அத்தியாயம் 2
ஒரு நல்ல உதவி இயக்குனரின் அடையாளம் என்ன?
படப்பிடிப்பில் யாருடைய பெயரை ஒரு இயக்குனர் பலமுறை உச்சரிக்கிறாரோ, அவர்தான் சிறந்த உதவி இயக்குனர். இப்படிச் சொல்பவர், தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் ஒரு பார்வையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கர்.
இவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மதி என்பவரை படப்பிடிப்பில் அடிக்கடி அழைத்துக்கொண்டே இருப்பாராம். இந்த மதி, இவரிடமிருந்து விலகி அரிது அரிது என்ற படத்தை இயக்கப் போய்விட்டார். அப்போதும் வாய் தவறி சில நேரங்களில் மதி என்று அழைத்து, அவர்தான் இப்போ நம்மிடம் இல்லையே என்று நாக்கைக் கடித்துக்கொண்டிருக்கிறாராம் பலமுறை.
அதோடு விட்டிருந்தால் கூட இது வழக்கத்தால் வந்தது என்று நினைத்திருக்கலாம். தனது எந்திரன் படத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதைச் சரியாகச் செய்யக்கூடியவர் மதி மட்டும்தான் என்பது ஷங்கரின் எண்ணம். அரிது அரிது படத்தை இயக்கிக்கொண்டிருந்த மதியை அழைத்து, எனக்கு இந்த வேலையைச் செய்து தரணும். உன்னால் முடியுமா என்றார்.
தனது படப்பிடிப்பைத் தள்ளிவைத்துவிட்டு குருநாதருக்காகச் செய்துகொடுத்தார் மதி.
அவரை விட்டுப் போனபிறகும் நம்பிக்கையோடு ஒரு இயக்குனரை, தன்னைத் திரும்ப அழைக்க வைப்பதுதான் ஒரு நல்ல உதவி இயக்குனருக்கு அடையாளம்.
0
குருகுலம் என்பார்கள் அந்தக் காலத்தில். கிட்டத்தட்ட அதுபோலத்தான் உதவி இயக்குனர்களின் பயிற்சிக் காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன், விக்ரமனிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாரிடமிருந்து சேரன். சேரனிடமிருந்து சிம்பு தேவன். இப்படித் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது படைப்பாளிகளின் பயணம். இது முடியவே முடியாத தொலைதூரப் பயணம்தான்.
இன்று ஒரே மேடையில் அத்தனை பேரும் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிற காட்சிகளைக்கூடப் பார்க்க முடிகிறது. ஆனால் பயிற்சிக் காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் இவர்கள்? தனக்கு அடுத்த நிலையில் இருப்பவருக்குப் பிரம்படி கொடுக்காத குறையாகக் கண்டிப்பு காட்டியிருப்பார்கள். மற்றபடி சகல அர்ச்சனைகளும் நடந்திருக்கும். அதுவும் வேலை நேரத்தில் ராட்சசக் கோபமெல்லாம்கூட வந்திருக்கும்.
பாரதிராஜாவுக்குப் பின்னால் எப்படி ஒரு கலைக் குடும்பமோ, அப்படி ஒவ்வொரு புகழ்பெற்ற இயக்குனருக்கும் ஒரு குடும்பம் இருக்கும். அப்படி யாரும் விரும்பாவிட்டாலும் தானே உருவாகிக் கிளை பரப்பும் என்பதுதான் அதிசயம்!
சரி, ஒரு படத்திற்கு எத்தனை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் தேவைப்படுவார்கள்?
அது நாம் எடுக்கப் போகிற கதையைப் பொருத்த விஷயம். பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு கதையைப் படமாக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? அதே லோ-பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு சுவரைத் தாண்டி வெளியே வராத கதைக்கு எத்தனை பேர் தேவைப்படுவார்கள்?
சொல்லாமலே புரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தது இத்தனை பேர் தேவை என்ற கணக்கு இருக்கிறது. சராசாரியாக யார் யார் தேவை, அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பதை இப்போது பார்க்கலாம்.
இணை இயக்குனர்:
இயக்குனர் மனத்தில் உருவான கதை, முதலில் இவருக்குத்தான் சொல்லப்படும். அதற்கு முன்பே இந்தக் கதை, வாய்ப்புக்காக ஓராயிரம் முறை கோடம்பாக்கத்தையே சுற்றி வந்திருக்கும். அது வேறு விஷயம். ஆனால் நாம் எடுக்கப் போவது என்ன என்பதை முழுமையாக இவரிடம் சொல்லியிருப்பார் இயக்குனர். இந்தக் கதை எந்த ஏரியாவில் நடக்கவேண்டும். என்னென்ன பேக்ரவுண்ட் வேண்டும் என்பதெல்லாம் இவருக்குத் தெரியும். அதனால் லொக்கேஷன் ஹன்ட்டிங் என்று சொல்லப்படும் வேலையை ஒளிப்பதிவாளருடன் செய்வது இந்த இணை இயக்குனர்தான். சமயங்களில் இயக்குனரும் வருவார். இல்லையென்றால் இணை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், புரடக்ஷன் மேனேஜரும் கிளம்புவார்கள் லொகேஷன் பார்க்க.
கதைக்குத் தேவையான இடங்களை வீடியோவில் பதிவு செய்துவிட்டு வருவது இவர்களின் முதல் வேலை.
கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் டைரக்டரே கதை சொல்லிவிடுவார். ஆனால் படத்தில் நடிக்கும் மற்றவர்களுக்குக் கதை சொல்வது அநேகமாக இவர்களாகத்தான் இருக்கும். படத்தில் வரப்போகும் சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வதும் இணை இயக்குனர்தான்.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொன்னால் உங்களுக்கு நன்றாகப் புரியும். கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவுடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார் பாக்யராஜ். அதோடு வசனம் எழுதுகிற பொறுப்பும் இவருக்குத்தான்.
அந்த நேரத்தில் வாய்ப்பு கேட்டு தினந்தோறும் இவரை நச்சரிப்பாராம் நடிகர் விஜயன். அப்போது ஒரு சீனில் எப்படியாவது தலைகாட்ட வைக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார் பாக்யராஜ். ஒவ்வொரு நாளும் விஜயன் இவரைச் சந்திக்க வருவதும், சார் என்னை மறந்திராதீங்க என்று கெஞ்சுவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
விஜயனுக்கு நேரம் நல்ல நேரம் போலும். தன்னையறியாமல் அந்த கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டே வந்த பாக்யராஜ், ஒரு கட்டத்தில் க்ளைமாக்சையே விஜயனின் கேரக்டர் தீர்மானிக்கிற மாதிரி கதையை அமைத்துவிட்டார். அது மட்டுமல்ல, இவரது தியாகத்தைத் தொடர்ந்து காதலர்கள் இணைகிற மாதிரியும் காட்சியை அமைத்துவிட்டார். ஒரு காட்சியில் தலை காட்டலாம் என்று வந்த விஜயன் அப்படத்தின் செகண்ட் ஹீரோ அளவுக்கு வளர்ந்தார்.
காரணம் பாக்யராஜ் என்ற இணை இயக்குனர் உருவாக்கிய ஸ்கிரிப்ட். என்னய்யா, இந்த கேரக்டரை இவ்வளவு பெரிசா கொண்டாந்துட்டே என்று பாரதிராஜாவே அலுத்துக்கொள்கிற மாதிரி அமைந்தது சூழ்நிலை. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயன் பெரிய நடிகராக வளர்ந்ததும், ஏராளமான படங்களில் கதாநாயகனாகவே நடித்தார் என்பதும் எத்தனை சுவாரஸ்யமான வரலாறு!
ஷூட்டிங்குக்குத் தேவையான பிரேக் டவுன் போடுவதும் இந்த இணை இயக்குனரின் பணிகளில் ஒன்று. அதென்ன பிரேக் டவுன்?
நடிகர் நடிகைகள் படத்துக்குக் கொடுத்திருக்கும் தேதிகளை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதுதான் இந்த பிரேக் டவுன். ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் எந்தக் காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யும் சின்னக் கணக்கீடுதான் இது. முதலில் க்ளைமாக்ஸ்கூட எடுக்கப்படலாம். அல்லது க்ளைமாக்சில் வரும் கடைசி ஷாட்டைக்கூட முதலில் எடுக்கலாம். தனித்தனியாகப் பிரித்துக்கொள்வதுதான் இந்த முறை.
இத்தனை பொறுப்புகளைச் சுமக்கும் இணை இயக்குனருக்கு யூனிட்டில் எந்தளவுக்கு மரியாதை கிடைக்கும்?
ஒரு இயக்குனருக்கு எந்தளவுக்கு மரியாதை தரப்படுமோ, அந்தளவுக்கு! சில நேரங்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடுகள் எழலாம். அதென்ன …லாம்? கண்டிப்பாக எழும். அப்போதெல்லாம் இடையில் நுழைந்து சமாதானக் கொடியைப் பறக்க விடுவதும் இவரது தலையாயப் பணிதான்!
Thanks: Tamilpaper.com
-தொடரும்-
இந்தக் கட்டுரை மிகுந்த அர்த்தமுள்ளதாகவும், அர்த்தங்கள் வலுவானதாகவும் இருப்பதாக உணர்கிறேன்...
ReplyDeleteஎழுத்து நடையும் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது...
"குருகுலம் என்பார்கள் அந்தக் காலத்தில். கிட்டத்தட்ட அதுபோலத்தான் உதவி இயக்குனர்களின் பயிற்சிக் காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன், விக்ரமனிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாரிடமிருந்து சேரன். சேரனிடமிருந்து சிம்பு தேவன். இப்படித் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது படைப்பாளிகளின் பயணம். இது முடியவே முடியாத தொலைதூரப் பயணம்தான்"
இந்தப் பட்டியல் அற்புதம்...
சந்திய சித்தரே என்ற மகானிடமிருந்து .... தென்னத்தின் ஒளியாக பாலுமகேந்திரா ... வந்தாராம்.
அதன் வழி .... பாலாவும் ... அமீரும்... கற்றது தமிழ் ராமும்... சசியும்... நடந்தது....