Saturday, April 28, 2012

எங்கோ இடிக்கிறதே சம்ஸித்?






Kinniya net  www.kinniya   இணையத்தளத்தில் முஸ்லிம் கிராமிய உளவியலும் நம்பிக்கையும்" என்றொரு தொடரை எழுதிவருகின்றார்  சம்ஸித் மூமின் எனும் ஒரு நண்பர்  .


அவரது தொடரை வாசித்தபோது, அது தொடர்பாக ஒரு கருத்துரையைச்
சொல்லத்தோன்றியது. அவ்வாறே செய்த பின்பு, ஏனோ அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அதன் விளைவுதான் இது:








அன்பர் சம்ஸித்,

உங்கள் ஆய்வு சுவாரசியமாகத்தான் இருக்கின்றது. ஆனால் நம்பத்தகுந்த மாதிரி உள்ளதா என்று கேட்டால்தான் எங்கோ இடிக்கின்றது?



அதாவது மதநம்பிக்கைகள் கிராமிய மக்களை சமூகக் கட்டுக்கோப்புகளை மீறாமல் ஒழுக்கமாக வாழ்வதற்கு உதவுகின்றது என்பதுதானே உங்களது பத்தியின் சாராம்சம்?


உலகில் தோன்றிய அத்தனை மதங்களும் அவற்றின் கட்டுப்பாடுகளும் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகத்தான் உருவாகின. ஆனால் காலத்துக்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்ட தொழில் கருவிகளின் வருகையுடன் மனித வாழ்க்கை முறைமையும் மாறிக்கொண்டே செல்வதால் தவிர்க்க முடியாமல் மதங்களின் கட்டுப்பாட்டு எல்லைகளையும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகின்றது. இதனால்தான் காலத்துக்குக் காலம் வேறுவேறு மதங்களும் அல்லது ஒரு மதத்திற்குள்ளேயே பல பிரிவுகளும் ஏற்பட்டு வந்திருக்கின்றன.


அங்ஙனம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றுகின்ற மதங்களும் அந்தந்த காலகட்டத்திற்குரிய அம்சங்களைத்தான் தங்களது கடவுளர்களிலும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளிலும் பிரதிபலிக்கின்றன.



உ-ம்: இந்துக் கடவுள்களில் ஒன்றான காளிமாதாவின்  கரங்களில் இருப்பவை உலோகங்களாலான ஆயுதங்கள் ஆகும். ஏனெனில் இந்துமதம் வளர்ச்சிபெற்ற காலம் மனிதன் கற்களாலான கருவிகளைப் பயன்படுத்திய காலகட்டத்திலிருந்து உலோக ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்திலாகும்.



ஒரு பேச்சுக்காக, இதே காளிமாதா இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியிருந்தால் அவளது கரங்களிலே இருப்பவை AK 47 ,T 56 துப்பாக்கிகளாகவும்தானே இருந்திருக்கும்? க்ரனைட் முதல் ரொக்கட் லோஞ்சர்கள் வரை கூட இருந்திருக்கும்.







இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டிலே ஒரு மதம் தோன்றினால் அதிலே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன டைனோஸர்களின் அழிவு பற்றியும்  கணணி வைரஸ் பற்றியும் குறிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஏன் MP3, இன்டர்நெற், டொங்கல், ஐபேட் நனோ டெக்னோலொஜி பற்றியெல்லாம் கூட சொல்லப்படும்.


மதங்கள் எனும் கருத்தியல் சார்ந்த நம்பிக்கைகளால் கிராமிய மக்கள் ஓரளவு தங்கள் ஒழுக்க விழுமியங்களைப் பேணி வந்தாலும் இன்றைய முதலாளித்துவ பல்தேசியக் கம்பனிகளின் அசுர வளர்ச்சி உலகையே சிறு கிராமமாக்கி பண்டங்களையும் சேவைகளையும் மட்டுமன்றி ஒருகாலத்தில் புனிதமாகவும் தூய்மையானதாகவும் மக்களால் போற்றப்பட்டு வந்த அத்தனை அம்சங்களையும் காசுகொடுத்து வாங்குமளவுக்கு மலினமாக்கிக் கொண்டிருக்கின்றது.



இதனால் மதநம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டிருந்த சமூகங்கள் இன்று வெறும் பண்டங்களை நுகர்வதிலே போட்டிபோடும் சிறுசிறு குழுக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றைய யதார்த்தம்.
இந்தப் பொருளாதாரச் சுனாமி அலைகளுக்குள் மரணம் நீங்கலாக உண்மை, நேர்மை, மதபக்தி, குருபக்தி, ஆண்-பெண் உறவு, நட்பு, பெண்மை, தாய்மை, பாசம் உட்பட அள்ளுண்டு போகாத எதுவுமே இல்லை எனலாம்.




யதார்த்தம் இப்படியிருக்கையிலே நீங்கள் இப்படியொரு பத்தியை எழுதிக் கொண்டிருப்பதை நினைத்து அனுதாபப்படுகின்றேன். நான் கூறுவது கசப்பாக இருந்தாலும் உண்மையான நிலைமை இதுதான் நண்பரே.



இதிலே... கிராமமென்ன நகரமென்ன?


எனது கருத்து பற்றி உங்கள் விமர்சனத்தையும் சொல்லுங்கள் நண்பரே / பார்வையிடும் நண்பர்களே!


- Jesslya Jessly

No comments:

Post a Comment