Friday, June 22, 2012

யார்...? & யார்...?





யூகித்துப் பாருங்கள்!











நண்பர்களே!

கீழே தரப்பட்டிருப்பதை சற்றுப்படித்துப் பாருங்கள். இது, இந்திய தமிழ் சினிமாவிலே தத்தம் துறையிலே மங்காப்புகழுடன் இன்னும் இருந்துவரும் இரு பெரிய நட்சத்திரக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

ஒரு கலைஞரைப் பற்றி மற்றொரு கலைஞர் கூறியிருக்கும் ஒரு குறிப்பு இது. நீங்கள் இலகுவிலே கண்டுபிடித்துவிடாதிருப்பதற்காக மட்டும் ஓரிரு சொற்களை மட்டும் மாற்றியிருக்கின்றேன்.

இவர்கள் இருவரும் யார், யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம். முடியாது போனால் அல்லது விடையைச் சரிபார்க்க நினைத்தால் அடியிலே தருகின்றேன் பின்பு சாவகாசமாய் பார்த்துக்கொள்ளலாம்.



அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தெரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் அவராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் அவர் நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
..............................???






இவர்களில் யார்?











 இவர்களில் யார்?

இவர்களில் யார்?



 இவர்களில் யார்?



















இவர்களில் யார்?







சரி, உங்கள் பொறுமையைச் சோதித்து போதும். இதோ விடை:


"அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் இளையராஜாவாக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் இளையராஜா நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
கமல்ஹாசன்"




- 'Mutur'  Mohammed Rafi

Wednesday, June 20, 2012

மலையடியில் மரணிக்கும் மதநெறிகள்!







மூதூர்   'மூணாங்கட்டைமலை'

விவகாரம்:





னுராதபுரம் - பொலநறுவை - யாப்பஹுவ - குருநாகல்  - கண்டி - கம்பளை...       
                       என்று நமது இலங்கைத்தீவிலுள்ள சில நகரங்களின் பெயர்களை வரிசைக்கிரமமாகக்கூறிக் கொண்டு வந்தால் உங்களைப்போன்ற சிறகுகளின் நீண்டகால  வாசகர்களுக்கு உடனடியாக மனதிலே தோன்றுவது என்னவாக இருக்கும்?

இதுவும் ஒரு புதிதாக உருவான நீண்டதூர பேருந்து தடமோ என்று நினைக்க மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இலங்கையின் வரலாறுபற்றி சிறிதளவு அறிந்திருந்தாலே போதும் பண்டைய இலங்கையின் தலைநகரங்களின் இடம்பெயர்வு ஒழுங்கு என்பதை இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
இதேபோல அதே அனுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றுமொரு ஊர்களின் வரிசைக்கிரமத்தைக் கீழே தருகின்றேன். இதனைப்பற்றி ஏதாவது புரிகின்றதா என்று முயன்று பாருங்கள்..

அனுராதபுரம் - தம்புள்ள - மூதூர் - தெகிவளை- காலி...

என்ன ஏதாவது புரிந்ததா நண்பர்களே? இருங்கள் விளக்கமாகக் கூறுகின்றேன்.

        மூன்று தசாப்தங்களையும் பல்லாயிரம் உயிர்களையும் கோடிக்கணக்கான பணத்தையும் மனித உழைப்பையும் ஏப்பம்விட்டதன் மூலம் நமது அழகிய இலங்கைத்தீவின் எதிர்காலத்தையே நாசமாக்கியது  உள்நாட்டு யுத்தம்.  அந்த பேரழிவு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், அண்மைக்காலமாக சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அசிங்கம்பிடித்த ஆக்கிரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் இலக்காகிவரும் முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களின் அல்லது வணக்கஸ்தலங்களின் ஊர்களின் ஒழுங்கு வரிசைதான் அது.


ஆம் நண்பர்களே, ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்கும் ஓநாய்கள்போல கடந்த வருடம் அனுராதபுரத்தில் ஒட்டுப்பள்ளம் எனும் பிரதேசத்திலே அமைந்திருந்த முஸ்லீம்களில் ஒருசாரார் புனிதமாக மதித்துப்போற்றும் கல்லறை ஒன்று அந்தப்பிரதேச பௌத்த மதகுருக்கள் சிலரின் தலைமையிலான உள்ளுர் காடையர்களினால் பொலீசார் வேடிக்கை பார்த்திருக்க உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டதை யாவரும் அறிவோம்.



அதனையடுத்து இலங்கையின் தூங்கா நகரமான தம்புள்ளையில் பௌத்த மதகுருக்கள் சிலரின் தூண்டுதல் வழிகாட்டலுடன்  60 வருடங்களுக்கும் மேலான காலப்பழமைவாய்ந்த பள்ளிவாசலைத் தகர்ப்பதற்கும் அங்கிருந்து அகற்றுவதற்கும் ஆர்ப்பாட்டக்குழு ஒன்று முயன்றனர். இதன்போது ஓரளவு பள்ளிவாசல் சேதத்திற்குள்ளானது.


அதே போன்று இனவாத சக்திகளால் தூண்டப்பட்ட இளைஞர் குழு தெகிவளையிலே காலம்காலமாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தொழுகைபுரியும் பள்ளிவாசலொன்றின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிட இப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்.




புத்தளம் - சிலாபம் வீதியிலுள்ள ஆரியசிங்களவத்தை கிராமத்திலே வசித்துவரும் முஸ்லீம் குடும்பங்கள் தமது சொந்த காணியிலே தொழுகைக்காக நிர்மாணம் செய்த தற்காலிக பள்ளிவாசலின் இருப்பை எதிர்த்து அமைதியின்மையையும் நெருக்கடியையும் ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்குழு ஒன்று அங்குள்ள முஸ்லீம்களை வற்புறுத்தி அந்த இடத்தை வெறும் குர்-ஆன் ஓதலுக்குரிய மதரஸாவாக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டத்தரணி ஆவணத்திலே கையெழுத்தும் பெற்றுள்ளனர்.


காலியிலே ஒன்றாக வாழ்ந்துவருகின்ற சிங்கள-முஸ்லீம் மக்களிடையே பிரிவினையையும் குரோதத்தையும் உருவாகிவிடும் விதமாக இனவாதசக்திகள் முஸ்லீம்களின் வியாபாரத்தலங்களின் மீது கதவுகளிலும் பூட்டுகளிலும் மனிதமலத்தை விசிறியும் பன்றியின் இரத்தத்தைப் தெளித்தும் காட்டுமிராண்டித்தனம் புரிந்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி அந்த முஸ்லீம் வர்த்தக நிலையங்களின் நீண்டகால வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.


இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லீம்களின் மீது திட்டமிட்டதும் எழுந்தமானதுமான தாக்குதல்கள் நிகழ்ந்தவாறுள்ள நிலையிலே, தற்போது உள்நாட்டு இனமுறுகல் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலே ஒன்றான கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.





மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன.



மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது  கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்தல் தொழில் இப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்து வாழும் எத்தனையோ ஏழைக்குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயமாக இருந்து வருகின்றது.




இந்த நிலையில்தான் கடந்த 08.06.2012  வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி வண. சரணகீர்த்தி தேரோ வின் தலைமையிலே திடீரென பல வாகனங்களில் 20க்கும் அதிகமான பணியாட்கள் மூணாங்கட்டை மலைப்பகுதிக்கு வந்திறங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குன்றின் உச்சிக்குச் செல்வதற்குரிய படிக்கட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்குரிய உபகரணங்களும் இரும்பு மரக்கிராதிகளும் வந்திறங்கின. அத்துடன் அதே 'மூணாங்கட்டை மலை'  குன்றின் அடிவாரத்திலே  சிறியதொரு வணக்கத்தல வடிவிலமைந்த கொட்டில் ஒன்றையும் நிறுவும் முயற்சிகளையும் ஆரம்பித்தனர்.


இதனால் அப்பிரதேசவாசிகள் குழப்பத்திற்கும் பீதிக்குமுள்ளானார்கள். இதனையடுத்து இந்த விடயம் ஊருக்குள் வேகமாகப்பரவியது. விளைவாக ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி சர்வமதக்குழுவின் தவிசாளரின் தலைமையில் மலையடிவாரத்தில் ஆலய நிர்மாணத்திலே ஈடுபட்டுக்கொண்டிருந்த  பௌத்த விகாராதிபதியைச் சந்தித்துப்பேச முடிவு செய்தனர்.


விகாராதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களது மேற்படி நடவடிக்கைகளின் தீய விளைவுகளை எடுத்துக்கூறி சுமுகமான ஒரு இணக்கத்துக்கு வருவதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு 12.06.2012 செவ்வாயன்று அவர்கள் சென்று பேசியபோது வெகுண்டெழுந்த சேருவில விகாராதிபதி,  தவிசாளரையும் ஊர்மக்களையும் நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, 'நாங்கள் 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தநாட்டில் வாழ்பவர்கள். நீங்களோ 500 வருடங்களாகத்தான் இங்கே குடியேறியிருப்பவர்கள். நாங்கள் உரிய மேலிடத்தின் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். எங்களைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை. நாங்கள் நினைத்தால் இந்த நாட்டை விட்டே உங்களைத் துரத்துவோம்' என்றெல்லாம் சத்தமிட்டுள்ளார். இதிலிருந்தே அவர்களது உத்தேச பௌத்த ஆலய நிர்மாணிப்பின் நோக்கத்தினை  தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது.


மூதூர் பட்டினத்திலே வாழ்ந்துவரும் ஏறத்தாழ 90 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 அங்கத்தவர்களும் தமது ஆன்மீக பேணுதல்களை நிறைவேற்றுவதற்காக பௌத்த விகாரையொன்று ஏற்கனவே இருந்து வருகின்ற நிலைமையில் ஒரு சிங்களவர்தானும் குடியிருக்காத ஜபல்நகரிலே ஓர் பௌத்த ஆலயம் அமைப்பதற்கான தார்மீக நியாயம் எதுவுமே கிடையாது என்பதால் மூதூரிலுள்ள பல சிங்கள மக்களே ஆச்சரியப்படுமளவுக்கு சேருவிலை விகாராதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தனைக்கும் இந்த மலையடிவார பௌத்த ஆலயத்தின் நிர்மாணிப்பு வேலைகள் பற்றி மூதூரில் வாழும் சிங்களமக்களிடமோ மூதூர் பட்டின விகாராதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.


அதேவேளை, இந்த 'மூணாங்கட்டை மலை' குன்றுகளின் ஆக்கிரமிப்புக்கு வெறும் ஆலய நிர்மாணம் மட்டுமல்ல வேறு சில நோக்கங்களும் இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்தக்குன்றுகளில் பழங்காலப் புதையல்கள் இருப்பதாக இப்பிரதேச மக்களிடையே நீண்டகாலமாக ஓர் நம்பிக்கை நிலவி வந்திருக்கின்றது.


இதை உறுதிப்படுத்தும் விதமாக 1970 களிலே பௌத்த பிக்கு ஒருவர் புதையலை எடுப்பதற்காக உயிர்ப்பலி கொடுக்கும் நோக்கத்திலே இந்தக்குன்றின் உச்சிக்கு  குழந்தையொன்றைக் கடத்திச் சென்றுள்ள சம்பவத்தை பிரதேசமக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் தகவலொன்றை அடுத்து குன்றின் உச்சிக்கு விரைந்து ஏறிய அன்றைய மூதூர் பொலீசார் பிக்குவின் பலிபூஜையின் இறுதிநேரத்தில் அதிரடியாகப்புகுந்து அந்தக்குழந்தையைக் காப்பாற்றியதையும் குற்றவாளியான பௌத்த பிக்குவைக் கைதுசெய்து கொண்டுசென்றதையும் இன்றும் பல முதியவர்கள்  நினைவு கூருகின்றனர்.





எவ்வாறாயினும் இந்த மலையடிவார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிச்சயமாக வேறு உள்நோக்கங்கள் கொண்டது என்பதை யூகிப்பதற்கு பெரிய புத்திசாலித்தனம் ஒன்றும் தேவையில்லை. இவர்கள் ஆலயம் அமைப்பதும் பின்பு அந்த இடத்திலே மெல்ல மெல்ல அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதும் அதன்பின்னர் அந்தப் பிரதேசங்களிலே காலங்காலமாக வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதும் இலங்கையின் பிந்தியகால வரலாற்றுப் பாடங்கள். ஆனால், இவ்வாறான தூரநோக்கற்ற பல நடவடிக்கைளினால்தான் வளம்நிறைந்த நமது அழகிய தீவுதேசம் ஏறத்தாழ கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இயல்பாக அடைந்திருக்கவேண்டிய பொருளாதார அபிவிருத்தியையும் செழிப்பையும் இழந்து நின்றது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பதுதான் வியப்பைத் தருகின்றது.


அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர்களும் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கௌ;ளாமல் வாளாவிருப்பதையும் அறிய முடிகின்றது. பின்பு இந்த விடயம் குறித்து அண்மையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் மூதூருக்கு வந்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக மூதூரில் நிகழ்ந்த சர்வமதக்குழு பிரதிநிதிகளின் சந்திப்பிலே அவர் உரையாற்றியபோது, 'அரசாங்கம் மூணாங்கட்டைமலை குன்றிலே ஆலயம் எதனையும் அமைப்பதற்கான எந்த அனுமதியையும் எவருக்கும் வழங்கியிருக்கவில்லை' என்று கூறிச்சென்றார்.




ஆகவே இதிலிருந்து உரிய மேலிடத்தின் அனுமதி பெற்றிருப்பதாக சேருவில விகாராதிபதி சர்வமதக்குழுவின் தவிசாளரிடம் கூறியது பொய்யான கூற்று என்று தெரியவருகின்றது. அவ்வாறாயின் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயற்பட்ட விகாராதியின்மீதும் மலைக்குன்றிலே பௌத்த கொடியை ஏற்றி தற்காலிகச் சிறுஆலயத்தையும் நிறுவிக்கொண்டிருக்கும் அவரது குழுவினர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விசனத்துடன் வினவுகின்றார்கள் மூதூர் மக்கள்.






எது எவ்வாறாயினும் மூதூர்ப்பிரதேசத்தில் வாழும் ஏறத்தாழ அனைத்து மக்களும் அமைதியான வாழ்க்கையையே விரும்புபவர்கள். ஆனால், ஆக்கிரமிப்புச் சம்பவத்தைத் தெடர்ந்து இங்கு வாழும் சகல இனமக்களின் மனதிலும் சந்தேகமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இந்த நிலை இவ்வாறே நீடிக்கும்போது பல விரும்பத்தகாத நிகழ்வுகள், அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இனமுறுகல் யுத்தவடுக்கள் இன்னும் மாறாதநிலையிலும் அமைதியாகவே இருந்துவரும் இந்தப் பிரதேசம் மீண்டும் போர்க்களமாக மாறிவிடக்கூடிய நிலையொன்று ஏற்படுமாயின் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர்.


இந்தப்பிரதேசத்தின் மக்களைப் பிரதிநிதித்துவம்புரியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளையும் தனிப்பட்ட நலன்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு நிலைமையை எடுத்துக்கூறி, உடனடியாக இந்த இயற்கைவளம் மீதான மத ஆக்கிரமிப்பையும் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்; செயற்பாடுகளையும் நிறுத்தவேண்டும் என்பதே இந்த நாட்டில் சமாதானமும் சகஜவாழ்வும் நிலைபெறவேண்டும் எனவிரும்புவோர் அனைவரினதும் விருப்பமாகும்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்!


- Jesslya Jessly 
(2012.06.20)

Sunday, June 17, 2012

மூதூர் : மலையும் வெறியும்





உயர மலையேறும் மதவெறிகள்...!

&
துயர நிலைவீழும்   மதநெறிகள்..!





போருக்குப்பிந்திய இலங்கையில் உள்நாட்டு மக்களிடமும்,வெளிநாட்டு மக்களிடமும் சில பொதுவான  நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் காணப்பட்டன. கோடிக்கணக்கில் பணத்தையும் ஆயிரக்கணக்கிலே உயிர்களையும் விழுங்கிய யுத்தம் ஓய்ந்தது. இனிமேல் விலைவாசி குறையப்போகின்றது. எவரும் எங்கும் எப்போதும் செல்லலாம். எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சமய கலாசாரங்களைப்பேணி நி;ம்தியாக வாழலாம் என்று அனைத்து இலங்கைமக்களும் நம்பியிருந்ததெல்லாம் முற்றிலும் நியாயமானவையே.


ஏனெனில் வெள்ளைமுள்ளிவாய்க்காலோடு யுத்தம் முடிவுக்கு வந்தகையோடு 'இது இலங்கை மக்களின் நாடு. இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதம்கிடையாது. உங்கள் அனைவருக்கும் சமத்துவமான வாழ்வு நிச்சயமாக உண்டு.' என அன்றுமுதல் கூறத்தொடங்கிய ஜனாதிபதி இன்றளவும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார். மக்களும் ஜனாதிபதியின் தூய்மையான இந்த வாரத்தைகளை நம்பி அது நடைமுறையிலும் நிறைவேற வேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் மனதுக்குள் பிரார்த்தித்த வண்ணமுள்ளனர்.


இதே பிரார்த்தனை நாட்டின் அனைத்துப் பிரதேசத்திலும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு இருந்தது போன்றே மூதூர் பிரதேச முஸ்லிம்களுக்கும் பலமாக இருந்ததுண்டு. மூதூரின் வளத்தையும்  வாழ்வையும் மக்களையும் காக்கவென மூதூருக்கு உள்ளும் புறமும் இப்பிரார்த்தனைகள் ஒலிப்பதுண்டு.
2002  பெப்ரவரி மாதம் 2ம் திகதியன்று அரசு- விடுதலைப்புலிகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான போது 'இனியெல்லாம் சுகமே...' என எதிர்பார்த்திருந்த மூதூர் முஸ்லிம்களுக்கு பிரச்சினை, சிலுவை வடிவில் வந்தது.


மூதூர் - மட்டக்களப்பு பிரதான வீதியின்  64வது மைல்கல்லில் உள்ள ஜபல் நகரில் மூதூர் பிரதேசத்துக்கே தனியழகு சேர்ப்பதுதான் நில அடையாளமான இயற்கையின் கொடையாகிய மூணாங்கட்ட மலை என அழைக்கப்படும் குன்றுத்தொடராகும். அந்த 'சமாதான' காலத்தில் எல்லா மக்களுக்கும் பயன்பட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளமான மலையின் மீது திடீரென ஒருநாள் கொங்றீட் சிலுவைகள் முளைத்தன.


ஊருக்கே பொதுவான இயற்கைவளமொன்றின் மீது மத அடையாளத்தை இட்டுவைப்பது குறித்த மதத்துக்கும் அதனை விசுவாசத்துடன் பின்பற்றும் மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடல்லாமல் மக்களுக்கு மத்தியில் வீண் பதட்டத்தையும் தோற்றுவிக்கலாம் என அவ்வேளையிலே சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டனர்.


அவ்வாறிருக்கையில் மலையில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலுவைகள் திடீரென அகற்றப்பட்டன. அவ்வாறு மர்மமான முறையிலே அகற்றியமை தெரியவந்த போது அவை மூதூர் முஸ்லிம்களால்தான் அகற்றப்பட்டதாக  ஆதாரமற்ற வீண்பழி ஒன்றை  அன்றைய புலிப்பயங்கரவாதிகள்  முன்வைத்தனர்.



அதுமட்டுமல்லாமல் அதனைச்சாட்டாக வைத்து மூதூர் முஸ்லீம்கள் மீது ஓர்  திட்டமிட்ட பெரியளவிலான தாக்குதலை புலிகளின் மறவர்படை மேற்கொண்டது. மல்லிகைத்தீவு ராசு, நாவலடி ரஞ்சன்(மூலப்பொட்டி) என அழைக்கப்படும் புலிகளின் மறவர்படை பிரதேசத்தலைவர்களால் பட்டப்பகலில் மூதூர் முஸ்லிம்களின் உயிர் உடமை மீது குறிவைத்துத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.


இதன்போது நான்கு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் அது முஸ்லீம்களின் புனித ரமழான் நோன்பு காலமாதலால் அதற்குத் தேவையான பேரீச்சம்பழம், அரிசி மற்றும் பலசரக்குப்பொருட்களை ஏற்றிவந்த முஸ்லிம் வர்த்தகர் காஸிம் ஹாஜியாரின் லொறி பச்சனூர் எனுமிடத்தில் மறித்து தீயிட்டுக்; கொளுத்தப்பட்டது.
மேலும் அந்த சமயத்திலே அறுவடைக்குத் தயாராகவிருந்த முஸ்லிம்களின் வயல்களுக்குள் நீரைத் திறந்து விட்டதுடன் கால்நடைகளையும் வயலுக்குள் சாய்த்துவிட்டு மகிழ்ந்தனர்.


ஏன் இந்த கடந்தகால ஞாபகங்கள் என்றால்,நியாயமற்ற வீம்புத்தனமான சமய அடையாள வெளிப்படுத்தல்கள்,திணிப்புகள் என்பன சாதாரண மக்களது வாழ்வில் எவ்வாறு பாரிய தாக்கங்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது என்பதை நாம் இரைமீட்கத்தான்.


ஆக, ஏற்கனவே எல்லோருக்கும் பொதுவான மூணாங்கட்டை மலைக்குன்று  தூரநோக்கற்ற மதசார்புள்ள விஷமிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் முன் அனுபவமாக இருக்க, இப்பொழுது மீண்டும் மூணாங்கட்டைமலை விவகாரம் விகாரமாய் உருவெடுத்து மூதூர் மக்களை அச்சத்துக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.


அன்று சிலுவைகள், இம்முறை பௌத்த சமய அடையாளப்படுத்தல்கள்... இதனால் மூதூர் மக்களின் அச்சமும் பீதியும் பன்மடங்காகியிருக்கின்றது.  அண்மைக்காலமாக தீவிரப்போக்குடைய சில பௌத்த பிக்குகள் குண்டர்கள் புடைசூழ அநுராதபுர ஒட்டுப்பள்ளம் சியாரம் உடைப்பு, தம்புள்ள புனிதப்பிரதேச பிரகடனம் மற்றும் மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிமீதான தாக்குதல், ஆரிய சிங்கள மாவத்தை மத்ரசாவுக்கு விடப்படும் அச்சுறுத்தல், தெகிவளை பள்ளிவாசல் மீதான பிக்குகளின் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களின் சமய அடையாளங்கள் மீதும், மதவிழுமிய நடவடிக்கைகள் மீதும் மதப் பின்பற்றல் குறித்த உரிமையின் மீதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. ஆகவே இதன்பின்னணியாக அல்லது இத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே மூதூர் ஜபல்நகர்மூணாங்கட்ட விவகாரத்தைப்பர்க்கவேண்டியிருக்கிறது.


அதாவது இதுவரையிலான முஸ்லிம் சமய அடையாளங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தம் பெரும்பாலும் சமய அனுஷ்டானத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்க, மூணாங்கட்ட மலைப்பிரச்சினை சமய அனுஷ்டானத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் சவால் விடுவதாக இருக்கிறது.
கடந்த 2008 ம் ஆண்டு சேருவிலை விகாரையைச் சேர்ந்த பிதம பிக்குவான சரணகீர்த்தி தேரோ அவர்கள், இம்மலையின் மீது பௌத்த சின்னங்கள் இருக்கின்றது எனக்கூறி சர்ச்சையை உண்டு பண்ணிய போது, அது பற்றி நேரில் கண்டு அறிவதற்காக மூதூர் சர்வமதக்குழுவினர் குறித்த பிக்குவுடன் சேர்ந்து மலையுச்சிக்கு ஏறினர். அங்கு பௌத்த புறாவஸ்த்து என்று பிக்கு சுட்டிக்காட்டிய அம்சத்தை அக்குழுவினர் ஆராய்ந்த போது அது 1989ல் இந்திய அமைதிகாக்கும் படையினர்(IPKF) மலை மீது தொலைத்தொடர்புக்கோபுரம் அமைத்து  அதனை அகற்றியபின் பழைமையடைந்து போயிருந்த சீமெந்துக்கட்டுத்தான் அது என அவ்விடத்திலேயே அது நீருபிக்கப்பட்டது.



அதே நேரம் அம்மலையுச்சியில் இருக்கும் கிறேவல் பாங்கான இடத்தில் கல்லில் வடிக்கப்பட்ட மிசான் கட்டைகள் நடப்பட்டடிருப்பது தெரிய வந்தது. அவ்விடயம் அப்போது பி.பி.சி.செய்தியிலும் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.


விடயம் இவ்வாறு மாறியதால், அத்தோடு அவ்விடயம் குறித்த பௌத்த பிக்குவால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் மூணாங்கட்டைமலையில் புத்தர் சிலை வைக்கும் சர்ச்சை அதிகார சக்திகளின் பக்கதுணையுடன் பூதாகரமாக எழுந்துள்ளது.


மூதூரைப் பொறுத்தவரையில் 1965ம் ஆண்டிற்குப்பின்பே சிங்கள மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுள் பல குடும்பத்தினர் தம் ஊரான கந்தளாய்க்கு திரும்பிச்சென்றிருக்கின்றனர். தற்போது மூதூர் பிரதேச செயலகத்துக்குள் 293 அங்கத்தவர்கள் கொண்ட 94 சிங்களக்குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது மார்க்க அனுஷ்டானத்துக்கென தபாலகத்தக்கருகில் ஒரு பெரிய விகாரையும் உண்டு.


இவ்வாறிருக்கையில் கடந்த 01.06.2012 அன்று வெள்ளிக்கிழைமை சுமார் மதியம் 12.25 அணியளவில் சேருவில பிரதம பிக்குவான சரண கிர்த்தி தேரோ அவர்கள் இருபது சிங்கள இளைஞர்களுடன் ஜபல் நகர்மலையடிக்கு வந்து மலையுச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார். ஜபல் நகர் மலையானது,மூதூர் பிரதேசசiயின் ஆளுகைக்கும், பராமரிப்புக்கும் உட்ப்ட்ட ஒரு இயற்கைவளமாகும்.எனவே சேருவில தேர்தல் தொகுதியைச்சேர்ந்த பிக்குவும் குழுவினரும் பிரதேசசபையின் அனுமதி எதனையும் பெறாது மலையை அணுகுவதும்,இயற்கை வளமொன்றை மத ஆளுகைக்கு உட்படுத்துவதும் சட்டவிரோதமானது என பொதுமக்கள் அப்பிக்குவிடம் தம் ஆட்சேபனையை தெரிவித்தபோது தான் உரிய ஏற்பாடுகளோடு வந்து வேலையைக் காட்டகிறேன் என அபப்pக்கு கூறிச் சென்றுள்ளார்.


அவ்வாறு அவர் கூறிச் சென்றதன் பின்னர் சர்வமதக்குழுவினரோ,மக்கள் பிரதிநிதிகளோ குறித்த பிக்குவை அல்லது பௌத்தமதீpடத்தை அணுகி விடயங்களை விளக்கியிருக்கலாம் ஆனால் மக்கள்  அப்பாவித்தனமாக அரசியல் தலைமைகள் அனைத்தையும் வென்று வருவார்கள் என வாளாவிருந்தனர்.


ஏற்கனவே அநுராதபுர சியாரம் உடைப்புக்கு எதிராக வழக்குத்தொடர்வேன் நீதி பெற்று வருவேன். அது நான் செய்தாக வேண்டிய என் கடமை என அரசியல் தரப்பில் இருந்து மக்களை சூடாக்க விடுக்கப்பட்ட வழக்கமான வாய்ச்சவடால் அது என்பதை இனங்காணாமல் இன்னமும் தம் வாக்குப்பலம் வென்று வரும் என மக்கள் நம்பினர்.


இந்நம்பிக்கையின் விளைவு 12.06.2012அன்று தெளிவாகியது. அன்றைய தினம் சேருவில தேரோ, குழுவினருடன் வந்து மலையுச்சிக்கு செல்வதற்கான படிகள் அமைக்கும் கட்டுமானப்பண்களை ஆரம்பித்து வைக்கும் ஸ்தல பூஜா என்று சொல்லிக் கொண்டு சமய அனுஸ்டானத்துடன் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதன் போது மூதூர் பிரதேச சபை தவிசாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஜபல்நகருக்குச் சென்று தேரோவை அனுகிய போது,தகாத வதார்த்தைப்பியோகங்களுடாக தான் தொல்பொருள் தினைக்களத்தின் அனுமதி பெற்றிருப்பதாகவும் நாங்கள் இந்த நாட்டுக்கு 2500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். நீங்கள் 500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். என்னை தடுத்தால் அனைவரையும் ஊரைவிட்டே விரட்டியடித்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தியிருக்கின்றார்.


மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில்  எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்கான வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பன்னெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் மலையின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மiயைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத பூர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் (குடியேற்றினாலன்றி)பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன் 12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும்  இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். ஏனெனில் ஒரு இந்து வழிபாட்டிடம் அமையப்பெற்று அல்லது இஸ்லாமிய வழிபாட்டிடம் அமையப்பெற்று அதுநாளடைவில் அங்கிருக்கும் இயற்கைவளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரிகட்டச்செய்து புனிதப்பிரதேச பிரகடணம் செய்து பூர்வீகமாக வாழும் மக்களையும் அவர் தம் வழிபாட்டிடத்தையும் அசிங்கமானது எனக்குறி அனைத்தையும் வன்முறை மூலம் அகற்றுமாறு தாக்குதல் தொடுத்ததில்லை.


ஆனால் அறுபதுவருடப்பழமைவாய்ந்த தம்புள்ளைப் பள்ளிவாசலும்,காளிகோவிலும் இன்று பௌத்த தேரோக்களின் பார்வையில் அகற்றப்படவேண்டிய அசிங்கங்களாகத்தெரிகின்றன. இவ்வாறு ஒவ்வொரு சிறுபான்மைப்பிரதேசத்திலும் சுத்திகரிப்புத் தாக்குதல்கள் சட்டத்தால் கட்டுப்படுத்தமுடியாதளவுக்கு நடைபெற்றுவருவதை நாளாந்தம் கண்கூடாகக் கண்டு கொண்டுதானிருக்கின்றோம்.



அந்த வகையில் தற்போது ஜபல் நகர் மலைமீதான புத்தர் சிலை நிறுவுதலானது,  எல்லாவற்றையும் போன்ற ஒரு சமய அடையாளம் என்பதற்கு அப்பால் எல்லோருக்கும் பொதுவான இயற்கைவளம் மீதான ஒர் ஆக்கிரமிப்பு என உள்ளுர் மக்கள்அச்சம் கொள்வதில் உண்மையும்,; நியாயமும் இருக்கிறது.
 


தற்போது தம் முதற்கட்ட இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் வேலைகள் சரண கீர்த்தி தேரோவின் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த தேரோ, அல்லது அவரது சீடர்கள் மலையில் பாறாங்கல்லுடைப்பதற்கு தடை விதிக்கலாம்.(அப்போது 87 மைல்களுக்கு அப்பால் உள்ள கந்தளாயிலிருந்து பல்லாயிரம் ரூபாக்களைச் செலுத்தி பாறாங்கற்களை கொள்வனவு செய்யவேண்டிவரும்)அல்லது விகாரைக்கு வரிகட்டி உடைக்குமாறு கட்டளை பிறப்பித்து கல்லின் கொள்விலையை அதிகரித்துக்கொண்டு போகலாம். அல்லது இவை யாவற்றையும் வென்று அடுத்த சில ஆண்டுகளிலோ,எதிர்கால சந்ததியை நோக்கியோ புனிதப்பிரதேசப் பிரகடனம் புறப்பட்டு வரலாம். அப்போது  கல்லுடைத்தலுடன் தொடர்புடைய ஜீவனோபயத்தை நம்பிவாழும், வாழப்போகும் மக்கள் (தற்போது கல்லுடைத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜீவனோபாயத்தை உடைய குடும்பங்களின் எண்ணிக்கை - 488) பாதிக்கப்படுவார்கள்.




மேலும், மலையைச்சூழவுள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை புனிதப்பிரதேசம் விழுங்கிவிடலாம். அப்போது மக்களின் ஜீவனோபாயம் வீதிக்கு வந்தவிடலாம். மொத்தத்தில் உள்ளுர் மக்களது வாழ்வும் வளமும் கேள்விக்குறியாவதற்கான சூழலே கட்டமைக்கப்படுகிறது. என நாட்டுநடப்பை கருத்திற் கொள்ளும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர் ஒருவர் உள்நாட்டு யுத்தத்துக்கு முன்பும், பின்பும் திருகோணமலை கன்னியாய் வெந்நீருற்றை தரிசித்தவராக இருப்பின், அங்கு உள்ளுர் மக்களது மத அடையாளத்திற்கு நிகழ்ந்துள்ள கதியை நன்கறிவார்.முன்பு அங்கு இஸ்லாமியப் பெரியாரின் அடக்கத்தலம், பள்ளிவாசல்,சிவன் கோவில் என்பனபோன்ற வற்றை மட்டுமே கண்டிருப்பார். அங்கு  பௌத்த சமய அடையாளத்தையும் கண்டிருக்க முடியாது. ஆனால், இன்று... யுத்தத்திற்குப்பிந்திய கன்னியாயில் பௌத்தசமய அடையாளத்தையன்றி வேறெதனையும் அங்குகாண முடியாதள்ளது. இது யுத்தத்துக்குப்பிந்திய இலங்கைவாழ் சிறுபான்மை மக்களது சமய, கலாசார, பண்பாட்டு அம்சங்களுக்கு நேர்ந்துவரும் கதியின் ஒரு சோறுபதம்.

-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்.


Ethnic                        Muslim   Tamil        Sinhala
Families                    10,221       8,194           94
Population                 40,101      27,153        293
Male                          19,824      12,970        139
Female                       20,277      14,183        154
Percentage (%)           59.37         40.20        0.43
                                            



     (statistics-2011 D.S. Mutur)

Monday, June 4, 2012

Shahid Afridi : வீணடிக்கப்படும் திறமை!










"திறமையானவர்களை வீணடிப்பதிலே  திறமை வாய்ந்தவர்கள் யார்?"

என்று ஒரு பந்தயம் நடாத்தினால் அதிலே ஆயுளுக்கும் முதல் பரிசைத் தட்டிச்செல்லுபவர்கள் பாகிஸ்தான் கிரிக்கட் தேர்வுக்குழுவாகத்தான் இருக்கும்.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலே இன்று நடந்து முடிந்திருக்கும் T20 தொடரைப் பார்க்கும்போது இவ்வாறான எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

புதிய அணித்தலைவராக முகம்மட் ஹபீஸ் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளராக வட்மோர் ஆகியோருடன் வந்திருக்கும் பாகிஸ்தான் அணி முதலாவது T20 போட்டியிலே தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சிலே போதிய திறமையைக் காண்பித்த போதிலும் குறைபாடுள்ள களத்தடுப்புகளாலும் மோசமான துடுப்பாட்டத்தினாலும் 133 என்ற ஓட்ட இலக்கை எட்ட முடியாது வெற்றி வாய்ப்பை இழந்தனர்.


ஆயினும் இரண்டாவது போட்டியிலே வெறும் 123 ஒட்டங்களை இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்து 99 க்குள் சகலரையும் வீழ்த்தி வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரைச் சமநிலையிலே முடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரருமான சஹீட் அப்ரிடி தனது சகலதுறை ஆட்டத்தினை சிறப்பாக வெளிப்படுத்தி அணியின் கூட்டு முயற்சியுடன் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கின்றார்.

அத்துடன் இன்றைய தனது 50 வது போட்டியிலே ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டு முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தி ஒரு பிடியெடுப்புடன் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதற்காக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.


இது அப்ரிடி  T20 போட்டிகளிலே பெற்றுக்கொண்ட 7 வது ஆட்டநாயகன் விருது என்பதுடன்  ஓர்  உலக சாதனை  யுமாகும்.

 (இதற்கு முன்பு சனத் ஜயசூரிய கெவின் பீட்டர்ஸன் ஆகியோர் தலா 6 தடவை)

கடந்த 2011 ஆண்டு உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கும் வரை எத்தனையோ பல சர்ச்சைகளிலே சிக்கி நம்பிக்கையிழந்து கிடந்தது, பாகிஸ்தான் அணி.  சர்ச்சைகள் ஏற்படுத்திய மன அழுத்தங்கள் தீர்வதற்கிடையிலே உலகக்கிண்ணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. 
ஏனைய அணிகள் தமது அணித்தலைவரையும் அணியையும் முன்கூட்டியே அறிவித்து பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன.


ஆனால் பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகம் மட்டும்  அணியை  அறிவித்து விட்டு அணித்தலைவரை அறிவிக்காமல் கோமாளித்தனம் செய்து கொண்டிருந்தது. இறுதியில்,  கடைசிநேரத்திலே சஹீட் அப்ரிடியை அழைத்து அணித்தலைவர் பதவியை அதுவும் அரைமனதோடுதான் வழங்கினார்கள், பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாக கோமாளிகள்.


அத்தனை முட்டாள்தனங்களையும் தனது நாட்டு அணிக்காகப் பொறுத்துக் கொண்டு,  தனது அபிப்பிராயங்களுக்கோ தெரிவுகளுக்கோ இடமளிக்காமல் முன்கூட்டியே தெரிவுசெய்து வழங்கப்பட்ட அணியை ஏற்றுக்கொண்டார் சஹீட் அப்ரிடி. 


உறுதியான நம்பிக்கையுடன் சக வீரர்களை உற்சாகப்படுத்தி (தன் பங்குக்கு 26 விக்கட்டுக்களையும் வீழ்த்தி) உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டிவரை பாகிஸ்தான் அணியை வெற்றிகரமாக முன்னின்று வழிநடாத்தியவர் சஹீட் அப்ரிடி.



இத்தனை அசாத்தியத் திறமை வாய்ந்த சஹீட் அப்ரிடி தற்போது கப்டன் பதவியில் இல்லை என்பதுதான் பாகிஸ்தான் அணியின் தொடரும் துரதிஷ்டம்.

சஹீட் அப்ரிடி போன்ற ஒரு திறமைவாய்ந்த துடிப்பான வீரர் பாகிஸ்தான் அணி தவிர்ந்த வேறு எந்த அணியில் இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக  இதைவிடவும் எத்தனையோ மடங்கு திறமையாக அவரைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


பாகிஸ்தான் எப்பொழுதுமே திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பஞ்சமில்லாத ஓர் அணி. அவ்வாறே நெருக்கடியான வேளையிலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடுவதிலே புகழ்பெற்ற பல சகலதுறை வீரர்களையும் கொண்டிருப்பதும் வழமை.


ஆனால் அவர்களின் துரதிஷ்டங்களிலே ஒன்று எப்பொழுதெல்லாம் ஒரு திறமையான வீரர் முன்னேறிக்கொண்டு வருகின்றாரோ அப்போதெல்லாம் அவர் ஏதாவது ஒரு சர்ச்சையிலே மாட்டிக்கொண்டு விடுவார். பின்பு அணியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுவார். இதற்கு உதாரணங்களாக ஏராளமான முன்னாள் வீரர்களும் தற்போதைய வீரர்களும் உள்ளனர்.


அதுவுமில்லையென்றால் கிரிக்கட் உலகமே ஆச்சரியத்தால் உறைந்து போகுமளவுக்கு  அதிரடியாக அணித்தலைவராக நியமிக்கப்படுவார்.




அவர் தனது தலைமைத்துவத் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வருகையிலே அணி வீரர்களுக்கிடையிலோ அல்லது கிரிக்கட் தேர்வுக்குழுவினருடனோ கருத்து வேறுபாடு வந்துவிடும்... பின்பு அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதும் பின்பு அணியிலிருந்தே காணாமல் போவதுமாக...

இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்று நடந்து கொண்டேயிருக்கும் அணிதான் பாகிஸ்தான் அணி.


-Mutur' Mohd.Rafi

Sunday, June 3, 2012

கோணேசர்பூமியில் ஒரு வெற்றுவேட்டு!




'எப்படியிருந்த    நான்,   இப்படியாயிட்டேன்!'








வர் இன்னும் ஓய்வுபெறாத ஒரு முன்னாள் பாடசாலை அதிபர். முன்னாள் அதிபர் என்றால் 'இன்னாளிலே என்ன செய்து கொண்டிக்கின்றார்...?' என்ற வினா எழுமல்லவா...?


அதற்குரிய பதிலைக்கூறு முன்னர் இந்த விடயத்தை முழுமையாகப்படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.

இது நமது பாடல்பெற்ற திருத்தலமான கோணேசர் பூமியில் நிகழ்ந்த /  நிகழும் கதை.

அவர் தலைமையாசிரியராக கடமையாற்றிய பாடசாலை  நகரிலிருந்து கூடிப்போனால் 4 கிலோமீற்றர் சுற்றளவுக்குள்ளே புகையிரதப்பாதையை ஒட்டிய பல்லின மக்களும் ஒன்றாக வாழும் ஒருபிரதேசத்தில் இருக்கின்றது.


எனினும் அந்தப்பாடசாலை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெரும்பான்மையாக கற்கும் ஒரு தமிழ் மொழிமூலப்பாடசாலை என்பதால் அந்த இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொள்ளவும் பிற தேவைகளுக்குமாக அடிக்கடி பாடசாலைக்குச் சென்று வரவேண்டியிருந்தது.  பொதுவாக பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்க விரும்புவது என்பது இயல்பான ஒன்றுதானே?

அவ்வாறு பாடசாலைக்குள் வருகின்ற அப்பாவிப் பெற்றோர்களின் மீது நமது அதிபர் எவ்வாறு நடந்து கொள்வார் தெரியுமா?

'இஞ்சவா? எங்க வந்தா...? இப்ப சந்திக்கேலாது போ..! போ...!' 


இப்படித்தான் 'மரியாதையாக' இருக்கும் நமது தலைமையாசிரியரின் பெற்றோருக்குரிய பொதுவான அணுகுமுறை.

இவர் தனது ஆசிரியர்களையும் கூட இவ்வாறுதான் நடாத்துவார் என்று சில தகவல்கள் உண்டு. வெளிப்படையாகப் பார்க்கும் யாருக்கும் இவர் ஒரு கண்டிப்பும் நிர்வாக இறுக்கமுமுள்ள திறமையான அதிபர் என்ற ஒரு மாயத்தோற்றம் முதலில் ஏற்படுவது இயல்பானதுதானே. ஆனால் உள்ளே புகுந்து உற்றுக்கவனித்தால்தான் இவர் ஒரு வெறும் வெற்றுவேட்டு என்பது புலனாகும்.

இவர் தன்னைச்சுற்றிலும் வைத்திருந்தது யாரைத் தெரியுமா?


கற்பித்தலைவிட மாணவர்களை ஏய்த்துச் சமாளிக்கவும் சலுகைகளுக்காக மேலதிகாரிகளை வருடிப் பிழைக்கவும் கூடிய பெண் ஆசிரியர் குழாம் ஒன்றைத்தான் வைத்திருந்தார். அதேவேளை தனக்கு ஒத்துவராத திறமையான ஆசிரியைகளை  வருத்தி உழைப்பை உறிஞ்சிக் கொள்வாராம்.  ஆனால் அதனால் விளையும் பலாபலன்களை தானும் தன்னைச்சுற்றி வருடிக்கொண்டிருக்கும் ஏமாற்றுக்காரிகளான ஆசிரியைகளும் பெறுமாறு பார்த்துக் கொள்வாராம்.


எங்கு செல்வதென்றாலும் ஒரு துருப்பிடித்த பழைய துவிச்சக்கர (சைக்கிள்) வண்டியில்தான் அவரது பயணமிருக்கும். அந்தச் சைக்கிளைப்போலவேதான் அவரது சிந்தனையுமிருக்கும்


இவரது நோக்கம் பாடசாலை மாணவர்களின் கல்வியோ அல்லது சமூக அபிவிருத்தியோ அன்றி  தனது மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்திக்கொண்டு தனது சுய முன்னேற்றங்களைப் பெற்றுக் கொள்வதாக மட்டுமே இருந்து வந்தது.

அத்துடன் பாடசாலைக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்காமல் பார்த்துக் கொள்வாராம். தவறிப்போய் நியமிக்கப்பட்டாலும் அவர்களோடு அநாவசிய முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களாகவே இடமாற்றம் பெற்று ஓடிவிடச் செய்து விடுவாராம்.


அப்படியும் விடாப்பிடியாக அவர்கள் இருந்துவிட்டால் போதும். சினிமா தாதாவைப்போல  தனது அல்லக்கைகளான அடிவருடிப் பெண் ஆசிரியர்களை வைத்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது ஏதாவது பாலியல் குற்றச்சாட்டுக்களைத் திணித்துத்  தொடுத்து ஓட்டம் காட்டி விடுவாராம். இவ்வாறு அவர் தனது காலத்திலே அப்பாடசாலைக்குக்கு கிடைத்த எத்தனையோ திறமை வாய்ந்த ஆண் ஆசிரியர்களையெல்லாம் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் விரட்டி வீணடித்துள்ளாராம்.

ஒர் அதிபராக,  தனது பாடசாலையின் வீழ்ச்சியைப் பற்றி அக்கறை கொண்டதில்லை. தனது அடிவருடி ஆசிரியைகளின் மோசடிக் கற்பித்தல்களால்   மாணவர்களின் ஆளுமை விருத்தி தேர்ச்சிகள், அடைவுகள் வீழ்ச்சியடைந்து வந்தது பற்றிய உண்மையான கவலைகளெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால்  எல்லாமே சரியாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்களை  வெறும் வெள்ளைக் காகிதங்களிலும் பைல்களிலும் மட்டும் டிப்டொப்பாக வைத்திருந்து கல்வி அதிகாரிகள் வரும்போது எடுத்துப் போடுவாராம்.

கல்வியில் ஏற்கனவே பின்தங்கிக்கிடக்கும் தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகத்தை சிறிதளவு கூட முன்னேறிவிடாமல் எவ்வாறு மேலும் மோசமாக்கலாம் என்று மண்டைகளைக் குடைந்து திட்டங்கள் தீட்டித் தந்திரமாகச் செயல்படுத்துவதிலே கில்லாடிகள்தான் நமது கோணேசர் பூமியின் கல்வி அலுவலக அதிகாரிகள். அவர்களுக்கு இப்படி ஒருவர் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இவரது ஏமாற்றுகளால் உள்ளுர மகிழ்ந்து, வெளிப்படையாக ஓஹோவெனப்  பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவார்களாம்.

ஆனால்...


 இந்த உலகில் அனைத்துச் சர்வாதிகாரங்களும் ஏமாற்றுகளும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். இவரது இப்படியான நடவடிக்கைகள் மெல்லமெல்ல ஊருக்குள்ளே தெரிய வரத்தொடங்கியதும் பெற்றோர்கள் கொதித்தெழுந்தார்கள். மக்களை மதிக்காத அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை சமாளித்து அதிபரைக் காப்பாற்றுவதற்கு கல்வி அதிகாரிகளும் அடிவருடி ஆசிரியைகளும் பகீரதப்பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் பெற்றோர்கள் ஒரேயடியா வேண்டாமென்று பிடிவாதமாக அதிபரைத் துரத்தியடித்து அனுப்பிவிட்டார்கள். தனத அடிவருடிகளையும் சேர்த்துக்கொண்டு வெருண்டோடிய சர்வாதிகார அதிபருக்கு அடைக்கலம் எங்கு தெரியுமா? வேறு எங்கே...?


சாட்சாத் நமது கோணேசர்பூமி கல்வி அலுவலகம்தான்...!

அங்கே ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்திக்கொண்டு எடுபிடி வேலைசெய்து கொண்டிருக்கின்றாராம்.


-Jesslya Jessly






பிற்குறிப்பு:

முன்பு அதிபர் கதிரையில் குந்தியிருந்து பாடசாலையையும் சீரழித்த நமது அதிபர் தற்போது கோணேசர்பூமி  கல்வி அலுவலகத்தில் ஒரு ப்ளாஸ்டிக் கதிரையிலே குந்தியிருந்து கொண்டு தான் துரத்தியடிக்கப்பட்டதை நினைத்து உள்ளுக்குள் புலம்பித் தீர்க்கின்றாராம். அத்துடன் தனது முன்னாள் பாடசாலையை, அங்கே மிஞ்சிக்கிடக்கும் அடிவருடியொன்றை பினாமியாக வைத்து  மறைமுகமாக நடாத்திக் கொண்டிருக்கின்றாராம். 

Wednesday, May 30, 2012

MGR vs Radha: 1967ல் உண்மையில் நடந்தது என்ன?







"சுட்டான் ; சுட்டேன்!"






தையும் சுவைபடச் சொன்னாலே போதும் அது எவ்வளவுதான் பழைய விடயமானாலும் அதற்கு ஒரு தனிக் கம்பீரம் வந்து விடும் என்பதை இதன் கீழுள்ள ஒரு கட்டுரையைப் படித்போது உணரக் கூடியதாக இருந்தது.   அதிலும் அது நடுநிலை தவறாமல் அநாவசிய புகழ்பாடல்கள் இல்லாமல் சமநிலையாக எழுதப்பட்டிருந்தால் கேட்கவும் வேண்டுமா? அதன் அழகே தனி அல்லவா?

தமிழகத்தின் மக்கள் திலகம் என்று அன்றும் இன்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் DMK திமுகவின் உறுப்பினராக இருந்தவேளை தனது சக நடிகரும் ஈ.வே.ரா. பெரியாரின் திகவின் விசுவாசியுமான நடிகவேள் ராதா வினால் ('சித்தி' தொலைக்காட்சி நாடகம் புகழ் ராதிகாவின் தந்தை) சுடப்பட்ட செய்தி யாவரும் அறிந்த விடயம்தான்.


இது நடந்தது 1967ம் ஆண்டில்...


தமிழ்பேப்பர் இணையத்தில் எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் எழுதியிருக்கின்றார்.வாசித்துப் பாருங்கள்!


-'Mutur' Mohd. Rafi



Here you're:




எம்ஜியார் கொலைமுயற்சி வழக்கு








1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.



இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் விசாரித்ததில், திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதா தன்னை காதருகே சுட்டதாகத் தெரிவித்தார். குண்டு எம்.ஜி.ஆரின் காதை உரசிக்கொண்டு அவரது தொண்டையில் போய் பாய்ந்தது. எம்.ஆர். ராதா அங்கு தனக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களிடம், “நான்தான் எம்.ஜி.ஆரை சுட்டேன்” என்று தெரிவித்தார். காவல்துறைக்கு தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டேன் என்றார்.
செய்தி கேட்டு, எம்.ஜி.ஆரைக் காண மருத்துமனையில் கூட்டம் திரண்டது. சுமார் 50,000 பேர் மருத்துவமனையில் கூடிவிட்டதாக ஒரு செய்தி உண்டு.




எம்.ஆர்.ராதா ஆதரவாளர்களும், அவருடைய நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர். சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் குழுமினர். திமுகவின் அண்ணாதுரை, கருணாநிதி, நடிகர் அசோகன் என்று அனைவரும் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டரின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.



எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்தது ஒரு விபத்தல்ல. பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர், தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரும் சட்டமன்றத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாபுரம் இல்லத்துக்கு எம்.ஆர். ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.கே.என்.வாசுவும் சென்றிருக்கிறார்கள்.



எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்தன. ‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’

ஆனால் 'பெற்றத்தால்தான் பிள்ளையா' என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு காவல்துறையினரிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்ட்டி விருப்பம் தெரிவித்தது. அந்த பார்ட்டி சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்த பார்ட்டிக்காகத்தான் நானும் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.’ (இந்தத் தகவல் பொய் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. காரணம் காவல்துறையினர் அசோகா ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எந்த சினிமாக்காரரும், வாசு குறிப்பிட்ட சமயத்தில் ஹோட்டலில் தங்கவில்லை என்று தெரியவந்தது).
மேலும், வாசு தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை மேற்சொன்ன காரணத்துக்காக அவரைச் சந்திக்கவேண்டுமென்று பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று காலம் தாழ்த்தி திரும்பியதால், ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலை கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.




மேலும் வாசு தெரிவித்ததாவது, ‘எம்.ஜி.ஆர் எங்கள் இருவரையும் வரவேற்றார். பின்னர் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய தொழிலை எம்.ஜி.ஆர் நாசம் செய்துவிட்டார் என்று கூறியபடியே கோபத்துடன் எழுந்து எம்.ஆர்.ராதா வெளியே செல்ல முற்பட்டார். பின்னர் எம்.ஆர்.ராதா தன்னுடைய வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரைச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எம்.ஜி.ஆரின் இடது காதை உரசிக்கொண்டு போய் அவருடைய தொண்டையில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் எம்.ஆர்.ராதாவின் மீது பாய்ந்து, எம்.ஆர்.ராதா மேலும் துப்பாக்கியால் சுடாமல் தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள்ளாக எம்.ஆர்.ராதா தன்னைத் தானே கழுத்திலும், நெற்றிப்பொட்டிலும் சுட்டுக்கொண்டார்.’
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டி. எம்.ஆர்.ராதாவுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று ராதா நினைத்தது.


2. பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன்னுடன் பல மடங்கு வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.



1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

 எது எப்படியோ, எம்.ஜிஆரை அவருடைய இல்லத்தில் வைத்தே கைத்துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர். ராதா. பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பிரபலமான வசனத்தையும் பேசியிருக்கிறார். குண்டு காயங்களுடன் இருந்த இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் உதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.



 எம்.ஜி.ஆரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை அறிந்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.கவினருக்கும், எம்.ஆர்.ராதா ஆதரவு திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று அறிந்த அரசு, சென்னையில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்படியிருந்தும் காவல் நிலையங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பரங்கிமலையில் இருந்த எம்.ஆர்.ராதாவின் தோட்டம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, காவல்துறை கண்ணீர் புகை வீசியும் லத்தித் தாக்குதல் நடத்தியும் கலைத்தது.



துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.ராதாவைக் கைது செய்து விசாரணை நடத்தியது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் எம்.ஆர்.ராதா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் காவல்துறை எம்.ஆர்.ராதா மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பெரிய வழக்குகளை விசாரிக்க மாஜிஸ்டிரேட்டுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், அவர் வழக்கை செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் தி.மு.கவே கூட எதிர்பார்க்கவில்லை. அண்ணாதுரை கூட நடந்து முடிந்த தேர்தல்களில் சட்டசபைக்காகப் போட்டியிடவில்லை, நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிட்டார்.



தமிழகத்தில் மூன்று முறை (சுமார் 10 ஆண்டுகள்) முதலமைச்சராக இருந்த காமராஜர், 1967ம் ஆண்டு நடக்கவிருந்த தேர்தல் சமயத்தில், ஒரு கார் விபத்தில் காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.



அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரைப் பேட்டி எடுத்தபோது, தான் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று பேட்டி கொடுத்தார். ஆனால் நடந்தது வேறு. காமராஜர், தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற இளைஞரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் கூட தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சி, ஒரளவுக்கு ஊழல் இல்லாமல் நல்ல முறையில்தான் நடந்தது. இருப்பினும் 1967 தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், ஆட்சி செய்தவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளிதான்.
புதிய ஆட்சி அமையவிருந்த தருணத்திலேயே, மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான இடைவெளி குறையத் தொடங்கியது. 1967 தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கவினர் பதிவியேற்கும் தருவாயில், சென்னையில் கோட்டையில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டனர். அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரும், தான் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுடுவதற்கு முன்னர், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மக்களிடையே சரிந்திருந்தது என்றும், துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு அவருக்கு மக்களிடையே பெரிய அனுதாபமும், ஆதரவும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது).



தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றாலும், அண்ணாதுரையின் ஆட்சியில் எம்.ஜி.ஆர் எந்தவித மந்திரிப் பதவியையும் வகிக்கவில்லை.இந்திய சுந்தரத்துக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத புதிய கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. அவ்வழக்கை விசாரித்தவர் நீதிபதி திரு. லட்சுமணன். அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், பி.ஆர். கோகுலகிருஷ்ணன் (இவர் பின்னாளில் குஜராத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்) மற்றும் பி.இராஜமாணிக்கம். எம்.ஆர்.ராதா தரப்பில் ஆஜரானவர்கள் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்களம். (இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்திருந்தார்), மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை மற்றும் என்.நடராஜன்.



எம்.ஆர்.ராதாவின் மீது அரசு தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை.


1) எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றது (இ.பி.கோ – பிரிவு 307);


 2) தற்கொலை முயற்சி (இ.பி.கோ – பிரிவு 309);


 3) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது (ஆயுதச் சட்டம் – பிரிவு 25) மற்றும் ;


4) உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டது (ஆயுதச் சட்டம் – பிரிவு 27).



96 நாள்கள் விசாரணை நடைபெற்றது. 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் வெப்லி ஸ்காட் .420 காலிபர் (ஒரு குழல் துப்பாக்கியின் உட்புற குறுக்களவு விட்டம்) வைத்திருந்தனர். இருவரும் தத்தம் துப்பாக்கிகளை பி.ஆர் அண்டு சன்ஸ் (P.ORR & Sons) நிறுவனத்திலிருந்து, 1950 ஆம் ஆண்டு வாங்கியிருக்கின்றனர். அதுவும் ஒரே நாளில். இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை. எம்.ஜி.ஆர் தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் ராதா தன் துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.


துப்பாக்கியை பயன்படுத்தும் உரிமைக்காலம் முடிந்தபிறகு துப்பாக்கியை வைத்திருக்கக்கூடாது, அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் எம்.ஆர்.ராதா அதைச் செய்யவில்லை. மேலும் உரிமம் இல்லாத துப்பாக்கியை குற்றத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். தன்னுடைய துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பின்னர் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.



எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயற்சி செய்ததற்குத் தூண்டுதலாக (Motive) இருந்தது, எம்.ஜி.ஆர் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு நிறைய பணமுடை இருந்தது (சுமார் 7 லட்சம் ருபாய் வரை கடன் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன).அதே சமயத்தில், எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தார். எம்.அர்.ராதாவுக்கு, எம்.ஜி.ஆரின் மீது தொழில்முறைப் போட்டி, பொறாமை இருந்தது. மேலும் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் தியாகி பட்டம்தான் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



எம்.ஆர்.ராதா தரப்பில் கீழ்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.




1. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.க-வில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை.



2. எம்.ஜி.ஆர் தான் எம்.ஆர்.ராதாவை சுட்டார் . சம்பவ இடத்துக்கு எம்.ஆர்.ராதா கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எம்.ஜி.ஆரின் ஆள்கள் தான் வெடிக்காத இரண்டு தோட்டாக்களைப் போட்டிருக்கவேண்டும்.



3. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் துப்பாக்கியை பிடுங்குவதற்காக சண்டையிட்டனர். அந்த சண்டையில்தான் எம்.ஜி.ஆருக்கு குண்டடிப்பட்டது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை வேண்டுமென்றே சுடவில்லை.



4. சம்பவத்தின் போது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நடந்த மோதலில் எம்.ஆர்.ராதாவுக்குக் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தின் காரணமாக எம்.ஆர்.ராதாவின் ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆரின் சட்டை துவைக்கப்பட்டு, அதிலிருந்த ரத்தக்கறை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு ரத்த வகைகளைப் பற்றித் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு எம்.ஜி.ஆர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்திருந்த நாடோடி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரத்த வகைகளைக் கொண்டு திரைக்கதையில் திருப்பம் கொண்டுவந்திருந்ததை சுட்டிக்காட்டினார்.



5. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வாசுவிடம் இருந்தது. அதை அவர் வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டுவிட்டுதான் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது.



6. எம்.ஆர்.ராதா பிரபல நாடக நடிகர். அவர் நாடகங்களில் நடிப்பதால் மாதந்தோறும் அவருக்கு 50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர் கடன்பட்டார் என்று அரசு தரப்பில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.


7. எம்.ஆர்.ராதா சம்பவத்துக்குப் பிறகு காவல்துறைக்கு தான் கைப்பட எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ‘எனது முடிவு’ என்ற தலைப்பு கொண்ட அறிக்கை உண்மையாக எம்.ஆர்.ராதாவால் எழுதப்படவில்லை. (எம்.ஆர்.ராதா அந்த அறிக்கையில், கொள்கைக்காகவும் கட்சி நலனுக்காகவும் தற்கொலை தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது). எம்.ஆர்.ராதா கையெழுத்து அடங்கிய வெற்று காகிதத்தில், காவல்துறை தங்களுக்குத் தேவையான விவரங்களை பதிவு செய்து அதை எம்.ஆர்.ராதா கொடுத்த வாக்குமூலமாக ஜோடித்திருக்கிறார்கள்.

 எம்.ஆர்.ராதா வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்துக்கு அரசு தரப்பில் மறுவாதம் வைக்கப்பட்டது.



1. ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்கு குற்றம்புரிவதற்கு தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதைப்பற்றி அலசிஆராயவேண்டும். எம்.ஆர்.ராதாதான் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்திற்காக எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.



2. துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்க்கருவிகளில் நிபுணர் (Fire-arms expert), தன்னுடைய சாட்சியத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டு எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாநிலத் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் தன்னுடைய ஆய்வறிக்கையில், எம்.ஆர்.ராதாவின் தலையிலிருந்தும் கழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய மேற்படி நிபுணர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேட்டி கட்டிக்கொண்டு வரும் ஒருவரால் தன்னுடைய இடுப்பில் வைத்து மறைத்து எடுத்து வர முடியும் என்று தெரிவித்தார்.



3. குற்றம் விளைந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் துப்பாக்கியை பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அந்த துப்பாக்கியை எம்.ஆர்.ராதா பிடுங்கியவுடன் எம்.ஜி.ஆர் குனிந்திருப்பார். தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பார். இது நடக்கவில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து பார்க்கும் பொழுது, துப்பாக்கி மிக அருகாமையிலிருந்து எந்த போராட்டமும் நடைபெறாத சமயத்தில் வெடித்திருப்பது தெரிகிறது.



4. எம்.ஆர்.ராதாவையும் வாசுவையும், எம்.ஜி.ஆர் தன் வீட்டுக்கு வந்த போது இரு கைகளையும் கூப்பி வரவேற்றிருக்கிறார். அவர் பாலியஸ்டரால் ஆன உடையை உடுத்தியிருந்தார். எம்.ஆர்.ராதாவைப்போல் ஷால் எதுவும் அணியவில்லை. உடம்பில் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்தால், பாலியஸ்டர் துணி மெலிதாக இருப்பதால் அதன் வழியாகத் தெரிந்துவிடும்.



5. தான் எந்த துப்பாக்கியால் சுடப்பட்டோம் என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் தன்னை முதலில் சுட்டார் என்று எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் துப்பாக்கியால் தன்னை சுட்டாரா அல்லது தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டாரா என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை.



6. எம்.ஜி.ஆரும் வாசுவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார்.



7. எம்.ஆர்.ராதாவுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும்போது, அவர் தனக்குத்தானே அதை ஏற்படுத்திக்கொண்டார் என்பது தெரிகிறது.
8. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சண்டை நடந்தது என்று நிரூபிக்கப்படாததால், எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது என்று சொல்வதும், மேலும் அந்த காயத்தினால் ஏற்பட்ட ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. சட்டை துவைக்கப்பட்டது, அதனால் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.



9. வாசு முக்கிய சாட்சி. ஒரே சாட்சி. அவர்தான் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். குற்றத்தைப் பார்த்திருக்கிறார். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர் கைக்கு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இரண்டு பேரும் குண்டடிப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்னவாகும் என்று யாரும் சொல்ல முடியாத நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கே போலீஸ் தன்னை குற்றவாளியாக கருதிவிடுமோ என்ற எண்ணம், எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படுவது சகஜம்தான். தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான், வாசு துப்பாக்கியை காவல் துறையினருக்கு ஒப்படைக்காமல், வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு நடக்க முடிவெடுத்திருக்கிறார். இதில் ஏதும் தவறில்லை.



10. எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடித்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்திருந்தால், அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு கடன் எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்? கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதாவுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தது உறுதியாகிறது.



11. எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆரின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, அதனால் எம்.ஜி.ஆரைப் பற்றி நாத்திகம் என்ற பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர்.ராதா தவறாக நினைத்திருக்கிறார்.



ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர் கட்சி பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்.



அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.ஆர்.ராதா தான் குற்றவாளி என்று முடிவு செய்து அவருக்குத் தண்டனை வழங்கினார். 262 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்கு பின்வருமாறு தண்டனைகளை வழங்கினார்.


1. எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

2. தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறை தண்டனை;

3. உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

4. துப்பாக்கியை வைத்து சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.


அனைத்து தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவின் வயதை கருத்தில் கொண்டுதான் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு அப்போது வயது 56.


தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு எம்.ஆர்.ராதாவைக் காவல் துறையினர் கைது செய்து கூட்டிச்சென்றனர். குற்றம் நடந்த தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரை எம்.ஆர்.ராதா ஜாமீனில் வெளிவரவில்லை.

செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை, 7 ஆண்டுகளிலிருந்து 3 1/2 ஆண்டுகளாக குறைத்தது.



இந்த வழக்கில் அனைவரும் வியந்த விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆச்சர்யம்! இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் வியந்தனர்.
காரணம் இதுதான். எம்.ஆர்.ராதாதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் தன்னுடைய வீரியத்தை (Muscle Velocity) இழந்திருந்தன. குறிப்பிட்ட இலக்கை வேகமாகச் சென்று தாக்கும் திறனை குண்டுகள் இழந்திருந்தன. அதனாலதான் உயிர் போகும் அளவுக்கு பெருத்த சேதம் எதையும் ஏற்படுத்தமுடியவில்லை.



எம்.ஆர்.ராதா குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் 1950ம் ஆண்டு வாங்கியிருக்கிறார். குற்றம் நடந்த ஆண்டு 1967ல். இந்த இடைப்பட்ட 17 ஆண்டுகளில் எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தன்னுடைய மேஜையின் டிராவில் வைத்திருந்தார். எம்.ஆர்.ராதாவின் டிரா ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும், தோட்டாக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவேதான் தோட்டாக்கள் தன்னுடைய வீரியத் தன்மையை இழந்துவிட்டன. தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் இவ்வாறு ஒரு புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.



தண்டனைக் காலம் முடிந்த பிறகு, எம்.ஆர்.ராதா நிறைய நாடகங்களில் நடித்தார், சில திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் அகற்ற விரும்பவில்லை. குண்டை தொண்டையிலிருந்து அகற்றுவதை விட, அகற்றாமல் விட்டு விடுவதே உசித்தம் என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். (மாவீரன் நெப்போலியனுக்கு போர்க்களத்தில் சண்டை இடும்போது குண்டடிபட்டு உடலில் குண்டு தைத்தது. அதை அவருடைய மருத்துவர்கள் அகற்றவில்லை. நாளடைவில் அந்தக் குண்டு நெப்போலியனின் உடலில் கரைந்து விட்டது).
எம்.ஜி.ஆர் ஒருமுறை தும்மியபோது, கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு நகர்ந்து தொண்டைக்கு வந்துவிட்டது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சையால் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.



1973 ஆம் ஆண்டு பெரியார் மறைந்த இறுதிச் சடங்கில் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேசினர். நட்பு பாராட்டினர். எம்.ஆர்.ராதா தான் செய்த குற்றத்திற்காக, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தியும் உண்டு.


1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 72 வது வயதில் மரணமடைந்தார்.



1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல்வரானார். அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.



Thanks : tamilpaper.net


S.P. சொக்கலிங்கம்