ஆன்மீகச்சூழல் Vs தொலைக்காட்சி
அன்புள்ள நண்பர்களே,
கிண்ணியா நெற் www.kinniya.net இணையத்தளத்திலே கடந்த May 20ம் திகதி ஆன்மீகம் எனும் பகுதியில் 'ஆன்மீகச் சூழல் அற்றுப்போகும் முஸ்லீம் வீடுகள்' எனும் ஒரு சிறு கட்டுரை வெளியாகி இருந்தது. மௌலவி எம்.எஸ். எம். இம்தியாஸ் ஸலஃபி என்பவர் அதனை எழுதியிருந்தார். அவர் தனது ஆக்கத்தில் இன்றுள்ள நமது முஸ்லீம் இல்லங்களிலே பொழுதுபோக்குச் சாதனங்களின் குறிப்பாக தொலைக்காட்சியின் பாவனையால் ஆன்மீகச்சூழல் அற்றுப்போய்க்கொண்டிருப்பதைப் பற்றிய தனது விசனத்தையும் தெரிவித்திருந்தார்.
இது ஒரு முக்கியமான விடயம் என்பதால் இதுபற்றிய எனது பார்வையையும் சில கருத்துரைகளையும் அவரது ஆக்கத்தின் கீழேயுள்ள கருத்துரைப் பெட்டியிலே தெரிவிக்க முயன்றேன். ஆனால் அது கைகூடவில்லை. பலமுறை முயன்றும் தொழினுட்பக் காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ கருத்துரை அதிலே வெளியாக மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தது.
வழமையாக கிண்ணியாநெற் தளத்திலே வெளியாகும் என்னைக் கவர்ந்த ஆக்கங்கள் மற்றும் செய்திகளுக்கு விமர்சனம் எழுதிவருகின்றவள் நான். இதுவரை அதற்கு எதுவித மறுப்பும் ஏற்பட்டதில்லை என்பதானால் உடனடியாக வேறுவித காரணங்களை நினைக்க என்னால் முடியவில்லை. சரி, தொழினுட்ப 'கோளாறு' மட்டுமே காரணமாக இருக்கவேண்டும் என்று நம்பத்தான் நானும் விரும்புகின்றேன்.
அதனால் அந்தக் கட்டுரைக்குரிய எனது கருத்துரையை சிறகுகளில் இடுகின்றேன். இரண்டையும் படிப்பவர்களுக்கு உண்மை மிக அழகாகப் புரியும்.
இதோ...
-Jesslya Jessly
Opinion: www.kinniya.net
அன்புள்ள மௌலவி அவர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஒரு மௌலவி என்ற வகையிலே நல்ல பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசம். ஒருவீட்டிலே ஆன்மீகச்சூழல் நிலவ வேண்டும் எனும் தங்களுடைய நோக்கத்தையும் அதற்குத் தொலைக்காட்சி உட்பட இன்றைய பொழுதுபோக்குச் சாதனங்கள் அனைத்தும் இடையூறாக இருக்கின்றன என்ற ஆதங்கத்தையும் வரவேற்கின்றேன். ஆனால்.... அதைச் சொல்வதற்கு நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சில உதாரணங்களில்தான் எனக்குச் சில முரண்பாடுகள் உண்டு.
ஒரு வீட்டிலே இஸ்லாமியச் சூழல் நிலவாமைக்கு அந்த வீட்டில் வாழும் தனித்தனி மனிதர்கள் மட்டுமே பொறுப்பாக முடியுமா மௌலவி அவர்களே? நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல குடும்பத்தலைவி மட்டுமோ அல்லது பிள்ளைகள் மட்டுமோ தனியே காரணமாக இருக்க முடியாது. அந்த மொத்தக் குடும்பமும் மட்டுமன்றி சுற்றயல் சமூகமும்தான் காரணமாக இருக்க வேண்டும்.
முதலில் குடும்பத்தைப் பார்ப்போமே....
நமது முஸ்லீம் சமூக அமைப்பிலே குடும்பத் தலைவனாகிய ஆணுக்கு மனைவியைக் கட்டுப்படுத்தி வழி நடாத்தக்கூடிய அபரிமிதமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறியாதவரல்ல. அவ்வாறிருக்கும்போது ஒரு மனைவியும் அவரது பிள்ளைகளும் தனியே தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலே மட்டும் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை நுகர்ந்து வழிகெட்டுப்போக முடியுமா? அதற்கு ஏதோ ஒருவிதத்தில் குடும்பத் தலைவனான ஆண்களும்தானே காரணமாகவும் ஊக்குவிப்பாளர்களாகவும் இருக்கின்றார்கள்..?
eg: கேபிளுக்கு இணைப்பு எடுத்துத் தருவதிலிருந்து...அதைத் தொடர்ந்து பேணுவது வரை யார் மறைமுகக் காரணிகளாக இருக்கின்றார்கள்?
பெண்களையும் பிள்ளைகளையும் குறித்து தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப் படங்கள், பாடல்கள் மட்டும் குறிப்பிட்டுள்ள நீங்கள் வீட்டுத் தலைவராகிய ஆண்கள் நாளெல்லாம் விழுந்து கிடக்கும் கிரிக்கட் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இலட்சாதிபதி சூது நிகழ்ச்சிகளையும் சொல்லியிருக்கலாமே..?
அதை மட்டும் எப்படி மிகவும் கவனமாகத் தவிர்த்து விட்டீர்கள்... மௌலவி அவர்களே?
வரவேற்பறையில் அமர்ந்தவாறு கீழே விழுந்து கிடக்கும் பத்திரிகையை எடுப்பதற்குக்கூட சமையலறைக்குள் வேலையாக இருக்கும் பெண்களைக் கூப்பிடுவதுதானே நமது ஆண்கள் பெரும்பாலோனோரின் இயல்பே. இவ்வாறான ஆண்களினால்தான் வீட்டிலிருக்கும் பெண்கள் அல்லும் பகலும் உழைத்துக் களைத்துப் போகின்றார்கள் .
இதிலே அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கோ இரட்டை வேலை. சமைப்பது, வீட்டை ஒழுங்கு செய்வது, பிள்ளைகளைக் கவனிப்பது என்று விட்டிற்குள்ளேயே உழைத்து... உடலாலும் மனதாலும் களைத்துப்போகும் அவர்களுக்கு ஓய்வும் பொழுதுபோக்கும் தேவைப்படுவது இயல்பானது. (ஒரு வண்டில் மாட்டுக்குக்கூட கட்டாயம் ஓய்வு தேவை)
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துவருவது யார்? பெரும்பாலும் நீங்கள் ஷைத்தான் என்று விளிக்கும் அந்த முட்டாள் பெட்டியான தொலைக்காட்சிதான். இப்போது சொல்லுங்கள் பெண்களை இந்த நிலைமைக்கு மறைமுகமாக உள்ளாக்குவதிலே.. மனைவிக்கும்...தாயாருக்கும்.. சகோதரிகளுக்கும் சிறு உதவிகூடப் புரியாமல் வரவேற்பறையி.லே பழிகிடக்கும் அல்லது ஊரை வெட்டியாகச் சுற்றும் உங்களுடைய ஆண்களுக்குப் பங்கில்லையா மௌலவி அவர்களே?
மனைவியின் உழைப்பை உறிஞ்சி வாழுகின்ற ஆண்களுக்கு உள்ளுர ஒருவகையான குற்றவுணர்ச்சி இருக்கும். அவளுடைய நியாயமான பொழுதுபோக்குக்கு இடம்கொடுக்காது விட்டால் என்னவாகும் தங்கள் "நிலைமை" என்பதை அவர்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் நீங்களெல்லாம் எத்தனை ஆன்மீகச் சிந்தனைகளை மேற்கோள்களுடன் எடுத்துரைத்தாலும் கேட்பதோடு அவை நீர்த்துப் போகின்றன.
இனி சமூகத்தைப் பார்த்தால்...
இன்றுள்ள சகலருமே சகல வாகன சாதனங்களுடனும் வசதியாக வாழ்பவர்களைத்தானே மதிக்கின்றார்கள்...? இபாதத்தாளிகளான ஏழைகளையும் பசையுள்ள ஏமாற்றுப்பேர்வழிகளையும் ஒன்றாக வைத்தால் யாரை இந்த சமூகம் உயர்வாகப் பார்க்கின்றது..? இதற்கு ஆன்மீகவாதிகள் நீங்கள் கூட விதிவிலக்கு கிடையாது.
எறியப்படும் எலும்புத்துண்டுக்கே வாலாட்டுபவர்கள் தொடைக்கறி கிடைத்தால் விடுவார்களா என்ன?
எனவே, முதலிலே இதற்குரிய சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறியுங்கள். அவற்றுக்கு ஏதாவது மாற்றுவழி உண்டா என்று பார்த்து அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி உருப்படியாகச் சிந்தியுங்கள்!
அல்லது உண்மையை பட்டை உரியச் சொல்லும் என்னைப் போன்றவர்களைச் சபியுங்கள்!
No comments:
Post a Comment