Tuesday, April 24, 2012

சோனகமொழி :









மது நாட்டில் முஸ்லீம் மக்களை பொதுவாக சோனகர் என்று அழைக்கும் வழக்கம் இன்றும் கூட இருந்து வருகின்றது. இவ்வாறு அழைக்கப்படுவதை முஸ்லீம்கள் அநேகமாக விரும்புவது கிடையாது. எனினும் அவ்வாறு வழங்கப்படுவதற்கு  நிச்சயமாக வரலாற்றுக் காரணங்கள் உள்ளது. இது தொடர்பாக வெகு அண்மைக்காலம் வரையில் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை  என்பது துரதிஷ்டமானதே. இன்றுள்ள இளைய தலைமுறையினர் பலருக்கு தம்மை ஏனைய இனத்தவர்கள் சோனகர் என்று விளிப்பது கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் சோனகர்கள் பற்றியும் அவர்களால் நாடு தழுவியளவிலே தாய்மொழியாகப் பேசப்பட்டுவரும் மொழி பற்றியும் புதிய கோணத்தில் ஆராயத் துணிந்தவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பட்டினத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பர் திரு. அ.வா. முஹ்ஸீன்.

அதாவது இதுவரையில் நாம் அனைவரும் அறிந்துள்ளபடி இலங்கையிலுள்ள முஸ்லீம்களால் பேசப்பட்டு வரும் மொழி உண்மையிலே தமிழ் மொழி அல்ல; அது சோனகர்களுக்கே உரித்தான சோனக மொழியாகும் என்பதுதான் அவரது வாதம். தனது வாதத்துக்குரிய பல ஆதாரங்களை முன்வைத்திருக்கும் திரு. அ.வா. முஹ்ஸீன் தான் ஒரு முறையான துறைசார் ஆற்றல்வாய்ந்த வரலாற்றாய்வாளர் அல்லவெனவும்  தனது ஆய்வு எவ்வளவு தூரம் சரியானதும் உண்மையானதும் என்பதை  தனது முன்வைப்பைத் தொடர்ந்து நிகழப்போகும் வரலாற்று ஆய்வுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். சோனகர்கள் தொடர்பாகவும் சோனக மொழி தொடர்பாகவும் ஓரிரு நூல்களை எழுதி வெளியிட்டு வரும் அவர் தொடர்ந்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் எனத் தெரியவருகின்றது.

எது எவ்வாறிருப்பினும் இலங்கைத் தீவு முழுவதும் வாழும் முஸ்லீம்கள் இன்றுவரை தமது தாய்மொழியாக தமிழர்கள் பேசும் தமிழ்மொழியைப் பெரிதும் ஒத்த ஆனால் தமக்கேயுரித்தான மத கலாசார அடையாளங்களுடனான சொற்பிரயோகங்களைக் கொண்ட மொழியைத்தான் பேசிவருகின்றார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த மொழி தமிழ் மொழியின் வேறுபட்ட பிரதேச வழக்கா அல்லது அ.வா. முஹ்ஸீன் குறிப்பிடுவது போல தனியான ஒரு மொழியா என்பதை அவரே கூறுவது போல எதிர்காலத்துக்கு விட்டு விடுவோம்.


இப்போது திரு. அ.வா. முஹ்ஸீன் "சோனக மொழி" யிலே எழுதிய 'இங்கினயும் ஒரு மஹ்ஷர்' என்ற தொகுப்பிலிருந்து சிறுகதை ஒன்றைத் தருகின்றோம். அதற்கு முன்பு திரு அ.வா. முஹ்ஸீன் பற்றிய சிறு அறிமுகம்....


ஓர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவரும் திரு அ.வா. முஹ்ஸீன் அரசியல், மொழியியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் குறிப்பிடத்தக்க ஆற்றலும் ஈடுபாடும் கொண்ட ஓர் மனிதநேயமிக்க படைப்பாளியுமாவார்.
 
 


ஆரம்ப காலங்களிலே மார்க்ஸிய லெனினிய அரசியல் பொருள்முதல்வாத சித்தாந்தங்களிலே வலுவான நம்பிக்கையும் தீவிரமான ஈடுபாடும்  கொண்டிருந்து நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இயங்கிவரான திரு. அ.வா. முஹ்ஸீன் பின்பு படிப்படியாக கருத்துமுதல்வாத சிந்தனைகளிலே ஆர்வம் கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது.


தற்போது எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானஹுதாலாவின் கிருபையால் புனித இஸ்லாமியமத சிந்தனைகளின்பால் தன்னை ஆட்படுத்திக் கொண்டவராக மாறி, முஸ்லீம்கள் தொடர்பான அரசியல் இலக்கிய நிகழ்வுகளிலே ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றார், இந்த முன்னாள் மார்க்ஸியவாதி.

- Jesslya Jessly





 சிறுகதை:

கொலிசங்கன்னா










கொலிசத்துக்கு பன்னெண்டு வயசி இரிக்கக்குள்ளெதா அவ மொதெமொதெலா அவடெ உம்மாவொடெ புள்ளெபேறு பாக்கெ போனா. அப்பெ அவ பெரியாளா பீத்து ஒள்ளுப்ப நாள்தா பீத்திரிந்திச்சி. கொலிசத்திடெ உம்மாக்கு அப்பெ ஒடெம்பு நல்லா இல்லாமெ பீத்திது. அதாலெ இம்புட்டு காலமா தான் பாத்து வந்தெ மருத்துவிச்சி தொழிலெ தன்டெ மவளுக்கு சொல்லிக் குடுக்கெ அவ முடிவு செஞ்சா.

கொலிசத்திரெ மொதெலாவது அனுபவம் சரியானெ அரிகண்டமா இரிந்திச்சி. எரெத்தெமு நாத்தமு கத்துவச் சத்தமு சேந்து கொலிசத்துக்கு சத்தி வந்திட்டு. கொள்ளப்பக்கமா பீத்து சத்தி எடுத்துப்புட்டு வந்தா. பொறவு போவெப்போவெ எல்லாம் பழகிப் பீத்திது. கொலிசத்துக்கு பதினாலு வயசிலெ கலியாணம் நடந்திச்சி. அடுக்கடுக்கா அவெக்கு அஞ்சி புள்ளயொளு பொறெந்திச்சி. எல்லா புள்ளெயளுக்கும் அவெடெ உம்மாதான் மருத்துவம் பாத்தா. சரியா அவெக்கு இருவெத்திரெண்டு வயசி வரெக்குள்ளெ அவெடெ உம்மாவாலெ புள்ளெப்பேறு பாக்கேலாமெ பீத்திது. அதுக்கு பொறவு கொலிசந்தா இந்தெ வேலெயெ பொறுப்பெடுத்தா.

பம்முஸ் மூட்டத்துக்குள்ளெ கொலிசத்துக்கு இருவெத்தஞ்சி வயசி. ஜப்பாங்காரெ போட்டெ குண்டுலெ வெள்ளெக்;காரனெல்லா பயந்து பீத்தா. ஆக்களெல்லா ஓடிப்பீத்து கோட்டெயாத்து பள்ளிக்கொடத்துக்குள்ளெ இரிந்தாகெ. அப்பெ அந்த பள்ளிக்கொடத்தொடெ ஒட்டுனாப்பலதா ஆசுபத்திரி இரிந்திச்சி. அதிலெ இரிந்தெ மருத்துவிச்சியெல்லா பயத்திலெ ஓடிப் பீத்தாளொலு. அந்தெ நேரெத்திலெ கொலிசந்;தா அங்கெ இரிந்தெ வெள்ளெக்காரெ டாக்குத்தருக்கு ஒதெவியா இரிந்தா. அந்தெ மூட்டத்திலெ நாலு பேருக்கு புள்ளெ பொறெந்திச்சி. கொலிசந்தா அவங்களுக்கெல்லா மருத்துவம் பாத்தா. அவ வேலெ செஞ்செ மொறெயெப் பாத்து அந்தெ வெள்ளெக்காரெ டாக்குத்தர் அவவெ அதுக்குப் பொறவு அந்த ஆசுபத்திரிலேயே வேலெ பாக்கும்படி கேட்டாரு. ஆனா கொலிசம் அதுக்கு ஒத்துக்கேலெ.


'ஐயா எனெக்கி இப்பிடியெல்லா ஒரு எடெத்திலெ அடெஞ்சி கெடெந்து வேலெ செய்யெ புறியமில்லெ.' என்டு சொல்லிப்புட்டு அவ ஊட்டுக்கு வந்துட்டா.

புள்ளெப்பேறு பாத்தத்தாலெ கொலிசத்துக்கு பெரிய வருமானம் எதுவுங் கெடெக்கேலெ. மொதெல்;லெ ஒரு ரெண்டு மூனு ரூவா காசும் பொறவு வெள்ளாமெ வெட்டு நேரெத்திலெ ஒள்ளுப்பங்கானு நெல்லுங் குடுப்பாகெ. வெள்ளாமெச் செய்யாதெ ஊட்டுலெ அதுவுமில்லெ. என்டாலு கொலிசம் ஒருநாளு காசெயோ இல்லாட்டிக்கி நெல்லெயோ எதிர்பாத்து அந்தெ வேலெயெ செய்யேலெ. அவக்கு அது ஒரு கட்டாயக் கடமெயாவே பேய்த்துது. எங்கெடெ ஊரிலெ இரிக்கிற கனக்கப் பேர் அவ புள்ளப்பேறு பாத்து பொறெந்தாக்கள்தா.

ஆறுங் கடலுந்தா கொலிசத்துக்கு சாப்பாடு கெடெக்கெ ஒதெவி செஞ்சிது. பால்தொறெயிலயு கடக்கரெயிலயு புடிக்கிற மீனும் எடுக்கிறெ மட்டியுந்தான் அவடெ வாழ்க்கெயெ கொண்டு போவெ ஒதெவி செஞ்சிச்சி. மீன் புடிக்கிறத்துக்கு அவக்கு வலெயோ இல்லாட்டிக்கி தூண்டலோ தேவெப்படாது. தன்டெ முந்திச்சீலெயாலெயே மீனெயெல்லா வடிச்சி புடிச்சிப்புடுவா. அந்தமாரித்தா மட்டி எடுக்கக்குள்ளெயு. அவ ஒரு நாளுங் கத்திக்கம்பெல்லா கொண்டு போறெதில்லெ. கால் பெருவிரலாலயோ இல்லாட்டிக்கி உள்ளங்காலாலயோ தடவிப் பாத்தே மட்டியெ எடுத்துப்புடுவா.


ஒருதரக்கம் இப்பிடி மீன்புடிச்சிக்கிட்டு வரெக்குள்ளதா அந்தெச் சம்பவம் நடெந்திச்சி. புடிச்செ மீனெயெல்லா முந்திச்சீலயிலெ கட்டி எடுத்துக்கிட்டு கொலிசம் ஊட்டுக்கு வந்திக்கிட்டிரிந்தா. அப்பெ மஹ்ரிபர்ரெ நேரெமா பேய்த்திது. அவ கபுறடிக்காட்டுக்குள்ளாளெ வந்திக்கிட்டிரிந்தா. அவ ஒரு நாளுமே எதுக்கும் பயப்பிர்ரதில்லெ. பக்கீரப்பாடெ கபுறடியெ தாண்டி வந்திக்கிட்டிரிக்கக்குள்ளெ பின்னாலெ யாரோ வாறெமாரி சத்தம் கேட்டிச்சி. கொலிசம் திரும்பிப் பாத்தா. ஒரு பொம்புளெ. அந்த பொம்புளெயெ இதுக்கு முந்தி அவ ஒருநாளும் கண்டதில்லெ.

'யாரிடி நீ?'

அந்தெ பொம்புளெயெ பாத்து கொலிசம் சத்தமா கேட்டா. ஆனா அவ மறுமுழி சொல்லாமெ கொலிசத்துக்கு கிட்டெ வந்து அவவெ கட்டிப்புடிச்சா. கொலிசத்துக்கு ஒடெம்பெல்லா நடுங்கி பேய்த்திது.

'பயப்புடாதெ. நா ஜின். ஒனெக்கி ஒதெவி செய்யத்தா வந்திக்கே. இனிமெ நீ புள்ளெப்பேறு பாக்கக்குள்ளெ ஒனெக்கி நா ஒதெவியா இரிப்பே.'

சொல்லிப்புட்டு அந்தெ பொம்புளெ பேய்த்தா. அவ எங்காலெ போனா என்டு கொலிசத்துக்கு தெரியேலெ. கொலிசம் ஒரே ஓட்டமா ஊட்டெ வந்தா. அவ அதெப்பத்தி யாருக்கிட்டயு சொல்லேலெ. ஆனா அன்டு ராவு முத்துலு அவக்குச் சரியானெ காச்சல் அடிச்சிது. நெத்திரெயிலெ அவ ஒரு சாங்கமா வாய் உலாத்திக்கிட்டு இரிந்தா.


ரெண்டு மூனு நாள்லெ கொலிசம் எல்லாத்தயு மறந்திட்டா. ஒரு மாசத்துக்கு பொறவு வவுத்து மம்மறாயன் காக்காடெ பொஞ்சாரிக்கு புள்ளெப்பேறு பாக்கெ சொலிசம் பீத்திரிந்தா. அந்தெ மனுசி ஒடெம்பெல்லா வீங்கி, நல்லா பெருத்துப் பீத்திரிந்தா. கடுந்நோக்காட்டுலெ அவ கத்திக்கிட்டிரிந்தா. கொலிசம் அவடெ வவுத்தெ தடவிப் பாத்தா. புள்ளெ குறுக்காலெ கெடெந்திச்சி. பன்னீர்கொடம் ஒடெஞ்சி, ஓடிக்கிட்டிரிந்திச்சி. எப்பிடியாவது ஒடெனடியா புள்ளெயெ வெளியாலெ எடுக்கணும். எடுக்காட்டிப்போனா புள்ளெக்கும் தாய்க்கும் ஆபத்து. இப்பிடி ஒரு நெலெமெயெ கொலிசம் இப்பதா மொதெமொதெலா பாக்கிறா. என்ன செய்யிறேன்டு தெரியாமெ நிக்கெக்குள்ளெ அவெடெ கையெ யாரோ பின்னாலெ இரிந்து புடிச்சமாரி இரிந்திச்சி. திரும்பி பாத்தா. கபுறடிக்காட்டுக்குள்ளெ பாத்தெ அதே பொம்புளெ.

'நா சொல்றமாரி செய்.'

அவ சொன்னா. கொலிசம் அவ சொன்னமாரியெல்லா செஞ்சா. மொதெல்லெ வவுத்தெத் தடவி, புள்ளெயிரெ தலெப்பக்கத்தெ ஒள்ளுப்பம் ஒள்ளுப்பமா அமெத்தி அமெத்தி கீழெ கொண்டு வந்தா. பொறவு கையெ நல்லா உள்ளெ உட்டு, அந்த புள்ளெயிரெ தலெயெ புடிச்சி இழுத்து எடுத்தா. மம்மராயன் காக்காடெ பொஞ்சாதி நோக்காடு தாங்கேலாமெ கீசி கத்திக்கிட்டு மயங்கிப் பேய்த்தா. கடெசியிலெ புள்ளெயுந் தாயும் பொழெச்சிக்கிட்டாகெ.


அதுக்குப் பொறவுதா தனக்கு ஜின் வாசலாத்து வந்திரிக்கி என்டெதெ கொலிசம் ஒணந்தா. ஆனா அதெப்பத்தி அவ யாருக்கிட்டயு சொல்லேலெ. அந்த பொம்புளெ ஜின்னு அவக்கிட்டெ எப்பவு இரிக்கிறதில்லெ. எப்பவாவது கஸ்டமானெ புள்ளெப்பேறு இரிக்கக்குள்ளதா அது அவக்கிட்ட வரு.


இன்னொரு தரக்கம் ஒரு மனுசிக்கு புள்ளெப்பேறு. அது கொறெமாசப் புள்ளெ. புள்ளெ வவுத்துக்குள்ளயே மரிச்சிப் பீத்திது. அப்பவு அந்தெ ஜின்தா, அந்தெ புள்ளெயெ எப்பிடி எடுக்கிறெ என்டெதெ சொல்லிக் குடுத்துது. தாயெ மொழெங்கால்லெ குந்தியிருக்கெ வெச்சி, அவெக்கு பின்பக்கமா நின்டு, வவுத்தெ நீவி நீவி அந்தெ புள்ளெயெ வெளியெ எடுத்தா. அப்பிடியொரு புள்ளெயெ அதுக்கு முந்தியோ பிந்தியோ ஒரு நாளும் கொலிசம் காணேலெ. அதிடெ தலெ நொழுக்கு நொழுக்கென்டு இரிந்திச்சி. கண் ரெண்டும் வெளியெ பிதுங்கி தள்ளிக்கிட்டிரிந்திச்சி. மூக்கு வாயெல்லாம் சப்பட்டயா ஒட்டி பீத்திரிந்திச்சி. வவுறு பெருத்து கையுங் காலும் ஈக்குச்சிமாரி இரிந்திச்சி. அதெப் பாத்தா ஒரு மனிசப் பொறெவியாவே தெரியேலெ. சுத்துலு ஒரு வாலாந்தவெக்கட்டமாரியே அந்தெ புள்ளெ இரிந்திச்சி. அந்தெ புள்ளெயெ வேறெ யாருக்கிட்டெயு காட்டாமெ ஒடனெயே அடக்கிப்புட்டாகெ.


0 0 0 0 0



பெருவெள்ளத்துக்குள்ளெ கொலிசாத்தாக்கு நாப்பது வயசி முடிஞ்சிட்டு. கொலிசாத்தாடெ மாளெயு அந்தெ வெள்ளம் அடிச்சிக்கிட்டு பேய்த்திது. அந்தெ மாளுக்குள்ளெ ஒன்னும் பெரிசா இரிக்கேல்லதா. ரெண்டு ஓலெப்பாய், ஒரு தலெவாணி, ஒரு வெத்திலெத் தட்டம், ஒள்ளுப்பம் உடுப்பு, அதுபோகெ நாலஞ்சி சட்டி, பானெ. இம்புட்டுத்தா அவெக்கிட்டெ இரிந்தெ சொத்து. அதெ எல்லாத்தயுமே வெள்ளம் கொண்டு பேய்த்திது.


வெள்ளம் வடியெ நாலஞ்சி நாளா பேய்த்திது. அதுக்குப் பொறவு ஊருலெ வவுத்தாலயு சத்தியு வந்திட்டு. கனெக்கச் சின்னப் புள்ளெயொலு மௌத்தாப் பேய்த்திரொளு. கொலிசாத்தாடெ புருசனும் கடெசிப் பொடியனும் மௌத்தாப் பீத்தாகெ. ரெண்டு மூனு மாசத்துக்கு கூப்பன் கடெயிலெ சும்மா சாமா குடுத்தாகெ. நீட்டு நீட்டு மிச்சாட் அரிசி, கறுத்தச் சீனி, மாசி, பருப்பு என்டு கனெக்கச் சாமான் குடுத்தாகெ. ஒள்ளுப்ப நாள்லயே வாழ்க்கெ மறுவாடியு முந்தினமாரி வந்திட்டு. அதுக்கு பொறவு கொலிசாத்தா கல்யாணம் முடிக்காமாலெயே கடெசிவரெக்கும் வாழ்ந்தா.


இப்பெ ஊரிலெ பெரியெ ஆசுபத்திரி கட்டி, தனியா ஒரு புள்ளப்பேறு வாட்டும் கட்டியிருந்தாகெ. என்டாலு வேதெக்காரெ பொம்புளயளு மத்திரந்தா ஆசுபத்திரிக்கு புள்ளெப் பெறெப் போனாகெ. சோனவ பொம்புளயலு யாரும் அங்கெ போறெதில்லெ. எப்பவும்போலெ கொலிசாத்தாதா


அவெகளுக்கெல்லாம் புள்ளெப்பேறு பாத்தா.

ஒருதரக்கம் ஒட்டி நெய்னாடெ பொட்டெக்கி வவுத்து நோ வந்திட்டு என்டு கொலிசாத்தாக்கு ஆள் அனுப்பினாகெ. கடெவாயிலெ சாறு வழிஞ்சோடெ, வெத்திலெயெ சப்பிக்கிட்டு கொலிசாத்தா வந்தா. அந்தெ பொட்டெக்கி அது தலெப்புள்ளெ. பாயிலெ கெடெந்து துடிச்சிக்கிட்டு இரிந்தா.

'புருசனொடெ படுக்கக்குள்ளெ நோக்காடு தெரியேலியாம் – இப்பெ
புள்ளெப்பேறு என்டெ ஒடனே கெடெந்து துடிக்கிறவாம்.'

கொலிசாத்தா சிரிச்சிக்கிட்டு பாட்டு படிச்சா. ஆனா அந்தெ பொட்டெயிரெ வவுத்தெ தொட்டுப் பாத்தெ பொறவுதா நெலெமெ சிக்கல் என்டு அவெக்கு வெளெங்கினிச்சி. புள்ளெ குறுக்காலெ கெடெந்திச்சி. ஒட்டி நெய்னாடெ பொட்டெ சின்னாள். வயசுங் கொறெயெ. அதோடெ தலெப்புள்ளெ. கொலிசாத்தா தனெக்குத் தெரிஞ்செ எல்லா மொறெயெயு செஞ்சி பாத்தா. ஒன்னுஞ் சரி வரேலெ. தலெ திரும்பெ மாட்டேன்டுட்டுது.
கொலிசாத்தாக்கு ஒன்னும் வெளெங்கேலெ. இனிமெ என்ன செய்யிற என்டு யோசிச்சிக்கிட்டு இரிக்கக்குள்ளெ அவெக்கு பின்னாலெ அந்த ஜின் வந்து நின்டிக்கிட்டு இரிந்திச்சி.

'நா சொல்றமாரி செய்.'

அது சொன்னிச்சி. அந்தெ ஜின் சொன்னமாரியே கொலிசாத்தா செஞ்சா. கையெ உள்ளெ உட்டு முன்னுக்கு தெரிஞ்செ அந்தெ புள்ளெயிர கையெ முறிச்சா. பொறவு அந்தெ புள்ளெயெ ஒள்ளுப்பம் அசெச்சிப்புட்டு, அதுடெ காலெமுறிச்சா. அதுக்கு பொறவுதா அந்த புள்ளெயிர தலெயெ மடெக்கி, கீழெ கொண்டு வந்து, புள்ளெயெ வெட்டெயாலெ எடுக்கெ ஏண்டிச்சி. புள்ளெ மௌத்தாப் பீத்திது. ஆனா தாய் ஒரு கொறெயு இல்லாமெ தப்பிட்டா. அதுக்கு பொறவு சொத்தி நெய்னாடெ பொட்டெக்கி நாலு புள்ளெ பொறெந்திச்சி. நாலும் சொகெப் பிரசவந்தா. நாலுக்கும் கொலிசாத்தாதா மருத்துவம் பாத்தா.


0 0 0 0 0


ப்பயெல்லாம் கொலிசங்கன்னாவெ புள்ளப்பேறு பாக்கெ கனெக்க பேர் கூப்புர்ரதில்லெ. ஊரிலெ இரிக்கிற ஆசுபத்திரியெ நல்லா பெரிசா கட்டிக்காகெ. டாக்குத்தர்மாரும் நாலஞ்சி பேர் இரிக்காகெ. ஏதாவது சீரியஸ் என்டா மலெவூர்லெ இரிக்கிற பெரியாஸ்பத்திரிக்கி அனுப்பிர்ராகெ. ஆனா என்னென்டா, இப்பெ கனெக்க பேருக்கு ஒப்பரேசன் பண்ணித்தான் புள்ளெயெ எடுக்கிறாகெ. அதுக்கு பொறவு ஒப்பரேசன் பண்ணினெ பொம்புளெ இன்னொரு தரக்கந்தான் புள்ளெப் பெறேலுமா.

கொலிசங்கன்னாக்கு இப்பெ நல்லா வயசாப் பேய்த்திது. என்டாலு அவடெ ஓருமெ இன்னுங் கொறெயேலெ. இப்பவு அவ எடெக்கெடெ மீன் புடிக்க, இல்லாட்டி மட்டி எடுக்க போறாதா. முன்னமாரி இல்லாட்டியு ஒள்ளுப்பங்கானு என்டாலு அவ மீன் புடிக்கிறாதா. அவடெ புள்ளெயளும் பேரப் புள்ளெயளும் எம்புட்டுத்தா சொன்னாலு அவ கேக்கெ மாட்டா.

'சும்மா போங்க புள்ளெயளா. என்டெ ஒடெம்பிலெ தெம்பு இரிக்கி மட்டு நா ஏராவரு செஞ்சிக்கிட்டுத்தா இரிப்பே.'


வெத்திலெச் சாத்தெத் துப்பிக்கிட்டு அவ உறுதியா சொல்லிப்புட்டா.
என்டாலு காலம் முன்னமாரி இல்லெ. இப்பெ நெலெமெ மாறி பேய்த்திது. ஊருலெ அடிக்கடி பெரெச்சினெ. எல்லாம் இந்தெ புலித் தூமெயாலெ வாறெ பெரெச்சினெதா. கொலிசங்கன்னாடெ நடுவுள்ளெ மருமவனெ புலி சுட்டுக் கொன்டு பொட்டானொளு. அவெ ஒரு வாய்பேசா அப்பாவி. கொள்ளி எடுக்கயென்டு றாக்குழிப் பக்கம் போனெவந்தான். அதுக்குப் பொறவு அவெ உசிரோடெ வரவேயில்லெ. ரெண்டு நாளெக்கி பொறவுதா, மாம்புஞ்சா ஆத்துக்குப் பக்கத்திலெ ஒரு பத்தைக்குள்ளெ இரிந்து சூட்டுக் காயத்தோடெ அவன்டெ மையத்தெ எடுத்தாகெ.

அதுக்கு பொறவு கொலிசங்கன்னா ஆத்துக்கோ இல்லாட்டி கடக்கரெக்கோ மீன் புடிக்கப் போறெதில்லெ. கொளெத்தெ போறத்துக்கும் இப்பெ கண்டங்காட்டு பக்கம் அவ போறதில்லெ. அவடெ மூத்த பேரென், ஊட்டுலயெ கக்கூஸ் கட்டிக்கான். அதுக்குள்ளெ போறது மொதெல்லெ கஷ்டமாத்தா இரிந்திச்சி. ஆட்டுமாலுக்குள்ளெ காத்து படப்பட கொளத்தெபோறெ மாரி இல்லத்தா. என்டாலு இது அவக்கு இப்பெ பழகிப் பேய்த்திது.



இப்பெ ஊரிலெ ஒவ்வொரு நாளும் எதென்டாலு நடந்துக்கிட்டே இரிக்கி. ஒன்னு யாரயென்டாலு கொன்டுர்ரானொளு, இல்லாட்டி கடத்தி பேத்திர்ரானொளு. அதுவுமில்லாட்டி எங்கயென்டாலு களவெடுக்கிறானொளு. முன்னெயமாரி இப்பெ யாரு வெள்ளாமெச் செய்யிறேல்லெ. முஸ்லிமாக்கள்ரெ வயலயெல்லா தமிழனொளுதா செய்யிறானொளு. வெள்ளாமெ வெட்டுனத்துக்கு பொறவு ஒள்ளுப்பம் ஆயம் கொண்டு வந்து கொடுக்கிறானொளு. அதுவு சிலாக்கள்தா. மத்தாக்கள் ஒன்னுமே குடுக்கிறதில்லெ.


கொலிசங்கன்னாடா மூத்தெ மவளும் நடுவுள்ளெ மவளும் மூத்தெ பேரனும் வெளிநாட்டுக்குப் பேய்த்தாகெ. ஊரிலெ கனெபேர் இப்பெ வெளிநாட்டிலதா இரிக்கிறாகெ. கொலிசங்கன்னாடெ பேரன், அவடெ மாளெ இடிச்சிப்புட்டு அந்தெ எடெத்திலெ ஒரு சின்ன கல்ஊடு கட்டிக் குடுத்திக்கா. அந்தெ ஊட்டெ மட்டெயாலெ மேயாமெ, அதுக்கு சீட் போட்டுக் குடுத்திக்கா. வெளிநாட்டுக்கு பேய்த்திரிக்கிறெ ரெண்டு மவெள்ரெ ஊட்டுலயு டீபி பொட்டி இரிக்கி. அதுக்குள்ளெ என்னெ;னமோ தெரீரு. கொலிசங்கன்னாக்கு இப்பெ தூரெ இரிக்கிறெ சாமானெல்லா கண்ணுக்கு தெரீதில்லெ. என்டாலு அவ அந்தெ பொட்டிக்கு கிட்டெ பேய்த்து நின்டுக்கிட்டு, அதிலெ தெரியிறதெ செத்தெ சாமத்துக்கு பாப்பா. பொறவு வாசல் குந்திலெ இரிந்திக்கிட்டு வெத்திலெ போடத் தொவெங்கிடுவா. அவடெ பேரப் புள்ளெயளும் பக்கத்து புள்ளெயளும் ஒரே ஒரெயெ அந்த டீபி பொட்டியத்தா பாத்திக்கிட்டு இரிக்கிமொளு. அதாலெ அவ இந்தெ டீபி பொட்டிக்கு 'செய்த்தான் பொட்டி' என்டு பேரும் வெச்சிப்புட்டா.


ஒரு நாள் ராவு ஒம்பது மணி இரிக்கும். அப்பதா ரேடியோவுலெ செய்தி சொல்லெ தொவெங்கியிரிந்திச்சி. திடீரென்டு குண்டு மொளெங்கிறெ சத்தம் கேட்டிச்சி. பொறவு வெடிச்சத்தம். வெடியென்டா சும்மா கிம்மா வெடியில்லெ. காது கன்னம் வெக்கேலாதெ வெடி. ஆக்களெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டு அங்காலயும் இங்காலயும் ஓடினாகெ.

'புலி வந்திட்டானொளு. ஊட்டெயெல்லா எரிக்கிறானொளு.'

எங்ஙின பாத்தாலும் இந்த சத்தந்தான். எல்லாரும் பள்ளிவாசலுக்குள்ளெ ஓடிப் பேய்த்து இரிந்தாகெ. பள்ளிவாசலுக்குள்ளெ சரியானெ சனம். அம்புட்டு பேரும் அதுக்குள்ளெ நிக்கிறத்துக்கே எடெமில்லெ. சின்னெப் புள்ளெயொளெல்லாம் கீசிக் கத்தத் தொவெங்கிட்டுதொளு. ஊரெல்லாம் நெருப்பு பத்தி வெளிச்சமாவும் பொகெயாவும் இரிந்திச்சி.


அந்தெ நேரெத்திலெ பாத்து சுருட்டு முஸ்தவா காக்காடெ மகளுக்கு வவுத்து நோக்காடு வந்திட்டு. அந்தெ நெலெமெயிலெ அவவெ ஆசுபத்தரிக்கி கொண்டு போறெத்துக்கும் எந்தெ வழியுமில்லெ. சுருட்டு முஸ்தவா காக்காவும் அவர்ரெ மருமவனும் பதறிக்கிட்டு இரிந்தாகெ. புள்ளெ பொர்ரத்துக்கு இன்னும் நாலு நாள் இரிந்திச்சி. மலெயிலெ பெரியாஸ்பத்திரியிலெ ஒப்பரேசன் பண்ணித்தா புள்ளெயெ எடுக்கணுமென்டு சொல்லியிரிந்தாகெ. நாளெக்குத்தா அவவெ மலெயாஸ்பத்திரிக்கி கூட்டிக்கிட்டு போவெ இரிந்தாகெ. அதுக்குள்ளெ இப்பிடி நடந்து, இப்ப அவெக்கு வவுத்து நோவும் வந்திட்டு. அப்பதா கொலிசங்கன்னா சொன்னா.

'அடியேய். பொட்டெயெ ராசாத்தம்பிடெ ஊட்டுக்கு கூட்டிக்கிட்டு வாங்கடி'
பள்ளிவாசலுக்கு பக்கத்திலெதா ராசாத்தம்பி நானாட ஊடு. அந்த ஊட்டுக்கு முஸ்தவா காக்காடெ மகளெ கூட்டிக்கிட்டு போனாகெ. செத்தெ சாமத்திலெ ஒரு குஞ்சிப் புள்ளெ கத்திறெ சத்தம் பள்ளிவாசலுக்குள்ளெ இரிந்தெ எல்லாருக்கும் கேட்டிச்சி.

0 0 0 0 0

கொலிசங்கன்னாவெ நா போய் பாக்கக்குள்ளெ, அவகெ ஒரு பாயிலெ படுத்துக் கெடெந்தாகெ. இப்பெ அவகெலாலெ எழும்பி நடக்கேலா. அவகெளுக்கு ரெண்டு கண்ணும் முழுசா தெரியாமாப் பேய்த்திது. வரெண்டு, வெள்ளெயாப் போனெ கண்ணிலெ இரிந்து தண்ணி வடிஞ்சிக்கிட்டிரிந்திச்சி. வாய் மத்திரம் இப்பவு வெத்திலெயெ சப்பிக்கிட்டுத்தா இரிந்திச்சி.
அந்த ஊர்த்தாயின் வரலாற்றை எங்கெ ஊருக்கு யாபகப்படுத்தணுமென்டு நா எடுத்தெ முடிவு, காலம் கடந்ததோ என்டு எனெக்கி சந்தேகம் வந்திட்டு. அம்புட்டு தூரத்துக்கு கொலிசங்கன்னா வருத்தப்பட்டுக் கெடெந்தாகெ. என்டாலு நா கேட்டெ சில கேள்விக்கு அவகெ ஒள்ளுப்பம் ஒள்ளுப்பமா மறுமொழி சொன்னாகெ. கதெச்சிக்கிட்டிரிக்கக்குள்ளெயே தான் கதெக்கிறத்தெ மறந்து பேய்த்திடுவாகெ. பொறவு மறுவாடியு அவகெ உட்டெ எடெத்தெ யாபகப்படுத்தி, அவகெளெ கதெக்கப் பண்ணணு. என்டாலுந் தன்டெ வாழ்க்கெயெ அவகௌhலெ சரியாச் சொல்லெ முடிஞ்சிது.


'அது சரி கன்னா. அந்தெ ஜின்னுக்கு பொறவு என்ன நடெந்திச்சி.'
நா கேட்டே.

'அரா. அரு பீத்திரு. ஒரு தரக்கம் ராவுலெ நா ஊட்டிலெ தனியா இரிந்தே. அப்பெ மஹ்ரிபுக்கும் இசாவுக்கும் எடெப்பட்டெ நேரொ. அப்பெ அரு வந்திச்சி. வந்து எனெக்கி முன்னாலே இரிந்திச்சி. இரிந்துக்கிட்டு எனெக்கிட்டெ சொன்னிச்சி.
'நா போறெ. இனிமெ நா ஒனெக்கிட்டெ வரெ மாட்டே. ஒன்னாலெ ஏன்டமாரி நீ ஒன்டெ வேலெயெ செஞ்சிக்கெ.'

என்டு சொல்லிப்புட்டு என்னெப் பாத்து சிரிச்சிப்புட்டு அரு பீத்திரு. அருக்குப் பொறவு அரு வரவேயில்லெ.'

'கன்னா ஒன்னு கேக்கணு. ஒரு கொறெமாசெ புள்ளெயெ எடுத்தீங்கென்டு சொன்னிங்கதானே. அது யார்ரெ புள்ளெ கன்னா?

'இல்லெ தம்பி. அரெல்லா சொல்லப்படாரு தம்பி. நா இன்டெக்கி வரெக்கு அரெப்பத்தி யாருக்கிட்டயு சொல்லேலெ. இப்பிடி கனெக்கெ இரிக்கி தம்பி. ஆனா என்டெ உசிருள்;ளெ வரெக்கு அரெப்பத்தியெல்லா நா யாருக்கிட்டயு சொல்லெ மாட்டே.'

கொலிசங்கன்னா களெச்சி பேய்த்தாகெ. என்னொடெ கதெச்சிக்கிட்டிரிந்தமாரியே அவகெ நெத்திரெ கொண்டுட்டாகெ. நா அங்ஙின இரிந்து போறத்துக்கு எழும்பினே. கொலிசங்கன்னாடெ மூத்தெ பேரென் அப்பதா அங்ஙின வந்தா. ஒரு மாசத்துக்கு முந்தித்தா அவெ சவூதியிலெ இரிந்து வந்திக்கா. அவெனெ என்னாலெ மதிக்கெ முடியேலெ. நல்லா தெளிஞ்சு பெரியாளா இரிந்தா. என்னெ பாத்து அவெ மருவாதியா சிரிச்சா.


அவென்டெ கையிலெ ஒரு சின்ன டெலிபோன் இரிந்திச்சி.

- அ.வா. முஹ்சீன்
(இங்கினயும் ஒரு மஹ்ஷர்)

நன்றி: சோனகர் வலைத்தளம்

No comments:

Post a Comment