Tuesday, May 22, 2012

விதியின் விதி...?






கடவுளையே

காப்பாற்றும்

விதி!





ன்றாட வாழ்விலே நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளின் பட்டியலில் விரும்பியோ விரும்பாமலோ 'விதி' யும் உள்ளது. நமது தனிமனித வாழ்க்கை முதல் பொதுவிடயங்கள் வரை தீர்மானிப்பது விதி என்கிறார்கள். அதாவது அடுக்களை முதல் அரசியல் மாற்றங்கள் வரை அணுவின் அசைவுமுதல் அண்டங்களின் நகர்வு வரை சகல விடயங்களும் இவ்வாறுதான் நிகழ வேண்டும் எங்கோ ஏற்கனவே தீர்மானித்த வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்வதுதானே விதி என்றால் அதுபற்றி ஒருமுறை பார்த்து விடலாம். பின்வரும் கட்டுரை ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியானது. வாசித்துவிட்டு விதிபற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களோடு உரசிப்பார்த்துக்கொள்ளுங்கள்

-Jesslya Jessly


The essay:







முதலில், ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம்.


விதி என்பது இழப்புகளிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் கருவி என்று ஆத்திகர்களும், சுய தேடல்களை மறுத்து மனிதனை முடக்குகிறது என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள். இதுவரை விதி குறித்து செய்யப்பட்ட விவாதங்கள் இந்த வகைப்பட்டதாக மட்டுமே இருக்கின்றன. விதி என்பது சாராம்சத்தில் மனிதனுக்கு சிந்தனை இருப்பதையே மறுக்கிறது. பதிலெழுதும் யாரும், ஆய்வுக்(!) கட்டுரைத் தொடர் எழுதும் யாரும் இந்த அம்சத்தைக் கணக்கிலெடுக்கவே இல்லை.



தொடக்கத்திலிருந்து நாம் எழுதிக் கொண்டிருப்பது இதையேதான். விதி இருப்பதை நம்புகிறீர்களா? அது முழுமையாக, ஒரே மாதிரியாக நம்புவதாக இருந்தாலும், இரண்டாகப் பிரித்து தனித்தனியாக நம்புவதாக இருந்தாலும் அதன் பொருள் மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதை மறுப்பது தான். ஆனால் எந்த மதவாதியாலும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை மறுக்க முடியாது.


அன்று  அவர்கள் விதி குறித்து விவாதிக்காதீர்கள் என்று பின்வாங்கியதற்கும், இன்று விதி குறித்த தெளிவான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லை என்று மதவாதிகள் பசப்புவதற்கும் இதுவே காரணம். இதற்காகத்தான் அறிவியல் தொடங்கி தர்க்கவியல் ஈறாக அனைத்தையும் இழுத்து போர்த்திக் கொள்ள துடிக்கிறார்கள்.



அறிவு என்பது என்ன?


தன் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களை தொகுத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வது தான். சிந்தனை என்பது அறிவின் வலிமையால் கற்பனையான முன்முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பது. மனிதன் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகை முன்னேற்றங்களும் அறிவின் வலிமையாலும் சிந்தனையின் வீரியத்தாலும் தான். இந்த வலிமையும், வீரியமும் எந்த எல்லையையும் எட்டிவிடும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதா? இந்த பேரண்டத்தின் விரிவுடன் மனிதனை ஒப்பு நோக்கினால் எந்த எல்லையையும் அடைவது சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை என்றே பதில் கூற முடியும். அதேநேரம் இது மனிதனின் பலவீனம் அல்ல.

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். மனிதனின் அறிவு என்பது அவனுடைய தேவைகளோடு பிணைந்தது. எது குறித்த தேவை மனிதனுக்கு இல்லையோ அது குறித்த அறிதல் மனிதனுக்கு அவசியமில்லை. இதுவரை மனிதன் சென்று எய்திய எல்லைகளெல்லாம் அவனுடைய தேவையின் உந்துதல்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இன்று மனிதன் முயன்று கொண்டிருக்கும் புதிய எல்லைகளுக்கும் தேவையே அடிப்படை. எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதையே மனிதன் அறிந்திருக்கிறான். எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை அறிய முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவன் அறியாத ஒன்று இருக்குமானால் அதை அறியாதது அவனுடைய பலவீனமல்ல. மாறாக, அவனுக்கும் அவன் தேவைக்கும் இடையிலான இடைவெளி.


மனிதன் எதை நோக்கி பயணப்படுகிறான்? எதை அடைய முயல்கிறான்? என்பது தேவையிலிருந்தே கிளைக்க முடியும். ஆனால் தேவை என்பது மனித குலம் முழுமைக்குமான தேவையா? இல்லை. வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் உலகம், தனிமனித சிந்தனையினூடாக வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. ஒரு வர்க்கத்தின் சிந்தனை இன்னொரு வர்க்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது.  ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஒருபோதும் உழைக்கும் வர்க்கத்திற்கு பலனளிப்பதாய் இருக்க முடியாது. அதன் வடிவம் நீதி முறைமையாக இருந்தாலும், சீர்திருத்தங்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான மேலாண்மையையே கோருகிறது. இந்த அடிப்படையில் தான் கடவுள், மதம், விதி போன்றவைகளும் வருகின்றன.

மதவாதிகள்  பொதுவாக வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விதி நீங்கலாக ஏனைய அனைத்தும் அறிவியல் உண்மைகளாக, காலம் கடந்து நிற்பவைகளாக, மனித அறிவுடன் முரண்படாதவைகளாக இருப்பதால்; முரண்பாடு போல் தோன்றினாலும் விதியை ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல்தான் என சாதிக்கின்றனர்.

ஆனால் வேத வசனங்களுக்கு அவர்கள் ஏற்றும் அறிவியலும், காலம் கடந்து நிற்கும் தன்மையும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கற்பிதங்களேயன்றி உண்மைகளல்ல. விதியின் மீது எப்படி கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அது போன்றே அனைத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எனவே, 99% நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றில் ஒரு நூற்றுமேனியை ஐயுறுவது அறிவுடமையன்று என வாதிப்பது அடிப்படையற்ற அபத்தம்.

இது போன்றது தான், அறிவியலைக் கொண்டு முழுமையையும் மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்பதும்.  இப்பேரண்டத்தில் மனிதன் தன் வல்லமையை விரித்திருப்பது சொற்ப அளவு தான். அவன் அறியாதவைகள் இருக்கின்றனவா என்றால் ஏராளம். இந்த அறியாதவைகளின் பட்டியலில் விதியையும் வைத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் பெரும் ஓட்டையாக இருக்கிறது. விதி பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றால் மனித வாழ்வில் விதிக்கு என்ன பங்களிப்பு இருக்க முடியும்?

எங்கோ பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருக்கிறது என்றால் சாத்தியம், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கோளில் இருந்து தான் மனிதன் புவியில் பரவினான் என்றால் அதற்கு சான்றுகள் வேண்டும். மனிதன் அனைத்தையும் அறித்து விட்டானா? அவன் அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே அந்தக் கோளில் இருந்துதான் புவிக்கு மனிதன் வந்தான் என்பதை நம்புவது அறிவுக்கு ஏற்புடையதுதான் என்று வாதிட்டால் அதில் உண்மைக்கு இடமில்லை.


 
விதி என்பது மனிதனோடு வேறெதையும் விட அதிக நெருக்கம் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அப்படியான ஒன்றை, அன்றிலிருந்து இன்றுவரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை, கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருக்கும் ஒன்றை, இல்லை என்று மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை வெறுமனே நம்பு என்பது எப்படி அறிவுடமையாகும்? எனவே மனிதன் அறியாதவைகளும் இருக்கின்றன என நீட்டி முழக்குவது கடவுளின் இருப்பை தக்கவைப்பதற்கு தேவையானதாக இருக்கிறதேயன்றி, மனிதனின் அறிவை விளக்குவதற்கு தேவையானதாக இல்லை.


மனிதன் பலவீனமானவன் என்று மதவாதிகள் கூறுவது அறிவியல் ரீதியில் பொருளற்ற சொல். பலம் பவீனம் என்பது பொருளுடையதாக வேண்டுமென்றால் அது பிரிதொன்றுடன் ஒப்பு நோக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதன் பலத்தில் புலியை விட பலவீனமானவன். மனிதன் புத்திசாலித்தனத்தில் குரங்கைவிட பலமானவன். மனிதன் இடம்பெயர்வதில் குதிரைவிட பலவீனமானவன், ஆமையைவிட மிக பலமானவன். 


பலமானவன் - பலவீனமானவன் என்பதை இந்த அடிப்படையில் தான் கூறமுடியும். இப்போது மதவாதிகள் கூறும் மனிதன் பலவீனமானவன் என்பதை இதனுடன் இணைத்துப் பாருங்கள். எதனுடன் ஒப்பிட்டு மனிதன் பலவீனமானவன் என்கிறார்கள்? கடவுளுடனா? கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே முதன்மையான விவாதமாக இருக்கும் போது, கடவுளுடன் மனிதனை ஒப்பிடுவது அறிவுடமையா?


மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும். இவைகளெல்லாம் மனிதனின் பலவீனங்கள் என்றால் மனிதனின் பலம் தான் என்ன? அல்லது இந்த பலவீனங்கள் இல்லையென்றால் அது மனிதனாக இருக்க முடியுமா? ஆக மனிதன் பலவீனமானவன் என மதவாதிகள் கூறுவது மிகப் பெரிய மோசடி. கடவுளை பிரமாண்டப்படுத்திக் காட்ட செய்யப்படும் செப்படி வித்தை.


மனிதனின் அறிவு குறைபாடுடையது எனும் குழப்பம், மனிதன் பலவீனமானவன் எனும் மயக்கம் இவற்றின் மீதுதான் விதிக் கோட்பாடு எனும் மாயத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள் மதவாதிகள். விதி என்பதை நேரடியாக விளக்க முடியாது. விளக்க முடியாது என்பதை விட விளக்கினால் கடவுள் மாட்டிக் கொள்வார். அதாவது கடவுள் மீதான பற்று மனிதனுக்கு இற்று விடும். அதனால் தான் விதியை விளக்கமுடியாது என்று கூறிவிட்டு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டு கடவுளை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
  
நடந்து முடிந்துவிட்டால் அது விதி, நடக்க இருப்பது என்றால் நீயாக சிந்தித்து செயல்படு என்று விதியை இரண்டாக பிரிக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்குத்தான் கடந்த காலம் எதிர்காலம் என்ற பேதமுண்டு. விதிக்கு எதிர்காலமில்லை, இறந்த காலம் மட்டும் தான். எதிர்காலம் இருக்கிறது என்றாலே அது விதி இல்லை என்றாகிவிடும்.



விதி என்றால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்பதுதானே பொருள். ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்றை மனிதன் நிகழ் காலத்தில் நின்று கொண்டு சிந்திக்க முடியுமா? இதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் தான் விதி பற்றிய விளக்கம் மனிதனுக்கு தரப்படவில்லை என்று தப்பித்துக் கொள்கிறார்கள்.
 



Thanks: Senkodi






No comments:

Post a Comment