Saturday, December 24, 2011

Happy Christmas & Newyear!







நண்பர்கள்

அனைவருக்கும்

இனிய

கிறிஸ்துமஸ் திருநாள்

மற்றும்

இன்னும் சில தினங்களிலே

பிறக்கவுள்ள

2012

புதுவருட வாழ்த்துக்கள்!

- Jesslya Jessly-

Thursday, December 22, 2011

நரிக்குறவனும் ஒரு எழிலரசியும்!




ஒரு நிழலும் ஒரு நிஜமும்! 


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'மகாநதி' எனும் ஒரு தமிழ் திரைப்படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். 


அந்தத் திரைப்படத்தில்   மக்கள் செல்வாக்குள்ள கிராமவாசி ஒருவர் தனக்கு எதிர்பாராத விதமாக அறிமுகமாகும் மோசடிப் பேர்வழி ஒருவனை நம்பி நகரத்தில் குடியேறி  நிதிநிறுவன சதிவலையில் வீழ்ந்து சிறை செல்லும்படியாகி விடுவதும் பின்பு அதற்குக் காரணமானவர்களை வித்தியாசமான முறையில் பழிதீர்த்து பிரிந்த உறவுகளை ஒன்றுசேர்ப்பதுதான் கதை.


இந்தக் கதையை மிகவும் சிறப்பாக திரைக்கதையாக்கம் செய்து  தனக்கேயுரிய மிகையில்லா நடிப்பால் அற்புதமான காவியமாக்கியிருப்பார், கமல்ஹாசன்.


அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும்.


இரண்டு வருடப் பலத்த போராட்டத்தின் பின்பு சிறையிலிருந்து கமல் பிணையில் வெளியில் வருவார் கமல். அப்போது அவரது தாயில்லாப் பிள்ளைகள் இரண்டும் தொலைந்து போயிருப்பார்கள். தன்னுடன் சிறையில் இருந்த மற்றொரு அப்பாவிப் பிராமணரான பூர்ணம் விஸ்வநாதனைத் துணைக்கழைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தேடியலைவார் கமல்.


அப்போது தற்செயலாக வீதியில் வித்தை காட்டிக்கொண்டிருக்கும் நரிக்குறவர்களிடம் வாழ்ந்திருக்கும் தன் மகனைக் கண்டு கொள்வார்கள். அவர்களிடம் தமது கண்ணீர்க் கதையைக்கூறி மகனை மீட்டுச் செல்வதற்காக அவன் தூங்கும் வரை அவர்களது குடிசையில் காத்திருப்பார்கள், கமலும் பூர்ணமும்.


அது இரவு உணவுவேளையாதலால் அவர்கள் இருவருக்கும் கடையில் வாங்கிவந்த சாப்பாட்டை ஒரு அலுமினியத்தட்டில் போட்டுக் கொடுத்து, "நீங்கள்லாம் எங்க சாப்பாட்டைச் சாப்பிடுவீகளா எஜமான்?" என்று தயங்கியவாறு கேட்பான், நரிக்குறவர்களின் குடும்பத்தலைவன்.

ஆச்சாரம் மிக்க பூர்ணம் தயங்கி, ஏதோ கூறி சமாளித்து நழுவ, 'என்னங்க கேள்வி இது? ரெண்டு வருசமா என் மகன் சாப்பிட்ட சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேனா?' என்று கண்கள் பனிக்க நன்றிப் பெருக்குடன் அதை வாங்கிச் சாப்பிடுவார் கமல்.


கடைசியில்,  பிரிவாற்றாமை தாளாமல் அழுதுபுலம்பும் நரிக்குறவப் பெண்களிடமிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகனைத் கனத்த மனதுடன் தூக்கிச் செல்வார் கமல். இந்தஉணர்வுபூர்வமான காட்சியமைப்பும்  அதை அற்புதமாகவும் இயல்பாகவும் நடித்த கலைஞர்களின் திறமையும் சிலாகிக்கத்தக்கது.


ஆனால் இந்தப் பத்தியில் நான் கூறவந்த விடயம் இதுவல்ல. இனிமேல் சொல்வதுதான்:


அந்தக் காட்சியில், ஓரிடத்தில் பூர்ணம் விஸ்வநாதன் நரிக்குறவனுக்கு நன்றி சொல்ல நினைத்து  பரம ஏழையான அவன் கைமாறாக எதையாவது எதிர்பார்க்கின்றானா என்பதையும் அறிவதற்காக அவனிடம், 'தம்பீ! இந்தப் புள்ளய இத்தனை காலமும் வளர்க்கிறதுக்கு எவ்வளவோ கஸ்டப்பட்டிருப்பீங்க...' என்று தயங்கித் தயங்கி பேச்சை ஆரம்பிப்பார்.


அதற்கு அவன், 'யோவ்! அய்யரே, எனக்கொண்ணும் கஸ்டமெல்லாம் கெடையதுய்யா! அதெல்லாம் உன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா...!'  என்பான் பளிச்சென்று.

மேலேயுள்ளது செலுலோய்ட் கதை. இனிவருவது நிஜக்கதை:


தமிழ்நாட்டிலே கும்பகோணம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியான இளைஞன் சத்யராஜின் கதையைக் கேளுங்கள்.


சத்யராஜ் கூலி வேலைபார்த்த சூளையில் தனக்கு ஒத்தாசையாக இருந்த யுவதியான சக தொழிலாளி  ரேகாவிடம் காதல்வயப்பட்டான். இவரும் திருமணம் செய்து கொள்ளத்தீர்மானித்த வேளையில் ரேகாவின் தந்தையின் பக்கமிருந்து சாதி வேற்றுமை பலமாகக் குறுக்கிட்டது. அத்துடன் வேலை பார்த்த இடத்திலிருந்து தனது ஊரான திருத்துறைப்பூண்டிக்கே அழைத்துச் செல்லப்பட்டாள் ரேகா.


இதனால் காதலர்கள் இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.


காதல் தோல்வியால் சிறிதுகாலம் கலங்கித் திரிந்தான் சத்யராஜ். இந்த நாட்களில் அவனது பரிதாபத்தைப் பார்த்து கலங்கிய முறைப்பெண் எழிலரசி  சத்யராஜுக்கு மிகவும் ஆறுதலாக இருந்து வந்தாள்.  காலக்கிரமத்தில் தனது பழைய காதல் நிறைவேறாது என்றுணர்ந்து  எழிலரசியை, அதுவும் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, மணமுடித்தான் சத்தியராஜ்.


ஆனால் அத்துடன் முடியவில்லை சத்யராஜின் பிரச்சினை. மறுபுறம் திருத்துறைப்பூண்டியில் அவனையே நினைத்து திருமணம் புரியாமல் வாழ்ந்த காதலி ரேகாவுக்கு இந்தத் திருமண விடயம் எப்படியோ தெரிந்துவிட ஆவேசம் பொங்கியவளாய் சத்யராஜின் இடத்திற்கே வந்திறங்கி விட்டாள்.


இதனால் ஏற்கனவே தன் பெற்றோருடன் எழிலரசிக்காக சமரசம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஏழை இளைஞன் செய்வதறியாது திகைத்துப் போனான்.  வேறு ஒரு நல்ல இளைஞனை மணந்து கொள்ளுமாறு ஊரவர்கள் எடுத்துக் கூறிய புத்திமதியெல்லாம் ரேகாவின் வைராக்கியத்திற்கு முன்பு எடுபடவேயில்லை. ஆற்றாமல் தீர்மானத்தை சத்யராஜ் எழிலரசி தம்பதிகளிடமே விட்டு விட்டு விலகினர் ஊர்ப் பெரியவர்கள்.


தன்னைக் கட்டிக் கொண்டவளைக் கைவிடவும் முடியாமல் காதலுக்காக ஊர் உறவுகளையெல்லாம் உதறிவிட்டு ஓடி வந்தவளை சேர்த்துக் கொள்ளவும் முடியாமல் தடுமாறிய சத்தியராஜின் சங்கடத்தைத் தீர்த்து வைக்க அந்த கனத்த இரவிலே துணிச்சலாக முடிவெடுத்தாள் ஒருத்தி.


 பின்னிரவிலே திரும்பிப் போன ஊரவர்கள் அதிகாலையில் ஒலித்த கல்யாண நாதசுர ஓசை கேட்டு ஆச்சரியப்பட்டு "இது என்ன கூத்து தாயி?" என்று சத்தியராஜின் வீட்டை நோக்கி விரைந்து வந்தார்கள்.


அங்கே புதுமாப்பிள்ளைக் கோலத்தில் ரேகாவுக்குத் தாலி கட்டிக்கொண்டிருந்தான் சத்தியராஜ். அருகிலே ஏற்கனவே அவன் கட்டிய தாலியுடன் மணக்கோலத்தில் எழிலரசியும் அட்சதை போட்டுக் கொண்டிருந்தாள்.


ஆம்! ஒரு பெண்ணின் மனம் மற்றோர் பெண்ணுக்குத்தான் தெரியும் என்பதை நிரூபிப்பது போல இருவரும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்து ரேகாவுடனும் சத்தியராஜுடனும் பேசி சம்மதிக்க வைத்தாள் அதிகம் படிக்காதவளான எழிலரசி.


"நான் இப்ப இரண்டு மாசம் கர்ப்பமாக இருக்கிறேங்க. இந்த நேரத்துல ஏம் மாமாவ எம்புட்டு விரும்பியிருந்தா அந்தப் பொட்டப் புள்ள ஊரு ஒறவையெல்லாம் வுட்டுப்போட்டு ஓடியாந்திருக்கும்? அதை வெரட்டிவுட்டா நா பொம்பளையே இல்லங்க! அதான் மாமாக்கிட்டப் பேசிச் சம்மதிக்க வச்சுட்டேனுங்க" என்று  பளிச்சென்று வெள்ளந்தியாகக் கூறும் எழிலரசியிடம் தான் ஒரு தியாகம் செய்த உணர்வோ கர்வமோ சிறிதும் தெரியவில்லை.


அந்த செலுலோயிட் கதையின் ஏழை நரிக்குறவனையும் இந்த நிஜக்கதையின் ஏழை எழிலரசியையும் நினைத்துப் பாருங்கள்.


நாம் வாழும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும் மத்தியதரத்தினரும்தான் போலித்தனமான சிந்தனைகளாலும் சமூகக்கட்டுப்பாடுகளாலும் கட்டுண்டு கிடப்பவர்கள். தம்மைச் சுற்றிலும் அவசியமேயில்லாத வேலிகளையும் தடைகளையும் அமைத்துக் கொண்டு சிறு பிரச்சினைகளைக்கூட பெரிது பண்ணிக் கொண்டு வாழ்பவர்கள். தைரியமாக முடிவெடுக்கத் திராணியின்றி உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்பவர்கள்.


வரட்டுக் கவுரவம் போலி அந்தஸ்துகளையெல்லாம் கட்டிக்கொண்டு அலைபவர்கள். "அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?" என்பதை நினைத்து நினைத்து அன்றாடம் சாகுபவர்கள். வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொண்டு பணக்கார நோய்களைத் தேடுபவர்கள். சுருக்கமாகச் சொன்னால், முகங்களை விற்றுவிட்டு முகமூடி மாட்டியவர்கள்தான் இந்த மேல் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர்.


ஆனால் ஆணும் பெண்ணும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் சாதாரண அன்றாடங்காய்ச்சி மக்களிடம் இந்த அவசியமில்லாத போலித்தனங்கள் கிடையாது. இவர்கள் வாழ்க்கையை நின்று நேருக்குநேர் போராடி வாழ்பவர்கள் என்பதால் எதையுமே யதார்த்தமாக அணுகுபவர்கள். இவர்களிடம் மெகா சீரியல் மாமிகள் கிடையாது. M.N.நம்பியார் போல கண்களை உருட்டும் அண்ணிகள் கிடையாது.


படுக்கையறைகளிலும் பட்டுப்புடவை, உதட்டுச்சாயம் மேக்கப் சகிதம் படுத்துறங்கும் பெண்கள் கிடையாது. சமையலறையில் கூட எதுகை மோனை வசனங்கள் அடுக்குமொழிகளால் பேசிக் கொள்ளும் டாடிகள் மம்மிகள் கிடையாது.  டை கட்டிக் கொண்டு போனும் லாப்டொப்புமாக பைக்கிலும் காரிலும் அலைந்து, தூக்கம் குறைந்த இளைஞர்கள் கிடையாது.


அது மட்டுமா, இளம்வயதில் புரட்சிகள் பேசிவிட்டு, வயதானதும் வசதியான வாழ்கைக்குள் ஓடி ஓளியும் கபட மனிதர்கள் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


ஒரு குக்கிராமத்துப் பெண் எழிலரசிக்கும் செங்கல் தொழிலாளி ரேகாவுக்கும்  ஒரே கணவனுக்கு இயல்பான மனைவிகளாக ஒரேவீட்டில் வாழும் சாத்தியமான துணிச்சல் எப்படி வந்தது என்று இப்போது புரிகிறதா?


இதை நமது மத்தியதர 'உதட்டுச்சாய' மாமிகளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியுமா? விதிவிலக்காக எங்காவது நிகழ்ந்தாலும்  இந்த வாழ்வை அந்த ஏழைப் பெண்களைப்போல இயல்பாக வாழத்தான் இவர்களால் முடியுமா என்ன ?


"கஸ்டமெல்லாம் ஒன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா!" எனும் நரிக்குறவனின் பதிலில் இருக்கும் வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயமின்மையெல்லாம் எங்கிருந்து வருகிறது தெரிகிறதா?


இனியாவது சிந்தித்துப் பாருங்கள்!

-மூதூர் மொகமட் ராபி

Wednesday, December 21, 2011

குதூகலம் Vs பெரிசுகள்!



நிறைவுநாள்!
இன்று
நிறைவுநாள்!







க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2011 இன்று முற்பகல் 11.30 உடன் நிறைவடைந்திருக்கின்றது. இப்பரீட்சையை நம்பிக்கையுடன் தோற்றி முடித்திருக்கும் பெரும் பொறுப்பு ஒன்றை இறக்கி வைத்த நிம்மதியில் உற்சாகம் கொப்பளிக்க நீங்கள் பரீட்சை நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சிகளையும் சிலர் உற்சாக மிகுதியால் நண்பர்களுக்கிடையே 'நீலமடிப்பு' எனும் நிறச்சாயங்களை ஊற்றித் தெளித்து ஒருவரையொருவர் 'அழகாக்கி'க் கொண்ட நிகழ்வுகளையும் காணும்போது எவ்வளவு மகிழ்ச்சியாகவுள்ளது தெரியுமா?

இந்த அனுபவங்கள் பாடசாலைப் பருவத்திற்கேயுரியவை மட்டுமல்ல பின்பு ஒருகாலத்தில் என்றும் நீங்காத பசுமையான நினைவுகளாக மாறி ஏங்கச் செய்யக்கூடியவை. சில பாடசாலைகளில் இந்தக் கடைசி நாள் கொண்டாட்டங்களுக்குத் தடை போட்டிருப்பார்கள்.

'ஐயோ இந்த காலாவதியான தினம் ஆகிப்போன பெருசுகளக்கெல்லாம் இப்படித்தான் சின்னஞ்சிறிசுகளின் குதூகலத்துக்குத் தடைபோடுவதிலே ஒரு குரூர திருப்தி' என்று நீங்கள் நினைப்பது ஓரளுவக்கு உண்மைதான். ஆனால் உங்களது நியாயமான மகிழ்ச்சிக்கு அதரவாக உள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


ஆயினும் முந்திய வருடங்களிலே சில மாணவர்கள் வரம்பு மீறி வீதியில் செல்லும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் செய்யும் வகையில் இந்த 'நீலமடிப்பு' கொண்டாட்டத்தை நடாத்தியதால்தான் உங்கள் மீது சில கட்டுப்பாடுகள் விழுந்துள்ளன. எனவே கிடைக்கும் சுதந்திரத்தை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் உங்களுக்கு ஆதரவாக இருந்துவரும் அவர்களுக்கும் அந்தக் காலாவதியான பெரிசுகளிடம் ஒரு நியாயம் இருக்குமல்லவா?

சரி அதெல்லாம் இருக்கட்டும்.
இனி என்ன செய்வதாக உத்தேசம்? சற்று இருங்கள் அது பற்றி விரிவாகப் பேசுவோம்.
 (தொடரும்)

-Jesslya Jessly

Tuesday, December 20, 2011

யார் அந்தப் பாவி?



ஒரு மரண தண்டனை!






ஒரு நீண்ட விசாலமான பலபேர் ஒரே நேரத்தில் ஒன்றாக உணவருந்தக்கூடிய சாப்பாட்டுக் கூடம் அது.


மதிய உணவுவேளை முடிவடைந்த ஒரு பிற்பகல்வேளையில் பெண் சிற்றூழியர்களால் அந்தக் கூடத்தின் கதவுகள் யன்னல்கள் அனைத்தும் சடுதியாக மூடப்படுகின்றன. இரு ஆண் ஊழியர்கள் சாக்குப் பைகள் சகிதம் எதையோ தேடும் உக்கிரப் பார்வையுடன் உள்ளே வருகின்றார்கள்.


அவர்களுக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் சில ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றது.


ஒன்றும் பயந்து விடாதீர்கள். வெகுநாளாக அந்த உணவுக்கூடத்தினுள்ளே புகுந்து தொல்லைதரும் மூன்று பூனைகளைக் கட்டி அப்புறப்படுத்தும் காட்சியைத்தான் விபரித்துக் கொண்டிருக்கின்றேன்.


என்ன இது? இதையெல்லாமா எழுதிக் கொண்டிருப்பீர்கள்...என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது.


 விசயம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்!


உள்ளே வந்தவர்கள் தாம் தேடி வந்த அந்த மூன்று வாயில்லா ஜீவன்களையும் எப்படியாவது சாக்குப்பைகளுக்குள்ளே கட்டிவிடும் நோக்கத்தில் மூன்று பூனைகளையும் பிடிப்பதற்காக துரத்தியோடுகின்றனர். சிறிது நேரம் அங்குமிங்கும் ஓடித்திரிந்து போக்குக்காட்டிய இரண்டு பூனைகள்  அவர்களின் முயற்சிகளையெல்லாம் வீணடித்து விட்டு எப்படியோ  தப்பியோடிவிட்டன.

களைத்துப் போன ஊழியர்கள் இருவரும் மீதமிருக்கும் பூனையையாவது எப்படியும் பிடித்து விடும் முனைப்பிலே தவித்தார்கள்.


அவர்களை இதுவரையில் பின்னாலிருந்து வழிப்படுத்திக் கொண்டிருந்த பெண்மணியின் முகத்திலே கோபம் கொப்பளித்தது.


வெண்ணிற அங்கியை அணிந்திருந்தவரான அந்தப் பெண்மணியின் வாயிலிருந்து சற்றும் எதிர்பாராத விதமாக வார்த்தைகள் உதிர்ந்தன.

"அந்தப் பூனையை அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்ல! தப்ப விடாதீங்க!"

மறுநிமிடம் அந்த வாயில்லா ஜீவன் கதறக் கதற சிறிதும் கருணையின்றி தடிகளால் இரத்தம் தெறிக்கத்  தெறிக்க அடித்து நையப்புடைக்கப்பட்டது.

அது எந்தளவுக்கென்றால் அந்தப் பரிதாபத்தைப் பார்க்கச் சகிக்காமல், 'தயவு செய்து கதவைத் திறந்து விடுங்கள்' என்று  கெஞ்சிய சில மாணவிகளையும் வெளியே போக விடாமல் வைத்துக் கொண்டு அவர்களின் முன்னிலையிலேயே அந்த சிறு அப்பாவிப் பூனை  துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டது.

ஒரு பிரபல பெண்கள் பாடசாலையின் விடுதியில் நடந்ததுதான் இந்தச் சம்பவம்.


இதிலே என்ன விசயம் இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக இதனைக் கூறவேண்டியுள்ளது.


ஆடம்பரச் சுகபோக வாழ்க்கைக்காக பொதுச்சொத்துகளில் மோசடி செய்யும் பெரும் பதவியிலுள்ளள சுயநல மனிதர்களைக் கூட கண்டும் காணாமல் சமாளித்து விட்டு விடுகின்ற இந்தக் காலத்தில், பாவம் தன் வயிற்றுப்பசிக்காக உணவைத் திருடிய அந்த வாயில்லாச் சிறு பிராணியை கொடூரமாக அடித்துக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்த பெண்மணி யார் தெரியுமா?


ஓர் ஆசிரியையான அவர் வேறுயாருமல்ல!


தன்னைக் கொல்ல வந்தவனையே மன்னித்து அவனுக்காகப் பிரார்த்தனை புரிந்தவரும் உலகுக்கு அன்பையும் கருணையையும் போதித்தவருமாகிய இயேசுக் கிறிஸ்து வின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்... ஒரு  கன்னியாஸ்திரி!

-Jesslya Jessly

Friday, December 16, 2011

புதிய தொடர்


 மூதூர் : அன்றும் இன்றும்!





மூதூர், இலங்கை வரலாற்றில் பல விடயங்களுக்காக எப்போதும் பிரபல்யமாகவே இருந்து வந்துள்ளது. போத்துக்கேயரின் ஆட்சியினைத் தொடர்ந்து ஒல்லாந்தர்கள் இலங்கைத் தீவின் கரையோரங்களைக் கைப்பற்றியிருந்த காலத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆன் (Ann) எனும்  கப்பலின் மாலுமி ரொபர்ட் நொக்சும் (Robert Knox ) அவனது சகாக்களும் அப்போது கொட்டியாரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மூதூரில் வந்திறங்கினார்கள். அன்றைய கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னனால் அவர்கள் அனைவரும்   சிறைப்பிடிக்கப்பட்டதும் அங்கு 19 ஆண்டுகள் திறந்தவெளிக் கைதிகளாய் அலைந்து திரிந்தபின் அந்த ஆங்கிலேய மாலுமியின் மகன் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தனது அனுபவங்களை ஓர் நூலாக வெளியிட்டதும் தனிக்கதை.


பின்னர் ஆங்கிலேயர் இலங்கைத் தீவைக் கைப்பற்றியவுடன் தமது வருகைக்கு ஒரு வகையில் முன்னோடியாகவிருந்த அந்த மாலுமி Robert Knox  நினைவாக அவர் கைதுசெய்யப்பட்ட இடத்திலிருந்த புளியமரத்தை ஓர் வரலாற்று நினைவுச்சின்னமாய் ஆக்கினார்கள்.
'Whiteman's Tree' என அழைக்கப்பட்ட அந்தப் பழம்பெரும் புளிய விருட்சம் பின்னர் 1964ல் வீசிய புயலில் வீழ்ந்த போதிலும் மீண்டும் அதே இடத்தில் புதிய புளியம் கன்று நடப்பட்டு வளர்த்து அது இன்றும் நினைவுச்சின்னமாய் காட்சி தந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி  அந்த மரமிருக்கும் இடத்திலிருந்து மூதூர் நகரின் மையப்பகுதியினுடே செல்லும் முக்கியமான வீதியொன்று Knox-Road என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் பிறகு நடந்தவற்றையெல்லாம் ஒன்றும் விடாமல் கூறப்போனால்
இப்போதைக்குத் திரும்பி வர முடியாது.

அதெல்லாம் பழைய கதை!
இன்றைய புதிய கதை எது தெரியுமா? மூதூரை அதன் ஆரம்ப காலம் தொட்டே கிழக்கு மாகாணத்தின் இரு பெரும் நகரங்களான திருகோணமலை-மட்டக்களப்பு ஆகியவற்றை இதுவரைகாலமும் நிலத்தொடர்பின்றி பிரித்து வைத்திருந்த மகாவலி  மங்கையின் கிளையாறுகளுக்கெல்லாம்  பாலங்களிட்டு அவற்றை ஒன்றிணைத்திருப்பதுதான்.
ஆம் நண்பர்களே! இன்று A-15 வீதியில் இரவு பகலாக் இடைவிடாது நிகழும் போக்குவரத்தைப் பார்க்கும் போது சிலசமயம் கனவு போலத் தோன்றுகின்றது. இத்தனை காலமும் கடல்வழிப் போக்குவரத்து நமது சமகால மற்றும் பழைய தலைமுறையினருக்கும் எத்தனை விரயங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. லோஞ்சுக்கும் கப்பலுக்கும் காத்திருந்தே வயதுகளைத் தொலைத்தவர்கள் நாம்.


ஒரு காலத்தில் மூதூருக்குச் செல்வதும் மூதூரை விட்டுச் செல்வதும் ஏதோ கடல்கடந்து வேறு நாட்டுக்குள் புகும் யாத்திரை போலத்தான் இருந்தது. எத்தனை காத்திருப்பு கெடுபிடிகள் பீதிகள். இன்று நினைத்த நேரம் அங்கு சென்று வரலாம் எனும்போதுதான் இத்தனைகாலமும் அனுபவித்த அந்த மெகா விரயத்தின் கனம் சரிவர உணரப்படுகின்றது.
முதலில் கிண்ணியாவுக்கான பாலம்தான் ஆரம்பிக்கப்பட்டது. முன்பெல்லாம் கிண்ணியாவுக்கு வாக்குச் சேகரிக்கத் துறைகடந்து வரும் அத்தனை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்களும் தவறாமல் சொல்லி விட்டு மறந்து போகும் வாக்குறுதி: 'வெகுவிரைவில் பாலம் கட்டித் தருவோம்!' என்பதுதான்.
உங்கள் பாலம் கூட வேண்டாம் (அப்போது) இருந்த இரண்டு துருப்பிடித்த  பாதைப்படகுகளையாவது தொடர்ந்து இயங்கும்படி பார்த்தால் போதும் என்ற அங்கலாய்ப்பில் இருந்தார்கள் மக்கள்.  பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள் சந்திரிகா அம்மையாரின் அரசில் நெடுஞ்சாலைகள்  அமைச்சராக இருந்தபோது ஒரே தடவையில் பல வாகனங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அதிக குதிரைவலுக்கொண்ட படகுப்பாதையை கிண்ணியாத் துறைக்கு வழங்கியிருந்தார். அதனைச் சேவைக்குத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் விரைவில் பாலம் அமைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
பின்னர் ராஜபக்ச அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அந்த வாக்குறுதியை நினைவில் வைத்துச் செயற்பட்டார். பாலத்திற்கான முயற்சிகளில்  ஏனைய பலரோடு சேர்ந்து அவரும் இறங்கியிருந்தார். அப்பொழுது கூட பாலம் நிர்மாணிக்கப்படும் என்று யாரும் பொதுவாக நம்பவில்லை. 'வழமை போலத்தான் இதுவும்' என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டார்கள். கிண்ணியாவாசிகள். ஆனால் பாலத்தின் நிர்மாண  ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கியபோதுதான் 'ஓகோ ஏதோ செய்யத்தான் போகிறார்கள் போல' என்ற சிறு நம்பிக்கைக் கீற்று அவர்கள் மனங்களில் தோன்றியது.
உண்மையில் கிண்ணியாப் பாலத்துக்கு அந்தப் பெயர் பொருத்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (அட! கிண்ணியாவின் தவப்புதல்வர்களே அவசரப்படாதீர்கள்! விசயத்துக்கு வருகின்றேன்.) அதாவது 'மூதூருக்கான முன்னோடிப் பாலம்' என்று வைத்திருந்தால் கூட மிகச்சரியாகவே இருந்திருக்கும். ஏனெனில் கிண்ணியா மக்களுக்கு துறைகடத்தல் என்பது மூதூர் மக்களின் கடல் கடத்தலுடன் ஒப்பிடும்போது நடிகர் சிவாஜிராவ் (ரஜினிகாந்த்) பாணியில் சொன்னால் ஜுஜுபி!
ஆம்! மிக அவசரமான அத்தியாவசியத் தேவைகளுக்காக விரையும் வெகு சில பயணிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பொதுவாக கிண்ணியா மக்களுக்கு திருகோணமலைக்குச் செல்லும் பயணம் அப்படி ஒன்றும் பெரும் தாமதத்தையும் சிரமத்தையும் எற்படுத்தியதாகக் கூற முடியாது. பயணம் ஆரம்பிக்கும் போதும் பயணத்தை முடித்து விட்டுத்திரும்பி வரும்போதும் ஒரு செக்போஸ்ட் போலத்தான் அந்தத் துறையடி அவர்களுக்கு.

படகுப் பாதைப் பயணம், துறையடியில் இறங்கி நடந்து ஊர்வாசிகளுடன் ஒன்றாகச் சில நிமிடங்கள் காற்றோட்டமாய் அன்றைய ஊர்ப்புதினங்களை விசாரித்துக் கொண்டு வரும் சிறு ஆசுவாசமாகவும் இருந்து வந்திருக்கிறது. தவிர தம்பலகாமப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும்  தரைமார்க்கப் போக்குவரத்து வழி இருந்ததனாலும் கிண்ணியாத்துறை என்பது பழகிப்போன சிறு தொந்தரவுகளில் ஒன்றாகவே இருந்தது.
ஆனால் மூதூர்வாசிகளின் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது.

நாவலடி, கங்கை,  உப்பாறு, கிண்ணியா ஊடான தரைவழிப்பாதை முற்றாக கைவிடப்பட்டிருந்த நிலையில் அலிஓலுவ, கல்லாறு மற்றும் அல்லை     ஊடான தரைமார்க்கப்பாதை மிக அதிக நேரத்தை விழுங்கும் சுற்றுப்பயணமாக இருந்தது. அதுமட்டுமன்றி அந்த வீதியின் தரக்கேடு மற்றும் மாரிகால வெள்ளத்தினால் தடைப்படும் நிலையிலும் கடல் வழிப்பயணம் மட்டுமே ஒரே தெரிவாக இருந்து வந்துள்ளது.
கடல்வழிப் பயணம் என்றால்,  ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தை எடுக்கும். அதுவும் மிகவும் தரம் தாழ்ந்த வசதிகள் கொண்ட லோஞ்ச்கள் எனப்படும் சற்றுப் பெரிய படகுகளில்தான் ஆபத்தான கடல்பகுதியை தாண்டியாக வேண்டியிருந்தது. இருக்கும் அந்த லோஞ்ச் சேவையைக்கூட அடிக்கடி குழப்புவதற்கென்றே காலநிலை, கடல் கொந்தளிப்பு, இயந்திரக் கோளாறுகள் என்றே  ஒரு காரணங்களின் பட்டியல் காத்துக் கிடக்கும். இதனால் பயணம் என்பது மூதூர் பயணிகள் அனைவருக்கும் ஓர் அன்றாட சாகசமாகவே இருந்து வந்திருக்கின்றது.
இந்நிலையில்தான் 1993 ஜனவரி 25ம் நாளில் கொட்டியாரக் குடாக்கடலில் நிகழ்ந்தது ஒரு கோர விபத்து. எறத்தாழ 140 பயணிகளுடன் சென்ற லோஞ்ச் படகு ஒன்று மூழ்கிய அந்த அனர்த்தத்தை மூதூர் மக்களால் மறக்கத்தான் முடியுமா என்ன? நூறு எனும் எண்ணிக்கையைத் தாண்டிய அந்த மனிதப் பலியின் பின்னர்தான் அன்றைய ஆட்சியாளர்களுக்கு லேசாய் கண்திறந்தது. இதனால் அதன் பின்னர் இ.போ.ச வினால் மேலும் சற்றுப் பெரிய படகுகள் சேவைக்கிடப்பட்டன. 
இப்படகுகள் சிறிது சௌகரியமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தன. ஆயினும்   இப்படகுகளால் தினமொன்றுக்கு  இரண்டு சேவைகள் மட்டுமே நடாத்தப்பட்டன. அதுவும் ஒரு தடவைக்குரிய பயணிகளின் எண்ணிக்கை நூறுபேர் மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டு அது மிகவும் இறுக்கமாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.  அந்த நாட்களிலே நூறுபேருக்குள் அடங்குவதற்காக நிகழ்ந்த முண்டியடிப்புகளை விபரிக்க வாரத்தைகள் போதாது.
அதுமட்டுமல்ல மதியம் 2.30 மணி என்பது திருகோணமலையில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஊர் திரும்புவோருக்கெல்லாம்   மூதூருக்குரிய கடல்கதவுகள் அடைக்கப்படும் நேரமாய் ஆகிப் போனது. இந்தச் சேவைகளும் படகுகளின்  பழுதுகள் திருத்தம் என அவ்வப்போது வாரக்கணக்கில் தடைப்படும் ஒன்றாகவே இருந்து வந்தது.

இங்கு ஒரு விடயத்தைக் கவனித்தாக வேண்டும். படகு விபத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான கடல்பயணம் வேண்டும் என்ற மூதூர்வாசிகளின் போராட்டம் சிறந்த இரு படகுகளைப் பெற்றுத்தந்த அதேவேளை முன்பு லோஞ்ச் காலத்தில் இருந்து வந்த 'ஒருநாளில் பலசேவைகள்' என்ற வசதி பறிபோனது.
இதை வேறுவிதமாகக் கூறினால், மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவனிடம், அவன் சாப்பாட்டின் தரம் சரியில்லை என்று சொல்லிவிட்டான் என்பதற்காக தினமும் பிரியாணிப் பொட்டலமொன்றைக் கொடுத்து, 'இந்தா பிடி! ஒருவேளை மட்டும் சாப்பிட்டுக் கொள் போதும்!' என்று கூறியதைப் போலானது நிலைமை.


அதன் பின்னர் நாட்டில் அடுத்தடுத்து தேர்தல்கள் பல வந்தன. விளைவாக மூதூர் பயணிகள் மீது அரசியல்வாதிகளுக்கு திடீர் கரிசனைகள் முளைக்கலாயின. அதன் பயனாக துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. சேருவில-II என்ற அந்தக் கப்பல் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது. பயண நேரமும் பாதியாகக் குறைந்தது.
ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையான பயணிகள்,மோட்டார் சைக்கிள்கள் என்ற கட்டுப்பாடுகள், போலீசாரின் பரிசோதனைக் கெடுபிடிகள் காரணமாக பாரமான மோட்டார் சைக்கிளைக் கூட ஏறத்தாழ 200 மீற்றர் நீளமான இறங்குதுறைக் கடல்பாலம் வழியாகத் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை, சமூகத்தில் எத்தனை கௌரவமானவராக இருந்த போதிலும் கப்பல் பயணி என்று வந்து விட்டால் தள்ளுமுள்ளுகளில் மாட்டி கௌரவம் குறைய வேண்டியதும்  காயமடைய வேண்டியதுமான அவலம், என்றெல்லாம் மூதூர் மக்களுக்குரிய இம்சைகள் அதிகரித்தன.

இலங்கைத்தீவில் இனமுறுகல் நிலைமைகள் ஆரம்பித்து வன்முறைப் போராட்டமாக மாறி உச்சகட்டத்தை அடைந்த காலத்திலே அடிக்கடி பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுள் மூதூர் முக்கியமான இடத்தை வகித்துள்ளது. இயற்கையிலேயே புவியியல் காரணிகளால் போக்குவரத்து தொடர்புகளில் கணிசமானளவு பின்தங்கியிருந்த இப்பிரதேசம் இனமுறுகல் வன்முறைகளினால் மேலும் பின்தங்கிப்போயிருந்தது. மிகச்சரியாகக் கூறப்போனால், மூதூர் பட்டினத்திற்குள் மக்கள் நடமாடக்கூடிய பரப்பளவு சில சதுர கிலோமீற்றர்களுக்குள்யே அடங்கிப்போயிருந்தது.
ஒரு காலகட்டத்தில் இவ்வெல்லைக்குள்ளிருந்து பயணம்போகும் ஒருவர் பாதுகாப்பாகத் திரும்பி வந்தாலே பெரும்பேறு என அவரது குடும்பத்தினர் கருதுமளவுக்கு நிலைமைகள் இருந்தன. தவிர பயணப்பாதைகளின் பராமரிப்பு மற்றும் திருத்தவேலைகள் நீண்ட காலமாக சரிவர நிகழாததால் தரைவழிப் போக்குவரத்தின் தரமோ படுமோசமாக இருந்து வந்தது.


ஆனால் இவையெல்லாம்  முடிவுக்கு வரக்கூடிய நிலைமை தோன்றியது என்னவோ ஒரு சடுதியான அரசியல் நிகழ்வு ஒன்றினால்தான். ஆம், 2001ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது பல தடவைகள் இரு தரப்பினராலும் பலமுறை மீறப்பட்ட பின்னர் உச்சகட்டமாக, விடுதலைப் புலிகள் மூதூரில் மாவிலாறு  அணையின் துருசைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். சர்ச்சைக்குரிய பல நியாயங்களையும் நிபந்தனைகளையும் அரசுக்கு முன்வைத்து வயல்நிலங்களுக்குரிய நீரைப் பாயவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். பலநாள் இழுபறியின் பின்னர் அடுத்த கட்ட நகர்வாக மூதூர் நகரைக் கைப்பற்றினார்கள்.



இதுவே அவர்கள் செய்த தற்கொலைக்கு ஒப்பான மிகப்பெரும் தவறாகவும் அமைந்துவிட்டது.  சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த அரசு மக்களை மீட்கவென நடவடிக்கையில் இறங்கியது. அதன்பின்னர்  வெள்ளி முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்ததெல்லாம் யாவரும் அறிந்த வரலாறு.
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டதும் A-15வீதியினூடாக திருகோணமலைக்குச் செல்லும் கனவு நனவாகுமா என்ற நப்பாசை மூதூர் மக்களுக்குத் தோன்றியதில் வியப்பில்லைதானே. முன்பு ஒருகாலத்தில் பாதை இருந்த இடமே  தெரியாதளவுக்கு உருக்குலைந்து போயிருந்த வழியால் பலர் போய்வர ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல அதிகமான மக்கள் துறையினூடாக தோணிகள் படகுகள் மூலம் பயணத்தில் ஈடுபடலானார்கள்.
கிழக்கின் நகரங்களை கரையோரத்தினூடாக இணைக்கும் அரசின் முயற்சி ஆரம்பித்தவுடன் கிண்ணியாப் பாலம் நிர்மாண வேலைகள் ஆரம்பித்து முடிவடைந்தது. அதன்பின் A-15 வீதியிலுள்ள ஏனைய பாலங்களான உப்பாறு, கங்கை, இறால்குழி...என்று தொடர்ந்து அன்று மணித்தியாலங்களை விழுங்கிய மூதூர்- திருகோணமலை பயணம் இன்று சில நிமிடங்களில் என்றாகிப் போயிருக்கின்றது. 

இப்பொழுது கூறுங்கள். கிண்ணியாப்பாலம் என்பது மூதூருக்கான முன்னோடிப் பாலம்தானே?

(Contd...)

-'Mutur' Mohammed Rafi

Tuesday, December 13, 2011

சுதந்திரம் 27 & டைட்டானிக் 1




வயது வித்தியாசம் 100 ஆண்டுகள்!


2011












1911










மேலேயுள்ள இரு புகைப்படங்களையும் பாருங்கள்.


இவை இரண்டிற்குமிடையில் ஒரு ஒற்றுமையும் 100 வித்தியாசமும் (வித்தியாசங்களல்ல!) உண்டு. ஒற்றுமை என்ன தெரியுமா? இவை இரண்டும் எடுக்கப்பட்டது ஒரே இடத்தில்தான்.


ஆம்!  திருகோணமலை நகரின்  நகரசபை (Urban Council), வாடிவீடு (Rest Hose), புனித மரியாள் கல்லூரி (St. Mary's College) ஆகிய இருக்கும் முச்சந்தியில் வைத்து வாடிவீடு புனித மரியாள் கல்லூரி ஆகியவை தெரியும் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் ஆகும்.  இவை இரண்டிற்கும் இடையேயான காலவித்தியாசம் ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே.


வெறும் 100 வருடங்கள்தான்!


இடது புறமாக இருக்கும் படம் 1911ம் ஆண்டில் அதாவது நமது இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் வழங்கப்படுவதற்குச் சரியாக 27 வருடங்களுக்கு முன்பு இன்னும் சொல்லப்போனால் பிரபல டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் திருகோணமலையில் மிகவும் செல்வாக்குடன் இருந்தவராகக் கூறப்படும் அப்துல் ரசூல் எனும் பிரமுகரால் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் புகைப்படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள்.

வலது புறமிருக்கும் புகைப்படம் இந்த வருடம் அதாவது 2011ம் ஆண்டு,  1911 புகைப்படம் எந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதோ கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்தது இன்னும் சரிவரப் பிரபலமாகாதவரும் ஒருவேளை தப்பித்தவறிப் பிரபலமாகி விட்டால் அதனால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுமே என்று கவலைப்படும் ஒருவருமாகும்.


அவர் வேறு யாருமல்ல அடியேன்தான்!

 -மூதூர் மொகமட் ராபி

Monday, December 12, 2011

தெரிந்திருக்க வேண்டாமா?




ஒரு பவுர்ணமிச் சறுக்கல்!









"நேற்றிரவு இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணத்தை இலங்கையிலுள்ள மக்களில் பலர் கண்டு களித்தனர்..." என்றுதான் நமது நாட்டின் சக்தி வாய்ந்த தொலைக்காட்சி சேவையின் தமிழ் செய்தி அறிக்கையில் கிரகணம் பற்றிய செய்தியை அறிவிப்பாளர் கூற ஆரம்பித்தார். இதிலே என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்குத்தான் இதைச் சொல்லப் போகின்றேன்.

2011.12.10ம் திகதி மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த சந்திர கிரகணம் பற்றிய செய்தியினை மறுநாள் இரவுச் செய்திக்காக வாசித்த கடமை நேரச் செய்தி அறிவிப்பாளர், " நேற்று ஓர் போயா (பவுர்ணமி அல்லது முழுமதி) தினமாக இருந்தமையினாலும் சந்திர கிரகணத்தை அதிகமானோர் கண்டுகளிக்கக் கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றும் கூறினாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டவுடன் தூக்கிவாரிப்போட்டது. "எந்தக் காலத்திடா அம்மன் பேசியிருக்கிறாள்?" என்று கலைஞரின் வசனங்களை நக்கல் தொனியில் பேசுவாரே நமது நடிகர்திலகம், ஞாபகமிருக்கிறதா? அந்தப்பாணியில், "எந்தக்காலத்திலடா சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் வராமல் வேறுதினத்தில் வந்திருக்கிறது?"


என்று கேட்க வேண்டும் போலிருந்தது.


 சரி பாவம், அந்த அறிவிப்பாளர் விடுங்கள். அவர் என்ன செய்வார் யாரோ எழுதிக் கொடுத்ததை காமிரா லென்ஸைப்பாரத்து வாசிப்பவரைக் குறைசொல்லிப் பயனில்லை.   ஆனால் ஒரு பொறுப்புள்ள தொலைக்காட்சி சேவையின் செய்திகள் தயாரிப்பாளர்களுக்கு ஓர் எட்டாம் தரத்தில் படிக்கும் மாணவிக்குத் தெரிந்த விஞ்ஞானப் பொது விடயங்கள் தெரிந்திருக்க வேண்டாமா?


நீரில் வாழும் பாலூட்டி வகை விலங்கான திமிங்கிலத்தை ஒரு மீன் என்றும் தனது நீ....ண்ட கைவிரல்களுக்கிடையிலே அமைந்திருக்கும் மென்சவ்வின் உதவியுடன் பறந்து திரியும் முலையூட்டியான வவ்வாலை ஒரு பறவை என்றும் யாராவது கூறினால் இந்தக்காலத்தில்  இரண்டாம் தரத்தில் கற்கும் குழந்தை கூட கேலிசெய்யும்.

இதைச் சொல்லும்போது ஒரு ஆசிரியரின் ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. அவருக்கு தமிழ் கொஞ்சம் தகராறு. ஒருநாள் அவர் கரும்பலகையில் 'அ-னி-ல்' என்று எழுதினாராம். ஒரு மாணவன் எழுந்து நின்று, 'அணிலுக்கு மூன்று சுழியுள்ள 'ணி' வந்து அ-ணி-ல் என்று அல்லவா வரும். நீங்கள் என்ன சேர் இரண்டு சுழியுள்ள 'னி' யைப் போட்டுள்ளீர்களே' என்று கேட்டானாம். "அது வந்து இதுவும் அணில்தான்...ஆனால் பாவம், கொஞ்சம் சின்ன அணில், அவ்வளவுதான்!" என்றாராம்.

-மூதூர் மொகமட் ராபி

பரீட்சை!





இன்று (2011.12.12)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் -G.C.E.(O/L)- பரீட்சைக்குத் தோற்றும்  சகல பாடசாலை மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தப் பரீட்சையை முதற்தடவையாகத் தோற்றும் மாணவர்களுக்கு ஒரு வார்த்தை உங்கள் பாடசாலை வாழ்விலே ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பிறகு நீங்கள் சந்திக்கும் முதலாவது அரசாங்கப் பரீட்சை இது.

  உங்கள்  சொந்த இடங்களிலும் பழகிய பாடசாலையிலுமே நடைபெறுவதால் எதுவித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் எழுதுங்கள். இதுவரை காலமும் பாடசாலைகளில் நீங்கள் சந்தித்த பரீட்சைகளில் போலன்றி சில வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள்.

1. அடையாள அட்டை பரிசீலிப்பு
2. அனுமதி அட்டைகளில் கையெழுத்திடுதல்


ஆகிய விடயங்களை முன்கூட்டியே ஆசிரியர்கள் அல்லது பரீட்சை அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. 


முதல்நாள் பரீட்சையின் போது தவிர பின்பு இவையெல்லாம் பழகிவிடும். இம்முறை பரீட்சைத் திணைக்களம் மிகச்சரியாக முதல்நாளில் கடினமான பாடங்கள் இல்லாமல் நன்கு பரிச்சயமான சமயப்பாடங்களை வைத்திருப்பது  ஒரு சிறந்த முடிவு.


இந்தப் பரீட்சை தொடர்பாக ஆசிரியர்கள் வழிகாட்டியிருப்பார்கள். அவற்றோடு இவற்றையும் தெரிந்த கொள்ளுங்கள்- தேவையெனில்.


• வீட்டிலிருந்து அல்லது தங்குமிடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே அடையாள அட்டை அனுமதி அட்டை உங்கள் வசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


• குறைந்தது தேர்வு ஆரம்பிக்கும் நேரத்திற்கு அரைமணி முன்கூட்டியே பரீட்சை மண்டபத்துக்குச் சென்று விடுங்கள்.


• பரீட்சைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் நீங்களே உங்கள் வசம் வைத்திருங்கள்.


• வினாத்தாள்களை நன்கு வாசித்து அறிவுறுத்தல்களை தெளிவாக விளங்கிக் கொண்ட பின்னரே விடைகளை எழுதத் தயாராகுங்கள்.


• பொருத்தமில்லாத மேசைகள் நாற்காலிகள் குறைவான ஒளிச்செறிவு மழை காரணமாக வரும் தூவானச் சாரல் ஆகிய இடையூறுகள் இருந்தால் உங்கள் மேற்பார்வையாளர்களிடம் தயக்கமின்றித் தெரிவித்து மாற்று ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதிலும் கணிதம் போன்ற பாடங்களுக்கு நேரம் மிகவும் முதன்மையானது என்பதால் இவ்விடயத்தில் அவதானமாக இருங்கள்.


இனியென்ன இளம் கன்றுகளே பயமறியாமல் ஜமாயுங்கள்!

-Jesslya Jessly

Sunday, December 11, 2011

ஒரு கடிதம் இரு நண்பர்கள்!









அன்புள்ள வாசகர்களே!


எனது நண்பர்களிலே ஒருவர் லண்டனிலே இருக்கிறார். முன்பு இங்கே இலங்கையில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.   மேல் படிப்புப் படித்துக் கொண்டே உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றிருக்கிறார்.


அவர் மிகவும் நேர்மையானவர். அத்துடன்  தான் நம்பும் இறைவனுக்கு உண்மையாகவே பயந்து வாழ்பவர்.

இந்த இரண்டு குணங்களும் போதாதா அவரால் பிழைக்க முடியாதிருப்பதற்கு?


ஆம், அவருக்கு லண்டன் போகும் போது ஓர் ஆசை இருந்தது. அது ஒன்றும் பெரிய ஆசையெல்லாம் கிடையாது. அதாவது  இலங்கையில் தனது ஊரிலே முழுமையாகக் கட்டி முடிக்கப்படாதுள்ள  இறையில்லம் ஒன்றுக்கு 10 பக்கட் சீமந்து வாங்கி அன்பளிப்புச் செய்ய வேண்டுமென்பததான் அந்த ஆசை. ஆனால் லண்டன் போய் பல வருடங்களாகியும் கூட அவரால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போனது ஏன் தெரியுமா?


வேறொன்றுமில்லை மேலே கூறிய இரு இயல்புகள்தான்.


நேர்மையாய் சம்பாதித்த பணத்தை மட்டும் வைத்து வாழ்வதற்கே போதாதிருக்கும் போது எங்கனம் தான தருமம் செய்வது? நேர்மைக்கும் சுபீட்சத்துக்கும் உள்ள தொடர்பை நீங்கள் இன்னம் விளக்கமாக அறிய வேண்டுமா....?

அப்படியானால்   மேலே நான் குறிப்பிட்ட லண்டன் நண்பருக்கு இலங்கையில் அவரது ஊரிலிருந்து  நெருங்கிய நண்பர் ஒருவர் வரைந்திருக்கும் கடிதமொன்றைப் பாருங்கள்!


இதோ அந்தக் கடிதம்:


மச்சான் சுலைமான்,

அஸ்ஸலாமு அலைக்கும்டா!


எப்படிச் சுகமா இருக்கியாடா? இந்தக்கடிதத்தை எழுதிறதை நினைச்சால் கவலையாகவும் சங்கடமாகவும் இருக்குடா. ஆனாலும் வேறு வழியில்லாததால்தான் அனுப்புறன். உண்மையான விசயத்தைச் சொல்றதுக்கு சொந்த மொழி அதுவும் பேச்சு மொழிநடைதான் நல்லது என்டதால அப்படியே எழுதுறன். சரிதானே?


மச்சான், இந்த உலகத்தில நேர்மையா வாழ்றதுக்கு வழியே இல்லடா. அப்படி நேர்மையா வாழ்ந்தா இந்த உலகமே நம்மள பைத்தியக்காரன் அல்லது பொழைக்கத் தெரியாதவன் என்றுதான் கணக்கெடுக்குதுடா. சின்னவியாபாரம் முதல் கொண்டு பெரிய அரசாங்கத் தொழில் வரைக்கும் பொய்யும் புரட்டும் லஞ்சமும் மோசடி களவும்தான்டா நடக்குது. இதில எதையாவது ஒரு பாவத்தையாவது செய்யாதவனால இன்றைய வாழ்க்கைக்குரிய மாதிரி சம்பாதிக்க இயலாது. அப்படிச் சம்பாதிக்க முடியல்லண்டா அப்படியானவன அவனைப்பெத்த தாய் முதல் கொண்டு அவனுக்குப் பிறந்த பிள்ளைகளும் கூட மதிக்காத நிலைமைதான்டா இப்ப இருக்கு



சிறு வட்டியைக்கூட பெறாதே என்று சொல்லியிருக்கிற சமூகத்திலதாண்டா கொள்ளை லாபம் வச்சு விக்கிறானுகள். போலியாக பொருளைத் தயாரிச்சு வித்து ஏமாத்துகிறான்கள். இலட்சக்கணக்கில லஞ்சம் வாங்கிட்டு கடமையைச் செய்யாம விடுறான்கள். பாடசாலையில கடமையைச் செய்யாம டியுசனுக்கு வரவைக்கிறான்கள்.



தலையில் தொப்பியும் தொழுகையுமாக மீற்றர்ல மோசடி செய்து கள்ள கரண்ட் எடுக்கிறான்கள். இதையெல்லாம் ஆண்டவனுக்குப் பயப்படாமல் செய்துவிட்டு ஹஜ்ஜுக்கும் போறானுகள். பள்ளிவாசல் தலைவராகிறான்கள். அரசியல்வாதிகளோடு சேர்ந்து இரவுப் பார்ட்டி போட்டுக் குடிச்சிட்டு சுபஹுக்கும் வாறான்கள். வாப்பாமார் சுனாமி நிவாரணத்தில சுருட்டிச் சேர்த்த ஹறாமான பணத்தை முதலாக வைத்து மகன்மாரெல்லாம் ஹாட்வெயார் துணிக்கடை போட்டு  ஹலாலா வாழறானுகள் மச்சான்.



இதையெல்லாம் ஏன் சொல்றேன் தெரியுமாடா. உன்னையும் என்னையும் போல இரண்டொரு மடையன்கள் லண்டன்லயும் நம்மட ஊர்களிலயும்  இருந்துக்கிட்டு நேர்மையாச் சம்பாதிச்சு முன்னுக்கு வரலாம் என்டு நம்பிக்கொண்டு வாழுறோமே...அந்த மடத்தனத்தை சொல்றதுக்குத்தான் இதை எழுதிறன்டா சுலைமான். மனிசன மனிசன் அடிச்சுத்திங்கிற நெலமை வந்திட்டுதுடா. இனியும் நம்ம நேர்மை அது இது என்டு சொல்லிக்கிட்டிருந்தா சரி வராது போல இருக்குதுடா.



நான் இஞ்ச இந்த நிலைமையை அனுபவிச்சிட்டிருக்கிறேன். இந்த பொழைக்கத் தெரியாத வாழ்க்கை வாழ்ந்ததெல்லாம் போதும்டா என்று தோணுதுடா.



உனக்கு நினைவிருக்காடா என்ட ஒரு மாமி தலையில ஒரு ஓப்பரேசனுக்கு காசு இல்லாம இருநதா என்டு சொன்னேனே. அந்த மாமியிட புருசன்ட தொழில் என்ன தெரியுமா? ப்ரைஸ் கொன்ட்ரோல் இன்ஸ்பெக்டர்! லஞ்சம் புழுத்து வழியுற வேலை. ஆனா எங்க மாமா அல்லாஹ்வுக்கு உண்மையாகவே பயப்படுறவரு. அவரோடு ஒத்த இன்ஸ்பெக்டர்மார்களிலே ஒரு காரோ பைக்கோ இல்லாத ஒரே ஒருவர் என்டா அது இவர்தான்.



மாமிக்கு உயிராபத்தான நோய் வந்து ஒப்பரேசனுக்குக் காசு இல்லாத நெருக்கடியான நிலமையிலும் மனிசன் நேர்மையாக இருந்தாரு. கடைசியில என்ன ஆச்சு தெரியுமா? மாமி குணமடைஞ்சிட்டா. ஆனா இவரு மருந்துக்குச் செலவழிச்சுக் கடனாளியாகி  யோசனை பிடிச்சு மென்டலாகிவிடும் நிலைமைக்கு இருக்கிறாரு. இப்ப சொல்றா சுலைமான். தேவையா மச்சான் இந்த நேர்மை? பதில் சொல்றா சுலைமான்?



நீ ஆண்டவனைத் தொழுதிட்டேயிரு. அவனுக்கு உண்மையாப் பயந்து வாழு. அப்பதான் உன்ட ஊர்ல இருக்கிற பள்ளிக்குக் கூட சீமந்து 10 பக்கட் வாங்கிக் குடுக்கேலாம இருப்பாய். அதையெல்லாம் விட்டுப்போட்டு பொழைக்கிற வழியப்பாரு மச்சான். இனி நானும் அதைத்தாண்டா செய்யப்போறன். நல்லது கெட்டா நாயிலும் கேடுன்டுவாங்க. ஏதோ உனக்கிட்டச் சொல்லணும் போல இருந்திச்சுடா. அதுதான்டா இந்த சாமத்துல ஈமெயில் பண்றன். உன்ட எண்ணத்தைச் சொல்லு மச்சான்.

இப்படிக்கு

இர்பான்


 ( குறிப்பு: பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன)



- Jesslya Jessly

Thursday, December 8, 2011

வீதிகள்+வாகனங்கள்= உயிர்கள்!



நேற்றைய தினம் (2011.12.06)  காலை 7.30 மணியளவில் திருகோணமலை அபயபுர பகுதியில் ஓர் வீதிவிபத்து நிகழ்ந்தது.இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான வகாப் மொகமட் எனும் இளைஞர் பலியாகியுள்ளார்.

அன்றைய தினம் பாடசாலையில் நிகழவிருந்த ஒளிவிழாவில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தனது பிறப்பிடமான மூதூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு விரைந்து வந்தவர், அனுராதபுரச் சந்தியைத் தாண்டி அபயபுர பகுதியிலுள்ள சுற்றுவட்டத்தை நோக்கி இறங்கிச் செல்லும் சரிவான வீதியில் வைத்து தனக்கு முன்னாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்திருக்கிறார்.


அவ்வேளையில் சிறுமழை காரணமாக நனைந்திருந்த தார் வீதி, மற்றும் கால்நடைச் சாணி காரணமாக வழுக்கி, எதிர்ப்புறமாக வந்த கொண்டிருந்த பயணிகள் பஸ்ஸின் சில்லுக்குள் மாட்டியதன் காரணமாக தலைப்பகுதியில் படுகாயமுற்றதாக பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள்.


உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு  செல்லப்பட்ட போதும் தலையிலும் மூளைப்பகுதியிலும் குருதிப்பெருக்குக் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றார் எனவும்தெரிவிக்கப்பட்டது.


மிக இளம் வயதிலேயே தனது வாழ்வைப் பறிகொடுத்த இந்த ஆசிரியரின் அகால மரணத்தினால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது அவரது பாடசாலை சக ஆசிரியர்கள் மாணவிகள் அனைவருமே சோகத்திலாழ்ந்திருக்கின்றார்கள்.


வீதி விபத்துகள் என்பது இப்போதெல்லாம் வெகு சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன. விபத்துகள் நிகழ்வதற்கு பல காரணங்களுள்ளன.  வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, அலட்சியம், தவறான செலுத்துகை, மிதமிஞ்சிய வேகம், சாமர்த்தியமின்மை, மோசமான வாகனப் பராமரிப்பு, வீதிகளின் குறைபாடுகள்... என்று கூறிக்கொண்டு செல்லமுடியும்.


இவற்றிலே, அண்மைக்காலமாக திருகோணமலைப் பகுதியில் நிகழ்ந்துவரும் வீதி விபத்துகளுக்கு வாகனங்கள் பயணிக்கும் பாதைகளின் சீரற்ற நிலைமையே காரணமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


அதிலும் குறிப்பாக 4ம் கட்டை -அனுராதபுரச் சந்தி-அபயபுர- மட்கோ சந்தி ஊடாக நகரை நோக்கிச் வரும் கண்டி வீதியே மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்ப காலங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலாவெளி ஊடாக புல்மோட்டை செல்லும் வீதி சீனக்குடா- கிண்ணியா- மூதூர் ஊடாக மட்டக்களப்பு வரை செல்லும் A-15 வீதி ஆகியவை எல்லாம் இப்போது அழகாகச் செப்பனிடப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது. திருகோணமலை -அனுராதபுர வீதியும் ஓரளவு நல்ல நிலையில்தான் இருக்கின்றது.ஆனால், திருகோணமலை நகருக்கு அதிகமான வாகனப் போக்குவரத்து நிகழும் கண்டி வீதி மட்டும் குன்றும் குழியுமாகவே இருந்து வருகின்றது.


- 'Mutur' Mohammed Rafi


(தொடரும்)

Tuesday, December 6, 2011

ஆழ்ந்த அனுதாபங்கள்!



இன்று 2011.12.06 செவ்வாய் தினம் காலை திருகோணமலை அபயபுர பகுதியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் அகால மரணமடைந்த திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின்  ஆங்கில ஆசிரியர் ஜனாப். வகாப் மொகமட் (24 வயது ) அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்கள்  மற்றும்  நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!





வேகத்தால் வந்த வேகம்!



புயலாக மாறாத வரை
வாழ்க்கை ஒரு தென்றல்தான்
தென்றலாகச் சுற்றித்திரிந்து 
எல்லோரையும் ஈரத்துவிட்டு கடைசியில்
எம்மனதினை ஓயவைத்தது அப்புயல்!
0
வேகம் நிறைந்த வாழ்க்கையின்
வேகத்தையே முந்தும் உன்செயல்கள்- இன்றோ
வேகம் கூட கேள்விக்குறியாய் மாறி
உன்னை மீண்டும் எதிர்பார்க்கச் செய்கின்றது!
0
வாழ்க்கை எனும் வரைபடத்தை
வேகமாய் வரைந்து திரிந்த நீ 
அந்தக் கொடூர டிசம்பர் ஆறையும்
வேகமாய் கடந்துவிட நினைத்ததாலா 
அதைமட்டும் முன்னேவிட்டு
உன் உயிரின் வேகத்தை ஓயவைத்தாய்?
0
இன்றோ உன் புன்னகை பூத்த வேகத்தையும்
கண்ணீருடன் தொடர்கின்றோம் நாம்
அதுவேகமா வேதனையா
சொல்வதற்குத்தான் நீ இல்லை!


-பிரிவால் துயருறும்

11A மாணவிகள் 

 

Wednesday, November 23, 2011

தனிமனித ஆளுமை


அப்ரிடி:  அதிரடிப் போராட்டம்!






கிரிக்கட், இன்றைய நவீன முதலாளித்துவ உலகில் தாம் ஏகாதிபத்திய சக்திகளாலும் பல்தேசியக் கம்பனிகளின் தரகர்களாலும் சுரண்டலுக்குள்ளாவதை மறைத்து மக்களை ஒருவித லாகிரியில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு பயன்படுகின்ற ஒரு விளையாட்டாக மாறிப்போய் விட்டிருக்கின்றது.


இதை சிந்திக்கக்கூடியவர்கள் நன்கறிவர்.


இதனாலேயே அவ்விளையாட்டினுள் ஊழல், சர்வதேச பேரம், சூது, திறமையான வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுதல் போன்ற இன்னோரன்ன பிறழ்வுகள் மலிந்து வருகின்றன.


ஆயினும், விளையாட்டு என்ற வகையில் கிரிக்கட்டை இரசிப்பதற்குத் தடையேதும் கிடையாது. அந்த வகையில் இன்றைய கிரிக்கட் அணிகள் பலவற்றில் திறமையான வீரர்கள் ஒதுக்கப்படுவதும் அதிலே பலர் காணாமற்போவதும் சிலர் மீண்டும் முயன்று போராடித் தம்மை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதும் நடந்து காலாகாலமாக கொண்டுதானிருக்கிறது.


மேற்கிந்தியாவின் கிறிஸ்கெயில் பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி ஆகிய இருவரையும் இதிலே குறிப்பிடலாம். கிறிஸ் கெயில் சிறந்த சகலதுறை அதிரடி வீரர். இவர் சிறந்த அதிரடித் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் மேற்கிந்திய அணி வெற்றிபெறும் சாத்தியமாகும் என்ற நிலை இன்னும் இருந்து வருகின்றது. தனது கிரிக்கட் நாட்டின் கிரிக்கட்சபையுடன் ஊதியம் தொடர்பான முறுகல் ஏற்பட்டதன் காரணமாக விலக்கப்பட்டிருந்தார்.


பாகிஸ்தானின் சகிட் அப்ரிடி கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அதுவரையில் உள்முரண்பாடுகளால் பிளவடைந்து பின்தங்கியிருந்த தனது அணியை ஒன்றிணைத்து உற்சாகமூட்டி தனது சிறந்த பந்து வீச்சு சகலதுறை ஆட்டத்தின் மூலம் அரையிறுதியாட்டம் வரை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். தனிப்பட்ட வகையிலும் உலகக்கிண்ணத் தொடரில் 21 விக்கட்டுக்களை வீழ்த்தி புகழ் பெற்றிருந்தார். இத்தனையையும் நிகழ்த்திக் காட்டிய அந்தத் திறமைசாலிக்கு அந்நாட்டின் கிரிக்கட் சபை வழங்கிய பரிசு என்ன தெரியுமா? காரணத்தைக்கூட அறிவிக்காமல் அவரை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியதுதான்.

'ஒரு அணிக்குரிய வீரர்களைத் தெரிவு செய்வதிலே அவ்வணித் தலைவருக்குரிய பங்களிப்பே  மிகவும் முக்கியமானது. பயிற்றுவிப்பாளர்களின் பிரதான பணி தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதுதான்' என்றார் அப்ரிடி. இயல்பிலேயே எதையும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் அப்ரிடியின் இந்தப் போக்கு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்த பழழ்பெருச்சாளிகளுக்கு ஒத்து வரவில்லை.

இதனால் ஏதோ சாக்குப்போக்குகளைக் கூறி அப்ரிடியை ஒரேயடியாக ஒதுக்குவதற்கு முனைந்தனர். அப்ரிடியின் நேர்மை, திறமை, இரசிகர்களின் ஆதரவு ஆகிய விடயங்களால் நேரடியாக ஓரங்கட்ட முடியாமல் போனதால் திரைமறைவு சித்துவேலைகள் நடக்கலாயின.


ஆனால், இதனை உணர்ந்த சுயமரியாதையுள்ளவரான அப்ரிடி, தன்னை மதிக்காத கிரிக்கட் நிர்வாகத்தின் கீழ் விளையாட விரும்பவில்லை என்றும் குறித்த தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்து அது கலைக்கப்படும் வரை நிபந்தனையுடனான தனது ஓய்வை அறிவித்திருந்தார். "மீண்டும் நான் சகல மரியாதைகளுடனும் அணிக்குத் திரும்புவேன்" என்றும் பேட்டியளித்திருந்தார்.


அப்ரிடியின் பங்களிப்பும் பிரபல்யமும் அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு இந்த இடைவெளி பயன்பட்டது. அப்ரிடி இல்லாத அணி கவர்ச்சியற்றது என்றும் கற்றுக்குட்டித்தனமானது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அப்ரிடியை மீண்டும் இணைக்கக்கோரி இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அலையும் வெகுண்டெழுந்தது.


இதற்கிடையில் இஜாஸ் பட் தலைமையிலான கிரிக்கட்சபை கலைக்கப்பட்டது.


இதனால்  சில மாதங்கள் ஓய்வின் பின்பு மீண்டும் அப்ரிடி தனது ஓய்வை இடைநிறுத்திக் கொண்டு விளையாடத் தயாரானார். ஐக்கிய அரபு இராஜ்யத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் பாகிஸ்தான் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தொடரை பாகிஸ்தானுக்கு வென்று தரவேண்டிய நான்காவது ஆட்டம் கடந்த 20ம் திகதி சார்ஜாவில் ஆரம்பமானது.


இலங்கையின் பந்துவீச்சில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களைப் பறிகொடுத்திருந்த பாகிஸ்தான் அணி 71-5 என்ற நிலையில் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கையில் 6வது வீரராக களமிறங்கிய அப்ரிடி, தனது வழமையான அதிரடிப் பாணியை ஆரம்பத்தில் தேவைக்கேற்ப சாதுரியமாக நெகிழ்த்திப் பொறுமையுடனும் பின்பு விரைவாகவும் குவித்தார். பெறுமதியான அந்த 75 ஓட்டங்களின் உதவியுடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை ஓரளவு மரியாதைக்குரிய 200 ஓட்டங்கள் என்றானது.


201 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணி, ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய போதிலும் சங்கக்கார, ஜயவர்த்தன எனும் இரு வல்லவர்களின் 102 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெறும் வலுவான நிலையை அடைந்தது.


ஏறக்குறைய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் இலங்கையின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்று நினைத்துச் சோர்ந்து விட்ட நிலையில் ஒரே ஒரு வீரர், அப்ரிடி, மட்டும் தனது வலது முழங்காலின் உபாதையையும் பொறுத்துக் கொண்டு சளைக்காமல் பந்து வீசிக் கொண்டேயிருந்தார். அவரது இடைவிடாத முயற்சியின் பலன் 37.5 வது ஓவரிலே சங்கக்காரவின் விக்கட் தகர்ப்புடன் ஆரம்பமாகி மகேல ஜயவர்த்தன மெண்டிஸ் பெரேரா ப்ரஸன்ன என்று தொடர்ந்து 5-35 என்ற பந்து வீச்சுப் பெறுதியுடன் அணிக்கு 3-1 என்ற தொடர் வெற்றியாகவும் கனிந்தது.


ஒரு நிலையில் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட நிலையிலும் சோர்ந்து விடாது போராடி மீண்டெழுந்து தனது அவசியத்தை நிருபித்து... தன்னந் தனியாளாய் தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுத்து... தன்னை ஒதுக்கியவர்களையெல்லாம் ஆட்டத் திறமையால் வெட்கப்படச் செய்து நிமிர்ந்து நிற்கும் அப்ரிடியின் ஆளுமை போற்றத் தக்கதே.

-மூதூர் மொகமட்ராபி

Tuesday, November 15, 2011

எப்படி இருந்தது...இப்படியாச்சே!?




கடவுளேயானாலும்...!


இந்தப் படங்களைச் சிறிது பாருங்கள் நண்பர்களே...

பெரிதாக ஒன்றுமில்லை... ஒரு காலத்தில் மிகவும் அவசியமாகவும் போற்றத்தக்கதாகவுமிருந்த பல்வேறு  அம்சங்கள்தான் இவை. அவற்றின் இன்றைய நிலைமையைப் பாருங்கள்....



முதலில், திருகோணமலை -மூதூர் தரைவழி திறக்கப்பட்டதன் காரணத்தால் கடந்த பல தசாப்தங்களாக மூதூர்ப் பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இறுமாப்புடன் உழைத்த படகுகளின் இன்றைய அவலத்தைக் காணுங்கள்....




படகுகள் மட்டுமல்ல, தூர்ந்துபோய் காணப்படும் கொங்கிரீட் கடல்பாலம்... துருப்பிடித்துக் கிடக்கும் படகு பிணைக்கும் இரும்புக் கிராதிகள்...மக்களை மிரட்டி மகிழ்ந்த காவலரண்கள் ...காக்கிச்சட்டைக் கெடுபிடிகள்... கடலைச் சரமணிந்த வியாபாரிகள்..
 உல்லாசப்பயணிகள்...  வரிசையில் காத்திருந்து வியர்வைப் பிசுபிசுப்பும் பரபரப்பும் தாளாமல்  முண்டியடித்து முன்பின்னாக அசையும் மனிதப்பாம்பு... என்று ஜேஜே என்றிருந்த திருகோணமலைத் துறைமுக இறங்குதுறை இன்று சனசந்தடியின்றி....... எப்படிக் களையிழந்து வெறிச்சோடிக் கிடக்கிறது பார்த்தீர்களா?


 

இது போலவே பழைய பெருமையும் இன்றைய உதாசீனத்தையும் பெற்ற பல விடயங்களைப் படங்கள் வாயிலாகவே வழங்கியிருக்கின்றோம். பாருங்கள்.!




 
 ஒரு காலத்தில் பரபரப்பான சேவையாக இருந்துவந்த தபால்சேவை நவீன தொடர்பு சாதனங்களின் வருகையின் பின்பு எவ்வாறு கவனிப்பாரற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதற்கு நகரசபை கட்டிடத்துக்கு எதிரேயுள்ள இந்த தபால் பெட்டியே மவுனச் சாட்சி!

இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதெல்லாம் சரி, மனிதனுக்கும் அவன் கண்டுபிடித்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும்தான் இந்த நிலைமை என்றால்.... திருகோணமலை பொதுநூலகத்தில் நாம் கண்ட காட்சியை நீங்களும் பாருங்கள்...


திருகோணமலை பொதுநூலகம் நகரசபை வளாகத்தினுள் அமைந்துள்ளது .


அந்தப் பொதுநூலக முன்றலில் எத்தனையோ காலமாக வீற்றிருந்த கல்விக்குப் பொறுப்பான கடவுளின் சிலையின் கதியைப் பார்த்தீர்களா?


அரசமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்ற போதிமாதவனுக்குப் போட்டியாக புளியமரத்துக்குக் கீழே தவமிருக்கிறாளோ சரஸ்வதி என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதல்லவா?


காரணம் இதுதான்.. ..



இந்த ஆண்டு நிகழ்ந்த சரஸ்வதி பூஜைக்காக பிரபல தனியார் கட்டிட நிர்மாண  நிறுவனம் ஒன்று, பொதுநூலகத்துக்கு  புதிய சிலை ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தது.



புதிய சிலையை நிறுவுவதற்காக பழைய சிலையை அப்படியே பெயர்த்தெடுத்து பொதுநூலக வளாகத்தின் ஒரு ஒதுக்குப்புறமாக புளியமரமொன்றின் கீழே பழைய வாகன டயர் ஒன்றின் மீது ஏற்றிவைத்துள்ளனர்.




எதுவுமே பழையதாகி விட்டால் இதுதான் நிலைமை என்பதற்கு கடவுளர்களும் விதிவிலக்கில்லை போலிருக்கின்றது.








-'Mutur' Mohammed Rafi


Sunday, November 6, 2011

பெற்றோல் VS ரத்தம்



ஸீரோக்களாகும் ஹீரோக்கள்!




1970 களில்...
 'ஆம்புளப்புள்ள பொறந்திக்கே...என்ன பேர் வெய்க்கப்போறிங்க'
'வேறென்ன........கடாபி தான்'

1980களில்...
பொம்புளப் புள்ளயெண்டா என்ன பேர் வெச்சாலுஞ் சரிதான். ஆம்புளப் புள்ள பொறந்தா.....யாசிர் அரபாத் தான்'

1990 களில்.....
ஆம்புளப் புள்ளயோளு பொறக்குமென்டா.....சதாம் ஹூஸைன் தான்'
கொடுப்புக்குள் சிரிப்பை வரவழைத்தாலும் அவ்வக்காலத்தில் இவை சீரியசானவை. மதிப்புக்குரியவை. அபிமானப் பெறுமானம் கொண்டவை. காரணம்...


கடாபி , யாசிர் அரபாத், சதாம் ஹூஸைன். இவர்கள் வௌவேறு நாடுகளைச்சேர்ந்த வௌ;வேறு கலாசாரங்களைக் கொண்ட வௌ;வேறு காலகட்ட ஆட்சியாளர்கள்.எனினும் குறிப்பாக உலக முஸ்லிம் களின் மனங்களைக் கவர்ந்த கதாநாயகர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த அபிமானமானது மக்கள் தங்களில் ஒருவராக இத்தலைவர்களை எண்ணச் செய்திருக்கிறது.
மேற்குறித்த காலப்பகுதியில் பிறந்த  ஆண்குழந்தைகளுக்கு பெற்றோர் மேற்படி பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர். இன்றும் இப்பெயர்களோடு பலர் இருப்பதை காணலாம்.


மேற்கு நாடுகளின் இஸ்லாத்திற் கெதிரான நிலைப்பாட்டை எதிர்த்தல். அமெரிக்கக் கூட்டாளிகளின் பெற்றோலியக் கொள்ளையை எதிர்த்தல். பல்தேசியக்கம்பனிகளின் அரபு- முஸ்லிம் நாட்டு வளச்சுரண்டலை தடுத்தல். போன்ற தடாலடி நடவடிக்கைகளால் ஒரு இரவுக்குள் இவர்களால் உலகின் கவனத்தை ஈர்க்கமுடிந்தது.


உலகில் ஜனநாயகம், சர்வாதிகாரம் என எந்தவிதமான ஆட்சியும் இருக்கலாம. இதில் எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் அவ்வாட்சிக்குட்பட்ட மக்களது தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இருக்கும். ஆனால் இன்றைய உலகில் தேர்தலில் தேர்வான ஆட்சியாகவோஇ கவிழ்ப்பு மூலம் உருவான ஆட்சியாகவோ இருக்கலாம்.ஆனால் இதில் எந்த நாடு தன்நாட்டு மக்களது செல்வத்தை, சொத்துக்களை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கொள்ளையடிக்க அனுமதிக்கிறதோ, மேற்கு நாடுகளின் நிர்வாண கலாசாரத்தை ஏற்றுறக் கொள்கின்றதோ அதுவே பாருக்குள் உண்ணத நாடு. மாறாக எந்த நாடு தனது செல்வங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடிக்கும் போது எதிர்க்கிறதோ அது கெட்டநாடு.


இந்த அயோக்கியத்தனத்தை உலகம் எப்படி ஏற்று;க்; கொள்ளும்? எப்படி நம்பும்? என்றெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. அத்தனை விசக்கருத்துக்களையும் தேன் தடவி, உண்மை முலாமிட்டு நம்பவைக்க யூதர்களின் ஊடகங்கள் நூற்றாண்டு அனுபவத்தோடு இருக்கின்றன. அதே நேரம் அந்த அரக்கத்தனங்களை நம்ப அப்பாவி மக்களும் தயார். கண்விற்று காட்சிவாங்கத்தடிக்கும் அந்தந்த நாட்டு எதிர்க்கட்சிகளும் தயார்.


ஆட்சியில் இருக்கும் கட்சியோ நபரோ  அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளின் ரௌடித்தனங்களையும் பகல் கொள்ளையையும் அனுமதிக்கும் பட்சத்தில் அதனை எத்தனை வருடங்களுக்கேனும் நீடிக்கத்தயார். .அல்லவெனில், அது எவ்வளவு பெரிய ஜனநாயக மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருப்பினும் அதனைக் கவிழ்த்து விடவும் அவ்வாட்சியாளனை தெருவில் போட்டு சுட்டுக் கொல்லவும்  தயார்.


இத்தாலியின் காலனித்துவ நாடாக விளங்கிய லிபியாவை மீட்பதில் உமர்முக்தாரின் சுதந்திரப்போராட்டம் லிபியாவை லிபியரின் கையில் கொடுத்தது. எனினும் 1960ல் அங்கு பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டதும் மறுகணம் அது அமெரிக்காவின் மூக்கில் மணத்தது. பின் என்ன அவசர அவசரமாக லிபியாவில் ஒரு ராணுவத்தளத்தை உருவாக்கியது. ஏவுகணை எரிகுண்டுகள் போன்ற புதியரக ஆயதங்களை பரீட்சித்துப்பார்க்கும் இடமாக லிபியப் பாலைவனம் மாறியது..

1969 வரை மன்னர் இத்ரியாசி லிபியாவின் பெற்றோலியத்தை மேற்கு நாடுகளின் கொள்ளையடிப்புக்கு திறந்துவிட்டபடியால் எல்லாம் சுகமே! சுபமே.! உலகின் உயர்தரமான லிபியப் பெற்றோலை மேற்கு நாடுகள் நீ, நான் என கண்மூடி சுகமாக உறிஞ்சியிழுத்துக் கொண்டிருந்த வேளையில் கேணல் முஅம்மர் கடாபி ஆட்சியைப்பிடித்ததும் மேற்கு நாடுகள் திடுக்கிட்டு விழித்தன. உறிஞ்சுவது இடையில் நின்று போனது. லிபியாவின் பெற்றோல் உயர்தரமானது. சுத்திகரிப்பு செலவு குறைந்தது. உலகப் பெற்றோலியத்தில் 2% லிபியப்பாலைவனத்தரையின் கீழ்  உள்ளது. அவ்வரிய செல்வம் கடாபியால் நாட்டுடமையாக்கப்பட்டது. பேற்றோலிவருமானம் நாட்டு நலனைநோக்கித்திருப்பப்பட்டது. இது மேற்கு நாடுகளின் வயிற்றில் புளியைக்கரைத்தது. அவற்றுக்கு இது அநியாயமாகப்பட்டது. அக்கிரமமாகப்பட்டது.


உடனே உத்தரவுகள் பறந்தன. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன லிபியாவுக்கான கடனை நிறுத்தல் அல்லது நிபந்தனையுடன கடன் வழங்கல். ஜ.நா.வின் பாதுகாப்புச்சபை நேட்டோ தாக்குதலுக்கு அனுமதியளிக்க காரணம் கண்டுபிடித்து சோடித்தல். என்.ஜி.ஓ.க்கள் உள்நுழைந்து மனித உரிமைஇ ஜனநாயகம் என்ற பேரில் மக்களது மனநிலையை கடாபிக்கு எதிராகத் தருப்பிவிடுவது  போன்ற கைங்கரியங்கள் தயார் செய்யப்பட்டது.


இவ்வாறு லிபியாவை கபளீகரம் செய்வதற்கான சதித்திட்டங்கள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க லிபியாவின் இயற்கை வளம் லிபியாவை சகலதுறையிலு;ம்  முன்னேற்றப் போதுமானது என்ற உண்மையை லிபிய மக்களுக்கு புரிய வைக்கும் வேலையை கடாபி செய்து கொண்டிருந்தார். மட்டுமல்லாது ஆபிரிக்க நாடுகளுக்கும் அரேபிய மக்களுக்கும் பல்வேறு செய்திகளை அவர்  விடுத்தார்.


* எண்ணை உற்பத்தி நாடுகள் பெற்றோலியத்தை ஒரு ஆயதமாகப் பாவிக்கவேண்டும் என்றார்.
*. ஜ.நா.சபை போல ஆபிரிக்க நாடுகளுக்கெண்று ஒரு சபை வேண்டும்.
*. ஜ.எம்.எப்.க்கு இணையாக ஆபிரிக்க நாணய நிதியம் உருவாக வேண்டும்.

போன்ற அறைகூவல்கள் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தன. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளைக் கவர்ந்தன. கடாபியை உமர் முக்தாரின் மறு அவதாரமாகப்பார்த்தனர். நாளாவட்டத்தில் ஆபிரிக்காவின் கதாநாயகனாகிக் கொண்டு வந்தார். தொடர்ந்தும் மேற்கை நோக்கி பல சவால்களை வெளியிட்டார்.


'அப்துல் நாஸர் என் வழிகாட்டி. .ஸ்டாலினும் ஹிட்லரும் என் நண்பர்கள்' என்றார். சீனா, ரஸ்யா, பிறேசில் போன்ற நாடுகளுடன் எண்ணை வர்த்தகத்தைப் பேணினார். இது போதாதா மேற்கு நாடுகள் கடாபியை பயங்கரவாதியாக சித்திரிக்க?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரீகன், 'கடாபி ஒரு பைத்தியம் பிடித்த நாய்' என்றபோது. 'அமெரிக்கர்கள் என்னைப்பாராட்டினால் தான் நான் வெட்கப்பட வேண்டும்' என்று பதிலளித்தார்.


தென்னாபிரிக்க சுதந்திர தின வைபவம் ஒன்றில் பில் கிளின்டன் 'ஆபிரிக்காவில் இருந்து கடாபியின் அதிகாரம் ஒழிய வேண்டும்' என்று பேசிய போது நெல்சன் மண்டேலா உடனே எழுந்து 'எமது இருண்டகாலத்தில் உறுதுணையாக இருந்த கடாபி குறித்து பில் கூறிய கருத்துடன் என்னால் உடன்பட முடியாது' என்றார்.



உலக வங்கியின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கவிருந்த கென்யா, சாட், மாலி, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். பலஸ்தீன விடுதலை முதல் ஜ.ஆர்.ஏ வரையிலான சுதந்திரப்போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கினார். இதனால் 'ஆபிரிக்காவின் சேகுவேரா' என கடாபி அழைக்கப்பட்டார்.


ஓரு கட்டத்தில், "நான் அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்! ஆபிரிக்காவின் அரசன்! முஸ்லிம்களின் அரசன்!" என்றெல்லாம் அறிவிப்புச் செய்ததோடல்லாமல் நவீன காலத்திற்கேற்ப அல்குர்ஆனில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.


நாற்பத்து நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்த கடாபி லிபியாவை ஒரு மதச்சார்பு நாடாகவோ மதச்சார்பற்ற நாடாகவோ ஒரு போதும் பிரகடணம் செய்திருக்க வில்லை. மாறாக அவர் இறைவனது கண்டுபிடிப்பபையும், மனிதக்கண்டுபிடிப்பையும் இணைத்துப்பார்க்க முற்பட்டார். அதாவது மாணவராக இருந்த காலத்தில் கொம்யூனிசத்தால் கவரப்பட்ட கடாபி வாய்ப்புக் கிடைத்ததும் இஸ்லாத்தையும் கொம்யூனிசத்தையும் ஒரு கோட்டில் இணைக்க முற்பட்டார்.

அந்த வகையில் பசுமை நூல் (Green Book) என்று ஒரு நூலை எழுதினார். அதுவே நாட்டின் யாப்பும், லிபிய மக்களது வாழ்க்கைப் போக்கும் எனப் பிரகடனம் செய்தார். ஏறக்குறைய மாற்றுக் கருத்தடைய எந்த வொரு ஊடகமும் அங்கில்லாமல் பார்த்துக் கொண்டார். கட்சியரசியலோ எதிர்க்கட்சி அரசியலோ எதுவுமே அங்கில்லாமல் பார்த்துக் கொண்டார்.ஆட்சியையோ கடாபியையோ விமர்சிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமிய ஆட்சிகோரியவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பலர் சிறையில் வைத்தே கொல்லப்பட்டனர். இது இவ்வாறிருக்க  மக்களது நலனோம்பு விடயங்களில் கரிசனை காட்டத் தவறவில்லை.

-லிபியர்கள் அனைவர்க்கும் வசிக்க வீடும் மானியமும்.
-லிபிய மக்கள் யாரும் மின்கட்டணம் செலுத்துவதில்லை.
-சிறியரக தொழில் துறைகளை பொதுமக்கள் மேற் கொள்ள பாரிய தொழில் துறைகளை அரசு மேற் கொண்டது.
-லிபியா கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் ஆபிரிக்காவில் முன்னணிக்கு வந்தது.
-கடாபி ஆட்சிக்கு வந்து 15 ஆண்டுகளில் 1000பேருக்கு 01 வைத்தியர் என்ற அளவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
-மது தவறனைகள் கிடையாது.
-பெண்கள் மஹ்றம் இல்லாமல் வெளியில் செல்லத்தடை.
-களியாட்ட நிலையங்கள், தியேட்டர்கள் கிடையாது.
-இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 42 ஆண்டுகளில் லிபியா சர்வதச நாணய நிதியத்திடம் கடன் பெறாத நாடாக திகழ்ந்தது. அந்நாட்டு மக்களது வாழ்க்கைத்தரம் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு இணையானது. என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடன் கொடுத்து அடிமையாக்குதல், உள்நாட்டுக்குள் ஆயுதக்குழுக்களை உருவாக்கிவிடுதல், அணுவாயுதம் இருப்பதாக கதைகட்டிவிடுதல் போன்ற மிரட்டல்கள் எதற்கும் மசியாது கடாபி தன்வழி தனிவழி எனப்போய்க் கொண்டிருக்கும் போது தான் இரட்டைக் கோபுரத்தாக்குதல் என்றும் காரணம் அல்-கைதா எனறும் புதியதோர் கண்பிடிப்பை அமெரிக்கா வெளியிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்றை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி George W.Bush  வெளியிட்டார். அதாவது, "யாரெல்லாம் அமெரிக்காவை பொறுத்துக் கொண்டு ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே ஜனநாயகவாதிகள். மாறாக, அமெரிக்காவின் பக்கத்தில் இல்லாதோர் அனைவரும் பயங்கரவாதிகள்" என்ற மனிதகுலம் வெட்கித்தலைகுனியும் செய்தியே அது.



புதையல் கிடைத்தது போல இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவுக்குக் கிடைத்தது. உடனே ஈராக்கில் பேரழிவு ஆயதம் இருப்பதாக ஒரு உலகப் பொய்யை டொனிப்பிளேயர் எடுத்துவிட சொல்லி வைத்தது போல் ஜ.நா.சபை தாக்குதலுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா பேரழிவு ஆயதங்களைக் கொண்டு ஈராக்கை சல்லடைபோட்டு சதாம் ஹூஸைனைப்பிடித்து உலகம் பாத்திருக்க தூக்கில் இட்டுக் கொன்றது. இப்பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் 'மேற்கு நாடுகளின் பெற்றோலியக் கொள்ளைக்கு இடம் கொடாவிடில் இது தான் கதி' என அமெரிக்கா வெளியிட்ட மிரட்டலுக்கு கடாபி சற்று ஆடித்தான் போனார். எனினும் எளிதில் மசிய வில்லை.


உடனேயூத லொபிகள் காரியத்தில் இறங்கின. லிபியாவில் அணுஆயுத தயாரிப்புக்கான முஸ்தீபு இடம்பெறுகிறது . கடாபி 200 பில்லியன் டொலருக்கும் அதிகமாக பணத்தை தன்னுடமையாக்கியுள்ளார். போன்ற கதையாடல்களை யூத ஊடகங்கள் திரும்பத்திரும்பக் கூறியே உண்மையாக்கிக் கொண்டிருந்தன. நாளுக்க நாள் கடாபிக்கெதிரான நெருக்குதல்கள் உள்நாட்டிலும் தலை காட்டத் தொடங்கியது. இதனால் மெல்லக் கடாபி மசியத்தெடங்கினார்.


அரசாங்கத்தின் கைகளில் இருந்த பெருந் தொழில்துறைகள் கடாபி குடும்பம் ராணுவத்தளபதிகள் குடும்பம் உட்பட தனியார் மயப் படுத்தப் பட்டது. லிபியாவின் சூழ்நிலையின் பிரகாரம், சொல்லப்போனால் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிய பலர் பராரிகளாக மாறுவதற்கான அடி எடுத்து வைக்கப்பட்டது. மறுவார்த்தையில் சொல்வதானால் லிபியாவிற்குள் உலகமயமாதல் என்ற மாபெரும் பகற்கொள்ளை, சீர்திருத்தம் என்ற முலாம்பூசப்பட்டு அனுமதிக்கப்பட்டது. ஒரு வரியில் சொல்வதானால் 'மேற்கு நாடுகளை வினியோகஸ்தர்களாகவும் ஏனையோரை நுகர்வோர்களாகவும் கட்டமைப்பதே உலகமயமாக்கம்' ஆகும்.


அதாவது பகிர்ந்துண்டு மகிழ்ந்து வாழ்ந்த லிபிய மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள அத்திவாரமிடப்பட்டது. மேலும் மிரட்டல் கலந்த அலுத்தங்களின் காரணமாக சர்வதேச என்.ஜி.ஓ க்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டன.
அவை மனிதஉரிமையை வளர்த்தல், கருத்துச் சுதந்திரத்தை வலுப்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் போன்ற கோதாவில் கடாபிக் கெதிரான மனநிலையை மக்கள் மனதில் படிப்படியாக ஊன்றியது. அது மெல்ல வேலை செய்ய ஆரம்பித்தது. உளவறிதல், கலாசார மாற்றத்தை ஏற்படுத்தல், அமெரிக்க சார்புநிலையை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் திரைமறைவில் அரங்கேறத் தொடங்கியது. ஆமெரிக்கன் எய்ட்ஸ், கிறிஸ்டியன், எய்ட், போன்ற என்.ஜி.ஓ க்கள் இதில் முன்னணியில் நின்று செயற்படடன.


ஓப்பீட்டு ரீதியில் கடாபியின் அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் பொருளாதார ஏற்பாடுகளை நிச்சயமாக எண்ணை உறிஞ்ச வரும் மேற்கு நாடுகள் ஏற்படுத்தித் தரப் போவதில்லை என்பதை அறியாத மக்கள் மெல்ல வீதிக்கிறங்கலானார்கள். விசயம் கைமீறிப் போகு முன் விளித்துக்கொண்ட கடாபி, உள்துறை, வெளியுறவு, உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு தேர்தல்களை நடாத்த முன்வந்தார். மேலும் எண்ணை வருமானத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் யோசனையையும் வெளியிட்டார். கடாபியின் இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருமெனில் முயற்சிகள் யாவும் வீணாகி விடும் என்பதை உணர்ந்த மேற்கு நாடுகள் சுறுசுறுப்பாகின. தயார்படுத்தி வைத்திருந்த திடடங்களை ஒன்றன் பின் ஒன்றாக விரிவாக எடுத்து விட்டன.


ஏற்கனவே மக்கள் மத்தியில் கடாபிக்கெதிரான மனநிலையை என்.ஜி.ஓ மூலம் கொழுந்து விட்டு எரிய விட்டாயிற்று. அது அணைவதற்கு முன் அடுத்தடுத்து காரியங்கள் அரங்கேறின. ஏற்கனவே கடாபியினால் வெளியேற்றப்பட்டு கடுப்பில் இருந்த இங்கிலாந்தின்  veedol எண்ணை நிறுவனம் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட புரட்சிப்படைக்கு 5000கோடி  பெறுமதியான ஆயதங்களை வழங்கியது. மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்ட கடாபிக்கு எதிரான புரட்சி பரவிக்கெண்டிருந்தது.  இவ்வேளையில்  இது தான் சமயம் என கடாபியிடம் இருந்து மக்களை மீட்டல் என்றபோர்வையில் (முன்பு சதாம் ஹூஸைனிடம் இருந்து ஈராக் மக்களை காப்பாற்றியது போல?) உலகில் சமாதானத்தை உருவாக்க உருவாக்கப்பட்ட ஜ.நா.  பாதுகாப்பு சபை லிபியாவைத்தாக்குமாறு நேட்டோவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

2011 மார்ச் 31ல் மாலைப் பொழுதொன்றில் லிபியாவின் வான் பரப்பை நேட்டொ போர்விமானங்கள் ஆக்கிரமித்தன. மீட்பர்கள் வந்துவிட்ட மகிழ்ச்சியில் புரட்சிப்பபடை ஆரவாரித்துக் கொண்டிருக்கும் போது முதலாவது குண்டு குடியிருப்புப் பிரதேசத்துக்குள் வந்து விழுந்து குடியிருந்ததற்கான அடையாளமே தெரியாதளவுக்கு அப்பிரதேசத்தைத் தூக்கித்தூர எறிந்தது. இடைவிடாது வான்தாக்குதல் தொடர்ந்தது. 14.10.2011 போதும் கேம்ஓவர் நிறுத்திக் கொள்க! என ஜ.நா.சபை அறிவிக்கும் வரை 9600 தாக்குதல்கள் மேற் கொள்ளப்படடன.


மேற்கின் எண்ணைக் கொள்ளைக்கு இடம் கொடாத லிபியா என்ஜி.ஓ. க்கள்மூலமும் உலகமயமாதல் சித்தாந்தம் மூலமும் மனித உரிமை, கருத்துச்சுதந்திரம், ஜனநாயகம் போன்ற பளபளப்புக்கள் மூலமும் பதப்படுத்தப்பட்ட லிபியா, வான் தாக்குதலின் ஒரேயடியில் சல்லடைத்தேசமானது. அதன் தலைவனை அந்நாட்டின் குடிமக்களே தெருவில் போட்டு சுட்டுக் கொல்லுமளவுக்கு யூத ஊடகங்களும் என்.ஜி.ஓ.க்களும் சக்தி வாய்ந்தவை. நேட்டோ படைகளின் பொதுச்செயலாளர் அண்டர்சன் பாக் ரஸ்மூசென் 'வரலாற்றின் வெற்றிகரமான தாக்குதல்' என இதனை வர்ணிக்கிறார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்று புதிய ஜனநாயகத்தலைமை என்ற பெயரில் லிபியாவுக்கும் அமெரிக்க பொம்மை ஒன்றை அரியணையில் தூக்கி வைக்கப்பட்டாயிற்று.


லிபியாவில் கடாபி கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. புதிய ஊடுருவல் படை திரிபோலியின் கரைகளில் இறங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. ஈராக், ஆப்கன் பிரதேசங்களில் வேலை முடிந்த பன்னாட்டு கட்டுமான நிறுவனங்கள் லிபியா பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. லிபியாவின் புனரமைப்பு வேலைத் தேவைகளையும் அதற்கு மாற்றாக அமெரிக்க-நேட்டோ படைகளின் செயல்நன்றியோடு பெறப்போகும் எண்ணெய் வளத்தையும் கணக்கிட்டு சர்வதேச கம்பெனித் தரகர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.


கடாபியின் படுகொலைக்கு முன்பாக 20.10.2011 அன்று 80 பிரெஞ்சு கம்பெனிகள் லிபியாவின் தேசிய இடைநிலை அரசின் தலைவர்களை திரிபோலியில் சந்தித்துள்ளன. சென்ற வாரம் பிரிட்டனின் ராணுவ அமைச்சர்பிலிப்ஹம்மண்ட், பிரிட்டன் கம்பெனிகளை சூட்கேசுகளுடன் திரிபோ லிக்குச்செல்ல தயார் செய்யும்படி சொல்லிவிட்டாராம். கடாபியின் உடல் அடக்கம் செய்வதற்கு முன்பே பிரிட்டிஷ் கம்பெனியான ட்ராங்கோ புnராnஜக்ட்ஸ் தனது இணையதளத்தில் லிபியாவில் தொழில் துவங்குவதற்கு விளம்பரம் செய்யத் துவங்கிவிட்டது.


பிரான்ஸ மற்றும் பிரிட்டனைப் போலவே லிபிய போரில் நேட்டோவின் வான்தாக்குதலுக்காக அமெரிக்காவும் பலனடையப்போகிறது. அமெரிக்க-அரபு வணிக தேசிய குழுவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலகர் டேவிட் ஹமோட்  ஆயுதங்களையும் வேலையற்ற இளைஞர்களையும் கொண்ட நகரங்கள் இன்னமும் உள்ளதாகவும் கூறுகிறார். இதனால் பாதுகாப்பு கூலிப் பணிகளை செய்யக்கூடிய சர்வதேச நிறுவனங்களான எஸ்என், ஸ்பெல் க்ரூப்ஸ் லிட் மற்றும் எஸ்.,.என். ரிNசர்ஸ் க்ரூப் தங்கள் அலுவலகங்களை திரிபோலியில் திறந்துவிட்டன.


லிபியாவில் குண்டுவீச்சில் நொறுங்கிய கட்டுமானங்களை புதுப்பிக்கவும், வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள், மருத்துவமனைகள், பாலங்கள், வீதிகள், எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் புனரமைப்புக்கு வேலைகள் தேவைப்படுகின்றன. மேலும் பலமாத போருக்கு பின்னர் இன்னமும் லிபியாவில் பாதுகாப்பு அச்சமூட்டுவதாகவே உள்ளதாகவும் எனவே புதியதாக ராணுவ பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் லிபியாவில் தங்க வேட்டைக்கான ஓட்டம் இப்போதே துவங்கிவிட்டன என்றும் அமெரிக்க-அரபு வணிக தேசிய குழுத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலகர் டேவிட் ஹமோட் தெரிவிக்கன்றார். நியூ யோக் டைம்ஸ் (29.10.2011) கடாபி மீதான குற்றச்சாட்டுகளுக்கப்பால் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் பொம்மையரசு கடாபி ஏற்பத்தியிருந்த பொருளாதார வளமுள்ள வாழ்வை இனி எப்போதும் லிபியர்களக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படமாட்டாது என்பது நிச்சயம்.

மொத்தத்தில் லிபியா சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்திருக்கிறது. அது மீண்டெழக் காத்திருக்க வேண்டும். இன்னுமொரு உமர்முக்தாரை அது வலிசுமந்து பிரசவிக்கும் வரை.

-மூதூர் முகம்மதலி ஜின்னா