அவற்றிலே நான் ரசித்த கவிதை ஒன்றை தருகின்றேன்.
இன்றைய அவசரயுகத்திலே கல்வி, சுகாதார வசதிகள் போன்ற பல தேவைகளுக்காக சிந்தித்து முடிவெடுப்பதற்குக் கூட அவகாசமின்றி அடித்துப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கின்றோம் நாம்.
நமக்குப் பொருத்தமானது என்பதையெல்லாம் யோசிக்கப் பொறுமையின்றி மற்றவரைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதுதான் ஏறக்குறைய வசதியானதாக மாறி விட்ட இன்றைய குருட்டுச் சுயநலவாழ்க்கை முறை ; அதனால் பல்கிப்பெருகும் அறியாமை; விரோதம்;
இவற்றையெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஏமாற்றி காசுபார்க்கும் (இன்றைய முதலாளித்துவ பல்தேசியக் கம்பனி முகவர்களின்) சுரண்டலை அன்றே உணர்ந்தது போல இக்கவிதை சொல்லப்பட்டிருக்கின்றது.
இது கவிஞரது தீர்க்கதரிசனமோ அல்லது தற்செயலோ தெரியவில்லை. ஆனாலும் படிக்கும்போது வியப்பை ஏற்படுத்துவது மட்டும் உண்மை.
1986.12.28 அன்று சிந்தாமணி பத்திரிகையில் பிரசுரமான அந்தக் கவிதையை பாருங்கள் இனி...
-'Mutur' Mohd. Rafi
கவிதை:
வேறு என்ன செய்வார்கள்?
தம்பியின் வருத்தம் போக்குவதற்குத்
தரணியின் வைத்தியர் அனைவரையும்
கும்பிட்டு உடனே கூட்டிவந்து
கொட்டி நின்றேன் பணத்தையெல்லாம்
பேய்க்கு மந்திரம் உரைப்பவர்கள்
பெருமிதமாகச் சொன்னார்கள்
வயிரவன் வேம்பு மரத்தடியில்
வைத்துப் பார்வை கொண்டதென்று
சூனியம் பார்ப்பதிலே பேர் பெற்றோர்
சுதந்திரமாகச் சொன்னார்கள்
மனிதன் எவனோ செய்கையொன்றைச்
செய்து மறைத்துள் ளானெவே
வாதநோய்க்கு மருந்து செய்து
வாழ்ந்து வரும் ஒருபரிகாரி
இதுவே அனல்வாதம் என்று
எடுத்த எடுப்பில் சொல்லி விட்டான்
ஆங்கில வைத்தியம் பார்க்கின்ற
அனைத்துப்பேரும் சன்னியென்று
இங்கிதமாகச் சொல்லிவிட்டு
ஏதேதோ மருந்து கொடுத்தார்கள்
தாங்கள் முயன்று படித்ததை
தம்பியின் வருத்தம் என்கின்றார்
வாங்கி உண்ணும் தொழிலால்
வாழ்பவர் என்ன செய்வார்கள்?
- வீ.எம். நஜிமுத்தீன்
Thanks: MMK Foundation, Mutur
No comments:
Post a Comment