Monday, May 21, 2012

'தங்க விதி'




Stones from Glass houses!

கண்ணாடி வீட்டிலிருந்து 

வீசப்படும் கற்கள்!








'தங்க விதி' என்று ஒரு தமிழ்ப்பதத்தை அறிவீர்களா நீங்கள்?

வேறு ஒன்றுமில்லை..."நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படி நாமும் மற்றவர்களை நடத்துவதே" தங்க விதியின் அடிப்படைக்கொள்கை.

இதையேதான், 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது' என்று கிராமங்களிலே எளிமையாக கூறுவார்கள்.

'இதிலே பெரிதாக என்ன உள்ளது?' என்று சாதாரணமாக கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் அடுக்களை  முதல்  அரசியல் பூசல்கள் வரை எவ்வளவோ விடயங்கள் இதற்குள் அடங்கியிருப்பதை அறிந்தால் உண்மையில் பிரமித்துப் போவீர்கள்.
A campaign held in Colombo


சற்று யோசித்துப்பாருங்கள்..

நமது குடும்பத்திலேயுள்ள உறவுகளிடம் நாம் எதனையெல்லாம் எதிர்பார்ப்போம்...? அன்பு, பாசம், அங்கீகாரம், விசுவாசம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டுப்பொறுப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் போது அவற்றை நாமும் அவர்களுக்கு வழங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதானே பொதுவான நியாயம்?

இந்த விதியை நாம் நமது உறவினர், நண்பர்கள், சகபாடிகள், பிறசமூகத்தவர்கள் என்று அனைவருக்கும் நாம் பிரயோகித்து வந்தால்தான்; அவர்களும் நம்மீது மரியாதை வைத்து நடப்பார்கள்.
அவ்வாறின்றி, ' நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தடையில்லாமல் தரவேண்டும். ஆனால் அவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது' என்பதுதான் உங்களது எண்ணமென்றால் எப்படியிருக்கும்...?

சரி அப்படி ஒரு எண்ணத்தடன் நீங்கள் இருப்பதை மற்றவர்கள் அறிந்தால் உங்களைப்பற்றி எப்படி நினைப்பார்கள்..? மற்றவர்கள் நினைப்பதிருக்கட்டும் முதலில் அது உங்களுக்கே நியாயமாக இருக்குமா?
A campaign held in Europe


இப்போது மீண்டும் தங்க விதிக்கு வருவோம்...

'நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்துவது'

இதை நாம் சரிவரச் செய்கின்றோமா?

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு பல்லின மக்கள் ஒன்றாகக் கலந்து வாழும்  ஒரு நாட்டில்தானே தவிர தனியே முஸ்லீம் நாட்டில் அல்ல. இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களைப்போல மொழியினாலோ வாழும் பிரதேசத்தினாலோ அல்லாமல் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றுகின்ற மதத்தினால் ஒன்றுபட்டவர்கள்.

இலங்கையைப் போலவே உலகின் பல்வேறு கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவற்றிலே முஸ்லிம்களாகிய நாம் ஏனைய இனத்தவர்களோடு சேர்ந்து சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம். அதேவேளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.

in London...
இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளிலே வாழும் அரசுகளினாலோ அல்லது அங்குள்ள பெரும்பான்மை மக்களினாலோ தமது உரிமைகள் சிறிதளவேனும் பாதிக்கப்படுவதைக் கண்டால் உடனே துடிதுடித்துப்போய்.. நம்மை ஏதோ உலகமே முற்றாக ஒன்று திரண்டு நசுக்கியழிக்கப்போவதைப் போன்ற பாவனையுடன் ஊடகங்களின் முன்னே நின்று எத்தனை போராட்டங்களை நடாத்துகின்றோம்...  அவற்றை மிகைப்படுத்தி காட்டி உலகத்தின் கவனத்தையெல்லாம் ஈர்த்தெடுக்கின்றோம்.


கொழும்புகளிலும் புதுடில்லிகளிலும் லண்டன்களிலும் நியூயோர்க்களிலும் பாரிஸ்களிலும் நம்மால் உரிமைப் போராட்டங்களையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்த முடியும். அந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களிலே அந்த நாட்டுச் சட்டங்களையே பயன்படுத்தி குற்றமிழைத்தவர்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனையையேனும் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால் நாம் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இந்தோனேஷியா மலேஷியாவிலோ வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் யாராவது மேற்கூறியவாறு நமது இஸ்லாமிய அரசுகளால் பாதிக்கப்படும்போது அவர்களால் ஒரு சிறு போராட்டத்தைத்தானும் நடாத்த முடியுமா? நடாத்துவது என்ன அதுபற்றி நினைக்கத்தானும் இயலுமா?

A campaign held in London
நமது இஸ்லாமாபாத்திலும் தெஹ்ரானிலும் ஜித்தாவிலும் கோலாலம்பூரிலும் குவைத்திலும் அவ்வாறான போராட்டம் ஒன்றை  நடாத்தினால்  அவர்களுக்கு என்ன கதியேற்படும் என்று யோசித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் 'மனிதாபிமானமிக்க' நமது சாம்ராஜ்யங்கள் அவர்களை உயிருடனாவது விட்டு வைக்குமா?


இது என்ன வகையிலான நியாயம்?

ஐரோப்பிய கல்லூரிகளிலும் விமானங்களிலும் ஹலால் இறைச்சி வேண்டும் என்கின்றோம். பொதுக் கழிப்பறைகளை இஸ்லாமிய கழிப்பறைகளாக மாற்ற வேண்டும் என்கின்றோம் (ஐரோப்பியர்களுக்கு ஈரமான கழிப்பறை என்பது அருவருப்பானது என்பதால் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன)


Foreigners hanged in Iran for their worshipping
ஆனால் நாமோ ஐரோப்பிய கழிப்பறைகளில் தண்ணீர்க் குழாய் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். அங்குள்ள பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தொழுகை செய்யத் தனியறைகள் வேண்டும் என்று உரிமையுடன் நச்சரிக்கின்றோம். ஆனால், அதேசமயத்தில், இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களைச் சேர்ந்த நபர்களை வழிபாட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கவும், மரண தண்டனை கொடுக்கவும் செய்கின்றோம்.

இது எந்த ஊர் நியாயம்?

நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே நமது மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டுமன்றி தொழிலுக்காக கூடியுள்ள சிறு நகரங்களிலும் கூட நம்மால் வணக்க ஸ்தலங்களை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.. முடிகின்றது.
Regent's Park Mosque in London


ஆனால் மற்ற மதவழிபாட்டு நிலையங்களைக் கட்டவும், அவர்களது ஆன்மீக பேணுதல்களைப்புரியவும் அனுமதிக்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டையேனும் காண்பிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஒன்று கூட இல்லை!
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே தொழில் புரிந்துகொண்டு அந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கைகளையெல்லாம் புண்படுத்துகின்ற விதத்திலே அவர்களை விமர்சித்து 'காபிர்கள்' என்பது போன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்தி வெறுப்பை உமிழ்கின்றோம்.


அதேவேளை நாம் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலே நம்மையும் நமது நம்பிக்கைகளையும் பற்றி தவறிப்போய் சிறுபிழையாக ஏதாவது சொல்லிவிட்டாலும் போதும் உடனே அவர்களைக் கொன்றொழிக்கவும் மரணதண்டனை வழங்கவும் சித்திரவதை செய்யவும் புறப்பட்டு விடுகின்றோம்.

A Mosque in USA
அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இது நியாயமா?





நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதால், அநியாயங்கள் ஒருபோதும் நியாயங்களாகி விடாது.


தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான்.


இவ்வாறு சொல்வதால், சிறுபான்மையினர் என்ற விதத்திலே உலகம் முழுவதும் நமக்கு நிகழும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது.


அதேவேளை...  நாம் செய்யும் தவறுகளையும் கொடூரங்களையும் உணர்ந்து நம்மை நாமே திருத்திக்கொள்ளாதவரை அதே தவறுகளையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்பதற்கு நமக்குள்ள தார்மீக உரிமை பிறரின் கேலிக்குள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.
Could we allow this?


நண்பர்களே!


மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள் .....!


நான் கூறும் கருத்துகளில் தவறுகள் இருப்பதாக அறிந்தால் அவற்றை மறுக்கும் வகையிலே தர்க்க ரீதியான உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள்!







- Jesslya Jessly 



No comments:

Post a Comment