Wednesday, April 25, 2012

கவிதை :






தாவரத் தலைக்கனம்









கார்காலக் காற்றிலே
கருவுற்றுக் காத்திருக்கும்
நிறைமாதக் குளிர்மேகங்கள்
மழையைப் பிரசவிப்பதா வேண்டாமாவென
யோசனையில் ஆழ்ந்திருந்த
ஒர் ஜுலைமாதத்தின் காலைப்பொழுதில்
அந்தப் -
புகழ்பெற்ற பூங்காவுக்கு நீ
முதன்முதலாய் வந்திருந்தாய்!



அதுவரையில்
ஆடம்பர மலர்களைச் சுமந்திருந்த
அகங்காரப் பூமரங்களெல்லாம்
தங்கள்-
புன்னகையைத்
தொலைத்துவிட்டு
பொறாமையைப் பூசிக்கொண்டன!



கண்ணாடிக் காட்சியறைக்குள்
காக்கிச்சட்டைக் காவலோடு
கர்வமாய் வீற்றிருந்த
ஒயிலான -
ஓர்க்கிட் மலர்களெல்லாம்
உன் வதனம்பார்த்ததுமே
ஒருதடவை தமது
ஒப்பனையைச் சரிபார்த்துக் கொண்டன!



சேற்றுக்குளங்களுக்குள்
குளித்துச் சிலிர்த்த நீராம்பல் மலர்களெல்லாம்
உன்னிரு இதழ்களின்
'இளமை ரகசியம்' அறிந்திட
உன் துணைக்குவந்த
என்னையல்லவா துளைத்தெடுத்தன!



சிறுமொட்டு மழலையர்க்கு
செந்நிறம் யாசித்து
உனது இதழ்களிடம்
தவமிருந்த ரோஜாச்செடிகள்
உன் நிர்மலப்பாதங்களிலேயே
நிறவரத்தை நிறைவாகப் பெற்றதனால்
போதையுற்று மெய்மறக்க...



ஓ! அன்பே
அந்தத் தாவரவியல் பூங்காவின்
தலைக்கனமே
அன்றுதான் தவிடுபொடியானது!


-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment