Wednesday, May 30, 2012

MGR vs Radha: 1967ல் உண்மையில் நடந்தது என்ன?"சுட்டான் ; சுட்டேன்!"


தையும் சுவைபடச் சொன்னாலே போதும் அது எவ்வளவுதான் பழைய விடயமானாலும் அதற்கு ஒரு தனிக் கம்பீரம் வந்து விடும் என்பதை இதன் கீழுள்ள ஒரு கட்டுரையைப் படித்போது உணரக் கூடியதாக இருந்தது.   அதிலும் அது நடுநிலை தவறாமல் அநாவசிய புகழ்பாடல்கள் இல்லாமல் சமநிலையாக எழுதப்பட்டிருந்தால் கேட்கவும் வேண்டுமா? அதன் அழகே தனி அல்லவா?

தமிழகத்தின் மக்கள் திலகம் என்று அன்றும் இன்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் DMK திமுகவின் உறுப்பினராக இருந்தவேளை தனது சக நடிகரும் ஈ.வே.ரா. பெரியாரின் திகவின் விசுவாசியுமான நடிகவேள் ராதா வினால் ('சித்தி' தொலைக்காட்சி நாடகம் புகழ் ராதிகாவின் தந்தை) சுடப்பட்ட செய்தி யாவரும் அறிந்த விடயம்தான்.


இது நடந்தது 1967ம் ஆண்டில்...


தமிழ்பேப்பர் இணையத்தில் எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் எழுதியிருக்கின்றார்.வாசித்துப் பாருங்கள்!


-'Mutur' Mohd. RafiHere you're:
எம்ஜியார் கொலைமுயற்சி வழக்கு
1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் விசாரித்ததில், திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதா தன்னை காதருகே சுட்டதாகத் தெரிவித்தார். குண்டு எம்.ஜி.ஆரின் காதை உரசிக்கொண்டு அவரது தொண்டையில் போய் பாய்ந்தது. எம்.ஆர். ராதா அங்கு தனக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களிடம், “நான்தான் எம்.ஜி.ஆரை சுட்டேன்” என்று தெரிவித்தார். காவல்துறைக்கு தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டேன் என்றார்.
செய்தி கேட்டு, எம்.ஜி.ஆரைக் காண மருத்துமனையில் கூட்டம் திரண்டது. சுமார் 50,000 பேர் மருத்துவமனையில் கூடிவிட்டதாக ஒரு செய்தி உண்டு.
எம்.ஆர்.ராதா ஆதரவாளர்களும், அவருடைய நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர். சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் குழுமினர். திமுகவின் அண்ணாதுரை, கருணாநிதி, நடிகர் அசோகன் என்று அனைவரும் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டரின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்தது ஒரு விபத்தல்ல. பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர், தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரும் சட்டமன்றத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாபுரம் இல்லத்துக்கு எம்.ஆர். ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.கே.என்.வாசுவும் சென்றிருக்கிறார்கள்.எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்தன. ‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’

ஆனால் 'பெற்றத்தால்தான் பிள்ளையா' என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு காவல்துறையினரிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்ட்டி விருப்பம் தெரிவித்தது. அந்த பார்ட்டி சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்த பார்ட்டிக்காகத்தான் நானும் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.’ (இந்தத் தகவல் பொய் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. காரணம் காவல்துறையினர் அசோகா ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எந்த சினிமாக்காரரும், வாசு குறிப்பிட்ட சமயத்தில் ஹோட்டலில் தங்கவில்லை என்று தெரியவந்தது).
மேலும், வாசு தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை மேற்சொன்ன காரணத்துக்காக அவரைச் சந்திக்கவேண்டுமென்று பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று காலம் தாழ்த்தி திரும்பியதால், ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலை கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் வாசு தெரிவித்ததாவது, ‘எம்.ஜி.ஆர் எங்கள் இருவரையும் வரவேற்றார். பின்னர் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய தொழிலை எம்.ஜி.ஆர் நாசம் செய்துவிட்டார் என்று கூறியபடியே கோபத்துடன் எழுந்து எம்.ஆர்.ராதா வெளியே செல்ல முற்பட்டார். பின்னர் எம்.ஆர்.ராதா தன்னுடைய வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரைச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எம்.ஜி.ஆரின் இடது காதை உரசிக்கொண்டு போய் அவருடைய தொண்டையில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் எம்.ஆர்.ராதாவின் மீது பாய்ந்து, எம்.ஆர்.ராதா மேலும் துப்பாக்கியால் சுடாமல் தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள்ளாக எம்.ஆர்.ராதா தன்னைத் தானே கழுத்திலும், நெற்றிப்பொட்டிலும் சுட்டுக்கொண்டார்.’
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டி. எம்.ஆர்.ராதாவுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று ராதா நினைத்தது.


2. பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன்னுடன் பல மடங்கு வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

 எது எப்படியோ, எம்.ஜிஆரை அவருடைய இல்லத்தில் வைத்தே கைத்துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர். ராதா. பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பிரபலமான வசனத்தையும் பேசியிருக்கிறார். குண்டு காயங்களுடன் இருந்த இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் உதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை அறிந்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.கவினருக்கும், எம்.ஆர்.ராதா ஆதரவு திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று அறிந்த அரசு, சென்னையில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்படியிருந்தும் காவல் நிலையங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பரங்கிமலையில் இருந்த எம்.ஆர்.ராதாவின் தோட்டம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, காவல்துறை கண்ணீர் புகை வீசியும் லத்தித் தாக்குதல் நடத்தியும் கலைத்தது.துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.ராதாவைக் கைது செய்து விசாரணை நடத்தியது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் எம்.ஆர்.ராதா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் காவல்துறை எம்.ஆர்.ராதா மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பெரிய வழக்குகளை விசாரிக்க மாஜிஸ்டிரேட்டுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், அவர் வழக்கை செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் தி.மு.கவே கூட எதிர்பார்க்கவில்லை. அண்ணாதுரை கூட நடந்து முடிந்த தேர்தல்களில் சட்டசபைக்காகப் போட்டியிடவில்லை, நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிட்டார்.தமிழகத்தில் மூன்று முறை (சுமார் 10 ஆண்டுகள்) முதலமைச்சராக இருந்த காமராஜர், 1967ம் ஆண்டு நடக்கவிருந்த தேர்தல் சமயத்தில், ஒரு கார் விபத்தில் காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரைப் பேட்டி எடுத்தபோது, தான் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று பேட்டி கொடுத்தார். ஆனால் நடந்தது வேறு. காமராஜர், தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற இளைஞரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் கூட தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சி, ஒரளவுக்கு ஊழல் இல்லாமல் நல்ல முறையில்தான் நடந்தது. இருப்பினும் 1967 தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், ஆட்சி செய்தவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளிதான்.
புதிய ஆட்சி அமையவிருந்த தருணத்திலேயே, மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான இடைவெளி குறையத் தொடங்கியது. 1967 தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கவினர் பதிவியேற்கும் தருவாயில், சென்னையில் கோட்டையில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டனர். அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரும், தான் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுடுவதற்கு முன்னர், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மக்களிடையே சரிந்திருந்தது என்றும், துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு அவருக்கு மக்களிடையே பெரிய அனுதாபமும், ஆதரவும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது).தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றாலும், அண்ணாதுரையின் ஆட்சியில் எம்.ஜி.ஆர் எந்தவித மந்திரிப் பதவியையும் வகிக்கவில்லை.இந்திய சுந்தரத்துக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத புதிய கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. அவ்வழக்கை விசாரித்தவர் நீதிபதி திரு. லட்சுமணன். அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், பி.ஆர். கோகுலகிருஷ்ணன் (இவர் பின்னாளில் குஜராத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்) மற்றும் பி.இராஜமாணிக்கம். எம்.ஆர்.ராதா தரப்பில் ஆஜரானவர்கள் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்களம். (இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்திருந்தார்), மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை மற்றும் என்.நடராஜன்.எம்.ஆர்.ராதாவின் மீது அரசு தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை.


1) எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றது (இ.பி.கோ – பிரிவு 307);


 2) தற்கொலை முயற்சி (இ.பி.கோ – பிரிவு 309);


 3) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது (ஆயுதச் சட்டம் – பிரிவு 25) மற்றும் ;


4) உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டது (ஆயுதச் சட்டம் – பிரிவு 27).96 நாள்கள் விசாரணை நடைபெற்றது. 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் வெப்லி ஸ்காட் .420 காலிபர் (ஒரு குழல் துப்பாக்கியின் உட்புற குறுக்களவு விட்டம்) வைத்திருந்தனர். இருவரும் தத்தம் துப்பாக்கிகளை பி.ஆர் அண்டு சன்ஸ் (P.ORR & Sons) நிறுவனத்திலிருந்து, 1950 ஆம் ஆண்டு வாங்கியிருக்கின்றனர். அதுவும் ஒரே நாளில். இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை. எம்.ஜி.ஆர் தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் ராதா தன் துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.


துப்பாக்கியை பயன்படுத்தும் உரிமைக்காலம் முடிந்தபிறகு துப்பாக்கியை வைத்திருக்கக்கூடாது, அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் எம்.ஆர்.ராதா அதைச் செய்யவில்லை. மேலும் உரிமம் இல்லாத துப்பாக்கியை குற்றத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். தன்னுடைய துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பின்னர் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயற்சி செய்ததற்குத் தூண்டுதலாக (Motive) இருந்தது, எம்.ஜி.ஆர் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு நிறைய பணமுடை இருந்தது (சுமார் 7 லட்சம் ருபாய் வரை கடன் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன).அதே சமயத்தில், எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தார். எம்.அர்.ராதாவுக்கு, எம்.ஜி.ஆரின் மீது தொழில்முறைப் போட்டி, பொறாமை இருந்தது. மேலும் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் தியாகி பட்டம்தான் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.எம்.ஆர்.ராதா தரப்பில் கீழ்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
1. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.க-வில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை.2. எம்.ஜி.ஆர் தான் எம்.ஆர்.ராதாவை சுட்டார் . சம்பவ இடத்துக்கு எம்.ஆர்.ராதா கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எம்.ஜி.ஆரின் ஆள்கள் தான் வெடிக்காத இரண்டு தோட்டாக்களைப் போட்டிருக்கவேண்டும்.3. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் துப்பாக்கியை பிடுங்குவதற்காக சண்டையிட்டனர். அந்த சண்டையில்தான் எம்.ஜி.ஆருக்கு குண்டடிப்பட்டது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை வேண்டுமென்றே சுடவில்லை.4. சம்பவத்தின் போது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நடந்த மோதலில் எம்.ஆர்.ராதாவுக்குக் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தின் காரணமாக எம்.ஆர்.ராதாவின் ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆரின் சட்டை துவைக்கப்பட்டு, அதிலிருந்த ரத்தக்கறை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு ரத்த வகைகளைப் பற்றித் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு எம்.ஜி.ஆர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்திருந்த நாடோடி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரத்த வகைகளைக் கொண்டு திரைக்கதையில் திருப்பம் கொண்டுவந்திருந்ததை சுட்டிக்காட்டினார்.5. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வாசுவிடம் இருந்தது. அதை அவர் வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டுவிட்டுதான் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது.6. எம்.ஆர்.ராதா பிரபல நாடக நடிகர். அவர் நாடகங்களில் நடிப்பதால் மாதந்தோறும் அவருக்கு 50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர் கடன்பட்டார் என்று அரசு தரப்பில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.


7. எம்.ஆர்.ராதா சம்பவத்துக்குப் பிறகு காவல்துறைக்கு தான் கைப்பட எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ‘எனது முடிவு’ என்ற தலைப்பு கொண்ட அறிக்கை உண்மையாக எம்.ஆர்.ராதாவால் எழுதப்படவில்லை. (எம்.ஆர்.ராதா அந்த அறிக்கையில், கொள்கைக்காகவும் கட்சி நலனுக்காகவும் தற்கொலை தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது). எம்.ஆர்.ராதா கையெழுத்து அடங்கிய வெற்று காகிதத்தில், காவல்துறை தங்களுக்குத் தேவையான விவரங்களை பதிவு செய்து அதை எம்.ஆர்.ராதா கொடுத்த வாக்குமூலமாக ஜோடித்திருக்கிறார்கள்.

 எம்.ஆர்.ராதா வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்துக்கு அரசு தரப்பில் மறுவாதம் வைக்கப்பட்டது.1. ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்கு குற்றம்புரிவதற்கு தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதைப்பற்றி அலசிஆராயவேண்டும். எம்.ஆர்.ராதாதான் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்திற்காக எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.2. துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்க்கருவிகளில் நிபுணர் (Fire-arms expert), தன்னுடைய சாட்சியத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டு எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாநிலத் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் தன்னுடைய ஆய்வறிக்கையில், எம்.ஆர்.ராதாவின் தலையிலிருந்தும் கழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய மேற்படி நிபுணர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேட்டி கட்டிக்கொண்டு வரும் ஒருவரால் தன்னுடைய இடுப்பில் வைத்து மறைத்து எடுத்து வர முடியும் என்று தெரிவித்தார்.3. குற்றம் விளைந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் துப்பாக்கியை பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அந்த துப்பாக்கியை எம்.ஆர்.ராதா பிடுங்கியவுடன் எம்.ஜி.ஆர் குனிந்திருப்பார். தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பார். இது நடக்கவில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து பார்க்கும் பொழுது, துப்பாக்கி மிக அருகாமையிலிருந்து எந்த போராட்டமும் நடைபெறாத சமயத்தில் வெடித்திருப்பது தெரிகிறது.4. எம்.ஆர்.ராதாவையும் வாசுவையும், எம்.ஜி.ஆர் தன் வீட்டுக்கு வந்த போது இரு கைகளையும் கூப்பி வரவேற்றிருக்கிறார். அவர் பாலியஸ்டரால் ஆன உடையை உடுத்தியிருந்தார். எம்.ஆர்.ராதாவைப்போல் ஷால் எதுவும் அணியவில்லை. உடம்பில் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்தால், பாலியஸ்டர் துணி மெலிதாக இருப்பதால் அதன் வழியாகத் தெரிந்துவிடும்.5. தான் எந்த துப்பாக்கியால் சுடப்பட்டோம் என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் தன்னை முதலில் சுட்டார் என்று எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் துப்பாக்கியால் தன்னை சுட்டாரா அல்லது தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டாரா என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை.6. எம்.ஜி.ஆரும் வாசுவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார்.7. எம்.ஆர்.ராதாவுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும்போது, அவர் தனக்குத்தானே அதை ஏற்படுத்திக்கொண்டார் என்பது தெரிகிறது.
8. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சண்டை நடந்தது என்று நிரூபிக்கப்படாததால், எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது என்று சொல்வதும், மேலும் அந்த காயத்தினால் ஏற்பட்ட ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. சட்டை துவைக்கப்பட்டது, அதனால் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.9. வாசு முக்கிய சாட்சி. ஒரே சாட்சி. அவர்தான் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். குற்றத்தைப் பார்த்திருக்கிறார். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர் கைக்கு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இரண்டு பேரும் குண்டடிப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்னவாகும் என்று யாரும் சொல்ல முடியாத நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கே போலீஸ் தன்னை குற்றவாளியாக கருதிவிடுமோ என்ற எண்ணம், எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படுவது சகஜம்தான். தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான், வாசு துப்பாக்கியை காவல் துறையினருக்கு ஒப்படைக்காமல், வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு நடக்க முடிவெடுத்திருக்கிறார். இதில் ஏதும் தவறில்லை.10. எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடித்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்திருந்தால், அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு கடன் எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்? கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதாவுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தது உறுதியாகிறது.11. எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆரின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, அதனால் எம்.ஜி.ஆரைப் பற்றி நாத்திகம் என்ற பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர்.ராதா தவறாக நினைத்திருக்கிறார்.ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர் கட்சி பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்.அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.ஆர்.ராதா தான் குற்றவாளி என்று முடிவு செய்து அவருக்குத் தண்டனை வழங்கினார். 262 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்கு பின்வருமாறு தண்டனைகளை வழங்கினார்.


1. எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

2. தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறை தண்டனை;

3. உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

4. துப்பாக்கியை வைத்து சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.


அனைத்து தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவின் வயதை கருத்தில் கொண்டுதான் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு அப்போது வயது 56.


தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு எம்.ஆர்.ராதாவைக் காவல் துறையினர் கைது செய்து கூட்டிச்சென்றனர். குற்றம் நடந்த தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரை எம்.ஆர்.ராதா ஜாமீனில் வெளிவரவில்லை.

செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை, 7 ஆண்டுகளிலிருந்து 3 1/2 ஆண்டுகளாக குறைத்தது.இந்த வழக்கில் அனைவரும் வியந்த விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆச்சர்யம்! இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் வியந்தனர்.
காரணம் இதுதான். எம்.ஆர்.ராதாதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் தன்னுடைய வீரியத்தை (Muscle Velocity) இழந்திருந்தன. குறிப்பிட்ட இலக்கை வேகமாகச் சென்று தாக்கும் திறனை குண்டுகள் இழந்திருந்தன. அதனாலதான் உயிர் போகும் அளவுக்கு பெருத்த சேதம் எதையும் ஏற்படுத்தமுடியவில்லை.எம்.ஆர்.ராதா குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் 1950ம் ஆண்டு வாங்கியிருக்கிறார். குற்றம் நடந்த ஆண்டு 1967ல். இந்த இடைப்பட்ட 17 ஆண்டுகளில் எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தன்னுடைய மேஜையின் டிராவில் வைத்திருந்தார். எம்.ஆர்.ராதாவின் டிரா ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும், தோட்டாக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவேதான் தோட்டாக்கள் தன்னுடைய வீரியத் தன்மையை இழந்துவிட்டன. தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் இவ்வாறு ஒரு புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.தண்டனைக் காலம் முடிந்த பிறகு, எம்.ஆர்.ராதா நிறைய நாடகங்களில் நடித்தார், சில திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் அகற்ற விரும்பவில்லை. குண்டை தொண்டையிலிருந்து அகற்றுவதை விட, அகற்றாமல் விட்டு விடுவதே உசித்தம் என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். (மாவீரன் நெப்போலியனுக்கு போர்க்களத்தில் சண்டை இடும்போது குண்டடிபட்டு உடலில் குண்டு தைத்தது. அதை அவருடைய மருத்துவர்கள் அகற்றவில்லை. நாளடைவில் அந்தக் குண்டு நெப்போலியனின் உடலில் கரைந்து விட்டது).
எம்.ஜி.ஆர் ஒருமுறை தும்மியபோது, கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு நகர்ந்து தொண்டைக்கு வந்துவிட்டது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சையால் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.1973 ஆம் ஆண்டு பெரியார் மறைந்த இறுதிச் சடங்கில் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேசினர். நட்பு பாராட்டினர். எம்.ஆர்.ராதா தான் செய்த குற்றத்திற்காக, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தியும் உண்டு.


1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 72 வது வயதில் மரணமடைந்தார்.1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல்வரானார். அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.Thanks : tamilpaper.net


S.P. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment