Friday, April 27, 2012

தண்ணீரில் மீனழுதால்...







தக்கைகள் அறிவதில்லை

நீரின் அடியாழம்! 











னது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, தமிழகத்திலிருந்து வெளிவரும் நவீன விருட்சம் எனும் இலக்கியச் சிற்றேடு ஒன்றின் பழைய பிரதி ஒன்றை வாசிக்கத் தந்தார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப்புரட்டிப் பார்த்துக் கொள்வதுண்டு. அதிலே சிறந்த பல மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளும் இருக்கின்றன. அவற்றிலே ஒரு கவிதை...


வடகரை வேலன் எழுதியிருக்கும் கவிதை..இது!


அலுவலக ஊழியர் ஒருவரின் தனிமையின் வேதனையைக் கூறும் இந்தக் கவிதையிலே இலக்கியத் தரமான வார்த்தைகளோ கவித்துவமான படிமங்களோ கிடையாது.

தனித்தனியே பார்த்தால் எதுவித நேர்த்தியுமில்லாத அங்கங்களையுடைய சில பெண்களிடத்தில் அல்லது ஆண்களிடத்தில் மொத்தமான தோற்றத்திலே பேரழகை மிஞ்சும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்குமே அதுபோலத்தான் இந்த  கவிதையையும் முழுமையாகப் படித்து முடிக்கையில் ஏற்படும் உணர்வுத் தாக்கம்தான் இந்தக் கவிதையின் ஜீவன்.

வெகுசாதாரணமாக ஆரம்பித்து மெல்ல சுதியேறி... 'தக்கைகள் அறிவதில்லை நீரின் அடியாழம்' என்று முடிவுக்கு வரும்போது மனதை ஏதோ பிசைவதை என்போல் நீங்களும் நிச்சயம் உணர்வீர்கள்.


-'Mutur' Mohd.Rafi


கவிதை:


ஒன்பதுமணி அலுவலகத்திற்கு...!












9.10,9.15, ஏன் 10.30க்குக் கூட
வருகிறீர்கள்.
நான் 8.00 மணிக்கே வருகின்றேன்
அறைத்தனிமையின்
அவலம் நீங்க.

வெண்டைக்காய் புளியங்குழம்பு
கத்தரிக்காய் காரக்குழம்பு
முள்ளங்கிச்சாம்பார் முட்டைப்பொரியல்
முள்ளில்லாமீனும்
தென்படும் சிலபொழுது..
உங்கள் மதியஉணவில்

எனக்கு மாதவன் நாயரின்
உப்பு,சப்பு,
உறைப்புமற்ற..
மற்றநாளைப் போலவே
சவசவ சப்பாடு

மாலையில் திரும்பியடைய
அவரவருக்கென்றொரு கூடு
தார்சுவேய்ந்தோ அல்லது
ஓடுவேய்ந்தோ குறைந்தபட்சம்
கூரைவேய்ந்தேனும்

எனக்கிருப்பது ஒரு பொந்து
ஏன்போகவேண்டும் அங்கு
எனவெழும் கேள்வியோடு...

உங்கள் இணைகளோடு
கூடிமுயங்கிப்பெற்ற
வேர்வைத்துளிகள் வடிய
விரியத்திறக்கிறீர்
உங்கள் சாளரங்களை...

என்றேனும் நினைத்ததுண்டா
விளக்கணைத்ததும் கவிழும்
இருட்டைப்போல-
என்போல்வர் விரகத்தாபமும்
ஏக்கப்பெருமூச்சுகளும்
செறிந்தது அக்காற்றென...

தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்  ஒருபோதும்!





-வடகரை வேலன்

(நன்றி:  நவீன விருட்சம் மார்ச் 2009)




No comments:

Post a Comment