நிழலாக சில நிஜங்கள்
ராஜீஸுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இன்று மாலை ஸனீராவிடம் எப்படியாவது விசயத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. இனிமேலும் அதைச் சொல்லவில்லை என்றால் அவன் எதற்காக ஸனீராவுக்கு அதுவும் அவள் வீட்டுக்கே சென்று பாடம் சொல்லித் தரச் சம்மதித்தானோ அந்த நோக்கமே வீணாகிவிடும்.
படுக்கையை விட்டு எழுந்தவன் நேரத்தைப் பாரத்ததும் சுறுசுறுப்பானான். டவலை எடுத்துக்கொண்டு சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த தன் தாயைக் கூப்பிட்டு டீ தர நினைவுபடுத்தி விட்டு கிணற்றடிக்குச் சென்றான்.
ராஜீஸ் இருபத்து மூன்று வயதை கடந்த மார்ச் மாதத்தில் முடித்திருக்கும் திடகாத்திரமான கெட்டிக்கார இளைஞன். குடும்பத்தில் ஒரே பிள்ளை. தந்தை உள்ளுர் பாடசாலையொன்றில் ஆசிரியராக இருக்கின்றார். ராஜீஸ் கண்டியிலுள்ள பிரபல கல்லூரியொன்றில் படித்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருக்கின்றான். உயர்தரப்பரீட்சை எழுதிய பின்பு சில மாதங்கள் வரை கண்டியில் தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் ஊருக்கு வந்து ஒருமாதத்துக்கு மேலாகின்றது.
'ஆகாய வெண்ணிலாவே..தரைமீது வந்ததேனோ...அழகான..' ஜேசுதாஸின் பாடல் ஒன்றுடன் கிணற்றடியிலிருந்து ஈரமாய் வந்த ராஜீஸை தாயின் குரல் இடை மறித்தது.
'தம்பி, இன்னைக்கும் பாடமா?'
'ஏம்மா ஏதும் வேலையிருக்கா?' எங்கே இன்று ஸனீராவைச் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற தவிப்போடு கேட்டான் ராஜீஸ். இன்றைக்குத் தவறினால் அந்த விசயத்தைச் சொல்லவே முடியாமலாகிவிடும் என்பது அவன் தாய்க்கு எப்படித் தெரியும்?
'வேற ஒண்ணுமில்ல, உனக்கிட்ட சொல்ல மறந்திட்டனே..நேத்துக் காலைல அவ வந்தா..' என்று நிறுத்திய தாயை 'யார்' என்பது போல திரும்பிப் பார்த்தான்.
'அதுதான் தம்பீ, நம்ம ஸனீராட உம்மா! எப்பிடி நல்லாப் படிப்பிக்கிறானான்னு கேட்டேன். ஓ! இப்பதான் மகள் விஞ்ஞானப் பாடத்தை விரும்பிப் படிக்குது என்றா...'
'............'
'அது சரி, நீ என்ன.. படிப்பிச்சு முடிஞ்சா ஒரு நிமிசம் அவங்க வீட்ல நிக்கிறதில்லியாமே.. ஏன் தம்பி, கொஞ்ச நேரம் இருந்துதான் வாயேன்...மாஸ்டர் வாப்பாக்கிட்ட குறைபட்டாராம்' என்றவாறு டீயை நீட்டிய தாயிடம் ஏதோ சொல்ல வந்தவனுக்கு ஸனீராவிடம் தான் சொல்லப்போகும் விடயம் நினைவுக்கு வந்தது. பேசாமல் டீயைக் குடித்து விட்டு 'ட்ரெஸ்' செய்து கொண்டு சைக்கிளை வெளியிலெடுத்தான் ராஜீஸ்.
தூரத்தில் எங்கேயோ ஒரு குயில் விடாமல் கூவிக்கொண்டிருந்தது.
***
மாலை 6.30
'தாக்கவீதத் தொடரில் மேலேயுள்ள மூலகங்கள் கீழேயுள்ள மூலகங்களை அவற்றின் உப்புக் கரைசலிலிருந்து இடம்பெயர்க்கும்..விளங்கிட்டுதானே? ஆகவே நாகம், செப்புச்சல்பேற்றுக் கரைசலில் செப்பை இடம்பெயர்க்கும்...சமன்பாடு எழுதுங்க'
ஸனீராவுக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ். ஸனீரா, அவன் கொடுத்த இரசாயனச் சமன்பாடுகளை எழுதிக்கொண்டிருந்தாள். கையிலிருந்த சோக் பீஸை யன்னலினூடாக எறிந்து விட்டு ஸனீராவின் அருகில் கதிரை ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்து அவள் எழுதுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.
ஸனீரா!
ராஜீஸின் தந்தையின் பால்ய நண்பரும் ஊரிலே குறிப்பிடக்கூடிய பசையுள்ள புள்ளிகளில் ஒருவருமான ஜமால் ஆசிரியரின் ஒரே மகள். பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றாள். நிறம் சற்றுக்குறைவானாலும் வசீகரமானவள்.
சிறுவயதிலிருந்தே ராஜீவ் வெளியூரில் படித்ததால் நெருங்கிய உறவினர்களைத் தவிர ஊரில் பலரை அவனுக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் இப்போது ஊருக்கு வந்த ஒன்றரை மாதத்தில் அவனது தந்தையை பாடசாலை வேலையாக வீட்டிற்குத் தேடிவருகின்ற சிலரையாவது தெரிந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறுதான் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியரையும் அறிந்து கொண்டான் ராஜீஸ்.
ஜமால் ஆசிரியர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் ராஜீஸுடன் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பார். அவனது படிப்பு, எதிர்கால நோக்கம் பற்றியெல்லாம் மிகுந்த அக்கறையோடு கேட்பார். ராஜீஸின் தந்தையுடனான தனது இளமைக்கால நட்பு நெருக்கங்களையெல்லாம் விபரித்து இன்றும் அது இனிதாகத் தொடர்வது பற்றிப் பெருமையாகச் சொல்லுவார். அவன் வந்த ஒரு வாரத்திற்குள்ளே இரண்டு தடவை அவனைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கின்றார். அவன் தயங்கிய போதெல்லாம்,
'ராஜீஸ்! ஒரு மனிதர் நம்மை மதித்து வீட்டுக்கு அழைத்தால் அதைச் சந்தோசமாக ஏற்க வேண்டும். அதுதான் பண்பு' என்ற தந்தையின் விருப்பத்திற்காக மறுக்காமல் சென்று வருவான். அப்போதெல்லாம் தனது தந்தையுடனான நட்பின் காரணமாகவே ஜமால் ஆசிரியர் தன்மீது அதிக அக்கறை காண்பிப்பதாக எண்ணியிருந்தவனுக்கு அந்த அக்கறையின் உண்மையான காரணம் ஒருநாள் தெரியவந்தும் அதிர்ச்சியடைந்தான் ராஜீஸ்.
அவனால் அதை நம்பவே முடியவில்லை. அதன்பிறகு ஜமால் ஆசிரியர் வீட்டுக்கு வந்த போதெல்லாம் ராஜீஸ் முன்புபோல முகம் கொடுத்துப்பேச முடியாமல் சங்கடப்பட்டான். அவர் தந்தையைச் சந்திப்பதற்கு வரும்போதெல்லாம் மெல்ல நழுவி விடுவான். அப்படியும் எதிர்பாராமல் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டான்.
'என்ன தம்பிய காணவே கிடைக்குதில்ல...'
'ஓ! அது..வந்து..சும்மா கொஞ்சம் வேலை' இழுத்துச் சமாளிக்க முயன்றான். உடனடியாக 'ரெடிமெட்' பொய் வராத தன் நேரத்தை நொந்து கொண்டான்.
'அப்படியா! இல்ல மகன் வீட்ல சும்மாதான் இருக்குன்னு தம்பிட வாப்பா சொன்ன மாதிரி ஞாபகம்...' அவர் விடுவதாக இல்லை.
ராஜீஸுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. காட்டிக் கொள்ளாமல், 'இன்னும் கொஞ்ச நாள்ல யுனிவசிட்டி தொடங்கிடுவாங்க...அதுவரைக்குமதான்... இப்பிடி...'
'ஆ! தம்பி ஸயன்ஸ்தானே? நம்மட மகளுக்கு...ஸனீராவைத் தம்பிக்குத் தெரியும்தானே? ஸயன்ஸ்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு. சும்மாயிருக்கிற நேரம் கொஞ்சம் வீட்ட வந்தா...'
அவனுக்குப் புரிந்தது.
'ஏன்தான் வாப்பா இப்படியெல்லாம் சொல்லி மாட்டி விடுறாங்களோ?' மனதிற்குள் தந்தையைக் கோபித்துக் கொண்டிருந்தவனுக்கு மின்னலடித்தது போல அந்த 'ஐடியா' மூளையில் பளிச்சிட்டது. தன் திறமையைத் தானே உள்ளுர மெச்சிக் கொண்டான். அவன் பதிலுக்காகக் காத்திருந்தவரிடம் மலர்ந்த முகத்துடன் சம்மதித்தான்.
அப்படித் தொடங்கியதுதான் இந்தத் தனி வகுப்பு.
'என்ன ஸனீரா, உன்ட ஸேருக்கு யோசனை எங்கேயோ போயிட்டுது போல?'
திடுக்கிட்டு சுயநினைவுக்குத் திரும்பியவன் எதிரே ஸனீராவின் தாய் டீயுடன் சிரித்துக் கொண்டே நின்பதைக் கண்டான். சிரித்தவாறு டீயை வாங்கி மேசையில் வைத்தான்.
'ஆறிடப் போகுது குடிச்சிட்டு யோசிங்க.. ஸனீரா எடுத்துக் குடு!' என்று அவர் திரும்பிப் போனதும் டீயைத் தானே எடுத்துக் குடித்து விட்டுக் கப்பை வைத்தான் ராஜீஸ். ஸனீரா தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். வெளியே இலோசாக மழைதூறிக் கொண்டிருந்தது.
'ஸனீரா!'
எழுதிக் கொண்டிருந்தவள் தலையை நிமிர்த்தி, 'என்ன?' என்பதுபோல புருவங்களை உயர்த்தினாள். அவள் பெரிய விழிகளில் தெரிந்த பளபளப்பு அவனை ஒரு கணம் பேசவிடலாம் வசீகரித்தன. மேசையில் ஆறிக்கொண்டிருந்த அவளின் டீ கப்பைக் காட்டினான். அவள் புன்னகைத்தவாறே தனது டீயை எடுத்துக் கொண்டாள்.
'ஸனீரா, நான் ஏற்கனவே சொன்னபடி இன்னையோட இந்த க்ளாஸ்ஸை முடிப்போம். நான் படிப்பித்த பகுதிக்குள்ளே ஏதாவது விடுபட்டிருக்குமா? இருந்தா கேளுங்க.. ஏனென்னடா இனி எனக்கும் கெம்பஸ் தொடங்கிவிடும்....'
அவன் முடிக்கவில்லை.
'ஒரு நிமிசம் இருங்க!' என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவள் சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு அழகான புத்தகமொன்றை நீட்டினாள்.
' அட! என்ன இது?' புரியாமல் பார்த்தவனிடம், 'இது வெளிநாட்டிலிருந்து கிடைத்த நோட்புக். உஙகளுக்கு என்ட சின்ன ஒரு கிப்ட்!' என்று தயங்கியவாறு சொன்னாள் ஸனீரா.
'ஓ! தேங்க்யூ! வெரிமச்' என்று அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு மேசையில் வைத்துவிட்டு, 'அதிருக்கட்டும் ஸனீரா, உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேசவேணும்.' என்று யாராவது வருகிறார்களா என்று சுற்றிலும் பதட்டமாகப் பார்த்தான் ராஜீஸ்..
ஸனீரா கெட்டிக்காரி மட்டுமல்ல, பழகுவதற்கும் இனிமையானவள். இத்தனை நாளும் விஞ்ஞானப்பாடம் சொல்லித்தர ஒத்துக்கொண்டதற்கு காரணமே இன்னும் சிறிது நேரத்தில் ராஜீஸ் அவளிடம் சொல்லப்போகும் விடயம்தான். ஆனாலும் அதை அவன் முழு ஈடுபட்டுடன் செய்ய முடிந்ததே அவளது திறமையினால்தான்.
'எ.. என்ன விசயம்?' ராஜீஸின் பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது.
'ஸனீரா, நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேணும்...செய்வீங்களா?'
'உதவியா? என்ன உதவி..' அவள் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன.
'அது..வந்து..சொல்றேன்! ஆனா உங்க வாப்பா, உம்மா, வேற யாருக்கிட்டயும் இதைச் சொல்லக் கூடாது..முடியுமா?'
'ஆங்.. சரி! அது என்ன உதவி?'
'ஸனீரா, உங்க வாப்பா, உங்களுக்கு என்னைச் சம்பந்தம் பேசியிருக்கும் விசயம் தெரியும்தானே?'
அவள் பதில் கூறாமல் தலையைக் குனிந்திருந்தாள். 'ஆனா ஸனீரா, நான் கண்டியில ஒரு கேளை விரும்பிட்டிருக்கிறேன்...'
தலைகுனிந்திருந்த ஸனீரா சட்டென நிமிர்ந்தாள்.
'அவளைத்தான் நான் மெரி பண்றதாகவும் முடிவும் பண்ணிருக்கிறேன்... ஆனா இங்க ஊருக்கு வந்த பிறகுதான் உங்களை எனக்கு முடிவு செய்ய நம்ம இருவர் வீட்டிலும் ஏற்பாடு நடந்திருப்பது தெரிய வந்தது. ஆனா..'
அவள் விழிகளில் கண்ணீர் குளமாய்த் ததும்பியது. அவளது உதடுகள்
எதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்க யாராவது வந்து விடப் போகின்றார்களே என்ற பயத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.
'ஸனீரா, ஐம் ஸோ ஸொறி! அழாதிங்க! யாராவது வந்து பாத்தா ரெண்டு பேரையும் பிழையா நினைக்கப் போறாங்க! உங்களைப் பிடிக்காததாலதான் இப்படிச் சொல்றேனென்டு நினைக்காதீங்க..அங்க கண்டியில அந்த கேள் என்மேல உயிரையே வச்சிருக்கா..என்னால அவளுக்கு எதாவது ஏமாத்தம் வந்தா தாங்கவே மாட்டா...!'
'இந்த விசயத்தை எங்க வீட்ல சொன்னா என்னை இவ்வளவு படிக்க வச்சு ஆளாக்கின எங்க உம்மா வாப்பா தாங்க மாட்டாங்க. நான் இல்லையென்டா உடனே இன்னொரு நல்ல மாப்பிள்ளையைக் கூட பேசுகிற வசதி உங்க வாப்பாக்கிட்ட இருக்கு.! ஆனா என்ன நம்பியிருக்கிற அந்த ஏழைப் பிள்ளைக்கு அந்த வசதியில்லாமில்ல, ஸனீரா! அதனால நீங்களே என்னைப் பிடிக்கயில்ல என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும். எனக்காக இல்லாட்டாலும் தகப்பனில்லாத ஒரு ஏழைப் பிள்ளைக்காகவாவது இந்த உதவியை..'
அதற்குள் யாரோ வருவது போலிருக்கவே அவசரஅவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினாள் ஸனீரா.
'என்ன ஸனீரா? பாடமெல்லாம் முடிஞ்சுதா?' என்றவாறு வீட்டுக்குள்ளே வந்தார் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியர். மகளின் வகுப்பு இன்றுடன் நிறைவடைவது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காகக் கேட்டுவைத்தார்.
'ஓம், எல்லாமே முடிஞ்சுட்டு வாப்பா!' ராஜீஸைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினாள் ஸனீரா.
சிறிது நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ராஜீஸ் விடைபெற்றுக் கொண்டான்.
***
'உம்மா! உம்மா!'
கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த ராஜீஸ் கையிலிருந்த விஞ்ஞானப்பயிற்சிப் புத்தகத்தையும் ஸனீரா தந்த நோட்புக்கையும் மேசையில் எறிந்தான். எறிந்த வேகத்தில் அந்த நோட்புக்கினுள்ளிருந்து ஒரு சிவப்புநிறக் கவர் ஒன்று எகிறி விழுந்தது. அதைச் சந்தேகமாகய் எடுத்துப் பார்த்தான்.
அது ஒரு கடிதவுறை. அதன்மேல் அவனது பெயர் எழுதப்பட்டிருந்தது. அவசர அவசரமாய் பிரித்துப் படித்தான்.
அன்புள்ள ராஜீஸ்,
என்னை மன்னிக்கவும். என் படிப்பில் இத்தனை நாளாக உதவி புரிந்து வரும் உங்களிடம் நான் என் வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் உதவியை எதிர்பார்க்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.
எங்கள் வீட்டில் எனக்கு உங்களைத் திருமணம் பேசுவதற்கு ஆயத்தம் புரிகின்றார்கள். இது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் நான் வேறு ஒருவரை விரும்புகின்றேன். அவர் இப்போது ஊரில் இல்லை. வெளிநாட்டிலிருக்கின்றார். ஒருவரை மனதார விரும்பி விட்டு இன்னொருவரை மணப்பது சரியா? உங்களைப் பிடிக்கவில்லை என்று நான் ஒரு பெண்பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் சொல்ல முடியாது. சொன்னால் வாப்பா கொன்றே விடுவாங்க.. ஆனால் நிங்க நினைத்தால் சொல்ல முடியும்.
உங்களை மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பழகும் ஒரு சகோதரனாக எண்ணி இந்த உதவியைக் கேட்கின்றேன். எனக்காகச் செய்யுங்கள். இந்தக் கடிதத்தை நோட்புக்கினுள் வைத்திருக்கின்றேன். என்னைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.
இப்படிக்கு
ஸனீரா.
ராஜீஸுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.
-மூதூர் மொகமட் ராபி
(1990.12.18)
(1990.12.18)
Note:
இதுதான் நான் எழுதி -முழுமையாக எழுதி முடித்து - வெளிவந்த முதல் சிறுகதை என்று நம்புகின்றேன். இப்போது வாசித்துப் பார்க்கும்போது கற்றுக்குட்டித்தனமாக இருக்கின்றது. இது 1991 அல்லது 1992 ல் இலங்கை வங்கி அலுவலர் திரு. பக்கீர்த்தம்பி ஆசிரியராக இருந்து வெளியிட்ட 'முத்தொளி' சஞ்சிகையில் பிரசுரமானது - 'Mutur' Mohd.Rafi
No comments:
Post a Comment