்ப் பூசாரிகள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவரையிலும் தன்னைக் கண்டுக் கொள்ளாமல் இருந்த மக்களுக்குத் தன் மீது பயம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக (அப்போதுதானே ஏய்த்துப் பிழைக்கும் தன் வயிற்றுப் பிழைப்பு ஜோராக நடக்கும்) 'ஆத்தா கனவுல வந்தாடா! நோயால ஊரையே அழிச்சிடுவாடா!   கருங்கோழி வெட்டுங்கடா! ஆட்டைக் கொண்டு கட்டுங்கடா!' என்று சாமியாடுவார்கள்.


அதுபோலத்தான் நமது இந்த ஜீன்ஸ் போட்ட மந்திரவாதிகளும் மக்களின் சுனாமிப் பயத்தை தமது மூளைச்சலவை வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள். மந்திரவாதிகளுக்கும் இந்தக் கனவான்களுக்கும் உள்ள...

ஒற்றுமை:

மக்களை ஏய்ப்பதற்கும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் வசதியாக அறிவியலிலிருந்து முடிந்தவரை விலக்கி மூடத்தனத்திலேயே அமிழ்த்தி வைத்திருப்பது.

வித்தியாசம்

இடுப்பு வேட்டி பதிலாக டீசேர்ட் ஜீன்ஸ் etc.  சாமியாடலுக்குப் பதிலாக SMS சேவைகள்


இப்படியெல்லாம் செய்வதற்குப் பதிலாக குறைந்தபட்சம் அனர்த்தங்களின் போது எப்படி விரைவாக வெளியேறுவது..என்னென்னவற்றை செய்யலாம் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது போன்ற தகவல்களைக் கொடுத்திருந்தாலாவது நடைமுறைக்கு உதவியாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்திருக்கும்.


இனியாவது செய்வார்களா?

-'Mutur' Mohammed Rafi

குட்டிக்கதை:





என்ன விலை அழகே!




முன்பெல்லாம் நட்பு அல்லது காதலின் வலிமையைச் சொல்லுவதற்கு ஒப்பிடுவதற்கு 'நகமும் சதையும் போல' அல்லது 'நீரும் மீனும்போல' என்பது போன்ற சில வழமையான சொற்றொடர்களைத்தானே கதைகளிலெல்லாம் பயன்படுத்துவார்கள். அதெல்லாம் இப்போது கேட்பதற்கே சலித்துப்போய் விட்டதே...

'சுனாமியும் சுமாத்ராவும் போல' அல்லது 'Q வும் U வும் போல'  அல்லது 'காக்கிகளும் லஞ்சமும் போல'  என்று புதிதாக ஏதாவது சொன்னாலென்ன...?

உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. ஒருகாலத்தில் போற்றப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட பல விடயங்கள் இப்போதெல்லாம் பழைய மினுமினுப்புக் குறைந்து பாவனையின்றி போய்க் கொண்டிருக்கிறது. பழைய இசைத்தட்டுக்கள், வீடியோ கெஸட்டுகள், டேப் ரெக்கோடர்கள், டைப் ரைட்டர்கள், ப்ளொப்பி டிஸ்க்குகள்...உண்மை..நேர்மை..காதல்..பக்தி ..etc..etc.


என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நகரின் கடைத்தெரு ஒன்றால் நடந்து கொண்டிருந்தேன்.  அப்போது பேனா ஒன்று தேவைப்படவே வாங்கலாம் என்று  ஃபென்ஸி கடை ஒன்றினுள்ளே நுழைந்தேன்.

எப்படித்தான் பார்த்தவுடனே எழுதுகிற ஆள் என்று கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை.  நான்,  'பே...' என்று ஆரம்பிப்பதற்குள் போல்ட் பொயின்ட் பேனாப் பெட்டியை எடுத்து அதில் ஒன்றை நீட்டியே விட்டார் கடைக்காரர். அதை வாங்கிக்கொண்டு கடையை நோட்டமிட்டேன். கண்ணாடி சட்டகத்தினுள் நிறைந்திருந்த விதவிதமான அலங்காரப் பொருட்களுக்குள் என்னைக் கவர்ந்தது ஒரு அழகான பழைய காலத்து பவுண்டன் பேனா.

'இந்தக் காலத்திலும் மையூற்றுப்பேனாவெல்லாம் வாங்குபவர்கள் இருக்கிறார்களா?' அதைக்காட்டி விசாரித்தேன். என்னை ஒருமாதிரியாகப் பார்த்தவாறே வெளியிலெடுத்துத் தந்தவரிடம்,


'இதற்கு ஊத்துகிற மையெல்லாம் இருக்குதா என்ன?' என்று கேட்டேன். அவர் லேசாய் சிரித்தபடி,


'இதுக்கு அதெல்லாம் தேவையே இல்லை' என்றார்.

'ஏன், மை தானாகவே சுரந்து வருமோ?' என்றேன் அவருக்கு பதில் நக்கல் விடுவதற்காக. 'இல்ல, இதுவும் ஒரு போல்ட்பொயிண்ட் பென்தான் ஸேர்' சட்டென்று மூடியைத் திறந்து ஒரு தாளில் எழுதிக்காட்டினார்.


நம்ப முடியாமல் ஆச்சரியத்தோடு அதை வாங்கி, 'என்ன விலை அழகே...' என்று நானும் ஒருதடவை எழுதிப்பார்த்தேன். அற்புதமாக எழுதியது, சரியாக பழைய மையூற்றுப்பேனாவின் வடிவிலிருந்த அந்த அதிசயம்.

'அதெல்லாம் சரி, என்ன விலை இது?'

பதில் சொன்னார் அவர்.

என் முகத்திலிருந்த அத்தனை சந்தோசமும் சட்டென வடிந்திருக்க வேண்டும் போல.

'ம்! இதெல்லாம் சும்மா! இந்த டீச்சர்ஸ் டே வலண்டைன்ஸ் டே.. அது.. இதுகளுக்கு ப்ரஸண்ட் பண்றதுக்குத்தான் சரி.  ஸ்கூல் புள்ளைகள்தான் வழமையா வேண்டிட்டுப் போவுங்கள்.' என்று என்னைத் தேற்றுவது போலக்கூறியபடி மீண்டும் அதை இருந்த இடத்தில் வைத்து விட்டார்.

லேசான அவமானத்துடன் கடையைவிட்டிறங்கி மீண்டும் நடைபாதைக்கு வந்து திரும்பி நடந்து கொண்டிருக்கும்போது,

'அது என்ன? போல்ட்பொயிண்ட் பென்னா? இதெல்லாம் இப்பவும் வருதா அண்ணன்?'

' சேச்சே! இதுவும் ஒரு லேசர் பென்தான். சரியாக அந்தக் காலத்துப் பழைய போல்ட் பொயிண்ட் பென்போலவே இருக்குது..! அவ்வளவுதான்!'


என்று இதே கடைத்தெருவின் சுப்பர் மார்க்கட்டின் 76 வது மாடியிலிருக்கும் ஒரு கடையொன்றிலே கி.பி. 2040ல்  நிகழவிருக்கும் ஓர் உரையாடலை  இன்றிரவு நான் எழுதப்போகும் சிறுகதைக்காக மனதுக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தபோது...

அவமான உணர்வு கணிசமாகக்  குறைந்திருந்தது.

-மூதூர் மொகமட் ராபி

Wednesday, April 11, 2012

கவிதை:





காதல் எரிமலை






ன் நினைவு வெளியில்
உன் உறவுப்பறவை
உல்லாசமாய்ச் சிறகடித்திருக்கும்
ஓர் ஓய்வு நாளில்
ஓசைப்படாமல் வந்தது
ஒருகடிதம்!



அட!
தனித்தனி எழுத்துக்களாய்
தட்டச்சில்
என் பெயரும் முகவரியும்
ஆங்கிலத்தில்..
ஓ! சந்தேகமே வேண்டாம்
எழுதியிருப்பது நீ
நீயேதான்!



எனது விழிகளின் தவிப்பை
விரல்கள் மொழிபெயர்க்க
கடிதவுறை திறக்கும் கணங்கள் கூட
காத்திருக்கப் பொறுமையில்லை
எகிறிக்குதிக்கிறது என் இதயம்!



" ஓ! போதும்
உன் சாக்குப்போக்குகளும்
சமாதான வார்த்தைகளும்
சலித்தே போயின எனக்கு
இனியும் எழுதாதே நிறுத்து!"




ஆரம்ப வரிகளே
அபாயகரமாய் தாக்கிட
கடிதமென்ன
உன் காகித ஓரங்கள் கூட
கத்திகளாய்த் தோன்றுகின்றதே!



"நீ எழுதும் வரிகள்தானே
இளையவள்
என் இதயத்துடிப்பு
நீயும் அதை நிறுத்திவிட்டால்

நின்றிடாதோ
இவள் உயிர்த்துடிப்பு!
ஆண்மகனாய் நீயும்
இருப்பதால்தான் காதலிலே
கவலையில்லை உனக்கு
பெண்ணாய் நானும் பிறந்துவிட்டேன்
என் வேதனைக்குத்தானுண்டோ
ஓர் கணக்கு?"




"கனவுச்சிறகு விரித்து
காதல்வானிலே
களித்திருந்த கன்னிமகள் இதயம்
வேதனைத் தீயில்
வெந்து மடிகின்றதே இப்போது.
கவலைகள் போக்கிடவும்
என் கண்ணீரைத் துடைத்திடவும்
யாருமில்லை இங்கே
தோழியும் தூரதேசம்! "




"இந்த நிலை நீடித்தால்
இடைவிடாது
தொடர்ந்திட்டால்
மனப்பிரமை
நிச்சயம் ங்கைக்கு
மாற்றுவழியில்லை"



ஓ!
அன்பே
ஓங்கி மிதிக்கின்றாய்  ஒருவரியில்
ஒத்தடமும் தருகின்றாய் சிலவரியில்
சினிமாவின் வில்லனாய் மிரட்டுகின்றாய்
கோபத்தில் சீறுகின்றாய்
குழம்பாகக் கொதிக்கின்றாய்...



ஓ!
அன்பே நீ
எழுதியிருப்பது கடிதமல்ல;
காதல் எரிமலையின்
ஒரு கையடக்கப் பதிப்பு!


-மூதூர் மொகமட் ராபி

Tuesday, April 10, 2012

Why these Kolaivery?





'அப்பாடா  தப்பிச்சோம்!'






ண்மையிலே தற்செயலாக சில இணையத்தளங்களைத் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஓர் உயிர்ப்பான மின்சாரக் கம்பியை தொட்டது போலிருந்தது.



அனைத்து இணையத்தளங்களும் நம்பகமானவை அல்ல என்பதையும் இணையத்தில் வெளிவருகின்ற அத்தனை செய்திகளும் முற்றிலும் உண்மையானவை அல்ல என்பதையும் நான் நன்கறிவேன். ஆயினும் ஏற்கனவே அச்சு ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் பேசப்பட்ட செய்திகளை இணையத்திலே காட்சிவழி காணும்போதுதான் மேற்கூறிய அதிர்ச்சி.


சிறுவயதிலும் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்திலும் நாமெல்லாம் ஒரு முஸ்லீம் நாட்டிலே பிறந்திருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கின்றேன். ஆனால் இப்போது முஸ்லீம் நாடுகளில் நடைபெறுகின்ற பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பார்க்கும்போது 'அப்பாடா  தப்பிச்சோம்!' என்று  ஆசுவாசப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு அங்கு பெண்கள் பற்றிய விடயங்கள் உள்ளன.


இப்படி நான் சொல்வதால் ஏனைய நாடுகளிலெல்லாம் பெண்களைப் பூப்போல வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகாது. உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா விலுள்ள  உள்ள இஸ்லாமிய நாடுகளில்தான் மிக அதிகளவான பெண் கொடூரங்கள் பதிவாகின்றன என்று அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


பொதுவாக இவ்வாறான புள்ளி விவரங்கள் வெளியானவுடன் அந்தத் தகவல்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை.  இவை சரியானவைதான் அல்லது உண்மைக்கு மிகக்கிட்டியவைதான் என்பது நம் அறிவுக்குத் தெரிந்தாலும் உணர்வுக்கு உறைப்பதில்லை. விளைவாக உண்மையை எதிர்கொள்ளத் திராணியின்றி   சோற்றுக்குள் முழுப்பூசணிக்காய் விடயம் போல உடனடியாக அவற்றைக் கடந்து சென்றுவிடத்தான் முயல்கின்றோம். அல்லது தப்பிப்பதற்கான காரணங்களைத் தேடுகின்றோம்.


 'மேற்குலகின் சதி' என்றும் 'அமெரிக்காவின் திரிக்கப்பட்ட செய்தி'
 'யூத ஊடகங்களின் வேலை' என்று சில தயாரிக்கப்பட்ட சொற்றொடர்கள் கூட இதெற்கனத் தயாராக வைத்திருப்போம்.  இத்தகைய சதிகளெல்லாம் முற்றிலும் நமது பிரமையென்று கூறமுடியாது. ஆனால் வீட்டுக்கூரையில் ஒரு மாங்காய் விழுந்தால் கூட அதையும்  'அமெரிக்கச்சதி' என்று கூப்பாடு போடுவதால்தான் அதற்கெல்லாம்  சிறு அதிர்ச்சி மதிப்புக்கூடக்; கிடைப்பதில்லை.


உலக நாடுகளில் நிகழும் மனித சமூகத்துக்கு எழுச்சியும் உயர்ச்சியும் தரக்கூடிய செயற்பாடுகள் பற்றிய செய்திகளை இந்த மேற்குலக யூத ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தால் அல்லது திரிபுபடுத்தி வெளியிட்டால் அதைக் காட்டமாக எதிர்க்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை. அதேவேளை மனித நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்களை - அவை எங்கு நிகழ்ந்தாலும் -  அதே ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியுலகுக்கு கொண்டு வந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.


சரி, முஸ்லீம் நாடுகளில் தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தேடுவோமா?


அறிஞர் பெர்னாட்ஷா ஒரு தடவை,    'சமூகம் குற்றங்களுக்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறது. குற்றவாளிகள் அதனைச் செய்து முடிக்கின்றார்கள்'   என்றார்.


அதாவது எந்தவொரு தனிமனிதனும் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்துமுடிக்க வேண்டும் எனும் தன்முனைப்போடு அதனைப் புரிவதில்லை. அவனைச் சுற்றியுள்ள சமூகக்காரணிகளே பெரும்பாலும் ஒரு குற்றத்தை நோக்கி உந்துகின்றன.


அப்படிப் பார்த்தால் பெண்கள் மீது அதிகமான குற்றங்களை இழைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மதப்பிரிவினர் எதுவிதமான குற்றவுணர்வுமின்றி அல்லது ஒப்பீட்டளவிலே குறைவான  குற்றவுணர்வுகளுடன் முன்வருகின்றனர் என்றால் அவர்களை வழிநடாத்தும்  மத கலாசார விழுமியங்களிலோ சமூகப் பொருளாதாரக் காரணிகளிலோ அல்லது அவற்றின் தவறான பின்பற்றல்களிலோதான்  தவறுகள் இருக்க வேண்டும்.


இதனை ஒர் இலகுவான உதாரணத்தின் ஊடாகப் புரிந்து கொள்ளலாம்.


அதாவது ஒரு கடலோரக் கிராமத்திலுள்ளவர்களையும் விவசாயக் கிராமத்திலுள்ளவர்களையும் ஒப்பிட்டால் பொதுவாக கடலோரமுள்ள மீனவர்கள்தான் விவசாயிகளை விடவும் வாழ்க்கையில் எந்தவொரு விடயத்திற்கும் சட்டெனத் துணிந்து இறங்கி முகம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  காரணம் அவர்களது ஜீவனோபாயத் தொழில்.
கடல் என்பது ஓர் ஆபத்து நிறைந்த பகுதி. காலநிலைக்கேற்ப அமைதியாகவும் கொந்தளிப்பாகவும் இருப்பது. சமயத்தில் சட்டென புயல் சூறாவளி கடற்கோள் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு உயிரைப் போக்கிவிடக்கூடிய சாத்தியமுள்ளது. கடலில் தொழிலுக்காக இறங்கும் மீனவன் ஒருவன் இவ்வாறான அபாயங்களுக்கெல்லாம் அன்றாடம் முகம் கொடுப்பதால் வாழ்க்கையின் சவால்களையும் அவன் துணிச்சலாக எதிர்கொள்கின்றான்.


இதுபோல, பிறந்தது முதல் குறித்த ஒருவித மதச்சடங்குகள் சம்பிரதாயங்களிலே ஊறித்திளைக்கும் சமூகப் பிரிவினர் அதற்கேயுரிய பண்புகளுடன் வளர்ந்து வருவது இயல்புதானே. பொதுவாக  நமது இஸ்லாமிய மதம் ஏனைய மதங்களோடு ஒப்பிடுகையில் நமது சமூகப் பெண்களை அதிகமான கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கின்றது. இதை பெருமையாகவும் கூடக் கருதுகின்றது.


இங்கு மதக்கட்டுப்பாடுகள் இருபாலாருக்கும் பொதுவானவை எனக் கூறப்பட்டாலும் கூட ஆண்களுக்குரிய சுதந்திரமும் சலுகைகளும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான் தெளிவான உண்மை.

'ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் (தேவை)' (குரான் 2:282)

பெண்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாவும் மெல்லியர்கள். எனவே அவர்களை சமூகச் சீரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்குத்தான் மறைத்து வைத்திருக்கின்றோம் என்று எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பெண்களின் உடலை முழுமையாக மறைத்து வைத்திருப்பதுதான் நாம்; வழங்கும் ஒரே 'பாதுகாப்பு' தவிர சமூகப்பாதுகாப்பு என்பதெல்லாம் திரைமறைவிலே கூட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.



தவிர, நமது திருமண வாழ்வின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் முன்மாதிரிகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை பெண்கள் என்பவர்கள் ஒரு ஆணுக்கிருக்கும் ஆடுகள், ஒட்டகைகள், குதிரைகள் போன்ற கால்நடைகள், உணவு குடிபானங்கள் சொத்துக்கள் போல போகப் பொருள்களில் சேர்த்தியானவர்கள் என்றுதான் தெளிவாகச் சொல்கின்றது.

'தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள், ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம்  தரும் பொருட்கள்'  (குரான் 3:14)

ஒர் ஆண் ஒரேசமயத்தில் நான்கு மனைவியரை வைத்திருக்கலாம் என்பதுடன் அந்த மனைவியரின் சம்மதமின்றியே தன்னிச்சையாய் விவாகரத்தும் செய்து விடலாம். இதற்குச் சில நிபந்தனைகள் உபவிதிகள் இருந்தபோதிலும் அவையெல்லாம் ஒர் ஆணுக்கிருக்கும் இந்த எதேச்சாதிகாரத்துக்கு எந்தவிதத்திலும் ஊறுவிளைவிக்காதவை.


ஒரு கணவனின் உடல் இச்சைக்கு மறுக்கும் (எத்தகைய
காரணமிருந்தபோதும்) பெண்ணை இரவு விடியும் வரை வானவர்கள் சப்பிப்பார்கள் என்று கூறும் வேதங்களிடம் ஒரு பெண் என்ன சமூகப்பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும்?

'கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை (வானவர்களால்) சபிக்கப்பட்டவளாகிறாள்.' (புஹாரி: 3237)


நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இளைஞர்கள் பலர் தமது காதலை மறுத்த இளம் பெண்கள் மீது அசிட் வீசி ஆத்திரத்தைத் தீர்க்கும் கொடுமையை வெகு சாதாரணமாகச் செய்து வருகின்றார்கள். வற்புறுத்தித் திருமணம் செய்விக்கப்பட்ட முதியவருடன் ஒன்றாக வாழ மறுத்த இளம் பெண்ணுக்கு மூக்கையும் காதுகளையும் அறுத்து விட்டிருக்கின்றார்கள். தன்னை விட அதிகமாகக் கல்வி கற்பதற்கு ஒத்தாசை புரிந்ததற்காக மனைவியின் தாயையும் தங்கையையும் பாலியல் வல்லுறவுத்தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். இப்படி எத்தனையோ பெண்வதைகள் சிறிதும் குற்றவுணர்வின்றி அரங்கேறிக்கொண்டேயிருக்கின்றன.

(இதோ அதற்குரிய அத்தாட்சிப் படங்கள்).




இப்போது கூறுங்கள் தன்னோடு காலம் முழுவதும் தாயாய் குழந்தைகளாய் சகோதரிகளாய் மனைவியாய் ஒன்றாக வாழும் பெண்களை துச்சமாக நினைக்கும் மனோபாவம் ஒரு இஸ்லாமிய ஆண் மகனுக்கு எங்கிருந்து வருகின்றது?


தனது உடல் இச்சைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம் என்றும் 'தலாக் தலாக் தலாக்' என்று மூன்று முறை ஒரு ஆண் தன் மனைவியைப் பார்த்துக்கூறி விட்டாலே விவாகரத்து ஆகிவிடும் என்று ஆணின் மேலாதிக்கத்துக்கு இறைவனின் வேதமே பக்கபலமாக இருக்கும்போது யாருக்குத்தான் தைரியம் வராது?


இந்திய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் முகம்மது அஸ்ஸாருதீன் இதற்கு வாழும் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.


அவர் தனது முதல் மனைவி நவ்ரினை எவ்வாறு மனைவியின் விருப்பத்திற்கு மாறாக தலாக் கூறி விவாகரத்துச் செய்திருந்தார் தெரியுமா?



அதுவரை அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அஸ்ஸார் சங்கீதா பிஜ்லானி எனும் அழகிய இந்தி நடிகையிலே மையல் கொண்டு அவருடன் இரகசிய உறவை வளர்த்து ஊர்சுற்றத் தொடங்கினார். ஒருகட்டத்தில் இந்தவிடயம் இந்திய  ஊடகங்கள் மூலம் அம்பலமாகியதும் வேறுவழியின்றி நவ்ரினிடம் வந்து இரண்டாம் திருமணத்துக்கு விருப்பத்தைக் கேட்டார். நவ்ரின் அதற்கு உடன்பட மறுத்ததும் சில நாட்கள் வரை காத்திருந்து விட்டு திடீரென ஒருநாள் வந்த அஸ்ஸார் அவரைப் பார்த்து 'தலாக்..தலாக்..தலாக்' என்று மும்முறை கூறிவிட்டுச் சென்றதும் இஸ்லாமியக் காரியம் முடிந்து விட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் இந்தியத் திருமணச்சட்டத்தின் விவகாரங்கள்தான்.


'பெண்களுக்கும் விவாகரத்துரிமை என்றதும் ஆண்களைப் போல் 'தலாக்' எனும் சொல்லை மும்முறை கூறி பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட முடியாது. ஆண்கள் செய்யும் விவாகரத்திற்கும் பெண்கள் செய்யும் விவாகரத்திற்கும் இடையே நடைமுறையில் வேறுபாடு இருக்கிறது. பெண்களின் விவாகரத்திற்கு  'குலாஉ' என்று பெயர். விவாகரத்து பெற விரும்பும் பெண் தலைவரிடம் (நீதிமன்றம்) சென்று முறையிட வேண்டும். அவர் கணவனை அழைத்து, திருமணத்தின் போது கணவன் கொடுத்த மணக் கொடையை மனைவி திரும்பக் கொடுத்ததும் இருவருக்கும் இடையிலான திருமணம் முறிந்ததாக கொள்ளப்படும்.


ஆண்களின் விவாகரத்தான தலாக்கிற்கும் பெண்களின் விவாகரத்தான குலாவிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.  ஆண்களின் தலாக் மூன்று கட்டங்களாக நிகழ்வது, பெண்களின் குலா ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆண்களின் தலாக் யாரிடமும் முறையிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக மனைவியிடமே கூறிவிடலாம், பெண்களின் 'குலாஉ' பொதுவான தலைவரிடம் முறையிட்டே செய்யமுடியும். இவைகளை இஸ்லாம் கூறும் குடும்பவியல் நடைமுறைகளோடு ஒப்பு நோக்கினால் இந்த விவாகரத்து நடைமுறைகள் எந்த நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்.


ஆண்களுக்கு நான்கு முறைப்படியான மனைவிகளும் கூடவே எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி இருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு கீழ்படிய மறுக்கும் மனைவியை படுக்கையில் விலக்கிவைத்து, அடித்து கட்டுப்படுத்தும் அனுமதியும் கணவனுக்கு இருக்கிறது. இதனோடு இணைந்து தலாக் எனும் விவாகரத்து மனைவியை மிரட்டுவதற்கு வழிவகை செய்து தருகிறது. பொதுவான ஒருவரிடம் முறையிட வேண்டிய தேவையின்றி படிப்படியாக இரண்டு முறை தலாக் கூறினாலும் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். ஆக, மனைவியை தனக்கு கட்டுப்பட்டவளாக நடக்க வைப்பதற்கான உச்ச கட்ட ஆயுதமாக ஆணுக்கு தலாக் பயன்படுகிறது.

(இதை நடைமுறையில் யாரும் காணலாம்)


ஒரு மனைவி இறந்தால் அவளின் உடமைகளின் பெரும்பகுதிக்கு கணவனே வாரிசாக இருக்கும் நிலையில், திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட மணக் கொடை கணவனிடம் திரும்பிச் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு பொதுவான ஒருவரிடம் முறையிட்டுத்தான் பெண் விவாகரத்து பெற முடியும். அதேநேரம் மனைவி முறையிட்டு கணவனும் ஒப்புக் கொண்டு விட்டால் அந்தக் கணமே விவாகரத்து செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இதுவே ஆணுக்கு தவணை முறையில் செய்யப்படுவதால் அவனுக்கு இருக்கும் அவகாசம் பெண்ணுக்கு இல்லை. எனவே பெண் தனக்கு பிடிக்காத கணவனை விவாகரத்து செய்வது என்பது வேறு வழியில்லாத நிலையில் எதிர்காலம் குறித்த பயத்தையும் மீறித்தான் செய்ய முடியும். இது கணவனின் ஏற்க முடியாத செயல்களையும் கூட சகித்துப் போக வைக்கிறது. இதுவே ஆண் என்றால் தனக்கு கட்டுப்பட மறுப்பவளை தலாக் கூறி மிரட்டி அவள் பணிந்ததும் ஏற்றுக் கொள்ள முடியும்.' (நன்றி : செங்கொடி இணையத்தளம்)


இப்போது பார்த்தீர்களா இஸ்லாம் நமது பெண்களுக்கு வழங்கியுள்ள சமூகப்பாதுகாப்பை? தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு ஓர் இஸலாமிய ஆண் என்பதால் அஸ்ஸாருக்கு  பக்கபலமாக அமைந்தது எது?


'ஏன் அஸ்ஸார் போலவே நவ்ரீனும் மற்றொரு திருமணம் முடித்து வாழ வேண்டியதுதானே' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி:



இதே போல நவ்ரீனுக்கு ஒரு வேற்று ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்ய நாடியிருந்தால் இதே போல சுலபமாக தலாக் (3) மூலம் காரியம் முடித்திருக்க முடியுமா? இதற்கு உங்கள் சட்டங்கள் பாரபட்சமின்றி சமவுரிமை வழங்குமா? வழங்குவார்களா நமது மார்க்க அறிஞர்கள்?


நிலைமை இப்படி இருப்பதால்தானே நாமெல்லாம் எவ்வளவுதான் மூடி மறைக்க நினைத்தாலும் இஸ்லாமிய நாடுகளில் பெண்வதை அதிகமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செய்திகள் வந்து நமது முகத்திலேயே ஓங்கி அறைந்து கொண்டிருக்கின்றன.


இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நாமெல்லாம் இஸ்லாமியர்கள் தனியே அல்லது பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் அல்லாமல் பல்லின மக்கள் வாழும் நாடுகளில் பிறந்தது கூட அந்த அல்லாஹ்வின் அருள்தான் போலிருக்கின்றது.


- Jesslya Jessly