சினிமாவில் உதவி இயக்குநர்கள் என்பவர்கள் ஒரு முக்கியமான இனம். தம் சுயத்தை மறைத்துக்கொண்டு இயக்குநரின் படைப்புக்கு வடிவமும் வனப்பும் கொடுக்கிறவர்கள். ஒரு நாளைக்கு 25 மணிநேரத்துக்கும் மேல் உழைக்கிற வர்க்கம். ஆயினும் பெரிய பலன் இருக்காது. என்றாவது ஒருநாள் இயக்குநராகிவிடுவோம் என்னும் கனவு கலந்த நம்பிக்கையைத் தின்று ஜீவிக்கும் உதவி இயக்குநர்களைப் பற்றியது இந்தத் தொடர். உதவி இயக்குநர் ஆக விரும்புகிறவர்களுக்கும் உதவி இயக்குநர்களாக இருப்பவர்களுக்கும் இது உதவும். மற்றவர்களுக்கு ஒரு புதிய உலகின் பழைய மனிதர்களைப் புரிந்துகொள்ள வழி செய்யும்.
அத்தியாயம் 1
உதவி இயக்குனர்களே இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா?
வேண்டுமானால் ஒரு புகைப்படத்தை எடுக்கலாம். திரைப்படத்தை முடியாது. இவர்கள் இல்லாமல் சினிமாவே இல்லை. குண்டூசி தேவைப்படுகிறதா? எங்கய்யா அவரு… என்று இயக்குனர்களின் பார்வை இவர்கள் பக்கம்தான் திரும்பும். பீரங்கி தேவைப்படுகிறதா? ஏம்ப்பா நெட்ல தேடி அதுக்கு பர்மிஷன் வாங்குறது எப்படின்னு பாரு… என்று கட்டளையிடுவதும் இவர்களிடம்தான்.
தமிழ்சினிமாவில் 24 சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கத்தினர்களின் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது.
இத்தனை சங்கத்தையும் தனது திறமையால் ஒருங்கிணைப்பவர்தான் உதவி இயக்குனர். இத்தனை குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டுகிற அசாத்தியமான சாரதி நாம்தான் என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக கடிவாளத்தைப் பிடித்திருக்கிற வேலைதானே என்று அலட்சியம் காட்டினால் குதிரைகள் அத்தனையும் சேர்ந்து குப்புறத் தள்ளிவிடுகிற அபாயமும் உண்டு.
எந்நேரமும் விழிப்போடு இருப்பவரே உதவி இயக்குனர். இரண்டு உதாரணங்களுடன் இதை ஆரம்பிக்கலாம்.
பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் இன்றைய பிரபல இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. இவர் தொழில் கற்றுக் கொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் இது.
படத்தின் ஹீரோ, ஹீரோயின் இருவரும் வெவ்வேறு படங்களில் நடிக்கப் போய்விட்டார்கள். அது கடைசி நாள் படப்பிடிப்பு. விட்டுப் போனவற்றுள் ஒரு முக்கியமான காட்சியை எடுக்க வேண்டி, முதல் நாளே சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ஒரு கட்டளையிட்டிருந்தார், கேபி.
‘ஒரு க்ளோஸ்-அப் எடுக்க வேண்டியிருக்கு. ஹீரோ, ஹீரோயினுக்கு டூப் போட்டுக்கலாம். யாராவது ஒரு பெண்ணை அழைச்சிட்டு வந்திரு. கால் அழகா இருந்தா போதும். கால் விரலில் ஹீரோ மெட்டியை மாட்டுவது மாதிரி காட்சி. எடுத்துட்டா பூசணிக்காய் உடைச்சிடலாம்’ என்றார்.
இந்த பூசணிக்காய் உடைப்பது என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான சம்பிரதாயம். படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளில் ‘உஸ், அப்பாடா…’ என்று அத்தனை நாள் டென்ஷனையும் போட்டு உடைக்கிற சென்ட்டிமென்ட்தான் பூசணிக்காய் உடைப்பு!
குருநாதர் சொன்னபடி மறுநாளே ஒரு துணை நடிகையை செட்டுக்கு வரவழைத்து விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. மெட்டியை மாட்டி விடுகிற டூப்ளிகேட் ஹீரோவும் ரெடி.
பாலசந்தருக்கு ஒரு வழக்கம். அன்றைய படப்பிடிப்புக்குத் தேவையான எல்லா ஐட்டமும் உள்ளே நுழையும்போதே தயாராக இருக்க வேண்டும். எப்போது எது மனதில் தோன்றுகிறதோ, அதைப் படமாக்குவார்.
காலுக்குத்தான் ஷாட் என்பது தெரியாமல் ஃபுல் மேக்கப்போடு காலையில் இருந்தே காத்திருந்தார் துணை நடிகை. நேரம் போக வேண்டுமே? போகிற வருகிற தொழிலாளிகள் எல்லாம் இவரிடம் வழிந்து நெளிந்து கொண்டிருக்க, வேறொரு பக்கம் படப்பிடிப்பு துரிதமாக நடந்துகொண்டிருந்தது. எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்தபிறகு இறுதியாக இதற்கு வந்த டைரக்டர், “எங்கய்யா அந்த பொண்ணையும் பையனையும் வரச்சொல்லு” என்றார்.
முந்தைய காட்சிகளில் ஹீரோயின் கட்டியிருந்த புடைவையைத் தழையத் தழைய கட்டிக்கொண்டு வந்து நின்றார் டூப்ளிகேட் நாயகி. கையில் மெட்டியுடன் கீழே உட்கார்ந்தார் டூப்ளிகேட் நாயகன். “ஒரு மானிட்டர் போயிடலாம்ப்பா” என்று உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டு, “தம்பி அந்த மெட்டிய மாட்டு பார்க்கலாம்” என்றார் பாலசந்தர்.
அங்குதான் அதிர்ச்சி. புடைவையை லேசாக உயர்த்தி மெட்டியைக் கொண்டுபோன பையன் பேந்தப் பேந்த விழிக்க, அதைவிட மிரட்சியாக விழித்தார் சுரேஷ்கிருஷ்ணா.
அந்த பெண்ணுக்கு மெட்டி அணிகிற விரல் மட்டும் இல்லை!
கோபத்தில் முகம் சிவந்தது பாலசந்தருக்கு. வேறொரு பெண்ணை அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தலாம் என்றால், அதற்கான அவகாசம் சுத்தமாக இல்லை. மறுநாள் படப்பிடிப்பைத் தள்ளிப்போடவும் முடியாது. இந்த ஒரு க்ளோஸ்-அப்புக்காக ஒரு லட்ச ரூபாய் எப்படி செலவு செய்ய முடியும்? அதுமட்டுமல்ல, அன்றைய தினம் பூசணிக்காய் உடைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். வேறு வழியில்லாமல் அந்தக் காட்சியை எடுக்காமலேயே படத்தை வெளியிட்டார் பாலசந்தர்.
உதவி இயக்குனர் செய்த தவறென்ன? முதல்நாளே டைரக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார், இதுதான் காட்சியென்று. பெண்ணை அழைத்து வந்தவர், அவளது கால்களையும் விரல்களையும் கவனித்திருக்க வேண்டுமல்லவா? இதுதான் காட்சி என்று அந்தப் பெண்ணிடம் கூறியிருந்தாலாவது பிரச்னையை வெளிப்படையாகச் சொல்லியிருப்பாள். அதையும் செய்யவில்லை. ஒரு மிகப்பெரிய இயக்குனர், தான் எடுக்க நினைத்த ஒரு காட்சியை எடுக்க முடியாமலே போனது யாருடைய தவறு?
அதே சுரேஷ்கிருஷ்ணாதான் பின்னாளில் ரஜினி, கமல் என்ற இருபெரும் நட்சத்திரங்களை வைத்து வெற்றிப்படங்களையும் கொடுத்தார். அனுபவங்கள் ஒவ்வொன்றுமே பாடம் அல்லவா?
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அந்த உதாரணத்தைப் பார்த்தோம். ஓர் உதவி இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு சாம்பிள் பார்த்துவிடலாம். .
விஷால், நயன்தாரா நடித்து, ராஜசேகர் இயக்கிய படம் சத்யம். படப்பிடிப்பில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. நேப்பியர் பாலம் அருகே விடியற்காலையில் கூடியது யூனிட். சன் ரைஸ் ஷாட். சூரியன் மேலெழும்பி வருவதற்குள் ஒரு சண்டைக்கான முன்னோட்டத்தை எடுத்து முடித்திருந்தார்கள். அதற்குள் வெளிச்சம் தனது அடர்த்தியை அதிகப்படுத்த, மீதிக் காட்சியை சூரியன் அடங்குகிற நேரத்தில் எடுத்து, விடியற்காலைக் காட்சியாக மேட்ச் செய்து கொள்ளலாம் என்பது ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஐடியா.
மாலை நேரம். திட்டமிட்டபடி சுமார் எண்பது பேர் கொண்ட படப்பிடிப்புக்குழு கோவளம் பீச்சில் கூடியது. கதைப்படி வில்லன் தனது துப்பாக்கியை விஷால் நெற்றியில் வைக்க வேண்டும். ஸ்கிரிப்ட் பேப்பரில் எழுதியிருப்பது போல கரையிலிருந்து சில அடி துரத்தில் கடல் நீருக்கு நடுவே அமைந்துள்ள குட்டிப்பாறை ஒன்றில் நின்று கொண்டார் விஷால். அவரது நெற்றியில் துப்பாக்கியை வைக்க வேண்டிய வில்லனும் தயார். மணி ஐந்தரைக்கு வந்ததும் கேமிராவை ஓடவிடலாம் என்பது ஒளிப்பதிவாளரின் முடிவு.
சரியாக ஐந்தரை. ஓ.கே என்பது போல டைரக்டரும் சைகை காட்ட, துப்பாக்கிய கொடுங்க சார் என்றார் வில்லன். அப்போதுதான் தெரிந்தது. முக்கிய பிராப்பர்ட்டியான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வரவேயில்லை யாரும்! ஆர்ட் டிபார்ட்மென்ட் பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர், அங்கிருந்தால் அடி விழும் என்று நினைத்தாரோ என்னவோ, கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப். (இது போன்ற இக்கட்டான நேரத்தில் சம்பந்தப்பட்ட பொறுப்பை கவனிக்கும் உதவி இயக்குனர் ஓடிவிடுவது சினிமா வழக்கம். கோபம் அடங்கிய பின் குட்டிப்பூனை மாதிரி நைசாக வந்து யூனிட்டில் இணைந்து கொள்வார்கள்)
படத்தின் ஹீரோ மட்டுமல்ல, தயாரிப்பாளரும் விஷால் என்பதால் அவரது கண்களில் பொறி பறக்கிறது. “என்ன சார் வேலை பார்க்கிறீங்க” என்று அத்தனை பேரையும் காய்ச்ச, மின்னலாக ஒரு வேலை செய்தார் ஒரு அசோசியேட் இயக்குனர்.
சூரியன் மறையும் இந்த அரை மணி நேரத்திற்குள் இந்தக் காட்சியை எடுக்கவில்லை என்றால், இதற்காக மறுநாளும் இதே யூனிட், இதே இடத்தில் கூட வேண்டும். செலவு நிச்சயம் ஒரு லட்சத்திற்குக் குறையாமல் ஆகும். தேவையா அது? கொஞ்சம் கூட கூச்சமோ, பயமோ இல்லாமல் அங்கே பாராவுக்கு வந்திருந்த காவல் துறை அதிகாரியிடம், “சார் உங்க துப்பாக்கியை கொடுத்திங்கன்னா…” என்று தயக்கத்தோடு தலை சொறிந்தார்.
அவ்வளவுதான். கடும் கோபம் வந்தது அந்த அதிகாரிக்கு. “ஏன்யா, நீ என்ன லூசா?” என்றார் ஆத்திரம் அடங்காமல்.
“மேலதிகாரிகளுக்குத் தெரிஞ்சா என் வேலை போயிடும் தெரியுமா. நான் தர மாட்டேன்” என்று அந்த இடத்திலிருந்தே அகல முற்பட்டார். அவர் மீது பாய்ந்தாவது துப்பாக்கியைப் பிடுங்கிவிட வேண்டும் என்கிற அளவுக்கு பரபரப்பான அசோசியேட், “அண்ணே, ப்ளீஸ். அதில இருக்கிற குண்டையெல்லாம் எடுத்துட்டு கொடுங்கண்ணே. ஒரு அஞ்சே நிமிஷம். உங்க கையில பத்திரமா சேர்த்திர்றேன்” என்று கெஞ்ச, விஷாலும் தனது பங்குக்கு ஓடிவந்தார் அதிகாரியிடம்.
கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்ட போலீஸ் அதிகாரி, “சார். நீங்க தண்ணிக்கு மேல எடுக்கிறீங்க. தவறி தண்ணியில விழுந்திச்சின்னா என் வாழ்க்கையே போயிடும். வேணாம்” என்றார் கெஞ்சாத குறையாக. “இல்ல சார். படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே நீங்களும் வந்து நின்னுக்கலாம். கடல் பகுதி என்பதால் ஏற்கெனவே சில மீனவர்களையும் செக்யூரிடிக்கு வச்சிருக்கோம். துப்பாக்கி கீழே விழவே விழாது. விழுந்தாலும் எடுத்துக் கொடுக்கதான் இவங்க” என்றெல்லாம் மந்திரம் போட்டு துப்பாக்கியைக் கைப்பற்றினார்கள்.
நினைத்த மாதிரியே பத்தே நிமிடத்தில் ஷாட்டை முடித்துவிட்டு பத்திரமாக துப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
அந்த அசோசியேட் இயக்குனர் காவல் துறை அதிகாரியை அணுகி அவரது துப்பாக்கியைக் கேட்காமல் போயிருந்தால், மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கூடியிருக்கும். நினைத்த மாதிரி காட்சி அமைந்திருக்குமா என்பதும் சந்தேகம்.
இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனுக்கும் ஒரு மோசமான அனுபவம் நேர்ந்தது.
‘பஞ்சு மெத்தைக் கிளியே’ என்றொரு பாடல் அப்படத்தில் உண்டு. இதை செஞ்சி அருகே படமாக்க நினைத்திருந்தார் சிம்புதேவன். அதிகாலையில் சென்னையில் இருந்து கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்குப் போய்விட்டார்கள். நடிக்க வேண்டிய நடிகர் நடிகைகளும் வந்தாயிற்று. காலை டிபனை முடித்துவிட்டு லொகேஷனில் கேமிராவையும் வைத்துவிட்டார். ஷாட் வைக்கப் போகும்போதுதான் தெரிந்தது. பாடலைப் பதிவு செய்து வைத்திருக்கிற நாகராவை எடுத்துக் கொண்டு வரவில்லை என்பது. இந்த வேலையை கவனிக்க வேண்டிய உதவி இயக்குனர் பதறிப் போய் நிற்க, யாரைக் கடிந்து கொள்வது?
திரும்பி சென்னைக்கு வந்தால் அன்றைய படப்பிடிப்புக்கான செலவுகளை நஷ்டக்கணக்கில்தான் சேர்க்க முடியும். தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பு கேன்சல் ஆனதற்கு இப்படி ஒரு காரணத்தைச் சொல்வது நாகரிகமாகவும் இருக்காது. என்ன செய்வது என்று விரல் நகத்தைக் கடித்துத் துப்பிய சிம்பு தேவனுக்கு ஒரு யோசனை வந்தது. தான் போட்டுக் கேட்பதற்காக அந்தப் பாடலை அவர் ஒரு கேசட்டில் தனியே பதிவு செய்து வைத்திருந்தார். அதை ஒரு மைக் முன் வைத்து பாட வைத்தார். ஒவ்வொரு வரியையையும் ரிவைண்ட் செய்து செய்து படமாக்கினார்.
கருத்துக்குத் தெரிந்தே இதில் ஒரு தவறு நிகழும். அதாவது நாகராவுக்கும் இந்த டேப் பதிவுக்கும் இரண்டு வினாடி வித்தியாசம் வரும். அதனால் எடிட்டிங்கில் பிரச்னை ஆகும். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் அவர்.
உதவி இயக்குநராக இருந்த காலத்தில் சமாளித்த அனுபவங்கள் சொல்லிக்கொடுத்த பாடம்!
Thanks: Tamilpaper.com
-தொடரும்-
No comments:
Post a Comment