Tuesday, May 29, 2012

வலிசுமந்து ஒரு வரம்:









மாரி:

நீ ஒரு நிஜ ஹீரோ!







சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.



“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.



மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய்,



“அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.



மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.


ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.



இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.



தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார்.



“ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.



அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.


அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.



இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.



இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.



இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…


-'Mutur' Mohd. Rafi


Note:

"மன்னார் வளைகுடா வாழ்க்கை " எனும் தளத்தில் வெளியான கட்டுரைக்குறிப்பு இது.  இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்..

சச்சின் டெண்டுல்கர் & சாலமன் பாப்பையா ...!








 Just for a Change!






சச்சின் டெண்டுல்கர் பட்டிமன்ற நடுவராகித் தீர்ப்புக் கூற சாலமன் பாப்பையா  bat  பிடித்து கிரிக்கட் ஆடினால் எப்படியிருக்கும்? நினைக்கவே வேடிக்கையாக இருக்கின்றதல்லவா...?

பார்த்துப் பழகிய கண்களுக்கு சிறு மாறுதல்கள் கூடப் பெரிதாகத்தானே தோன்றும்.


ஒரு குறிப்பிட்ட துறையிலே மிகுபுகழோடும் வெகுபரபரப்பாகவும் இருப்பவர்கள் அதனுடன் சிறிதும் சம்பந்தமில்லாத இன்னொரு துறையிலே ஆர்வமும் ஞானமும் இருந்தால் என்ன செய்வார்கள்...?

வேறு என்ன செய்வார்கள்? கவிதை எழுதுவார்கள்!
Ok..ok!  புகழின் உச்சியிலிருக்கும் ஒருவர் எழுதிய கவிதை இது.


வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்....





-'Mutur' Mohd. Rafi


Here you are...










"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து

வெட்கத்தில் புன்னகைத்து..

கடற்கரையில் காற்றுவாங்கி..

கைபிடித்துப் பரவசமாய் நடந்து..

கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு..

கைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி...

கண்களால் பேசிச்சிரித்து...

கால்கடுக்கக் காத்திருந்து...

காதுபிடித்து மெல்லத்திருகி...

கண்ணீரோடு கட்டியணைத்து..

கண்பொத்தி விளையாடி..

இடிக்குப்பயந்து தோளில் சாய்ந்து..

செல்லமாய் நெஞ்சில் சாய்ந்து...

பேசாமல் இருந்து தவிக்கவிட்டு...

கோயில்சுற்றி குளம்சுற்றி...

மழைரசித்து நனைகையில்...

துப்பட்டாவில் குடைவிரித்து...

புத்தகத்தில் கடிதம் மறைத்து...

மணிக்கணக்கில் தொலைபேசி..

அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி..

'அவர் ரொம்ப நல்லவர்மா' என

அழுதுபுலம்பி அம்மாவிடம் சொல்லி...

ஒருவழியாய் வெற்றிகொள்கின்ற

காதல் திருமணங்கள்போல

இனிப்பதில்லை-

இன்டர்நெட்டில் தேடியலைந்து

பத்துக்குப்பத்து பொருத்தம் பார்த்து

பண்ணுகின்ற திருமணங்கள்!


-கமல்ஹாஸன்

Sunday, May 27, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி








நிழலாக சில நிஜங்கள்









ராஜீஸுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இன்று மாலை ஸனீராவிடம் எப்படியாவது விசயத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. இனிமேலும் அதைச் சொல்லவில்லை என்றால் அவன் எதற்காக ஸனீராவுக்கு அதுவும் அவள் வீட்டுக்கே சென்று பாடம் சொல்லித் தரச் சம்மதித்தானோ அந்த நோக்கமே வீணாகிவிடும்.

படுக்கையை விட்டு எழுந்தவன் நேரத்தைப் பாரத்ததும் சுறுசுறுப்பானான். டவலை எடுத்துக்கொண்டு சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த தன் தாயைக் கூப்பிட்டு டீ தர நினைவுபடுத்தி விட்டு கிணற்றடிக்குச் சென்றான்.


ராஜீஸ் இருபத்து மூன்று வயதை கடந்த மார்ச் மாதத்தில் முடித்திருக்கும் திடகாத்திரமான கெட்டிக்கார இளைஞன். குடும்பத்தில் ஒரே பிள்ளை. தந்தை உள்ளுர் பாடசாலையொன்றில் ஆசிரியராக இருக்கின்றார். ராஜீஸ் கண்டியிலுள்ள பிரபல கல்லூரியொன்றில் படித்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருக்கின்றான். உயர்தரப்பரீட்சை எழுதிய பின்பு சில மாதங்கள் வரை கண்டியில் தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் ஊருக்கு வந்து ஒருமாதத்துக்கு மேலாகின்றது.

'ஆகாய வெண்ணிலாவே..தரைமீது வந்ததேனோ...அழகான..'  ஜேசுதாஸின் பாடல் ஒன்றுடன் கிணற்றடியிலிருந்து ஈரமாய் வந்த ராஜீஸை தாயின் குரல் இடை மறித்தது.

'தம்பி, இன்னைக்கும் பாடமா?'

'ஏம்மா ஏதும் வேலையிருக்கா?' எங்கே இன்று ஸனீராவைச் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற தவிப்போடு கேட்டான் ராஜீஸ். இன்றைக்குத் தவறினால் அந்த விசயத்தைச் சொல்லவே முடியாமலாகிவிடும் என்பது அவன் தாய்க்கு எப்படித் தெரியும்?

'வேற ஒண்ணுமில்ல, உனக்கிட்ட சொல்ல மறந்திட்டனே..நேத்துக் காலைல அவ வந்தா..' என்று நிறுத்திய தாயை 'யார்' என்பது போல திரும்பிப் பார்த்தான்.

'அதுதான் தம்பீ, நம்ம ஸனீராட உம்மா! எப்பிடி நல்லாப் படிப்பிக்கிறானான்னு கேட்டேன். ஓ! இப்பதான் மகள் விஞ்ஞானப் பாடத்தை விரும்பிப் படிக்குது என்றா...'

'............'

'அது சரி, நீ என்ன.. படிப்பிச்சு முடிஞ்சா ஒரு நிமிசம் அவங்க வீட்ல நிக்கிறதில்லியாமே.. ஏன் தம்பி, கொஞ்ச நேரம் இருந்துதான் வாயேன்...மாஸ்டர் வாப்பாக்கிட்ட குறைபட்டாராம்' என்றவாறு டீயை நீட்டிய தாயிடம் ஏதோ சொல்ல வந்தவனுக்கு ஸனீராவிடம் தான் சொல்லப்போகும் விடயம் நினைவுக்கு வந்தது. பேசாமல் டீயைக் குடித்து விட்டு 'ட்ரெஸ்' செய்து கொண்டு சைக்கிளை வெளியிலெடுத்தான் ராஜீஸ்.


தூரத்தில் எங்கேயோ ஒரு குயில் விடாமல் கூவிக்கொண்டிருந்தது.
***







மாலை 6.30

'தாக்கவீதத் தொடரில் மேலேயுள்ள மூலகங்கள் கீழேயுள்ள மூலகங்களை அவற்றின் உப்புக் கரைசலிலிருந்து இடம்பெயர்க்கும்..விளங்கிட்டுதானே? ஆகவே  நாகம், செப்புச்சல்பேற்றுக் கரைசலில் செப்பை இடம்பெயர்க்கும்...சமன்பாடு எழுதுங்க'

ஸனீராவுக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ். ஸனீரா, அவன் கொடுத்த இரசாயனச் சமன்பாடுகளை எழுதிக்கொண்டிருந்தாள்.  கையிலிருந்த சோக் பீஸை யன்னலினூடாக எறிந்து விட்டு ஸனீராவின் அருகில் கதிரை ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்து அவள் எழுதுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.

ஸனீரா!


ராஜீஸின் தந்தையின் பால்ய நண்பரும் ஊரிலே குறிப்பிடக்கூடிய பசையுள்ள புள்ளிகளில் ஒருவருமான ஜமால் ஆசிரியரின் ஒரே மகள். பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றாள். நிறம் சற்றுக்குறைவானாலும் வசீகரமானவள்.

சிறுவயதிலிருந்தே ராஜீவ் வெளியூரில் படித்ததால் நெருங்கிய உறவினர்களைத் தவிர ஊரில் பலரை அவனுக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் இப்போது ஊருக்கு வந்த ஒன்றரை மாதத்தில் அவனது தந்தையை பாடசாலை வேலையாக வீட்டிற்குத் தேடிவருகின்ற சிலரையாவது தெரிந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறுதான் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியரையும் அறிந்து கொண்டான் ராஜீஸ்.

ஜமால் ஆசிரியர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் ராஜீஸுடன் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பார். அவனது படிப்பு, எதிர்கால நோக்கம் பற்றியெல்லாம் மிகுந்த அக்கறையோடு கேட்பார். ராஜீஸின் தந்தையுடனான தனது இளமைக்கால நட்பு நெருக்கங்களையெல்லாம் விபரித்து இன்றும் அது இனிதாகத் தொடர்வது பற்றிப் பெருமையாகச் சொல்லுவார்.   அவன் வந்த ஒரு வாரத்திற்குள்ளே இரண்டு தடவை அவனைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கின்றார். அவன் தயங்கிய போதெல்லாம்,


'ராஜீஸ்! ஒரு மனிதர் நம்மை மதித்து வீட்டுக்கு அழைத்தால் அதைச் சந்தோசமாக  ஏற்க வேண்டும். அதுதான் பண்பு' என்ற தந்தையின் விருப்பத்திற்காக மறுக்காமல் சென்று வருவான். அப்போதெல்லாம் தனது தந்தையுடனான நட்பின் காரணமாகவே ஜமால் ஆசிரியர் தன்மீது அதிக அக்கறை  காண்பிப்பதாக எண்ணியிருந்தவனுக்கு அந்த அக்கறையின் உண்மையான காரணம் ஒருநாள் தெரியவந்தும் அதிர்ச்சியடைந்தான் ராஜீஸ்.


அவனால் அதை நம்பவே முடியவில்லை. அதன்பிறகு ஜமால் ஆசிரியர் வீட்டுக்கு வந்த போதெல்லாம் ராஜீஸ் முன்புபோல முகம் கொடுத்துப்பேச முடியாமல் சங்கடப்பட்டான். அவர் தந்தையைச் சந்திப்பதற்கு வரும்போதெல்லாம் மெல்ல நழுவி விடுவான். அப்படியும் எதிர்பாராமல் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டான்.

'என்ன தம்பிய காணவே கிடைக்குதில்ல...'

'ஓ! அது..வந்து..சும்மா கொஞ்சம் வேலை' இழுத்துச் சமாளிக்க முயன்றான். உடனடியாக 'ரெடிமெட்' பொய் வராத தன் நேரத்தை நொந்து கொண்டான்.

'அப்படியா! இல்ல மகன் வீட்ல சும்மாதான் இருக்குன்னு  தம்பிட வாப்பா சொன்ன மாதிரி ஞாபகம்...'  அவர் விடுவதாக இல்லை.

ராஜீஸுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. காட்டிக் கொள்ளாமல், 'இன்னும் கொஞ்ச நாள்ல யுனிவசிட்டி தொடங்கிடுவாங்க...அதுவரைக்குமதான்... இப்பிடி...'

'ஆ! தம்பி ஸயன்ஸ்தானே? நம்மட மகளுக்கு...ஸனீராவைத் தம்பிக்குத் தெரியும்தானே? ஸயன்ஸ்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு. சும்மாயிருக்கிற நேரம் கொஞ்சம் வீட்ட வந்தா...'

அவனுக்குப் புரிந்தது.

'ஏன்தான் வாப்பா இப்படியெல்லாம் சொல்லி மாட்டி விடுறாங்களோ?' மனதிற்குள் தந்தையைக் கோபித்துக் கொண்டிருந்தவனுக்கு மின்னலடித்தது போல அந்த 'ஐடியா' மூளையில் பளிச்சிட்டது. தன் திறமையைத் தானே உள்ளுர மெச்சிக் கொண்டான். அவன் பதிலுக்காகக் காத்திருந்தவரிடம் மலர்ந்த முகத்துடன் சம்மதித்தான்.

அப்படித் தொடங்கியதுதான் இந்தத் தனி வகுப்பு.


'என்ன  ஸனீரா, உன்ட ஸேருக்கு யோசனை எங்கேயோ போயிட்டுது போல?'
திடுக்கிட்டு சுயநினைவுக்குத் திரும்பியவன் எதிரே ஸனீராவின் தாய் டீயுடன் சிரித்துக் கொண்டே நின்பதைக் கண்டான். சிரித்தவாறு டீயை வாங்கி மேசையில் வைத்தான்.

'ஆறிடப் போகுது குடிச்சிட்டு யோசிங்க.. ஸனீரா எடுத்துக் குடு!'  என்று அவர் திரும்பிப் போனதும் டீயைத் தானே எடுத்துக் குடித்து விட்டுக் கப்பை வைத்தான் ராஜீஸ். ஸனீரா தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். வெளியே இலோசாக மழைதூறிக் கொண்டிருந்தது.

'ஸனீரா!'

எழுதிக் கொண்டிருந்தவள் தலையை நிமிர்த்தி, 'என்ன?' என்பதுபோல புருவங்களை உயர்த்தினாள். அவள் பெரிய விழிகளில் தெரிந்த பளபளப்பு அவனை ஒரு கணம் பேசவிடலாம் வசீகரித்தன. மேசையில் ஆறிக்கொண்டிருந்த அவளின் டீ கப்பைக் காட்டினான். அவள் புன்னகைத்தவாறே தனது டீயை எடுத்துக் கொண்டாள்.

'ஸனீரா, நான் ஏற்கனவே சொன்னபடி இன்னையோட இந்த க்ளாஸ்ஸை முடிப்போம். நான் படிப்பித்த பகுதிக்குள்ளே ஏதாவது விடுபட்டிருக்குமா? இருந்தா கேளுங்க.. ஏனென்னடா இனி எனக்கும் கெம்பஸ் தொடங்கிவிடும்....'

அவன் முடிக்கவில்லை.

'ஒரு நிமிசம் இருங்க!' என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவள் சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு அழகான புத்தகமொன்றை நீட்டினாள்.

' அட! என்ன இது?' புரியாமல் பார்த்தவனிடம், 'இது வெளிநாட்டிலிருந்து கிடைத்த நோட்புக். உஙகளுக்கு என்ட சின்ன ஒரு கிப்ட்!' என்று தயங்கியவாறு சொன்னாள் ஸனீரா.

'ஓ! தேங்க்யூ! வெரிமச்' என்று அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு மேசையில் வைத்துவிட்டு, 'அதிருக்கட்டும் ஸனீரா, உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேசவேணும்.' என்று யாராவது வருகிறார்களா என்று சுற்றிலும் பதட்டமாகப் பார்த்தான் ராஜீஸ்..

ஸனீரா கெட்டிக்காரி மட்டுமல்ல, பழகுவதற்கும் இனிமையானவள். இத்தனை நாளும் விஞ்ஞானப்பாடம் சொல்லித்தர ஒத்துக்கொண்டதற்கு காரணமே இன்னும் சிறிது நேரத்தில் ராஜீஸ்  அவளிடம் சொல்லப்போகும் விடயம்தான். ஆனாலும் அதை அவன் முழு ஈடுபட்டுடன் செய்ய முடிந்ததே அவளது திறமையினால்தான்.

'எ.. என்ன விசயம்?' ராஜீஸின் பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது.

'ஸனீரா, நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேணும்...செய்வீங்களா?'

'உதவியா? என்ன உதவி..' அவள் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன.

'அது..வந்து..சொல்றேன்! ஆனா உங்க வாப்பா, உம்மா, வேற யாருக்கிட்டயும் இதைச் சொல்லக் கூடாது..முடியுமா?'

'ஆங்.. சரி! அது என்ன உதவி?'
'ஸனீரா, உங்க வாப்பா,  உங்களுக்கு என்னைச் சம்பந்தம் பேசியிருக்கும் விசயம் தெரியும்தானே?'

அவள் பதில் கூறாமல் தலையைக் குனிந்திருந்தாள். 'ஆனா ஸனீரா, நான் கண்டியில ஒரு கேளை விரும்பிட்டிருக்கிறேன்...'


தலைகுனிந்திருந்த ஸனீரா சட்டென நிமிர்ந்தாள்.

'அவளைத்தான் நான் மெரி பண்றதாகவும் முடிவும் பண்ணிருக்கிறேன்... ஆனா இங்க ஊருக்கு வந்த பிறகுதான் உங்களை எனக்கு முடிவு செய்ய நம்ம இருவர் வீட்டிலும் ஏற்பாடு நடந்திருப்பது தெரிய வந்தது. ஆனா..'

அவள் விழிகளில் கண்ணீர் குளமாய்த் ததும்பியது. அவளது உதடுகள்
எதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்க யாராவது வந்து விடப் போகின்றார்களே என்ற பயத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.

'ஸனீரா, ஐம் ஸோ ஸொறி! அழாதிங்க! யாராவது வந்து பாத்தா ரெண்டு பேரையும் பிழையா நினைக்கப் போறாங்க! உங்களைப் பிடிக்காததாலதான் இப்படிச் சொல்றேனென்டு நினைக்காதீங்க..அங்க கண்டியில அந்த கேள் என்மேல உயிரையே வச்சிருக்கா..என்னால அவளுக்கு எதாவது ஏமாத்தம் வந்தா தாங்கவே மாட்டா...!'

'இந்த விசயத்தை எங்க வீட்ல சொன்னா என்னை இவ்வளவு படிக்க வச்சு ஆளாக்கின எங்க உம்மா வாப்பா தாங்க மாட்டாங்க. நான் இல்லையென்டா உடனே இன்னொரு நல்ல மாப்பிள்ளையைக் கூட பேசுகிற வசதி உங்க வாப்பாக்கிட்ட இருக்கு.! ஆனா என்ன நம்பியிருக்கிற அந்த ஏழைப் பிள்ளைக்கு அந்த வசதியில்லாமில்ல, ஸனீரா! அதனால நீங்களே என்னைப் பிடிக்கயில்ல என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும். எனக்காக இல்லாட்டாலும்  தகப்பனில்லாத ஒரு ஏழைப் பிள்ளைக்காகவாவது இந்த உதவியை..'

அதற்குள் யாரோ வருவது போலிருக்கவே அவசரஅவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினாள் ஸனீரா.

'என்ன ஸனீரா? பாடமெல்லாம் முடிஞ்சுதா?' என்றவாறு வீட்டுக்குள்ளே வந்தார் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியர். மகளின் வகுப்பு இன்றுடன் நிறைவடைவது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காகக் கேட்டுவைத்தார்.

'ஓம், எல்லாமே முடிஞ்சுட்டு வாப்பா!'  ராஜீஸைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினாள் ஸனீரா.

சிறிது நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ராஜீஸ் விடைபெற்றுக் கொண்டான்.
 ***





 'உம்மா! உம்மா!'

கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த ராஜீஸ் கையிலிருந்த விஞ்ஞானப்பயிற்சிப் புத்தகத்தையும் ஸனீரா தந்த நோட்புக்கையும் மேசையில் எறிந்தான். எறிந்த வேகத்தில் அந்த நோட்புக்கினுள்ளிருந்து ஒரு சிவப்புநிறக் கவர் ஒன்று எகிறி விழுந்தது. அதைச் சந்தேகமாகய் எடுத்துப் பார்த்தான்.


அது ஒரு கடிதவுறை. அதன்மேல் அவனது பெயர் எழுதப்பட்டிருந்தது. அவசர அவசரமாய் பிரித்துப் படித்தான்.

அன்புள்ள ராஜீஸ்,

என்னை மன்னிக்கவும். என் படிப்பில்  இத்தனை நாளாக உதவி புரிந்து வரும் உங்களிடம் நான் என் வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் உதவியை எதிர்பார்க்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

எங்கள் வீட்டில் எனக்கு உங்களைத் திருமணம் பேசுவதற்கு ஆயத்தம் புரிகின்றார்கள். இது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் நான் வேறு ஒருவரை விரும்புகின்றேன். அவர் இப்போது ஊரில் இல்லை. வெளிநாட்டிலிருக்கின்றார். ஒருவரை மனதார விரும்பி விட்டு இன்னொருவரை மணப்பது சரியா? உங்களைப் பிடிக்கவில்லை என்று நான் ஒரு பெண்பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் சொல்ல முடியாது. சொன்னால் வாப்பா கொன்றே விடுவாங்க.. ஆனால் நிங்க நினைத்தால் சொல்ல முடியும்.

உங்களை மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பழகும் ஒரு சகோதரனாக எண்ணி இந்த உதவியைக் கேட்கின்றேன். எனக்காகச் செய்யுங்கள். இந்தக் கடிதத்தை நோட்புக்கினுள் வைத்திருக்கின்றேன். என்னைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.

இப்படிக்கு

ஸனீரா.


ராஜீஸுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.




-மூதூர் மொகமட் ராபி
(1990.12.18)

Note:

இதுதான் நான் எழுதி -முழுமையாக எழுதி முடித்து - வெளிவந்த முதல் சிறுகதை என்று நம்புகின்றேன். இப்போது வாசித்துப் பார்க்கும்போது கற்றுக்குட்டித்தனமாக இருக்கின்றது. இது 1991 அல்லது 1992 ல் இலங்கை வங்கி அலுவலர் திரு. பக்கீர்த்தம்பி  ஆசிரியராக இருந்து வெளியிட்ட 'முத்தொளி' சஞ்சிகையில் பிரசுரமானது - 'Mutur' Mohd.Rafi

Thursday, May 24, 2012

www.kinniya.net ஆன்மீகம் : ஒரு கருத்துரை!








ஆன்மீகச்சூழல் Vs தொலைக்காட்சி





அன்புள்ள நண்பர்களே,


கிண்ணியா நெற் www.kinniya.net இணையத்தளத்திலே கடந்த May 20ம் திகதி ஆன்மீகம் எனும் பகுதியில் 'ஆன்மீகச் சூழல் அற்றுப்போகும் முஸ்லீம் வீடுகள்' எனும் ஒரு சிறு கட்டுரை வெளியாகி இருந்தது.  மௌலவி எம்.எஸ். எம். இம்தியாஸ் ஸலஃபி என்பவர் அதனை எழுதியிருந்தார். அவர் தனது ஆக்கத்தில் இன்றுள்ள நமது முஸ்லீம் இல்லங்களிலே பொழுதுபோக்குச் சாதனங்களின் குறிப்பாக தொலைக்காட்சியின் பாவனையால் ஆன்மீகச்சூழல் அற்றுப்போய்க்கொண்டிருப்பதைப் பற்றிய தனது விசனத்தையும் தெரிவித்திருந்தார்.

இது ஒரு முக்கியமான விடயம் என்பதால் இதுபற்றிய எனது பார்வையையும் சில கருத்துரைகளையும் அவரது ஆக்கத்தின் கீழேயுள்ள கருத்துரைப் பெட்டியிலே தெரிவிக்க முயன்றேன். ஆனால் அது கைகூடவில்லை. பலமுறை முயன்றும் தொழினுட்பக் காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ கருத்துரை அதிலே வெளியாக மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தது.

வழமையாக கிண்ணியாநெற் தளத்திலே வெளியாகும் என்னைக் கவர்ந்த ஆக்கங்கள் மற்றும் செய்திகளுக்கு விமர்சனம் எழுதிவருகின்றவள் நான். இதுவரை அதற்கு எதுவித மறுப்பும் ஏற்பட்டதில்லை என்பதானால் உடனடியாக வேறுவித காரணங்களை நினைக்க என்னால் முடியவில்லை. சரி, தொழினுட்ப 'கோளாறு' மட்டுமே காரணமாக இருக்கவேண்டும் என்று நம்பத்தான் நானும் விரும்புகின்றேன்.


அதனால் அந்தக் கட்டுரைக்குரிய எனது கருத்துரையை சிறகுகளில் இடுகின்றேன். இரண்டையும் படிப்பவர்களுக்கு உண்மை மிக அழகாகப் புரியும்.


இதோ...

-Jesslya Jessly


Opinion: www.kinniya.net



ன்புள்ள மௌலவி அவர்களே,


அஸ்ஸலாமு அலைக்கும்!

ஒரு மௌலவி என்ற வகையிலே நல்ல பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசம். ஒருவீட்டிலே ஆன்மீகச்சூழல் நிலவ வேண்டும் எனும் தங்களுடைய நோக்கத்தையும் அதற்குத் தொலைக்காட்சி உட்பட இன்றைய பொழுதுபோக்குச் சாதனங்கள் அனைத்தும் இடையூறாக இருக்கின்றன என்ற ஆதங்கத்தையும் வரவேற்கின்றேன். ஆனால்.... அதைச் சொல்வதற்கு நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சில உதாரணங்களில்தான் எனக்குச் சில முரண்பாடுகள் உண்டு.

ஒரு வீட்டிலே இஸ்லாமியச் சூழல் நிலவாமைக்கு அந்த வீட்டில் வாழும் தனித்தனி மனிதர்கள் மட்டுமே பொறுப்பாக முடியுமா மௌலவி அவர்களே? நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல குடும்பத்தலைவி மட்டுமோ அல்லது பிள்ளைகள் மட்டுமோ தனியே காரணமாக இருக்க முடியாது. அந்த மொத்தக் குடும்பமும் மட்டுமன்றி சுற்றயல் சமூகமும்தான் காரணமாக இருக்க வேண்டும்.

முதலில் குடும்பத்தைப் பார்ப்போமே....


நமது முஸ்லீம் சமூக அமைப்பிலே குடும்பத் தலைவனாகிய ஆணுக்கு மனைவியைக் கட்டுப்படுத்தி வழி நடாத்தக்கூடிய அபரிமிதமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறியாதவரல்ல. அவ்வாறிருக்கும்போது ஒரு மனைவியும் அவரது பிள்ளைகளும் தனியே தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலே மட்டும் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை நுகர்ந்து வழிகெட்டுப்போக முடியுமா? அதற்கு ஏதோ ஒருவிதத்தில் குடும்பத் தலைவனான ஆண்களும்தானே காரணமாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கின்றார்கள்..?


 eg: கேபிளுக்கு இணைப்பு எடுத்துத் தருவதிலிருந்து...அதைத் தொடர்ந்து பேணுவது வரை யார் மறைமுகக் காரணிகளாக இருக்கின்றார்கள்?


பெண்களையும் பிள்ளைகளையும் குறித்து  தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப் படங்கள், பாடல்கள் மட்டும் குறிப்பிட்டுள்ள நீங்கள் வீட்டுத் தலைவராகிய ஆண்கள் நாளெல்லாம் விழுந்து கிடக்கும் கிரிக்கட் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இலட்சாதிபதி சூது நிகழ்ச்சிகளையும் சொல்லியிருக்கலாமே..?


அதை மட்டும் எப்படி மிகவும் கவனமாகத் தவிர்த்து விட்டீர்கள்... மௌலவி அவர்களே?

வரவேற்பறையில் அமர்ந்தவாறு கீழே விழுந்து கிடக்கும் பத்திரிகையை எடுப்பதற்குக்கூட சமையலறைக்குள் வேலையாக இருக்கும் பெண்களைக் கூப்பிடுவதுதானே நமது ஆண்கள் பெரும்பாலோனோரின் இயல்பே. இவ்வாறான ஆண்களினால்தான் வீட்டிலிருக்கும் பெண்கள் அல்லும் பகலும் உழைத்துக் களைத்துப் போகின்றார்கள் .


இதிலே அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கோ இரட்டை வேலை. சமைப்பது, வீட்டை ஒழுங்கு செய்வது, பிள்ளைகளைக் கவனிப்பது என்று விட்டிற்குள்ளேயே உழைத்து... உடலாலும் மனதாலும் களைத்துப்போகும் அவர்களுக்கு ஓய்வும் பொழுதுபோக்கும் தேவைப்படுவது இயல்பானது. (ஒரு வண்டில் மாட்டுக்குக்கூட கட்டாயம் ஓய்வு தேவை)


இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துவருவது யார்? பெரும்பாலும் நீங்கள் ஷைத்தான் என்று விளிக்கும் அந்த முட்டாள் பெட்டியான தொலைக்காட்சிதான். இப்போது சொல்லுங்கள் பெண்களை இந்த நிலைமைக்கு மறைமுகமாக உள்ளாக்குவதிலே.. மனைவிக்கும்...தாயாருக்கும்.. சகோதரிகளுக்கும் சிறு உதவிகூடப் புரியாமல் வரவேற்பறையி.லே பழிகிடக்கும் அல்லது ஊரை வெட்டியாகச் சுற்றும் உங்களுடைய ஆண்களுக்குப் பங்கில்லையா மௌலவி அவர்களே?


மனைவியின் உழைப்பை உறிஞ்சி வாழுகின்ற ஆண்களுக்கு உள்ளுர ஒருவகையான குற்றவுணர்ச்சி இருக்கும்.  அவளுடைய நியாயமான பொழுதுபோக்குக்கு இடம்கொடுக்காது விட்டால் என்னவாகும் தங்கள் "நிலைமை" என்பதை அவர்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் நீங்களெல்லாம் எத்தனை ஆன்மீகச் சிந்தனைகளை மேற்கோள்களுடன் எடுத்துரைத்தாலும் கேட்பதோடு அவை நீர்த்துப் போகின்றன.

இனி சமூகத்தைப் பார்த்தால்...

இன்றுள்ள சகலருமே சகல வாகன சாதனங்களுடனும் வசதியாக வாழ்பவர்களைத்தானே மதிக்கின்றார்கள்...?  இபாதத்தாளிகளான ஏழைகளையும் பசையுள்ள ஏமாற்றுப்பேர்வழிகளையும் ஒன்றாக வைத்தால் யாரை இந்த சமூகம் உயர்வாகப் பார்க்கின்றது..? இதற்கு ஆன்மீகவாதிகள் நீங்கள் கூட விதிவிலக்கு கிடையாது.

எறியப்படும் எலும்புத்துண்டுக்கே வாலாட்டுபவர்கள் தொடைக்கறி கிடைத்தால் விடுவார்களா என்ன?


எனவே, முதலிலே இதற்குரிய சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறியுங்கள். அவற்றுக்கு ஏதாவது மாற்றுவழி உண்டா என்று பார்த்து அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி உருப்படியாகச் சிந்தியுங்கள்!

அல்லது உண்மையை பட்டை உரியச் சொல்லும் என்னைப் போன்றவர்களைச் சபியுங்கள்!

Tuesday, May 22, 2012

விதியின் விதி...?






கடவுளையே

காப்பாற்றும்

விதி!





ன்றாட வாழ்விலே நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளின் பட்டியலில் விரும்பியோ விரும்பாமலோ 'விதி' யும் உள்ளது. நமது தனிமனித வாழ்க்கை முதல் பொதுவிடயங்கள் வரை தீர்மானிப்பது விதி என்கிறார்கள். அதாவது அடுக்களை முதல் அரசியல் மாற்றங்கள் வரை அணுவின் அசைவுமுதல் அண்டங்களின் நகர்வு வரை சகல விடயங்களும் இவ்வாறுதான் நிகழ வேண்டும் எங்கோ ஏற்கனவே தீர்மானித்த வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்வதுதானே விதி என்றால் அதுபற்றி ஒருமுறை பார்த்து விடலாம். பின்வரும் கட்டுரை ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியானது. வாசித்துவிட்டு விதிபற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களோடு உரசிப்பார்த்துக்கொள்ளுங்கள்

-Jesslya Jessly


The essay:







முதலில், ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம்.


விதி என்பது இழப்புகளிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் கருவி என்று ஆத்திகர்களும், சுய தேடல்களை மறுத்து மனிதனை முடக்குகிறது என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள். இதுவரை விதி குறித்து செய்யப்பட்ட விவாதங்கள் இந்த வகைப்பட்டதாக மட்டுமே இருக்கின்றன. விதி என்பது சாராம்சத்தில் மனிதனுக்கு சிந்தனை இருப்பதையே மறுக்கிறது. பதிலெழுதும் யாரும், ஆய்வுக்(!) கட்டுரைத் தொடர் எழுதும் யாரும் இந்த அம்சத்தைக் கணக்கிலெடுக்கவே இல்லை.



தொடக்கத்திலிருந்து நாம் எழுதிக் கொண்டிருப்பது இதையேதான். விதி இருப்பதை நம்புகிறீர்களா? அது முழுமையாக, ஒரே மாதிரியாக நம்புவதாக இருந்தாலும், இரண்டாகப் பிரித்து தனித்தனியாக நம்புவதாக இருந்தாலும் அதன் பொருள் மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதை மறுப்பது தான். ஆனால் எந்த மதவாதியாலும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை மறுக்க முடியாது.


அன்று  அவர்கள் விதி குறித்து விவாதிக்காதீர்கள் என்று பின்வாங்கியதற்கும், இன்று விதி குறித்த தெளிவான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லை என்று மதவாதிகள் பசப்புவதற்கும் இதுவே காரணம். இதற்காகத்தான் அறிவியல் தொடங்கி தர்க்கவியல் ஈறாக அனைத்தையும் இழுத்து போர்த்திக் கொள்ள துடிக்கிறார்கள்.



அறிவு என்பது என்ன?


தன் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களை தொகுத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வது தான். சிந்தனை என்பது அறிவின் வலிமையால் கற்பனையான முன்முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பது. மனிதன் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகை முன்னேற்றங்களும் அறிவின் வலிமையாலும் சிந்தனையின் வீரியத்தாலும் தான். இந்த வலிமையும், வீரியமும் எந்த எல்லையையும் எட்டிவிடும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதா? இந்த பேரண்டத்தின் விரிவுடன் மனிதனை ஒப்பு நோக்கினால் எந்த எல்லையையும் அடைவது சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை என்றே பதில் கூற முடியும். அதேநேரம் இது மனிதனின் பலவீனம் அல்ல.

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். மனிதனின் அறிவு என்பது அவனுடைய தேவைகளோடு பிணைந்தது. எது குறித்த தேவை மனிதனுக்கு இல்லையோ அது குறித்த அறிதல் மனிதனுக்கு அவசியமில்லை. இதுவரை மனிதன் சென்று எய்திய எல்லைகளெல்லாம் அவனுடைய தேவையின் உந்துதல்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இன்று மனிதன் முயன்று கொண்டிருக்கும் புதிய எல்லைகளுக்கும் தேவையே அடிப்படை. எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதையே மனிதன் அறிந்திருக்கிறான். எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை அறிய முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவன் அறியாத ஒன்று இருக்குமானால் அதை அறியாதது அவனுடைய பலவீனமல்ல. மாறாக, அவனுக்கும் அவன் தேவைக்கும் இடையிலான இடைவெளி.


மனிதன் எதை நோக்கி பயணப்படுகிறான்? எதை அடைய முயல்கிறான்? என்பது தேவையிலிருந்தே கிளைக்க முடியும். ஆனால் தேவை என்பது மனித குலம் முழுமைக்குமான தேவையா? இல்லை. வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் உலகம், தனிமனித சிந்தனையினூடாக வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. ஒரு வர்க்கத்தின் சிந்தனை இன்னொரு வர்க்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது.  ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஒருபோதும் உழைக்கும் வர்க்கத்திற்கு பலனளிப்பதாய் இருக்க முடியாது. அதன் வடிவம் நீதி முறைமையாக இருந்தாலும், சீர்திருத்தங்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான மேலாண்மையையே கோருகிறது. இந்த அடிப்படையில் தான் கடவுள், மதம், விதி போன்றவைகளும் வருகின்றன.

மதவாதிகள்  பொதுவாக வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விதி நீங்கலாக ஏனைய அனைத்தும் அறிவியல் உண்மைகளாக, காலம் கடந்து நிற்பவைகளாக, மனித அறிவுடன் முரண்படாதவைகளாக இருப்பதால்; முரண்பாடு போல் தோன்றினாலும் விதியை ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல்தான் என சாதிக்கின்றனர்.

ஆனால் வேத வசனங்களுக்கு அவர்கள் ஏற்றும் அறிவியலும், காலம் கடந்து நிற்கும் தன்மையும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கற்பிதங்களேயன்றி உண்மைகளல்ல. விதியின் மீது எப்படி கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அது போன்றே அனைத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எனவே, 99% நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றில் ஒரு நூற்றுமேனியை ஐயுறுவது அறிவுடமையன்று என வாதிப்பது அடிப்படையற்ற அபத்தம்.

இது போன்றது தான், அறிவியலைக் கொண்டு முழுமையையும் மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்பதும்.  இப்பேரண்டத்தில் மனிதன் தன் வல்லமையை விரித்திருப்பது சொற்ப அளவு தான். அவன் அறியாதவைகள் இருக்கின்றனவா என்றால் ஏராளம். இந்த அறியாதவைகளின் பட்டியலில் விதியையும் வைத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் பெரும் ஓட்டையாக இருக்கிறது. விதி பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றால் மனித வாழ்வில் விதிக்கு என்ன பங்களிப்பு இருக்க முடியும்?

எங்கோ பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருக்கிறது என்றால் சாத்தியம், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கோளில் இருந்து தான் மனிதன் புவியில் பரவினான் என்றால் அதற்கு சான்றுகள் வேண்டும். மனிதன் அனைத்தையும் அறித்து விட்டானா? அவன் அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே அந்தக் கோளில் இருந்துதான் புவிக்கு மனிதன் வந்தான் என்பதை நம்புவது அறிவுக்கு ஏற்புடையதுதான் என்று வாதிட்டால் அதில் உண்மைக்கு இடமில்லை.


 
விதி என்பது மனிதனோடு வேறெதையும் விட அதிக நெருக்கம் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அப்படியான ஒன்றை, அன்றிலிருந்து இன்றுவரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை, கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருக்கும் ஒன்றை, இல்லை என்று மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை வெறுமனே நம்பு என்பது எப்படி அறிவுடமையாகும்? எனவே மனிதன் அறியாதவைகளும் இருக்கின்றன என நீட்டி முழக்குவது கடவுளின் இருப்பை தக்கவைப்பதற்கு தேவையானதாக இருக்கிறதேயன்றி, மனிதனின் அறிவை விளக்குவதற்கு தேவையானதாக இல்லை.


மனிதன் பலவீனமானவன் என்று மதவாதிகள் கூறுவது அறிவியல் ரீதியில் பொருளற்ற சொல். பலம் பவீனம் என்பது பொருளுடையதாக வேண்டுமென்றால் அது பிரிதொன்றுடன் ஒப்பு நோக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதன் பலத்தில் புலியை விட பலவீனமானவன். மனிதன் புத்திசாலித்தனத்தில் குரங்கைவிட பலமானவன். மனிதன் இடம்பெயர்வதில் குதிரைவிட பலவீனமானவன், ஆமையைவிட மிக பலமானவன். 


பலமானவன் - பலவீனமானவன் என்பதை இந்த அடிப்படையில் தான் கூறமுடியும். இப்போது மதவாதிகள் கூறும் மனிதன் பலவீனமானவன் என்பதை இதனுடன் இணைத்துப் பாருங்கள். எதனுடன் ஒப்பிட்டு மனிதன் பலவீனமானவன் என்கிறார்கள்? கடவுளுடனா? கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே முதன்மையான விவாதமாக இருக்கும் போது, கடவுளுடன் மனிதனை ஒப்பிடுவது அறிவுடமையா?


மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும். இவைகளெல்லாம் மனிதனின் பலவீனங்கள் என்றால் மனிதனின் பலம் தான் என்ன? அல்லது இந்த பலவீனங்கள் இல்லையென்றால் அது மனிதனாக இருக்க முடியுமா? ஆக மனிதன் பலவீனமானவன் என மதவாதிகள் கூறுவது மிகப் பெரிய மோசடி. கடவுளை பிரமாண்டப்படுத்திக் காட்ட செய்யப்படும் செப்படி வித்தை.


மனிதனின் அறிவு குறைபாடுடையது எனும் குழப்பம், மனிதன் பலவீனமானவன் எனும் மயக்கம் இவற்றின் மீதுதான் விதிக் கோட்பாடு எனும் மாயத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள் மதவாதிகள். விதி என்பதை நேரடியாக விளக்க முடியாது. விளக்க முடியாது என்பதை விட விளக்கினால் கடவுள் மாட்டிக் கொள்வார். அதாவது கடவுள் மீதான பற்று மனிதனுக்கு இற்று விடும். அதனால் தான் விதியை விளக்கமுடியாது என்று கூறிவிட்டு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டு கடவுளை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
  
நடந்து முடிந்துவிட்டால் அது விதி, நடக்க இருப்பது என்றால் நீயாக சிந்தித்து செயல்படு என்று விதியை இரண்டாக பிரிக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்குத்தான் கடந்த காலம் எதிர்காலம் என்ற பேதமுண்டு. விதிக்கு எதிர்காலமில்லை, இறந்த காலம் மட்டும் தான். எதிர்காலம் இருக்கிறது என்றாலே அது விதி இல்லை என்றாகிவிடும்.



விதி என்றால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்பதுதானே பொருள். ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்றை மனிதன் நிகழ் காலத்தில் நின்று கொண்டு சிந்திக்க முடியுமா? இதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் தான் விதி பற்றிய விளக்கம் மனிதனுக்கு தரப்படவில்லை என்று தப்பித்துக் கொள்கிறார்கள்.
 



Thanks: Senkodi






Monday, May 21, 2012

'தங்க விதி'




Stones from Glass houses!

கண்ணாடி வீட்டிலிருந்து 

வீசப்படும் கற்கள்!








'தங்க விதி' என்று ஒரு தமிழ்ப்பதத்தை அறிவீர்களா நீங்கள்?

வேறு ஒன்றுமில்லை..."நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படி நாமும் மற்றவர்களை நடத்துவதே" தங்க விதியின் அடிப்படைக்கொள்கை.

இதையேதான், 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது' என்று கிராமங்களிலே எளிமையாக கூறுவார்கள்.

'இதிலே பெரிதாக என்ன உள்ளது?' என்று சாதாரணமாக கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் அடுக்களை  முதல்  அரசியல் பூசல்கள் வரை எவ்வளவோ விடயங்கள் இதற்குள் அடங்கியிருப்பதை அறிந்தால் உண்மையில் பிரமித்துப் போவீர்கள்.
A campaign held in Colombo


சற்று யோசித்துப்பாருங்கள்..

நமது குடும்பத்திலேயுள்ள உறவுகளிடம் நாம் எதனையெல்லாம் எதிர்பார்ப்போம்...? அன்பு, பாசம், அங்கீகாரம், விசுவாசம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டுப்பொறுப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் போது அவற்றை நாமும் அவர்களுக்கு வழங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதானே பொதுவான நியாயம்?

இந்த விதியை நாம் நமது உறவினர், நண்பர்கள், சகபாடிகள், பிறசமூகத்தவர்கள் என்று அனைவருக்கும் நாம் பிரயோகித்து வந்தால்தான்; அவர்களும் நம்மீது மரியாதை வைத்து நடப்பார்கள்.
அவ்வாறின்றி, ' நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தடையில்லாமல் தரவேண்டும். ஆனால் அவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது' என்பதுதான் உங்களது எண்ணமென்றால் எப்படியிருக்கும்...?

சரி அப்படி ஒரு எண்ணத்தடன் நீங்கள் இருப்பதை மற்றவர்கள் அறிந்தால் உங்களைப்பற்றி எப்படி நினைப்பார்கள்..? மற்றவர்கள் நினைப்பதிருக்கட்டும் முதலில் அது உங்களுக்கே நியாயமாக இருக்குமா?
A campaign held in Europe


இப்போது மீண்டும் தங்க விதிக்கு வருவோம்...

'நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்துவது'

இதை நாம் சரிவரச் செய்கின்றோமா?

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு பல்லின மக்கள் ஒன்றாகக் கலந்து வாழும்  ஒரு நாட்டில்தானே தவிர தனியே முஸ்லீம் நாட்டில் அல்ல. இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களைப்போல மொழியினாலோ வாழும் பிரதேசத்தினாலோ அல்லாமல் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றுகின்ற மதத்தினால் ஒன்றுபட்டவர்கள்.

இலங்கையைப் போலவே உலகின் பல்வேறு கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவற்றிலே முஸ்லிம்களாகிய நாம் ஏனைய இனத்தவர்களோடு சேர்ந்து சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம். அதேவேளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.

in London...
இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளிலே வாழும் அரசுகளினாலோ அல்லது அங்குள்ள பெரும்பான்மை மக்களினாலோ தமது உரிமைகள் சிறிதளவேனும் பாதிக்கப்படுவதைக் கண்டால் உடனே துடிதுடித்துப்போய்.. நம்மை ஏதோ உலகமே முற்றாக ஒன்று திரண்டு நசுக்கியழிக்கப்போவதைப் போன்ற பாவனையுடன் ஊடகங்களின் முன்னே நின்று எத்தனை போராட்டங்களை நடாத்துகின்றோம்...  அவற்றை மிகைப்படுத்தி காட்டி உலகத்தின் கவனத்தையெல்லாம் ஈர்த்தெடுக்கின்றோம்.


கொழும்புகளிலும் புதுடில்லிகளிலும் லண்டன்களிலும் நியூயோர்க்களிலும் பாரிஸ்களிலும் நம்மால் உரிமைப் போராட்டங்களையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்த முடியும். அந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களிலே அந்த நாட்டுச் சட்டங்களையே பயன்படுத்தி குற்றமிழைத்தவர்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனையையேனும் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால் நாம் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இந்தோனேஷியா மலேஷியாவிலோ வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் யாராவது மேற்கூறியவாறு நமது இஸ்லாமிய அரசுகளால் பாதிக்கப்படும்போது அவர்களால் ஒரு சிறு போராட்டத்தைத்தானும் நடாத்த முடியுமா? நடாத்துவது என்ன அதுபற்றி நினைக்கத்தானும் இயலுமா?

A campaign held in London
நமது இஸ்லாமாபாத்திலும் தெஹ்ரானிலும் ஜித்தாவிலும் கோலாலம்பூரிலும் குவைத்திலும் அவ்வாறான போராட்டம் ஒன்றை  நடாத்தினால்  அவர்களுக்கு என்ன கதியேற்படும் என்று யோசித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் 'மனிதாபிமானமிக்க' நமது சாம்ராஜ்யங்கள் அவர்களை உயிருடனாவது விட்டு வைக்குமா?


இது என்ன வகையிலான நியாயம்?

ஐரோப்பிய கல்லூரிகளிலும் விமானங்களிலும் ஹலால் இறைச்சி வேண்டும் என்கின்றோம். பொதுக் கழிப்பறைகளை இஸ்லாமிய கழிப்பறைகளாக மாற்ற வேண்டும் என்கின்றோம் (ஐரோப்பியர்களுக்கு ஈரமான கழிப்பறை என்பது அருவருப்பானது என்பதால் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன)


Foreigners hanged in Iran for their worshipping
ஆனால் நாமோ ஐரோப்பிய கழிப்பறைகளில் தண்ணீர்க் குழாய் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். அங்குள்ள பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தொழுகை செய்யத் தனியறைகள் வேண்டும் என்று உரிமையுடன் நச்சரிக்கின்றோம். ஆனால், அதேசமயத்தில், இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களைச் சேர்ந்த நபர்களை வழிபாட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கவும், மரண தண்டனை கொடுக்கவும் செய்கின்றோம்.

இது எந்த ஊர் நியாயம்?

நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே நமது மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டுமன்றி தொழிலுக்காக கூடியுள்ள சிறு நகரங்களிலும் கூட நம்மால் வணக்க ஸ்தலங்களை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.. முடிகின்றது.
Regent's Park Mosque in London


ஆனால் மற்ற மதவழிபாட்டு நிலையங்களைக் கட்டவும், அவர்களது ஆன்மீக பேணுதல்களைப்புரியவும் அனுமதிக்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டையேனும் காண்பிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஒன்று கூட இல்லை!
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே தொழில் புரிந்துகொண்டு அந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கைகளையெல்லாம் புண்படுத்துகின்ற விதத்திலே அவர்களை விமர்சித்து 'காபிர்கள்' என்பது போன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்தி வெறுப்பை உமிழ்கின்றோம்.


அதேவேளை நாம் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலே நம்மையும் நமது நம்பிக்கைகளையும் பற்றி தவறிப்போய் சிறுபிழையாக ஏதாவது சொல்லிவிட்டாலும் போதும் உடனே அவர்களைக் கொன்றொழிக்கவும் மரணதண்டனை வழங்கவும் சித்திரவதை செய்யவும் புறப்பட்டு விடுகின்றோம்.

A Mosque in USA
அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது நியாயமா?





நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதால், அநியாயங்கள் ஒருபோதும் நியாயங்களாகி விடாது.


தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான்.


இவ்வாறு சொல்வதால், சிறுபான்மையினர் என்ற விதத்திலே உலகம் முழுவதும் நமக்கு நிகழும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது.


அதேவேளை...  நாம் செய்யும் தவறுகளையும் கொடூரங்களையும் உணர்ந்து நம்மை நாமே திருத்திக்கொள்ளாதவரை அதே தவறுகளையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்பதற்கு நமக்குள்ள தார்மீக உரிமை பிறரின் கேலிக்குள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.
Could we allow this?


நண்பர்களே!


மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள் .....!


நான் கூறும் கருத்துகளில் தவறுகள் இருப்பதாக அறிந்தால் அவற்றை மறுக்கும் வகையிலே தர்க்க ரீதியான உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள்!







- Jesslya Jessly 



Tuesday, May 15, 2012

கடவுள் பாதி - பிசாசு பாதி!





பெண்கள் பற்றிய

ஆண்களின் மனோநிலைதான்

என்ன?












"பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்மனது என்னவென்று புரியவில்லையே.....?"


ரு பிரபலமான பழைய தழிழ் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா? 

முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது 'அட!   ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாத புதிராக பெண்கள் இருக்கின்றார்கள் போல' என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன்.


ஆனால் இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும்.
பெண்களைப்பற்றி  நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள்? 


தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து  வருகின்றான்; ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து  தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாக வளருகின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..?



பாலியல் தேவைகளுக்காக பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதை ஓர் இயற்கையான உணர்வாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அதையும் மீறி பெண்கள் மீதான மரியாதையற்ற அவனது எண்ணங்களையும் நடத்தைகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?


நமது சமூகத்திலே தனது வயதொத்த ஒரு பெண், தன்னைவிட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருப்பதை விரும்பாத அல்லது சகித்துக்கொள்ள முடியாத போக்கு ஆரம்பப் பாடசாலைப்பருவத்திலிருந்தே ஆண்பிள்ளைகளிடம் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பதின்வயதை அடைந்ததும் ஒரு பெண்பிள்ளை பாடங்களிலோ அல்லது பாடசாலைச் செயன்முறைகளிலோ ஆண் பிள்ளைகளுக்குச் சமமாகவோ அல்லது ஆண்களை விடத் திறமையாகவோ சவாலாக இருந்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவார்கள்?



ஒன்றில் முயன்று படித்துப் பயின்று அவளை முந்துவதற்கு நினைப்பான். முடியாதவிடத்து நேர்மையீனமான வழிமுறைகளைக் கையாண்டு அவளை வீழ்த்துவதற்கு நினைப்பான். இரண்டும் முடியாதவிடத்து அவள் திறமை காட்டும் துறையை மலினமாகச் சித்திரித்து அவளது சுயதிருப்தியை இல்லாதொழிக்க முயற்சிப்பான்.



இதுவே வளர்ந்து தொழிற்துறைக்குள் வந்தபின்பு  பெண் ஒருத்தி உயர்பதவிக்கு வந்து விட்டாளெனின் அவளை சக ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள்...?



ஒன்றில் அவளை மானசீகமாக வெறுப்பார்கள். அல்லது அவளது பெண் என்ற பால்நிலை வேறுபாட்டை ஒரு பலவீனமாக எடுத்துக்காண்பிக்கும் விதமாக அவளை சுயமாக இயங்கவிடாது மிகை உதவிகளைப்புரிய முற்படுவார்கள். 


உதாரணத்திற்கு ஒரு பாடசாலைக்கு அதிபராக சகல தகைமைகளுடனும் ஒரு பெண் நியமிக்கப்பட்டாளாயின் அங்குள்ள பெரும்பான்மையான ஆண் ஆசிரியர்கள் அவளை தமது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வதற்கு உள்ளுர விரும்புவதில்லை. அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தாம் ஒரு 'ஒரு பெண்ணின் கீழே இயங்குகின்றோமே' என்ற ஆற்றாமையோடு வெதும்பிக் கொண்டிருப்பார்கள்.


அல்லது 'நீங்கள் பெண் என்பதால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு ஒத்தாசை புரிகின்றோம்' என்று அநாவசியமாகக்கூடஉதவுவார்கள்.



உதவிபுரிவது நல்ல விடயம்தான் என்றாலும் அந்த உதவிகளுக்குள்ளே இருக்கும் 'மறைமுக செய்தி' தான் முக்கியமானது. அதாவது ஒரு தகைமையுள்ள பெண்ணைக்கூட அவளது பலவீனங்களை வைத்து வீழ்த்துவதிலே ஆண்களுக்குள்ள குரூர திருப்தி யைத்தான் அந்த உதவிகள் வேறுவிதமாக நிறைவேற்றுகின்றன.


 இவ்வளவு ஏன் ஒரு நமது நாட்டின் ஆட்சி உயர்பீடத்திலே ஒரு பெண் இருந்த கால கட்டங்களில் எல்லாம் 'பொம்பளை ஆட்சிக்குக் கீழ் இருப்பது நல்லது இல்லை' என்று கூறித்திரிந்த படித்த கனவான்கள் கூட இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


தமது வாழ்விலே தாய், சகோதரி, தாரம், மகள், மருமகள், பேத்தி என்று ஓர் ஆணுக்கு வாழ்நாள் முழுவதும் பெண் உறவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தும் கூட  பெண்ணை சகமனிதனாக கருதுவதற்கு ஆண்கள் ஏன் முன்வருவது கிடையாது...?


'ஏன் பெண்களை கடவுள்களாகப் போற்றுகின்றார்களே...காதலி என்று கொஞ்சுகின்றார்களே...மனைவி ஏன்று மாய்கின்றார்களே தாயிற் சிறந்த கோவிலுமில்லை...தாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருப்பதெல்லாம் ஆணாதிக்கமுள்ள இந்தச் சமூகம்தானே... ?என்றெல்லாம் நீங்கள் சிந்திப்பீர்கள்...கேட்பீர்கள்...?


அவற்றை நான் மறுக்கவில்லை! ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையவும் முடியவில்லை. ஏனெனில் அது ஆண்வர்க்கத்தினரின் ஒரு விதமான ஏமாற்று.. அல்லது  தப்பித்தல்...


அதாவது.. நீங்கள் பெண்களை ஒரேயடியாக உயர்த்திக் 'கடவுளா' க்குவதிலும்  எதிர்மறையாக 'ஆண்களை மயக்கி மோசம்செய்ய வந்த பிசாசுகள்' வசைபாடுவதிலும் நிகழும் விளைவு ஏறத்தாழ ஒன்றுதான்.  ஆம்!இந்த இரண்டு செயல்களினாலும் பெண்களுக்கு சமூகத்திலே கிடைக்க வேண்டிய நியாயமான சம அந்தஸ்தை அல்லவா மறுக்கின்றீர்கள்...?


வேறு வார்த்தையில் சொல்வதானால்... கடவுள் - பிசாசு என்ற இரு அந்தங்களுக்கும் பெண்ணை எடுத்துச் செல்வதன் மூலம் பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்பதிலிருந்தும் அவளுக்குச் சம முக்கியத்துவம் தருவதிலிருந்தும் தந்திரமாகத் தப்பித்துக் கொள்கின்றீர்கள்.


ஒருவன் தனது மனைவியை அல்லது காதலியை ஓர் சகமனிதனாக எண்ணாமல் போகப்பொருளாக நினைத்து அவளைக் கொண்டாடுவதனால் அவளுக்குரிய சம முக்கியத்து வம் கிடைத்து விடுவதில்லை.


'ஓ! என் அழகிய கிளியே பார்! உன்னை எவ்வளவு விலையுயர்ந்த கூண்டிலே அடைத்து வைத்திருக்கின்றேன்..இதைவிட கௌரவம் வேறென்ன வேண்டும் உனக்கு?'


என்று முன்பு ஒருகாலத்தில் சுதந்திரமாய் பறந்து திரிந்த கிளியிடம் கூறுவதற்கும்  மனைவியை அல்லது காதலியை அழகிய துணிமணிகளாலும் விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அலங்கரித்து...


'கார்கூந்தலழகியே..கயல்விழித் தேனே காலம் முழுக்க நான் உனதழகுக்கு அடிமையே'


என்று பிதற்றுவதற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.


ஆண்களின் இந்தப் புகழ்ச்சிக்குப் பின்னாலிருக்கும் ஏமாற்றுச் சதிவலை யைப் புரிந்து கொள்ளாத பெண்கள் வேண்டுமானால் ஏமாந்து போகலாம். ஆனால் உண்மைகளை நீண்ட காலத்திற்கு ஒளித்து வைக்க முடியாது. அது ஒரு பெண்ணின் கர்ப்பம் போல என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.


சரி,  காதலியைப் புகழ்வதிலே பாலியல் தேவைகள் என்ற தேவையுண்டு. தாயை சில ஆண்கள்  மிகைத்துப்  புகழ்வதற்கு காரணமென்ன?


மனிதன் ஓர் உயர்நிலைப் பகுத்தறிவுள்ள விலங்கு. 

தான் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் தனது சமூகம் சார்ந்த பெறுமானங்களை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கக்கூடியவன். எந்தவொரு தீங்கான செயலைச் செய்யும்போதும் உள்ளார்ந்த குற்றவுணர்வை வேறு ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் செய்ய வேண்டிய தேவை அவனுக்குள்ளது. 

(உ-ம் : பாவகாரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்தவர்கள் கோயில் உண்டியல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது பொருளை பரிகாரமாக்குதல்)


ஓர் ஆண்,  தாய் என்பவளை மிகைத்துப் போற்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்றில் சிறுவயதிலே தாயை இழந்ததனால் உண்டான பிரிவாற்றாமை ஏக்கமாக இருக்கலாம்.  இருந்தபோதிலும் தனது குற்றவுணர்வை சமாதானம் செய்யும் நோக்கமே பெரும்பாலும் உள்ளது. 
சிறுவயதிலே தனது குழப்படிகளால் தாயை வருத்திய குற்றவுணர்வுகள்... இளைஞனானதும் தாயைச் சரிவரப் போஷிக்காத குற்றவுணர்வுகள்.. திருமணமானதும் தனது அன்றாட அலுவல்களினாலும் பொறுப்புகளினாலும் தாயைச் சென்று பார்த்துவரக்கூட முடியாத குற்றவுணர்வுகள்...என்று உள்மனத்திலே கிளம்பும்போது அவற்றைச் சமாதானஞ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டுமே...


'அம்மாவென்றழைக்காத உயிரில்லையே...' போன்ற 'அம்மா'பாடல்களை எழுதியும் பாடியும் வருகின்ற  இளையராஜா, வைரமுத்து , பாரதிராஜா போன்றவர்களைப் பார்த்தீர்களானால்  இந்த உண்மைகள் தெளிவாக விளங்கும். அவர்கள் அத்தனைபேரும் தமது துறைசார்ந்த பரபரப்பான மனிதர்கள்.


கிராமத்துத்தாயை ஊரிலே கள்ளிக்காட்டிலும் கருவேலங்காட்டிலும் விட்டுவிட்டு பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள். நீண்டகால அலைச்சல்களுக்குப் பின்பு சினிமாத்துறையிலே குறிப்பிடத்தக்களவு வெற்றிபெற்றாலும் அவர்களுக்கெல்லாம் உள்ளுர தங்கள் தாய்குறித்த மேற்கூறிய உணர்வுகளின் உறுத்தல்களை சமாதானஞ் செய்வதற்கு எதாவது செய்தாக வேண்டிய தேவையுள்ளது. அதன் விளைவுகள்தான் தாய்மீதான அதீத பாசத்தை வெளிக்காட்டும் விதமான பாடல்கள், நூல்கள்..etc ..etc.


கிராமத்திலேயே கிடந்து வாழ்நாள் முழுவதும் தாய்க்கு ஒத்தாசையாக இருந்துவரும் பிள்ளைகளுக்கு -அதிலும் குறிப்பாக தாயை அவளது முதுமைப்பருவத்தின் ஆரம்பம் முதலே பராமரித்து வரும் பெண்பிள்ளைகளுக்கு இத்தகைய மிகை-முயற்சிகளின்  அவசியம் -இருப்பதில்லை.


ஆக,  நமது சமூகத்திலேயுள்ள ஆண்கள்,   தங்களில் ஒருத்தியாகி ஒன்றாய்
வாழும் பெண்ணை ஒன்றில் எட்டாத உச்சியில் கொண்டு நிறுத்துவார்கள் அல்லது அதல பாதாளத்தில் வீழத்துவார்களேயொழிய  சகமனிதனாக மதிப்பதில்லை என்பதுதான் உண்மை.


இவ்வாறு மதிக்காமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் எதுவாக இருக்க முடியும் என்று பார்ப்போம். வேறு எதுவுமே கிடையாது. நாம் வாழும் குடும்பச் சூழல்தான் முக்கியமான காரணம். சிசுவாகப் பிறக்கும் ஓர் ஆண்குழந்தை ஓரளவு தன்னைப் புரிந்து கொள்ளக்கூடிய பருவம் வந்தவுடன் ஆண்- பெண் பால் வேறுபாட்டையும் அவற்றுக்கிடையேயுள்ள சமமின்மையையும் தனது தாய் தந்தையிடமிருந்துதான் முதலில் புரிந்து கொள்கின்றான்.


வெகுஅரிதான விதிவிலக்குகளைத் தவிர, தந்தை நினைத்ததை தடையின்றிச் செய்வதையும் சுதந்திரமாக இயங்குவதையும் மாறாக, தாய் அவ்வாறின்றி தனது பெரும்பான்மையான தேவைகளுக்கும் நடமாட்டங்களுக்கும் தந்தையைச் சார்ந்து வாழ்வதையும் பார்க்கின்றான். அத்துடன் அடிக்கடி தாயின் நியாயமான கோரிக்கைகள் கூட தந்தையினால் வரையறுக்கப்படுவதையும் காண்கின்றான்.

அங்கிருந்தே ஆரம்பமாகின்றது ...


ஒரு ஆண்மகனின் பெண்களின் மீதான மேலாதிக்கக் கருத்துருவாக்கம்.


இந்தக் கருத்து மேலும் வலுவடைவது தனது சகோதரி அல்லது உறவுப் பெண் பருவ வயதுக்கு வந்தவுடன் திடீரென வேறுபட்டு நடாத்தப்படும் விதம். அவளை சுயமாக நடமாட விடாது கட்டுப்படுத்துவதும் அவளது நிலைகுறித்து குடும்பத்தினரால் அதீதகவனம் செலுத்தப்படுவதும் சிறிய சிறிய மீறல்களுக்கெல்லாம் அவள் கண்டிக்கப்படும் விதமும் அவனைப் பெரும் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன.



பலவேளைகளிலே அதற்குரிய உருப்படியான காரணங்கள் கூட அவனுக்குச் சரிவரக்கூறப்படவதில்லை. இதனால் ஆண்- பெண் எனும் பால்வேறுபாடுள்ள மனிதர்களின் இயற்கையான உடல்சார்ந்த வேறுபாடுகள் பற்றிய புரிந்துணர்வு முறையாகச் செய்யப்படாத வெற்றிடம் ஒன்று அவனிடம் உருவாகின்றது.



அந்த வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவது அவனது வயதொத்த கற்றுக்குட்டி நண்பர்களே. முறையான பாலியல் கல்வி மூலமாகச் செய்யப்பட வேண்டிய மேற்கூறப்பட்ட விடயம் கற்றுக்குட்டித்தனமான அரைகுறை விளக்கங்களால் நிரப்பப்படுகின்றது. இதனால்தான் பொதுவாக ஆண்கள் இளம்பருவத்தை எட்டும்போது தமது நண்பர் வட்டத்தின் தன்மைகளுக்கேற்ப பெண்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்களுக்கும்  வக்கிர உணர்வுகளுக்கும் ஆளாகி விடுகின்றனர்.


இன்றைய முதலாளித்துவ சமூக  நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளான சினிமா, தொலைக்காட்சி, நச்சு இலக்கியங்கள், விளம்பரங்கள் போன்றவை பெண்களை வெறும் போகத்திற்குரிய உயிரினங்களாக மட்டுமே கருதுகின்ற வக்கிர உணர்வுகளையும் மரியாதையின்மையையும் மேலும் தூண்டி விடுகின்றன.


சில சமூகங்களிலே பின்பற்றப்படும் நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களும் ஆண்களின் மனதிலே பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகக் கருதும் எண்ணப்பாங்குகளுக்குக் காரணமாக இருந்து வருகின்றது. 



தாம் பின்பற்றுகின்ற மதம், கலாசாரம்  ஆண்கள்-பெண்கள் தொடர்பாக எத்தகைய வழிமுறைகளை காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றதோ அத்தகைய நிலைப்பாடே ஆண்களின் மனோபாவமாக உருவெடுத்து வளருகின்றது.



கல்வி வளர்ச்சி, தர்க்க ரீதியான சிந்தனை, ஏனைய சமூகங்களின் இடைத்தாக்கங்கள் இத்தகைய நம்பிக்கைகள் சார்ந்த கருத்தாக்கங்களில் தாக்கங்களை விளைவித்தாலும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்குவதில்லை.


உதாரணமாக:  ஒரு ஆண்மகன் தனது துறைசார் கல்வியினூடாக தனது சமூக நம்பிக்கைகள் பற்றி எழும் கேள்விகள் குறித்து சிந்திக்க முன்வருவதில்லை.



இதற்குரிய காரணங்களில் ஒன்றாக அந்த நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும்போது தான் வாழும் சமூகத்திலிருந்து கிடைக்கும் உவப்பற்ற எதிர்வினைகளைக் கூறலாம். இதைவிடவும் முக்கியமான காரணம் ஒன்றுள்ளது.


இயல்பாகவே மத, கலாசார, சமூக நம்பிக்கைகளால் ஆண்களுக்கு தரப்பட்டிருக்கும் 'பெண்களை மேலாதிக்கம் செய்யும் வசதியை' அவர்கள் இழக்க விரும்புவதில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்மகன் எவ்வளவுதான் தான் சார்ந்திருக்கும் துறையில் பெரும் அறிஞனாகவோ புத்திஜீவியாகவோ இருந்தபோதிலும் தனது சமூகம் பின்பற்றி வருகின்ற நம்பிக்கை மரபுகளைக் கேள்விக்குட்படுத்துவதில்லை.


இதை ஓர் எளிய உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும்.

நானறிந்த  நன்கு படித்து பெரும்பட்டங்களும் புகழும் பெற்ற ஒரு டாக்டர் தனது சிக்கலான சத்திரசிகிச்சைகளை முடித்துக் கொண்டதும் ஓய்வறைக்குச் சென்று சிகரட் ஒன்றைப்புகைக்கும் பழக்கமுடையவாக இருந்து வருகின்றார்.


புகைத்தல் ஒரு மனிதனின் நுரையீரல்களுக்கு எவ்வளவு கேடானது என்பதை ஐந்தாம் தரத்தில் கற்கும் ஒரு சிறுவன் கூட நன்கறிவான். அவ்வாறெனின் இத்தனை பட்டம்பெற்ற டாக்டருக்கு அது தெரிவதில்லையா? தனது சேவைக் காலத்திலே புகைத்தலின் தீங்கைப்பற்றி பொதுமக்களுக்கு அவர் பெரும் சொற்பொழிவுகளைக் கூட ஆற்றியிருக்கக்கூடும்.


அவரிடம் இதுபற்றி நான் ஒருதடவை வினவியபோது, 


'தெரியும்தான்.. என்ன செய்வது? பழகிவிட்டது...டென்ஷனைக் குறைப்பதற்குத்தான் அப்படிச் செய்யகின்றேன்'


என்றார். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது?


இந்த டாக்டரின் மனோநிலைதான் பெண்களை  இரண்டாம்தரப் பிரஜையாகக் கருதுவதை அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கின்ற சமூகங்களிலிருந்து வரும் பெரும்பாலான படித்த ஆண்களிடமும் இருந்து வருகின்றது.


சமூகத்திற்குப் பெருந்தீங்குபயக்கும் காட்டுமிராண்டித்தனமான கருத்தாக்கங்களைத்தான் இன்னும் கும்பல் கும்பலாகப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம் என்பதை நன்கு அறிந்தாலும் கூட அவற்றிலிருந்து தமது மக்களை விடுவிக்கும் எண்ணமோ செயற்பாடுகளோ இல்லாமல் வாளாவிருக்கின்றார்கள் இந்த "அறிவுஜீவி"கள்.


அப்படிச் சும்மா இருப்பது அவர்களுக்குச் சுகமாகக்கூட இருக்கின்றது. என்றாலும் கற்ற கல்வியினாலும் பெற்ற அறிவினாலும் உண்மைகளைப் புரிந்துகொண்ட நேர்மை மிக்கவர்களால் அவ்வாறு இருக்க நிச்சயமாக முடியாது.


அவர்களது மனசாட்சி பின்வரும் சிறுகவிதையைப் போன்று எப்போதும் உறுத்திக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உண்மை...



"தொல்லை தவிர்ப்பதற்காக
தொலைபேசியை அணைத்து வைத்தபின்பும்
'யாராவது அவசரச்செய்திக்காக அழைத்திருப்பார்களோ'
என்ற எண்ணத்தின் அரிப்பிலிருந்து மட்டும்
ஏனோ தப்பிக்க முடியவில்லை.."




- 'Mutur' Mohd.Rafi