Sunday, September 9, 2012

சிறுகதை : மூதூர் மொகமட் ராபி

சம்பள நிலுவை!



மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், 2ம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு வலயக்கல்வி அலுவலக வாசலில்  போய் நான் இறங்கியபோது நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.


'ம்ம்..என்னப்பா இது....? இங்கேயாப்பா..வந்திருக்கீங்க... ம்ம்.. எனக்கேலா பசிக்கும்' என்று பழைய அனுபவத்தினாலோ என்னவோ அழத் தொடங்கினான் நிரோசன்.

'இல்லடா கண்ணா...! என்ட செல்லம் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்டா..முந்தி மாதிரி சுணங்க மாட்டன் அப்பா. கடிதத்தைக் காட்டினதும் செக்கத் தருவாங்க. அதை வேண்டினதும் உடனே வாறதுதான் இப்படிக் கதிரையில இருடா, ராஜால்ல!' என்று அவனை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி அழைத்தச் சென்றேன். அலுவலக வராந்தாவில் கையில் தோல் பையும் தொப்பையுமாக சிலர் பேசிக்கொண்டே எங்களைக் கடந்து சென்றார்கள்.

 வரவேற்பறையில் இருந்த பிளாஸ்டிக் கதிரையில் நிரோசனை இருத்தி அவனது புத்தகப்பையையும் தண்ணீர்ப் போத்தலையும் அருகே வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மேசையின் பின்னே ஒருவர் குறும்பார்வைக் கண்ணாடி மூக்கில் நழுவ  பத்திரிகை ஒன்றை கையில் பிடித்தவாறு ஏறத்தாழக் கவிழ்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தார் .

'எக்ஸ்க்யூஸ்மி!'

'வே..ஏஏ! என்ன தம்பி?!'    தூக்கம் திடீரெனக் கலைந்த அதிர்ச்சியில் எழுந்து நின்றவரிடம் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டி 'இந்த அஸிஸ்டெண்ட் எக்கவுண்டெண்ட் க்ளார்க் என்றது யார்? எங்க இருக்கிறாங்க?' என்றேன்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை வாசிப்பது போல பாவனை செய்துவிட்டு, 'உங்களை வரச்சொல்லி இருக்காங்க போல..ஆனா இப்ப அவ இல்லியே..எல்லோரும் லஞ்சுக்குப் போயிருக்கிறாங்களே..திரும்பி வரச் சுணங்கும்..' என்றார்.

மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்து விட்டு 'லஞ்ச் 12 மணிக்கல்லவாண்ணே..இப்ப 2.30 ஆகுதே...ஒண்ட ஒண்டரைக்கெல்லாம் இருப்பாங்க என்றுதான் ஸ்கூல் விட்ட பிறகு வந்தனான்' என்று ஆச்சரியமாய் கூறிய என்னை சற்றுப் பரிதாபமாகப் பார்த்தார் அவர்.


இந்த உரையாடலைக் கேட்டதும் என்னருகே ஓடிவந்து, 'வாங்கப்பா ..வீட்ட போவோம்!' என்று சிணுங்க ஆரம்பித்தான் நிரோசன்.

'அது வந்து.. இண்டைக்குக் கொஞ்சம் வேலை கூட...அதுதான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயிருக்கிறாங்க....இருங்க, இப்ப வாற நேரம்தான்'

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெளியே இலேசாக மழை தூறத் தொடங்கியிருந்தது.

'இந்நேரம் மூத்தவள் நர்மதாவின் ஸ்கூல் விட்டிருக்கும்..கேற் வாசலில் மழையில் நனைந்து காத்துக் கொண்டிருப்பாள்..என்ன செய்வது? மூன்று மணிக்கு பேங்க் மூடிடுவான்....இன்றைக்குள் எப்படியாவது செக்கை மாற்றி காசு கட்டாவிட்டால் கரண்டை சீஈபிக்(CEB) காரன் வெட்டிவிட்டுப் போய்விடுவான். பிறகு இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்க வேண்டும்..என்ன செய்வது? ..நர்மதாவை போய் எற்றிக் கொண்டு வருவோமா அல்லது இன்னும் கொஞ்சம் காத்திருப்பதா?'

'ஹேய் மச்சான் கார்த்தீ! என்னடா..,  பெரிய யோசனை போல?!'

குரல் வந்த திசையில், கையில் ஹெல்மெட்டுடன் ரெயின் கோட் அணிந்து மழைநீர் சொட்டச்சொட்ட நின்றிருந்தான் முனாஸ். எனது ட்ரெயினிங் கொலிஜ் நண்பன். கலகலப்பான பேர்வழி. இருவரும் சிறிது காலம் இங்குள்ள பாடசாலை ஒன்றில் ஒன்றாக கற்பித்துவிட்டு பின்பு ஆளுக்கொரு திசையாகப் பிரிந்தவர்கள். இப்போதும் அவ்வப்போது சந்தித்து நட்பு பாராட்டிக் கொள்வதுண்டு.

'ஓமடா முனாஸ், பாருடா என் நிலைமையை என்ன செய்யுறதெண்டு விளங்குதில்லடா' என்றேன் உணர்ச்சியில்லாமலே.

'ம்ம்..? அப்பிடி என்னடா தலை போற பிரச்சினை உனக்கு? அதுவும் இங்க வந்து..ஏதும் தூர இடத்துக்கு ட்ரான்ஸ்பராட உனக்கு?'

'சேச்சே! அதெல்லாம் இல்லடா, அது யாராவது பெரிய ஆட்களுக்குசெல்வாக்கான ஆசிரியர்களை டவுனுக்குள்ள போடணுமென்டாத்தான் எங்கள் மேல கை வைப்பாங்க... இப்ப ஏதோ கொஞ்ச காலம் விட்டு வச்சிருக்காங்க!'

'சரி, அப்ப வேற என்னதான் உன் பிரச்சினை?'

'சம்பள அரியர்ஸ் செக் ஒன்று வந்திருக்கு.....அதுவும் எத்தனையோ வருசத்துக்குப் பிறகு. அந்தச் செக்கை இங்க வந்து எடுக்கச் சொல்லி கடிதம் அனுப்பியிருக்காங்கடா மச்சான் எனக்கு!'

' அடப்பாவி! இதுக்காடா கவலை உனக்கு?! ஓ எப்படிச் செலவு செய்யுறது என்ட கவலையோ..அப்படியெண்டா தாவன் எனக்கு..?'

'போடா, உனக்கு எல்லாமே பகிடிதான்.! கடிதம் அனுப்பியிருக்கிறாங்க ..ஆனா இங்க வந்து பார்த்தா ஸீட்டில யாருமில்ல.. சம்பந்தப்பட்ட க்ளார்க்கும் லஞ்சுக்குப் போயிட்டாவாம்டா!'

'இன்டைக்கு நியை வேலை இருந்ததால அதுதான் எல்லோரும் லஞ்சுக்கு சுணங்கிப் போயிருக்கிறாங்க..இப்ப வாற நேரம்தான் இருங்க என்றிருப்பானே அந்த ஒல்லிப்பிச்சான்' என்று கேட்டான், வரவேற்பு மேசையில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவரைக்காட்டி.

'அட! ஓ..ஓம்டா!' என்றேன் ஆச்சரியம் தாங்காமல்.

'இருங்க... இப்ப வந்திடுவாங்க... என்றும் சொல்லியிருப்பானே?'

'ஓ ..ஓம்டா ..முனாஸ், எப்பிடிடா  உனக்கு இதெல்லாம் தெரியும்? யேய்..! எங்கேயாவது  பின்னால நின்று கேட்டிட்டிருந்தியா..உண்மையைச் சொல்லு!'

'ப்போடா இவனே! இவ்வளவு வருசம் இந்த ஸோனுக்குள்ள  வாத்திவேலை செய்திட்டிருக்கிறம், எவ்வளவு பார்த்திருப்பம்...? இதெல்லாம்  தெரியாதா மச்சான், உனக்கு?'


அவன் சொன்னதைக் கேட்க  சிறிது வெட்கமாகத்தான் இருந்தது.

'டேய் கார்த்தி, இங்க ஒபிஸில வேலை செய்யிறவங்களெல்லாம் ஏன் சரியா 1.30 க்குப்பிறகு லஞ்சுக்கு வீட்டுக்குப் போறாங்க தெரியுமா? கொஞ்சம் யோசிச்சுப் பார். அப்பிடி ஒன்றும் பெரிய வேலைகள் கிடையாது இங்க. ஹேண்ட் பேக்குல ஆனந்த விகடனும் குமுதமும் ரமணி சந்திரண்ட குப்பை நாவல்களையும் கொண்ட வந்து பார்த்திட்டு இருப்பாங்க. பெக்கேஜ் போன்ல சாறி ப்ளவுஸ் வாங்கின கதைகளையும் இரவு பார்த்த மெகா சீரியல் மாமி-மருமகள் சண்டைக் கதைகளையும்  யாருக்காவது மணிக்கணக்கா சொல்லிட்டிருப்பாங்க...'

'அப்படியா  அப்ப இவங்க வேலையே செய்யிறதில்லையா மச்சான்?'

'ஏன் செய்யாம..? இதெல்லாம் செய்தது போக எப்பவாவது போரடிச்சா ஒரு மாறுதலுக்காக வேலை செய்வாங்க. இப்படி அரசாங்க வேலைகளைப் "பொறுப்பாக"    செய்யிறதாலதான் இன்னமும் எந்த ஸ்கூல்ல யார் இருக்கிறாங்க.... என்னென்ன நடக்குது.... என்ற சரியான எந்த விபரமும் தெரியாமy, என்ட கடிதங்களை உனக்கும் உன்ட கடிதங்களை என்ட ஸ்கூலுக்கும் அனுப்பிட்டிருக்கிறாங்க..ஹா.. ..ஹா..ஹ..ஹா!.'

'அது சரி, 1.30க்கு இவங்க லஞ்சுக்குப் போறது எதுக்கு என்று இன்னும் நீ சொல்லவே இல்லையே...?'

'மடையா! நம்ம ஸ்கூலெல்லாம் 1.30 க்குத்தானே விடுது. அப்படி ஸ்கூல் விட்டதும் வீட்டுக்குப் போகிற வழியிலேயே தேவைகளை முடிச்சிட்டுப் போகலாமென்று டீச்சர்மாரெல்லாம் ஒபிசுக்கு வருவாங்கள் என்று இவங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும். அந்த நேரத்தில இங்கே குந்திட்டிருந்தா வேலைகளுக்கள்ள மாட்டுப்படுவம் என்றுதான் வீட்டுக்கு ஓடுறவங்க..  அதுவும் புதன் கிழமையள்ள தப்பித்தவறியும் இருக்க மாட்டாங்க.. இல்லையென்றால் கூட அன்றைக்குப் பார்த்து ஏதாவது மீட்டிங் அது இது என்று போட்டு இழுத்தடிப்பாங்க!'

'ஓ! இதுவா சேதி..? நான் ஒவ்வொரு தடவையும் இங்க வந்து மணிக்கணக்கா காத்துக் கிடக்கிறதுக்கு இதுதானா காரணம்?'

'அப்பா...பசிக்குதப்பா ... வீட்ட போவோம்!' என்று என்னைப் பிடித்துக் கொண்டு சிணுங்கிய நிரோசனை அப்போதுதான் கண்டான், முனாஸ்.

'அடேய் கார்த்தி!  நீ இவ்வளவு நேரமும் இந்தச் சின்னப் பொடியனை பசிக்க வைத்துக் கொண்டாடா இந்தக் கிளார்க்குகளை காத்துக் கொண்டிருக்கிறாய்?'

'வேற என்னடா செய்யிறது..? திரும்பத் திரும்ப வந்து மெனக்கெட்டுக் கொண்டிரக்கேலாது. அப்பிடி வந்து போக பெற்றோல் செலவு வேற, இவள் மூத்தவளையும் போய் ஏத்திட்ட வரவேணும். கொஞ்ச நேரம் பார்ப்.....'

' மச்சான் இதுகள் இப்போதைக்கு வர மாட்டாதுகள்றா! நீ இந்தப் பச்சை மண்ணை சும்மா வீணாப் பசியில காய வைக்கப் போகிறா...! போய் உன்ட பிள்ளைகளை வீட்டில இறக்கிச்  சாப்பிட்டுட்டு  பின்னேரம் ஆறுதலா வாடா! இப்ப மரியாதையா போ!போ!' என்று துரத்தாத குறையாக என்னையும் நிரோசனையும் உரிமையுடன் வாசல்புறமாக நெம்பித் தள்ளிக் கொண்டு சென்றான் முனாஸ்.

'இல்லடா...முனாஸ், இன்னும் ஒரு கொஞ்ச நேரம் பார்த்திட்டு...' என்று  நான் தயங்கி இழுத்ததும், சட்டென தன் பிடியை விட்டு விட்டு அப்படியே என்னைச் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் விருட்டென திரும்பி நகர்ந்து விட்டான். வேகமான நடையில் அவனது கோபம் தெளிவாகத் தெரிந்தது.

'டேய்! முனாஸ்...!முனாஸ்! நில்றா, கொஞ்சம்!' என்று நான் கூப்பிட்டும் அவன் திரும்பாமல் பைக்கை உதைத்துக் கிளப்பிக் கொண்டு செல்லும் போது, 'அனுபவி ராஜா!' என்று லேசாய் அவன் முணுமுணுத்தது  மட்டும் காதில் விழுந்தது.

சிறிது கழிந்த பின்பு வேறு வழியின்றி மீண்டும் முனாஸின் 'ஒல்லிப்பிச்சா'னிடமே சென்றேன். அவர் இப்போதும் அரைத்தூக்கத்தில்தானிருந்தார். ஆனால்,  அருகில் சென்றதும் சட்டென விழித்துக்கொண்டு, 'அ... ..நீங்கதானே கொஞ்சம் முதல் வந்தனீங்க?' என்றார், வெகுஞாபகமாக, 'போங்க உள்ள! அவங்கள் வந்திருக்கிறாங்க...அந்தப் பச்சை சுடிதார் போட்டிருக்கிறவதான் நீங்க தேடிவந்த க்ளார்க்..போங்க' என்றார்.

எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

'நிரோஸ்! இரு அப்பிடியே! செக்கை வாங்கிட்டு வாறேன்' என்றதும் பசிக்களைப்பையும் மீறி சந்தோசமாய்ப் புன்னகைத்தான், அவன். பாவம் அவன் முரளி சொன்னது சரிதான் .இனி இவனை இந்த ஒபிஸ் அலுவல்களுக்கெல்லாம் கூட்டித்திரியக் கூடாது என்று நினைத்துக்கொண்டே பச்சை சுடிதார் அணிந்த க்ளார்க் இருந்த அறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே நுழையவும் அந்த பெண் வெளியே வரவும் சரியாக இருந்தது. இருவரும் மோதிக் கொள்ளாத குறையாக சந்தித்துக் கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

' எக்ஸ்க்யூஸ்மி, உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் மிஸ்' என்று கடிதத்தை நீட்டினேன். நாய்  கொண்டு வந்துபோட்ட தேங்காய்ச் சிரட்டையைப் பார்ப்பது போல கடிதத்தையும் என்னையும் வெகு அலட்சியமாக பார்த்தாள் அந்தப் பெண். அவளுக்கு இருபத்தியைந்து வயதுக்கு மேலிருக்காது.

'இந்தக் கடிதம் எப்ப கிடைச்சது உமக்கு?'

'இன்றைக்குக் காலைலதான்! ஏன்?'

'அப்ப இவ்வளவு நாளும் என்ன செய்து கொண்டிருந்த நீங்கள? இதை உங்களுக்கு அனுப்பி ஒன்றரை மாதமாகுதே..எந்த ஸ்கூல் நீங்க?'
சொன்னேன்.

' அட!  இந்த ஒபிஸிலிருந்த முக்கியமான கடிதம் அனுப்பினா இப்படித்தான் ஒருமாதம் லேட் பண்ணி வருவீங்களா?' என்றாள்,  ஏதொ ஒரு பெரிய தவறைக் கண்டுபிடித்தவிட்ட உற்சாகத்தோடு.

' உங்க கடிதத்தை, நான் ஒரு வருசத்துக்கு முதல் வேலை செய்த பழைய  ஸ்கூலுக்கு அல்லவா அனுப்பியிருக்கிறீங்க.? இன்றைக்குத்தான் அங்கிருந்து இப்ப நானிருக்கும் ஸ்கூலுக்கு கொடுத்தனுப்பினாங்க!' என்றதும் சட்டென வாடிச் சுருங்கியது அவளின் முகம்.

'ஓ! அப்பிடியா? கொஞசம் இருங்க வருகிறேன்' என்று விட்டு வெளியேறிச் சென்றாள் அந்த க்ளார்க் பெண்.

'ஐயோ! எங்கே போகிறாள் செக்கை எடுத்துத் தராமல்' என்று சலிப்புடன் காத்திருக்கலானேன். 'ஒருவேளை என்னுடைய செக்கைத்தான் எடுத்து வரத்தான் போகிறாளோ...'

சரியாகப் பதினைந்து நிமிடம் கடந்ததும் மிகவும் சாவகாசமாக உள்ளே வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள் அந்தப் பச்சைசுடிதார் பெண். தனது மேசையில் இறைந்து கிடந்த காகிதங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

'என்ன விசயம் சொல்லுங்கோ!' என்றாள்.

'...........'

'ஆ! ஏதோ அரியர்ஸ் செக்கென்றுதானே சொன்னனீங்க?' என்றபடி எழுந்த அருகிலிருந்த உருக்கிலான அலுமாரியைத் திறந்து நீளமான சில  புத்தகங்களை மேசையில் போட்டாள். மீண்டும் இருக்கையில் அமர்ந்து அந்த புத்தகங்களைத் திறக்கும்போது செல்போன் மணி ஒலித்தது. உடனே சட்டைன மூடிவிட்டு,

' ஆ! ஹலோ சொல்லுங்க!' என்றாள்.

'..........' என்றது எதிர்முனை.

'இல்ல..இப்பத்தானப்பா சாப்பிடனான்'

'...................'

'ம் அதெங்க! எப்படியும் ஒரு கழுத்தறுப்பு வந்து சேர்ந்திடுமப்பா...?' என்றபோது  சரியாக என்மீது விழுந்தது அவளது பார்வை. சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு,  'இல்ல இஞ்ச ஒருவர் செக் எடுக்க வந்திருக்கிறார்..அவர்ர வேலைய முடிச்சிட்டு பிறகு எடுக்கிறனே...'

'...........'
' அ.!. அந்த ப்ளவ்ஸா..? அது மெச்சில்லடாப்பா...! மத்த பிங்க் கலர் இருக்குத்தானே?'

'...........'

'மிஸ், நான் கொஞ்சம்...' என்று நான் பொறுக்கமுடியாமல் ஆரம்பிக்க,

'சரியப்பா...பிறகு எடுக்கிறன்..பை!'  சொல்லி போனை வைத்து விட்டு,

'இருங்க பார்ப்போம்...உங்க பேர் என்ன சொன்னீங்க? ப்ரதீபனா?'

'இல்ல ...காரத்திகேயன்'

'ஆ! இந்தா இருக்கு! இதில சைன் பண்ணுங்க செக்கைத் தாறன்' என்று  புத்தகத்திலே சில இடங்களைக் காட்டினாள். நான் கையெழுத்திட்டதும் செக்கைக் கிழித்து நீட்டியவள் சட்டென நெருப்பை மிதித்தவள் போலப் பதற்றமாகி, 'ஐயோ இந் செக்கின்ட வெலிட் டேட் (valid date) முடிஞ்சு போயிட்டுதே!' என்று மீண்டும்  கையிலிருந்து பறித்து விட்டாள்.

'சரி, வேறு புதிதாக எழுதித் தரலாம்தானே?' என்றேன், ஏமாற்றத்துடன்.

'புதுசா எழுதத் தேவையில்ல..திகதி மாற்றி எழுதினாப் போதும் ஆனா வெட்டிச் சைன் பண்றதுக்கு எக்கவுண்டனும் சீப் க்ளார்க்  ரதியக்காவும் வேணுமே...' என்றாள், வரவழைத்துக் கொண்ட கவலையுடன்.

அதற்குள் அருகிலிருந்த க்ளார்க் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'எக்கவுண்டன் மேல மாடியிலதான் நிக்கிறார். இனித்தான் லஞ்சுக்குப் போவார்..இப்ப உடனே போனால் சைன் எடுக்கலாம்' என்று தகவல் சொன்னார்.

'இல்ல மணியண்ண, எக்கவுண்டன் சைன் பண்ணினால் மட்டும் போதாது... சீப் க்ளார்க் ரதியக்காவுமல்லவா செகண்ட் சைன் பண்ணவேணும்...அவ லஞ்சுக்குப் போனவ இன்னும் வர இல்லயே... அது சரி இண்டைக்கு வருவாவா?' என்று அவரிடம் கேட்டாள்.

'ஏன் பிள்ள, ரதியக்கா டிப்பாச்சர் பண்ணாமத்தானே போயிருக்கிறா? ஏன் உங்களிட்ட ஏதும் சொன்னவவா?' -இது மணியண்ணன்.

'ஓமண்ணன். இன்டைக்குச் சூரன்போர்தானே...? அதுதான் கோயிலுக்கு ஒருக்காப் போனாலும் போவேன் என்று சொன்னவ அதாலதான்...கேட்டனான்..!'

'அப்ப  அவ இண்டைக்கு வாற சந்தேகம்தான். எதற்கும் எக்கவுண்டனிட்டயாவது சைன் வாங்கி வையும். பிறகு ரதியக்கா வர, அவர் போயிட்டாரெண்டால்...?' என்றார் மணியண்ணன், என்னைப் பார்த்தவாறு.


'ம்ம்..எனக்கென்ன.. அவ வந்தா யார் மாட்டி விட்டதென்டு தெரியட்டும்...' என்று தனக்குள் லேசாய் எதையோ முணுமுணுத்தவாறு மாடியேறிப்போனாள் அந்தப் பெண்.


மீண்டும் காத்திருப்பு! பத்து நிமிடங்கள் கழிந்தது.


பசி வேறு உயிரை வாட்டியது. அப்போதுதான் பசி பசியென்று வீட்டுக்குப் போக அழுதபடியிருந்த மகன் நிரோசனின் ஞாபகம் வந்தது. வெகுநேரமாக அவனது குரலைக் காணவில்லையே என்ற யோசனையும் வர, சென்று பார்க்கலாம் என்று எழுந்தபோது எக்கவுண்டனைப் பார்க்க மாடிக்குச் சென்ற அந்தக் க்ளார்க் பெண் மீண்டும் வந்துவிட்டாள்.


வந்ததும் என்னை நேரே பாரக்காமல், ' இன்றைக்கு உங்களுக்குச் செக் தர இயலாதாம். நாளைக்கு இதே நேரம் வரட்டாம்!' என்று விட்டு சட்டென வெளியேறிச் சென்றாள்.


சட்டெனக் கோபம் தலைக்கேற அவளோடு சேர்ந்து நானும் வெளியேறி வந்தபோது வராந்தாவில் இருந்த ப்ளாஸ்டிக் கதிரையைச் சுற்றி சிறு கூட்டம் கூடியிருந்தது தெரிந்தது.

'கொஞ்சம் ..தண்ணீர் தெளிங்க முகத்துல! பாவம்!'

'சே! சின்னப் பொடியண்டாப்பா!'

'பசி மயக்கம் போல..! யார்ராப்பா இதுகள இஞ்ச கூட்டிவந்து அலைக்கழிக்கிறது?'

என்ற குரல்கள் கேட்டு..சில வினாடிகள் திகைத்து நின்றவன் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து  அலறியடித்து ஓடிச்செல்வதற்குள் எனது மகன் நிரோசனை யாரோ சிலர் ஒரு நீளமான மேசையில் கிடத்தி உடைகளைத் தளர்த்தி செய்திப் பத்திரிகைகளால் காற்று வீசிக் கொண்டிருந்தார்கள்.

*
-மூதூர் மொகமட் ராபி
(2011.11.16)

No comments:

Post a Comment